கருவை இலைகள் மெல்ல, சீரற்ற இடைவெளியில் இறங்கிக் கொண்டிருந்தன. குத்துக் கருவைகளைப் போன்றவை அல்ல சீமைக் கருவைகள். மரமாக உயர்ந்து வளர்பவை. ஓடி விளையாடும் போதும் கருவையில் உரசிக் கொண்டால் ஏற்படும் சிராய்ப்பு மட்டும் தனியாகத் தெரியும். அதன் உடல் துவைத்து முறுக்கிய போர்வையைப் போல் சுருங்கியும் கடினப்பட்டும் கிடக்கும். மனம் இயல்பாகவே கருவையைக் கண்டால் எச்சரிக்கை அடைவதற்கு அதைச் சூழ்ந்து கிடக்கும் முட்களும் மற்றொரு காரணம். ஆனால் மணிமாறனுக்கு இப்போது சற்று தள்ளி நின்று அவற்றைப் பார்க்கும் போது மனம் அமைதி அடைவது போல் இருந்தது. குரலின் ஒலி உயர்ந்து விடாமல் தொடர்ச்சி அறுபடாமல் பேசுவது போல கருவையின் இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருந்தன. பழுப்பேறிய சிறிய இலைகள். ஒரே சீராக விழுவது போலத் தெரிந்தாலும் நெருங்கிச் சென்றால் காணக்கூடிய ஒரு நலுங்கல் அவற்றில் உண்டு. நிதானத்தில் ஏற்படும் நடுக்கம்.
“அவன் போன டிசம்பர்லயே வாங்குறன்னு தான் சொன்னான். நீங்க தான் அவன கெடுத்திய” என்று வழக்கம் போல் புனிதா ஆரம்பித்தாள். மணிமாறன் வெளியே அமர்ந்து செய்தித்தாளை விரித்துப் பிடித்திருந்தான். ஒரு வரியைக் கூட மனம் தொடவில்லை. புனிதாவின் வார்த்தைகள் அவனை ஆர்வம் கொள்ள வைத்தன. தங்கராஜை ஏதோ குறை சொல்லப் போகிறாள். அவளுக்கு ஏதேனும் குறிப்பினை எடுத்துக் கொடுத்து அதனை மேலும் பெரிதாக்கி அவரை குத்திக் கிளற வேண்டும் என்று மனம் பரபரப்படைந்தது. அந்த எண்ணத்திற்காக தன்னை நொந்து கொண்டான். இப்போதெல்லாம் அவனால் கையாள முடியாத எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும் அவன் அப்பாவை வெறுக்கிறான். அவனுக்கு ஏற்படும் அத்தனை இழிவுகளுக்கும் அந்த மனிதரே காரணம் என எண்ணத் தோன்றுகிறது. புனிதா பேசுவதன் பொருள் அவனுக்கு விளங்கியது. வீட்டில் எல்.ஈ.டி டி.வி இல்லாததால் விடுமுறையில் வந்திருக்கும் தான் முறைத்துக் கொண்டிருப்பதாக அவள் கற்பனை செய்கிறாள். அவளைப் பொறுத்தவரை பிள்ளைகளின் அத்தனை சினமும் பசியாலும் எளிய ஆசைகளாலும் எழுபவை மட்டுமே. அவனே வார்த்தைகளாக ஆக்கிக் கொள்ளாத அவன் சிக்கல்களை ” பெரிய டிவி இல்லாததால் முறைத்துக் கொண்டு இருக்கிறான்” என்றே விளங்கிக் கொள்ள முயல்கிறாள். அந்த “ஆசை” நிறைவேறாததற்கு காரணம் கண்டு பிடிக்கிறாள்.
எச்செயலிலும் சற்றே தயக்கம் காட்டும் அப்பாவின் குணத்தை பயன்படுத்திக் கொண்டு அம்மா அவரை குறை சொல்கிறாள். நானும் இந்த மனிதர் மேல் அப்படித்தான் பழி சுமத்துகிறேனா? அவருடைய இறந்த காலத்தை முற்றாக நிராகரிக்கிறேனா? அவர் இருந்த சூழலுக்கும் தகுதிக்கும் அவரால் முடிந்த அதிகபட்சத்தையே எங்களுக்கு கொடுத்திருக்கிறார் மௌனமாக. ஆனால் அவர் இன்னும் சற்று உழைக்கலாமே? இன்னும் சற்று போராடலாமே? எதுவரை?
