வில்லியமின் (William) வீட்டினர் விருந்தொன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விருந்தினர் அனைவரும் மாறுவேடம் அணிந்து வர வேண்டும். தாங்கள் என்ன உடை அணியப் போகிறோம் என்பது குறித்த உரையாடலின்போது வீட்டின் கடைக்குட்டியான பதினொரு வயது வில்லியம், தனக்கு சிங்கத்தின் தோல் கிடைத்தால் அதை அணிந்து கொண்டு விருந்தினர்கள் இரவு வேளை தோட்டத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது சிங்கம் போல் உறுமியபடி அவர்கள் மீது பாய்ந்து மகிழ்விப்பேன் என்கிறான். வீட்டினர் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
உண்மையில் வில்லியமிற்கு வருபவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணமொன்றும் இல்லை, அவனைப் பொறுத்தவரை எதிர்பாராத கணங்களில் சிங்கம் போல் அவ்வப்போது தோன்றி உறுமுவது உற்சாகமான செயல், விருந்தினர்களும் அந்தச் சில கண கிலியை விரும்புவார்கள் என்றே நம்புகிறான், அதைச் சொல்லவும் செய்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரியவர்கள் அவன் சொல்வதைக் கேட்காமல் அவர்களாக அவனுக்கு ஒரு உடை தேர்வு செய்து விடுகிறார்கள்.
1921 ஆண்டில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வெளிவந்த, பதினொரு வயது வில்லியமை கதைநாயகனாகக் கொண்ட ‘ஜஸ்ட் வில்லியம்’ (Just William Series) சிறார்ப் புத்தகங்களின் (தொடர்ந்து பல தசாப்தங்கள் இந்த நூல்கள் வெளிவந்தாலும், வில்லியமின் வயது ஏறுவதில்லை, மார்க்கண்டேயனாக பதினொரு வயதிலேயே இருக்கிறான் சாராம்சமாக இந்தச் சம்பவத்தை புரிந்து கொள்ளலாம். குழந்தையின் கண்களின் வழியே உலகை பார்க்கும், புரிந்து கொள்ளும் வில்லியம், அதற்கு நேர்மாறாக இருக்கும் -தாங்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்ததை மறந்த- பெரியவர்களின் உலகம், இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும்போது ஏற்படும் அனர்த்தங்கள்தான் இந்த புத்தகங்களின் கருப்பொருள்.
பத்து, பதினொரு வயதில் ஒரு சிறுவனுடைய கனவுகள் என்னவாக இருக்கக்கூடும்? ராபின் ஹூட் போல் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்குத் தருவது, புதைக்கப்பட்டுள்ள புதையலைத் தேடி கண்டுபிடிப்பது, வட்ட தொப்பி அணிந்து, தொடைகளில் துப்பாக்கி பொருத்திக் கொண்டு, குதிரை மேல் அமர்ந்து காற்றைக் கிழித்தபடி கௌபாய் போல் அமெரிக்க பாலைவனத்தில் பறந்து செல்வது, போலிஸாரால் கண்டுபிடிக்க முடியாத குற்றத்தை, தொழில்முறை அல்லாத துப்பறிவாளனாக- கொலையாளி விட்டுச் சென்ற, போலிஸார் கண்களில் படாத சிகரெட் துண்டு, அவனுடைய ஷூ அச்சு இவற்றைக் கொண்டு- கண்டு பிடிப்பது, பேய் நடமாடுவதாகச் சொல்லப்படும் மாளிகையில் நடக்கும் கடத்தலை வெளிக்கொணர்வது என அந்த வயதில் செய்ய நினைக்கும் சாகசங்கள் பலவும்தான்.
