பசியின் பிள்ளைகள் – அத்தியாயம் 4, 5 தமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் 4

பையனின் குரல் ஏறக்குறைய அவளுக்கு தெரிந்த ஒரு இளைஞனை நினைவுபடுத்தியது; தவிர்க்க முடியாத புன்னகை கொண்ட ஜான் வெல்ஸ், ஒரு வங்கி அதிகாரியின் மகன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் அவளுக்கு நேர் எதிரே அமர்ந்துகொண்டு ஒரு மிருகத்தனமான தீவிரத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் காலை, அவனை அவள் வீடு வரை உடன் நடந்துவர அனுமதித்தாள்; ஏதும் பேசாமல் வியர்வையில் நனைந்த கரத்தினால் அவள் கையைப் பற்றிக் கொண்டான். வீட்டின் முன்வாயிலில் பசி கொண்ட நாய் முனகுவது போல் முனகிக் கொண்டே அவள் கைவிரல்களில் முத்தமிட்டான். தன் நெஞ்சில் அவள் கரத்தை அழுத்தியவன், மெதுவே அவள் கையை தனது கால்சட்டை பொத்தான்களின் மேல் படும்படி கீழிறக்கினான். கைவிரல்களை இறுக்கி மூடிக்கொண்டாலும் ஜூலியா நகர்ந்து செல்லாமல் நின்றிருந்தாள்.

இப்போது நோயாளிகளின் அறையிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. எனக்குத் தெரியாது, பையன் கத்தினான். முடியாது. நீயென்ன செவிடா? எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை.

வில்லியம் சமையலறைக்குள் வந்தான். இன்றிரவு உணவுக்கு இறைச்சி இருக்குமா?

கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தைப் சுட்டிக் காட்டி ஆமென்பதுபோல் தலையசைத்தாள்.

அவன் படுக்கையறைக்குள் விரைந்து சென்று அவனது பன்றித் தோல் பையைக் கொண்டு வந்தான். பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய இறைச்சித் துண்டை எடுத்து கத்தியால் பாதியாக வெட்டித் தனியாக ஒரு தட்டில் வைத்தான். பைக்குள்ளிருந்து நூல்கண்டையெடுத்து ஒரு நீள துண்டொன்று வெட்டி அதன் ஒரு முனையை தட்டிலிருந்த இறைச்சித் துண்டைச் சுற்றிக் கட்டினான். மீத நூல் காற்றடியின் வால் போல் தொங்குமாறு கட்டியிருந்தான்.

என்ன செய்கிறாய் வில்லியம்?

ஒரு பரிசோதனை. செய்யவிட பையனை சம்மதிக்கவைக்க முடிந்தால்.

அவனை துன்புறுத்திவிடாதே.

அவன் ஜூலியாவை ஒரு குழப்பமான, சிறிதே கவலை தொனிக்கும் உணர்வுடன் உற்றுப் பார்த்தான். இல்லை அன்பே. அப்படியெதுவும் ஆகாது.

சொல்லிவிட்டு தட்டுடன் இறைச்சியை எடுத்துக் கொண்டு பையனின் அறைக்கு விரைந்தான்.

பனிப்படிகங்கள் சில்லுகளாக உறைந்த சன்னல் கண்ணாடிகளின் மேல் வீசி அறைந்தன. மீத இறைச்சித் துண்டை ஜூலியா உருளைக்கிழங்குடன் எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து கொழுப்பு உருகி வெண்ணிற தட்டில் பரவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும் மூடியிருந்த நோயாளிகளின் அறைக்கதவை ஒட்டி தனது நாற்காலியைப் போட்டுக்கொண்டாள்.

அமைதி; படுக்கை விரிப்புகளின் சரசரப்பு; பிறகு பையனின் கிசுகிசுத்த குரல். வேண்டாம், டாக்டர். தயவுசெய்து நிறுத்துங்கள்.

oOo

அன்றிரவு தரைப்பலகைகளின் முனகலோசை கேட்டு விழித்துக் கொண்டாள். எழுந்து அமர்ந்தாள்; மூடியிருந்த அறைக்கதவின் கீழ் கோடாகத் தெரிந்த வெளிச்சக் கீற்றைத் தவிர படுக்கையறை இருட்டாகவிருந்தது. அருகில் வில்லியமின் தலையணை தொடப்படாமல் கிடந்தது. ஒரு குளிர் நடுக்கம் ஜூலியாவின் மேல் பரவியது.  காலணிகளை அணிந்துகொண்டு கதவைத் தள்ளித் திறந்தாள்.

