உஷாதீபன்
இடது தோளை அவர் அசைக்கவேயில்லை. இருக்கையின் பிடியில் இடது கையைப் பதித்திருந்தார். அத்தனை ஆசுவாசமாகவும், அழுத்தமாகவும் தலை சாய்ந்திருந்தான் அந்த ஆள். மெலிந்த சரீரம். அவனது மொத்த எடையையும் அவரே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். சட்டை பட்டன்கள் அவிழ்ந்து அந்த மங்கிய இருட்டிலும் வியர்வை சொரிவது தெரிந்தது. இடது தோளிலிருந்து முழங்கை வரை சற்று மரத்துப் போனது போல்தான் இருந்தது. மணிக்கட்டோடு கையை மட்டும் அசைக்க முடிந்தது. அவன் லேசாக எழும்பினால் இடது சுவர்ப்பக்கமா சாய்ஞ்சுக்குங்க என்று சொல்லலாம் என எண்ணினார். அதற்காக விரல்களைத் தாளம் போடுவது போல் கைப்பிடியில் மெல்ல சத்தமெழுப்பினார். எந்தச் சலனமுமில்லை.
படம் ஓடும் சப்தத்தில் இது எங்கே காதில் விழப் போகிறது அவனுக்கு. வந்தது முதலே தூங்க ஆரம்பித்துவிட்டான். தூங்கிக் கொண்டேதான் வந்தான் என்றும் சொல்லலாம். நியூஸ் ரீலுக்கு முன்பு போட்ட விளம்பரம் கூட அவன் பார்க்கவில்லை. தூங்குவதற்காகவே தியேட்டருக்கு வந்திருப்பானோ என்று தோன்றியது. காசு கொடுத்துத் தூங்குகிறான். வரிசைக் கடைசி, சுவர் ஓர இருக்கையில் அமர்ந்தால் ஏ.சி. சரியாக வராதோ என்ற சந்தேகத்தில் அதற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார் பூவராகன். ஏ.சி. ஓடுகிறதா என்று சந்தேகமாய் இருந்தது. குளிர்ச்சியே இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்துத் தெரியலாம். தோளை லேசாகக் குலுக்கினார். அவன் உறக்கம் கலைந்து அதற்கு வேறு சண்டைக்கு வந்தால்? என்று தோன்றியது. இன்னொரு முறை குலுக்கிப் பார்த்தார். பலனில்லை. இருக்கும் இருப்பைப் பார்த்தால் படம் முடியும் வரை அவன் விழிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றியது.
தேடி வந்ததுபோல், அல்லது குறி வைத்து நுழைந்ததுபோல், அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கை என்பதாய் எண்ணி வருவதுபோல் அவன் அந்த வரிசையில் நுழைந்தான். பத்துப் பேரைக் கடந்து வந்து அமர வேண்டும். தனி ஆட்களாகவும், மனைவி மக்களோடும் அமர்ந்திருந்தார்கள். அத்தனை இருக்கைகளிலும் ஆட்கள் இருக்க, இடித்தும், பிடித்தும், தடுமாறியும் ஏதோவோர் வேகத்தை உணர்ந்தவனாய் நுழைந்தான் அவன். யார் காலையோ மிதித்து விட்டான் போல அவன் கடந்ததும், அவர் அவனை நோக்கி கையை நீட்டியும் நீட்டாமலும் என்னவோ சொல்லித் திட்டினார். தடுமாறி ஒருவர் தொடையில் கையை வைத்துத் தாங்கிக் கொண்டான். காதில் விழக் கூடாது, சண்டை வேண்டாம் என்பது போல் திட்டியவர், முனகினார் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் எதையும் பொருட்படுத்தியவனாய் இல்லை. வந்து சேர்ந்த விதமும், பொத்தென்று இருக்கையில் விழுந்த விதமும் ஒரே இணைப்பாக இருந்த அந்த மொத்த வரிசையையும் ஒரு குலுக்குக் குலுக்கிற்று. பலரது தலையும் முன்னெழும்பி அவனை அந்த அரையிருட்டில் பார்த்தது. சுத்தக் காட்டானா இருப்பான் போல்ருக்கு!- ஒருவர் சத்தமாகவே சொன்னார். அதுவும் அவன் காதில் விழவில்லை. முழு நினைவில் இருந்தால்தானே! இப்போது அவன் உலகம் வேறு!