வில்லியமும் இத்தகைய பகற்கனவுகளில் ஈடுபடுகிறான். ஆனால் ஹார்டி பாய்ஸ் (Hardy Boys) போலவோ ‘பேமஸ் பைவ்’ (Famous Five) போலவோ இல்லாமல் இவை பெரும்பாலும் அ-சாகசங்களாகவே (misadventures) முடிகின்றன. கொலைகாரன் என்று வில்லியம் சந்தேகப்படும் நபர் ஒரு அப்பாவியாக இருக்கிறார், அல்லது அவன் யாரை நம்புகிறானோ அவர் திருடனாக இருக்கிறார். இத்தகைய சிறார் பாத்திரங்கள் குறும்பு செய்தாலும், பெரியவர்கள் சொல்லை அவ்வப்போது மீறினாலும் அவர்கள் உதாரண நாயகர்களாகவே, பிற குழந்தைகள் பின்பற்ற வேண்டியவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். வில்லியம் குறித்து அப்படிச் சொல்வது சிறிது கடினம். படிப்பு பிடிக்காது, ஆசிரியர்களுடன் பரஸ்பர விரோதம் -பிரெஞ்ச் ஆசிரியரிடம் தான் எப்படியும் பிரான்ஸ் போகப்போவதில்லை எனவே ஏன் படிக்க வேண்டும், ஏன் அனைவரும் ஆங்கிலம் படிக்கக் கூடாது, எந்த முயற்சியும் இல்லாமலேயே என்னால் அதை பேச முடியும்போது மற்றவர்களும் அப்படியே பேசக்கூடுமே என்று கேள்வி கேட்கிறான்-, வகுப்பறையில் அமர்ந்திருப்பதைவிட, கிராமத்தில் இருக்கும் சிறு காடுகளில் (woods) அலைந்து திரிவது, அங்கு தென்படும் தண்ணீர்ப் பாம்பை வீட்டிற்கு எடுத்து வருவது, ஓடையில் மீன் பிடிப்பது, பறவைகளைப் போலவே கூடு கட்ட முயற்சிப்பது என அவனுடைய பாதை வேறு. அவன் குடும்பத்தில் இத்தகைய அபிலாஷைகள் என்ன எதிர்வினையை உருவாக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.
மர்மம், குற்றம் என்ற வட்டத்திற்குள் க்ராம்ப்டன் வில்லியமை அடைத்து விடுவதில்லை, உண்மையில் அவை மிக குறைவாகவே இந்தக் கதைகளில் வருகின்றன. அன்றாடத்தில் இருந்துதான் வில்லியமின்பெரும்பாலான சாகசங்களுக்கான யோசனைகள் தோன்றுகின்றன, தினசரி வாழ்வே அவன் புரியும் அனர்த்தங்களுக்கான விளைநிலமாக உள்ளது. ‘குழந்தைகளுக்கான, அவர்கள் மட்டுமே இருக்கும் உலகமாக’ மட்டுமே இல்லாமல் – உதாரணமாக பேமஸ் பைவில் பெற்றோர் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு வருவார்கள், பின் சிறார்கள் கையில் செல்லும் கதையில், அதன் பின் வரும் பெரியவர்கள் பாத்திரங்கள் குற்றவாளிகள் மட்டுமே, அவர்களைப்பிடிப்பது மட்டுமே நம் சிறார் துப்பறிவாளர்களின் வேலை- பெரியவர்களின் உலகத்தினுள்ளும் ஒரு நோட்டம் விடுகிறான் வாசகன்.
