வீடு

கலைச்செல்வி

”ஏங்க.. கீழ வர்றீங்களா.. மணி பத்தாச்சு.. துாக்கம் சொக்குது..” என் மனைவியிடமிருந்து இது மூன்றாவது அழைப்பு. ஒரு வார காலமாக ஊர் பரபரத்துக் கிடந்ததில் யாருக்குமே நிம்மதியான துாக்கம் வாய்க்கவில்லை. பாப்பா துாளியில் துாங்கிக் கொண்டிருப்பாள். அவளை தனியே விட மனமில்லாமல் கீழிருந்தே அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. சற்றே பெரிய வீடு. நானும் என் மனைவியும் என் சின்னஞ்சிறு மகளும்தான் மொத்த ஆட்களே. தரை முழுவதையும் கான்கீரீட் கட்டடத்துக்கு தாரை வார்க்காமல் தாத்தாவின் எண்ணப்படி தோட்டத்துக்கு மத்தியில்தான் வீட்டை அமைத்திருந்தார் அப்பா. தோட்டம் கூட வளர்ப்புத் தாவரங்களை விட தானாகவே மண்டி வளர்ந்த காட்டுத் தாவரங்களின் வனப்பில் வாசமும் நேசமும் காட்டிக் கொண்டிருந்தன. மொட்டை மாடியில் தவழ்ந்து கிடக்கும் வேப்பமரத்தின் காற்று உடலுக்குள் புகுந்து மனதையும் வருடிக் கொடுத்ததில் சொக்கிப் போய் படுத்திருந்தேன்.

யாருமற்ற வெளியில் இயங்குவது கூட தனிச் சுகம்தான். கைகளிரண்டையும் பின்புறமாக கோர்த்து தலையணையாக்கி வானத்தை பார்த்து படுத்திருப்பது அதனை ஓரளவு சாத்தியப்படுத்தியிருந்தது. படர்ந்து கிடந்த வானவெளியில் சிதறியிருந்த நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சமிக்கைச் செய்ய மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு ஜாலம் காட்டிய நிலவு மகிழ்ந்துப் போய் மதிமுகம் காட்டியதில் முழு வட்டம் பெற்றது. முழுமைப் பெற்ற இன்பத்தை நிலவு ஒளியாக்கிப் பரப்ப, பூமி விருப்பத்தோடு அதில் தன்னையும் இணைத்துக் கொண்டது. கண்களுக்கு நிறைவான நிலவொளி உலகியல் தொடர்புகளற்ற உறுத்தாத பயணத்தைச் சாத்தியப்படுத்தியதில் மனம் நிரம்பிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் குற்றம் புரியும் மனப்போக்கு கொண்டவர்களை நிலவொளியில் நனைய வைத்தால் குற்றமற்ற சமுதாயத்தை வளர்த்தெடுக்கலாம் என்பேன். மனத்தின் வெளிகள் திறந்துக் கொள்வது வாழும் போதே நிறைந்துப் போவதையொத்தது.

காடுகள் கூட மனவெளிகளுக்குள் ஊடுருவக் கூடியவைதான். துாரத்துக் காடுகள் பயமூட்டுபவை. விஷப்பூச்சிகளையும் கொடும் மிருகங்களையும் தன்னுள்ளேக் கொண்டவை. மரங்களாலும் கனிமவளங்களாலும் ஆக்கப்பட்டவை. மழைகளாலும் சேறுகளாலும் நிரம்பியவை. ஆனால் அண்மைக்காடு அமைதியானது. ஆர்ப்பரிப்பற்றது. புதிர்களை உள்ளடக்கியிருப்பது. ஏகாந்தத்தின் எல்லை வரை பயணிக்கும் உரிமைப் பெற்றது. விசித்திரங்களை.. வீரியங்களை தனக்குள் புதைத்து.. அவிழ்க்க முற்படுவோர்க்கு அகப்படமால் சுரந்துக் கொண்டே போவது.

இது தாத்தாவுக்கு மட்டுமல்ல.. இங்குள்ள யாருக்குமே பூர்வீக பூமியல்ல. வந்தேறிக்குடிகளாக நிலைத்துப் போனவர்கள் சூழ்ந்த ஊர் இது. தாத்தா சிறுவயதில் தன் வீட்டாருடன் ஏற்பட்ட பிணக்கில் ஏதோ ஒரு நம்பிக்கையில் நண்பனின் வீட்டுக்கு வந்து விட, அந்நேரம் நண்பனின் வீட்டாருக்கு சம்பளம் உட்பட எதையும் எதிர்ப்பார்க்காத திடகாத்திரமான மனித உழைப்புத் தேவைப்பட தாத்தா இங்கேயே தங்கி விட்டார். காந்தி தாத்தா மாதிரி என் தாத்தாவுக்கும் மேல்சட்டை உடுத்திக் கொள்வதில் பிடித்தம் இருப்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் சட்டையும் மேல் துண்டுமாக காட்சியளிப்பார். “ஏன் தாத்தா சட்டைய கழட்டீட்ட.. ஒனக்கு குளுருல..“ என்பேன். ”எல்லாம் வீடுங்களாயிடுச்சு.. ஊருங்களாயிடுச்சு.. இன்னும் என்னய்யா குளுவுரு..” என்பார்.

தாத்தா யாரிடமும் சொல்லாத ரகசியங்களைக் கூட என்னிடம் சொல்லுவதுப் போல மிக மென்மையாகப் பேசுவார். காடு அவரைப் பதப்படுத்தி மிதப்படுத்தியதில் ஏற்பட்ட மென்மை என்று இப்போது தோன்றுகிறது. தாத்தாவைப் போன்ற ரசனையோ.. அல்லது மென்மையான சுபாவமோ ஏதோ ஒன்றினால் என்னை தாத்தாவோடு எப்போதும் ஒப்புமைப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்பா சின்னப்பெட்டிக் கடையில் ஆரம்பித்து பிளாஸ்டிக் கடை வரை விரிவுப்படுத்தி ஒரே மகனான என்னிடம் தந்து விடும் போகும் போது ஐம்பதுகளின் இறுதியில்தானிருந்தார். அம்மாவுக்கு நான் மட்டுமே ஆதரவென்றிருந்தாலும் தாத்தாவுடன் நேரங்கழிப்பதே எனக்கு பிடித்தமானதாக இருக்கும். அவரின் இறுதிப்படுக்கை நாட்களில் கூட காடுக் குறித்த பழம்நினைவுகளிலேயே புத்துணர்வு பெறுபவராக இருந்தார். பேச்சு குறைந்து பிறகு நின்றே போனபோதும் நிறைவாகவே இறந்துப் போனார். என்னை திருமண பந்தந்துக்குள் நுழைத்த திருப்தியில் என் மகளைக் கூட பார்க்க சிந்தையற்று அம்மா செத்துப் போக நாங்கள் மூவராகிப் போனாலும் தாத்தா என்னுடன் நிலைத்துப் போனதில் தனிமை என்னுள் அதிகம் படராதிருந்தது.

சவரம் செய்யும் கண்ணாடி.. சோப்பு.. பல் துலக்கும் பிரஷ்.. துவைக்கும் கல்லில் கும்மிப் போடப்பட்ட என் மகளின் சிறு உடுப்புகள்.. கிளைகளுக்குள் பெருகிக் கிடக்கும் வேம்பின் இலைகள் என நிலவொளியில் எல்லாமே பார்வைக்கு தெளிவாக இருந்தன. நிலவை தன் உடலெங்கும் பூசிக்கொள்ளும் பௌர்ணமிக் காடுகள் கூட துல்லியமானதுதான். கழனிக்கு இடம் கொடுத்து காடு நகர்ந்து உள்வாங்கிக் கொண்டாலும் தாத்தா விடுவதாக இல்லை. பழையக் காதலியைத் தேடிப் போகும் முகபாவமிருக்கும் அவரிடம். முதன்முதலாக காடு அறிமுகமானபோது பயத்தில் தாத்தாவின் கையை இறுக்கிக் கொண்டே நடந்தேன். அறிமுகக்காடுகள் கால்களில் ஒட்டி இரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப் போல பயமுறுத்துபவையாக இருந்தன. சரசரப்பொலி பாம்புகளாகி அச்சமூட்டின. பறவைகள் சதா ஓலமிட்டு கொண்டேயிருந்தன. நாகரீகமற்ற விறகுவெட்டிகளும் தேனடை எடுப்போரும் ஒரு கையில் தலைகீழாக கருநாகமே தொங்கினாலும் மற்றொருக் கையால் பீடி வலிக்கும் அலட்சியவாதிகளாக இருந்தனர். ஏதோ இலையை மென்றுக் கொண்டே பாம்புப் புற்றுக்குள் கை விடும் காட்டுமிராண்டிகள் அவர்கள். காடுகளில் இலந்தை.. அத்தி.. நாகப்பழ மரங்கள் நிறைந்திருந்தது மட்டுமே ஆறுதலாக இருக்கும். நாட்போக்கில் தாத்தாவின் மொழிகளனைத்தும் காடுகளால் நிரம்பி வழிந்துக் கொண்டே வந்ததில் ஏதோ நிரம்பிக் கொண்டேயிருந்தது.

“நான் வர்றப்ப நம்ப வீடு இருக்கற எடமெல்லாம் ஒரே காடாதாய்யா இருந்துச்சு.. எங்கூட்டாளியோட அப்பா காட்ட வாங்கித் திருத்திக்கிட்டுருந்த நேரம் நான் வந்து சேர்ந்தேன்.. படிப்பு ஏறாம கெடந்த மவனுக்கு சோடியா என்னையும் காவலுக்கு அனுப்பி வுட்டாரு.. நாள்பூரா நானும் அவனும் இங்ஙனதான் சுத்திக்கிட்டுக் கெடப்போம்.. வெலக்கு வாங்குன எடத்த உசிர்வேலி போட்டு பராமரிக்கறதுதான் எங்க பொழப்பு..  பொழுதண்டும்போதுதான் வீட்டுக்குப் போவோம்..”

