அமிழ்து

ஸிந்துஜா

“அப்பா இன்னும் நீங்க எத்தனை நாள்தான் தனியா அந்த ஆத்திலே உக்காந்துண்டு கஷ்டப்படப் போறேள்? எங்களோட பேசாம பெங்களூருக்கு வந்துடுங்கோ” என்று அன்று காலை மறுபடியும் ரங்கநாதனின் பிள்ளை திலீப் போனில் சங்கடப்பட்டான்.

“பாக்கலாண்டா” என்றார் ரங்கநாதன்.

“மூணு மாசமா இந்த காமராஜர் பதிலையே சொல்லிண்டு இருக்கேள்.”

அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரி, சாப்பிட்டாச்சா? என்ன டிபன் இன்னிக்கி?” என்று கேட்டான் திலீப்.

அவர் ஒரு கணம் பொய் சொல்லி விடலாம் என்று நினைத்தார். பிறகு மனதை மாற்றிக் கொண்டு “இல்லே. இன்னிக்கி டிபன் வேண்டாம்னு பாக்கறேன்” என்றார்.

“ஏன், உடம்பு சரியில்லையா? ஜுரமா?” என்று அவன் பதறுவது அவருக்குக் கேட்டது.

“இல்லே. வயிறு கொஞ்சம் மொணங்கறது. ஒரு வேளை லங்கனம் போட்டா சரியாப் போயிடும்” என்றார்.

திலீப் அவரிடம் “நேத்திக்கு கோபி ஐயங்கார் ஓட்டலுக்குப் போனேளா?” என்று குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான்.

“உன்னிடமிருந்து ஒரு குற்றவாளி தப்பித்து விட முடியுமா?” என்றார் ஆங்கிலத்தில். அவன் பெங்களூரில் லாயராகப் ஒரு பெரிய கம்பனியில் வேலை பார்க்கிறான். அவன் சொல்லுவதில் உண்மை இருக்கிறது. சட்டினியில் பச்சை மிளகாயை மட்டும் வைத்து அரைத்தது போல அப்படி ஒரு காரம். ஐம்பது வருஷத்துக்கு முன்னால் அவரது இருபதாவது வயதில் அந்த ஒரப்பு வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வயதில்?

“அதுக்குத்தான் சொல்றேன். நீங்க இங்கே வந்துடணும்னு. வீட்டு சாப்பாடுதான் உங்களுக்கு ஒத்துக்கும். சரி, இப்போ எளனி, ஹார்லிக்ஸ்னு நீராகாரமா சாப்பிடுங்கோ. மத்தியானம் தயிர் சாதம் சாப்பிட்டா சரியாயிடும். சாப்பிட்டதுக்கு அப்புறம் ஜெலுசில் போட்டுக்கோங்கோ. நீங்க அங்கேர்ந்து கிளம்பி இங்க வந்துடறதுதான் பெட்டர். ராத்திரி போன் பண்றேன்” என்று போனைக் கீழே வைத்து விட்டான்.

ரங்கநாதன் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின் மனைவியுடன் மதுரைக்கு வந்தார். சென்னையில் அவர் உத்தியோகத்தில் இருந்த போது மதுரையில் வாங்கிய வீடு. மதுரையில்தான் அவர் பிறந்தது படித்து வளர்ந்தது எல்லாம். வேலைக்காக என்று சென்னைக்குப் போய் விட்டாலும் சென்னையின் ஆரவாரம் அடங்காப்பிடாரித்தனம் அவரைக் கவரவில்லை. இதற்கு அவர் மனதில் ஏற்கனவே மதுரை ஒரு பெரிய கிராமம் என்று ஆழப் பதிந்து அதன் எளிமையும் பகட்டற்ற சூழலும் ஒரு வித நேசத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டதுதான் காரணமாக இருக்க வேண்டும். அவருக்கும் அவரது மனைவிக்கும் இருந்த ஆசைக்கு ஒரு பெண்ணும் அவர்களிடம் இல்லாத ஆஸ்திக்கு ஒரு பையனும் பிறந்தார்கள்.

