
ஆண்டாள் கதையின் தொடர்ச்சி இது, அதில் வரும் வீராணம் ஏரியையும் அதன் பரந்து விரிந்த பாசனப் பரப்பின் இன்றைய நிலையையும் விவசாயியின் கோணத்தில் யோசித்ததில் இயல்பாக எழுத்தில் வந்து விட்டது.
காலம் காலமாக வீராணம் ஏரி நீரை நம்பி பயிர் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் எதிர்காலத்தையும் மறந்து விட்டோம்.
இந்த ஆண்டின் பெரும் மழைப் பொழிவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியது. சென்னைக்கு இவ்வருடம் குடிநீர் பஞ்சமில்லை என்ற செய்தியை பத்திரிக்கைகளும் தொலைகாட்சி சேனல்களும் தமிழகம் முழுவதும் பரப்புகின்றன. ஆனால், கடைமடைக்கு தண்ணீர் தராமல் பயிர்கள் காய்வதையும் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் போராடியே தண்ணீர் பெறுகின்றனர் என்பதைம் யாரும் பேசுவதில்லை.
2004க்குப் பிறகு வீராணம் ஏரியின் பாசனப்பரப்பு குறைந்து விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு கூலிகளாக இடம் பெயர்கிறார்கள். இதன் தாக்கம் எப்போதோ ஆரம்பித்து விட்டது, அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமான விளைவுகள் தெரியும்.
பரங்கிப்பேட்டை வீராணம் ஏரியின் கடைமடை. பாசனப் பகுதி, வடிகால், வாய்க்கால் எல்லாம் இறால் குட்டைகள் ஆக்கிரமிப்பால் மழைநாட்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் தேங்கி நின்று அவர்களுக்கு மேலும் துயரத்தை தருகின்றன.
வீராணம் பாசனப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயியின் வயலும் அது தரும் வாழ்வும்தான் இந்தக் கதை.