”வீடுன்னா.. அது எங்க இருந்துச்சு..?”

”அதாய்யா.. எங்கூட்டாளியோட வீடுதான்.. இங்கேர்ந்து நாப்பது கிலோ மீட்டர் தொலவுன்னாலும் இருக்கும்.. பொடிநடையா நடந்து பஸ்சு போற எடத்துக்கு வந்துட்டமுன்னா ரவைக்கு வீடு போய் சேந்துடுவோம்..”

”உனக்கு பயம்மா இருக்காதா தாத்தா..” என்பேன்.

”எல்லாம் மொதல்ல அப்டிதாய்யா இருக்கும்.. பேசாம ஊருக்கே ஓடிடுலாமின்னு தோணுச்சு.. ராவெல்லாம் படுத்து அளுவேன்.. துாங்குனாலும் காட்டுக்குள்ள கெடக்கறமாதிரியே கனாவெல்லாம் வந்து பயமுறுத்தும்.. இங்க கெடைக்கிற மூணுவேளச் சோறு எங்க வீட்ல கெடைக்காது.. வேணாம்னு ஒதறிட்டு வந்துட்டு திரும்ப வீட்டோட போயி ஒட்டிக்கிக்க கூடாதுன்னு வீம்பு ஒரு பக்கம்.. எல்லாஞ்சேந்து இங்ஙனயே தங்கிக்கிட்டேன். ஆச்சு வருசம் ஒண்ணு.. காட்டை திருத்தி பட்டாவும் போட்டாச்சு..”

”அப்றம் ஏன் போகல..?” பத்து வயது ஞானத்தில் இவ்வளவுதான் கேட்க முடிந்தது எனக்கு.

”வுட்டா தானேய்யா போறதுக்கு..?” என்றார் கண்கள் பளபளக்க.

”யாரு தாத்தா ஒன்னை புடிச்சு வச்சுக்கிட்டா..?” எனக்கும் கண்கள் பளபளக்கத் தொடங்கிய நேரம் அது.

”காடுதாய்யா.. காடுதான் என்ன போவ வுடல.. இங்ஙனயே கெடந்தேன்.. இந்தப் பக்கத்துப் பொண்ணப் பாத்துக் கட்டி வச்சாங்க.. என் ஒழைப்புக்கு கூலியாக ஒதுக்கி வுட்ட எடத்துலதான் உங்கப்பன் இந்த வூட்டக் கட்டுனான்..” பருவ வயது எட்டியிருந்த எனக்கு காட்டின் மீது காதல் வேர்விடத் தொடங்கியிருந்தது.

கீழேயிருந்து மீண்டும் அழைப்பு. எழுந்துச் செல்ல மனமில்லை. காட்டிலிருந்து கிளம்பும்போது கூட இப்படிதான் இருக்கும். இறைக்க இறைக்க சுரந்துக் கொண்டிருப்பது நீர் மட்டுமல்ல.. காடும்தான். எங்கும் எதிலும் அது முடிவதேயில்லை. வழி மாறிப் போகும் நாட்களில் கூட பயமோ.. பதட்டமோ ஏற்படுவதில்லை எங்கள் இருவருக்குமே. கவிழ்ந்த மேகம் சில்லென்ற காற்றாய் உடலை ஏந்திக் கொள்ள ஏகாந்த அமைதிக்குள் மனம் உறைந்துப் போகும். விருப்புவெறுப்பற்ற மனவெளி பாம்பாய் ஊர்ந்து அகத்தினுள் படிந்துப் போகும். தாத்தாவின் கைப்பிடியை இறுக்கிக் கொள்ள தேவைகள் குறைந்துக் கொண்டே வந்தன. மழை கிளப்பி விடும் காட்டின் வாசனை உள்ளே போதையாய் இறங்கத் தொடங்கும். மரங்களில் வழியும் மழை, தண்டுகளை ஈரமாக்கி.. இலைத்துளிர்களை நீவி விட்டு.. பழுத்த இலைகளை கீழே உதிர்த்து மாயஜாலம் நிகழ்த்தும். மதர்த்த பெரிய இலைகள் மழை நீரை உள்வாங்கியும் பின் வழிந்தோடவும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். இரவா.. பகலாவென கணிக்கவியலாத வெளிச்சம் கவிழ்ந்து காட்டை நிரப்புவதில் சலனங்களற்ற புது வெளிக்குள் புகுந்துக் கொள்ளும் மனம் அமைதியின் ஆர்ப்பரிப்பிற்குள் இறுத்திக் கொள்ள எத்தனிக்கும். இனம் புரியாத சிறுச் சிறு பறவைகளின் ஒலிகள் சூழலின் ரம்மியத்தைக் கூட்டும். கால்களில் ஒட்டிக் கொண்டச் சேறு உயிர் கரைந்து ஓடுவதுப் போல மழை நீரில் தன் பிடிமானத்தை இழந்து வழிந்தோடும்.

மழையின் தீண்டலில் கிறங்கிக் கிடக்கும் மரங்களில் சில தான் பெற்ற இன்பத்தை பிறருக்கும் கடத்தி விடும் நன்நோக்கில் பின்னிக் கிடந்த வேர்களை நிலத்திற்கு வெளியே பின்னிப் பிணைத்திருக்கும். சூல் கொண்ட வரையாடுகள் சிலிர்த்துக் கொள்ள.. செந்நிற மொந்தை வால் அணில்கள் கிளைகளில் தாவிச் செல்ல இதமான மழை இசையாக அகத்தை நிரப்பி விடும். அதிரடிக்காத காட்டு மழை உடலுக்குப் பழகிப் போனதில் சளி.. ஜுரம் என தொடர் அத்யாயங்கள் நிகழ்வதில்லை என்பதால் காட்டு வாழ்க்கைக்குத் தடை ஏற்படுவதில்லை. பள்ளி விடுமுறைத் தினங்கள் குதுாகலமாகிப் போயின.

இரண்டு மலைத் தொடருக்கு இடையே அமைந்துள்ளப் பள்ளத்தாக்குப் பகுதிதான் எங்கள் ஊர். இயற்கையின் இறகுகளுக்குள் பதவிசாக பம்மிக் கிடப்பது போலிருக்கும் வான்பார்வைக்கு. மலையில் உருவாகி வழிந்தோடும் சாரல் தெளிப்பிற்குள் அமிழ்ந்து நின்று அழகுக் காட்டும் ஊர்களாக சூழ்ந்துக் கிடந்தாலும், சுற்றுலாத்தலமாக புகழடையாத பாக்கியத்தில் பொலிவு விலகாத பவித்திர அழகைப் பொத்தி வைக்க ஏதுவாயிருந்தது. நெல் வயல்களும் வாழை மரங்களும் தென்னந்தோப்புகளும் கரும்பங்கொல்லைகளும் கிராமங்களை சோலைகளாக்கியிருந்தன. காடுகளைப் போலச் சரணாலயங்களும் நகர்ந்துக் கொண்டதில் கிராமங்களுக்கும் விலங்குகளுக்குமான இடைவெளி அறுபது கிலோ மீட்டர் என்றது.

என் மனைவி மேலேறி வந்து விட்டாள். “வீடே அடைஞ்சுப் போயி புழுக்கமா கெடக்குது.. கொழந்தை அழுதுக்கிட்டே இருந்துட்டு இப்பதான் துாங்குனா.. சத்தம் போடாம மேல வந்தேன்..“ மலைச்சாரல் காற்று புதிதாக பிறந்தக் குழந்தையை கூட அரவணைத்துப் பழக்கியிருந்தது. கதவையடைத்து காற்றை வழியனுப்பியதில் வந்தப் பாதிப்பு இது.. சிரித்துக் கொண்டேன்.

”எல்லாரும் உயிரக் கையில புடிச்சுக்கிட்டு கெடக்குறோம்.. உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்..” என் சிரிப்பு அவளை கோபப்படுத்தியது. சென்ற வாரம் இதே நாளில்தான் சிறுத்தைப்புலியொன்று எங்கள் ஊருக்கு விஜயம் செய்திருந்தது. வனத்துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் பறக்க ஊர் மொத்தமும் ஜீப்புகளாலும் சீருடைகளாலும் நிறைந்துப் போனது. பதறிப்போன சுற்றுபற்று கிராமங்கள் மொத்தமும் உள்ளுக்குள் முடங்கிப் போனது. தேவைகளிருந்தும் வாங்குவோரின்றி கடைகளும் பள்ளிகளும் மூடப்பட ஊர் முழுமையும் பாதுகாப்பு வளையம் அணிந்துக் கொண்டதில் ஊரே அந்நியமாகிப் போனது அனைவருக்கும்.