பெண்ணைத் திருச்சியில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டார். பெங்களூரில் அவருடைய பையன் திலீபின் குடும்பம் இருந்தது. அவன் லா ஸ்கூலில் படிக்க பெங்களூர் வந்தவன் ஊர் பிடித்து விட்டதால் ஒரு வேலையையும் வாங்கிக் கொண்டு பெங்களூர்வாசியாகி விட்டான். அவனைத் திருமணம் செய்து கொண்ட நர்மதாவும் பெங்களூர்க்காரி. அவர்களுடைய ஒரே பெண் பத்மினி ஊட்டியில் லவ்டேலில் உள்ள ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தாள்.

அவர் மனைவி மூன்று மாதங்களுக்கு முன் காலமாகி விட்டாள். தனது வாழ்நாளில் வெந்நீர் போடக் கூடச் சமையலறையில் நுழைந்திராத அவருக்கு மனைவியின் மறைவுக்குப் பின் சாப்பாட்டுப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. ஊரிலிருந்து சாவுக்கு வந்திருந்த உறவினர்கள், காரியங்கள் முடிந்த பின் பத்துப் பதினைந்து நாள்கள் சமையல் செய்து போட்டு விட்டுப் போனார்கள். அப்புறம் அவர் வடக்கு மாசி வீதியில் இருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து டிபன், லஞ்ச், இரவு உணவு எல்லாம் வரும்படி ஏற்பாடு செய்து கொண்டார். என்றாவது மாலையில் வயிற்றைக் கிள்ளும் போதும் நாக்கு அரிப்பெடுக்கும் போதும் கோபி அய்யங்கார் கடைக்குப் போய் வெள்ளையப்பம், பஜ்ஜி, காரச் சட்டினி என்று இறங்கி அடித்து விட்டு வருவார்.

‘தகப்பனார் மதுரையில் எதற்காகத் தனியே கிடந்தது உழல வேண்டும்; அதுவும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு’ என்று திலீப் வாரத்துக்கு ஒரு முறை அவரைப் போனில் தொந்திரவு பண்ணிக் கடைசியில் பெங்களூருக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சமையல்கார மாமியை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். நன்றாகச் சமைத்துப் பழக்கப்பட்ட கை என்று அவர்கள் ஆறு மாதம் மகிழ்ந்து கொண்டிருந்த போதே அந்தக் கை கொஞ்சம் நீளமாகி விட ரங்கநாதனின் சில கைக்குட்டைகள், நர்மதாவின் பெர்ஃபியூம், திலீப் தனது அறையில் மறந்து விட்டுச் சென்று விட்ட சில பத்து ரூபாய்கள், சமையலறையில் ஒரு மாதத்துக்கு இருக்கட்டும் என்று வாங்கிப் போட்டிருந்த ஆறு எம்.டி.ஆர். இட்லிப் பொடிப் பாக்கெட்டுகளில் இரண்டு எல்லாம் கால் முளைத்து வீட்டை விட்டுப் போய் விட்டதால் மாமியையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விட்டார்கள். அதனால் சமையல் செய்யும் வேலை நர்மதாவின் தலையில் விழுந்தது. அவள் மிக நன்றாகச் சமைத்தாள். ரங்கநாதனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ரங்கநாதன் அவள் சமையலை ஆரம்பித்த முதல் நாளே சொல்லி விட்டார். “இதோ பாரும்மா. ரொம்ப இழுத்து விட்டுண்டு நீ எதுவும் செய்ய வேணாம். சமையக்காரி இருந்தப்பவே கார்த்தாலே பாதி நாள் அவ டயத்துக்கு வரமாட்டா. சனி ஞாயிறிலே திலீபுக்கு லீவுன்னு நேரே பிரென்ச்க்குப் போயிடுவோம். இல்லாட்டா அந்த ரெண்டு
நாள் மட்டும் மல்லேஸ்வரத்திலே இல்லாத ஹோட்டலா? அவன் ஏ 2 பி க்கோ, எம்.டி. ஆருக்கோ போய் டிபன் வாங்கிண்டு வரட்டும். அதனாலே நீ டிபன் கச்சேரியைக் காலம்பற வச்சுக்க வேண்டாம். தெனமும் பத்து பத்தரைக்கு நேரே லஞ்சு சாப்பிட்டுடலாம். சரியா?” என்று திட்டம் போட்டுக் கொடுத்து விட்டார்.

