Author: பதாகை

ஜே. பிரோஸ்கான்- இரவைத் தின்று ஏப்பமிடுதல், ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

ஜே. பிரோஸ்கான்

இரவைத் தின்று ஏப்பமிடுதல்
ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

இரவைத் தின்று ஏப்பமிடுதல்

பின்னோக்கிய ஆதி பரம்பரையின்
முதல் மூன்றுக்கு பின்னரான
பரம்பரையின் முதல் தலைமுறை நான்.
அன்று சூஃபிசம் பயிற்று வைத்த
ஏழாவது பரம்பரையின் இரண்டாம்
தலைமுறை என் உம்மம்மா.
மாயலிஷம் மந்திர உபாயம்
பெருகிப் பரவி நின்ற ஆதிக் காலமதில்
சூஃபிசம் வழியும் சொற்களால்
சைத்தானை விரட்டும் கலை
என் பரம்பரையின் குருதியில்
உயிரோட்டம் பெற்றிருந்த சேதி
நேற்றுக்கு முந்தைய நாள்
பரண் மேல தூசி படிந்திருந்த
ஆதி நூலொன்றில் உம்மம்மாவின்
மையெழுத்து எனக்கு அடையாளப்படுத்தியது.
நான் இப்போது
உறக்கத்திலிருக்கிறேன்
கனவின் முடிவில் நான்
சில ரகசியங்களைச் சொல்லாமல்
விழித்துக் கொள்ள வேண்டுமென்பதாக
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நான் ரகசியங்களைச் சொல்ல வேண்டுமானால்
நீங்கள் என் உறக்கத்தை இன்னுமொரு
இரவு நீடித்து தர வேண்டும்.
..

ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

பருகி முடித்த ஒரு குவளை
பழரசத்திலிருந்து
தனியாகப் பிரித்தறிந்த
புத்தி ததும்பலை
அந்த இரவு வாசித்துக் கொண்டிருந்தது.
இசையால் நிறைந்த ஒவ்வொரு
ஆதி உம்மத்தும்
தத்தமது சந்தோசங்களை
பகிர்ந்தளித்துக் குதூகலித்து கொள்கிறது.
மது நிரம்பி வழியும்
ஆண் தேவதைகள்
ஆளுக்காள் நடன மாதுக்களை
ரப்பான் இசைப்பது போல்
மெல்லமாக வருடி ருசிக்கிறார்கள்.
ஆட்டமாவு பெரும் ரொட்டிகளும்
தடை செய்யப்பட்ட மிருக மச்சமுமென
விருந்தளிப்பு விழா நடந்தேறுகிறது.
அவ்வூரின் எதிர் வாசிகள்
அவசர அவசரமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஊர் எல்லையில் பதாதைகளை.
இங்கே மனிதர்கள் வாழுகிறார்கள், ஜாக்கிரதையென.
மேய்ச்சலுக்கேனும் ஆட்டு மந்தைகள்
அவ்வூரை நெருங்கியதில்லை.
கறி இறைச்சிகளாக
செல்வதை விடுத்துமென
ஆட்டிடையானொருவனின்
அரேபிய கதையொன்று முடிகிறது.

ஜே.பிரோஸ்கான்

சலூன் – சங்கர் சிறுகதை

சங்கர்

எங்கள் தெருவில் புதிதாக ஆரம்பித்திருந்த பிரபல சலூனிற்கு அழைத்திருந்தேன். “சீனியர் இல்லை. ட்ரைனீதான் இருக்கிறார் உங்களுக்கு ஓக்கேவா?” என்று மறுபடி அழைத்துக் கேட்டார்கள். “இல்லை, நாளை வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

திரும்பினால் அம்மா. “ஏன்டா… முடிவெட்ட போகலயா?”

“இல்லம்மா… ஸ்பெசலிஸ்ட் இல்லயாம்”

“முடிவெட்றதுல என்னட ஸ்பசெலிஸ்ட்… எதுக்குத்தான் இப்படி காசக் கரியாக்குறியோ… நீ ஸ்கூல் படிக்கும்போது உனக்கு பழனி வெட்டிவிடுவான் நியாபகம் இருக்கா… அஞ்சோ பத்தோதான் வாங்குவான்.. ஆனா நல்ல ஒட்ட வெட்டிவிடுவான். இப்ப என்னடான்னா நாலு முடிய வெட்டிக்கிட்டு வந்து எழ நூறு ரூபா ஆச்சுங்கிற. மணி பத்தாகப் போகுது சீக்கிரம் வேற எங்கயாச்சும் போய் வெட்டிட்டு வாடா. ஊர்ல வேற கடையா இல்ல? வெளக்கு வைக்கிற நேரத்துல அப்றம் முடிவெட்டப்போறேன்னு கிளம்புவ…”

“நீ எப்பத்தான்மா மாறுவ?”

“என்னடா மாறனும்?”

ஒரு நொடி அமைதியாக இருந்தேன். “இப்பயும் ஸ்கூல் பையனாட்டம் ஒட்ட வெட்டிப்பாங்களா?”

“ஆமா, அப்றம் தல வலிக்குது. தலைல நீர் கோத்துருக்குன்னு யாரு சொல்றா, நானா நீயா?” அம்மா அடுத்த பத்து நிமிசத்திற்கு பேசுவார் என்று தெரியும். சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

பழனி. அம்மா ஒவ்வொரு முறை முடிவெட்டப் போகும்போதும் சொல்வதாலோ ஏனோ அவரை இன்றுவரை நான் மறக்கவில்லை. அல்லது வேறு காரணங்களுக்காகவும் இருக்கலாம்.