மெழுகுவர்த்திச்சுடரின் ஒளியில் வில்லியம் திரும்பிப் பார்த்தான். கைகளிரண்டும் மேசையின்மேல் கண்ணுக்குத் தெரியாத யாரையோ அணைத்திருப்பதுபோல் கிடந்தன. கண்கள் பாதி மூடிக்கிடக்க, மெல்லிய புன்னகையொன்று இதழோரம் நெளிய, ஏதோவோர் இன்பநினைவில் மிதப்பவன் போலிருந்தான். அவனது குறிப்பேடு மேசையின்மேல், பேனா பக்கங்களின்மேல் கிடக்க, திறந்து கிடந்தது. அவன் திரும்பிய வேகத்தில் ஜூலியா மூச்சை உள்ளிழுத்து அடக்கிக் கொண்டாள்.

இங்கென்ன செய்கிறாய்?

ஜூலியா பலவீனமாக புன்னகைத்தாள். தூங்க முடியவில்லை. ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது – தரைப்  பலகைகள் என்று நினைக்கிறேன்.

படுக்கப் போ. பேனாவை எடுத்து எழுதத் துவங்கியபடி சொன்னான். நீ தூங்குவதற்கு ஏதாவது தருகிறேன்.

கதவை இன்னும் அகலமாகத் திறந்தபடி கேட்டாள். என்னவாயிற்று?

ஒன்றுமில்லை. தயவுசெய்து என்னை எழுத விடு.

அவனை  நோக்கி நகர்ந்தாள். அவன் உதடுகள் இறுகின. நான் அதைப் படிக்க வேண்டும்.

கண்களின் கீழ் கருவளையங்கள். கீழுதட்டின் அருகே மசிக்கறை; பெருங்கடலைத் தனியாக படகோட்டிக் கடந்தவன் போல் சோர்வாக ஆனால் ஒரு உற்சாகத்துடன் அவன் இருப்பது தெரிந்தது. தான் எங்காவது அவன் நோக்கில் தென்படுகிறோமா என ஜூலியா தேடினாள். இந்த ஒரு தடவை. தயவுசெய்து படிக்க விடு என்று எண்ணிக் கொண்டாள்.

சரி, நீ படிக்கலாம். ஆனால் பிறகு என்னை நிம்மதியாக எழுதவிட வேண்டும்.

ஜூலியா தலையசைத்தாள்.

அவன் குறிப்பேட்டை அவளை நோக்கித் திருப்பினான். ஓசையில்லா கனவென ஜூலியா அதை நோக்கி நகர்ந்தாள்.

அக்டோபர் 13, 1822

முன்கூறிய நான்கு பரிசோதனைகளும் ஒன்றையே புலப்படுத்துகின்றன: பசி என்கிற உணர்வை உணவு ஈஸோபாகுஸுக்குள் செல்லாமலே கட்டுப்படுத்த முடியும். நொதித்தல் இல்லாமலும்.

சத்துகள் தேவை போல் தோன்றினாலும்…

பசியின் அடிப்படைக் கோட்பாடு: பசி என்கிற உணர்வு இரைப்பை நாளங்கள் விரிவடைவதாலேயே ஏற்படுகிறது; இரைப்பை சுரப்புகள் மீண்டும் சுரந்தவுடன் பசி தீர்ந்து அல்லது இல்லாமல் போகிறது.

(ஏற்கனவே உள்ள மகெண்டியின் கோட்பாட்டை இது மறுதலிப்பதால் மேலும் பல சோதனைகள் அவசியமாகிறது).

தூங்க முடியவில்லை.

தூங்க முடியவில்லை…

மனிதன் என்பவன் யார், அவனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள?

நீங்கள் அவனை தேவதைகளின்கீழ் பிறப்பித்தீர்கள்; பெருமையும் மகிமையும் கொண்டு அவன் கிரீடத்தை அலங்கரித்தீர்கள்.

oOo

குதிரைவண்டி வீதியிலிருந்து பக்கச் சாலைக்கு வளைந்து திரும்பியது. மருத்துவக் கழகத்தின் அத்தனை சன்னல்களும் ஒளி கொண்டிருந்தன. வெளியே சிந்தி கட்டிடத்தின் சுவர்களிலும் தூண்களிலும் பிரதிபலித்த ஒளியில் உள்ளே சிரிப்பொலிகளுடன் உருவங்கள் அங்குமிங்கும் நடமாடுவது தெரிந்தது. ஏற்கனவே நின்றிருந்த வண்டிகளினருகே ஜூலியாவின் குதிரைவண்டி சென்று நிற்கும்போதே உள்ளே தன் மகனின் உருவம் தென்படுகிறதா என்று அவள் தேடினாள்.

