ஹேமானந்த்

ரா கிரிதரன்

இரவு பத்தரை மணிக்குப் பிறகு வேலாயுதம் பிள்ளை வீதியின் மறுமுனைக்கு செல்வதென்பது மயானத்தைக் கடந்து செல்வது போன்றது. ஆனால், ஹேமானந்தின் வீடு அந்த முனையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் தான். சுற்றுலாவிலிருந்து வந்த உடனே வெளியே போகிறேன் என்றதும் அம்மா எரிந்து விழுந்தாள். அவளுக்குப் புரியாது, என்ன செய்ய? எங்கள் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகப் படத்தில் மட்டுமே பார்த்திருந்த டெலெஸ்கோப் ஹேமானந்திடம் இருக்கிறது.

ஒரு முறை பள்ளிக்கூடம் விட்டதும் பீச் வழியாக நடந்து சென்று ஹேமானந்த் வீட்டுக்குப் போயிருக்கிறேன். வீடு என்று கூட சொல்லமுடியாது. சின்ன அறை. தகரத் தடுப்பு போட்டு ரெண்டாக இருக்கும். முத்தியால்பேட்டை அம்மன் கோயிலைத் தாண்டியதும் கண்ணை மூடிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போய் சேர்ந்திடலாம். கிட்டத்தட்ட இருபத்தைந்து படிகள் ஏறி ரெண்டாம் தளத்தில் இருந்த வீட்டை அடைந்து அதைவிட குறைவான அடிகளில் வீடு முடிந்ததில் எனக்கு சப்பென்று ஆகியது.

ஹேமானந்துக்கு கூர்ந்து கவனிக்கும்படியான தோற்றம் கிடையாது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் போல ஒல்லியான தேகம், நடுத்தர உயரம், மெல்லிய மீசை, எண்ணெய் வழியும் நெற்றி. சொல்லப்போனால் அவன் முதல் நாள் வகுப்புக்கு யூனிபார்ம் பட்டனுக்கு பதிலாக தலை க்ளிப் போட்டிருந்ததால் மட்டுமே அவனை கவனித்தேன். அவன் தனியாக முன்னிருக்கையில் அமர்ந்தான். அடுத்தடுத்த வாரங்களில் விளையாட்டு நேரங்களில் ஏதேனும் சுவர் ஓரங்களில் ஒளிந்துகொள்ளும்போது அவன் தனியாக உட்கார்ந்ததைப் பார்த்தேன். நான் இருப்பதாக சத்தம் போடமாட்டான். அப்படித்தான் என் நண்பனானான்.

அந்த வருடம் ஊரெங்கும் அரசியல் கூட்டங்கள். புதுச்சேரியை தமிழ்நாட்டோடு சேர்க்கப்போவதற்குப் பயந்து கடையடைப்பு, பந்த் நடத்தும்படியான கோஷங்கள். உடனடியாக எனக்கு அப்பாவுக்கு என்ன ஆகுமோ என பயமாக ஆனது. முன்னர் பிரெஞ்சுக்காரன் ஊரைவிட்டு கப்பல் ஏறிப்போன வருஷம் கூட்டத்தில் அப்பா ஏதோ பேசியதால் கைது செய்யப்பட்டிருந்தாராம். இந்த ஊருக்கு உன்னோட வயசு, எனப் பாட்டி சொல்லி அலுத்த கதை. இதனாலேயே அரசியல் கூட்டம் எனச் சொன்னாலே ஒரு பயம். அதுவும் அப்பாவைப் பார்க்க பலரும் வந்துபோனபடி இருந்ததில் அம்மாவும் பயந்திருந்தாள். என்னிடம் சொல்லவில்லை. பாட்டியிடம் கேட்கலாம், ஆனால் அவள் அப்பாவிடமே நேரடியாகக் கேட்டுத் தொலைத்துவிடுவாள்.