லேசாக சுவற்றைப் பார்த்து எச்சில் உமிழ்ந்து கொண்டதுபோல் இருந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டார் இவர். முட்டக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.. புளிச்ச வாடை அவனிடமிருந்து வீசியது. படம் முடிந்து போகும் வரை இந்த அவஸ்தை உண்டு என்று அந்தக் கணமே தோன்றியது இவருக்கு. கர்சீப்பை எடுத்து வாயையும் மூக்கையும் அழுந்தப் பொத்திக் கொண்டார். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல!-நினைத்துக் கொண்டார். கண்கள் சொக்கிக் கிறங்கியது அவனுக்கு. விளம்பரம் முடிந்து நியூஸ் ரீல் ஓட ஆரம்பித்திருந்தது. எதுவும் பார்க்கவில்லை அவன். நமக்குன்னு இடம் அமையுதே என்று நினைத்துக் கொண்டார். வேறு எங்கும் இடம் இல்லாதது கண்டே அந்த இடத்தைப் பிடித்தார். எண்ணிட்ட இருக்கைகள் இல்லை. இஷ்டம்போல் அமர்ந்து கொள்வதுதான். முதலில் வருபவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தாமதமாய் வந்தால் அப்படித்தான்! அதுக்காக இப்படியா அமையணும்? காசு கொடுத்து சங்கடத்தை விலைக்கு வாங்குவது இதுதான்!
எப்போதுமே வரிசை நுனியில்தான் அமர்வார். அப்போதுதான் சட்டென்று எழுந்து விருட்டென்று எல்லோருக்கும் முன்பு வெளியேற முடியும். அவரது தேர்வு வரிசை நுனி இருக்கைகள்தான். பாத்ரூம் போய் வருவதற்கும் அதுதான் வசதி அவரைப் பொறுத்தவரை. இன்று அப்படி அமையவில்லை. அத்தோடு கிளம்பும்போதே மிகவும் தாமதமாகி விட்டது. போவமா இருந்திருவமா என்று நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்து விட்டார். டூ வீலரில் வருகையிலேயே மனதுக்குள் ஏகத் தடுமாற்றம். பாதியில் வண்டியை வளைத்து வீடு திரும்பி, மீண்டும் தியேட்டருக்கு விட்டு ஏகக் குழப்பம்.
இத்தனைக்கும் மிருணாளினியிடம் சொல்லவில்லை. வெளில போய்ட்டு வர்றேன் என்றுதான் கிளம்பினார். அவளும் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை. எப்பொழுதுமே கேட்கமாட்டாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அருகே சம்மந்தபுரம் பார்க்குக்குப் போகப்போகிறார். போய் நண்பர்களிடம் அளவளாவிவிட்டு வருவார். வெளியே வரும்போது வழக்கம்போல் ஒரு தேங்காய் போளி, ஒரு பருப்பு போளி சாப்பிடுவார். அத்தனை நேரம் வயதொத்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு, பிறகு தான் மட்டும் வந்து அந்த போளியைப் பதம் பார்ப்பது என்பதில் அவருக்கு ஒன்றும் சங்கடம் இருந்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ருசியில் இருந்தார்கள். சிலர் சுண்டல் வாங்கி உண்டார்கள். இன்னும் சிலர் சூடாக வேப்பெண்ணெய் மணக்க வறுத்த கடலைப் பருப்பை வாங்கிக் கொரித்தார்கள். அவரவர் டேஸ்ட் அவரவருக்கு. கூடி உட்கார்ந்து மணிக்கணக்காய்ப் பேசுபவர்கள், தின்பதில் பிரிந்து போவார்கள். இவருக்கு சின்ன வயது முதலே போளி என்றால் பிரியம். அம்மா கையால் செய்த போளியின் ருசி மறக்காது இன்னும் அவர் நாக்கில் தவழ்கிறது. ஏங்கித் திரிந்த காலம். அது பணக்காரர்கள் பண்டம் என்ற நினைப்பிருந்தது மனதில்
அவர்களுக்காக அவள் செய்ததில்லை. அதற்கான வசதியும் இருந்ததில்லை. ஏதாவது விசேடம் நடக்கும் வீட்டில் அழைத்திருப்பார்கள். முறுக்கு சுற்ற, பலகாரம் செய்ய என்று. அம்மா போய் வரும்போது நாலு கட்டித் தருவார்கள். மூன்று சகோதரர்கள், சகோதரிகள் மத்தியில் அதற்கு அடிபிடி. ஆளுக்கொன்றாவது வேண்டாமா, இன்னும் ரெண்டு சேர்த்துத் தாருங்கள் என்று அம்மா கேட்க மாட்டாள். கொடுத்ததை வாங்கி வருவாள். கொடுக்காவிட்டாலும் வந்து விடுவாள். கேட்கமாட்டாள். முறுக்கு சுத்தப் போனியேம்மா ஒண்ணும் கொண்டு வரல்லியா? என்று கேட்டு அழுதால், அடிதான் விழும். அவா கொடுத்தாத்தான் இல்லன்னா இல்ல. புரியுதா? அப்டியெல்லாம் எதிர்பார்த்து நாக்கைத் தீட்டிண்டு இருக்கக் கூடாது புரிஞ்சிதா? இது அம்மாவின் கண்டிப்பு.
