பரபரப்பான சாலையில்
அவனுக்கும் சாவுக்குமான இடைவெளி
ஒரு சாண் தூரத்தில் இருந்தது
பரபரப்பான சாலையோரத்துக் கடைகளில்
அவன் ஜீவிதத்துக்கான
பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தான்
அப்போதும் சாவுக்கும் அவனுக்குமான
இடைவெளி
ஒரு சாண் தூரத்தில்தான் இருந்தது
சாலையோரப் பூங்காக்களை
வழமை போன்று இரசித்தான்
சாலையின் இரைச்சல்களை
வழமை போன்று செவிமடுத்தான்
தன் பயணப் பைக்குள்
வழமை போன்று கனவுகளைப் பத்திரப்படுத்தினான்
ஞாபகமாகக் குழந்தைகளுக்கு
வாங்கிய பலூன்களும் மிட்டாய்களும்
பையை நிறைத்ததும்
பரபரப்பான சாலையில் பறந்தான்
அப்போதும்
அவனுக்கும் சாவுக்குமிடையிலான இடைவெளி
ஒரு சாண் தூரத்தில்தான் இருந்தது
அவன் ஜீவிதத்துக்கான பொருட்களை
பையில் சுமந்து கொண்டு பறந்தான்
அவன் சாவு கனரக வாகனமொன்றின்
சில்லுகளில் ஒட்டியிருந்தது
நொறுங்கும் கண்ணாடிச் சில்லுகளின்
ஒலியும் அவனது கடைசி குரலும்
பரபரப்பான சாலையை ஆக்கிரமித்தபோது
சாவுக்கும் அவனுக்குமிடையிலான
இடைவெளி
ஒரு சாண் தூரத்தைக் கடந்து விட்டிருந்தது