தினமும் அவன் செய்யும் சாகசங்கள் என்ன, அவற்றால் சந்திக்கும் பிரச்சனைகளும் என்ன?. காலையில் அபஸ்வரமாக பாடினால் வீட்டில் உள்ளவர்கள் அவனுடைய இசையார்வத்தை புரிந்து கொள்ளாமல் திட்டுகிறார்கள், எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும் மோகத்தில் வீட்டிலுள்ள மின்னணு உபகரணகளை நோண்டி முயன்று மின்சாரம் தாக்கி அலறினால், வீட்டின் வென்னீரூற்றை (geyser) வெடிக்கச் செய்து வீடெங்கும் நீரைப் பாய்ச்சினால் வீட்டினர் அதையும் புரிந்து கொள்ளாமல்- வில்லியம் பார்வையில் ஈவிரக்கமின்றி- வைகிறார்கள். வீட்டின் கடைக்குட்டி என்பதால், பதினெட்டு வயதான கிராமத்துப் பேரழகி அக்கா எதெல் (Ethel), இருபது வயதான, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ‘தன் வாழ்நாள் காதலை’ சந்திக்கும் அண்ணன் ராபர்ட் (Robert) இவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. அக்காவின் சால்வையை, மதிப்புமிக்க சீப்பை தம்பி உபயோகித்தால் என்ன, சீப்பில் தெரியாத்தனமாக கோந்து ஒட்டியிருந்தால் வில்லியம் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும், பெரியவர்களுக்கு இது புரிவதே இல்லை. ராபர்ட்டும், ஏதெலும் பங்குபெறும் நாடக நிகழ்ச்சிகளில், ஏற்பாடு செய்யும் விருந்துகளில், நல்லெண்ணத்துடன் -அவர்கள் இவன் எதுவும் செய்ய வேண்டாம் என்று முற்றிறுதியாக கூறியும், கடும் தண்டனைகள் குறித்து அச்சுறுத்தியும்கூட- தன் பங்களிப்பை ஆற்றி எல்லாவற்றையும் கலைத்து விடுகிறான். விருந்தினர்களில் ஒருவரை குற்றவாளி என்று நினைத்து ஷெட்டில் அடைத்து விடுவது, ராபர்ட்டின் ‘அப்போதைய உயிர்க் காதலியை’ வெறுப்படையச் செய்து, தன் வாழ்க்கை பாழாகி விட்டது என்று – அடுத்த உயிர்க் காதல் எதிர்படும்வரை- ராபர்ட்டை புலம்பச் செய்வது என வில்லியமின் லீலைகள் பல.
வில்லியமிற்கு ஆண்- பெண் உறவு பிடிபடுவதில்லை, ராபர்ட் தொடர்ச்சியாக ‘காதலில்’ விழுவதை முட்டாள்தனம் என்கிறான், எதெல் மீது வாலிபர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அவளுடைய உண்மை சொரூபம் தனக்கு மட்டும்தான் தெரியும் என்று முணுமுணுக்கிறான். இருப்பினும் திருமணம் நடந்தால் அவர்கள் வீட்டை விட்டுச் சென்று விடுவார்கள் என்று ஜோடிப் (அ)பொருத்தத்திலும்- பெயர் குழப்பத்தில் ராபர்ட்டை விட வயது மூத்த வேறொரு பெண்ணிற்கு அவன் சார்பாக திருமண செய்யக் கோரி கடிதம் எழுதி தானே தருகிறான், இன்னொரு முறை ராபர்ட் இரு வாரங்களுக்கு முன் உயிராக நேசித்த பெண்ணிற்கு கடிதம் தருகிறான், அண்ணன் இப்போது வேறு மலரிடம் தாவி விட்டதை அறியாமல். இதில் எப்படி வில்லியமை குறை கூற? திட சித்தமில்லாத ராபர்ட்தான் இத்தகைய குழப்பங்களிற்கு காரணம் இல்லையா, வில்லியம் சொல்வது போல் ராபர்ட் இன்று, இப்போது, இந்தக் கணம் யாரைக் காதலிக்கிறான் என்பதைச் சரியாக தெரிந்து வைத்திருப்பது கடினம்தான் – ஈடுபடுகிறான்.
அவன் உடன்பிறந்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல, அவனை அனாதை என்று சொல்லி எங்கேயேனும் விட்டு விடலாமா என எரிச்சலின் உச்சத்தில் பேசிக் கொள்கிறார்கள். அன்றாட செயல்களில் ஏதேனும் தடங்கல் என்றால் வீட்டில் வில்லியம் எங்கே என்றுதான் தேடுகிறார்கள், பெரும்பாலான நேரங்களில் அது சரியும்கூட. அது மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான பெரியவர்களும் (சிறார்கள் அல்ல) அவனையும் அவனுடைய ‘அவுட்லா’ குழுவையும் கண்டு அஞ்சி சற்று விலகி இருக்கவே விரும்புகிறார்கள். கிராமத்தின் கிருத்துவ மத போதகர் (vicar) நடத்தும் ஞாயிற்றுக் கிழமை சர்ச் வகுப்பிற்கு வில்லியமின் வருகையைப் பற்றி நினைத்தால் வகுப்பையே நிறுத்திவிடலாம் என்று நினைக்குமளவிற்கு நொந்திருக்கிறார் அவர். சாந்த சொரூபிகளையும் ரத்த வெறி பிடித்தவர்களாக மாற்றுவது வில்லியமால் சாத்தியமே.