திட்டமாய் வளர்ந்தவர் அவர். எந்த செயலுக்கும் சில முன் தீர்மானங்கள், முடிவுகள் என்பது உண்டு. ஒரு சினிமா போவதென்றால் கூட இந்த நேரத்திற்குள் கிளம்ப வேண்டும், இந்த நேரத்திற்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்று வரித்துக் கொள்வார். இஷ்டம்போல் கிளம்பி, இஷ்டம்போல் வந்து சேருவது என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை பொறுப்பற்ற செயல். ஆனால் இன்று உண்மையிலேயே கொஞ்சம் லேட் ஆகிவிட்டதுதான். தடுமாற்றம்தான் காரணம். புறப்படுகையில் வயிற்றைக் கலக்குவது போலிருந்தது. பாத்ரூம் போய்விட்டுக் கிளம்பினார். முதல் தடங்கல். போவோமா அல்லது அப்படியே இருந்து விடுவோமா என்றும் தோன்றியது. கொஞ்சம் தண்ணி கொண்டா என்றார் மனைவியிடம். பெரிய டம்ளர் நிரம்பக் கொண்டு வந்தாள் அவள். நல்லவேளை சொம்புல எடுத்திட்டு வரல என்றார். ஒரு வாய் தொண்டைய நனைக்கன்னு கேட்டா இவ்வளவா? என்று விட்டு எழுந்து நடந்து விட்டார். அவர் கண் முன்னால் அந்த மீதித் தண்ணீரை வாசல் செடிக்கு அவள் வீசியது அவளது கோபத்தைக் காட்டியது. தூக்கித்தானே குடிச்சேன் எச்சிலா பண்ணினேன் தூரக் கொட்டுற? என்றவாறே கிளம்பி விட்டார்.
அன்று மிருணாளினியிடம் சிறு மனத்தாங்கல். அதை வெளிப்படையாய் அவளிடம் கேட்கவில்லை. அவளாகச் சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தார். செய்து முடித்துவிட்டுச் சொன்னாள் அவள். முன்பே சொன்னால், தான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம் என்கிற நம்பிக்கை அவளுக்கு ஏன் இந்த வயதிலும் வரவில்லை என்பதை நினைத்தார். பெண்கள் சம்பாதிக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு சுதந்திரம் தானாகவே வந்து விடுகிறது. Financial freedom. அது தன்னெழுச்சியானது. மற்றவரை லட்சியம் செய்யாதது. அலுவலகத் தோழிகளோடு எதிர் வங்கிக்குப் போய் அவள் அக்காவிற்குப் பணம் அனுப்பியிருக்கிறாள். இதற்கு முன்பு ஒரு தரம் அப்படிச் செய்தபோது இவனிடம் சொல்லி வங்கிக்குக் கூட்டிப் போனாள். RTGSல் பணம் எப்படி அனுப்புவது என்பதை அன்று தெரிந்து கொண்டாள். இந்த முறை அவளாகவே செய்திருக்கிறாள். முன்னதாகவே சொல்வதானாலும் “எங்க அக்காவுக்குப் பணம் அனுப்பப் போறேன்..“ என்றுதான் சொல்வாள் முடிவு பண்ணிவிட்டதைத் தெரிவிப்பதுபோல் தகவல் வரும். அனுப்பட்டுமா? என்ற முறைக் கேள்வியெல்லாம் இல்லை. தடுப்பேன் என்று அவளாகவே நினைத்துக் கொள்வாளோ என்னவோ? அல்லது அப்படிச் செய்வதில் அவளுக்கே ஒரு உறுத்தல் அல்லது தயக்கம் இருந்ததோ என்னவோ? அவள் என்ன வாங்குகிறாள் என்று கூட இன்றுவரை இவர் கேட்டதில்லை. பணம் என்பது ஒரு காரணி. அதுவே வாழ்க்கையில்லை.
