வாழ்க்கைக் கிணற்றில் – ஆத்மாநாம் (இருமொழிக் கவிதை)

வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
பக்கெட்டு நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்

(ஆத்மாநாம்)

oOo

I am a bucket
plopping into
the waters of desire
in the well of life
Who is that messenger
roping me up
Tying the knot
in the noose of death.

(மொழியாக்கம் – நகுல்வசன்)

குறிப்பு:

A crucial aspect of the modern cinema is its approach to the word. Classic talking pictures approached the text as a template or blueprint; the modern cinema takes the text as an object. In effect, the modern cinema—whether that of Marguerite Duras or Abbas Kiarostami, Frederick Wiseman or Jean Eustache—makes words images, என்று ஆரம்பிக்கும் கட்டுரையொன்றை அண்மையில் வாசித்தேன் – நியூ யார்க்கர்.

கவிதையைச் சொற்களாய் வாசித்து பொருள் கொள்ளாமல் அடுத்ததடுத்த பிம்பங்களாய் வாசிப்பதிலும் பொருள் உண்டு. மேற்கண்ட கவிதையும் அதன் மொழியாக்கமும் ஒரு சுவாரசியமான சோதனை முயற்சியைச் சுட்டுகின்றன.

தமிழில் வாசிக்கும்போது, நாம் முதலில் வாழ்க்கைக் கிணறைக் கற்பனை செய்து கொள்கிறோம். அடுத்து அதில் மோக நீர் உள்ளதை அறிகிறோம். அதில் ஏதோ ஒன்று மோதுகிறது, அது என்ன என்று பார்த்தால் கவிஞர் ஒரு பக்கெட்டாய் இதில் வந்து விழுகிறார். அடுத்து பாசக்கயிறு வரும்போது எமதூதுவன் வந்துவிட்டதைக் காண்கிறோம், சுருக்கிட்டு என்னும்போது பிடி இறுகுகிறது, இழுக்கின்ற என்ற இடத்தில் வாழ்க்கைக் கிணற்றை விட்டு இவர் வெளியேறுவதைப் பார்க்கிறோம்- தூதன் யார், என்ற கேள்வி வரும்போது, இந்தக் கவிதை விடுதலைக்கான தேடலாக, மீட்பருக்கான தேடலாகிறது. இதில் இன்னொரு விஷயம் வாழ்க்கைக் கிணற்றில் நிகழும் இந்த மோதல் ஒரு முறை நிகழ்வதல்ல, மோதுகிறேன், என்று சொல்லும்போது மீண்டும் மீண்டும் மோதிக் கொள்வதாகவே எடுத்துக் கொள்கிறோம், இழுப்பது மேல்நோக்கியா கீழ்நோக்கியா என்பதும் தெரியாததால் “பாசக்கயிற்றால் சுருக்கிட்டு இழுத்து வாழ்க்கைக் கிணற்றுக்குள் உள்ள மோக நீரில் மோத வைக்கும் தூதன் யார்,” என்றும் படிக்கலாம். ஆனால் இந்த வாசிப்பு இரண்டாம் நிலை வாசிப்பாக, ஒரு நிழலாகதான் இருக்கிறது, கவிதை என்னவோ மீட்சியை நாடுகிறது.

ஆங்கிலத்தில் இதில் இரு தலைகீழாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இங்கு நாம் முதலில் கவிஞர் ஒரு பக்கெட் என்பதைப் பார்க்கிறோம், அடுத்து அந்த பக்கெட் கவிழ்ந்து விழுவதைப் பார்க்கிறோம். எங்கே என்றால் மோக நீரில், அது இருப்பதோ வாழ்க்கைக் கிணற்றில். அடுத்த தலைகீழாக்கம்- யார் அந்த தூதன் என்ற கேள்வி. அவன் கயிறு கட்டி மேலே இழுக்கிறான், இப்போதுதான் தெரிகிறது, சுருக்கு இறுகுவதும் மரணத்தின் முடிச்சு விழுவதும்.