திடீரென என் வகுப்பிலிருந்த ராஜேஷுக்கு மரியாதை அதிகமானது. அவனது அப்பா சட்டசபையில் குமாஸ்தாவாக இருந்ததால் பள்ளிகளுக்கும் பந்த் உண்டா, எத்தனை நாட்கள் விடுமுறை போன்ற செய்திகளை கேட்டு முடிவை முன்கூட்டியே சொல்வதாக அறிவிப்பு செய்திருந்தான். அன்றிலிருந்து அவன் மிச்சம் வைத்த பின்னர் தான் மதிய உணவு டப்பாவை அவர்வர் உண்ண முடிந்தது. அதிகம் சிரித்தால் அடுத்த நாள் அழுவோம் என்று பாட்டி சொல்வது போல ஹேமானந்த் வந்த அதே மாதத்தில் உணவு இடைவேளை நேரத்தைப் பாதியாகக் குறைத்து சயின்ஸ் லாப் நடத்த புது வாத்தியார் வந்தார். தனியே சந்தோஷமாக இருந்த புதுவையை பக்கத்து ஊரோடு சேர்க்கப்போகிறார்கள் என அப்பாவும் போராடப் போவது போல், இதற்கும் ஏதேனும் செய்யவேண்டும் என ராஜேஷிடம் உணவு இடைவேளையின்போது பேசினேன். கிடைத்த அவகாசத்தில் சாப்பிட்டு முடிக்கவேண்டிய அவசரத்தில் இருந்த அவன் அத்தனை சுவாரஸ்யம் காட்டவில்லை.

‘இன்றைய லாபில் புல்லி சிஸ்டம் பற்றி பார்க்கப்போறோம். குறைவான சக்தி வழியாக பலமான எடைகளை தூக்குவது எப்படி?’

மெளனமாக உட்கார்ந்திருந்தோம். தினமும் கிணற்றில் பார்க்காத எதையும் அவர் காட்டவில்லை என்றாலும் ரெண்டு சக்கரத்திருப்பான்கள் வழியாக தூக்கமுடியாத எடையை ஒருவிரலால் நகர்த்திக் காட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது. கைக்கடிகார முட்களை நீக்கிக்காட்டி ஆற்றலைப் பற்றி பத்து நிமிடம் பேசினார். ஆழ்ந்த மெளனம். ஒவ்வொருவராக அருகே சென்று அவற்றைத் தொட்டுப் பார்க்கலாம் எனச் சொன்னதும் சலசலப்பு கூட்டம் முண்டியடிக்கத் தொடங்கியது. ரோந்து வந்த ஸ்கூல் தலைமை ஃபாதரிடம் ஆசிரியர் பேசிவிட்டுத் திரும்பிய நேரத்தில் கைக்கடிகாரப் பகுதிகள் பேப்பர்கடை குவியல்கள் போலத் தரையில் கிடந்தன.

கையில் கிடைத்த ஸ்கேலை எடுத்து அடிக்க வந்ததும் ஆளுக்கு ஒரு மூலை சிதறினோம். வழக்கம்போல கூட்டத்தில் பின்னால் நின்றிருந்ததில் எனக்கு சின்ன திருப்தி. ஹேமானந்த் மட்டும் மேஜை அருகே நின்றபடி கடிகாரப்பகுதிகளை கையில் வைத்திருந்தான்.

‘டேய் கத்தறது கேக்கலை. வெச்சிட்டுப் போறியா, ஃபாதர் ரூமுக்கு அனுப்பட்டுமா?’, எனக் சத்தம் போட்டார் புது வாத்தியார். நகராமல் மும்முரமாக கடிகாரப்பகுதிகளை சேர்த்துக்கொண்டிருந்த ஹேமானந்தை நாங்கள் பயத்தோடு பார்த்திருந்தோம்.

‘ராஸ்கல், சீ நகரு’

தள்ளிவிட்டதில் மேலும் சில பகுதிகள் தரையில் விழுந்தன. அவருக்கு வந்ததே கோபம், முட்டிக்குக் கீழே ஸ்கேலில் பழுக்கக் காய்ச்சிவிட்டார். எட்டாம் வகுப்புக்குப் பிறகு அடிகொடுக்கும் வாத்தியார்கள் குறைந்துவிட்டதால் இருந்த நிம்மதி அந்த ஒரே நிகழ்ச்சியால் காணாமல் போனது.

மாலை, வீட்டுக்குச் செல்லும்போது ஹேமானந்த் மட்டும் தனியே போவதைப் பார்த்து பேச்சு கொடுத்தேன்.

‘அவரு தான் சொன்னாரில்லை. உனக்கேன் கொழுப்பு? நாங்கெல்லாம் பின்னாடி போகல?’