புடம் போட்ட தங்கமாக, அனைவரும் விரும்புகிறவனாக, எப்போதும் வெற்றியை மட்டுமே ருசிப்பவனாக இல்லாததாலும், மிக முக்கியமாக, அவனால் உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் அப்பாவித்தனமான நல்லெண்ணத்தின் விளைவாக மட்டும் (பெரும்பாலும்) ஏற்படுகின்றன, -பாதிக்கப்படுபவர்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க- என்பதாலும் வில்லியம் மற்ற சிறார் நாயகர்களைவிட நிஜமானவனாக தெரிகிறான். உதாரணமாக, கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் தேவாலயத்துக்கு குடும்பத்துடன் செல்லும் வில்லியம் பாதிரியார் உண்மையே பேசுவது குறித்து ஆற்றும் சொற்பொழிவால் கவரப்பட்டு இனி உண்மையை மட்டும் பேசப்போவதாக சபதமெடுக்கிறான். கிறிஸ்துமஸ் அன்று தன்னுடைய பரிசுகளைக் குறித்து
“Did you like the book and instruments that Uncle and I gave you?” said Aunt Emma brightly.
“No,” said William gloomily and truthfully. “I’m not int’rested in Church History an’ I’ve got something like those at school. Not that I’d want ’em,” he added hastily, “if I hadn’t em.”
“William!” screamed Mrs. Brown in horror.
“How can you be so ungrateful!”
“I’m not ungrateful,” explained William wearily. “I’m only being truthful…
இந்த நிகழ்வை எப்படி அணுக? நாகரீகம் என்ற ஒற்றை அளவுகோலின்படி வில்லியமின் இந்தச் செய்கை கண்டிக்கத்தக்கதுதான். அதே நேரம் பெரியவர்கள் (இதில் பாதிரி) சொல்வதில் உள்ள யதார்த்தத்தை, அதன் எல்லைகளை புரிந்து கொள்ள முடியாமல் அதை அச்சு அசல் அப்படியே பின்பற்றி, அதனால் உருவாகும் விளைவுகளைக் கண்டு தன்னை அந்தப் பெரியவர்களின் உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆயாசம் ‘wearily’ல் வெளிப்படுகிறது. எந்த பதினொரு வயது சிறுவன்தான் ஜியாமெட்ரி பாக்ஸ் மற்றும் தேவாலையங்களின் வரலாறு என்ற நூல் பரிசாக கிடைத்தால் அதை உண்மையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வான். அவனுடைய பார்வையில் இந்தப் பரிசுகளின் பெறுமதி என்னவாக இருக்கும், வில்லியம் இப்படிப் பேசுவதை வைத்து மட்டும் அவனை ஒரு துஷ்டன் என கூற முடியுமா என்ன? மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்பவனாக, தலைமைப் பண்பு குறும்பு செய்வதற்கு மட்டும்தான் மட்டும் தான் என்றாலும் – உடையவனாக, எந்தச் சிக்கலில் இருந்தும் எப்படியேனும் இறுதி கட்டத்திலாவது தப்பித்து விடலாம் என்ற நன்னம்பிக்கை கொண்டவாகவும் (optimist)- அப்படி பல சமயம் நடப்பதில்லை என்றாலும்- வில்லியம் இருக்கிறான். Lovable (little) rascal என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அவன்.
