Author: பதாகை

உயிர்ப் பருக்கை -வருணன் கவிதை

வருணன்

தசைகளின் இறுக்கம் தளர்த்தி
தலைமயிர் பறித்து தாடைதனில்
பதியனிட்டு விளையாடுகிறாள்,
காலக் குழந்தை.
வளைகாப்பால் பூரித்த
நாளைய தாயைப் போல
தொந்தி சரியவிட்டு
நடையின் வேகம் திருடி
பரிகசித்து வம்பிற்கு இழுக்கிறாள்-
நீயதனை தள்ளாமையென்கிறாய்!

என் உயிர்ச் சோற்றின் சில பருக்கைகள்
கவர்ந்து எங்கோ ஒரு கருவறையிருட்டில்
மிதக்கும் சிசுவின்
ஆன்ம பொம்மை செய்கிறாள்,
காலக் குழந்தை.
எது கொடுக்கப்பட்டதோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

தடயம் – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

வனாந்தரத்தின் தனிமையை அடைந்திருந்தாய்
அப்போது
யௌவனத்தின் உயர் வெப்ப நிலையில்
கணங்கள் நொடிந்தன.
படுக்கையில் தனிமை பெரும் கொடுமை.
ஆசை வேகமாக வெடிக்கிறது
பூக்களின் வெடிப்பில் மகரந்தம்
வெளியேறுவது போல்.
தாபத்தின் மோனநிலை
பருவத்துக்குள் குலைந்து
நாலா புறமும் சிதறி பரவுகிறது.
மோகத்தின் போதையில் நீ
பெரும் தூரத்தைக் கடக்க நினைத்து
பிசாசுகளின் இரவு நிலையில்
நடந்து சேருகிறாய்.
பெரும் பாவத்தின் தடயத்தை
விட்டு விட்டு
மீண்டும் திரும்புகிறாய்.
மனசு பட்ட குதூகலத்தின் பிரமிப்பில்
துவண்டு படுத்துறங்கி விழிக்கிறாய்
உனது அறைக்கு வெளியே காத்திருக்கிறார்கள்,
உன் பாவத்தின் தடயத்தில்
நடந்து வந்தவர்கள்.

 

வேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

“இனியும் சுதாகரிக்காம இருந்தோம்னா அப்பறம் மொத்தமும் இல்லாம போயிடும்,” சந்திரானந்தாசாமி இப்படி சொன்னதும் கூடமே அதிர்ச்சி அடைந்தது . பெரியவர் அதிர்ச்சியும் துக்கமும் கலந்தவராக அவரைப் பார்த்தார், மேலும் முதுமையின் சலிப்பும் பெரியவரின் முகத்தினில் இருந்தது. எல்லாவற்றையும் துறந்து துறவியானவர் இப்போது இதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கிறார் போல தோன்றியது .

கூடத்தின் நிசப்தம் பெரியவரின் குரலுக்காக கலைய காத்திருந்தது . மெல்ல இருமி, அசைந்து,  “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற” என்றார் . சந்திரானந்தாசாமி, “சுற்று வேலி போடுவோம்,  கண்காணிப்போம்,” என்றார். சந்திரானந்தசாமி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவர் உடல்மொழி வழியாக புரிந்து கொள்ளவே முடியாது. எதையும் வெற்று பார்வைகள் வழியாகவே அணுகுவார் .

பெரியவர், “சரி, ஏற்பாடு செய்,” என்றார், பிறகு எழுந்து அவரது அறை நோக்கி நடந்தார், அருகில் இருந்த இளம் சந்நியாசி அவர் பின்னாலேயே சென்றான் . கூட்டத்திலிருந்த பிற சாமிகளும் ஒவ்வொருவராக நகர்ந்து வெளியேறினார்கள் , நானும் சந்திரானந்தா சாமியும் மட்டும் நின்றிருந்தோம். நான் அவரிடம், “ஒரு வேளை திருட்டு க்கு காரணமானவங்க உள்ளவுள்ளவங்களா இருந்தா?” என்றேன் . சந்திரானந்தா சாமி என் தோளில் தட்டியபடி, “அப்ப உள்ளேயும் கண்காணிப்போம்,” என்றார் . அதைக் கேட்டவுடன் மனதில் ஒருவித புது பதற்றம் குடியேறி கொண்டது.