“அம்மா பழனி வந்துருக்கான்மா”

“முடிய நல்லா ஒட்ட வெட்ட சொல்லு. போன வாரந்தான் வெட்டுனது. அதுக்குள்ள காடு மாதிரி வளந்து நிக்குது”

கிணத்தடியில் பையுடன் உட்கார்ந்திருந்தார் பழனி. காதுக்கு மேலே இரண்டு பக்கமும் கொஞ்சம் கருப்பு முடி இருந்தது. மற்ற இடங்களிலெல்லாம் அவர் சிரிப்பைப் போல் பளிச்சென்று இருந்தன.

“பழனி, நீ இன்னைக்கு பொடனி பக்கம் கோடு போடாத. அப்படியே விட்று. கிருதாவும் எடுக்க வேணாம்”

“அய்யோ அம்மா வையும் சாமி…” என்று சொல்லிக்கொண்டே முடியை வெட்டத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை முடி வெட்டும்போதும் நான் சொல்லும்படி வெட்டுமாறு அவரிடம் கெஞ்சி, அழுது புரள்வேன். பள்ளியில் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பது ஆசை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லும்படியே வெட்டுவார். ஏறக்குறைய மொட்டையடித்த மாதிரிதான் இருக்கும்.

“தீவாளிக்கு ஊருக்கு போலையா?” என்று கேட்டார்.

“போறோம்…” என்றேன் விசும்பலுடன். “பழனி… ப்ளீஸ், கிருதாவ எடுக்காத, ப்ளீஸ்.”

“அம்மா வையும் சாமீ… அழுகாம திரும்பு…” அழுகையை அடக்கமாட்டாமல் கத்தத் தொடங்கினேன். அம்மா அடுப்படியிலிருந்து வந்தார். ” அம்மா…ப்ளீஸ்மா… முடிய ஒட்ட வெட்ட வேணாம்ன்னு சொல்லும்மா. கிருதாவ எடுக்க வேணாம்மா…”

“டேய்… சளி புடிச்சுக்கிட்டே இருக்கு. எத்தன தடவ ஒரு மாசத்துல ஆஸ்பிடல் போறது,.. ஒழுங்கா ஒட்ட வெட்டிக்க,” என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். அன்று கடவுளுக்கும், பழனிக்கும் என் அம்மாவுக்கும் இரக்கமே எல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அம்மா சொன்னபடியே வெட்டிவிட்டு இரண்டரை ரூபாயையும், நான்கு மாம்பழங்களையும் வாங்கிக்கொண்டு சென்றார் பழனி.

ஊரில் இரண்டு முடிவெட்டும் கடைகள் இருந்தன. பழனி மட்டும்தான் வீட்டிற்கு வந்து வெட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு கடைக்குச் சென்று முடி வெட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் அதற்கு ஒன்றரை கிலோமீட்டர் நடந்து வர வேண்டும். அப்பாவிடம் சைக்கிளில் கொண்டு வந்து விடச் சொன்னால், ” எதுக்கு கடைக்குலாம் போகனும்… அதான் பழனி வர்றான்ல…” என்பார்.

அடுத்தடுத்த முறைகளும் அதே கதைதான். நான் அழுவதும் அவர், “அம்மா வையும் சாமீ,” என்பதுமாய் சென்றன. ஒரு மாதம் கழித்து வந்த அன்று எப்போதும் இருக்கும் அந்த பளிச் புன்னகை அவர் முகத்தில் இல்லை. அதே சமயம் கோபமாய் இருப்பதாயும் இல்லை.

பழனி வெட்ட ஆரம்பித்தார். எப்படியும் நான் சொல்லும்படி வெட்டப்போவதில்லை என்பதால் போன முறையிலிருந்தே அழுகையை நிறுத்தியிருந்தேன். “எப்படியோ வெட்டிவிட்டுப் போ,” என்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் பழனியும் அமைதியாகவே அவர் வேலையைச் செய்து கொண்டிருந்தார். கிருதாவையும் எடுத்தார். எழுந்திருக்கப் போனவனிடம், “இரு சாமீ,” என்று கண்ணாடியில் பின் கழுத்தைக் காட்டினார். எப்போதும் இருக்கும் கோடு இல்லை. பின் கழுத்தில் இருக்கும் முடியை எடுக்காமல் அப்படியே விட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த சந்தோசம் என்னைப் போட்டு அமுக்குவது போல் உணர்ந்தேன். “தாங்ஸ் பழனி… தாங்ஸ்” என்று கத்தினேன். வந்ததிலிருந்து அமைதியாக இருந்தவர் அப்போது மெலிதாய் ஒரு சிரிப்பை சிரித்தார். பின் காதோரம், “மெயின் ரோட்டுல கடை போட்ருக்கேன். அடுத்த வாட்டில இருந்து கடைக்கு வந்துரு,” என்றார். நான் அவர் சொன்னதை சரியாய் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனக்கு சந்தோசம் தலைக்கு மேல் ஓடியதால் குடுகுடுவென்று ஓடி அம்மாவிடம் தண்ணீர் வைக்கச் சொன்னேன்.

ஒரு மாதம் ஓடியது. பழனி அந்த ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்தார், அப்பாவிற்கு முடி வெட்ட. தம்பிக்கு வெட்டச் சொல்லி அனுப்பியபோது வரவில்லை. எனக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது. அம்மாவிடம் பழனி கடை போட்டிருக்கும் விசயத்தைச் சொன்னேன். “கடைல போய் வெட்டனுமா?” என்று ஒரு நிமிடம் பார்த்தவர், “அதெல்லாம் வேண்டாம். நான் பாத்தன்னா இங்கயே வந்து வெட்டிவிடச் சொல்றேன். நீ போய் விளையாடு,” என்றார்.