மணிமாறன் எழுந்து கொண்டான்.
உள்ளே சென்றவன் “கொரடாச்சேரி போறேன்” என்றான். சொல்லும் வரை அதை அவன் எண்ணியிருக்கவில்லை. தங்கராஜும் புனிதாவும் விரும்பாத ஒன்றை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அனிச்சையாய் அவ்வார்த்தையை வரவழைத்தது. அவன் பெங்களூருவில் குடித்து விட்டு பத்துப் பெண்களை கட்டித் தழுவி ஆடினாலும் புனிதா கண்டு கொள்ளமாட்டாள். ஆனால் உள்ளூரில் ஒரு பெண்ணுடனும் அவன் பேசி விடக்கூடாது. அதுபோலவே “கொரடாச்சேரி செட்டு” என தங்கராஜ் அடிக்கடி ஏளனம் செய்யும் சிலருடன் அவன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் தங்கராஜும் உறுதியாக இருந்தார். இருவரும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. அது அவனை மேலும் தூண்டியது. சீறித் திரும்பாத மிருகத்தை எப்படி கல்லால் அடிக்க மனம் வரும்? மேலும் கொரடாச்சேரி செல்லும் சிற்றுந்தும் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
இருந்தும் ஏறினான். “ராஜராஜ சோழன் நான்” என பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல. பேருந்தில் பேசப்படுவதும் பழையதாகவே இருக்கும். ஏதோவொரு நாளில் உறைந்து போய்விட்ட ஊர். எட்டு வருடங்களுக்கு முன்பு ஆற்றோரம் குளிக்க வரும் அத்தைகளையும் சித்திகளையும் பார்ப்பதற்கென சிறப்பு வகுப்பென்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சீக்கிரம் புறப்படுவது குற்றவுணர்வும் பரபரப்பும் தரும் இனிய அனுபவமாக இருக்கும். மல்லாந்து நீச்சல் அடிக்கும் போது துள்ளும் முலைகள் வெளீரெனத் தெரியும் கால்கள் அனைத்தையும் விட குளிக்கும் போது மட்டுமே புளி போட்டு தேய்த்த குத்து விளக்கு போல் பளீரென வெளிவரும் சுதந்திரமான சிரிப்பும் ஏளனமும் நிறைந்த குரல்கள் என அவர்களை பார்க்கும் முன்பே அக்கணங்கள் பலவாறாக அவனுள் விரிந்து விடும். அவர்களை கடக்கும் போது அவர்களின் ஏதோவொரு ஆழம் இவனைக் கண்டு கொண்டு ஏளனமும் பரிவும் ஒரே நேரம் தோன்ற சிரித்து மறுகணமே புன்னகை குடியேறிய முகத்துடன் கனிவுடன் நோக்கும். அப்புன்னகைக்கு பின்னிருக்கும் சிரிப்பை அவன் கண்டதேயில்லை. கொரடாச்சேரி செல்லும் வரை குற்றவுணர்வு மனதை அழுத்தும். நாளை முதல் இப்படி கிளம்பவே கூடாது என முடிவு செய்து கொள்வான்.இருந்தும் இளங்காலையின் தூய்மைக்காக கிளிகளின் சத்தத்திற்காக அந்த சத்தத்தை உண்டெழும் நிசப்தத்திற்காக அவன் ஏங்குவதாக மனம் பாவனை செய்யும். அதை அவன் அறியவும் செய்வான். அறியாதவனாக தன்னை கற்பனித்துக் கொள்வான். மீண்டும் படபடப்பு. மகிழ்ச்சி. மீண்டும் குற்றவுணர்வு. ஆனால் இன்று அதே சித்திகளும் அத்தைகளும் நிறைந்த பேருந்து வெறுப்பேற்படுத்தியது. ஒருத்தி முகம் சுருங்கி இருந்தாள். ஒருத்தி மஞ்சளை முகம் முழுக்க அப்பி இருந்தாள். ஒருத்தி சமயபுரத்திற்கு மாலை போட்டிருந்தாள். அவன் தன் உடலையும் நினைத்துக் கொண்டான்.