ஜிஞ்சர், ஹென்றி, டக்லஸ் என மூன்று கூட்டாளிகள் வில்லியமிற்கு, தங்களை ‘அவுட்லாஸ்’ (Outlaws) என்று -சரியாகவே-அழைத்துக் கொள்கிறார்கள். வில்லியமின் வயதில் தோன்றக்கூடிய பெண்கள் குறித்த அலட்சியம் அவனிடமும் இருப்பது போல் தோன்றினாலும் அது அத்தனை உறுதியானது அல்ல. பெண்களின் ஆராதனைப் பார்வையை உள்ளூர விரும்புகிறான், அவன் படிக்கும் கதைகளில் உள்ள சாகசக்காரர்கள், அவர்கள் மேல் மையல் கொள்ளும் பெண்கள் என்ற வழமையை அவன் நிஜத்திலும் எதிர்பார்க்கிறான் என்று கருதலாம். ராபர்ட் மற்றும் ஏதலைக் கிண்டல் செய்தாலும் அவனும் சிறார் காதலில் (crush) அவ்வப்போது விழுகிறான், அவர்கள் பெரும்பாலும் பெரியவர்களாக இருப்பதால் அவற்றின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை. அவன் முகம் கொடுத்து கனிவாகப் பேசும் அவன் வயதையொத்த ஒரே சிறுமி ஜோன் (Joan). ராபர்ட்டின் அப்போதைய உயிர்க்காதலியொருத்தியிடம் மனதைப் பறிகொடுக்கும் வில்லியம், நிதர்சனத்தை உணர்ந்து தான் பெரியவனாகி திருமணம் செய்தால் ஜோனைதான் செய்வேன் என்று சூளுரைப்பதோடு “..I like you better than any insect, Joan’ என்றும் பெருந்தன்மையோடு கூறுகிறான்.
எனிட் ப்ளைடனின் நாவல்களில் இயற்கை வர்ணனைகள், சிறார் எழுத்துக்களில் எதிர்பார்ப்பதைவிட விரிவாகவே இருக்கும், எனினும் அது விதிவிலக்கே. சிறார் எழுத்துக்களில் சம்பவங்களுக்கே பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தொடர்ந்து அதே பாத்திரங்களைப் பற்றியே நாவல்கள் வெளிவந்தாலும் புறச் சூழல் துல்லியமாக இராது. ஆனால் தான் வெளிவந்த காலகட்டத்தை, சமூகப் போக்கை பிரதிபலிக்கும் க்ராம்ப்ட்டனின் எழுத்து துல்லியமான புற உலகை, பின்புலத்தை உருவாக்குகிறது. அது குறித்து சில கேள்விகளும் எழுகின்றன. வில்லியமின் குடும்பம் நடுத்தர வர்க்கம் என்று தெரிகிறது. ஆனால் அவர்கள் வீட்டில் சமையல் செய்வதற்கு, பரிமாறுவதற்கு ஆட்கள் உள்ளனர், தோட்டக்காரர் உள்ளார், செடிகளுக்கென்று தனி தோட்ட வீடு உள்ளது. இது உண்மையில் சாத்தியமில்லாததா, அல்லது அன்றைய இங்கிலாந்தில் இயல்பான ஒன்றா என தெரியவில்லை. மிக எளிய நிலையில் இருந்து உழைப்பினால் பெரும் பணக்காரரான பாட்ஸ் (Botts) என்ற பாத்திரம் வரும் கதைகள் அனைத்திலும் அவருடைய மனைவி, கிராமத்தின் உயர்குடியுடன் தொடர்பு கொள்ள முயல்வதையும், அவர்களோ பாட்ஸ் குடும்பத்தை சற்று ஏளனமாக -அவர்கள் தரும் நன்கொடைகளுக்காக மட்டும் பொறுத்துக் கொள்ளும்- பார்ப்பதும் சுட்டப்படுகிறது. உயர்குடி பிறப்புக்கள் (nobility), நற்குடிமக்கள் (gentry), சமூக படிநிலையில் தங்களுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் முன்னேறுவதை -‘புதுப் பணக்காரன்’ என்ற ஏளன அடையாளத்தை இங்கு நாமும் சந்திக்கிறோம்- எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
போல்ஷவிக் (Bolshevik) பற்றி இந்தக் கதைகளில் காணக் கிடைக்கும் அச்சமும் குறிப்பிடத்தக்கது, ‘Reds’ என்று அழைப்படும் அவர்கள், கொலையாளிகளாக, சமூக அமைதியை சீர் குலைப்பவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவை ரஷ்ய புரட்சிக்குப் பின்னான, அது குறித்து அன்றைய இங்கிலாந்தில் இருந்த அச்சத்தின் பிரதிபலிப்பா, அல்லது க்ராம்ப்ட்டனும் அதையே முன்னிருத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதே போல் ‘heathens’, ‘savidges’ என்று மற்ற நாட்டினர் குறிப்பிடப்படுவதும் அந்த காலத்திய சமூகத்தின் பார்வையா அல்லது க்ராம்ப்ட்டனும் அப்படித்தான் மற்றவர்களை பார்த்தாரா என்றும் சந்தேகமெழுப்பலாம் (எனிட் ப்ளைடன் கதைகளில் நிறவெறி உள்ளது என்ற விமர்சனத்தையும் இங்கு நினைவு கூறலாம்).