“இன்று ஓர் அற்புதமான மாலையாக இருக்கப் போகிறது.” தன் கோட்டினால் கண்ணாடியின் பனிப்படர்வை துடைத்துக்கொண்டே டாக்டர் பெயர்ஸ் கூறிக்கொண்டார். “டாக்டர் ஹேவுட்-டும் டாக்டர் போஸ்டாக்கும் வந்திருப்பார்கள். நியூ ஹாவெனில் சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருக்கும் டாக்டர் கெநாட் கூட இந்த இரவின் விருந்துக்காக பிரத்தியேகமாக வந்திருக்கிறார்.”

அந்தப் பெயர்கள் ஞாபகக் கிளர்ச்சியை ஜூலியாவிற்கு ஏற்படுத்தின. டாக்டர் ஹேவுட் தெரியும். போஸ்டாக், கெநாட்? கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ பெயர்கள், எத்தனையோ டாக்டர்கள். அவள் அவர்களைப்  பற்றி வில்லியமிடம் கேட்டுக் கொண்டதில்லை. எங்கோ ஒரு கப்பலின் மணி எதிரொலிக்கிறது; மீன் வாடை மிதக்கும் குளிர்காற்று நதியிலிருந்து அவர்களைக் கடந்து வீசிச் செல்லும் அந்தத் தருணம் அவளுக்கு பாரிஸில் இதே போன்றதொரு மாலையில், பல அடுக்குகள் தொங்கும் சரவிளக்குகளும், இளஞ்சிவப்புநிற பளிங்குக்கற்கள் பாவிய அந்த பெரிய வீட்டில் அவர்கள் கூடியிருந்ததும் நினைவில் எழுந்தது. வில்லியமின் புத்தகம் ஐரோப்பாவில் வெளியானதற்காக ஒரு விருந்து. டாக்டர் கெநாட் தன் மிக ஒல்லியான உருவம் மேசையின் சாய அவளிடம் கேட்டார் – மேடம், உங்கள் குடிலில் அந்த நாட்கள் அற்புதமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருந்ததா?

பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் முக்கியமான விஷயங்களை பேச ஆரம்பிக்குமுன், ஜூலியாவை மகிழ்ச்சிப்படுத்த கேட்கப்பட்ட கேள்வியது. ஜூலியா  மரியாதையாகப் புன்னகைத்தாள்.

நிச்சயமாக. நான் கவலைப்பட்டிருக்கிறேன் – வில்லியமின் நடவடிக்கைகள் சீரற்று இருந்தன.

பேச்சு மெதுவே தேய்ந்து நின்றது. வில்லியம் அவளை வெறித்துப் பார்ப்பதாக உணர்ந்தாள். கன்னங்கள் கிழடுதட்டி சதைகழன்ற வில்லியம். எப்போதும்போல் ஒரு வைன் கோப்பை உதட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே நிற்கும் வில்லியம். அவர்கள் நீண்ட நாட்களாகவே ஒரு சமனமான இருத்தலுக்கு பழகிவிட்டிருந்தார்கள். வில்லியம் அவ்வப்போது ஜூலியாவையும் அவளது மகனையும் வந்து பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு நிழலுலக விருந்தாளிபோல். அதுவொரு விசித்திரமான ஏற்பாடு; எப்படியோ, ஒருவர் தேவையை இன்னொருவர் முழுதாக புரிந்து கொண்டது போல்தானிருந்தது என ஜூலியா எண்ணிக்கொண்டாள்.

அவள் சொன்னாள், வில்லியமிற்கு வேறெதுவும் எண்ணத்திலில்லை, அந்த ரோலுவைத் தவிர. அவர் வேறொரு மனிதனாகவே மாறிவிட்டார்.

திருவாளர் கெனாட் ஆமோதிப்பதுபோல் முணுமுணுத்துக்கொண்டார். வில்லியமின் பார்வை ஜூலியாவின் உணவுத்தட்டின் மேலும் பின் சாளரக்கதவுகளின் மேலும் விழுந்தது. அவன் தன் வைன் கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டு எழுந்து எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினான். பளிங்குத்தரையில் அவனது ஷூவின் ஒலி நடந்து தேய்வதை ஜூலியா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மேசைக்கடியில் அவளது பாதத்தை யாரோ தட்டுவதை உணர்ந்தாள். திருவாளர் கெனாட் அவளது முகத்தையே ஒரு பொறுமையான புன்னகையோடு நோக்கிக் கொண்டிருந்தார்.

அன்றிரவு அந்த விடுதியின் இருட்டு அறையின் படுக்கையில் அவள் விழித்தவாறே கிடந்தாள். நா மதுவின் சுவையாலும் கண்கள் உறக்கமின்மையாலும் கனக்க, மூடிய சன்னல் கண்ணாடிகளின்மேல் பூச்சிகள் ரீங்காரமிட்டபடி வந்து வந்து மோதித் தெறிப்பதைப் பார்த்தபடியே கிடந்தாள். வில்லியம் புரண்டு அவள் பக்கம் திரும்பியபடி அவள் கரத்தைப் பற்றியபடி சொன்னான், நடந்த எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு ஜூலியா. எல்லாவற்றுக்காகவும்.