முதலில் அவன் பேசவில்லை. நான் முன்னாடி நடக்க அவன் என்னைத் தொடர்ந்தான். குறுக்குவழியில் வீடு போக பஜாருக்குள் நுழையும்போது, ‘எனக்கு ஒரு சர்பத் வாங்கித்தரியா?’, எனக்கேட்டான்.

அன்றுமுதல் மாலை வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஒன்றாக சர்பத் குடிக்கத் தொடங்கினோம்.

‘உனக்கு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் பிடிக்குமா? நேரு சிலை பின்னாடி இருக்கு. வாங்கித் தர்றேன்’, ஸ்ட்ராவில் குடித்தபடி மண்டையை ஆட்டினான். அவன் கேள்விப்பட்டதில்லையாம். ஏனோ எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் அவனுக்கும் வாங்கிக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது.

‘உன்கிட்ட பைசா இல்லியா?’

ஒரு சர்பத்துக்கு மட்டுமே காசிருந்த நாளில் கேட்டபோது, ‘எங்க அப்பா வரும்போது தருவார். பெங்களூரில் வேலை பார்க்கிறார். அப்புறம் தர்றேன்’, எனச் சொன்னான்.

“பரவாயில்ல. நானே வாங்கித் தர்றேன்”, எனச் சொல்லி பகிர்ந்து குடித்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.

ஹேமானந்துடனானப் பழக்கத்தை அம்மாவிடம் சொன்னபோது அப்பாவிடம் சொல்லாதே என்றாள். காரணம் தெரியாது அடுத்த நாள் அவனுடன் ஜூஸ் சாப்பிட்டதைச் சொன்னபோது, “எத்தனை தரம் சொல்றது? அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவ்ளோதான் சொல்லிட்டேன்.” என்றாள்.

“ஏன் ஏம்மா?”

“நீயும் சாராயக்கடையில் வேலை பார்க்கப்போறியா?”, என எரிந்து விழுந்தாள்.

“அவனோட அப்பா பெங்களூர்ல இருக்கார்”

“ம்க்கும். அந்த ஏரியாவே சாராயக்கடைக்காரங்கதான். சொல்றத கேக்கல, ஸ்கூல் ஃபாதர்கிட்ட சொல்லிடுவேன்”

அத்தோடு பேச்சு முடிந்தது.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலை வழக்கம் போல ஜூஸ் குடித்து முடித்ததும், ‘என் வீட்டுக்கு வர்றியா?’, என அழைத்தான். பதில் சொல்லாமல் அவனைத் தொடர்ந்தேன். என் வீட்டைத் தாண்டும்போது ஓரக்கண்ணால் மாடியில் யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்துவிட்டு வேகமாகக் கடந்தேன்.

அவனது வீட்டில் நுழைந்ததும் முதலில் வந்தது ஒரு விநோத வாசனை. மருந்து அல்லது காய்ந்த ஊறுகாய் மாதிரியான வாசம். உட்கார இடமில்லை. இருந்த ஒரு மேஜையில் ரேடியோ, பேட்டரி எனப் பலதும் இரைந்து கிடந்தன. சாய்ந்து உட்கார முடியாதபடி ஒரு நாற்காலி. அதில் தலை நரைத்த வயதான ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். சாயம் போன புடவை.

‘இதான் என் அம்மா. அதோ அது தங்கச்சி. நாலாவது படிக்குது’

அப்போதுதான் அறையின் மூலையில் ஒரு பெண் தரையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருப்பதை கவனித்தேன். என்னை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலையைக் குனிந்து எழுத்தைத் தொடர்ந்தாள்.

‘இதெல்லாம் நீயேவா ரிப்பேர் செய்வே?’

‘ம். ஆமாம். டூல்ஸ் இருந்தா இன்னும் நிறைய செய்யலாம்.’

‘அப்பா இல்ல?’

அம்மாவை தர்மசங்கடமாகப் பார்த்தவன், ‘அடுத்த தடவை நீ வர்றத்துக்குள்ள பாரேன், இந்த டேபிளில் செட் செஞ்சு, ரேடியோவை சரி செய்திடுவேன்’, என்றான்.

‘கொஞ்ச உக்காந்து பேசிகிட்டிருங்களேன்பா’, என்ற அவனது அம்மா எங்கள் திசையைப் பார்த்து சிரித்தாள்.