மேம்போக்கான வாசிப்பில் தமிழில் உள்ள பொருள்தான் ஆங்கிலத்திலும் இருக்கிறது- ஆனால் ஒவ்வொரு காட்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்லும்போது, கவிதையின் உணர்வே மாறி விடுகிறது. முழுதாக மாறுகிறதா என்றால் இல்லை, தமிழ்க் கவிதையும் நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது. ஆனால் அதன் மேல் இந்த ஆங்கிலக் மொழிபெயர்ப்பின் மாற்று வாசிப்பு ஒரு உருவமாய் விழும்போது ஆத்மாநாம் கவிதையினுள் பொதிந்திருக்கும் செறிவை நாம் இன்னும் சிறப்பாக உணர்கிறோம்.

இன்னுமொன்று. விளக்கங்கள் இந்தக் கவிதையைப் பொருள் வற்றச் செய்வதில்லை. இது போன்ற காட்சிகளாய் வாசிக்காமல், வாழ்க்கைக்கிணறு எவ்வாறு பொருள்படுகிறது என்று விசாரிக்கலாம். மோக நீர்தான் இதன் திறப்புச் சாவி. வாழ்க்கையை ஒரு காட்டாற்று வெள்ளம் என்று சொல்லும்போது அதில் ஒரு கட்டுப்பாடின்மை, சுயாதீனமின்மை சுட்டப்படுகிறது. ஆனால் வாழ்க்கைக்கிணறு என்பது இருளையும் அழுத்தத்தையும் உணர்த்துகிறது. மோக நீரில் மீண்டும் மீண்டும் மோதும்போது அது ஒரு இருளாய், ஆழம் காண முடியாத அழுத்தமாய், சிறைப்படுதலின் தள்ளாட்டமாய் உணரப்படும்போதுதான் வாழ்க்கை ஒரு கிணறாகிறது. கரை சேர்தல் இங்கு வெளிச்சத்தையும் தரைமட்டத்தையும் நோக்கிய வெர்ட்டிகல் பயணம். வாழ்க்கைக்கிணறு, மோக நீர், நான் என்னும் பக்கெட்டு எல்லாம் வெவ்வேறு காட்சிப் படிமங்கள் அல்ல- மோக நீரின் தன்மைதான் வாழ்க்கைக்கிணறு என்ற உணர்வாகிறது, அதுவே தன்னை ஒரு பக்கெட்டாய் உணர்வும் செய்கிறது- எத்தனை நீர் கொண்டாலும் எதுவும் பக்கெட்டின் இயல்பினுள் சென்று அதன் தன்மையை மாற்றுவதில்லை. மோகம் இருள் என்று சொல்லும் வகையில் அதன் அழுத்தம் உள்ளத்தை நிறைக்கிறது. இதிலிருந்துதான் வாழ்க்கைக்கிணறும் நான் ஒரு பக்கெட் என்ற உணர்வும் பொருள்படுகின்றன. இப்போது “பாசக்கயிற்றால்/ சுருக்கிட்டு/ இழுக்கின்ற/ தூதன் யார்?’ என்ற கேள்வி விடுதலையை நோக்கியா அல்லது பிணைப்பை நோக்கியா என்ற கேள்விக்கும் அடியிடுகிறது. இதற்கான விடை தர்க்கத்தில் இல்லை. இந்தத் தேடல்களின் சாயல்கள் அத்தனையும் ஒன்றுகூடிய கவிதையின் முழுமையில் இருக்கிறது, அது ஒவ்வொரு கணம் ஒவ்வொருவாறு பொருள்படுகிறது. முந்தைய வாசிப்பைக் காட்டிலும் இந்த வாசிப்பில், ஆங்கில மொழிபெயர்ப்பும் தமிழுக்கு நெருக்கமாகவே இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.