நமக்குத் தெரிந்த சிறுகதை பாணியிலிருந்து சற்றே விலகிய கதை. முடிவுக்கு மிக அருகில் தொடங்கி ஒரு உச்சகட்டத்தின் வெடிப்பில் முடியும் கதை எனும் யுத்தியை விடுத்து எழுதப்பட்ட கதை. இதில் திட்டமிடல் இல்லை. கோபி கிருஷ்ணனின் கதை இயல்பே இதுதான்.
ஆதவனும் கோபியும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனித மனங்களின் விசித்திரங்களையும், மனித உறவுகளால் உண்டாகும் விநோத ரசமாற்றங்களையும் கதைகளாக்கியவர்கள். ஆதவனின் ‘இரு நாற்காலிகள்’ கதை ஒரு உதாரணம்.
எவ்விதமான பதில்களையும் சென்றடையாமல் நவீன வாழ்வின் சிக்கல்களை காட்டக்கூடிய கலைஞர் கோபி. நவீனத்துவ மனிதனின் பாசாங்குகளை வெளிப்படையாக்கியவர், ஆனால் அதற்கு மரபு சார்ந்த பதில்களைக் கொடுக்காதவர். மனிதன் தனி மிருகம். அவன் இந்த சமூகத்தில் வாழ்வதன் வழியே தனது இயல்பையும், தன்னுடன் வாழும் மனிதர்களின் இயல்பையும் முடிவு செய்கிறான். அவனது குழப்பங்களுக்கும், வாழ்வியல் போராட்டங்களுக்கும் மரபிலும் மண்ணிலும் பதில் இல்லை.
புயல் கதையின் தொடக்க வரியே மேற்சொன்ன பார்வையை நிறுவிவிடுகிறது. எங்கோ காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது, அதன் பாதிப்பு வேறு எங்கோ நடக்கிறது. “அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்”. சாதாரண வரியாகத் தெரிந்தாலும், கதையின் ஊடே பயணிக்கும்போது மனிதர்களின் நடத்தைகளையும் இயல்புகளையும் எடுத்துரைக்கும் கருத்தாக மாறிவிடுகிறது.
ஸோனா வேலைக்குப் போவதில் அதிக நாட்டமில்லாமல் உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஏக்நாத்தின் வற்புறுத்தலாம் வேலைக்குச் செல்கிறாள். ஜூரம் அடிக்கும் குழந்தைக்கு மாத்திரையும், காபி பொடி, சாக்லெட்டும் வாங்கிக்கொண்டு கடும் மழைக்கு நடுவே அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிறான் ஏக்நாத். மழையில்தனது பொத்தல் விட்ட மழை உடுப்பைப் போட்டுச் செல்கிறான். ரோட்டை அடைத்துக் கோலம் போடும் மாமியின் புள்ளிகளை அழிக்காமல் செல்வதும், சிகரெட் புகைக்கு முகம் சுளிக்கும் மாமியிடம் மன்னிப்பு கேட்டு அணைத்துவிடுவதுமாக அவன் சமூகத்தை ‘அட்ஜெஸ்ட்’ செய்து செல்பவன்.
அவன் சென்ற அதே மழையில் வீடு திரும்பியிருக்கும் மனைவி சோனாவுக்கு சென்ற இடமெல்லாம் சமூகம் இடர் கொடுக்கிறது. அவளது உணர்வுகளை அத்துமீறும் பாலியல் தீண்டல்களையும், பெண்களை அடைய நினைக்கும் மனோபாவத்தையும் அவள் வேலை செய்யும் மருத்துவமனை முதல் வீடு வரும் வரை அனுபவிக்கிறாள். வீடு வந்தபின்னும் பக்கத்து போர்ஷன் குடிகாரன், ரெண்டு டிக்கெட் இருக்கு சினிமா வர்றியா, என்கிறான். அவள் மனம் பதைபதைத்து விடுகிறது.
இதைக் கொட்டித் தீர்க்கும்போது ஏக்நாத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருவிதத்தில் கையாலாகதவன்தான். அவனது மனம் உடனே, அப்பன் செய்த தவறுதானே மகன் தலையில் வரும், நானும் எதுவும் செய்ததில்லையே, எனக்கு ஏன் அப்படி ஒன்று நடக்கிறது, என குழப்பம் அடைகிறான். சமூகம் விஸ்வரூபத்தை உன்னிடம் காட்டியிருக்கு விடு, எனச் சொல்கிறான். இதற்கு ஈடான சிக்கல்களை அடைந்தவன்தான் என்றாலும் அவன் ஒருவிதத்தில் இந்த சமூகத்தின் கீழ்மைகளுக்குப் பழகியவனாக இருக்கிறான்.
திடீரென ஒரு இடத்தில் புயல் தோன்றியதில் மற்றொரு இடத்தில் மழை பெய்வது போல மனைவின் புலம்பலாலும் இயலாமை நிலையாலும் சட்டென “சாக்கடையில் உழலும் பன்றிகள்” எனச் சமூகத்தின் சீர்கேட்டை நோக்கி கத்துகிறான்.
அவன் சரி செய்யக்கூடியது எதுவுமில்லை. அதே சமயத்தில் இந்த கத்தல் மட்டுமே அவனது மனைவிக்கும் ஆறுதலாக இருக்காது என்பதையும் அறிந்தவன்தான். அதனால் கத்தி வைக்கிறான்.
2 comments