Author: பதாகை

நல்ல விபத்து!: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா

வே. நி. சூரியா

இன்று இறப்பது அவ்வளவு விசேசம்

1

வீடுதிரும்ப நேரமானதால்
எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது
என்னை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்ட அப்பா
போனவருடம் நடந்த சாலைவிபத்தில்
ஏதோ நீ அடிபட்டதாகச் சொன்னார்கள்
சரி இங்கேயே இரு
எதற்கும் வெளியே சென்று
உன்னைத் தேடிவிட்டு வருகிறேன் என
பதைபதைக்கக் கிளம்பிப்போனார்
அவர் கூறுவது
உண்மையாகவும் இருக்கலாமென
நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்

2

வெகுநாளைக்குப் பின்பு
சாலையில் நல்ல விபத்து
சிறிய லாரிதான்
லேசாக நசுக்கியதற்கே
அனைத்தும் நொறுங்கிப்போய்
அடையாளம் தெரியாதளவு சிதைந்திருந்தது
போனவருடம் இறந்துபோன
நண்பனை ஒப்பிடும்போது
இதெல்லாம் சாதாரணம்
நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்
இறந்துபோதலோ
என் நண்பா
பேசாமல் நீயும் இன்றே இறந்திருக்கலாம்.

-பெரு. விஷ்ணுகுமார்

(ழ என்ற பாதையில் நடப்பவன்- மணல்வீடு வெளியீடு)

                            •••

இன்று இறப்பது அவ்வளவு விசேசம் என்ற தலைப்பிலேயே கவிதை தொடங்கிவிடுகிறது. வாழ்க்கையை தவறவிடுவது விசேசமா? இன்று ஏன் இறக்கவேண்டும்? இப்படியாக எண்ணங்கள் விடாப்பிடியாய் தலைக்குள் குதிக்கத் தொடங்குகின்றன. தெளிவாக  சொல்லப்போனால்,  தலைப்பை அபத்தம் என்று சுட்டலாம். வாசிப்பவனை இன்று சாக அழைக்கிறது. வாசகன் அந்த சிக்கலுக்குள் செல்லாமல் கவிதைக்குள் நுழைந்தால் அங்கு தொடர் கவிதைகள் என்று கூறத்தக்க இரண்டு நிகழ்வுகள் மொழியில் சொல்லிக்காட்டப்படுகின்றன.  குடும்ப அமைப்புகளில், நிலவும் அதீத பாதுகாப்புணர்வு அது கொடுக்கிற பதற்றம். அப்பதற்றத்திலிருந்து உருவாகிற  நம்பிக்கையின்மை.   மீண்டும் அங்கிருந்து பிரவாகமெடுக்கிற நம்பிக்கையின்மையின் மீதான நம்பிக்கையின்மை. சற்று யோசித்துப்பார்த்தால், இன்றைய குடும்ப அமைப்புகளில் இந்த அதீத பாதுகாப்புணர்வு தேசிய கீதத்தைப் போல தினசரி  இசைக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அப்போது ஒரு இரும்பு கம்பியைப் போல நின்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. குடும்ப அமைப்பை உதறி சென்ற தலைமுறை இன்று கதையாகவும் நினைவின் மியுசியத்தில் வைக்கப்படும் காட்சிப் பொருளாகவும் ஆகியிருக்கின்றனர். மேற்கண்ட கவிதை இச்சிக்கலை மிக நன்றாகவே எதிர்கொள்கிறது. தன் மகன் கண்ணெதிரே இருக்கிறானென்று தெரிந்தும் “இரு எதற்கும் உன்னை தேடிவிட்டு வருகிறேன்” என பதைபதைக்க கிளம்பும் அப்பா இருக்கிறார்.  அவருக்கு துணையாக தன்னைத்தானே தேடிச் செல்லும் மகனும் இருக்கிறான். இந்த இரண்டு தேசங்களையும் வகுத்துச்செல்லும்  எல்லைக்கோடு போல இன்றைய நவீன வாழ்வின் செறிவூட்டப்பட்ட அபத்தம் இருக்கிறது. இந்த அபத்தம் எங்கிருந்து உருவானது?