“மணி நல்லா இருக்கீங்களா?” என்றவாறே ஒருவன் அருகில் வந்தமர்ந்தான். பணிவதற்கென்றே உருவான இளிப்பு பரவிய முகம். உட்திரண்ட வெறுப்பினை ஒரு வெற்றிளிப்பாக மாற்றி அவனுக்களித்தான்.
“ஏதாவது வேலருந்தா பாத்து குடுங்க மணி” என்று அவன் சொன்ன போது அவன் மனம் அதிர்ந்தது. அவனை நினைவு கூர முடிந்தது. ஆனால் அந்த நினைவு கூறல் ஏன் ஒரு அதிர்ச்சியாக நிகழ வேண்டும்? அவனுடன் படித்தவன் தான். இப்போது அவனை பன்மையில் அழைக்கிறான். அவன் பெயர் சிவராஜ். மணிமாறன் பட்டம் பெறுவதற்கு முன்னே மணம் புரிந்து கொண்டவன்.
“ஒழுங்கா படிச்சிருக்கலாம்” என்றான் குரலில் சிறு ஏமாற்றத்துடன். “நான் மட்டும் முயன்றிருந்தால்” எனப் பேசத் தொடங்குகிறான். அத்தகைய சொற்களுக்கு ஒரு அங்கீகாரப் புன்னகையை அளித்த பின்பு தான் தொடங்க வேண்டும்.
எதைச் சொல்லி ஆரம்பிப்பது?
“பெரிய பையன் ஸ்கூல் போயிட்டானா?”
அந்த “பெரிய” பையன்தானா என்பதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
இருந்தும் மணிமாறன் எதிர்பார்த்தபடி சிவராஜின் முகம் மலர்ந்தது. “சேர்த்துட்டேன் மணி. நாமதான் வீணா போயிட்டோம். நம்ம புள்ளைங்களாவது நல்லா இருக்கட்டும்” என்றான்.
நல்லவேளை பையன் தான். ஆனால் “நாம்” என தன்னையும் சேர்த்துக் கொள்கிறானா என்ற எண்ணம் மணிமாறனுக்கு எழுந்தது. “நான் ஒன்னும் வீணாப் போயிடல” என சொல்லத் தோன்றியது.
“ஆனா பீஸ் தான் வருஷத்துக்கு பதினஞ்சாயிரம் ஆவுது” என்றான்.
மணி சற்றே அதிர்ந்தான். அவன் உடையையும் பேச்சையும் வைத்து அவன் வாயிலிருந்து வரத் தகுதியான தொகையை விட அது சற்று அதிகம் என எண்ணினான்.
“ஆமா நீங்க எங்க இருக்கீங்க?” என்றான்.
“பெங்களூர்.”
சிவராஜின் முகத்தில் ஒரு சுருக்கம் வந்து சென்றது. மணிமாறனால் தனக்கு உதவு முடியாது என்பதை எப்படியோ அறிந்து கொண்டவன் போல அவனிடம் ஒரு நிமிர்வு எழுந்தது.
“மேரேஜ் ஆயிட்டா” என்றான். அதுவரை அவன் குரலில் இருந்த களிமண் தன்மை உலர்ந்து இறுகியிருந்தது.
“இன்னும் இல்ல” என்றான் மணிமாறன்.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மணி” எனும் போது அவன் குரலில் சற்றே ரகசியத் தன்மை வந்திருந்தது. மெல்லிய அலட்சியம் கூட. பேருந்து கிட்டத்தட்ட காலியாகி இருந்தது.
“ஒனக்கே தெரியும். எங்கொப்பன் சின்ன வயசுலேயே அம்மால வுட்டுட்டு ஓடிட்டான். அம்மாவும் என் ஸ்கூலுக்கு அனுப்ப தொரத்தி தொரத்தியே நான் பத்து தாண்டறதுக்குள்ள செத்து போச்சு. எளவு வூட்டுக்கும் கோவிலு திருவிசாவுக்கும் பேசியே காலத்த ஓட்டிட்டு இருந்தேன். என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஒரு பிடிப்பும் கெடைக்காம செத்துடலாம்னு தோணிச்சு மணி. அப்பதான் இவளப் பாத்தன்” அவன் ஏன் தன்னிடம் இதைச் சொல்கிறான் என மணிமாறன் யோசித்தான்.
மேலும் அடங்கிய குரலில் சிவராஜ் தொடர்ந்தான்.
