ஹரீஷ்
இரண்டு நாட்களாகவே தொந்தரவு செய்யத் துவங்கி விட்டாள் அவள். சென்ற முறை வந்தவள் போலில்லை. இவள் புதிது. அவளை விடவும் வேகமாக இருந்தாள்.அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தன.
உள்ளுக்குள் பரபரப்பு மிகுந்திருந்தாலும் வெளியில் ஒரு ஜோம்பியைப் போல் அமர்ந்திருந்தேன். “ஏன் இப்படியே உக்காந்திருக்கே? கிளம்பேன் . வெளியில மழை பெய்யுது என்றாள் அவள்.
வாசலில் அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னவோ தெரில. நல்லாததான் இருந்தான். இப்ப கொஞ்ச நாளாததான். விட்டத்தப் பாத்துக்கிட்டு கெடக்கான். திடீர்னு சிரிக்கிறான். என்னான்னு கேட்டா கோவப்பட்றான். எப்பப்பாரு ஒரு வெள்ளைப் பேப்பர எடுத்து வெச்சுகிட்டு வெறிச்சு வெறிச்சுப் பாக்கறான். ரூம் கதவ அறஞ்சு சாத்திக்கிறான்” என்று.
எதிர்க்குரல் கிசுகிசுப்பாகப் பேசியது. விஷயம் சரியாகக் காதில் விழவில்லை. என்ன சொல்லியிருக்கக்கூடும், மேலத்தெரு தர்காவுக்குக் கூட்டிச் சென்று சாகிப் மஸ்தானிடம் மந்திரிக்கச் சொல்லியிருக்கக்கூடும். மழைக்குத் திண்ணையில் ஒதுங்கியவர்களுக்கெல்லாம் வம்புக் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது இந்த வீட்டில்.
அலமாரியைத் திறந்து இருப்பதிலேயே பழைய சட்டையாய்ப் பார்த்து எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தேன். மழை நசநசத்துக் கொண்டிருந்தது. அம்மா “ எங்க கண்ணு போற” என்றாள். அதற்குள் இவள் “ அங்கென்ன பதில் சொல்லிகிட்டு? வா போலாம். க்விக்” என்றாள். பாவம் அம்மா. எப்போதும் என்னை டா போட்டுக்கூட அழைத்ததில்லை. அவளைப் பரிதாபகரமாய்ப் பார்த்து விட்டு வெளியேறினேன். “சந்தேகமே இல்ல. அதான். நீங்க நான் சொன்னத முதல்ல செய்ங்க” என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த எதிர்க்குரல் முதுகின் பின் தேய்ந்து மறைந்தது.
இவள் யட்சி. போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் கடற்காற்றில் தள்ளாடும் தோணி போல் மனசும் மூளையும் வெவ்வேறு திசைகளில் பிய்த்துக் கொண்டிருந்தன. சொற்கள் அகப்படவில்லை. எவ்வளவு வேகமாக நடந்தேன் என்பது சட்டென்று நின்று சுற்றிலும் பார்த்தபின்தான் தெரிந்தது. வீட்டிலிருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் வரை வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட நாலரை கிலோமீட்டர். அவளுடன் பேசிக் கொண்டே வந்ததில் தெரியவில்லை. வரும் வழியில் ரயில் பாதையை வேறு கடந்து வந்திருக்கிறேன் எதுவுமே கவனத்தில் இல்லை.
சட்டை நனைந்திருந்தது. வேகமாக நடந்து வந்ததில் வியர்வையிலா அல்லது நச நசவெனத் தூறியபடியிருக்கும் மழையினாலா என்று தெரியவில்லை. மைதானத்தைப் பார்த்தேன். ஒருத்தரையும் காணோம். ஆங்காங்கே சிறு சேற்றுக் குட்டைகள் உருவாகிக் கிடந்தன. நட்டு வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான கோல் போஸ்ட் கம்பிகளிலிருந்தும் பூப்பந்துக்கான வலையமைக்கப்பட்டிருந்த கம்பிகளிலிருந்தும் இடைவிடாமல் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
காம்பவுண்டு சுவரின் மீது கைவைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனை உள்ளே போ என நெட்டித் தள்ளினாள் யட்சி. சற்றே தள்ளியிருந்த வாயில் கேட்டைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. சுவற்றின் மேல் கால் வைத்து சரியாக எகிறும் தருணத்தில் சாலையில் தலை முதல் முழங்கால் வரை நெகிழிப்பை போர்த்தியிருந்த ஒருவர் என்னைப் பார்த்தபடியே கடந்து போனார். நெகிழியால் தலை மறைக்கப்பட்டிருந்ததால் அவர் வயதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.