எப்படி இருப்பினும் இத்தகைய சித்தரிப்புக்களை தங்களுக்கே தங்களுக்கான நீர்க்குமிழ் உலகங்களில் நடைபெறும் பெரும்பாலான சிறார் கதைகளில் பார்ப்பது அரிது. இவை அந்தக் காலத்திய இங்கிலாந்தின் சரியான சித்தரிப்பா என்பதை அப்போது வாழ்ந்தவர்கள், அந்தச் சூழலை நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உறுதிப்படுத்த முடியும், ஆனால் நூல்களின் புனைவுலகு என்று எல்லையைப் பொறுத்தவரை க்ராம்ப்ட்டன் உருவாக்கும் விரிவான சித்திரம், கதைகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. மேலும் கிராமத்தின் மெதுவான வாழ்க்கை, கேக், பிஸ்கட்டுடன் மதிய நேர தேநீர், காலை, மாலையில் தினமும் அதே நேரத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது, வேலை முடித்து வரும் தந்தை கதகதப்பான அடுப்பின் முன் அமர்ந்து ஆசுவாசமாக மாலை நேர பேப்பரை வாசிப்பது, இளைஞர்கள் நடத்தும் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், நற்செயல்களுக்காக பணம் திரட்ட பெரியவர்கள் நடத்தும் சந்தைகள் (fete) போன்றவை காலத்தில் உறைந்தவையாக, இன்றைக்கு பொருத்திப் பார்க்க முடியாததாக இருக்கக்கூடும். இருப்பினும் அந்த உறைந்த தன்மையே கடந்து போன காலத்தின் சாட்சியாகவும் உள்ளது.
முப்பதிற்கும் மேல் கதை தொகுதிகள் வெளிவந்துள்ள நிலையில், அதே பத்து பன்னிரெண்டு கருக்கள் (trope)- துப்பறியும் முயற்சி, திருமணம் செய்விக்க நினைப்பது, நாடகம் போடுவது, பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தனக்கான செல்வத்தைத் தேடி கடலோட வீட்டை விட்டு வெளியேறி சில மணி நேரங்களில் பல அவஸ்தையான அனுபவங்களுக்குப் பின் திரும்புவது- திரும்பத் திரும்ப வருவது சற்றே அலுப்பூட்டச் செய்யக் கூடியதுதான். ஆனால் அதையும் மீறி வாசகனை வில்லியமை தொடர்ச் செய்வது க்ராம்ப்ட்டனின் நகைச்சுவை ததும்பும் உரைநடை. (‘Crumbs’, ‘Shucks’, ‘Golly’ போன்ற இன்று அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத சொற்களும் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்).