இப்போது அவன் மிக நன்றாய்ச் சாய்ந்திருந்தான் இவர் தோளில். அவனை எழுப்ப ஏனோ இவருக்கு மனசாகவில்லை. தோள் கண்டேன் தோளே கண்டேன் என்று அவன் அயர்ந்திருந்தான். இப்படி ஒருவன் தூங்கக் கொடுத்து வைக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டார். அவன் முகம் வற்றியிருந்தது. பாவமாய்த்தான் தெரிந்தது. ஒரு வேளை தன்னைப்போலவே பெண்டாட்டியிடம் சண்டை போட்டு விட்டு, ஏற்றிக் கொண்டு வந்திருப்பானோ? நல்ல உறக்கம் என்பது ஒருவனுக்குக் கிடைக்கும் கிஃப்ட். ஓய்வு பெற்ற பிறகு சமீபத்தில்தான் இந்த உறக்கம் அவரிடம் குறைந்திருக்கிறது. இரவு பத்து மணிக்குக் கண்ணசந்தார் என்றால் படக்கென்று தூங்கி விடுகிறார்தான். அடுத்தாற்போல் ரெண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்து விடுகிறது அவருக்கு. சிறுநீர் கட்டி நிற்கிறது. அது எழுப்பி விடுகிறது. மீண்டும் வந்து படுக்கையில் தூக்கம் பிடிக்கத் தாமதமாகி விடுகிறது. ஆக நாலு மணி நேர உறக்கம் என்பதுதான் உத்தரவாதம்.
பிறகு படுத்துப் புரண்டால், என்னென்னவோ நினைப்புகள் வந்து விடுகின்றன. குடும்பத்தில் சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை, திருமணம் செய்வதற்கு முன் தங்கைமார்கள் படுத்திய பாடு, அலுவலகத்தில் திடீர் திடீர் என்று அவருக்குக் கிடைத்த மாறுதல்கள், தர்மபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி என்று தூக்கியடித்தது.. உள்ளூர் வரப் படாத பாடு பட்டது. தன் விண்ணப்பம் சீனியாரிட்டியில் வைக்கப்படாமல், அதற்குரிய பதிவேட்டில் பதியப்படாமல், வேண்டுமென்றே காணாமற் போக்கியது, கடைசியில் சி.எம். செல்லுக்கு மனுப்போட்டு நியாயம் கிடைத்தது அடேயப்பா எத்தனை துன்பங்கள், அலைக்கழிப்புகள்?.
எல்லாக் காலத்திலும் மிருணாளினி தனியாய்த்தான் இருந்து கழித்திருக்கிறாள். ராத்திரிதான் பயமாயிருக்கும் மத்தப்படி ஒண்ணுமில்ல என்பாள் சாதாரணமாய். ஒருவேளை தான் இல்லாமல் இருந்ததே அவளுக்குப் பெருத்த நிம்மதியாய் இருந்துவிட்டது போலும்! என்று நினைத்துக் கொள்வார். டிபார்ட்மென்ட் சர்வீஸில் அவர் பட்ட கஷ்டங்கள் யாருமே பட்டிருக்க மாட்டார்கள். எந்த மாறுதலுக்கும் சிபாரிசு என்று போனதில்லை. பைசா செலவழித்து வாங்கியதில்லை. அப்படி அவசியமில்லை என்று விடுவார். ஒரு வேளை ஒரு குழந்தை பிறந்திருந்தால் எண்ணங்கள் மாறியிருக்குமோ என்னவோ? அந்த பாக்கியம் இல்லை. அப்பாவிகள் இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துன்பத்திற்குள்ளாகிறார்கள். அதுதான் யதார்த்தம். கஜகர்ண வித்தை தெரிந்தவன்தான் இங்கு பிழைக்க முடியும்.