உள்ளே போலாம் என்றாள். அடுத்த நிமிஷம் குட்டைச் சுவர் எகிறி உள்ளே குதித்திருந்தேன். மூலை வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தேன். நேராகப் போகாமல் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் செய்வது போல் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி நடந்தேன்.
“இந்த சேத்துல கால் நுழைச்சா எப்படி இருக்கும் தெரியுமா. ஐ ஜஸ்ட் லவ் இட். நீயும் நடந்து தான் பாரேன்” என்றாள். கேட்கவில்லையென்றால் விட மாட்டாள். போன முறை வந்தவள் இவ்வளவு ஆதிக்கமில்லை. அவள் பூப்போல் மென்மையானவள். இவள் பயங்கர ராட்சசியாக இருக்கிறாள்.
ஆங்காங்கே உருவாகியிருந்த சேற்றுப் பொதிகளில் கால்களை உள்நுழைத்து அளையச் சொல்லிப் படுத்தினாள். அவள் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் சேற்றில் கால்களை உழல விட்டு நடந்தேன். வேப்ப மரத்தடியை அடைந்தபோது மழையின் வேகம் குறைந்திருந்தது. கால்கள் கரும்பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. மழை தரும் புத்துணர்ச்சியையும் மீறி உடல் மிகவும் சோர்ந்திருந்தது.
இது எப்போது வரை நீளுமென்று தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொற்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். எதைப் பார்த்தாலும் அதிலிருந்து ஏதேனும் சொற்கள் கிட்டக் கூடுமா என்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.
தேடலைக் கலைத்தாள். “ஹேய்.. இந்த மரத்தடியிலதானே நீ முதல் முதல்ல தமிழ் செக்ஸ் புக் படிச்சே? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றாள். அவள் தொனியில் கிண்டலில்லை. பால்ய கால நினைவுகளை அசைபோட வாய்ப்பு கிடைத்த ஒரு வயசாளியின் குதூகலம் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்தாள். “ புக் பேர் கூட ஞாபகம் இருக்கு. “பாப்பாத்தியின் காம லீலைகள்” கரெக்டா?” என்று சிரித்தாள்.
சிரிக்க முயன்று தோற்றேன். மண்டைக் குடைச்சல் பலமாக இருந்தது. கைகளின் நடுக்கமும் லேசாகத் துவங்கி விட்டிருந்தது. “உங்க சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இல்ல?” என்றாள் காரணமேயின்றி திடீரென்று. அவள் சொன்னதும் எனக்கும் அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது. இடையே சொற்களைச் சேமித்து வைத்தபடியிருந்தேன்.
அவள் கேள்விக்கு ஆமா என்பது போல் தலையாட்டினேன். “அப்ப வா போலாம் “ என்றாள். திடுக்கிட்டேன். அவள் பேச்சை வேறு தட்ட முடியாது. எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது. திரும்ப வீடு நோக்கி நடக்கும் போது ரயில்வே குவார்ட்டர்ஸ் மிகப் பெரும் அமைதியைப் போர்த்திக் கொண்டிருந்தது. மழைக்குப் பின்னான ரம்மியம் காற்றில் இல்லை. தனிமையின் ஓலம் நிறைந்திருந்தது. தனிமையின் ராட்சசம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிப்பது போலிருந்தது.