வில்லியமின் நல்லெண்ணக் குறும்புகள் உருவாக்கும் சங்கடங்களில் உள்ள கோமாளித் (slapstick) தன்மை மட்டுமின்று நுட்பமான வார்த்தை விளையாட்டும் க்ராம்ப்ட்டன் எழுத்தில் உள்ளது. வில்லியம் பள்ளியில் படித்த- ஷேக்ஸ்பியர் குறித்த ஒரே ஒரு கட்டுரை வெளிவந்ததால் அவர் குறித்த ஆய்வாளராக தன்னை எண்ணும்- முன்னாள் மாணவர் ஒருவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தை பள்ளியில் நடத்த முன்வருகிறார். வில்லியமின் வகுப்பிற்கு வரும் அவர் பெகன் (Bacon) தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியதாக தான் நம்புவதாக ஆரம்பிக்கிறார். ‘Dick of the Bloody Hand’ என்ற அவன் நண்பர்கள் மட்டும் படித்துள்ள கையெழுத்து பிரதியாக உள்ள நாவலை அவன் எழுதி இருப்பதால் வில்லியமிற்கு தானும் எழுத்தாளன் என்ற எண்ணமுண்டு, எனவே முன்னாள் மாணவருடன் உரையாடத் துவங்குகிறான்.
“..How could the other man Ham…”
“I said Bacon”
“Well, it’s nearly the same”
….
“Well, why’s he got his name printed on all the books then?…”And if this other man Eggs..”
“I said Bacon”
Bacon, Ham, Eggs என்ற வார்த்தை விளையாட்டுடன்,- அவற்றிற்கிடையே உள்ள தொடர்புடன் – இந்த உரையாடல் முடிவதில்லை. முன்னாள் மாணவர் ஹம்லேட் (Hamlet) குறித்து பேச ஆரம்பித்து விடுகிறார்.
“I want first to tell you the story of the play of which you are all going to act a scene… There was a man called Hamlet…”
“You just said he was called Bacon”
….
“This was a different man….. This man was called Hamlet and his uncle had killed his father because he wanted to marry his mother”
“What…I’ve never heard of anyone wanting to marry their mother”
“It was Hamlet’s mother he wanted to marry”
“Oh that man that you think wrote the plays”
“No that was Bacon”
“You said it was Ham a minute ago. Whenever I say it’s Bacon you say it’s Ham, and whenever I say it’s Ham you say it’s Bacon..”
…
“There’s a beautiful girl in the play called Ophelia, and Hamlet wanted to marry her”
“You just said he wanted to marry his mother”
“I did not. I wish you’d listen. Then he went mad and this girl fell into the river, It was supposed to be an accident but probably -”
“He pushed her in” supplied William
“Who pushed her?” demanded Mr.Welbecker irritably.
“I thought you were going to say that the man Bacon pushed her in”
“Hamlet, you mean”
“I tell you what,…. let’s say Eggs for both of them. Then we shan’t get so muddled. Eggs means whichever of them it was”
“Rubbish,”
என்று முன்னாள் மாணவர் கதறுவது நியாயம்தான். ஆனால் வில்லியமின் சந்தேகங்களில்- அவற்றை உருவாக்கும் வார்த்தைகளுக்கிடையே உள்ள தொடர்புகளை பார்க்கும்போது – நியாயம் உள்ளது என்று கூற முடியும் அல்லவா? இத்துடன் வில்லியம்/ க்ராம்ப்ட்டன் நிறுத்துவதில்லை. இந்த உரையாடல் குறித்த சுருக்கத்தை
“Please, sir, he told us that he thinks that the plays of Shakespeare were really written by a man called Ham and that Shakespeare poisoned this man called Ham and stole the plays and then pretended he’d written them. And then a man called Bacon pushed a woman into a pond because he wanted to marry his mother. And there’s a man called Eggs, but I’ve forgotten what he did except that -“
என்று தலைமையாசிரியரிடம் சொல்ல
Mr.Welbecker’s complexion had assumed a greenish hue.
“That will do, Brown,” said the headmaster very quietly.
இருவரும் வேறென்ன செய்திருக்க முடியும்?
