போர்-பி வகுப்பறையில் ஹீமேன் தொலைக்காட்சி தொடரின் நேற்றைய அத்தியாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனை, மேரி மார்க்கெட் மிஸ் அருகில் அழைக்கிறார். மேரி மார்க்கரெட் என்பதை மேரி மார்க்கெட் என்று அழைப்பதில்தான் பயல்களுக்கு குஷி. உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு கையை நீட்டி விரல் முட்டியில் ஸ்கேலால் அடிவாங்கிவிட்டு தன் இருக்கைக்குச் செல்ல முயல்பவனை நிறுத்தி, ‘கோ தேர் அண்ட் ஸிட்,’ என்கிறார் மார்க்கெட் மிஸ். ‘மிஸ் மிஸ்’ என்று கெஞ்சுபவன் அவர் முன்னால் மீண்டும் கையை நீட்டுகிறான். பின்னாலிலிருந்து பயல்களின் கிண்டல் சிரிப்பொலி. ‘கோ தேர்’ என்று கையை ஓங்கிக் கொண்டு மிஸ் வர தளர்ந்த நடையில் அந்த பெஞ்ச்சிற்குச் சென்று அமர்கிறான்.
மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்ச்சின் இடது முனையில் இவன், அடுத்து சந்திரா, அதற்கடுத்து ப்ரியா. வகுப்பு நடக்கையில் பேசி மாட்டிக் கொண்டால் பெண்கள் அருகில் அமர வைக்கப்படுவது அவ்வப்போது தரப்படும் தண்டனைதான். இனி அடுத்த பீரியட் முழுதும் பயல்கள் கிண்டல் செய்து படுத்தி எடுப்பார்கள். யாராவது ஒருவன் மனமிரங்கி ஆட்காட்டி விரலை வளைத்து, நடு விரலை அதனுடன் இணைத்து இவன்த் தோளை தொட்டு பழம் விடும் வரை ‘ஏய் கிட்டக்க வராத’, ‘தொடாத’ தான். மார்க்கெட் மிஸ் இன்னும் இரண்டு மூன்று முறைகூட அடித்திருக்கலாம்.
முடிந்தவரை சந்திராவிடமிருது தள்ளி இருப்பதற்காக பெஞ்ச் முனையில் அமர முயன்றாலும், இரண்டு பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய இடத்தில் இடைவெளி என்பது சாத்தியம் இல்லை. நேரே போர்ட்டை மட்டுமே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான், மிஸ் ஏதோ சொல்கிறார். அடுத்த பீரியடிற்குப் பிறகு லஞ்ச் டைம். அதற்குள் பயல்களைச் சரிகட்டி விடவேண்டும். இதவரை நுகர்திராத மணமொன்றை உணர்பவன் தலை தாழ்த்தி சந்திராவைப் பார்க்கிறான். அவள் உடலிலிருந்தோ, பள்ளிச் சீருடையிலிருந்தோதான் அந்த வாசம் வருகிறது. வீட்டில் பண்டிகை நாட்களில்போது சாமி படங்களுக்கு மாட்டப்படும் பூச்சரங்கள் அடுத்த நாள் எடுக்கப்படும்போது ஒவ்வாமையையும், கிளர்ச்சியையும் ஒரு சேரத் தரும் மணத்தை போன்ற அடர்த்தியான வாசம். ஒரே ஒரு முறை அத்தர் தெளித்துக் கொண்டபோது நுகர்ந்த மணமும் இப்படித்தான் இருந்ததோ?
மீண்டும் அவள் பக்கம் திரும்புகிறான். வகுப்பில் இருக்கும் பெரும்பாலான பயல்களைவிட உயரம், உறுதியான உடல்வாகு சந்திராவிற்கு. உடலை அசைத்துக் கொள்கிறான், மனமும் நிலையழிகிறது. இடது கால் முழுதும் பெஞ்சிற்கு வெளியே இருக்குமாறு விலகுபவன் மீண்டும் அதை உள்ளிழுத்துக் கொள்கிறான். அடுத்த தன்னிச்சையான உடலசைவில் அவனுடைய உடலின் வலது பாகம் சந்திராவின் இடது பாகத்தை தொடுகிறது. இன்னும் நெருங்கி அவனைச் சூழும் அவளின் அடர்மணம். ஸ்கர்ட்டைத் துளைத்து வரும் அவள் கால்களின் வெப்பம், ஷார்ட்ஸ் அணிந்த இவன் தொடையைச் சுடுகிறது. வலது காலை மட்டும் சற்று நகர்த்த இருவரின் தொடைப் பகுதிகள் சமநிலையில் இணைகின்றன. சந்திரா, மார்க்கெட் மிஸ் சொல்வதை நோட்டில் குறித்துக் கொண்டிருக்கிறாள். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறான். ‘போர்-ஏ’ க்ளாஸ் பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஓடுகிறார்கள். முதல் முறையாக பார்ப்பது போல் உள்ளது. பார்வையை விலக்குகிறான். அவஸ்தை. இது தவறில்லையா? ‘அவர் பாதர் இன் ஹெவன்’. மூச்சை உள்ளிழுத்து சந்திராவின் மணத்தை உடல் முழுதும் நிரப்புகிறான்.