அப்பாவின் கடைக்குச் செல்லும் வழியில் இருந்த முடிவெட்டும் கடைகளின் பக்கம் தலையை எதேச்சையாய் திருப்பினேன். குப்பென்று வேர்த்துவிட்டது. பயந்து போய் யாரும் பார்த்துவிடுவதற்குள் ஓடத் தொடங்கினேன்.

திரும்பி வரும்போது அப்பாவும் உடன் இருந்தார். அந்த முடிவெட்டும் கடை வந்தவுடன் தலையைத் திருப்பலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பம். பயம். ஆனாலும் பார்க்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உந்தியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும்போது அந்தக் கடையைப் பற்றியும், கடைச் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரைப் பற்றியும் இரண்டொரு முறை சண்முகம் பேசியிருக்கிறான். சேலை விலகிய நிலையில் இருக்கும் அந்த பெண்ணின் போஸ்ட்டரை நான் பார்ப்பது அதுதான் முதல் முறை என்பதால் உண்டான பயம் இன்றைக்கும் ஒரு மெல்லிய புன்னகையைத் தந்துகொண்டிருக்கிறது.

அம்மா எப்போது பழனியிடம் பேசினார் என்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தூங்கி எழுந்து வரும்போது கிணற்றடியில் தம்பிக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தார். வெட்டி முடித்தவுடன் அவன் காதிலும் ஏதோ சொன்னார். நினைத்தபடியே வீட்டிற்குள் வந்தவன், “அம்மா பழனி கடைக்கு வரச்சொல்றான்மா,” என்றான்.

அம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவரிடம், “ஏன் பழனி பசங்ககிட்ட என்ன சொல்லற ஒவ்வொரு தடவயும்”

“இல்ல தாயி, முன்ன மாதிரி நடக்க முடியல. காலு ரொம்ப நோவுது, அதான் கடைப் பக்கம் வரச்சொன்னேன்…”

“அவரு வீட்ல இருக்கறது ஒரு நாளுதான் பழனி. அன்னைக்கும் கடைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லலாம் முடியாது. நீ வேணா அஞ்சு ரூபா வாங்கிக்க, நானும் வீட்டுக்கு எடுத்துட்டுபோக எதுனாச்சும் தர்றேன். நீ வீட்டுக்கே வந்து வெட்டிவிட்டுப் போ,” என்றார். பழனி எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சென்றுவிட்டார்.

அந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஓரிரு முறை வீட்டிற்கு வந்தார் பழனி. ஒவ்வொரு முறையும் கடையில் கண்ணாடிகள் வாங்கியிருப்பதாயும், சுத்தும் சேர் வாங்கியிருப்பதாயும் சொல்லுவார். ஆனால் கடைக்கு வா என்று கூப்பிடவில்லை. எனக்கு அவர் கடைக்குப் போகவேண்டும் போலிருந்தது. ஒருவேளை அவர் கடைகளிலும் போஸ்டர்கள் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் கடையை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லை. மெயின் ரோட்டில் இருந்த இரண்டு கடைகள் மட்டும்தான் நாங்கள் அந்த ஊரைவிட்டு வரும் வரை இருந்தன. அப்பா என்னை சைக்கிளில் கூட்டிக்கொண்டுபோய் முடிவெட்டிக் கூட்டிக்கொண்டு வரத் தொடங்கிவிட்டிருந்தார்.

அன்னை – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

“உன்ன அனுப்புறதா இல்ல, அந்த கெழவிக்கு இதே வேலையாப் போச்சி, எப்ப பாரு ட்ராமா போட்டுக்கிட்டு,” பால் பாத்திரத்தை நங்கென்று அடுப்பின் மேல் வைத்தாள் கெளசல்யா.

சாந்தாவிற்கு சத்தத்தில் பல் கூசியது, பல்லை நாவால் தேய்த்துக் கொண்டார்.

“எல்லாம் நீ குடுக்குற எடம்,” என்றாள் சீறலாய். “கொழந்த பொறந்தா அவ அவ அம்மா வருஷக்கணக்கா வந்து இருந்து பாத்துக்குராங்க, எனக்குப் பாரு கொடுப்பினைய, எடுத்ததே ஆறு மாச விசாதான் அதுல ரெண்டு மாசம் கூட முழுசா முடியல, அதுக்குல்ல போறேனு நிக்கற.” கெளசல்யாவின் தோள்கள் குலுங்க, கேவல் ஒலி எழுந்தது.

“பொறந்து ரெண்டு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, மகதி எம்மூஞ்ச பாத்து பாத்து சிரிக்குது, எனக்கு மட்டும் அத உட்டுட்டு போகனும்னு ஆசயா கெளசி? ஆறு மாசம் அதுகூட இருந்துட்டு உனக்கும் ஒத்தாசயா இருக்கனும்னுதான் ஆச. உடம்பு முடியலனு சொன்னா என்ன பண்ண முடியும்?”