அதற்கு அடுத்தநாள் என் மனைவியின் தங்கைக்கு என் வீட்டில் வைத்து வளைக்காப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ”தாயில்லாதப் புள்ள.. கூடப் பொறந்தவளுக்கு நான் செய்யாம யாரு செய்வா..” என்று இழுத்துப் போட்டுக் கொண்டு சொந்தங்களை அழைத்திருந்த என் மனைவி சிறுத்தைப்புலியின் வரவிலும் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வனத்துறையின் அறிவிப்பிலும் உடைந்துப் போனாள். சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்த அவளுக்கு பிரசவ நேரத்தில் தாயின் தேவையை அதிகமாக உணரமுடிந்ததில் தங்கையின் பிரசவத்திற்கு தானே பொறுப்பேற்க முடிவு செய்த நிலையில்தான் இந்த களேபரம். மக்கள் வீடடங்கிக் கிடந்தாலும் தகவல் தொழில்நுட்பத்தின் நவீனங்கள் வதந்திகளையும் புரளிகளையும் பரப்பும் விரைவுச் சாதனமாகின்றன. சிறுத்தைப்புலி தண்ணீர் டேங்கின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது.. வீட்டுக் கதவை தட்டியது என்றல்லாம் வதந்திகள் சூடாகிக் கிடந்தாலும் அது அகப்படும் வழி மட்டும் தெரியவில்லை. அதன் செழுமையானக் காலடித் தடங்களைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் வனத்துறையினரால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட விலங்குதான் என்றும் இது சற்றே மூர்க்கம் கூடியது என்றும் தெரிந்துக் கொண்டதில் ஊர் இன்னுமாக உறைந்தது. “சனியன்.. மொதல்ல கூண்டுக்குள்ள சிக்குட்டும்.. பிற்பாடு கலெக்டருக்கிட்ட போயி மனு கொடுப்போம்..” என்று குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டன. “மனுவெல்லாம் தர்மமில்ல.. போராட்டந்தான் சரியான வழி..” என்றது அடுத்து வந்தத் தகவல். “யாரை நம்பியும் உசிர ஒப்படைக்க முடியாது.. பேசாம நாம்பளே சுட்டுத் தள்ளிட வேண்டியதுதான்..” துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருந்தவரிடமிருந்து வீரமான தகவல் வெளியானது. எது எப்படியிருந்தாலும் வீரமெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டாக வேண்டியக் கட்டாயத்தில் நான்கு நாட்கள் கடந்து விட்டன.

சில சமயங்களில் கதாநாயகனாகும் ஆசையில் பள்ளித் தோழர்களிடம் தாத்தாவின் அனுபவங்களை என் அனுபவங்களாக எடுத்து விடுவேன். “நான் பெரிய யானையப் பார்த்தேன்.. கோவில்ல இல்ல.. காட்டுல..” வாயடைத்துப் போயினர் நண்பர்கள். ”காட்டுலயா..?” என்றனர். ”ஒரு தடவை ஃபாரஸ்ட்காரங்க காட்டுக்கு போக வழிக் கேட்டாங்க.. நானும் ஜீப்ல வாரேன்னு சொல்லி ஏறிக்கிட்டேன். போற வழியில இன்னொரு காட்டுவாசி ஆளையும் ஏத்திக்கிட்டாங்க. மலைப்பாதையில ஜீப்பு போயீட்டு இருந்துச்சா.. அப்ப திடீர்ன்னு ஆறேழு யானைங்க..  பெருசுலேர்ந்து குட்டி வரைக்கும் நிக்குதுங்க.. அதுல ஒரு யானை ரொம்பப் பெருசு.. அது சண்டை போடுறாப்புல வேகமா ஜீப்ப நோக்கி வந்துச்சு.. ஆபிசருங்கள்ளாம் பயந்துட்டாங்க.. யாரும் பயப்புடாதீங்க.. நான் பாத்துக்கிறேன்னாரு சாடை செஞ்சாரு அந்த காட்டுவாசி ஆள். அதுக்குள்ள அந்த பெரிய யானை ஜீப்புக்கிட்டே வந்துடுச்சு.. என்னா செய்யறதுன்னே எங்களுக்கு புரியல. காத்துல தும்பிக்கை ஒரு வீசு வீசுச்சுப் பாரு.. குலை நடுங்கிப் போச்சு எல்லாத்துக்கும்.. திரும்பவும் நான் பாத்துக்கிறேன்னு சாடை செஞ்சுட்டு வண்டியிலேர்ந்து இறங்கினாரு அந்த ஆளு..“

எல்லாருடையக் கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ”எலந்தவடை வாங்கியாந்தாதான் சொல்லுவேன்..“ நான் அடம் பிடிக்க நாலைந்து இலந்தை வடைகள் என் கைக்கு வந்தன. நிறைய உப்பும் காரமும் இலந்தைப்பழ புளிப்புமாக நான் விடும் கதையைப் போல சரிவிகித மசாலா கலந்த வடைகள். காட்டுக்குள் பொறுக்கும் இலந்தைப்பழங்களை வெளியூர் விற்பனைக்கு அனுப்பியதுப் போக மீதமுள்ளவற்றை இடித்து வடைகளாக தட்டி விற்பனைச் செய்வார்கள்.

”அப்றம்…” ஆவலாகியதுக் கூட்டம். ஆனால் தாத்தா என்னை இதுபோல காத்திருக்க விட்டதில்லை. ”அவவன் வேலய அவவனைச் செய்ய வுட்டுடுணும்.. வெள்ளாமைச் செய்யறவன் பிளேன் ஓட்டுறதுக்கணக்கா எல்லா பயலுங்களுக்கும் காடு புரிஞ்சுப் போவுமா… மொத்த ஆளுங்களும் நடுங்கிப் போயிட்டாங்க. ஆனா அந்த காட்டுவாசி ஆளு கலங்கல.. யானை எச்சரிக்கை பண்றதுக்குதான் இப்டி தும்பிக்கைய வீசுதுன்னு சாடைக் காட்டிட்டு கண்ணாடிப் பாட்டில்ல சின்னக் கல்லு வச்சு வொரசினாரு.. பொறவு என்னென்னமோ வினோத சத்தமெல்லாம் எழுப்பிக்கிட்டே அந்த யானைக்கூட்டத்துக்கிட்ட போனாரு.. பயமே இல்ல அவர் முகத்துல.. நேரா போய் அங்கன இருக்கற கல்லு ஒண்ணுல உக்காந்துக்கிட்டு அந்த யானைகளையே பார்த்துக்கிட்டு இருந்தாரு.. அம்புட்டு யானைங்களும் செத்த நேரத்துல காட்டுக்குள்ளே போயிடுச்சு…” இதை கேட்டு முடிப்பதற்குள் என் உள்ளங்கை வியர்த்திருந்ததை உணர்ந்தவர்போல வழியிலிருந்த செடியை கசக்கி முகர்ந்தார். என் மூக்கிலும் வைத்தார். “பாம்பு அண்டாது.. வாய்யா..“ என்றார்.

காடு நீண்டிருந்தது. ஒருநாள் தாத்தா என்னை வெகுத் தொலைவிற்கு அழைத்துச் சென்றார். ஒற்றையடிப்பாதை அது. வெவ்வேறு அளவுகளிலான நிலப்பரப்பு என்பதால் பாதையின் நீளம் தெரியவி்ல்லை. நடந்து நடந்து அளந்தாலும் கால்களின் சோர்வு மனத்திற்கு எட்டவில்லை. இரண்டுப் பக்கமும் உயர்ந்துக் கொண்டேப் போகும் மலைகள் காட்டுப்புதர்களாலும் விதவிதமான செடிகளாலும் நிறைந்துக் கிடந்தது. வீசும் காற்று ஏதோ ஒருவித நறுமணத்தை தன்னுள் புதைத்திருந்தது. ஒற்றையடிப்பாதை புதர்களின் அடர்வில் துண்டாகிப் போக புதுப்பாதையொன்று பிரிந்துச் சென்றது. திடிரென்று காற்று பூந்துாவலைகளாக மாற “பக்கத்துல அருவி இருக்கு..” என்றார் தாத்தா.

தாத்தாவின் கணிப்புப்படி சற்றே தள்ளி பாறை நுரைத்து மெல்லிய கோடாக வழிவதுப் போல அருவிக் கொட்டிக் கொண்டிருந்தது.  தொட்டுப் பார்க்கத் துாண்டும் ஆவல் உடல் முழுவதும் வியாபிக்க தாத்தாவிடம் வெளிப்படுத்தினேன். பாதையற்ற பாதையில் புதர்களை விலக்கி நடந்தோம். உடுத்தியிருந்த முரட்டுக் கம்பளியையும் மீறி தோலை உரசிச் சென்றது முற்செடிகள். பிறவிப்பயனை அடையப் போவதுப் போன்றதொரு தெறிப்புடன் முன்னேறிய தாத்தாவுக்கு இது ஏதும் பொருட்டில்லை. நானும் பின்தொடர்ந்தேன். பாசியேறி அடர்ப்பச்சை நிறத்திலிருந்தது பாறை. நீர்க்கரைகளை சுமந்த உலர்ந்தப் பாறைகள் கூட வழுவழுவென்றிருந்தன. அதில் ஆங்காங்கே நெட்டுக்குத்தாக முளைத்திருந்த செடிகள் உயிரோட்டமற்றிருந்தன. நீர் வழிய இடம் கொடுத்தப் பாறைகள் சற்றே உள்வாங்கியும் கருத்தப் பாறைகள் புடைத்துமாக சீரற்று இருந்தன. வீசிப் போகும் காற்று, வழியும் நீரைத் தொட்டு உடலில் துாவி விளையாடியது. மிக மெல்லிய நீர்தான் என்றாலும் நீரில் வேகமிருந்தது.  மென்சாரல் உடலெங்கும் நனைக்க சில்லிப்பாக வழிந்தோடிய நீர் கைகளின் வழியே உள்ளுக்குள் சிலிர்ப்பாக இறங்க.. நிஜமான சொர்க்கம் இதுதானோ எனத் தோன்றியது.

பெரிய அருவியொன்றின் கசிவாகயிருக்கும் என்றார் தாத்தா. கீழேச் செல்ல செல்ல நீரின் அகலம் மேலும் குறைந்து வெண்பட்டு வேட்டியின் கரையாக மாறி கண்களுக்கு எட்டும் தொலைவில் அதிக நீரற்றப் பள்ளத்தில் விழுந்தது. பெரிய ஓடையின் பள்ளம் அது. நீரின் தடங்கள் பதிந்தும் பதியாமலுமாக வறண்டிருந்தது. சிறுக் குட்டையாக தேங்கியிருந்த நீர் அருவி வழிந்து விழும் இடத்தைத் தவிர்த்து மீதமிடத்தில் அசைவற்றிருந்தது. சுற்றிலுமான பெருமரங்கள் இவ்வோடையை நம்பி பிழைப்பனவாகவும் நீரற்றுப் போனதில் சற்றே வாட்டமுற்றதுப் போலவும் தோன்றியது. கட்டாறுகள் எல்லா நேரமும் ஒன்றுப் போலிருப்பதில்லை. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றார் தாத்தா.