முடிந்தவரை சீக்கிரமாக அங்கிருந்து அகல முயன்று வேகமாக நடந்தேன். அந்தச் சாலையின் முனையில் இருக்கும் ரயில் நிலையமும் கோவிலும்கூட சூழலின் இறுக்கத்தை மாற்ற முடியவில்லை.
ஓரிரு வினாடிகள் நின்று ரயில் நிலைய முகப்பைப் பார்த்தேன். மனித சஞ்சாரம் ஏதுமில்லை. உள்ளே யாரும் இருக்கக்கூடும். ரயில் நிலைய முகப்புக் கட்டிடம் எந்த நேரமும் நிமிர்ந்து நின்று தன் உடல் மீது படர்ந்த ஈரத்தை உதறிக் கொள்ளக்கூடும் என்பது போல் ஒரு தோற்றம் மனசில் ஏற்பட்டது. அது அச்சமூட்டுவதாக இருந்தது.
மீண்டும் நடக்கத் துவங்கினேன். சாலை வழி செல்லாமல் ரயில் பாதையை ஒட்டியே நடக்கத் துவங்கினேன்.. மழை நீரில் கரைந்த மலத்தின் வாடை முகம் சுளிக்கச் செய்வதாய் இருந்தது. அவளும் முகம் சுளித்தாள்.
தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழையும்போது முதுகின் பின் அம்மாவின் பார்வை துரத்துவதை உணர முடிந்தது. எதுவும் கேட்கவில்லை. உள்ளே சென்று ஒரே ஒரு சட்டையையும் வேட்டியையும் ஒரு பழைய பையில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன். அறை வாசலுக்கு வந்தவன் மீண்டும் உள்ளே போய் ஒரு நெகிழிப் பையை எடுத்து ஓரிரு வெள்ளைக் காகிதங்களை எடுத்து கவனமாய் அதில் போட்டுக் கொண்டேன். உபயோகப்படும். பேனாவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.
அறையை விட்டு வெளியே வரவும் இதை எதிர்பார்த்தேயிருந்த அம்மா பதற்றமாய் அருகில் வந்தாள். “ என்ன கண்ணு எங்க கெளம்பிட்ட” என்றாள்.மெல்லப் புன்னகைத்தேன். “ஒண்ணுமில்லம்மா பயப்படாத. சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. திடீர்னு பாக்கணும்னு தோணிச்சு. அதான் போறேன். நாளைக்கி வந்துருவேன்” என்றேன்.
என்னைத் தனியாக அனுப்புவதில் அவளுக்கு நிறைய யோசனைகள் இருந்தன. என்ன செய்வது, போய்த்தானாக வேண்டும். ஏதோ கேட்க நினைத்தவள் கடைசி நொடியில் கேள்வியை மாற்றி “ இந்த மழையிலயா?” என்றாள். சிரித்தேன். அதற்கு மேல் ஏதும் பதில் கிடைக்காது என்று அவளுக்குத் தெரியும். இயலாமையுடன் “பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றாள்.
என் உளைச்சலை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் புரிவது கஷ்டம். “சீக்கிரம். நேரமாச்சு” என்று இவள் வேறு உந்தித் தள்ளினாள். பேருந்து நிலையத்தை நடந்தே அடைந்தேன். எல்லாப் பேருந்துகளும் கழுவி விடப்பட்டவை போல் சுத்தமாக இருந்தன. சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச் சீட்டை வாங்கிக் கொண்டேன். ஜன்னலை முழுக்கத் திறந்து விட்டுக் கொண்டேன்.
அரசுப் பேருந்தாதலால் கூட்டமில்லை. கூட்டமாயிருந்திருந்தால் ஜன்னலை இப்படி முழுக்கத் திறந்து விட்டுக்கொள்ள எதிர்ப்பி\ருந்திருக்கும். பேருந்தில் எந்தக் காலத்திலோ பொருத்தப்பட்ட ஆடியோ செட் இயங்காமல் போய் வயர்கள் அறுந்து தொங்கும் நிலையிலிருந்தது.