“இதெல்லாம் உன்ன அங்க வர வைக்க அந்த கெழவி போடுற நாடகம். அத்தனை பேரு அங்க இருக்காங்க, அது போதாதா அதுக்கு. காய்காரம்மா பாக்யத்துக்கு பணங்குடுத்து டெய்லி வந்து பேசிட்டு இருக்கச் சொல்லிட்டுதானே வந்திருக்க? அது பத்தாதுனு ஒரு நாடகம் கூட மிஸ் பண்ணாம பாக்கனும்னு அதோட ரூம்ல புது டிவி வாங்கி வெச்சிருக்க, மணியண்ணன்கிட்ட தெனம் அதுக்கு புடிச்ச அயிட்டம் ஒன்னாவுது பண்ணிருனு சொல்லியிருக்க, அப்பாவையும் அருணையும் வேற, அது எது சொன்னாலும், கத்தினாலும் வாயே தொறக்ககூடாதுனு மெரட்டி வெச்சிட்டு வந்திருக்க, இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நெனச்சியா?. ஒரு ஆறு மாசம் அந்த கெழவி நீ இல்லாம இருக்காதா? உடம்பெல்லாம் விஷம்,” என்றாள், அழுகையை நிறுத்தாமல்.

“அங்க இல்லாதப்போ ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா…”

“அடேயப்பா! அப்படியே பொட்டுனு போயிரும் உங்கொம்மா. எல்லார் உசுரயும் எடுத்துட்டுதான் அது போகும்,” கண்ணைத் துடைத்துக் கொண்டே பாலை அடுப்பு பாத்திரத்தில் இருந்து டம்பளரில் ஊற்றினாள். காபித்தூள், சர்க்கரை போட்டு கலக்கி எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள்.

சற்று நேரத்தில் குழந்தையுடன் கீழே வந்தாள். குழந்தையை ராக்கரில் போட்டுவிட்டு சமையலறைக்கு வந்தாள். சாந்தம்மா உணவு மேஜையில் அமர்ந்த்து அழுது கொண்டிருந்தார்.

மகளைப் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “கிளம்பும்போதே இப்பிடி உட்டுட்டு போகாதன்னு புலம்பிகிட்டே இருந்துச்சு, ஏதாவுது ஆயிருமோனு பயமா இருக்கு, நான் போறண்டி”

“போ, அப்புறம் உனக்கு மக இருக்கானு மறந்திரு”

“ஏண்டி இப்படி பேசற”

“முப்பது வருஷமா மருமகன் வீட்டில ஒக்காந்துகிட்டு எல்லாத்தையும் ஆட்டி வெச்சிக்கிட்டு இருக்கு, அது சொல்ற ஆட்டத்தை எல்லாம் நீயும் ஆடிக்கிட்டு இருக்க. நிஜமாத்தான் சொல்றேன், பொண்ணு வேணுமா அம்மா வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ”

“எல்லாருக்கும் வயசாகும் கெளசி”

“சாபம் உடுறியா உடு. உன்ன மாமியார் இருந்தாக்கூட வேலை வாங்காத அளவுக்கு வேல வாங்கிட்டு இருக்கு அது. தெனம் இதப்பண்ணு அதப்பண்ணு, அதை அங்க வெக்காத இங்க வை, டிவியை போடு சீக்கிரம்னு விரட்டிகிட்டே இருக்க மகராசிக்கு தான் உன்கிட்ட எப்பவும் பவசு.”

கெளசி காய்கறிகளை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெட்டத் தொடங்கினாள். சாந்தம்மா, “இங்க குடு நான் வெட்றேன்,” என்றார்.

“ஒன்னும் வேணாம் நானே பண்ணிக்கிறேன், போய்டியினா நான் தானே பண்ணனும்.”

ரகு படியிறங்கும் ஓசை கேட்டது.

எடுத்து வந்த காலி காபி கோப்பையை சமையலறை சிங்கில் போட்டான். அவனை பார்க்காமலே, “மெதுவா இறங்க மாட்டிங்களா, கொழந்த தூங்குதில்ல,” என்றாள் கெளசி.

ரகு சிரித்துக் கொண்டே “என்ன காலங்காத்தால அம்மா பொண்ணு சண்டையா?” என்றான். பேசிக்கொண்டே சாந்தம்மா அமர்ந்திர்ந்த உணவு மேஜையைக் கடந்து சென்று தோட்டக் கதவின் திரைச்சீலைகளை விலக்கினான் . கண்ணாடியால் ஆன இரட்டைக் கதவுகள் வழியாக தோட்டத்தில் இருந்து சூரிய ஒளி உள்ளிறங்கியது.

சாந்தம்மா தணிந்த குரலில் ” காலையில ஊர்ல இருந்து போன் வந்தது, கெளசி பாட்டிக்கு ஒடம்பு செரியில்லனு”

“என்னாச்சு?”

“ப்ரஷர் ரொம்ப கம்மியா இருக்காம், எந்திரிக்கவே முடியலயாம். சாப்ட்டே ரெண்டு நாள் ஆச்சாம், பால்தான் ஸ்பூன்ல…” சொல்லி முடிக்கும் முன்னே அழ ஆரம்பித்துவிட்டார்.

“ஆஸ்பிடல் கூட்டிடு போலயா அத்த?”

“ஒண்ணும் பெருசா பண்ண முடியாது வீட்லேயே வெச்சுப் பாருங்கனு சொல்லிட்டாங்களாம்”

“சாப்புடாம தர்ணா பண்ணா ப்ரஷர் எறங்கதாம் செய்யும்,” சீறலாய்ச் சொன்னாள் கெளசி.

” சாப்பிட முடியலயாம்டி” என்றார் சாந்தம்மா.

ரகு போனை எடுத்து டயல் செய்தான்.

“மாமா, ரகு. ஹாங் நல்லா இருக்கேன். பாட்டிக்கு எப்படி இருக்கு?”

“…”

“ம்”

“…”

“ம்”

“…”

“ம்”

“சரி நீங்க பாருங்க, நான் மத்தியானத்துக்கு மேல போன் பண்ணிச் சொல்றேன்”, போனை வைத்தான்.

