அன்று பழனி முருகனை தரிசிக்கும்பொழுது
அந்த பெரியவர் முகம்தான் தெரிந்தது.
“ஒரு வேலையிருந்தா கொடுங்க”, பெரியவர் தீனசுரத்தில் கேட்டார்.
கரிய மேனி, நரைத்த தலைமுடிகளில் ஆங்காங்கே கருமுடிகள்.
கூப்பிய கைகள் நடுங்கின.
அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார்- நாம் பார்க்கும் ஆயிரக்கணக்கான முதியவர்களில் ஒருவர்.
“எங்க நாலு பேருக்கே வேலை இல்லை. தாத்தாவுக்கு எதாவது டிபன் கொடு,”
என்றார் முதலாளி நடுவயது அம்மையார் ஒருவரிடம்.
“ஐயா, நீங்க ஒரு வேல போட்டு கொடுங்க”,
கிழவர் என் பக்கத்தில் வந்து கேட்டார்.
“அவர் வெளியூரு. அவர தொல்ல பண்ணாத”,
என்றார் பக்கத்து மேஜையில் இருந்தவர்.
“என்ன வேலைனாலும் செய்யறேன்.
ஒரு வேலை போட்டு கொடுங்க சாமி”
“தாத்தா. இங்க உட்காரு. இந்த இட்லிய சாப்பிடு”
மூன்று இட்லிகளை வாழையிலை மேல் வைத்தாள் நடுவயது அம்மணி.
நடுங்கும் விரல்களினால் மெதுவாக சாப்பிட ஆரம்பித்த அவர் கண்கள் என்னை விட்டு விலகவில்லை.
கண்களில் ஏக்கமும் நம்பிக்கையும் கலந்திருந்தது போல் எனக்குப் பட்டது, சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போதும் என் மேல் அவர் கண்கள் படிந்திருப்பதை கவனித்தேன்.
என் கண்களில் தெரிந்த குழப்பத்தை பார்த்த முதலாளி, “இப்படிதான் சார் வீட்ல ஏதோ சண்டைன்னு கிளம்பிடுறாங்க, இந்த வயசுக்கு மேல என்ன வேலை செய்ய முடியும்? பொண்ணோ பையனோ வந்து திரும்ப கூட்டிண்டு போவாங்க”
விடுதிக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வெளியே வரும்பொழுது பெரியவரைப் பார்த்து நடையை துரிதமாக்கினேன்.