அவள் அரைத்தூக்கத்தில் ஏதோ முனகினாள்.

தயவுசெய்து அன்பே. அவன் அவள் மணிக்கட்டைப்பற்றி மீண்டும் உலுக்கினான். ஜூலியா?

அவன் குரலின் சலனத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவள் நினைவுகூர்ந்தாள். அவன்மேல் அவளுக்கு வருத்தங்களேதும் இல்லை என அடிக்கடி தானே கூறிக்கொள்வாள். ஆனால் ஏன் அவள் தன் கண்களைத் திறக்கவில்லை? ஏன் அவன் அவளது விரல்நுனிகளில் முத்தமிட அனுமதிக்கவில்லை? ஏன் அவனது தலையை தன் மார்பில் புதைக்க விடவில்லை? அவளுக்குள்ளே எரிந்த கடும் உணர்ச்சித் தீயை அவளால் நினைவுகூர முடிந்தது . அருகே வில்லியம் மூச்சிரைப்பதையும் ஆனால் தன் சுவாசம் தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதை உணர்ந்தாள்.

“உங்களுக்கு பிரச்னையில்லையென்றால் என்னை அறிமுகப்படுத்தி வைப்பீர்கள் என்று நம்புகிறேன்”, டாக்டர் பெயர்ஸ் கோச் வண்டியின் கதவின்மேல் கைகளைவைத்தவாறே கேட்டார்.

“யாருக்கு?”

“டாக்டர் கெனாட். அவரை அறிமுகப்படுத்திக்கொண்டால் பெருமைப்படுவேன்.”

ஐயோ பாவமே என்று எண்ணிக்கொண்டாள் ஜூலியா. “அதெற்கென்ன, கட்டாயம்,” என்றபடியே மழையீரம் பாவிக் கிடந்த தரையில் கால்களை பதித்து இறங்கினாள். உயர்ந்த வளைவான வாசலுக்கு வழிவிட்டுத் திறந்த கதவுகள்; மாபெரும் ஓக் மர கடிகாரம்; அவளது மேலங்கியை பணிவாக அகற்றி வாங்கும், அலங்காரமாக உடையணிந்த கறுப்பின சேவகன். கொடுமை, என எண்ணிக்கொண்டாள் ஜூலியா, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒரு பதைபதைப்பு; வயிற்றில் அவிழ மறுக்கும் முடிச்சு.

“கழகம் இன்றிரவு அந்த நாடோடி ரோலுவை மோண்ட்ரீயலிலிருந்து இந்த விருந்தில் கலந்து கொள்ள வரவழைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? இன்னும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம். அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், தெரியும்.”

“முதலில் வரமுடியாதென்று சொன்னாராம்.” பொருமினார் டாக்டர் பெயர்ஸ்.  “கழகம் வழங்குவதாகச் சொன்ன  வருகைத்தொகையைப் போல இரண்டு மடங்கு கேட்டாராம்.”

குமிழ்போல் வெடித்த சிரிப்பு ஜூலியாவை லேசாக்கிற்று. நல்லதுதானே, என்று எண்ணிக்கொண்டாள். அவ்வளவு தூரம் அறுத்தும், உட்புறம் நோக்கியும் நடந்த சோதனைகளுக்கு உடன்பட்டதற்கு இன்னும் அதிகமாகவே கேட்டிருக்க வேண்டும். அப்போதே. அவன் எதைக்  கேட்டாலும் வில்லியம் கொடுத்திருப்பான்.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது முழங்கையை டாக்டர் பெயர்ஸ் பற்றிக்கொள்ளவிட்டு ஜூலியா ஒளிவெள்ளத்தில் மூழ்கிய அந்த அறைக்குள் நுழைந்தாள்.

oOo

அத்தியாயம் 5

நவம்பரில் அவர்களது குடிலை ஒரு கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. பாத்திரங்களை தடதடவென்று நகர்த்தியும் அலமாரியை அறைந்து சார்த்தியும் ஜூலியா ஏதோவொரு துணை இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கண்டாள். மதிய உணவுகளுக்குப் பிறகு கம்பிளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கல்போல் உறைந்து கிடந்த பனியில் நதிக்கரையோரம் வரை நடப்பதும், தொலைவில் கரிய உருவங்கள் படைவீட்டை நோக்கி நகர்வதை பார்ப்பதும், நகரும் உருவம் வில்லியமா, ஏதோவொரு சிப்பாயா அல்லது அந்தப் பையனா என்று கணிப்பதுமாக நாட்கள் நகர்ந்தன.