“என்ன, அனுப்பி வைங்கனு சொல்றாரா, குடுங்க போனை,” என்று ரகுவை நோக்கி வந்தாள் கெளசி.

” கெளசி,” என்றான் ரகு சற்று குரலை உயர்த்தி.

“ஆமா என்ன மெரட்டி அடக்குங்க,” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

“சீரியஸாதான் இருக்கு கெளசி, கொழந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத. அத்த, உங்க டிக்கெட் ப்ரிண்ட் அவுட் குடுக்கிறிங்களா, இப்பவே போன் பண்றேன்,” என்றான் ரகு

சாந்தம்மா முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொண்டு டிக்கெட் எடுக்க மாடிப்படி ஏறினார்.

சாந்தம்மா லண்டன் வந்து ஒரு வாரம் வரைக்கும் பாட்டி நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகுதான் சரியாக சாப்பிட முடியவில்லை, இரவெல்லாம் தூங்காமல் கத்துவது என்று ஒன்றொன்றாக ஆரம்பித்தது. இரண்டு நாளாக படுத்த படுக்கை.

சாந்தம்மாவிற்கு குற்றவுணர்ச்சி வாட்டியது. எப்படியாவது அங்கு போய் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். ரகு அன்று மதியமே கிளம்பும் படி பயணச்சீட்டை மாற்றிக் கொடுத்தான். கெளசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது வேறு சாந்தம்மா மனதை சங்கடப்படுத்தியது.

பெட்டியில் அனைத்தையும் எடுத்து அடுக்கிவிட்டு கீழே வந்தார். அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. குழந்தையை ஸ்ட்ராலரில் போட்டு எடுத்துக் கொண்டு ஒரு நடை போக கிளம்பினார்.தினமும் செய்வதுதான். கெளசி கதவை மூட வரும்போது ஏதோ சொல்ல வந்து எதுவும் சொல்லாமல் மூடிவிட்டுச் சென்றாள்.

கோடைக்கால லண்டன் தெரு வண்ணமயமாய் இருந்தது. தெருவின் இரு மருங்கிலும் பிங்க் செர்ரி ப்ளாசம்களும், தங்கச் சங்கிலி மரம் எனப்படும் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும் லேபர்னம் மரங்களும் நின்றன. பூத்து நிற்கும் இம்மரங்களுக்கு நடுவில் நடப்பது அந்த சோகமான மனநிலையிலும் சாந்தம்மாவிற்கு இதமாக இருந்தது. குழந்தையை தள்ளிக் கொண்டு வழக்கமாக செல்லும் பூங்காவிற்கு சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தார்.

அவர் முன்னால் பழமையான ஓக் மரம் பெரிய புல்வெளியை பார்த்து நின்றுக் கொண்டிருந்தது, அதைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூத்த ரோஜா பாத்திகள். சுற்றியிருந்த இயற்கையின் வண்ணங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு நிறமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல பூங்காவில் நாய் எஜமானர்கள் தங்கள் நாய் மலம் கழிக்கும் வரை நின்று அதை பாலிதீன் பையில் அள்ளி கையில் வைத்துக் கொண்டு குப்பைத் தொட்டியை கண்ணால் தேடியபடி நடந்தனர். வயதான பாட்டிகள் சக்கரம் வைத்த பைகளைத் தள்ளிக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டே கடந்து சென்றனர். இவர்களுக்கெல்லாம் கெளசியின் பாட்டியைவிட பத்திருபது வயது அதிகமாகவே இருக்கும். இந்த ஊரில் வயதானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதில்லை, தனியாகத்தான் வாழ்கின்றனர் என்று கெளசி சொல்லியிருக்கிறாள். இங்கு வரும் வரை குழந்தைகள் ஆதரவில்லாமல் தனியாக இருப்பதால் இங்கிலாந்தில் வயதானவர்கள் எல்லோரும் சோகமாக வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள் என்றே சாந்தம்மா நினைத்திருந்தார். சிரித்துக் கொண்டு, உற்சாகமாய் சுற்றித் திரியும் இந்த பாட்டிகளை பார்த்தால் எப்போழுதுமே அவருக்கு ஆச்சரியம். ஆனால் இப்போது இவர்களைப் பார்த்தவுடன் அம்மாவின் ஞாபகம் அதிகமாக, கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

எழுந்து குழந்தையை உருட்டிக் கொண்டு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார். டி.வி.யில் ஹிந்தி நாடகம் ஓடிக்கொண்டிருந்தது, கெளசி அதைப் பார்க்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். யாரிடமோ சொல்வது போல போனில் இருந்து கண்ணை தூக்காமலே, “ஒரு மணி நேரத்துல ஏர்போர்ட் கெளம்பணும், டாக்சி வந்துரும்,” என்றாள்.

“நீயும் வரியா ஏர்போர்டுக்கு?” என்று கேட்டார் சாந்தம்மா. கெளசி எதுவும் சொல்லவில்லை.

சாந்தம்மாவிற்கு மெலிதாய் சிரிப்பு வந்தது, ரகு அலுவலகம் விட்டு வரும் வரை நைட்டியில் உலாத்திக் கொண்டிருப்பவள், டாப்பும் ஜீனும் போட்டு தயாராக உட்கார்ந்திருந்தாள்.

அம்மாவை ஏர்போர்டிற்கு அழைத்துச் சென்று, செக்கின் செய்து, செக்யூரிட்டி கேட் வாசலில் வைத்து, “போய் சேந்ததும் போன் பண்ணு “என்றதை தவிர கெளசி எதுவுமே பேசவில்லை.

