அறமும் எழுத்தும் – ஜென் வெப்

இது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன?

கல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.

மிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.

“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”

ஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.

நன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.

இந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு?

நல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரித்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”

“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)

ஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)

நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.

நிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.

அறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருகே வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.

எழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.

அறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.

கதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.

வெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.

இந்த ஆணையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.

நன்றி, The Conversation – http://theconversation.com/ethics-and-writing-63399

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.