oOo
ட்வெல்வ்-பியில் சதாசிவம் ஸார் வழக்கம் போல் கீச்சுக் குரலில் ஆங்கில பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக திரும்புவது போல் உமா அமர்ந்திருக்கும் பக்கம் பார்க்கிறான். ஜூலை மாத மதியம் மூன்றரை மணி வெயில் ஜன்னல் வழியாக பெண்கள் பகுதியை நிரப்பியிருக்கிறது. உமாவின் கன்னத்தில் வியர்வை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்குள் ‘எதேச்சையாக’ பார்ப்பதற்கான நேரம் முடிந்த உணர்வு ஏற்பட ஸார் பக்கம் திரும்புகிறான். இனி சிறிது நேரம் கழித்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் எதேச்சை. எண்ணை வழியும் முகத்திலும் உமா துலக்கமாகத்தான் இருக்கிறாள். அவளுக்குப் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும், சற்றே சதைப்பற்றான உதடுகளையுடைய மீராவிற்கு ஒருபோதும் வியர்க்காது போல.
பெண்கள் வரிசையில் கடைசி பெஞ்ச்சில் சந்திரா. இத்தனை வருடங்கள் இவனுடன்தான் படித்து வருகிறாள் என்றாலும் கண்ணில் படுவதென்பதோ இது போல் எதேச்சையாக எப்போதேனும்தான். தினமும் அட்டென்டென்ஸ் எடுக்கப்படும்போதுகூட அவள் மனதில் பதிவதில்லை. பெண்களுக்கு அருகில் அமர வைக்கப்படும் தண்டனையை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்தியாயிற்று. பயல்கள் அதற்கு அடுத்தான வகுப்புக்களில் அதை தண்டனையாக பாவிக்க மாட்டார்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்திருக்கிறார்கள். பி.டி. பீரியட்டில் ஷார்ட்ஸ் அணிந்து பங்கேற்பதும் ஐந்தாவதுடன் முடிந்தாயிற்று.
சந்திராவிற்கு அன்று இவன் அவளருகில் அமர்ந்திருந்தது நினைவில் இருக்குமா? அன்று அனுபவித்த அவஸ்தையான கிளர்ச்சியை சந்துருவுடன்கூட பகிர்ந்து கொண்டதில்லை. ஆறாவது படிக்கும் போது தான் உமாவின் இருப்பை உணர ஆரம்பித்தான், பின் மீரா, கடந்த இரு வருடங்களாக அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் சுந்தரி அக்கா பற்றி குற்றவுணர்வு ஏற்படுத்தும் எண்ணங்கள். ஆனால் அந்த அரை மணி நேரத்திற்குப் பின் ஒரு முறைகூட சந்திராவிடம் ஈர்ப்பு ஏன் ஏற்பட்டதில்லை என்பதை புரிந்து கொள்ள முயன்று, அது இயலாமல் தலையசைத்துக் கொள்கிறான்.
oOo
நிச்சயதார்த்தம் முடிந்தபின் வனிதாவுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறான். காரின் பின்னிருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருக்க, அவளுடன் ஒட்டியபடி மெல்லிய குரலில் உரையாடல். ‘நிவியா’ உபயோகிக்கிறாள். அசையும்போது அவள் உடுத்தியிருக்கும் பட்டுப் புடவையின் சரசரப்பில் உடல் கிளர்கிறது. யாரையும் முத்தமிட்டதுகூட கிடையாது, இன்னொருவரின் எச்சில் ருசி, மணம் எப்படி இருக்கும். வாட ஆரம்பித்திருக்கும், வனிதா சூடியிருக்கும், பூச்சரத்தின் மணம். வண்டி குலுங்க வனிதாவின் உடல் இவன் மீது சாய தொடைகள் ஒட்டுகின்றன. உமாவின் வியர்வை வழிந்த முகத்திலும், மீராவின் சதைப்பற்றான உதடுகளிலும், காரக் குழம்பு கிண்ணத்தை நீட்டும் சுந்தரி அக்காவிடமிருந்து வரும் பூண்டு, மசாலா பொடிகளின் மணத்திலும், இப்போது வனிதாவின் ‘நிவியா’ வாசத்திலும், தன் இருப்பை உணர்த்தியபடி இருக்கும் சந்திராவின் மணம். இதுவரையிலான பாலுணர்வுத் தருணங்களின் ஒவ்வொரு கணத்துடனும் பிணைந்திருக்கும், இனியும் பிணைந்திருக்கப்போகும், போர்-பியின் அந்தச் சில முடிவிலி நிமிடங்களை தன்னுள் நிகழ்த்திப் பார்ப்பவன், சந்திரா மீது இறுதி வரை எந்த ஈர்ப்பும் உருவாகாததின் முரண்நகையைப் புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சி எப்போதும் போல் தோல்வியடைகிறது. “என்ன சிரிக்கறீங்க?” என்று வனிதா கேட்பதற்கு பதில் சொல்லாமல் தலையசைத்துவிட்டு, கார் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி, “அப்ஸர்ட்” என்று முணுமுணுத்துக் கொள்கிறான்.