கிரேக்க நாடகங்கள் ஏன் முக்கியமாய் இருக்கின்றன?
பல காரணங்கள்.
கிரேக்க நாடகங்கள் சுவாரசியமாக இருக்கலாம்; அவை நம்மை வேறொரு, வித்தியாசமான உலகுக்குக் கொண்டு செல்லலாம். அவை, அவ்வப்போது, நம்மை நன்றாகச் சிரிக்கவும் வைக்கலாம். ஆனால் முக்கியமான காரணம், பார்வையாளர்களை அவை வாழ்க்கைக்குத் தயார் செய்கின்றன- நாம் விரும்பும் வாழ்க்கைக்கல்ல, உள்ளபடியே உள்ள வாழ்க்கைக்கு. நாம் நினைத்துப் பார்க்கவும் விரும்பாத பிரச்சினைகளை இந்த நாடகங்கள் பேசுகின்றன: நோய்மை, மரணம், குரூரம், மரணத்துக்கும் பேரழிவுக்கும் இட்டுச் செல்லக்கூடிய, தவிர்க்க முடியாத, மோசமான பிழைகளை தன்னம்பிக்கையுடன் இழைக்கும் மானுட இயல்பு. நம்மை அச்சுறுத்தக்கூடிய எந்த ஒரு சாத்தியமும் தவற விடப்படுவதில்லை: திடீர் மரணம், தற்கொலை, மரணப்பிணி, துரோகம், நேசத்துக்குரிய ஒருவர் அல்லது பலரின் இழப்பு.
ஆனால் அவல நாடகங்கள் மானுட துயரின் காரணங்களை விவரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. மானுடத்தின் மிகப்பெரிய குறைகளுடன், அதன் குறிப்பிடத்தக்க வலிமைகளையும் நாம் காண அவல நாடகங்கள் அனுமதிக்கின்றன: புரிந்துணர்வு, கருணை, உடலின் துன்பம் மற்றும் வறுமையை எதிர்த்து நிற்கும் இயல்பு. துயரிலும் தோல்வியிலும், நண்பர்கள் மட்டுமல்ல, அந்நியர்களும் ஆறுதலும் இரக்கமும் காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகங்கள் எடுத்துரைக்கின்றன.
பண்டைக்கால ஏதனியர்கள் தம் வாழ்வின் நிதர்சன உண்மைகளைப் புரிந்து கொள்ள இந்த நாடகங்கள் உதவின, அவை, இன்று நமக்கும் உதவக்கூடும். துயரையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த இவை நமக்கான சொற்களை அளிக்கக்கூடும், மானுட அனுபவத்தை நாம் புரிந்து கொள்ள உதவும் சொற்கள் இவை. நாடகத்தின் பின்னுள்ள தொன்மத்தின் கருப்பொருளை அறிந்து கொள்வதால் மட்டும் இதைத் தெரிந்து கொண்டுவிட முடியாது.
ஆம், ஈடிபஸ் தன் தந்தையைக் கொன்று தாயை மணந்தான். ஆனால் சோபோக்ளஸின் ‘அரசன் ஈடிபஸ்‘ தாய்களின் பால் மக்கள் கொள்ளும் காமம் பற்றிய ஃபிராய்டின் கதையல்ல. சோபோக்ளஸின் நாடகத்தில் ஈடிபஸ் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறான். டெல்ஃபியில் குறி கேட்கும் அவன் தன் விதியை அறிய வந்தபின் தன்னாலான அனைத்தையும் செய்து தனக்கு விதிக்கப்பட்ட முடிவைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். தான் தவிர்க்க நினைத்த குற்றங்களைத் தன்னையறியாமலே செய்து விட்டதை அவன் உணர்வதன் வியப்பையும் அதிர்ச்சியையும் நாடகம் விவரிக்கிறது. அப்பல்லோவால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட தெய்வச்சித்தம்தான் அவனுக்கு விதிக்கப்பட்ட கதி என்றாலும் அவன் தன் குற்றங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான். அவன் தன்னைக் குருடாக்கிக் கொள்கிறான் – “தான் இழைத்த, தனக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை” அவனால் கண் கொண்டு காணத் தாள முடிவதில்லை. அவனது துயர்நிலையில் தீபஸின் முதியவர்களாலான கோரஸ் அவனைத் தேற்ற முயல்கிறது- கடந்த காலத்தில் அவன் அவர்களையும் அவர்களது நகரையும் காத்திருக்கிறான் என்பதால். ஆனால் அவர்களோ, நாடகத்தில் உள்ள வேறெந்த பாத்திரமோ, ஈடிபஸ்சுக்கு மீட்சிக்கான சாத்தியத்தை அளிப்பதில்லை, எதிர்காலத்தில் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை.