இரண்டாவது கவிதையும் ஒரு அபத்த தருணத்தை எதிர்கொள்கிறது. “நல்ல விபத்து” என்ற சொற்சேர்க்கையை அதன் மையம் என்று சொல்லலாம்.  எதிரெதிரான சொற்களை உருக்கி இணைத்தல். கவிதையிலிருக்கும் ஒவ்வொரு வரியையும் நான், மனிதர்கள் கால்கடுக்க நிற்கும் நீண்ட நெடிய வரிசை என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஒவ்வொரு சொல்லும் ஒரு நபர். வரியிலிருக்கும் சொற்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் இருக்கக்கூடாது. சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் அவை ஏதோ ஏழெட்டு ஜென்மமாய் இணைபிரியாத காதலர்களாக வாழ்ந்ததுபோல இணைந்தேயிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இன்னும், சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் உங்கள் மூக்கில் ஒரு குத்து விட்டதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். போகட்டும்.  நல்ல*விபத்து என்ற சொல்லை பார்க்கையில் மாற்றி மாற்றி துப்பாக்கியை நெற்றியை நோக்கி நீட்டிக்கொள்ளும் நண்பர்கள் மனதில் காட்சியாக தெரிகின்றனர். இரு அகால மரணங்கள் ஒப்பிடப்படுகின்றன. மரணங்களை ஒப்பிடமுடியுமா? பீஷ்மரின் சாவும் துரியோதனனின் சாவும் ஒன்றா? இவன் அவனைவிட நன்றாக இறந்தான் என்பது எப்படி தொனிக்கிறது? அபத்தம்தான். பொதுப்புத்தியில் மனிதநேயமற்ற பார்வை என்றுகூட கூறலாம். தாஸ்தாவெஸ்கியின் நிலவறை மனிதன் சொல்வதுபோல “உலகம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும், நான் என்னுடைய தேநீரை பருகவேண்டும்” என்ற தனிநபர்வாதத்தின் குரல்தான். ஆனால் இக்கவிதையில் கடைசி இரண்டு வரிகளில், அபத்தத்தை பற்றிக்கொண்டவாறு வெளிச்சத்தை மீட்டுக்கொள்வது நடக்கிறது. அதுதான் இக்கவிதை உணர்த்த விழைகிற செய்தியென்று நினைக்கிறேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அபத்தத்தை கைவிளக்காக பிடித்துக்கொண்டு கூட போய்விடலாம் என்பதுதான் அது. ஒருவேளை அப்படி போகும்போது வழியில் பாதாளம் ஏதும் குறட்டைவிட்டபடி தூங்கிக்கொண்டிருக்குமோ?

ப்ராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ – கிளை பிரியும் வாசிப்புகள் – நம்பி கிருஷ்ணன்

நம்பி கிருஷ்ணன்

ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளில் அதிக புகழ் பெற்ற கவிதை, நிச்சயம் அவரது ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல. மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதைகளில் ஒன்றும்கூட. இத்தனைக்கும், அக்கவி பாடுபவனது பார்வையை மென்மையாக கேலி செய்யும் வகையில் முரண்நகைப் பொருளில் தான் சொன்னது, தரிசன வாக்கியம் போன்ற ஒன்றாக பிழைபொருள் கொள்ளப்படுவது குறித்து தன் எரிச்சலை அவர் வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கிறார். என்றபோதும் இந்தக் கவிதையை பிடிவாதமாக பிழைவாசிப்பு செய்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ப்ராஸ்டின் நண்பர், கவிஞர் எட்வர்ட் தாமஸ், இக்கவி பாடுபவனது முன்மாதிரியாய்க் கொள்ளப்படுபவர், அவரும் கூட இந்தக் கவிதையில் ப்ராஸ்ட்டின் சுயசரிதையை வாசித்தார். ஆம், பார்த் சொன்னது முழுக்க முழுக்க சரிதான்- ஆசிரியன் நாசமாய்ப் போகட்டும், பிரதி மட்டுமே நீடிக்கும்.

கவிதையின் சபிக்கப்பட்ட நோக்கங்களுக்கு வருவோமென்றால், இருவரும் காலாற நடந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும், கடந்து வந்த பாதைக்கு மாறாய் வேறொரு பாதையில் சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று பெருமூச்செறியும் தாமஸ் “போல் இருந்தால் எப்படி இருக்கும்,” என்பதன் கவித்துவ அறிதலுக்கான முயற்சியே இக்கவிதை என்று ப்ராஸ்ட் தெளிவுபடுத்தி விட்டார் என்பதைச் சொல்ல வேண்டும். அத்தனை மத்திய மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆதர்சமாக கொள்ளும் அப்பெருமூச்சு, ஒரு பகடிப்-பெருமூச்சே, ஒரு பாவனை, “வேடம் தரிப்பதன் மகிழ்ச்சிக்காக” செய்தது.