பேருந்து கிளம்பவும் சிலர் ஓடி வந்து ஏறினார்கள். அவர்கள் யாரும் என் அருகிலோ அதற்கருகிலிருக்கும் இருக்கையிலோ வந்து அமர்ந்து விடக்கூடாதென்று வேண்டிக் கொண்டேன். சற்று நேரமாய் இல்லாமலிருந்த மழை இப்போதுதான் மீண்டும் சிறு தூறல் தெளிக்கத் துவங்கியிருந்தது. ஜன்னல் திறப்பு தடைபடக்கூடாதென்றே அப்படி ஒர் வேண்டுதல். வழியெங்கும் மழை சிலுசிலுத்தபடியே வந்தது. ஆங்காங்கே சொற்ப கூட்டம் பேருந்தில் ஏறுவதும் பேருந்தை விட்டு இறங்குவதுமாய் இருந்தது. இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அதை கவனியாமல் இருக்க முடியாது. இருந்தும் அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மனசு லேசாக சமனப்படத் துவங்கியிருந்தது.
இந்த நிலைதான் வேண்டும். இன்னும் கொஞ்சம் .இன்னும் கொஞ்சம். முயற்சித்தபடியே இருந்தேன். அவள் குரல்கூட மெல்லத் தேய்ந்து ஒரு கட்டத்தில் மெலிதாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் அவள் போகவில்லை. அவளின் இருப்பு சர்வ நிச்சயமாய் இருந்தது. என்ன, முன்பு போல் மூளையைப் பிடித்து உலுக்குவதாய் உளைச்சல் தருவதாய் இல்லை. மென்மையாய் இருந்தது.
நாமக்கல் வந்து இறங்கினேன். இரண்டு ஊர்களிலும் பெய்தது ஒரே மழைதான் என்றாலும் மழையில் நனைந்தபின் இரு ஊர்களும் முற்றிலும் வேறாக இருந்தன. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டேன் போல் தோன்றியது. சித்தப்பா வீட்டின் கதவைத் தட்டியதும் சித்திதான் வந்து திறந்தாள். மெல்லிய புன்னகையுடன். நெற்றி சுருக்கவில்லை. அம்மா போன் செய்திருப்பாள் என்று புரிந்தது.
“வா உக்காரு. எப்படி இருக்க?” என்றாள். அவஸ்தையாய்ச் சிரித்தேன். “சித்தப்பா இப்ப சாப்புட வர நேரம்தான். அவர் வர வரை காத்திருக்கறியா இல்ல இப்ப சாப்பிடறியா” என்றாள். அவள் கண்களில் தெரிந்தது சிறு பயமா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ”வரட்டும் “ என்றேன் ஒற்றை வார்த்தையில். “அதானே. அவரைப் பாக்கதான் இத்தனை தூரம் வந்தது. அவரைப் பாக்காம என்ன சாப்பாடு?” என்றாள் இடையில் இவள்.
உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி குறுகுறுவெனப் பார்ப்பதைக் குனிந்திருந்தாலும் உணர முடிந்தது. அசூயையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் சிரமமாக இருந்தது. சித்தப்பா வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகளைப் பெரும் ஆயாசத்துடன் கடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்து அவரைப் பார்க்கவென்று வந்துவிட்டு அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் போட்ட சோற்றை அளைந்து கொண்டிருப்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.
கை கழுவியவுடன் “கிளம்பறேன் சித்தப்பா. பசங்க வந்தா சொல்லுங்க” என்றேன். என்னப்பா அவசரம் என்றோ… இரேன் போகலாம் என்றோ சித்தப்பா ஏதும் சொல்லவில்லை. அம்மா என் நிலைமை பற்றி விவரித்திருக்கக் கூடும். மெலிதாய்த் தலையசைத்து “போய்ட்டு வாப்பா… ஒடம்பப் பாத்துக்க” என்றார். அவர் கண்கள் பச்சாதாபத்திலும் நம்பிக்கையின்மையிலும் நிரம்பியிருந்தன.