கணவனும் மனைவியும் நல்ல ஐடியா என்று ஒப்புக் கொண்டார்கள்.

ரங்கநாதன் மேலும் நர்மதாவிடம் “கொழம்போ சாம்பாரோ வக்யற
அன்னிக்கு ரசம் பண்ணாதே, கறி பண்ணினா கூட்டு எதுக்கு? கூட்டு பண்ற நாள்ல கறி ஒதுங்கிக்கட்டும்” என்று அவர் சொன்ன போது நர்மதா சிரித்தாள். “ரெண்டுமே இல்லாம ஒண்ணு ரெண்டு நாள் அப்பளாம், சிப்ஸ், ஊறுகாயை வெச்சுண்டு சமாளிச்சுக்கலாம். இல்லியா?” என்று திட்டத்தை முடித்து வைத்தார்.

ஆனால் சில வாரங்கள் கழித்து ரங்கநாதன் ஒரு பிரச்சினையைச்
சந்திக்க வேண்டியதாயிற்று. அதை யாரிடமும், குறிப்பாகப் பிள்ளையிடமும் நாட்டுப் பெண்ணிடமும், சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. நர்மதா சமைக்க ஆரம்பித்ததிலிருந்து திலீப் மாத்திரம் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போய் விடுவான். நர்மதா பத்து மணி வாக்கில் சமையலை முடித்து விடுவாள். ரங்கநாதன் பத்தரை மணிக்குச் சாப்பிடுவதைப் பழக்கிக் கொண்டார். திலீப்பின் பியூனும் அந்த நேரத்துக்கு வந்து நர்மதா கட்டி வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு போவான். நர்மதா நிதானமாகப் பனிரெண்டு மணிக்குச் சாப்பிட உட்காருவாள்.

நாளடைவில் இந்த சமையல் நேரமும் சாப்பிடும் நேரமும் மாற்றமடைந்தன. நர்மதா திடீரென்று நெட் ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சினிமாக்களை இரவு பார்க்க ஆரம்பித்ததால் படுக்கையில் இரவு விழ வெகு நேரமானது. அதனால் அவள் காலையில் நேரங் கழித்து எழுந்திருக்க ஆரம்பித்தாள். சமையல் செய்து முடிக்கவும் நேரமாயிற்று. அதனால் ரங்கநாதன் பதினோரு மணி, பதினொன்றரை மணிக்குதான் சாப்பிட முடிந்தது. அவ்வளவு நேரம் அவரால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் நர்மதாவிடம் சொல்ல அவருக்கு இஷ்டமில்லை. தானே வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக் கொண்டோமோ என்று கூட அவர் தன்னை நொந்து கொண்டார்.

ஒரு நாள் திருச்சியிலிருந்து பெண் கூப்பிட்டாள்.

“என்னம்மா சாரதா? எப்படி இருக்கே? மாப்பிள்ளையும் குழந்தைகளும் எப்படி இருக்கா?” என்று கேட்டார்.

அவள் பதிலுக்கு அவர்கள் மூவரையும் பற்றி நலம் விசாரித்தாள்.

“அப்பா, நான் இப்ப எதுக்கு உங்களைக் கூப்பிட்டேன்னா என்னோட மாமனாருக்கு இருபத்தி அஞ்சாம் தேதி சதாபிஷகம் நடக்கறது. நீங்க எல்லோரும் வரணும்னு இவரும் ரொம்ப சொல்றார்” என்றாள் சாரதா.

இருபத்தி ஐந்தாம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தது. ஆனால் தனக்கு ஆபீசில் வேலை இருப்பதால் வருவதற்கில்லை என்று திலீப் சொன்னான். ஆபிஸ் போகும் அவனைப் பார்த்துக் கொள்ள நர்மதாவும் வரவில்லை என்று சொல்லி விட்டாள். சம்பந்தியாக அவர் போவதைத் தவிர்க்க முடியாது. விசேஷம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னே அவர் மதுரை சென்றார்.