இத்தனை அழகுகளையும் வஞ்சனையோடு தனக்குள் மட்டும் பொதித்து வைத்திருக்கும் காட்டின் மீது கோபம் கூட வந்தது. மெதுவாக நடந்ததில் துாரத்து மரங்கள் நெருங்கி கைத்தொடும் அருகாமைக்கு வந்திருந்தன. அதன் அடர்வுகள் தலைக்கு மேல் குடை விரித்ததுப் போல் நிழல் பரப்பியிருந்ததில் சூரியனுக்கும் எங்களுக்குமான தொடர்புகளற்று போயிருந்தது அந்த நண்பகல் பொழுதில். சற்றுத் தொலைவில் குடிசைகளின் தலைப்பாகங்கள் தெரிய அதை நோக்கி நடந்தோம். நகரத்தின் எந்த சாயல்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுக்காத வீடுகளும் மனிதர்களுமாக நிரம்பியிருந்தது அந்த மிகச் சிறிய ஊர். தாமரையிலைப் போன்ற பெரிய இலையில் மலை வாழைப்பழமும் கருப்பட்டியும் வைத்து பரிமாறினார்கள். தேனில் துவைத்தெடுத்த வேர்ப்பலாவும் நறுக்கிய சிறிய வெங்காயம் சீராகத் துாவப்பட்ட ராகி ரொட்டியும் சுவையாக இருந்தன. தொலைந்துப் போன கலோரிகளை மீண்டும் ஏற்றிக் கொண்ட தென்பில் எங்களின் நடைத் துள்ளாட்டமானது.

ஆணும் பெண்ணுமாக மயில்கள் இரண்டு சற்றும் எதிர்பாராதத் தருணத்தில் பக்கவாட்டில் கடந்தன. மனத்தில் வந்துப் போன உணர்வு கிளர்ச்சியா.. பயமா..  என புரியவில்லை என்றாலும் கடந்துப் போனவைகளை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை. அன்று இரவு கூட என் கனவில் அந்த மயில்களைப் பார்த்தேன். அம்மா.. காட்டுமயிலு எவ்ளோ பெரிசு தெரியுமா.. என்றேன். “காட்டுக்கு போனீயாடா..” என்று பதறினார் அம்மா. ”தாத்தாவுக்கும் பேரனுக்கும் வேற பொழைப்பே கெடையாது..” அப்பா சுலபமாகக் கடந்துப் போனது தந்த சுதந்திரத்தில் எனக்கும் தாத்தாவுக்கும் வீட்டை ஏமாற்ற அதிக சிரமம் இருப்பதில்லை.

நிறைவுக் கூட நிரம்பி வழிந்து விடும் சில நேரங்களில். ஒண்டவியலாதபடி நடுக்காட்டில் பெய்ந்து விடும் பெருமழையை விட செந்தட்டியின் முட்கள் அதிகம் படுத்தி விடும். அடங்காத அரிப்பு எரிச்சலைக் கொண்டு வந்து விடுகிறது. வழித்தவறி மாட்டிக் கொண்டத் தருணமொன்று இரவு நேர தரிசனத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. பொழியும் நிலவுக்குள் கோட்டோவியமாக வெளிப்படும் காடு வரை எனக்கு பழக்கம்தான். ஆனால் நள்ளிரவுக் காடுகள் சற்றே திகிலுாட்ட வைக்கின்றன.

காட்டுவாசிகளின் குடிசையில் இரவு தங்க நேரிட்டபோது நெருப்பு மூட்டத்தில் குளிரையும் பயத்தையும் ஓட்ட முயற்சி செய்தேன். மூட்டப்பட்ட தீயின் ஒளிக்குள் கானகம் முழுவதையும் திணித்துக் கொள்ளத் தோன்றியது. கீறலாகத் தெரிந்த நிலவுக் கூட இருட்டை விரட்ட அஞ்சி மேகத்திற்குள் ஒளிந்துக் கொண்டது. இரவு உணவாக அவர்கள் அளித்த எருமைப்பால் தயிறுடன் கலந்த காட்டுயானம் சோறு உள்ளே இறங்க மறுத்தது. கானகத்து இருட்டை கவ்வித்தள்ளும் முயற்சியில் இரவு முழுவதும் நெருப்புத் தேவையாக இருந்தது… அம்மனிதர்களின் அருகாமையும்தான். மலைவாழையும் ஆகாசக்கருடன் கிழங்கு மாவுமாக வழியனுப்பினார்கள். இந்த மாவு பாம்பு விஷத்தை முறித்து முடக்கி விடும் என்றார் வரும்வழியில் தாத்தா.

”நான் ஒருத்தி இருக்கேங்கிற நெனப்பெல்லாம் உங்களுக்கெங்க இருக்கப் போவுது.. காடு.. காடுன்னு.. அதையே கட்டிக்கிட்டு அழுவ வேண்டியதுதானே..? கட்டியவள் அழத் தொடங்க சமாதானப்படுத்தும்விதமாக படுத்தவாறே அவளை அணைத்து இழுத்தேன். என் கனவுகளுக்கு மதிப்பளிக்கிறாளோ இல்லையோ.. நான் தனித்திருக்கும் தருணங்களை அனுமதிக்கும் தன்மைக் கொண்டவள்தான் என் மனைவி. தங்கையைப் பற்றிய கவலை.. ஒரு வாரப் புழுக்கம்.. சிறுத்தைப்புலி விஷயத்தை நான் இத்தனை சுலபமாக எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பகிர்தலற்ற நிலை போன்றவைகள் அவளின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.

நேற்று அந்த சிறுத்தைப்புலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மேற்புறம் திறந்த குளியலறைக்குள் தஞ்சமடைய யாருக்கு வாழ்வு.. யாருக்கு சாவு என்பது விளங்காமலேயே இறுதியாக மயக்க ஊசி மூலமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. வனகாவலர்களும் அதிகாரிகளுமாக எடுத்திருந்த குத்தகை நேற்றோடு முடிவுக்கு வந்திருந்தாலும் இறுக்கத்தின் முனை முற்றிலும் அவிழாத நிலையில் அடைப்பட்ட வீடுகள் இன்னும் திறக்கப்பபடவில்லை. வீட்டின் வராண்டா.. மாடிப் படிக்கட்டு என எல்லாமே வலுவான இரும்பு கிராதிக்குள் அகப்பட்டுப் போனதில் குரல்கள் எதிரொலிப்பதான பிரமை எனக்கு. ஏதோ சொன்னாள் அவள். ”என்னப்பா சொன்னே..?” என்றேன்.

”எப்பப் பாத்தாலும் கனவுதான்.. அப்டி என்னாதான் வானத்துல கொட்டிக் கெடக்கோ..” என்றாள் அதே கோபத்துடன்.

இதைப் போன்றக் கேள்விதான் எனக்கும் தாத்தாவுக்குமிடையே ஊடாடிக் கொண்டிருந்தது.. ”அப்டி காட்ல என்னதான் இருக்கோ..?” பதிலாக என்னையும் தனக்குள் பிணைத்துக் கொண்டது காடு. காடுகளில் வழிந்தோடும் பால் நிலவு பித்தங்கொள்ள வைப்பதாக இருக்கும். புடைப்பாகப் பிணைந்துக் கிடக்கும் வேர்களும் மண்டிக் கிடக்கும் புதர்களும் வழிந்தோடும் நிலவைத் தாங்கித் தனக்குள் பொதித்துக் கொண்டது போல இறுமாந்து நிமிர்ந்திருக்கும். கிளைகளிலும் இலைகளுக்குள்ளும் சிறைப்பிடித்த நிலவை சில மரங்கள் சுயநல மிகுதியில் அடம்பலாக்கி தனக்குள்ளே மறைத்துக் கொள்ளும் சிறிதும் கருணையின்றி. பொழியும் பால் ஒளியை உண்டப்பின் மிகுதிகளை புதர்களுக்குக் கடத்தி அவற்றைக் கோட்டோவியங்களாக்கி விடும் சில நன்மரங்கள். வளைந்து நெளிந்தோடும் மரங்கள் நிழலும் வெள்ளொலியுமாக நிலவைத் தன்னகப்படுத்த நீண்டு நெடிந்த மரங்கள் நிலவுத் தொட்டு விடும் துாரமென்ற தொடர் நம்பிக்கையில் தனது முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டேயிருந்தன. விட்டக்குறையாக தன்னை தொட்டு விடும் நிலவுக்குள் புல்வெளிகள் முகம் புதைத்து பூரிக்கும். மெல்லிய சாரலும் பனியும், சலசலக்கும் இலைகளை சலனமற்று காட்ட.. மெத்தென்ற புல்வெளிகள் பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் கூட ஏதுவாகதான் இருக்கும்.

”தாத்தா.. ஏதாவது மிருகம் வந்துடுச்சுன்னா என்னா செய்வே..?” என்பேன். கேட்கும்போதே தாத்தாவின் விரல்களை அழுத்தமாக இறுக்கிக் கொள்வேன்.  ”அதுங்களுக்கும் நம்பள வுட்டா யாருதான் இருக்கா..?” என்பார். புரிந்ததுப் போல தலையாட்டிக் கொண்டேன். என்னவென்று கேட்க விழையும் என்னுடைய குறுக்கீடு அவரை எதனுள்ளிருந்தோ நகர்த்தி விடும் என்பதாக தோன்றுவதில் என்னால் கேட்க முடிவதில்லை. புரிந்த சில விஷயங்கள் எனது தோழர்களிடம் பெருமையடித்துக் கொள்ள போதுமானதாக இருக்கும். ஒருமுறை காட்டுவாசி அக்கா ஒருவர் புலியைப் பற்றிச் சொன்னத் தகவல்களை சொந்த சரக்காக்கி அவிழ்த்து விட அதனை நம்பாதத் தோழர்களும் இருக்கவே செய்தனர்.