என்னை அறை வாசலுக்கு அழைத்துச் சென்றவன், ‘தப்பா நினைச்சுக்காதே. அம்மாக்கு சமைக்க உதவணும். நாளைக்கு ஸ்கூலில் பார்க்கலாம்’, என்றான்.

இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என நினைத்தாலும் அப்பாவுக்குத் தெரிந்தால் பெல்ட்டால் அடித்துவிடுவார் என்பதால் எதுவும் சொல்லாமல் நானும் கிளம்பிவிட்டேன். இருபத்தைந்து படிகள் இறங்கும்போது அம்மாவுக்கு சமையலில் ஏன் உதவவேண்டும் எனத் தோன்றியது. பசித்தது. தீனி கூட கொடுக்கலியே என யோசித்தேன். பிஸ்கட் டப்பாவை பார்த்தேனே? சீக்கிரமாக வீட்டுக்குப் போனால் எப்போதும் மாலையில் அம்மா செய்யும் கார வடையும் டீயும் கிடைக்கும் என நினைத்ததும் நடை வேகம் கூடியது. தெரு முனைக்கு வரும்போது ஹேமானந்தின் வீட்டு மாடியைத் திரும்பிப் பார்த்தேன். திரைச்சீலை முழுதாக மூடியிருந்தது. தூரத்திலிருந்து வீடு இருக்கும் மாடி வேறொரு உலகம் போலத் தெரிந்தது. அன்றிரவு தூங்கும்போது அவனது அம்மாவின் சிரிப்பு மட்டுமே வந்தது நினைவில். தினமும் அவனுக்கு ஜூஸ் வாங்கித்தரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

அடுத்த ரெண்டு வாரமும் பள்ளிக்கூட சுற்றுலாவுக்குத் திட்டம் போடும் குஷியில் நேரம் போனதே தெரியவில்லை. ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடங்கிய திட்டம் நிதி நிலைமையினால் ரெண்டு நாட்கள் செஞ்சிக்கோட்டை என முடிவானது. ஹேமானந்தால் வரமுடியாவிட்டாலும் திடலுக்கு அருகே மரைக்காயர் கடலைக் கடை வாசல் பஸ் நிறுத்தம் வரை வந்து நாங்கள் கிளம்பும்வரை நின்றிருந்தான். அவன் வராதது கஷ்டமாக இருந்தது. மெதுவாகக் கிளம்பிய பஸ் அருகே ஓடி வந்தவன், ‘நாளான்னிக்கு அப்பா வர்றார். டெலெஸ்கோப் வாங்கி வர்றாராம்’, எனப் பல் இளிக்கக் கத்தினான்.

சுற்றுலா முடித்து வரும்வரை டெலெஸ்கோப் பற்றி மட்டுமே யோசித்தேன். தூரத்தில் இருப்பவற்றை அருகே காட்டும் எனத் தெரிந்தாலும் அதைக்கொண்டு என்ன செய்ய முடியும் எனப் பலவாறு யோசனை. அருண் கோஷ்டியில் முழுவதாக இணைய முடியாதபடி ஹேமானந்தின் நினைவில் கழிந்தது. நானாக அருண், ராஜேஷுடன் விளையாடப்போனாலும் என்னை விட்டுவிட்டு அவர்கள் எங்காவது நகர்ந்துவிடுவார்கள். அவர்களுடன் இருக்கும்போது ஹேமானந்த் பற்றிச் பேசினால், “எப்பவும் அவனப் பத்தி என்ன இருக்கு பேச”, என்பதாக அவர்களது எண்ணம் இருந்தது. “அவன் என்ன உன்னோட பெஸ்ட் பிரண்டா இல்ல உங்கப்பா வாங்கித்தந்த விளையாட்டு சாமானா, அவன் மேல இத்தனை உரிமையா இருக்கே”, என கூட வந்திருந்த அஸிஸ்டெண்ட் டீச்சர் கூடக் கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாது வெறுமனே சிரித்து வைத்தேன்.