. படம் ஓடிக் கொண்டிருந்தது. அவனைக் கை தொட்டு அசைத்தால் மேற்கொண்டு ஏதேனும் விபரீதம் ஆகி விடலாம். அப்படியே மெதுவாய்த் தள்ளி சுவற்றுப் பக்கம் சாய்த்து விடலாம் என்றாலோ அது பெரும் பிரயத்தனம். முழு போதையானாலும், நிச்சயம் எழுந்து விடுவான். அப்படியே தலை கவிழ்ந்து கீழே சாய்ந்து விட்டால்? பிறகு எவன் இடுக்கில் தூக்குவது? ஆகவே எதுவும் சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் உறக்கத்தைக் கலைக்க மனமில்லை. தான் பிரயத்தனப்பட்டாலும் கலையாது. மீறிக் கலைந்தால் பிரச்னைதான்.
கவனம் அவன் மீதுதான் இருந்ததே தவிர படத்தின் மீது சுத்தமாய் இல்லை. வில்லனின் கார் பின்னால் சர்ரு சர்ரு. என்று பத்திருபது கார்கள் புயலாய்ப் பின் தொடர. வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்னவோ ஏதோவென்று புரியாமல் பார்க்கிறார்கள். ஒரு கணம் தோன்றி மறையும் இந்தக் காட்சியில் எழும் சப்தம் தியேட்டரையே அதிர வைத்தது. இதெல்லாம் எனக்கு ச்ச்சும்மா.! என்பதுபோல் அவன் இவர் தோளில் கிடந்தான். அவன் வீட்டில் கூட இத்தனை சுகமாய்த் தூங்கியிருக்க மாட்டான். நிச்சயம். அவனை ஒதுக்குவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. இவர் வரிசை ஆட்களே உதவியில்லை. இது அவர் தலைவிதி என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. திரும்பித் திரும்பிப் பார்க்க மட்டும் செய்தார்கள். பிறகு படத்தில் லயித்து விட்டார்கள். அவனுக்கும் சேர்த்து படம் பார்த்துக் கொண்டிருந்தார் இவர். எழுந்து கதை கேட்டால்? என்று தோன்ற சிரிப்புதான் வந்தது.
மிருணாளினியைக் கூட்டி வந்திருந்தால் இந்தத் தொந்தரவு வந்திருக்குமா?- திடீரென்று இப்படித் தோன்றியது இவருக்கு. ஆபத்துக் காலங்களில் என்றும் அவள் இவர் கூட இருந்ததேயில்லை.. இதுதான் நிதர்சனம். அவளுக்கு சினிமா பிடிக்காது. கோயில் குளம் என்றால் கிளம்பி விடுவாள். அவளுக்கும் ஒரு ரிலாக்சேஷன் வேண்டுமே என்று கூட்டிப் போவார்.. சாமி தரிசனம் செய்ய பத்து ரூபாய் க்யூ நீண்டு நிற்கும். ஆனால் ஐம்பது ரூபாய்க் க்யூவில் போக வேண்டுமென்பாள். அதுதான் எனக்குப் பிடிக்காது. ரெண்டு வரிசையும் சந்நிதிக்குள்ள நுழையும்போது ஒண்ணாயிடப் போகுது இதுக்கு எதுக்கு அம்பது வெட்டிச் செலவு? அவ்வளவு பெரிய கூட்டமில்லையே? அந்தக் காசை அர்ச்சகர் தட்டுல போடு அவருக்காச்சும் உதவும். குறைஞ்ச சம்பளம் உள்ளவங்க அவங்கதான் என்பார் இவர். அதுவும் போடறேன் இல்லேங்கல. ஆனா இதுல போனா சீக்கிரம் முடிஞ்சிடுமே.? என்று சொல்லி இவரின் பதிலை எதிர்பாராமல் போய் நின்று விடுவாள்.