”புலி பொம்பளப்புள்ளங்களாட்டம் வெக்கப்படுமாம்..” புலி பொதுவாக சாந்தமும் வெட்கப்படும் சுபாவமும் உடையது என்று நான் சொல்வதை அவர்கள் நக்கலாக எதிர்க்கொள்வார்கள். நானும் விடுவதில்லை.

”ஆமா.. வெக்கப்பட்டு குச்சுக் கட்டிக்கிட்டு ஒக்காந்துக்கும்.. சீரியஸா பேசும்போது கிண்டலடிக்காதீங்கடா..” பதிலில் கோபத்தை ஒளித்துக் கொண்டு தொடர்வேன். ”நீ பசிக்கும்போது சோறு திங்க மாதிரி அதுவும் பசிக்கும் போது சாப்டுது.. எல்லா நேரமுமா பசிக்கும்..? பசியில்லாத நேரத்துல யாரையும் எதுவும் பண்ணாது தெரியுமா.. மனுஷன்னா வயசானக் காலத்தில ஒக்கார வச்சு சோறுப் போடுவோம்.. புலிங்களுக்கு யாரு இருக்கு.. தானா தனக்கு வேணுங்கறத வேட்டையாடிக்குணும்.. முதுமை.. இயலாமை.. யாரும் நம்பளக் கண்டுக்கலையேங்கிற தனிமை உணர்வு எல்லாம் சேரும் போதுதான் அதுங்களுக்கு கோவம் வந்துடுது.. மத்தப்படி அது சாந்தமான மிருகந்தான்.. ஆனா ஒண்ணு மிருகங்கள்ல்ல நல்லது.. கெட்டது.. பழகினது.. பழகாததுன்னு எதுவுமில்ல..” என்றேன்.

“நெனப்பு.. உயிரெல்லாம் எங்கயோ இருக்கு.. உருவம் மட்டுந்தான் இங்க இருக்கு..” மனைவியின் புலம்பல் என்னை நடப்புக்குள் இழுத்தது.

”சகலைக்கிட்டே நானே பேசி வளைக்காப்புக்கு வேறொரு நாள் பாக்குறேன்.. போதுமா.. நீ கவலய வுடு..” என்றேன்.

“என்ன பேசுவீங்க.. சிறுத்தையும் புலியும் வந்தா தடியால அடிச்சு விரட்டிடுலாம்னா..? பாத்திரக்கடைதானே.. எங்க வச்சாலும் ஓடும்.. பேசாம எல்லாருமே வெளியூர்ப்பக்கம் போயீட்டா இந்த பிரச்சனையலெ்லாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்ல்ல..” நக்கலா.. கிண்டலா.. கெஞ்சலா.. என்று கணிக்கவியலாதத் தொனியில் பேசினாள் என் மனைவி.

”பிரச்சனைக்குள்ளதான்டீ தீர்வும் இருக்கு.. அதான் இயற்கை.. செங்காந்தாள் பூ பாத்திருக்கில்ல.. அழகா.. செவப்பும் மஞ்சளுமா இருக்குமே.. லேடீஸ்ஃபிங்கர் பூன்னு கூட இதுக்கு பேரு வச்சிருக்கலாம்.. பாலீஷ் போட்ட நெயில் மாதிரி அத்தனை அழகு.. ஆனா அதோட கிழங்குல விஷமிருக்கு.. அதுக்காக அதை ஒதுக்கி வச்சிமின்னா நட்டம் நமக்குதான்.. அதைப் பசுமாட்டு கோமியத்துல ஊற வைச்சு அந்த நஞ்ச முறிச்சுட்டோம்னா வலிக்கெல்லாம் நல்ல மருந்துன்னு சித்த மருத்துவம் சொல்லுது..”

”போதும்.. ஆரம்பிச்சுடாதீங்க.. நீங்க நிறுத்தறத்துக்குள்ள கீழ கொழந்த எழுந்துக்குவா..” என்றாள். அப்போதுதான் பார்ப்பதுப் போல் அவளைப் பார்த்தேன். நிலவொளி அவளின் அழகைக் கூட்டியிருந்தது. துறுதுறுத்தக் கண்களுக்குள் கடந்த நாட்களின் வருத்தம் பிம்பமாக படிந்திருந்தது. ”கவலைப்படாதடீ..” என்றேன். வாஞ்சையான என் பேச்சை நம்பலாமா.. வேண்டாமா..“ என்பதுப் போல என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். திருமணமானப் புதிதில் காடுக் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போதுக் கூட அப்படிதான் விழிப்பாள். பெண்பிள்ளைகளுடன் பிறந்தவனில்லை நான். பெண் தோழிகள் என்றும் யாருமில்லை. இவளைத் தோழியாகவும் வரிந்துக் கொள்ளும் என் மனதின் போக்கிற்கு முடிந்தவரை நியாயம் செய்யும் நல்ல மனைவி இவள்.

எனக்கும் என் மனைவிக்கும் ஒத்த அலைவரிசைக்குள் பயணிக்க முடிகிறதோ இல்லையோ எனக்கும் தாத்தாவுக்குமான அலைவரிசைகளில் என்றும் குறைப்பாடே இருந்ததில்லை. புதிதுபுதிதான அவரது அனுபவங்கள் என்றுமே அலுப்பதில்லை.

”ஒருநாளு நானும் எங்கூட்டாளியும் பொழுது விடியறப்பவே காட்டுக்கு வந்துட்டோம்.. அப்போ காடு எனக்கு புதுசுன்னாலும் அன்னைக்கு ரொம்ப அழகாயிருந்தாப்பல தோணுச்சு.  அப்பவே காட்டுக்குள்ள சன நடமாட்டமிருந்துச்சு. அவங்கள்ளாம் இங்கயே வாழறவங்கதான்னு சொன்னான் எங்கூட்டாளி.. சும்மாட்டுத் துணிய இடுப்புல சொருவிக்கிட்டு பொம்பளையாளுங்க வெறவு வெட்ட போயிட்டுருந்தாங்க.. அவங்க போறப்பக்கம் நெறைய எலந்தமரமிருந்துச்சு.. எலந்தப்பழம் பொறுக்கலாம்ன்னு அவங்க பின்னாடியே கௌம்புனோம்..”

”அப்றம் என்னாச்சு..”

”ஒண்ணும் ஆகல. பட்டுபட்டுன்னு காஞ்சக் குச்சிங்கள ஒடைச்சு வெறவுக்காக கட்டிக்கிட்டாங்க.. எலந்தப்பழம்.. எலுமிச்சம்பழமெல்லாம் பொறுக்கி சாக்குல வச்சுக்கிட்டாங்க… வெறவுக்கட்டை தலயில ஏத்திக்கிட்டு அவங்க கௌம்ப நாங்களும் பின்னாடியே நடந்தோம். போற வழியெல்லாம் வண்ணாத்திப்பூச்சி புடிக்கறது.. மரத்துல நம்பர் போடறது.. செடியில கல்லத் துாக்கிப் வீசறது. ஓணான் அடிக்கிறதுன்னு எதாவது பண்ணிக்கிட்டேப் போனோம்.. திடீர்ன்னு ஏதோமாதிரியான சத்தம்.. காட்டுசனங்க எங்களப் பாத்து சத்தம் போடாதீங்கங்கிற மாதிர வாயில வெரல வச்சுக் காட்டுனாங்க. அப்டியே நின்னோம். எங்களுக்கு எதுவும் தோணல.. சொல்லப்போனா நிதானிக்கக் கூட நேரமில்ல.. நுாறடி துாரமிருக்கும்.. புதர் மறைவுக்குள்ள ஏதோ ஒண்ணு சடக்குன்னு ஓடி மறைஞ்சாப்பல இருந்துச்சு.. அவங்க நடக்க ஆரம்பிச்சாங்க.. மெதுவா எங்களையும் அவங்க பின்னாடியே வரச் சொன்னாங்க.. சின்னச் சின்னதா இருந்துச்சு அவங்க குடிசையெல்லாம். சின்னத்தட்டுல அவிச்சக் கிழங்க வச்சு அதுல ரசத்தை ஊத்திக் கொடுத்தாங்க.. தின்னுப்புட்டு உடனே கௌம்பச் சொன்னாங்க.. பலாப்பழம் பறிக்க போவுணும்னு சொன்னோம்.. ஆனா அவங்க காட்டுக்குள்ள போக வேணாம்னு கன்டிசனா சொன்னாங்க…”

முக்கியமாக ஏதோ சொல்லப் போகிறார் என்பதை உணர்ந்து திகிலோடு அவரைப் பார்த்தேன்.

”ஏங்க்கா..“? என்றோம்.

”அங்க சிறுத்தபுலி நடமாடுச்சுல்ல..” சாதாரணமா சொல்லுச்சு ஒரு அக்கா.. சட்டென ஓடி மறைந்ததாக தாத்தா சொல்லியிருந்ததை உருவப்படுத்தியதில் நான் மிரண்டுப் போனேன். தாத்தா அதை உணராமல் பேசிக் கொண்டிருந்தார். ”அது ஒரு ஆம்பளப் புலி.. இணையறத்துகாக பொம்பளப்புலிய தேடுறப்ப அதோட மூச்சுச்சத்தம் இப்டிதான் கேக்கும்ன்னு அந்தக்கா சொல்லுச்சு..” என்றார்.