சதாபிஷேகம் முடிந்த பின்னும் மதுரையில் அவர் ஒரு மாதம் பெண்ணுடன் இருந்தார். இப்போது அவருக்கு வேளா வேளைக்கு உணவு கிடைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. அவர் அங்கு வந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் தான் எதிர்கொண்ட சாப்பாட்டுப் பிரச்சினையைப் பெண்ணுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர் பெங்களூருக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னபோது “இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போயேம்ப்பா” என்றாள் பெண். அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்தார்.

கிளம்பும் அன்று “எல்லாம் எடுத்து வச்சுண்டுட்டேளா?” என்று சாரதா ரங்கநாதனிடம் கேட்டாள்.

“எங்கியோ அமெரிக்காவுக்குப் போறாப்பிலேன்னா நூறு தடவை கேட்டுண்டு இருக்கே?” என்று ரங்கநாதன் பெண்ணைப் பார்த்துச் சிரித்தார். “இங்க இருக்கிற பெங்களூருக்கு ராத்திரி ட்ரெயின் பிடிச்சா காலங்காத்தால கொண்டு போய்த் தள்ளி விட்டுடறான்.”

“இல்லே, ஏதாவது மறந்து வச்சிடக் கூடாதேன்னுதான். கண்ணாடி, மொபைல்,வாட்ச், ஸ்லோகப் புஸ்தகப் பை, மருந்து டப்பான்னு எல்லாம் முக்கியமான ஐட்டங்களாச்சே!”

“திருச்சியிலே கிடைக்கிறதை விட இதெல்லாம் ஃபாஸ்டா பெங்களூர்லே கிடைச்சுடும். ஒழுங்கா வேளைக்குக் கிடைக்காதது சாப்பாடுதான்.”

சாரதா பரிவுடன் தந்தையை நோக்கினாள்.

“அதெல்லாம் சரியாயிடும். கவலைப்படாதேங்கோ.”

“கவலை என்ன கவலை எழுபது வயசுக்கு? அதுக்காக நானும் எவ்வளவு நாள்தான் பொண் வீட்டிலே உக்காந்துண்டு சாப்பிட்டாறது?”

“நீங்களா நினைச்சிண்டு இப்படிப் போறேள். நூறு வருஷத்துக்கு மின்னாலே எவனோ பொண்ணாத்திலே போய்க் கையை நனைக்கிறதே வெக்கம். அதிலே இன்னும் அங்க போய் நாள் கணக்குலே தங்கறதுங்கறது மானக்கேடுன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அதையே உடும்புப் பிடியாப் பிடிச்சிண்டு ..! ஹ்ம். காலம் எவ்வளவோ மாறிப் போயிடுத்து. இங்க நீங்க இருக்கறதைப் பத்தி நானோ உங்க மாப்பிள்ளையோ ஒரு வார்த்தை சொன்னோமா? நீங்க ரெண்டு குழந்தைகளுக்கும் கைடு மாதிரி இங்க இருக்கறது பெரிய அதிர்ஷ்டமா இருந்தது. ஏன் போறேள்னு அவருக்கும் ரொம்ப வருத்தம்தான்” என்றாள் சாரதா. அவர் பெண்ணைச் சமாதானப்படுத்தி விட்டு ரயில் ஏறினார்.

பெங்களூரில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

காரை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து அவரை அழைத்துச் சென்ற திலீப் அவரிடம் ” நாளைக்கு விடிகார்த்தாலையும் எனக்குப் பிக்கப் வேலை இருக்கு” என்று சிரித்தான். “பத்மினி ஊட்டிலேர்ந்து வரா!”

அவர் சில வினாடிகள் யோசித்து விட்டு “இப்ப ஒண்ணும் ஸ்கூல் லீவு கிடையாதே?” என்றார்.

“இல்லே. ஒரு மாசம் ஸ்டடி லீவ்ன்னு இங்க வரா. அப்புறம் பரீட்சை ஆரம்பிக்க ரெண்டு நாள் முன்னாலே திரும்பிப் போகணும்” என்றான்.

அன்று வழக்கம் போல் திலீப் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குப் போனான். நர்மதா சமையலை முடிக்கும் போது பதினொன்றே கால் ஆகி விட்டது. ரங்கநாதன் நல்ல பசியுடன் சாப்பிட உட்காரும் போது மணி பதினொன்றரை.