தனியாக விமானத்தில் அமர்ந்தவுடன் சாந்தம்மாவிற்கு அம்மாவின் ஞாபகம் அதிகமானது. ஊர் போய் சேருவதற்குள் அம்மா போய் விடுவாளோ என்ற நினைப்பு வந்து கண்ணில் நீர் முட்டிக் கொண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறு வயது ஞாபகம். சாமிநாதபுரத்தில் குடியிருந்த அந்த ஒண்டிக் குடித்தன வீடு, எந்நேரமும் உடனிருக்கும் விளையாட்டுத் தோழிகள், சாப்பாட்டிற்கே இல்லாவிட்டாலும் சந்தோஷமான நாட்கள் அவை. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நூல் தோண்டி, தறி நெய்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வேட்டி நெய்ய முடியும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு அதில் கிடைக்கும் கூலியில்தான் சாப்பாடு. பல நாட்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம். அவர்களுக்கு இருக்கிறதோ இல்லயோ சாந்தம்மாவிற்கு ஒரு வேளை சாப்பாட்டிற்காவது அம்மா வழி செய்து விடுவார். அப்பொழுதே அம்மா எல்லோரிடமும் அதிகார தோரணையில்தான் பேசுவார், அது அவர் சுபாவம்.அப்பாவும் சாந்தம்மாவும் நேரதிர், வாயே திறக்க மாட்டார்கள்.

பத்தாவதில் அவர் பள்ளியிலேயே முதலாவதாக சாந்தம்மா தேறியிருந்தார். அம்மாவிடம் தாயார் மடத்தில் இலவச தையல் கிளாஸ்ஸில் சேர்த்துவிட்டால் அவர்களே கற்றுக் கொடுத்து, ஒரு தையல் மிஷினும் கொடுப்பதாக யாரோ சொல்ல, மேற்கொண்டு படிக்க வேண்டாம் நீ தையல் கற்றுக் கொள்ள போ, என்று சொல்லிவிட்டார். க்ரேஸி மிஸ் வீட்டிற்கே வந்து, பெண்ணைப் படிக்க வையுங்கள், என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தார், அம்மா பிடிவாதமாக மறுத்து விட்டார்.

தையல் கிளாசில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே கெளசியின் அப்பா வீட்டுக்காரர்கள் பெண் கேட்டு வர, கல்யாணமும் அந்த வயதிலேயே முடிந்து விட்டது. திருமணமான ஓரிரு வருடத்திலேயே அப்பா இறந்துவிட்டார், அப்பொழுதிருந்து அம்மா சாந்தம்மா வீட்டில்தான் இருக்கிறார். நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது சாந்தம்மாவிற்கு, அம்மா சொன்னதை இது நாள் வரை ஒரு முறை கூட மறுத்துப் பேசியதேயில்லை. விமானத்தில் இருந்த பத்து மணி நேரமும் தூக்கமும் இல்லாமல், கொடுத்த எதையும் சாப்பிடவும் முடியாமல் இந்நினைவுகளுடன் சங்கடமாக நெளிந்து கொண்டே இருந்தார்.

அழைத்துச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அருண், பார்த்தவுடன், “அதுக்கு ஒன்னும் இல்லமா, உன்ன பாத்தா சரி ஆயிடும் வா,” என்றவன் காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவனாகவே “ நைட்லாம் ஐயோ ஐயோனு கத்துது, எனக்கே பயமா இருக்கு, யாருக்குமே தூக்கம் இல்ல,” என்றான்.

காரை வழியில் எங்குமே நிறுத்த விடவில்லை சாந்தம்மா. சேலம் வந்து சேர்ந்தவுடன், வீட்டு பக்கத்தில் இருக்கும் ரோஷன் பேக்கரியில் நிறுத்தி தேங்காய் பன் வாங்கி வர சொன்னார். சாந்தம்மாவின் சிறுவயது தோழி அனிதாவின் குடும்ப கடை அது. “ஒன்னுமே சாப்புடறதில்லமா,” என்றவனிடம் “என் மனசு திருப்திக்கிடா, போ வாங்கிட்டு வா,” என்றார்.

தேங்காய் பன்னுடனும், நீண்ட பயணத்தின் களைப்புடனும் சாந்தம்மா வீட்டிற்குள் நுழைந்தார்.

அம்மாவை, அவருடைய அறையில் இல்லாமல், வீட்டு ஹாலிலேயே ஒரு ஓரமாய் ஒரு புதிய நைலான் நாடா கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். தலை மொட்டை அடித்திருந்தது. வாய் எதையோ அனத்திக் கொண்டிருந்தது.

“அம்மா, பாரு சாந்தா வந்திருக்கேன்,” என்று சில முறை சொன்னார்.

“தூங்கிட்டிருக்கு, கொஞ்ச நேரத்துல எந்திரிச்சிரும்,” என்றார் கெளசியின் அப்பா.

“என்னங்க மொட்டை எல்லாம் அடிச்சிருக்கிங்க?”

கெளசியின் அப்பா, “ நீ போன ரெண்டு வாரத்துலயே தலை ரொம்ப அரிக்கிதுனு சொன்னுச்சு. டாக்டர் பாத்திட்டு சொரிஞ்சு சொரிஞ்சு ரொம்ப புண்ணா இருக்கு முடி எடுத்தா தான் மருந்து போட முடியும்னு சொன்னாரு, அதான்.. இதையெல்லாம் சொன்னா அங்க வருத்தப்பட்டிகிட்டு இருப்பனு சொல்லல, போ துணியாவுது மாத்திகிட்டு வா, பத்து நிமிஷத்துல திரும்பி எந்திருச்சிரும்,“ என்றார்.

