எத்தனை யோசித்தாலும் தீராத புதிராக இருப்பது காதலும் காதல் சார்ந்த மனநிலைகளும். கடவுள் குறித்து விவாதிக்கப்பட்டதைவிட காதல் குறித்து விவாதிப்பது அதிகம் என்று நினைக்கிறேன். காதல் வரமாக இருக்கிறது. தீராத் தாகமாக நீள்கிறது. சலிப்பில்லா செயலாக தொடர்கிறது. கடுமையின் வெஞ்சினத்தை குறைத்து இதமளிக்கும் மருந்தாகிறது. பரம்பரைப் பகையை வளர்க்கிறது. கருணை மிகுந்து தன்னை ஒப்புக்கொடுக்கிறது. அனைத்தையும் அர்ப்பணித்து சரணாகதியடைகிறது. மூர்க்கம் கொண்டு கொலைகள் செய்கிறது. திகட்டி மீண்டும் மீண்டும் காதலிக்கச் சொல்கிறது.
ஆனால் தீவிர காதல் மனநிலை என்பது நிச்சயமாக வாழ்வில் எப்போதும் எல்லாருக்கும் வாய்க்கும் ஒன்றல்ல. அது ஒரு இயற்கைப் பேரிடர். அறிவியல் உடலை வெறும் நாளமில்லாச் சுரப்பிகளின் முன் பின் விளைவுகளாகக் கருதி எளிமைப்படுத்தினாலும். காதலும் காதல் சார்ந்த உளமாற்றங்களையும் அவ்வளவு எளிதாக வரையறை செய்ய இயலாது என்றுதான் நினைக்கிறேன்.
அனுபவத்தில் சொல்கிறேன். காதல் மனநிலை என்பது ஒருவகை மனநிலைப் பிறழ்வு. ஞானம் வாய்த்த மனநிலைக்கு ஒப்பானது. அல்லது பெரும் துக்கமோ பெரும் வரமோ பெற்றபின் நிகழும் மனஇயல்பு திரிதலுக்கு இணையானது. நம்முடைய சொற்களினால் ஆன தர்க்கம் கொண்டு அதைப்பற்றி எள்ளவும் சொல்லிவிட முடியாது. விளக்கமுடியா எளிமை. தன்னை மீறி ஊற்றென பாய்ந்தோடும் துக்கித்த சொற்கள் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் தோன்றிடுமா என்ன?
காதல் மறுக்க முடியாத லட்சியவாதம். லட்சியவாதிகளுக்குரிய அத்தனை குணாம்சங்களும் அதில் உள்ளது. புற உலகிற்கான சொற்களால் அதை நாம் விவாதிக்கும் போதும் புறக்கணிக்கும் போதும் நாம் அதன் தரம் குறைக்கிறோம். அக உலகிற்கான மனநிலையை சொல்ல காலத்தின் களிம்பேறா சொற்கள் வேண்டும். சிறப்பான கலைச்சொற்கள் அவசியம்.
காதலர்களும் குடிகாரர்களும் ஒன்று என்பது போல் காதலர்களை ஏளனம் கொண்டு அவர்களின் வார்த்தைகளை வெறும் பிதற்றலாக எடுத்துக்கொள்வதும் நமக்குள்ள சகஜ மனநிலை. உண்மையில் காதல் உருவாக்கும் சொற்கள் வேறொரு உலகில் உள்ளவை. ஒரு சொல் அவ்வுலகில் இருந்து நமக்கு வரும்போது அச்சொல்லின் சாரம் நம்மை வந்தடைய எடுத்துக்கொண்ட காலஇடைவெளியில் இல்லாமலாகிறது. கண்ணாடிப் பிம்பம் போன்று நம் பொருளை அச்சொல்லிற்கு அணிந்து எளிமையாக்குகிறோம்.
அவளை மட்டுமே நாளெல்லாம் எண்ணி சொற்களாக ததும்பும் மனம். ஒரு நளினமோ கூந்தல் அசைவோ புருவச் சுழிப்போ எங்கிருந்தோ கேட்கும் சிரிப்போ மின்னதிர்ச்சியாக மாறி மொத்த இருப்பையும் கலைத்தடுக்குவது . அவள் மணமாகி பிறிதொரு ஊரேகிய பின்பும் அவள் வாழ்ந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஏற்படும் கனிவும் துயர் கனக்கும் நடையும் அத்தனை சாதாரணமானதா? அவள் வாழ்ந்த ஊர் என்பதனாலும் வீதி என்பதனாலும் வீடு என்பதனாலும் அவற்றிற்கெல்லாம் நம் மனதில் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தானே செய்கிறது. என்ன செய்தாலும் அப்பிரியத்தை அழித்துவிடமுடிவதில்லையே.
உடற்தாகமெனும் சிக்கிமுக்கி கற்களின் மோதலில் தெறித்து மனச்சருகில் பற்றி வான்நோக்கி தழலாட எரியும் சுடர் காதல். சுடர்களின் நடனத்தை மோகித்து தன்னிலை மறக்கும் நிலையில் ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும் உருவழிப்பு நிகழ்கிறது. சுடர்கள் முற்றிக்கனிந்து பழரசமாகி லார்வாக்களின் ஊட்டஉணவுபோன்று காதலர்களால் உண்ணப்பட்டு சதா போதையில் தள்ளாடச்செய்கிறது. அவர்களின் சொற்களில் சுடர்களின் மதுவாசனை. சுடர்களின் வெக்கையும்கூட அதன் அந்நியத்தால் அஞ்சி பிரியத்தோடு தவிக்கிறோம். வாழ்நாளெல்லாம் நம்மால் மீட்டப்படும் தனிராகம்தான் அவரவர் காதலும் காதல் நினைவுகளும். இசையோடு இயைந்த பெருவாழ்வு. ஊனுக்குள் வந்தமரும் உன்மத்தம்.