”உனக்கு பயமாயில்லையா தாத்தா..” என்றேன்.

”பயந்தா எல்லாத்துக்கும் பயந்துக் கெடக்க வேண்டியதுதுான்.. நாமதான் புலி.. சிங்கம்னு பெரிசுங்களப் பாத்து பயந்துக்கிறோம்.. மானும் மயிலும் கெடைச்சா கறியாக்கிடுறோம்.. ஆனா காட்டுச்சனங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்.. சனங்க மிருகங்களை அனுசரிச்சுக்குவாங்க.. மிருகங்க சனங்கள அனுசரிச்சுக்குங்க.. இதுங்க ரெண்டையும் காடு அனுசரிச்சுக்கும்.. காட்டு ஆளுங்கள காட்டுக்குள்ள புழங்க விட்டாத்தானே நாலும் தெரியும்.. ரோடு போடறேன்.. தண்டவாளம் போடறேன்.. சுரங்கம் தோண்டுறேன்னு அவன வெரட்டுனா காடும் அழிஞ்சு அவனும் அழிஞ்சுப் போவான்..காட்டுச்சனங்க கத்தினா கேக்கறது யாரு.. கொரவளையப் புடிச்சுடுறானுங்களே.. மனுசனுங்க காட்டுக்குள்ள பூந்துக்கிட்டு வந்துடுச்சு.. வந்துடுச்சுன்னா.. யாரு என்னா செய்ய முடியும்..“ சாகும் வரை புலம்பிக் கொண்டிருந்தார்.

”நீங்க தங்கச்சி மாப்ளைக்கிட்ட பேசி முடிக்கறதுக்குள்ள அவளுக்கு புள்ளையே பொறந்துடும்..” என்றாள் சலிப்பைப் புலம்பலில் ஏற்றி.

”சரி வுடு.. புள்ளைக்கு சிறுத்தப்புலின்னு பேரு வச்சிடலாம்..” என்றேன் படுத்தவாக்கில் கண்களை மூடிக் கொண்டே.

”எங்கர்ந்துதான் எங்கப்பா உங்கள கண்டுப்புடிச்சாரோ.. எதுக்கெடுத்தாலும் விளையாட்டுதான்.. வயித்துப்புள்ள வர்ற நாளு கடவுளுக்குதான் வெளிச்சம்.. பேசாம வெளியூர்ல எதாவது மண்டபம் புடிச்சு வளைக்காப்பு வச்சுடலாமா..?” என்றாள் ஆர்வமாக.

”அப்ப காட்ட வுட்டுட்டு நாட்டுக்கு போவுணும்ங்கிற..” என்றேன்.

”காடு.. காடு.. காடு.. அந்த சனியன வுட்டுட்டு வெளிய வந்துத் தொலைங்க..” எரிச்சலாக எழுந்துக் கொண்டாள், அத்தனைக் சீக்கிரமாக வந்து விட முடியாது என்பதை உணராமலேயே. காடு எப்போதும் ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டேயிருக்கும். தன்னுள் அடங்கியிருக்கும் உயிர்க்கோளங்கள் வழியாகவும்.. அல்லது அல்லாமலும். இலாபநட்டங்களை முன்னிருத்தும் தேடலில் உணர்தல்கள் நகர்ந்து விடுகின்றன. விருப்புவெறுப்பற்ற வெளிகளை ஊடுருவ விழையும் காட்டை நோக்கியப் பயணத்தில் காடுகள், தான் உணர்த்த வருபவற்றை உணர்த்தி விடுவதாகவே தோன்றுகிறது எனக்கு.

யானையை நேரில் பார்த்த அன்று நான் பிரமித்துத்தான் போனேன். ”எப்பா.. யானை எவ்ளோஒஒ பெருசு.. இவ்ளோஒஒ பெரிய வயித்துக்கு அது எவ்ளோ சாப்புடும் தாத்தா..” என்றேன்.

”மரம்.. செடி.. கொடியெல்லாம் வேரோடு புடுங்கியில்ல சாப்டும்..”

”இப்டிசாப்டா தீர்ந்துப் போயிடாதா..” அத்தனைப் பெரிய உடலுக்கு பொருந்தாத அதன் சிறியக் கண்கள் எனக்கு நினைவிற்கு வந்தது. ஆபத்தற்ற வெளியை அச்சிறு கண்கள் சுட்டும் தைரியத்தில்தான் அதன் தோற்றத்தில் இத்தனைக் கம்பீரமோ என்று தோன்றியது.

”தீர்ந்துதான் போவும்.. தீர்ந்தப்பொறவு அடுத்தக் காட்டுக்கு போயி பசியாறும்.. அதுக்குள்ள இந்தக் காட்டுல அது விட்டுட்டுப் போன மரமெல்லாம் துளுத்து எழுந்திரிச்சிருக்கும்.. திரும்பவும் தீர்ந்துப் போச்சுன்னா அந்தப்பக்கம் போவும்..”

”நடமாடும்போது நம்ப குறுக்க வந்தோம்னா என்ன தாத்தா பண்ணும்..” என் குரல் பயத்தில் மெலிதாகியிருந்தது. அவரை இறுகப் பற்றிக் கொண்டேன். நாம குறுக்கே புகுந்துதான் ரொம்ப நாளாச்சே.. முணுமுணுத்துக் கொண்டார். எங்கள் கிராமம் நோக்கி எப்போதாவது யானைக் கூட்டங்கள் படையெடுப்பதுண்டு. தெரிந்தும் தெரியாமலுமாக முள்வேலி  அமைப்பது.. மின்சாரம் பாய்ச்சுவது.. உயரமானப் படலில் அமர்ந்து அதன் வரவை கண்காணித்து வெடி வைத்து விரட்டுவது என வருமுன்னே ஓட்டி விடுவார்கள். “ஆடுன காலும் பாடுன வாயும் நிக்காதுங்கிற நியாயமெல்லாம் மனுசாளுக்கு மட்டுந்தான்“ என்பார் தாத்தா. மான்களோ.. மற்ற சிறு விலங்குகளோ தலைக்காட்டும் தினத்தன்று பிளவுப்பட்ட உறவுகள் கூட ஒன்றுக்கூடும் விருந்து தினமான மாறி விடுவதில் வனத்துறையினருக்கு தகவல்கள் பறப்பதில்லை.

சிறுத்தைப்புலி திறந்துக் கிடந்த மொட்டை மாடிக்கு வருமென்று எனக்கு ஏன் தோன்றாமல் போனது. அதன் மூச்சுக்காற்று நான் அணிந்திருந்த லுங்கியில் அனல் காற்றாக வீசி படபடக்க வைக்கும்போதுதான் அது என்னை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மயக்க மருந்து ஊசியில் மயங்கி கூண்டில் பயணப்பட்ட சிறுத்தைப்புலி எப்படி என் முன்னே..? அய்யய்யோ.. படிக்கட்டு வழியே தாவி வீட்டுக்குள் புகுந்து விட்டால்..? மனைவியும் பச்சிளம் குழந்தையும் உறங்குகிறார்களே. பதைத்துப் போனது மனம்.  இவையேதும் பற்றிய அக்கறையின்றி இறுமாப்பாக அமர்ந்திருந்தது அந்த சிறுத்தைப்புலி. எத்தனைத் தடுப்புகள் போட்டாலும் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போலிருந்தது அதன் தோற்றம். அதனை நேருக்கு நேராகப் பார்க்கும் போதுதான் அது என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதில் படிந்துக் கிடந்த உணர்வு நிச்சயம் பசிக்கான தேடல் அல்ல. ஏதோ ஒன்றை பேசித் தீர்க்கும் ஆக்ரோஷம் அதில் இருந்தது. உணவுத் தேவைக்காக என்னை அணுகாது என்று நிச்சயமாகத் தெரிந்ததில் நானும் தெளிவானேன். பேரம் பேசத் தொடங்கினேன். அதுவும் அதற்கு தயாராகவே இருந்தது. என் மனைவியையும் மகளையும் அணுகாதிருக்க ஈடாக எதை வைப்பது என்ற முடிவு இன்னும் எங்களுக்குள் எட்டப்படாத விவாதமாகவே நகர்ந்துக் கொண்டிருந்தது.

கவிழ்ந்துப் படுத்திருந்த என்னைப் புரட்டினாள் என் மனைவி. ”யாருமில்லேன்னா கவுந்துக் கெடக்கறது.. ஆள் வந்துட்டா வானத்தை வெறிக்கறது.. என்ன மனுசனோ..” துாக்கம் தழுவியக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். மனம் இன்னும் விவாதக் களத்திலிருந்து வெளி வரவில்லை. உடலகரீதியான பொதுவெளியிலிருந்து குடும்பரீதியாக ஒருமைப்படுத்தும் மனிதர்களால் கூட சகமனிதனின் எண்ணங்களையோ உணர்வுகளையோ கட்டுப்படுத்தவியலாது என்ற உண்மையை உணராதவளாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவி விலங்குகளின் வெளிக்குள் மனிதக்காற்று நுழைவதைப் போல என்னை பலவந்தமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். “தங்கச்சி ஃபோன் பண்ணுனா..”

”இந்த நேரத்துலயா..?” அதிர்ந்தேன். ”நல்லாயிருக்காள்ல..?”