இன்று க்ராம்ப்ட்டனின் எழுத்துக்கள் முன்பைப் போல் பரவலாக வாசிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அவற்றின் இப்போதைய மதிப்பு என்ன? வில்லியமின் சேட்டைகளில் ஒன்றைப் பார்ப்போம். அவனும் அவனுடைய நண்பர்களும் ‘கை போக்ஸ்’ (Guy Fawkes) தினத்தன்று பட்டாசு வெடிக்க பெற்றோர்களால் தடை செய்யப்படுகிறார்கள். எனினும் அவர்களுக்குத் தெரியாமல், நால்வரும் பட்டாசுகளை சேகரித்து வெடிக்கத் தயாராகும்போது, அனைவரின் தந்தைகளும் இதை அறிந்து அவர்களிருக்கும் இடத்திற்கு வந்து, கடும் கோபத்துடன் பட்டாசுகளை பறிமுதல் செய்கிறார்கள். அடுத்து பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான் பாக்கி, சோகத்துடனும் பயத்துடனும் அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?
பட்டாசுகளை ஆராயும் தந்தைமார்கள் தங்கள் காலத்திய பட்டாசுகளுடன் ஒப்பிட ஆரம்பிக்கிறார்கள் -பிறகென்ன, எல்லா தலைமுறையையும் போல் தங்கள் காலத்தியதுபோல் இல்லை என்று குறை சொல்லவும் தவறவில்லை-, பின் தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது நான்கு பேரும் வெடித்துச் செய்த அமர்க்களங்களை நினைவு கூர ஆரம்பிக்கிறார்கள், இறுதியில் மகன்கள் அருகில் இருப்பதை மறந்து விட்டு தாங்களே வெடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். க்ராம்ப்ட்டன் நேரடி காட்சியாக இதை வர்ணிக்கிறார் அவ்வளவே. வாசகன் என்ன காண்கிறான்? நான்கு பெரியவர்கள் ஒரு அரை மணிநேரத்திற்காகவேனும் திரும்பவும் தங்கள் பால்யத்திற்கு சென்றுவிடுவதை. ஆம், வில்லியம் ஒரு தனி குழந்தை மட்டுமல்ல, அவன் குழந்தைமையின் பிரதிநிதி. அவன் தந்தையும் ஒரு காலத்தில் வில்லியமாக இருந்தவர்தான், வில்லியமின் மகனும் (ஒரு வேளை அவன் வளர்ந்து ஜோனை திருமணம் செய்து கொண்டால்) வில்லியம்தான், எல்லா குழந்தைகளும் ஒரு கட்டத்தில் வில்லியமாக மாறிய பின்னரே பெரியவர்களாகிறார்கள்.
எனவேதான், இந்தத் தொகுப்பில் இறுதி நூல் வெளி வந்து பதினைந்து வருடத்திற்கு மேல், எண்பதுகளின் இறுதியில், உலக வரைபடத்தில் மட்டுமே இங்கிலாந்தைப் பார்த்திருந்த சிறுவனொருவன் செங்கல்பட்டு நூலகத்தில் இருந்து எத்தேச்சையாக எடுத்த இந்த நூல்களின் மூலம் தன் பகற்கனவுகளை நிரப்பிக் கொள்ள முடிந்தது. புத்தாயிரத்தின் இரண்டாம் தசாப்தம் முடியப்போகிற இந்த காலகட்டத்தில்கூட உலகின் வேறேதோ மூலையில் இன்று வில்லியமை அறிமுகம் செய்து கொள்ளும் சிறுவன் அவனுடைய அ-சாகசங்களில் உவப்புடன் பங்கேற்பான்.
பின்குறிப்பு:
1. 39 தனி நூல்கள் கொண்ட இந்த தொடரில் ‘Just William’s Luck’ மட்டுமே நாவல், மற்ற அனைத்தும் சிறுகதை தொகுப்புக்களே. இவற்றை வரிசைக்கிரமமாக படிக்க வேண்டிய தேவையில்லை.
2. ரிச்மல் க்ராம்ப்ட்டன் பெரியவர்களுக்கான பல நாவல்களும், சிறுகதைகளும்கூட எழுதி இருக்கிறார், அவற்றையே தன்னுடைய உயரிய படைப்புக்களாகப் பார்த்தார்.