அந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று பையன் வீட்டை விட்டு காணாமல் போனான். ஜூலியாவும் வில்லியமும் ராணுவ மேஜரின் வீட்டில் இரவு விருந்து அருந்திவிட்டு திரும்பினார்கள். பையனின் அறை காலியாகக் கிடந்தது; அவனது தொப்பியைக் காணவில்லை; தரையில் ஒரு தேநீர்க் கோப்பை உடைபட்டுக் கிடந்தது. அவனது கலப்பின நண்பர்களுடன் குடிக்கப் போயிருப்பான் என்று எண்ணிக் கொண்டு ஜூலியா அவனது படுக்கை விரிப்பை சரிசெய்து விட்டு  உடைந்த கோப்பைத் துண்டுகளை பனியில் கூட்டித் தள்ளினாள்.

மறுநாள் காலை விழிக்கும் போது வில்லியம் அவனது மேசையில் கைகளை மடிமீது வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கக் கண்டாள். அந்தக் குடிலின் அமைதி முழுதும் அவனது திறந்து கிடந்த குறிப்பேட்டிலிருந்து எழுவது போல் தோன்றியது.

அவன் இன்னும் வரவில்லை?

வில்லியம் எதுவும் பேசாமல் உறுமினான்.

அவனது அறைக்குள் பார்த்துக் கொண்டே கேட்டாள், இந்த ஊரிலிருப்பான் என்று நினைக்கிறாயா?

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான், இருக்கலாம், இல்லை பனிப்படகு ஒன்றை பிடித்து பிக்போர்ட் போயிருக்கலாம்.

அவன் பிக்போர்டில் இருக்கிறான், ஒரு ஆசுவாசத்துடன் ஜூலியா நினைத்துக் கொண்டாள். தனது கைகளை வில்லியமின் தோள்களில் வைத்தவாறு சொன்னாள், விரைவில் வந்துவிடுவான். அல்லது, உனது சோதனைகளை நடத்தி முடிக்க வேறு வழியேதாவது உனக்கு கிடைக்கும்.

முட்டாள் மலட்டுப் பெண்ணே. வேறு வழியேதும் கிடையாது.

அவள் தனது கைகளை அவன் தோள்களிலிருந்து விலக்கிக் கொண்டாள்.

எப்படி என் சோதனைகளை நான் முடிப்பேன்? இன்னொரு நாடோடியை பிடித்து வயிற்றில் சுடவா?

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

இல்லை, என் மீதே சோதித்துப் பார்க்கவா?

வேண்டாம் அன்பே, என்னால்…

வில்லியம் குறிப்பேட்டை அறைந்து மூடிவிட்டு, தனது கோட்டை எடுத்துக்கொண்டு உறைபனிக்குள் வெளியேறினான்.

நாட்கள் இருளுக்குள் மூழ்கி நகர்ந்தன. கிடைக்கும் சொற்ப ஒளியும் ஜூலியாவின் காலைச் சோம்பல் கலைவதற்குள்  கடந்து போனது. துவைக்காத துணிகள்  அறையின் மூலையில் குவிந்து கிடக்க, மேப்பிள் மரத்துண்டுகள்  சடசடத்து எரிவதை வேடிக்கை பார்த்தவாறு கணப்பினருகே சுருண்டபடி நாட்கள் கடந்தன. வெப்பம் இல்லாத நெருப்பு. வில்லியமின் மைக்கூடு உறைந்திருக்கக் காண்பதோடு ஒவ்வொரு நாளும் விடிந்தது.

அந்த வெள்ளிக்கிழமை சூசனுக்கு அவள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, குடிலின் பின்புறக்கதவு அறைந்து சார்த்தும் சத்தம் கேட்டது. அவள் கைகள் ஒரு கணம் ஸ்தம்பித்தன. அவள் எழுதினாள், அவன் திரும்ப வந்துவிட்டான்.  மெதுவே அவனது அறைக்கதவைத் திறந்து பார்த்தாள்: சுவரில் சாய்ந்தபடி பையன் தரையில் அமர்ந்திருந்தான். தலை முன்கவிழ்ந்திருக்க, அவன் கால்களுக்கிடையே கலங்கின மஞ்சள் நிறத்திரவம் கோடாக வழிந்து கிடந்தது.

தலையை உயர்த்தி அவளை பார்த்தான். சிரித்தபடி எழுந்து அவளை நோக்கி நடக்க முயற்சித்து, தடுமாறி ஒரு காலில் முழந்தாளிட்டு விழுந்தான். வலியில் முனகியபடி சட்டையை நெஞ்சும்வரைக்கும் மேலிழுத்துவிட்டுக்கொண்டு தரையில் புரண்டான்.