நான்காம் நாளில் சுற்றூலா முடிந்து திரும்பிய இரவு டெலெஸ்கோப்பைப் பார்க்க ஹேமானந்த் வீட்டுக்கு ஓடினேன். வந்த களைப்பு கூட போகாது என்ன ஓட்டம் என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பத்தரை மணியானாலும் பரவாயில்லை என அவள் அடித்துச் சொல்லிக்கொடுத்த கந்தர் சஷ்டி கவசத்தை மென்று விழுங்கி அரைகுறையாகச் சொல்லியபடி வேலாயுதம் பிள்ளை வீதி இருட்டைக் கடந்துவிட்டேன். முழுவதுமாகக் கற்றுக்கொண்டிருந்தால் பேய்களிடமிருந்து நிச்சயம் தப்பிக்கலாம். மூச்சிரைக்க மாடியேறியதும் கதவில் தொங்கிய சிறிய பூட்டு முகத்தில் அறைந்தது. நானே பூட்டியதுபோல ரெண்டு முறை இழுத்ததும் கதவு வேகமாக அசைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அரை மணி நேரம்போல நான் படிகட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன். கீழ்வீட்டில் கேட்டுப்பார்க்கலாமா? கோபமாக வந்தது. பள்ளிக்கூட லீவு முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருப்பதை நினைத்து ஏமாற்றத்தில் அழுகையும் கூடியது.

புது வகுப்பின் முதல் நாள் வந்தது. வழக்கமான வழியில் பாதி வரை வந்து லபோர்த்து வீதிக்குள் திரும்பிவிட்டேன். ஹேமானந்த் வந்தாலும் அவனோட பேசக்கூடாது.

“என்னடா இந்த வழில வர்றே?”, ராஜேஷ் அருகே வந்து சைக்கிள் பிரேக் அடித்தான்.

நான் ஒன்றும் சொல்லாமல் அவனது கேரியரில் உட்கார்ந்துகொண்டேன்.

“டெலெஸ்கோப் பார்த்தியா?”

மூன்று நாட்களில் ஒரு நாளேனும் அவனாக என் வீட்டுக்கு வந்து காட்டியிருக்கலாம். “எங்கப்பா வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கார். வீடு வீடா போறேன்னு திட்டறார்”

“எங்களுக்கு காட்டுவியா?”, வண்டி ஓட்டியபடி ராஜேஷ் திரும்பிக் கேட்டான்.

“ஓ. நிச்சயமா. வாங்கினதும் உனக்கும் அருணுக்கும் காட்டறேன்”

லஞ்சு பிரேக் வரை தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. பத்து நிமிட இடைவெளி கிடைத்தபோது பிரேயர் ஹால் மைக் செட் ரூமுக்குச் சென்று மோகன் சார் முன்னால் நின்றேன்.

“ஹேமானந்த் இன்னிக்கு வரலியா சார்?”

“எந்த கிளாஸ் ஹேமந்த்?”

“ஹேமந்த் இல்ல, ஹேமானந்த் சார்..”

“எந்த க்ளாஸு?”

“நைந்த் பி”

“எனக்கு எப்படி தெரியும்? ஏன் அவன் வீட்ல யாரும் லீவு சொல்ல வரலியா?”

யாருன்னு தெரியலை அப்புறம் என்ன கிளாஸாயிருந்தா என்ன எனக் கேட்க நினைத்தேன். எரிச்சலாக இருந்தது. இனி மாலை வீட்டுக்குத் திரும்பும் வரை தெரிய வாய்ப்பில்லை. இல்லை, இனிமே அவனைத் தேடக்கூடாது. பேசக்கூடாது.

உணவு இடைவெளியில் அருணைத் தேடிப்போனேன். அவனது நண்பர்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தூரத்திலிருந்து என்னைப் பார்த்தவன் தொடர்ந்து பிரபுவுடன் பேசுபவன் போலத் திரும்பிக் கொண்டான்.

“அருண்”

“ம்”, இப்ப மட்டும் எங்க வந்த என்பது போல பார்த்தான்.

“ஹேமானந்தைப் பார்த்தியா?”

“அவன் ஊரவிட்டுப்போறதா முருகானந்தம் சார் சொன்னாரே”

அது பொய் எனத் தெரியும்.

“என்கிட்ட சொல்லிக்காம போகமாட்டான்”, என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டேன்.

“டெலஸ்கோப்ப உன்கிட்ட காட்டினானா? இல்லல்ல? ஜுஸ் வாங்கித் தந்தா உனக்குக் காட்டுவானா என்ன?”