E.T.க்காக” என்ற இன்னொரு கவிதையில் (நிச்சயம் தன்சரிதைத்தன்மை கொண்டதுதான்), கவிஞர் இரங்கற்பாவுக்குரிய மனநிலையை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்; ஆனால் முதல் உலக யுத்தத்தில் மாண்ட அதே எட்வார்ட் தாமஸ், தன் நண்பன், குறித்த அவரது உணர்வுகள், “குறிப்பிட்ட ஒரு சாலையைத் தேர்ந்தெடுக்காததன்” பின்விளைவுகளை நேருக்கு நேர் நோக்குமளவு அவரை மெய்யென ஆட்கொள்கின்றன; ப்ராஸ்ட், “வாழ்வில் நான் தவற விட்ட வாய்ப்பு எனக்கு இல்லாது போகலாம்/ ஏதோவொரு தாமதத்தால். உன் முகத்தைக் கண்டழைக்க-/ நீ முதலில் வீரன், பின் கவிஞன், பின் இரண்டும்/ உன் இனத்தின் வீர-கவிஞனாய் இறந்தவன்”, என்று தன் துயரை வெளிப்படுத்துகிறார்.

ஆனால், இத்தகைய வாழ்க்கைச் சரித்திர தகவல்கள் இல்லாமலும்கூட தேர்ந்த வாசகன் ஒருவன், தன் உள்ளத்தை மகிழ்விக்கக்கூடிய ஒரு பாவனையை கவிஞன் தொடர்ந்து ‘மேற்கொள்வதை’ உணர முடியும். எதிர்கால வாசகர்கள் போலவே அவனும் கவிதையின் ஆதார உண்மைகள் ஒரு பொருட்டல்ல என்று பாவித்துக் கொள்கிறான் (அத்தனை சால்ஜாப்புகளையும் கடந்து அந்த உண்மைகள் கவிதைக்குள் புகுந்து விடுகின்றன). தற்போது தேர்வு செய்த சாலையின் அழைப்பு, “புற்கள் செழித்து சிதையாது இருப்பதால்” “மேலான தகுதி கொண்டது” என்று சொல்வதற்கு முன் அவன், மற்றையதும் “அதே அழகு கொண்டது” என்று சொல்லியிருக்கிறான். அடுத்து, “அதேயளவு அதுவும்” சிதையாதிருந்தது, பாதம் படாத இலைகளால் அதேயளவு மூடப்பட்டிருந்தது (“எந்தப் பாதமும் மிதித்துக் கறுத்த இலைகள் இல்லை”) என்றும் கூறுகிறான்.

தன் தேர்வு குறித்து மகிழ்ச்சியடைய அவனுக்கு புறவயப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை, இது நான் தேர்ந்தெடுத்த பாதை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இந்த உணர்வு கடைசி பத்திக்கு ஓர் அச்சாரமாகிறது: அங்கு அவன், எதிர்காலத்தில் சோக உணர்வுடன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் பாவனை மேற்கொள்கிறான் (கவியின் “நான்” (I) “பெருமூச்சுடன்” (sigh) யாக்கப்படுகிறது, இப்படிப்பட்ட புனைபாவனைகளைக் கொண்டு அவனது இருப்பு அத்தனையும் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது போல்)- தான் முதலில் எடுத்த முடிவை குறித்து துவக்கத்தில் வருந்தி (இல்லையென்றால் ஏன் பெருமூச்செறிய வேண்டும்), அதன்பின் நினைவேக்கப் பொன்னொளிக்குரிய பிரத்யேக மொழியில் உணர்வுகளை துரிதமாகவே வார்த்தெடுத்துக் கொள்கிறான்.