இவரோ வெளியே துவஜஸ்தம்பத்திற்கு அடுத்தாற்போல் நின்று நேரே சந்நிதியைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு வந்து அமர்ந்து விடுவார். ஸ்டாலில் அன்று என்ன புதிய நைவேத்யம் என்று பார்ப்பார். புளியோதரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பொட்டணம் வாங்கி வந்து ஒன்றைப் பிரித்து, சுவைத்து உண்ண ஆரம்பிப்பார். விழுந்து விழுந்து கும்பிடுபவர்களையும், சுற்றிச் சுற்றி வருபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கும். இப்படி எத்தனாயிரம் பேரின் வேண்டுதல்களை எப்பொழுது இந்தச் சாமி விடுபடல் இல்லாமல் நிறைவேற்றி வைப்பார்? என்று தோன்றும். மிருணாளினி எனக்கு வாங்கலையா? என்று கேட்டுக் கொண்டேதான் வருவாள். அகத்திக் கீரை வாங்கி மாட்டுக்குக் கொடுத்தேண்ணா. எவ்வளவு அழகா வாங்கிக்கிறது தெரியுமா? அது திங்கிற அழகே தனி ஒரு இலை விடாம ஒரு முடி முழுக்கத் தின்னுடுத்து. இன்னொண்ணு வாங்கப் போனேன். காப்பாளன் போதும் மாமின்னுட்டான். பிடிச்சிக்கோன்னு அவன்ட்டச் சொல்லி, முன் பக்கமும், பின் பக்கமும் நன்னாத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு வந்தேன்.. கோயிலுக்குன்னு நிக்கிற பசு மாடுகளுக்கே தனி அழகு..! கண்ணுக்குள்ளயே நிக்கறது.!
இன்று அவள் இவருடன் வந்திருந்தால் இந்தக் கடைசி இரண்டு இருக்கைகள்தான் நிச்சயம் கிடைத்திருக்கும். ஏனென்றால் தான் வந்த பிறகு சற்று நேரம் கழித்துத்தானே இந்தாள் வந்தான். ஆனால் அவளுக்கு இதுபோல் சண்டைப் படங்களெல்லாம் பிடிக்காது. ஏதாவது சாமி படம் என்றால் ஒருவேளை வரலாம். அல்லது சரித்திரப் படம். அவள் கடைசியாக மனதோடு தியேட்டர் வந்து பார்த்தது பாகுபலி. ரெண்டாம் பாகம் எப்ப வருதாம் என்று உற்சாகமாய்க் கேட்டாள். பிறகு அது வந்தபோதும் கூட்டிப் போனார் இவர். பிரம்மாண்டமா இங்கிலீஷ் படம் போல எடுத்திருக்கான் என்றாள். அந்தக் காலத்துல பென்ஹர்னு ஒரு படம் வந்தது. நான் சின்ன வயசுல பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இதைத்தான் பார்க்கிறேன் இத்தனை பிரம்மாண்டமாய் என்று வியந்தாள்.
அப்போது இவர் லீவில் இருந்தார். தனது சி.எம். செல் மனு நடவடிக்கையில் இருந்த நேரம் அது. உடனடியாக இவருக்கு உள்ளூர் மாறுதல் வழங்கவும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அடுத்தாப்ல டிரான்ஸ்பர் ஆர்டரோடதான் இந்த ஆபீஸ்ல காலடி வைப்பேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார். அதுபோலவே போய் நின்றார். அந்த நிகழ்வுக்குப் பின்தான் அவர் மீது கை வைப்பதை விட்டது உள்ளூர் நிர்வாகம். கடைசி ஒரு வருடம் இருக்கும்போது திரும்பவும் களேபரம் ஆரம்பமானது. பணி ஓய்வு பெற ஓராண்டிருக்கையில் யாரையும் சொந்த ஊரிலிருந்து மாற்றக் கூடாது என்ற உத்தரவினைக் காட்டி அங்கேயே ஓய்வு பெற்று கம்பீரமாய் வீடு வந்து சேர்ந்தார். அது அவரின் வாழ்நாள் சாதனையானது.