அம்மாவின் உடல் பாதியாகி இருந்தது, கன்னங்கள் இருக்கும் இடமே தெரியாமல், பற்கள் மிக பெரிதாக தெரிந்தது. அம்மாவின் கைகளை தடவிக் கொண்டும் முகத்தையே பார்த்துக் கொண்டும் அருகில் உட்கார்ந்திருந்தார் சாந்தம்மா. திடீரென்று ஐயோ என்று சத்தமாக, ஆங்காரமாய் ஒரு ஓலம் அம்மாவிடம் இருந்து வந்தது. அவ்வளவு நொய்மையான உடலில் இருந்து வரும் குரலே அல்ல அது. சாந்தம்மாவிற்கு அதிர்ச்சியில் உடல் குலுங்கியது, பற்கள் தாங்கவே முடியாத அளவிற்கு கூசியது. “ஐயோ… ஐயோ… ஐயோ…” வென உக்கிரமான ஜெபம் போல கத்திக் கொண்டே இருந்தார்.

சாந்தம்மா சற்று சுதாரித்து கொண்டு, அம்மாவின் மோவாயை பிடித்து ஆட்டி, சத்தமாக “அம்மா, சாந்தாமா, சாந்தா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார். கத்தல் மெதுவாக நின்றது. அம்மாவின் வழக்கமான குரல் “வந்துட்டியா..” என்று ஈனஸ்வரத்தில் கேட்டது.

“வந்துட்டேமா, தொட்டுப் பாரு இங்கதான் இருக்கேன்,” சொல்லிக் கொண்டே அவர் கைகளை எடுத்து தன் முகத்தின் மேல் வைத்தார். அம்மாவின் கைகள் சாந்தாவின் முகத்தில் அளைந்தது. அதே ஈனஸ்வரத்தில், “போவாத, உட்டுட்டுப் போவாத,” என்று அனத்தல் எழுந்தது.

“எங்கயும் போவல, உம் பக்கத்துலதான் இருக்கேன், கவலப்படாத, தேங்கா பன்னு சாப்புடிரியா, அனிதா கடைல வாங்கிட்டு வந்தேன்.”

“உம்” என்றார் அம்மா. அம்மாவை தூக்கி சாய்ந்தவாக்கில் உட்கார்த்தி வைத்தார். தேங்காய் பன்னை சிறிதாகப் பிய்த்து, மெது மெதுப்பு வரும் வரை பாலில் சில முறை முக்கி, அம்மாவின் வாயில் வைத்தார். உடனே விழுங்கி விட்டு அடுத்த வாய்க்கு வாயைத் திறந்தது.

“பாரு, நாலு நாளா யாரு எது குடுத்தாலும் வாயே தொறக்கல, நீ ஊட்டுனா கப்பு கப்புனு முழுங்குது,” என்றான் அருண் எரிச்சலாக.

“சும்மா இருடா கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்சம் பால் கொண்டு வா, போ,” என்றார் சாந்தா.

ஒரு மணி நேரத்தில் பாலில் தொய்த்துக் கொடுத்த முழு பன்னையும் அம்மா சாப்பிட்டு முடித்தார். “சாப்புடலனா உடம்பு என்னத்துக்கு ஆறதும்மா, சாப்புட வேண்டியதுதான,” என்றார் சாந்தா.

“சாப்புட புடிக்கல” என்றார் அம்மா அதே ஈனஸ்வரத்தில்.

“சரி, படுத்துக்கோ. நைட்டு நானே சமைக்கிறேன், என்ன வேணும் உனக்கு?”

“பொங்கலு,” என்றார் அம்மா.

சாந்தம்மா முகத்தில் புன்னகை அரும்பியது. “சரி, பண்ணி தரேன், இப்போ கொஞ்ச நேரம் தூங்கு, நான் தான் வந்துட்டேன்ல, எல்லாம் சரி ஆயிடும்.”

அருண் பாட்டியை முறைத்து பார்த்துவிட்டு எழுந்து போனான்.

சாந்தம்மா வந்திறங்கிய மூன்று நாளில் எழுந்து சற்று நடமாடும் அளவுக்கு உடல் தேறி வந்தது பாட்டிக்கு. தினமும் சாந்தா அவருக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார், கேட்டதை சமைத்து போட்டார், அனத்தலும் அலறலும் மூன்று நாளில் சுத்தமாக நின்று போனது. நான்காம் நாள் அதிகாலையில் சாந்தம்மா அசந்து தூங்கி கொண்டிருந்தார்.

“சாந்தா, சாந்தா ஏய் சாந்தா,” பிசிரற்ற அம்மாவின் குரல் கூவி அழைக்க திடுக்கிட்டு எழுந்து ஹாலுக்கு ஓடினார். அம்மாவின் முகம் மிகத் தெளிவாக இருந்தது, ஊருக்குப் போவதற்கு முன்னால் இருந்ததை விட நன்றாக இருப்பதாக சாந்தம்மாவிற்கு தோன்றியது. “என்னம்மா,” என்றார்.

“இன்னும் என்ன தூங்கிட்டு இருக்க, வூட்டு வாசல்ல கோலம் போட்டு எத்தன நாள் ஆவுது, நீ போனதுல இருந்து உம் மருமவ கீழ தல காட்றதே இல்ல, போயி கோலத்த போடு.“

“ம்” என்று விட்டு கொல்லைப்புறம் நோக்கி நகர்ந்தார்.