கிளம்பி விட்டேன். மழை முற்றாக நின்று விட்டிருந்தது. வெயில்கூட அடிக்கத் துவங்கியது. ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் கடந்து பெண்கள் கல்லூரி தாண்டி வேக வேகமாக நடந்தேன். கல்லூரியிலிருந்து பெண்கள் வெளி வரத்துவங்கியிருந்தனர். கல்லூரி முடியும் நேரமாகியிருக்க வேண்டும்.
கூட்டத்தை வேகமாய்க் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வரும்போதிருந்தது போலவே காலியான அரசுப் பேருந்தாய் பார்த்து ஏறி அமர்ந்தேன். ஜன்னல் வழி வெயில் ஊர்ந்து தேகமெங்கும் வழியத் துவங்கியிருந்தது. வண்டி கிளம்பியது. இவள் இடைவிடாமல் பேசியபடியே வந்தாள். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
ஜன்னல் வழியே விரையும் மரங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க மிகச் சிறியவையாகத் தெரிந்தன. அவற்றை ஆள்காட்டி விரல் கொண்டு தொட முயன்றபடியே இருந்தேன். என் செய்கையைப் பார்த்து அவள் சிரித்தாள். சட்டென்று ஏதோ தோன்றியது. இதுதான் தருணம். நான் தயாராயிருப்பதாய் ஏதோ சொன்னது. ராசிபுரம் பிரிவருகே வரும் போது எழுந்து வண்டியின் கதவருகே சென்றேன்.
நடத்துனர் என்ன என்பது போல் பார்த்தார். கண்களால் கெஞ்சலாக “இறங்கணும் “ என்றேன். முறைத்தவர் விசிலை ஊதினார். பேருந்திலிருந்து என்னை உதிர்த்துக் கொண்டேன். மனம் நிச்சலனமாக இருந்தது. மண்டைக்குள் குடைச்சலும் உளைச்சலும் ஓய்ந்திருந்தது.
மெதுவாக நடந்தேன். நடக்கப் போவதை அறிந்தோ என்னவோ அவள் ஏதும் பேசாமலிருந்தாள். அந்த அமைதி எனக்குத் தேவையாயிருந்தது. சற்று தூரம் நடந்த பின் ஆளரவமற்ற சாலையோரம் ஒரு டீக்கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். யாரையும் காணவில்லை. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கடந்தபின் வயதான பெரியவர் ஒருவர் கையில் பெரிய பாத்திரத்துடன் வந்தார்.” என்னா” என்றார். “டீ வேணும்” என்றேன்.
“இனிமேதான் பால் காச்சணும். லேட்டாவும்,” என்றார். பரவால்ல போடுங்க என்றபடி உடைந்திருந்த நாற்காலியில் அமர்ந்த என்னை வினோதமாகப் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தேன். லாபம் என்று எழுதப்பட்டு ஓரங்கள் கிழிந்து போயிருந்த பிள்ளையார் படம் போட்ட காலண்டர் அட்டை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டேன்.
கவனமாய்ப் பைக்குள் கைவிட்டு நெகிழிக்குள் பொதிந்து வைத்திருந்த வெள்ளைக் காகிதங்களை எடுத்தேன். நடக்கப் போவதை அறிந்த அவள் பதறினாள். கண்ணீர் வரத் துவங்கி விட்டது அவளுக்கு. “ இதை நீ கண்டிப்பா செஞ்சாகணுமா. ப்ளீஸ் வேண்டாமே” என்றாள். வெற்றுக் கண்களுடன் அவளை ஏறிட்ட நான், “ வேற வழியில்ல” என்றேன். தெளிவாக இருந்தேன்.
கண்களை மூடி ஒரு முறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். பின் கண்களைத் திறந்தேன். நடக்கப் போகும் விஷயத்தை ஏற்றுக் கொண்டவள் போல் எந்த விதமான உணர்ச்சிகளும் காட்டாமல் அவளிருந்தாள்.
“நசி” என்று தலைப்பிட்டேன். மெல்ல அவளை ஒவ்வொரு சொல்லாய் எழுதத் துவங்கினேன். அவள் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. எழுத எழுத எதிரிலிருந்தவள் மையில் மெல்லக் கரைந்து காகிதத்தில் பரவத் துவங்கினாள்.