ஆனால் இதே பத்தியை நாம் பின்னாலிருந்தும் வாசித்து மாறுபாடு என்ற சொல்லிலிருந்து பெருமூச்சுக்கும் வரலாம் (மாறுபாடு (difference), எனவே (hence), ஏக்கம் (sigh) என்ற யாப்பில் பொருள் கொள்ளலாம்): ஆனால் இப்போது நாம் காணும் மாறுபாடு எந்தப் பாதை உயர்ந்தது என்பதல்ல, வேறொரு பாதையைத் தேர்வு செய்திருந்தால் எந்த வாதையைத் தவிர்த்திருக்கலாம் என்பதாய் மாறி விடுகிறது.

ப்ராஸ்டின் இந்தக் கவிதை அளிக்கும் வெளிச்சத்தில் விஜய் நம்பீசனின் புகழ் பெற்ற ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ (https://solvanam.blog/2014/01/02/மொழிபெயர்ப்புக்-கவிதைக-2/) கவிதையை வாசிப்பதும் ஒரு சுவையான அனுபவமாய் இருக்கும்: அங்கும் தேர்வுகளின் குழப்பம் உண்டு (எப்போதும் போல, “நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று” மறையும்), ஆனால் அவற்றுக்கான பொறுப்பு நேர்மையாக எதிர்கொள்ளப்படுகிறது. “ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது” என்பது கவிக்கு சொல்லாமலே தெரிந்திருக்கிறது, எனவே தன் தேர்வின் விளைவுகளுக்கு அவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்: “எங்கே அவனது இருப்பு வேண்டியதாயில்லை,” என்ற உண்மையின் கசப்பு மாத்திரையை விழுங்கி விட்டு, “தன் வேண்டாதவன் நிலையை வேறெங்காவது எடுத்து” செல்கிறான்.

ஆனால் ‘கர்த்தா மரணித்து விட்டான்’, பிரதியோ நமக்குரியது. நம்முன் உள்ள பிரதி இப்படிதான் இருக்கிறது என்றாலும், தேர்ந்தெடுக்கப்படாத சாலையை நாம் உந்துதல் அடையும் வகையில் வாசிக்கலாம்: நம் வாழ்வில் ஒவ்வொரு முறையும் “தார்மீகப் பாதையை” தேர்வு செய்து கொள்ளலாம், அதனால் வேறெந்த பயன் இல்லாவிட்டாலும் இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்துச் சென்றேன் என்று சமாதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்வது பலரும் நடந்து சென்ற பாதையில் ஒரு வாசகராய் நாம் நம் காலடித் தடத்தை இழப்பதற்குச் சமம்!

(பதாகை ஜனவரி 2019 மின்னூலில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் இணைய பிரதி)

பதாகை ஜனவரி 2019: 

 மொபைல் மற்றும் கணினியில் வாசிக்க (epub)

கிண்டிலில் வாசிக்க (mobi)

நான் சூரியன் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை, ராமலக்ஷ்மி தமிழாக்கம்

ராமலக்ஷ்மி

நான் சூரியன், ஆனால் என்னைக் கண்டு கொள்ள மாட்டாய் நீ,
நான் உனது கணவன், ஆனால் அதை ஒப்புக் கொள்ள மாட்டாய் நீ.
நான் கைதி, ஆனால் என்னை விடுவிக்க மாட்டாய் நீ,
நான் தலைவன், ஆனால் எனக்குக் கீழ்ப்படிய மாட்டாய் நீ.
நான் உண்மை, ஆனால் என்னை நம்ப மாட்டாய் நீ,
நான் நகரம், ஆனால் அதில் வசிக்க மாட்டாய் நீ.
நான் உனது மனைவி, உனது குழந்தை, ஆனால் என்னைப் பிரிந்து விடுவாய் நீ,
நான் அந்தக் கடவுள், என்னைப் பிரார்த்திக்க மாட்டாய் நீ.
நான் உனது ஆலோசகன், ஆனால் நான் சொல்பவற்றைச் செவிமடுக்க மாட்டாய் நீ,
நான் உனது நேசத்துக்குரியவன், எனக்கு துரோகம் செய்வாய் நீ.
நான் வெற்றிவாகை சூடியவன், ஆனால் என்னைக் கொண்டாட மாட்டாய் நீ,
நான் புனிதப் புறா, என்னைக் கொன்று விடுவாய் நீ.
நான் உனது வாழ்க்கை. ஆ’னால் என்னை அப்படி அழைக்க முடியாத நீ
உனது ஆன்மாவைக் கண்ணீரால் அடைத்து விடு, பிறிதெப்போதும் என்னைப் பழி சொல்லாதே.