காயம் வாய்பிளந்து தெரிந்தது. சிவந்த அதன் ஓரங்கள் இன்னும் கூடாமல், உள்ளிருந்து அந்தத் திரவம் அவன் நெஞ்சின் மேலாக மரப்பலகை மேல் வழிந்தது. பையன் ஒரு கையை காயத்தின்மேல் வைத்து வெளிவந்த திரவம் உட்செல்ல செய்வதைப்போல அழுத்திப்பிடித்துக் கொண்டான். இன்னொரு கையால் தரையில் வழிந்துகிடந்த திரவத்தில் கிடந்த உருளைக்கிழங்கு துண்டொன்றை எடுத்து வலியில் விகாரமாக சிரித்தபடி வாய்க்குள் போட்டுக் கொண்டான். படுக்கையினருகே இருந்த மணியை எடுத்து அவளை பார்த்தபடியே அடித்தான்.

அசையாதே. தயவுசெய்து அப்படியே இரு. நான் உதவி செய்கிறேன், என்றாள்.

அவன் கஷ்டப்பட்டு தனது தோள்களை படுக்கையின்மேல் இழுத்துக் கொள்ள, அவள் அவனது கால்களை தூக்கி மேலே படுக்க வைத்தாள். தலைமுடி சேறும் சகதியுமாக, சிறு மணற்துகள்களோடு சிக்குப் பிடித்துக் கிடந்தது. மதுவும், பைப் புகையும், வாந்தியும் கலந்த நாற்றம் வீசியது.

உனக்கொரு குவளை தேநீர் கொண்டு வருகிறேன்.

வேண்டாம், இரு ஜூலியா. அவள் பெயரை மூன்று தனித்தனியான அசைகளாக உச்சரித்தான்.

நீ நகரக் கூடாது. நான் என் கணவனை வரச்சொல்கிறேன்.

அவர் என்னை கொல்லப் பார்க்கிறார்.

அவன் இதை சொல்லிவிட்டு சிரிப்பான் என்று நினைத்தாள். ஆனால், அவன் தீர்க்கமாக சொல்வது போலிருந்தது. உளறாதே, அவர் உன்னை காப்பாற்றியிருக்கிறார், என்றாள்.

அவன் சிரமப்பட்டு ஒருபுறம் ஒருக்களித்தபடி சொன்னான், இல்லை ஜூலியா அவர் என்னை மோசமாக நடத்துகிறார். பட்டினி போடுகிறார். எதையெதையோ என் வயிற்றுக்குள் திணிக்கிறார்.

அவன் கண்களின் ஓரம் சிவந்திருந்தது. அழப்போகிறான் என்று நினைத்தாள்; மறுகணம் கைகொட்டி சிரித்தான். தயவு செய் ஜூலியா. நீதான் என் தாய்.  உண்மையில் நீதான் என்னைக்  காப்பாற்றினாய்.

நீ குடித்திருக்கிறாய். அவமானம்.

சிரித்தான்.

வில்லியம் உன்னை கஷ்டப்படுத்துகிறார் என்றால் ஏன் திரும்ப வந்தாய்?

அவன் சிரிப்பு நின்றது. வெற்றுப்பார்வையுடன் அவளை வெறித்துப்பார்த்தபடி அவளது தொடையில் தனது குளிர்ந்த கையை வைத்தான்.

நான் போய் தேநீர் கொண்டு வருகிறேன்.

தயவு செய்து ஜூலியா, அவன் கிசுகிசுத்தான்.

அவள் கால்களை நகர்த்திக் கொண்டாள். குளிரூசிகள் செருகியதுபோல் தொடை கூசியது.

அவன் படுக்கையில் அப்படியே சரிந்தான். எனக்கு எதுவும் கொண்டு வராதே. நான் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன்.

அவள் தேநீர் கொண்டுவந்தபோது அவன் தூங்கிவிட்டிருந்தான். வில்லியம் மருத்துவமனையிலிருந்து பனியில் நனைந்தபடி வந்து, காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை கணப்பினருகே நீட்டியபடி அமர்ந்திருக்கையில் ஜூலியா சென்று சொன்னாள், பையன் வந்துவிட்டான்.

அவளை உற்றுப் பார்த்தவன் பையனின் அறைக்கதவை பார்த்தபடி கேட்டான், இப்போது உள்ளேயா இருக்கிறான்?

தூங்குகிறான். வரும்போது குடித்திருந்தான்.

வில்லியம் கதவை மிக மெதுவாகத் திறந்து உள்ளே பார்த்துவிட்டு மீண்டும் மூடியவாறு சன்னமான குரலில் கேட்டான், என்ன சொன்னான்? எங்கிருந்தானாம்?

தெரியவில்லை. வந்தவுடன் தூங்கிவிட்டான்.