கோரஸ் போலவே, பார்வையாளர்களாய் உள்ள நாமும் சாட்சிகள்- கண்டு நிற்கும் நாம் இரக்கப்பட முடியும், ஆனால் நிகழ்வுகளின் பயங்கர போக்கை மாற்றும் ஆற்றல் இல்லாதவர்கள். கோரஸ் போல், நாடகத்தின் நிகழ்வுகளைக் கொண்டு நாம் எவ்வளவு குறைவாய் அறிந்திருக்கிறோம் என்பதையும் நம் கட்டுக்குள் எவ்வளவு குறைவான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் கற்றுக்கொள்ளவே இயலும். எனினும், மானுட அறிவு மற்றும் சக்தியின் எல்லைகளைக் கண்டுகொள்வதில் ஒரு இன்பம் கிட்டலாம், அந்த இன்பம் உரைக்கப்படும் சொற்களில் பிறப்பதுதான் என்றாலும்.
மிகவும் மாறுபட்ட நம் மொழியிலும், பண்டைக்கால கிரேக்க மூலமொழியின் கவித்துவத்தையும் ஆற்றலையும் நாம் ஓரளவு உணர்த்துவது சாத்தியமாகவே இருக்கிறது. இதோ, ஏஸ்ஷிலஸின் ‘அகாமெம்னோன்‘ நாடகத்தின் கோரஸ், ட்ரோஜன் போர் பற்றி பேசிக் கொள்கிறார்கள் (‘கிரேக்க நாடகங்கள்‘ என்ற நூலில் சாரா ருடன் செய்த மொழியாக்கத்தையொட்டி)
ஜ்யூஸ் நம்மை அழைத்துச் செல்கிறான்,
விழிப்புணர்வுக்கான பாதையில்;
துன்பங்களே நம் படிப்பினைகள்
என்று ஆணையிட்டான் ஜ்யூஸ்.
இதயத்துக்கு இல்லை உறக்கம், மாறாய்
காயங்களை நினைவுறுத்தும் வலி
துளித்துளியாய் இறங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பமில்லா உள்ளங்களும்
எச்சரிக்கையுணர்வை அடைகின்றன.
காயங்களை நினைவுகூர்கின்ற வலி பற்றிய வரிகளை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலையானது பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது ராபர்ட் கென்னடி மேற்கோள் காட்டினார்.
தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வலியையும் இழப்பையும் உணர்கிறான், அதிலும் குறிப்பாக மிக மோசமான அநீதியின் முன். ஆனால் ஏஸ்ஷிலஸ் அளவுக்குச் சிறப்பாய் வேறு யாரும் அதை விவரித்ததாய்த் தெரியவில்லை. அவர் வலிக்கு நினைவாற்றலை அளிக்கிறார். அதற்கு ஒரு பௌதீக இருப்பையும் அளிக்கிறார்- அதன் வாதை துளித்துளியாய், நமக்கு அவ்வாறு உணரவும் அறியவும் விருப்பம் இல்லாதபோதும், புரிதலை மெல்ல மெல்ல கற்பித்துக் கொண்டிருக்கிறது.
நன்றி – Why Are Greek Plays Important? They Prepare You For Life, Mary Lefkowitz, Signature
ஒளிப்பட உதவி – Wikipedia