மூலம்: I am the Great Sun (From a Normandy crucifix of 1632)by Charles Causley

எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான சார்ல்ஸ் காஸ்லே (24 ஆகஸ்ட் 1917 – 4 நவம்பர் 2003) இங்கிலாந்தின் கார்ன்வால் டிஸ்ட்ரிக்ட்டில் பிறந்தவர். அவரது எழுத்துகள் எளிமைக்கும் நேரடித் தன்மைக்கும் நாட்டுப்புறப் பாடல்களை ஒத்திருந்தமைக்கும் குறிப்பாகக் கவனம் பெற்றவையாகும். முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட காயங்களால் இவரது தந்தை மரணிக்கவும் 15வது வயதில் பள்ளிப் படிப்பைத் துறந்து குடும்பத்தைக் காப்பாற்ற அலுவலக ஏவலாளாகப் பணிக்குச் செல்ல நேர்ந்தவர். பின்னாளில் இரண்டாம் உலகப் போரின் போது கடற்படையில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போர்க்கால அனுபவங்களைத் தனது கவிதைகளிலும், சிறுகதைகளிலும் பகிர்ந்திருக்கிறார். தான் படித்த பள்ளியிலேயே சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். காஸ்லேயின் பிற கவிதைகளின் பாடு பொருட்களாக இருந்தவை நம்பிக்கை, விசுவாசம், பயணம், நண்பர்கள் மற்றும் குடும்பம். போகவும், குழந்தைகளுக்காக இவர் எழுதிய கவிதைகள் பிரபலமானவை. 1951ஆம் ஆண்டில் தொடங்கி வாழ்நாளின் இறுதி வரையிலுமாகத் தொடர்ச்சியாக எழுதி, பல நூல்களை வெளியிட்டவர். பல விருதுகளைப் பெற்றவர். முக்கிய இலக்கிய அமைப்புகளில் உறுப்பினராகத் திகழ்ந்தவர். அரசு மற்றும் பல்கலைக் கழகங்களில் கெளரவப் பதவிகள் வகித்தவர்.

ஜிஃப்ரி ஹாஸன் – மாயை

-ஜிஃப்ரி ஹாஸன் – 

விரலிடுக்கில்
எரிந்து கொண்டிருக்கிறது சிகரெட்.
இடையிடையே
உதடுகளுக்கு மாறுவதும்
பின் விரல்களுக்குத் தாவுவதுமாய்
அது மரணத்தைச் சுகிக்கிறது.
நீலப் புகை சுருள் சுருளாய்
காற்றில் கரைந்து மறைகிறது
நான் நெருப்பின்றியும் புகையின்றியும்
அணையாது எரிந்து கொண்டிருக்கிறேன்.
புகை போல் வாழ்க்கையும் கரைந்து மறையும்
கணத்தில் என் தேகம்
எரியூட்டப்பட்ட சிகரெட் துண்டுகளுக்குள்
சாம்பல் துணிக்கையாய் உருமாறி
காற்றில் கரைந்து மறையும்.

இரா. கவியரசு- உள்ளாடைகள்

இரா கவியரசு

காய்கின்றன
உள்ளாடைகள்

வெறியோடு
அணிந்து பார்க்கிறது
திரும்பத் திரும்ப
அவிழ்க்கும் மனம்

கனமுள்ள உடலைத்
திணிக்கின்றன கண்கள்
நிலைகுலைந்து சொட்டுகின்றன மௌனங்கள்

துணியாக வெட்டியவனுக்கு,
தைத்தவனுக்கு,
பொம்மைக்கு அணிவித்தவனுக்கு,
விற்கும் போது
திறந்து காட்டியவனுக்கு,
நெருடல்கள் ஏதுமற்று
இயல்பாகவே இருந்தது

அதற்குள்
துடித்துக்கொண்டிருந்த இதயம்
பார்க்கப்பட்டதில்லை

திருடி
ரகசியமாக
பூட்டிய அறைக்குள்
முகர்ந்து பார்க்கும்போது
அந்தரங்கம் தொட்ட
அவமானத்தில்
சுருண்டு கொள்கிறது

வண்ணங்கள்
வெளிறிப் போகின்றன
வக்கிரத்தின் பெருமூச்சில்

நிம்மதியாக
உறங்குகின்றன
யாரும் அணியாத
உள்ளாடைகள்