வில்லியம் அவளை நோக்கி நகர்ந்தவன், சட்டென்று ஒரு அரைவட்டமாகத் திரும்பினான். முஷ்டி இறுகியிருந்தது . கடவுளே, நன்றி. மிக்க நன்றி கடவுளே. ஜூலியாவை இறுக அணைத்தான். மோவாய், மூக்கு, கன்னங்கள் என மாறி மாறி முத்தமிட்டான். அன்பே, இறைவனுக்கு நன்றி சொல். சத்தமில்லாமல் சிரித்தான். ஆயிரம் முறை நன்றி என் தேவனுக்கு.

வில்லியமின் முழு உடலும் நடுங்கியது. ஜூலியா அவனை அணைக்கும்போது அவளையறியாமல் ஒரு விம்மல் எழுந்தது. அவளால் அவனை மகிழ்ச்சியில் நடுங்கவைக்க முடிந்ததில்லை; இறைவனுக்கு நன்றி கூற வைக்க இயன்றதில்லை; ஆனந்தத்தில் கூத்தாட செய்ய முடிந்ததில்லை. அவன் கழுத்து திடீரென்று வியர்த்திருந்தது.

அவள் மெதுவாக, அவன் என்னைத் தொட்டான், என்றாள்.

வில்லியமின் கண்கள் மூடியிருந்தன. என்ன சொல்கிறாய்? எப்போது?

இங்கே. அவள் அவனது கையைப் பற்றி அவள் தொடை மேல் வைத்தாள். அவன் இங்கே தனது கையை வைத்தான். இப்படி.

வில்லியம் கண்களைத் திறந்தான். அவன் உன் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருப்பான்.

ஜூலியா தலையை அசைத்தாள். இல்லை, நான் நகர்ந்து விட்டேன். நீ சீக்கிரம் வந்து விடுவாய் என்று சொன்னேன். அதற்கு அவள் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன் என்றான். நான் அவனுக்கு தேநீர் –

இரு இரு. ஏன் அவன் போய்விடுவேன் என்று சொன்னான்?

ஜூலியா அவனை கூர்ந்து பார்த்தாள். நான் என் காலை விலக்கிக் கொண்டதும்…

வில்லியமின் முகம் சோர்ந்தது. ஒன்றும் பேசாமல் மேசையைச் சுற்றி இரண்டு முறை நடந்தான்.  தனக்குள் ஏதோ பேசிக்கொண்டான். நெருப்பின் முன் வந்து அமர்ந்து கொண்டான். மெதுவாக சிரித்துக்கொண்டான். ஜூலியா, அன்பே ஜூலியா. அந்தப் பையன் ஒரு அற்புதம். மேலே பேசமுடியாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஜூலியா அவன் அழுகிறான் என்று புரிந்துகொண்டாள். அவனை இங்கே வைத்திருக்க வேண்டும் ஜூலியா. இன்னும் ஒருசில மாதங்களாவது அவன் இங்கே இருந்தாக வேண்டும். புரிகிறதா? இருந்தே ஆக வேண்டும்.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அவன் ஒருகணம் அமைதியாக இருந்தான். பின் ஒரு குற்றப் பிரார்த்தனை போல அவள் பெயரை மெதுவாக உச்சரித்தான்.

அவளுக்குள் ஒரு குளிர் பரவியது. உதடுகளும் விரல்களும் பனிக்கட்டியில் செதுக்கியது போல் குளிர்ந்தன.  மேசைக்குமேல் சாய்ந்த தலையுடன் நின்றிருக்கும் அந்த நீலக்குருவி, அந்த மரச்செதுக்கு – அவற்றின் பெயர்கள் அவள் நினைவுக்கு வர மறுத்தன. கீழே மண்டியிட்டிருக்கும் அவள் கணவனுக்கு மேல் குனிந்து நின்றிருக்கும் அவள் உருவம் கண்ணாடியில் தெரிந்தது. வெளியே, இருளும், காற்றும் சூழ்ந்த கானகம்; கொடுங்குளிரில் நனைந்த இரவு. அவள் தனக்குள்ளே வினவிக் கொண்டாள், பறவைகள் ஏன் வலசை போகின்றன? ஏனென்றால் அவற்றுக்கு வெப்பம் வேண்டும். ஏன் மரங்கள் உயரே வளர்கின்றன? ஏனென்றால் அவை சூரியனை விரும்புகின்றன.

வில்லியம் வேண்டினான். தயவு செய்து ஜூலியா.

அவனது ஈர கேசத்தை நீவிக் கொடுத்தாள். பையனின் இருப்பு அந்த அறைக்குள்ளிருந்து ஒரு தொலைதூர நெருப்பு போல அந்தக் குடில்முழுதும் பரவுவதுபோல் இருந்தது. அவளது குளிர்ச்சிக்குள்ளும் ஒரு சுடரின் தகிப்பை ஜூலியா உணர்ந்தாள்.