படம் முடிந்திருந்தது. என்ன பார்த்தோம் என்றே நினைவில்லை. அவன் பாரமே பெரிய மனபாரமாய்ப் போனது. அதுபோக ஏதேதோ நினைவுகள். இனி வேறு வழியில்லை என்று எழ முயன்றார் பூவராகன். தள்ளிவிட்டிட்டு நீங்க பாட்டுக்கு எந்திரிங்க சார் கிடக்கான் அந்த ஆளு நமக்கென்ன? என்றனர் சிலர். படம் ஓடுகையில் இது நேரம் வரை வாயைத் திறக்காதிருந்தவர்கள் அவர்கள். வெளியேறும் நேரம் வீரமாய் வந்தது வார்த்தைகள். கீழ தடுமாறி அடி கிடி பட்டுச்சின்னா? என்று நினைத்தார். ஆனது ஆச்சு அவன்பாட்டுக்குத் தூங்கத்தானே செய்றான் போகட்டும் பாவம்! என்ன வேதனைல இங்க தஞ்சம் புகுந்தானோ? அவர் மனசு இரக்கப்பட்டது.
தன்னுடன் வைத்திருந்த ஜோல்னாப் பையை எடுத்து வலது தோளில் மாட்டிக் கொண்டு மெல்ல அவனைத் தம் பிடித்துத் தூக்கி தடுமாறாமல் எழுந்தார் பூவராகன். இருக்கையின் பின்னால் அவனை மெல்லச் சாய்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார். முதலிலேயே செய்திருக்கலாமோ என்று தோன்றியது. இப்போது எப்படி சாத்தியமானது என்றும் வியப்பாயிருந்தது. ஒரு வேளை அவனாகவே அட்ஜஸ்ட் ஆகி சாய்ந்து கொண்டானோ? அவன் தலை தொங்கித்தான் கிடந்தது. தியேட்டர் ஏறக்குறையக் காலி. திரைக்கு அருகே பக்கவாட்டில் நிறையப் பேர் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை இவரை நோக்கியிருந்தது. இருக்கை வரிசையை விட்டு வெளியேறி வாயிலை நோக்கிய பிரதான நடுப்பகுதி அகண்ட வழிப் படிகளில் இறங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு படியிலும் வெளிச்சம். ஒராள் உள்ளே மயங்கிக் கிடக்கிறான் என்று தியேட்டர் ஆள் யாரிடமாவது சொல்வோம் என்று நினைத்துக் கொண்டார்.
அரங்கு இப்போது முழுக்கக் காலியாகிவிட்டது. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த கொஞ்சப் பேரோடு இவரும் வேகமாகப் போய்ச் சேர்ந்து கொண்டபோது அந்தச் சத்தம் கேட்டது.
ஓவ்வ்வாவ்வ்வ்வ்வ்! – அந்த ஆள் மிகப் பெரிதாகக் கத்திக் கொண்டு சுற்றிலும் உள்ள இருக்கைகள் அதிரும் வண்ணம். ஆவாவ்வ்வ்வ்.வே..வென்று சத்தமாய் எதுக்களித்து.. அந்த ஏரியாவே அசிங்கப்படும்படிக்கு பொளேரென்று வாந்தியெடுத்தான். திரும்பத் திரும்ப பொளக் பொளக்கென்று தாங்க மாட்டாமல், அடக்கத் திராணியின்றி அவன் கொட்டித் தீர்த்தபோது. கடைசிப் படியில் நின்று ஒரு முறை கலக்கத்தோடு நோக்கிய பூவராகன் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனார். படம் பார்க்கையில் அவனை நகர்த்தியிருந்தால் இது நடந்திருக்குமோ? எண்ணம் தந்த பயத்தில் வியர்த்தது அவருக்கு. மீதிப் படிகளை இறங்கிக் கடக்கலானார். அப்டி ஆகியிருந்தா என்ன பண்ணப் போறோம்? குழாய்ல போய் முழுக்கக் கழுவிட்டு வீடு போக வேண்டியதுதான்.. வேறே வழி? அவராகவே சமாதானப்படுத்திக் கொண்டார். அப்டி ஆகாததுனாலதான் இப்டி நினைக்கத் தோணுதோ? என்றும் ஒரு குறுக்குச் சிந்தனை இடையே பாய்ந்தது. இவ்வளவு நேரம் அவனைப் பொறுத்திட்டிருந்தவன் அதையும் செய்ய மாட்டனா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு வண்டி ஸ்டான்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
உள்ளே என்ன சத்தம் என்று புரியாமல் எமர்ஜென்ஸி வாயிலிலிருந்து நாலைந்து ஆட்கள் திடு திடுவென்று தியேட்டருக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள்.