“அதுக்கும் யாருமில்ல. சும்மா சேத்துக்கிட்டேன். என்னவிட நாலு வயசு மூப்பு” என்றபோது மணிமாறன் ஏனோ குன்றிப் போனான். சிவராஜின் குரலில் குழைவு வேறு வகையில் மீண்டு வந்தது.
“ஆனா சும்மா சொல்லக் கூடாது” என்றவனின் முகத்தில் மணிமாறன் பலரிடம் கண்டும் செரித்துக் கொள்ள முடியாத இளிப்பு குடியேறியது. கண்களில் இருந்த ஏற்புணர்ச்சி மறைந்து ஒரு விரோதத் தன்மை அவன் முகத்தில் குடியேறியது. சிவராஜ் அதை கவனிக்கவில்லை.
“அம்மா செத்து போனத நெனச்சி செல நாள் மனசு அடிச்சிக்கும். தூக்கம் வராம எந்திருச்சி ஒக்காந்திருப்பேன் மணி. எப்டி தெரியுமோ அப்படியே என்ன சேத்துக்குவா” என்றான். மணிமாறனுக்கு அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போல் இருந்தது. கொரடாச்சேரி இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
“ஆனா அவ கஷ்டமெல்லாம் எனக்குத் தெரியாது மணி. ஒர்நா தூக்கத்துல கை அவ மொகத்துல பட்டது. அழதுட்டு இருந்தா. ‘என்னடி’ன்னு பிடிச்சு திருப்புனா கைய தட்டி விட்டுட்டா. அப்புறம் அவளே காலைல என்ன எழுப்புறா” என்பதை ஏதோ மாபெரும் ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்வதைப் போல் சொல்லிக் கொண்டிருந்தான். சொல்லச் சொல்ல அவன் மனம் மகிழ்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. இனி அவன் சொல்ல இருப்பவற்றில் இல்லாதவையும் இணையும் என்பது மணிமாறனுக்கு சோர்வேற்படுத்தியது.
“ஊர்ல கட்டட வேல இருந்தா மத்தியானத்துல சாப்பிட வந்துவேன். சாப்பிடறமோ இல்லையோ கண்டிப்பா அது உண்டு” என்றபடி கண்ணடித்தான். அவன் தலையை பிடித்து வெளியே வீச வேண்டும் போலிருந்தது.
“உங்க இதுலெல்லாம் லேட்டா தான் கல்யாணம் பண்ணுவாங்களா” என்றபோது சிவராஜின் முகத்தில் அருதியிட்டுக் கூற முடியாத ஒரு ஒளியினை மணிமாறன் உணர்ந்தான்.
“உங்க இது” என அவன் எதைச் சுட்டுகிறான்.
காற்று போன பலூன் போன்ற முகம். சிகரெட்டும் புகையிலையும் தயாரித்து வைத்திருந்த அருவருப்பூட்டக் கூடிய வாய். இவனைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேனா? இவற்றை ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். பத்து வருடங்களுக்கு முன் இவன் பக்கத்து வீட்டில் புதிதாக திருமணமாகி வந்த ஒருவன் சொன்னதாக இவன் சொன்னக் கதைகளை விழி விரிய அருவருப்புடன் ஆர்வமாக கேட்டதால் இப்போது இவற்றை சொல்கிறானா அல்லது என்னை வென்று செல்ல விழைகிறானா?
கொரடாச்சேரி வந்தது.
பூப்போட்ட மெல்லிய சேலை கட்டிய ஒல்லியான பெண்ணை காண்பித்து “இதான் மணி நம்ம சம்சாரம்” என்றான் சிவராஜ்.
மணிமாறன் மனம் அதிர்ந்தடங்கியது. அவன் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் ஏற்கனவே அறிந்தவள் போல் அவள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். மணிமாறன் அவன் அம்மாவை அலைபேசியில் அழைத்தான்.
“அப்பாவ நாலு செட்டு டிரெஸ் அயர்ன் பண்ணச் சொல்லு. இன்னிக்கு நைட்டே கெளம்புறேன்” என்றான்.
அவ்வூரில் இல்லாமல் இருப்பது மட்டுமே தீர்வு எனத் தோன்றியது. கருவை இலைகள் அதே அமைதியுடன் உதிர்ந்து கொண்டிருந்தன. நடுக்கத்தை மட்டுமே அவனால் காண முடிந்தது.