”அடிவயித்துல வலி சுருக்குசுருக்குன்னு குத்துதுன்னு பயந்துப் போயி அழுதா.. நாள் இன்னும் நெருங்கல.. பொய் வலியாதான் இருக்கும்.. சோம்புக் கஷாயம் வச்சு குடிடீன்னேன்.. ஓஒன்னு அழுவுறா.. தலைப்பிரசவம்ன்னா பயமாதானே இருக்கும்..” அவள் கண்களில் நீர்க் கட்டியிருந்தது. அவளின் கையாலாகாத நிலைமை எந்நேரமும் கோபமாக மாறி என்மீது திரும்பக் கூடும். ”பொண்டாட்டிக்கு ஆறுதலா இருப்போன்னு நெனைக்காம அவரு போக்குலயே பேசிக்கிட்டுப் போறாரு மாப்ளை.. ஆளுங்க இல்லாத வீட்ல பொண்ணக் கட்டித் தொலச்சதுக்கு நல்லாவே அனுபவிக்கிறேன்.. தாயும் புள்ளயும் தனித்தனியா ஆவறதுக்குள்ள இன்னும் எத்தனை அனுபவிக்கணுமோன்னு பொலம்பித் தள்றாரு..”

”பேசாம ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டுப் போவச் சொல்லு..” என்றேன் வெடுக்கென்று.

”போவ தெரியாமத்தான் இங்க பேசிக்கிட்டுருக்காங்களா..? வளைக்காப்பு போடல.. மாசம் நெறயல.. பெரிய மனுசங்கன்னு யாரும் கெடையாது.. இத்தனை சிக்கல் இருக்கு.. பாவம்.. ரெண்டும் தனியா கிடந்து தவிக்குதுங்க..” அழுதாள். ”நானும்  தவியா தவிச்சுக் கெடக்கிறேன்.. எல்லாத்தையும் வுட்டுப்புட்டு கவுந்தடிச்சுக் கெடந்தா மாடிக்கும் கீழுக்குமா நடந்தே செத்துப் போயிடுவேன்..” சீறலாக விழுந்தது வார்த்தைகள் அடம்பலான அருவி நீரைப் போல.

“சரி.. இப்ப எப்டியிருக்காளாம்..?”

“சோம்புக் கஷாயம் வச்சுக் குடிச்சதுல வலி விட்டுப் போயி இப்பதான் படுக்கப் போயிருக்கான்னு சொன்னாரு மாப்ள..”

“அதான் சரியாப் போச்சுல்ல.. நாளைக்கு ஒரு எட்டுப் போயீ என்னான்னு பாத்துட்டு வந்துடுவோம்.. இப்ப பேசாமப் படு..” படுத்தவாறே இடுப்போடு அணைத்துக் கொண்டேன். “ம்க்கும்.. இதுக்கொண்ணும் கொறச்சலில்ல..” நல்ல மூடில் இருக்கிறாள். “எங்கண்ணுல்ல.. கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு வந்துடறனே… உள்ள ஒரே புழுக்கமா கெடக்கு.. நீ அலையாதே.. நானே வந்துடுறேன்டா செல்லம்..” அம்மாவை கொஞ்சுவது பிடிக்காததுப் போல குழந்தையின் அழுக்குரல் சன்னமாக ஒலிக்க “பாப்பா முழிச்சிக்கிட்டா..“ என்றபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள்.

பாசம் கூட ஒருவகையான போதைதான். மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் போதைக்குள் மனிதக்குலம் தழைக்கிறது. காட்டிற்கும் போதைக்குள் ஆட்படுத்திவிடும் சக்தி உண்டு. அது என்னையும் தாத்தாவையும் தனக்குள் இறுக்கிக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலில்லை. பருவநிலை மாற்றங்கள் பழகிப் போனதில் மழைக்காலங்களில் நனையவும் நடுங்கவும் கற்றுக் கொண்டோம். வெயில்கால சூரியனை மரங்களுக்குள் மறைத்து.. மறக்கப் பழகிக் கொண்டோம். சிலிர்ப்புடன் நகர்ந்தன குளிர்நாட்கள். காடுகளுடனான இரகசியங்கள் கூடிப் போனதில் எங்கள் இருவருக்குமான பேச்சுக் கூட குறைந்திருந்தது. மேகங்களின் கருமையை துடைத்தெடுப்பது போல நீண்டு நெடிந்திருந்த பெரு மரங்களுக்கும்.. அம்மரங்கள் அனுமதித்த இடைவெளிக்குள் நுழைந்த சூரியனை தடுத்தே தீர வேண்டுமென்ற வெறிக் கொண்டதுப் போல படர்ந்து அடர்ந்துக் கிடந்த சிறு மரங்களுக்கும்.. குத்தாக வளர்ந்து புதர்களாகி்ப் போனச் செடிகளுக்கும்.. கால்களுக்கு மெத்தையிடும் புல்வெளிகளுக்கும்.. நேரங்காலமின்றி பேசும் கதைகள் ஒருபோதும் அலுப்பதேயில்லை. சொல்ல முடியாதக் கதைகளும் சொல்லி முடியாதக் கதைகளுமாக நேரம் நிரப்பிக் கொண்டேப் போவதில் மனம் ஆழமான சந்தோஷவெளிக்குள் பயணப்பட்டுக் கொண்டேயிருந்தது.

கார்த்திகை மாதங்களில் குளிர்ந்தக் காட்டைக் சிவப்பும் வெளிர்மஞ்சளுமான காந்தள் மலர்கள் குவிந்தும் விரிந்துமாக பூக்கரங்களால் வளைத்துக் கொள்ளும். அழகின் செருக்கில் நிமிர்ந்தும் மழையின் அழகில் பணிந்துமாக தோன்றும் இம்மலர்கள் தோழமைக் காட்டி அணைத்துக் கொள்ளும். இலை அடர்வுக்குள் ஒளிந்துக் கொள்ளும் இரவுப் பனியை மெல்லியச் சாரலாக காற்று வெளியே இழுத்து விடும். காய்ந்துதிர்ந்த சருகுகள் கூட இக்குளிப்பாட்டலில் நனைந்து மிருதுக் காட்டும். கட்டியங்கூறும் கருங்குரங்குகள் வெகு நேரமாக அசையாதிருக்கும் எங்களால் எந்த பாதிப்பும் நேராது என்பதை ரகசிய சங்கேதமாக்கி மான்களுக்கு அனுப்பும். அறிந்த முகங்களானதில் பெயர் தெரியாத பறவைகள் சலம்பித் திரிவதில் தயக்கமேதும் கொள்வதில்லை.

குழந்தையோடு மேலேறி வந்தாள் என் மனைவி. “மணி பன்னெண்டாவப் போவுது. கீழ வர்றீங்களா.. இல்லையா.. உசிர கைலப் புடிச்சிக்கிட்டு படுத்துக் கெடக்கேன்.. கண்ண மூடுனா அந்த பாழாப்போன சனியன்தான் வந்து நிக்குது..” பயந்திருந்தாள். குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு என்னருகே அமர்ந்துக் கொண்டாள். இவள் காட்டும் அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியவில்லையோ என உறுத்தல் தோன்ற நானும் அவளிடம் நெருங்கி அமர்ந்துக் கொண்டேன்.

இருவாச்சிப் பறவைக் கூட தன் துணையை விட்டுத் தராது என்பார் தாத்தா.  நீளமான மூக்கும் கருப்பும் வெள்ளையுமானத் தோற்றமும் கொண்ட அப்பறவை இறகுகளை விரித்துப் படபடத்து பறக்கும்போது வயிற்றில் ஏதோ உருள்வதுப் போலிருந்தது. தாத்தாவின் கைகளை இறுக்கிக் கொண்டேன். என்னைத் திரும்பிப் பார்த்தார் தாத்தா. ”பன்னென்டு வயசுப்பய.. ஓடற பாம்ப புடிக்கிற வயசு..” சிரித்தார். ”இந்தப் பறவை ஒண்ணை விட்டு ஒண்ணு இருக்காது.. பெண் பறவை இங்க எங்கையோதான் இருக்கும்..” என்றார்.  அடிக்கடி பார்க்க நேர்ந்ததில் அதன் நீண்ட மூக்கு சிநேகமாகிப் போனது. “என் செல்ல ஹார்ன்பில்..“ மனைவியின் மூக்கைக் கிள்ளிக் கொஞ்சினேன். நெகிழ்ந்திருந்தாள்.

“பேசாம ஃபாரஸ்ட் ஆபிசுல வேலைக்கு சேர்ந்திருக்கலாம் நீங்க..” நெகிழ்ந்துப்போகும் தருணங்களில் என் மனதிற்கு பிடித்ததைப் பேசுவதாக நினைத்துக் கொண்டே எதையெதையோ பேசி விடுவாள்.

“அத விட காட்டுவாசியா இருந்துருக்கலாமின்னு சொல்லு..”

”இப்ப மட்டும் என்னா காட்டுமிராண்டியாதான் இருக்கீங்க..” என்றாள்.

”காட்டுவாசின்னா காட்டுமிராண்டின்னு அர்த்தமில்லடி.. புலிய முறத்தால அடிச்சு வெறட்டுன பொம்பளைங்கள்ளாம் அங்கதான் இருக்காங்க..” என்றேன். காடுகளை வீடுகளாகக் கொண்ட அவர்களின் மீது சற்றே பொறாமையோடுதான் காட்டிலிருந்து கிளம்புவேன். அடங்காத நெருப்பைக் கூட நீரின்றி அடக்கி விடும் வித்தைத் தெரிந்த மனிதர்கள் அவர்கள். காற்றின் வேகம்.. திசையை துல்லியமாகக் கணிக்கக் கற்றவர்கள். பரபரவென்று பள்ளம் வெட்டியோ.. பச்சிலைகளைக் கொண்டோ தீயை அணைத்து விடுவார்கள்.. வலசைப் போகும் யானைகளை கட்டுப்படுத்தி விட முடியும் அவர்களால். மணங்களை இனம் பிரித்து இன்ன விலங்கு என்று கணித்து  விடுவார்கள். துாங்குவதற்கு மர உச்சிகள் கூட போதுமானது அவர்களுக்கு. காடுகளைப்போல.. அதில் வாழும் தாவரங்கள்.. விலங்குகள் போல அவர்களும் புதிரானவர்களாக.. எப்போதும் புதிதானவர்களாகவே தோன்றினார்கள். கிட்டிமுட்டி நகர்ந்தாலும் அவர்களின் உயரம் எட்ட முடியாததாகவே இருந்தது.