“சாந்தா, அந்த சுப்பரபாதம் டி.வி போட்டுட்டு போ”

ரிமோட் எடுத்து TTD சானலை போட்டு விட்டு, கொல்லைப்புறம் சென்றார். கோல மாவை எடுத்துக் கொண்டு வரும் வழியில் ஊருக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன் நட்ட குட்டை ரக பப்பாளி முதல் காய் போட்டிருப்பதைப் பார்த்து அதை மெதுவாக தடவி கொடுத்தார். அருகில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து அதை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அடி வயிற்றில் இருந்து ஒரு கேவல் எழுந்தது. கைகளால் வாயைப் பொத்தியபடி குரல் அடக்கி அழ ஆரம்பித்தார்.

வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் – காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

என் தோளில் அசைந்தாடியபடி
பயணத்தில் உடன் செல்கிறது
விக்கிரமாதித்தன்
விட்டுச்சென்ற வேதாளம்

விக்கிரமாதித்தன் சுமந்து பழகியது
ஆனால் விக்கிரமாதித்தன்தான் வேண்டும்
என்பதில்லை.
வேதாளத்துக்கு தேவைப்படுவதெல்லாம்
தொங்கிச்செல்ல ஒரு தோள்.

கூரிய நகங்களால்
கூந்தலை கோதி சிக்கெடுத்துக்கொண்டே
சுமந்து செல்பவரின் காலடியின் கதிக்கு ஏற்ப
ஏதாவதொரு பாடலை
மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே வரும்
வழிநெடுக்க.

அவ்வப்போது
பிசிறடிகும் குரலை மட்டும்
பொருட்படுத்தவில்லை என்றால் போதும்
பெரிய தொந்தரவு என ஏதுமில்லை

பாடல்கள் தீர்ந்து பயணம் நீண்டு விட்டாலும்
பிரச்சினையில்லை. சலிப்பில்லாமல்
எதையாவது பேசிக்கொண்டே வரும் என்பதால்
வழித்துணைக்கு மிகவும் ஏற்றது.

வேதாளத்துடன் செல்வதற்கான
விதிகள் மிகவும் எளியவை.
மெதுவாகச் செல்வதை
வேதாளம் விரும்பாது
கால் தடுமாறும் என்பதால்
ஓடுவதும் கூடாது
எடை அழுத்தி
தோள்பட்டை கடுக்கும்போது மட்டும்
கீழிறக்கி அடுத்த தோள்பட்டைக்கு
மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதாளத்தின் பேச்சில்
தன்னிலை மறந்து
தவறிப்போய்
தரையில் சுருண்டு படுத்திருக்கும் சர்ப்பத்தையோ
காய்ந்த இலைகளுக்குள்
மறைந்திருக்கும் நரகலையோ
மிதித்துவிடாமல் நடக்க வேண்டும்.

முருங்கைமரம் அடர்ந்த வழியில்
செல்லும்போது மட்டும்
இன்னும் சற்று
எச்சரிக்கை தேவை.

கவனம் இன்றி நாம் சொல்லும்
பிழையான பதிலில் கோபமுற்று,
சடாரென பாய்ந்து ஏறிக்கொள்ளும்
மரத்தில்.

பிறகு மரமேறி, சமாதானம் கூறி
கட்டுக்களை வெட்டி வீழ்த்தி
தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தை
நிதானமாய் இறக்க வேண்டும்.

கோபம் குறையவில்லை என்றால்
ஒரு முறை மானசீகமாய் கொஞ்சி
மன்னிப்பு கோரினால் போதும்.
உற்சாகமடைந்து
உடனே வந்து ஏறிக்கொள்ளும்
தோளில்.

வழுக்கும் கோந்து கொண்டது
கம்பளிப்பூச்சிகள் அடர்ந்தது
எளிதில் உடையக்கூடியது, என்பதால்
முருங்கை மரத்திடமும்
கவனம் அவசியம்

இவ்வளவு
பிரச்சினைகளை வைத்துக்கொண்டு
ஒரு வேதாளத்தை
ஏன் சுமக்க வேண்டும்?
என்று நீங்கள் கேட்கலாம்

யாருமில்லாமல்
தனியாக செல்வதற்கு பதில்
வழித்துணைக்கு
ஒரு வேதாளத்தையாவது
அழைத்துபோகலாம்தானே?
எனக் கேட்டு நட்பாய் சிரிக்கிறது
வேதாளம்

சரி போகிறது
நம்மை விட்டால்
வேறு எவர்தான் வேதாளத்தை
வெளியே அழைத்துச் செல்வது?

 

புதையல் – வே. நி. சூர்யா கவிதை

வே. நி. சூரியா

யாரால் உறுதியாய்க் கூறமுடியும்
யாரும் யாரைவிட்டும் போகவில்லையென
துயிலுக்கும் விழிப்பிற்குமிடையே
நீந்திச் செல்கின்றன காரன்னப் பறவைகள்
புனல்மேனியெங்கும் நீலப்பிரகாசப் பிரதிபலிப்பு
இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது உதயகாலம்
வல்லோனின் மோதிரத்திலிருக்கும் ரத்தினமென
ஜொலிக்கக் காத்திருக்கிறது விடிவெள்ளி
சப்தமின்றி நம்மெல்லாரின் சொப்பனத்திலும் மெதுவாக
ஒட்டப்படுகிறது ஒரு காணவில்லை சுவரொட்டி
பொழுது புலர்ந்துவிட்டாலோ
ஒரு ஆழப்புதைக்கப்பட்ட புதையலை
வேட்டையாடுபவனைப் போல
நாம் நம்மை தேடிச் சென்றாக வேண்டும்
அருமை வாசகரே, நீங்கள் தயாரா?