– காஸ்மிக் தூசி –

மாநிலப்போக்குவரத்து பேருந்தின் ஜன்னலில்
தார்ப்பாய் மடல்கள்
பொத்தான்கள் கொண்டு பூட்டப்பட்டுள்ளன
ஜெஜூரிக்கு
ஏறிச் செல்லும் வரைக்கும்.
தார்ப்பாயின் மூலையில்
சாட்டையைப்போல அடிக்கும் காற்றின் குளிர்
சுள்ளென்று அறைகிறது
முழங்கையில்.
உறுமிக்கொண்டு சரியும்
சாலையை கீழே பார்க்கிறீர்கள்.
பேருந்தைவிட்டு சிதறும் சிறிய வெளிச்சத்தில்
அதிகாலையின்
அறிகுறிகளைத் தேடியபடி.
கிழவனின் பெரிய மூக்கு. மற்றும்
அவன் கண்ணாடியின் ஜோடியில்
பிளக்கப்பட்ட உங்களின் முகம் –
நீங்கள் பார்க்க முடிகிற
கிராமப்புற காட்சிகள்
இவை மட்டுமே.
தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது
பேருந்து. கிழவனின் புருவத்தையும்
நாமத்தையும் தாண்டி,
ஏதோ ஒரு இலக்கு நோக்கி.
வெளியே,
சத்தமில்லாமல் எழும்பிவிட்ட சூரியன்
தார்ப்பாயின் துளை வழியே
கூர்ந்து பார்க்கிறான்
கிழவனின் கண்ணாடியின் மேல்.
ரம்பத்தால் அறுக்கப்பட்டது போன்ற
கிரணம் ஒன்று
ஓட்டுநரின் நெற்றியின்
இடப்புறமாய் படிகிறது, மென்மையாக.
திசையை மாற்றியபடி செல்கிறது
பேருந்து. கரடுமுரடான பாதையில்
இடதும் வலதுமாய் ஆடிக்குலுங்கும் முகத்தை
சேகரித்துக்கொண்டு இறங்கும்போது
கிழவனின் தலைக்குள் மட்டும்
மிதித்து விடாதபடி
கவனமாய் இருக்கவேண்டும்.
—அருண் கொலாட்கரின் The Bus, என்ற கவிதையின் தமிழாக்கம்
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஒளிப்பட உதவி- A Place for Tulsi