“எனக்குக் காட்டினான்”, முகத்தை கடுமையாக வைத்தபடி பிரபு சொன்னான்.

“சரி, லஞ்சுக்கு அப்புறம் உப்பளம் போறோம் வரியா?”, அருண் கேட்டான்.

என்னை சீண்டுகிறார்கள் எனத் தெரிந்தது. அதற்கு மேலும் அங்கிருந்தால் அழுதுவிடுவேன் எனத் தோன்றியது. இவர்களது மூக்கை உடைக்கவேனும் டெலெஸ்கோப்பை முதலில் பார்த்திட வேண்டும் என்று கூடத் தோன்றியது. இவர்கள் பொறாமைப்படும்படியான விஷயம் தான் அது என்றாலும் என்னிடம் கூட காட்டாமல் ஹேமானந்த் எங்கு போயிருப்பான்?

நான் எதுவும் சொல்லாமல் என் லஞ்ச் டப்பாவுடன் க்ளாஸுக்கு நடந்தேன். படியேறி காலியான க்ளாஸுக்குப் போகும்போது என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. க்ளாஸில் யாரும் இருக்கக்கூடாதே என வெட்கப்பட்டு கரும்பலகை பக்கம் பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்.

ரெண்டாம் வரிசை கோடியில் என் புத்தக மூட்டைக்குள் டப்பாவைத் திணித்தபின் பார்த்தேன், வகுப்பில் யாருமில்லை. வாய்விட்டு சத்தமாக அழத் தொடங்கினேன். ஜன்னலுக்கு வெளியே உட்கார்ந்திருந்த காக்கா கழுத்தை சாய்த்து வகுப்பில் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டது. டெஸ்கில் கிடந்த பென்சில் சீவுத்துண்டுகளை சேகரித்து ஜன்னலை விட்டு வெளியே வீசினேன். சட்டென பருக்கைத் துண்டுகளை சிதறவிட்டு வெளியே பறந்தது. ஒரு வட்டம் அடித்து மீண்டும் ஜன்னலோரம் சிந்தியிருந்த சாதத்தைப் கொத்தத் தொடங்கியது. விளையாட்டு திடலில் சத்தம் குறைந்து விசில் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. கன்னத்தைத் துடைத்துக்கொண்டேன்.

வேகமாக ஓடிவந்து க்ளாஸுக்குள் நுழைந்தவர்களுக்குப் பின்னால் ஹேமானந்த் புத்தகப்பையுடன் வருவது தெரிந்தது.

“அப்பா ஊருக்குக் கிளம்பினார்டா. பஸ் ஏத்திவிட்டு நேரா இங்க வர்றேன்”

பேண்டுக்குள் பளபளப்பான சட்டையைத் திணித்திருந்தான்.

“அப்பா இனிமே டிரவுசர் போடக்கூடாதுன்னு சொல்லிட்டார்”.

அவன் முகத்தில் மிகுந்த பெருமிதம்.

“டெலஸ்கோப் செமையா இருக்குடா..இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வர்றே இல்ல? ”

அவனுக்கு பதில் சொல்லாமல் க்ளாஸ் கதவை நோக்கி நடந்தேன்.

ஹேமானந்த் பின்தொடர்ந்து வந்தான்.

“என்னடா? கோவமா?”

“இல்லை. ஆனா இனிமே உனக்கு ஜூஸ் வாங்கித்தர மாட்டேன்”, எனச் சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டேன்.

க்ளாஸ் வாசலில் ஹேமானந்த் ஒண்ணும் புரியாமல் நின்றிருந்ததை வகுப்பு வரிசைகளைத் தாண்டித் திரும்பும்போது பார்த்தேன்.

One comment

  1. ஹேமானந்த் பின்தொடர்ந்து வந்தான்.

    “என்னடா? கோவமா?”

    “இல்லை. ஆனா இனிமே உனக்கு ஜூஸ் வாங்கித்தர மாட்டேன்”, எனச் சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டேன்.

    க்ளாஸ் வாசலில் ஹேமானந்த் ஒண்ணும் புரியாமல் நின்றிருந்ததை வகுப்பு வரிசைகளைத் தாண்டித் திரும்பும்போது பார்த்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.