கையேந்தலில் வைக்கப்பட்ட
நம்பிக்கையோடு
யாசகர் கூட்டத்தின் பயணம்
ஒவ்வொரு அதிகாலையிலும்
தொடர்ந்தபடியேதான் இருக்கிறது
இந்த வாழ்வு யாருடனும்
பகிரப்படாமல் ஒரு புண்ணின் வலியோடும்
ஒரு பிணத்தின் வாடையோடும்
எதுவரை நகரப் போகிறது?
கைகள் நீளும் தூரம் வரை
கண்கள் ஒளிகொள்ளும் தொலைவு வரைதான்
அவர்களின் நம்பிக்கையும்
வரையறை செய்யப்பட்டுள்ளது.
பாதைகள் விரியும் திசை எங்கும்
பயணம் தொடர்ந்தபடிதான்
இருக்கிறது!
பரிதவிப்பின் குரலை
எதிர்பார்ப்புகள் நிறைந்த
கண்களின் ஒளியை
காற்று எல்லாத் திசைகளுக்கும்
எடுத்துச் செல்கிறது
வீட்டின் சுவரோரங்களில்
நின்றபடி
ஏக்கத்துடன் கதவுகளைத் திறக்க முனையும்
குரல்களில் கசிந்து கொண்டிருக்கும்
பதட்டத்தை செவியுறும் வாசல்கள்
திறந்து கொள்கின்றன
செவியுறாத கதவுகள்
மூடியபடியே இருக்கின்றன
நடுக்கத்துடன் நீளும் கரங்களில்
கனவுகளற்றுப் போன
பாதைகள் விரியும் திசைகளில்
அலைவுறும் அந்த வாழ்வின்
எல்லாத் துயரங்களும்
எழுதப்பட்டிருக்கிறது
ஒரு புண்ணின் வலியோடும்
ஒரு பிணத்தின் வாடையோடும்
கசிந்துருகும் குரல்களை காற்று
எந்த வெட்கமுமின்றி
இன்னும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு
காவித் திரியப் போகிறது?