மறுநாள் காலையில் பத்மினி பெட்டி படுக்கையுடன் உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் . அவரைப் பாத்ததும் “தாத்தா!” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் . அவளுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.

“என்ன தாத்தா? இப்பிடி இளைச்சுப் போயிருக்கேள்?” என்று அவரது கையைப் பிடித்துப் பார்த்தாள்.

“நானா? என்ன விளையாடறியா? உங்கம்மா கைபாகத்திலே மாசா மாசம் எனக்கு வெயிட் கூடிண்டே போறது” என்று அவர் சிரித்தார்.

ஒன்பது மணிக்கு பத்மினி அவரிடம் வந்து “தாத்தா, வாங்கோ. டிபன் சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு போனாள்.

பொங்கலும் கொத்ஸும் டைனிங் டேபிளில் சட்னியுடன் வீற்றிருந்தன.

“அந்த ஹாஸ்டல்லே இதையெல்லாம் இவளுக்கு யார் பண்ணிப் போடறா? தினைக்கும் ப்ரெட்டும் ஜாமும் சாப்பிட்டுண்டுதானே கிடக்கறது குழந்தைகள். அதனாலேதான் இப்பிடி டிபன் பண்ணினேன்” என்றாள் நர்மதா ரங்கநாதனைப் பார்த்து. “அதுவுமில்லாம காலம்பற எட்டரைக்கு பிரேக் ஃ பாஸ்ட், மத்தியானம் பன்னண்டரைக்கு லஞ்ச், ராத்திரி எட்டு மணிக்கு டின்னர்னு ஹாஸ்டல்லே சாப்பிட்டுடறா. இங்கையும் அந்தந்த நேரத்துக்கு அப்படியே பண்ணிக் குடுத்துட்டாப் போச்சு.”

பத்மினி இருந்த ஒரு மாதமும் இப்படித்தான் சமையலும் சாப்பாடும் நடந்தன.

பத்மினி கிளம்புவதற்கு முதல் நாள் இரவு அவர்கள் வெளியே போய்ச் சாப்பிடலாம் என்று ஆஷா ஃபுட் கேம்ப் போனார்கள்.

“இங்கே நார்த் இண்டியன் நன்னா பண்றான் இல்லே?” என்றாள் நர்மதா.

“நார்த் இண்டியா போய்தான் நார்த் இண்டியன் ஐட்டம்ஸ் சாப்பிடணும்” என்று சிரித்தான் திலீப்.

“நாங்கூட எக்ஸாம் முடிஞ்சு ரெண்டு மாசம் லீவு விடறச்சே டெல்லி போலாம்னு இருக்கேம்ப்பா. என் ஃபிரென்ட் சுலேகா அவாத்திலே வந்து தங்கிண்டு அப்படியே கொஞ்சம் நார்த் இண்டியா எல்லாம் சுத்திப் பாக்கலாம்னு சொல்றா” என்றாள் பத்மினி.

ரங்கநாதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“போடி. வருஷம் பூரா உன்னைப் பிரிஞ்சு நாங்க இருக்கோம். லீவுலேயும் எங்கேயோ போறாளாம். சும்மாக் கிட ” என்றாள் நர்மதா.

ரங்கநாதன் நன்றியுடன் நர்மதாவைப் பார்த்தார்.

“அப்பா! பாருப்பா அம்மாவ!” என்று பத்மினி சிணுங்கினாள்.

திலீப் “ஆசைப்பட்டா அவ போயிட்டு வரட்டுமே. எப்பவும் நம்ம கூடவே கட்டிப் போட்டு வச்சுக்க அவள் என்ன கன்னுக்குட்டியா?” என்றான்.

ரங்கநாதன் ” இல்லே. அவ இங்கியே இருக்கட்டும். வெளியூர்லாம் போக வேண்டாம்” என்றார் குரலைக் கடுமையாக ஆக்கிக் கொண்டு.

பத்மினி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள். தன் குரல் கடுமைக்குப் பதிலாக இறைஞ்சலாய் ஒலிப்பதைத்தான் அவள் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் என்று அப்போது அவருக்குத் தோன்றியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.