ஒருமுறை நீரைத் தேடி ஏரிக்குச் சென்றோம். முப்புறமும் அடர்ந்த மரங்கள் ஏரியை கீற்று நிலவாக ஆக்கிரமித்திருந்திருந்தது. மரங்களற்ற கரை வழியாக ஏரியை அடைந்திருந்தோம். நீரினருகே இருந்ததால் செடிகொடிகள் செழித்திருந்தன. காட்டு மலர்களும் அதன் நறுமணமும் ஏரியைச் சூழ்ந்திருந்தன. பரவிக் கிடந்த வானமும் தொலைவில் தெரியும் மலைத்தொடரும் பனி ஓவியமாக காட்சியளித்தது. மெல்லிளங்காற்று காட்டின் வாசனையை மகரந்தமாக பரப்ப.. சிறுசிறு இடைவெளியை சாதகமாக்கி சூரியன் தலையை நீட்ட.. காட்டுக் கொடிகளில் கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்துத் தொங்க.. ஈரத்தரை காளான்களை நாய்க்குடைகளாக்கி காட்ட.. உள்ளடங்கிக் கிடந்த இன்ப ஊற்று சரேலென்று பீரிட்டு ஊற்ற.. திக்குமுக்காடிப் போனோம்.  வெண்கொக்குகள் சாமரம் வீசியதில் கலைந்துப் போன முடிகள் நெற்றிக்கு வந்திருந்தன. வெயில் காலங்களில் கூட அனலில் பொரிந்துக் கிடக்கும் மண்ணும் பெயர் தெரியாத மலர்களின் மணமுமாக காடு என்னை இழுத்துக் கொண்டேயிருக்கும். பள்ளமாகவும் மேடாகவும் செறிவாகவும் வறட்சியாகவும் அடர்வாகவும் அடர்வற்றும் மணற்பாங்காகவும் மண்மேடாகவும் தோன்றும் சமனற்ற காட்டின் நிலப்பரப்பு சலனமற்ற மனவெளிக்குள் சுலபமாக இழுத்துச் சென்று விடும்.

குழந்தை மொட்டை மாடியின் காற்றுக்கு இதமாக துாங்கத் தொடங்கியிருந்தது. ”காட்டுக்குள்ள வாழறது அவங்களுக்கு கஷ்டமாயிருக்காதா..” என்றாள் பேச்சுக் கொடுக்கும்வாக்கில்.

”நகரத்துல வாழறது உனக்கு கஷ்டமாயிருக்கா..” என்றேன் எதிர்க்கேள்வியில் பதிலைச் சொருகி.

”நகரத்துல நிம்மதியாவா வாழ்றோம்..? யானைங்க பண்ற அட்டகாசம் போதாதுன்னு போன வாரம் வந்தது மாதிரி எழவுங்கள்ளாம் வெளிய ஓடி வந்துடுதுங்க.. பயந்து பயந்து சாவறதை விட பேசாம ஒரேடியா போய் சேந்துடலாம்.. அப்பப்பா.. காலம் கலிகாலமாப் போச்சு.. எப்டிதான் மனுசன் வாழ்றதுன்னே தெரியல…”

“அதுங்களும் அப்டிதான் தெகைச்சுப் போயி கெடக்குதுங்க..” என்றேன்.

காடுகள் எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காமல் முடிவற்று நீளுபவையாக இருந்தன. பொதிந்திருக்கும் விஷயங்களை அவிழ்ப்போர் வரும்வரை பொத்தி வைக்கும் இயல்புக் கொண்டவை. எங்கோ துாரத்தில் மிக சன்னமாக கேட்கும் யானையின் பிளிறல் ஒலியும் படர்ந்து கிடக்கும் சிறுத்தைப்புலியின் கால்தடங்களும் கூட நாட்டை.. நகரத்தை.. அர்த்தமற்ற வெளிக்குள் தள்ளி விடும் ஆற்றல் கொண்டனவாக ஆகின்றன. மூங்கில் காட்டுக்குள் நுழைவதை தாத்தா தடுத்து விடுவார். மூங்கில் படர்ப்புக்குள் யானை நிற்பது தெரியாது என்பார். மூங்கில் புதர் அசைவதுக் கூட யானையின் அசைவுகளை ஒத்ததாகத் தோன்றும் எனக்கு. சிறு ஓடைகள் காட்டும் நீர் பிம்பங்கள் யானையின் துதிக்கையின் நீளலாகவே தெரிந்தது. அனாயாசமாக புகுந்து சலனமற்ற ஓடை நீரை சில்லிப்பாக்கும் காற்றைப் போல காடு சவாதானமாக நமக்குள் நுழைந்து சம்மணமிட்டு அமர்ந்து விடுகிறது. மலைகளில் அடர்ந்து உயர்ந்த மரங்கள் கடல்காற்றைத் தடுத்து மேகமாக்கும் தன் செயலுக்கு தானே மழையாய் பொழிந்து சுய உத்வேகம் பெற்றுக் கொள்ள, மலைத்தரைகள் தன்னுள் விழும் ரகசியங்களை சுனைகளாய்.. ஓடைகளாய்.. அருவியாய்.. நதியாய் வெளிப்படுத்த.. மனம் ஒரு புள்ளியில் கள்வெறிக் கொள்கிறது. திடுமென அதேப் புள்ளியில் அத்தனையும் மறைந்து சூனியத்துக்குள் சஞ்சரிக்கிறது. பின் ஒவ்வொன்றாக முளை விட புள்ளிகள் இணைந்து அடர் கானகமாகிறது. கானகத்துள் நெளியும் பாம்புகளும்.. அட்டைகளும் நேசப்பரப்பிற்குள் நுழைந்து விடுகின்றன. புறவெளியில் புலப்படும் காடு அகவெளிக்குள் உறைந்து விட சஞ்சலமற்ற மனம் சாத்தியமாகி விடுகிறது.

“புள்ளங்க ஸ்கூலுக்கு போக முடியில.. சிறுத்தையப் புடிக்கிறேன்.. புலியப் புடிக்கிறேன்னு வயக்காடெல்லாம் வதமழிஞ்சுக் கெடக்கு.. கடைக்கண்ணிய தெறந்தாதானே தினசரி பொழப்பு ஓடும்.. ஸ்கூல் திறந்தாலும் புள்ளங்கள வெளிய அனுப்ப பயந்து சாவ வேண்டியிருக்கு.. கண்காணிக்க ஆளில்லாம கருப்பங்கொல்லயில யானை பூந்துடுச்சுன்னா மொத்தப் பொழப்புமில்ல கெட்டுப்போயிடும்..” குழந்தையை தன் மடியிலிருந்து என் மடிக்கு மாற்றினாள்.

வெயில் மேலேறத் தொடங்கியதில் கொக்குக் கூட்டம் சிறகு விரித்து வெண்பூக்களாய் வானை நிறைத்தன. பறவைகளின் ஒலிகளால் காடு நிரம்பிக் கொண்டிருந்தது. அங்குமிங்குமான அவைகளின் அலைச்சலில் தொடுத்துக் கொண்டிருந்த இலைகள் சலசலத்து உதிர்ந்தன. மனம் பேரமைதியில் ஒலிகளற்று.. ஒளிகளற்று.. ஓசைகளற்று.. சலனங்களற்றிருந்தது. நாள் முழுமைக்கும் குளிர்வான நிழலுக்குள்ளிருக்கும் பூக்கள் வாடுவதுமில்லை. உதிர்வதுமில்லை. குட்டைகளில் நீர்பிம்பமாக தோன்றும் நிலவு விண்மீன்களை விடுத்து குட்டை மீன்களின் குவியலுக்குள் கூடிக் களித்துக் கிடக்கும். எங்கோ நரியின் ஊளைச்சத்தத்தில் பொதிந்திருந்த உவகை அதற்கான உணவு கிடைத்து விட்டதன் சங்கேதமாக ஒலித்தது. பூக்களின் ஓசை இசையாய் ஒலிக்க தொலைவு மலை உச்சியும் காட்டின் உச்சியும் மங்கலாகத் தெரிந்தன.

எழுந்து நின்று மின்விளக்கின் விசையை இயக்கினாள் என் மனைவி. மனிதனின் நாகரீக மோகத்தில் காடுகள் உள்ளிழுக்கப்பட்டது போல நிலவொளி சட்டென பின்னுக்கு நகர்ந்துக் கொண்டது. நிலவொளியில் கோட்டோவியமாகக் கிடந்த வேம்பின் இலைகள் மின்னொளி பரவியதில் காடழிந்ததில் பதறி சிதறும் விலங்குகளாய் பரவி விரவிக் கிடந்தன.

”என் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வர நாள் பாக்குட்டுமாங்க..? அவங்க மாமியாருக்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமா..? தயாராக எடுத்து வந்திருந்த தினசரிக் காலண்டரை பின்புறமாக திருப்பிப் பார்த்தாள்.

“சிறுத்தைப்புலிக்கிட்டேயுந்தான் கேக்குணும்..” என்றேன்.

விநோதமாகப் பார்த்த என் மனைவியை ஏனோ அந்நியமாகப் பார்க்கத் தோன்றியது.

 

 

***

4 comments

  1. அடேங்கப்பா… என்ன ஒரு நுணுக்கம், என்ன ஒரு வீச்சு.. கதையின் இலக்கிய ஆழத்தைப் படித்து உணர்ந்தேன். ஒரு நல்ல கதையைப் படித்த திருப்தி. எஸ்.கண்ணன், பெங்களூர்

  2. காட்டில் சஞ்சரித்த அனுபவத்தை தந்ததற்க்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.