இன்றிரவு அவனிடம் நான் பேசுகிறேன் என்றாள்.

oOo

கழகத்தின் கூட்ட அரங்கு அவள் உள்ளே நுழையும்போது நெரிசலாகவும் மெல்லிய பேச்சொலிகளால் நிரம்பியதாகவும் இருந்தது. டாக்டர் ஹேவூட், அவர் மனைவி, டாக்டர் செகி, டாக்டர் மோஞ்சஸ் அவள் கண்ணில் பட்டனர். பின்னர் அவள் மகன், ஜேக்கப் அவள் கண்களில் பட்டான். ஆரஞ்சு நிற தலைமுடி மழையீரத்தில் படிந்திருக்க, வயலின் வாத்தியங்களருகே நின்றிருந்தான். ஜூலியாவைப் பார்த்ததும் ஒரு விரிந்த புன்னகையுடன் கையைத் தூக்கி ஆட்டினான். இப்போது அவன் அந்த அறையைக் கடந்து, புன்னகை மாறாமல் அவளருகே வந்து நின்று அவள் முகத்தில் ஏதேனும் கவலை தென்படுகிறதா என்று உற்றுப் பார்ப்பான். கையிலிருக்கும் ஷாம்பெய்ன் கோப்பையை அவளிடம் நீட்டுவான். அவள் மறுக்கும்போது, ஓரிரு மிடறு குடிப்பான் – அது அருமையான சுவை என்பதைக் காட்டுவது போல, ஊக்கம் தேவைப்படும் ஒரு குழந்தைக்கு செய்து காட்டுவது போல. இந்த எண்ணமே ஜூலியாவிற்கு நிறைவைத் தந்தது.

அவள் மெதுவாக அறையைச் சுற்றி நோட்டமிட்டாள். இப்போது ரோலு, அந்தப் பையன் எப்படி இருப்பான் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.  மிகப் பலகாலங்களுக்கு அவனை வெளுத்த, சிக்கு விழுந்த தலைமுடியுடன், காய்த்துப்போன விரல்களுடன், எப்போதும் புன்னகைக்கும் ஒரு நாடோடி பையனைத்தான் மனதில் நிலைநிறுத்தி வைத்திருந்தாள். இப்போது அவன் சிறுவனல்ல; எப்படி அவள் இளம்பெண்ணல்லவோ அதுபோல். அவனைப் பார்க்கும்போது என்ன சொல்வேன், அவள் சிந்தித்தாள். அவன் இன்னும் படகோட்டும் பாடல்கள் பாடுகிறானா என்று கேட்க வேண்டும். யாரை மணந்துகொண்டான் என்று கேட்க வேண்டும். அவன் மனைவியை நேசிக்கிறானா என்று கேட்கவேண்டும்; எப்போதும் அவளை நேசித்திருக்கிறானா என்று கேட்கவேண்டும். அவன் பிள்ளைகள் அவன் வருகைக்காக அவன் வீட்டில் காத்திருக்கிறார்களா என்று கேட்கவேண்டும். அல்லது அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களது மனம்போனபடி தத்தம் வழியைத்தேடி சென்றுவிட்டார்களா என்று கேட்கவேண்டும். அவளுக்கு நேர்ந்ததெல்லாம், அவள் வாழ்வின் கசப்புகள், இன்பங்கள், துன்பங்கள், நம்பிக்கைகள் – எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்பதை அவனிடம் சொல்ல வேண்டும். ஆனால் இதையெல்லாம் எப்படி விளக்குவாள்? அவனது காயம் ஆறிவிட்டதா என்றும் கேட்கவேண்டும்.

நன்றி சொல்ல வேண்டும், என்று இறுதியாக எண்ணினாள். அந்த குளிர்மாதங்களில் அவனது வெம்மைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அரங்கின் கூட்டம் விலகி வழிவிட்டது. சன்னலருகே செந்நிறமுடியுடன் குறுகிய சிறிய உருவத்துடன் அந்த மனிதனை அவள் கண்டாள். ஒரு நடுக்கம் உடலெங்கும் படர அவரை நோக்கி நகர்ந்தாள். அவள் அவரிடம் என்ன சொல்வாள் என்று நிச்சயமாக அவளுக்கு இப்போது தெரிந்திருந்தது, ஏற்கனவே பதிந்துவிட்ட நினைவைப் போல: வணக்கம் சொல்வாள், குனிந்து சுருக்கம்படர்ந்த அந்த மோவாயில் ஒரு முத்தம் பதிப்பாள். பின் அவரை ஜேக்கப்பிற்கு அறிமுகப்படுத்துவாள் , ஏதோ அவர்களிருவரும் அந்நியர்கள் என.

“திரு ரோலு அவர்களே,” அவள் சொல்வாள், “இதோ என் மகன்.”

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.