முதலில் சின்ன சின்ன பொருட்கள் காணாமல் போனது. கைமறதியாக வேறு எங்காவது வைத்து காணாமல் போனதாக சொல்கிறார்கள் எண்ணிக் கொண்டிருந்தோம் . தீபம் காட்ட பயன்படும் செம்பாலான தட்டு காணாமல் போனபோதுதான் திருட்டு நடப்பதை உணர்ந்தோம், சந்திரானந்தசாமிதான் ஆரம்பத்திலேயே உணர்ந்து சொன்னவர் . தொடர்ந்து எல்லோரும் கவனமாக இருந்தும் பொருட்கள் திருடு போவது நிற்கவில்லை . பிறகு சந்திரானந்தாசாமி பெரியவரிடம் முறையிட்டு வேலியிட வேண்டும் எனும் தன் யோசனையை வெற்றிகரமாக ஏற்க வைத்தார் .

எங்கள் ஆசிரமம் 15 ஏக்கர் அளவு விரிந்த ஒன்று, பிரார்த்தனைக் கூடம்தான் இங்கு இருப்பதில் பெரிய கட்டிடம், ஓடு கொண்டு கூரை வேயப்பட்ட கட்டிடம் இது, அதில் வலது மூலையில் இருந்த ஓய்வு அறையில் பெரியவர் தங்கியிருந்தார். பிற சந்யாசிகள் , வெளியாட்கள் தங்க தனித்தனி கட்டிடங்கள் இருந்தன, நான் சமையல் கூடத்திலேயே படுத்துக் கொள்வேன். நான் சமையல்காரனாக இங்கு வந்து சேரவில்லை , வீட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடி வந்தவன் , தற்செயலாக இங்கு வந்து சேர்ந்து எடுபிடி வேலைகள் ஆரம்பித்து இந்த பதினைந்து வருட வளர்ச்சியில் சமையல் பொறுப்பாளன் இடத்திற்கு வந்துள்ளேன் . ஆசிரமத்தில் நடக்கும் திருட்டுகள் பற்றி ஆர்வம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்து கொண்டிருந்தேன் ,பிறகு சமையலறையில் இருந்த செம்பு போசி காணாமல் போனபின் சாதாரண ஆர்வம் பதற்றமாக மாறி திருட்டைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது . மொத்த ஆசிரமமும் கடவுளை மறந்து திருட்டை மட்டுமே பேசிக் கொண்டிருந்தது .

தற்காலிகமாக இரும்புக் கம்பி முள்வேலி போட்டுக்கொள்ளவும் பிறகு அதை மதில்சுவர்களாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு வேலை துவங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன . சந்திரானந்தாசாமி இதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார, இவரைப் பொருத்தவரை ஏதாவது தீவிரம் எப்போதும் இருக்க வேண்டும் , இவரால் சும்மா இருக்க முடியாது, வேறு எதுவுமே கிடைக்கவில்லையெனில் விறகு வெட்டித் தருகிறேன் என்று சொல்லி வந்து நின்று விடுவார், உடல் சும்மா இருக்கக் கூடாது, ஏதாவது பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார், இவர் பிரார்த்தனை செய்தோ , தியானம் ஏதேனும் செய்தோ நான் பார்த்ததே இல்லை , பெரியவரை கண் நோக்கி பேசக் கூடிய தைரியம் இங்கு இவர் ஒருவருக்கே உண்டு. வேலி அமைக்கும் திட்டத்தில் என்னை இழுத்து போட்டுக் கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார், எனக்கும் இந்த மாற்றம் ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.

எங்கள் ஆசிரமம் வஞ்சிபாளையம் ஊர் எல்லையில் மலையடிவாரத்தில் இருந்தது, எங்கள் ஆசிரமம் தாண்டிப் போகக் கூடியவர்கள் ஆடு மேய்ப்பவர்களும், சீமார் புல் எடுக்கச் செல்பவர்களும்தான். இந்த பக்கம் புதிதாக யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள் எங்கள் ஆசிரமத்திற்கு வருபவர்கள்தான். பாதுகாப்பு தேவைப்படாத இடத்தில் ஆசிரமம் இருந்தது என்று சொல்லலாம். இப்போது 3 மாதமாக நடக்கும் இந்த திருட்டுகள் ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் அதிர்ச்சியானதாகவும் புதிதானதாகவும் இருந்தது, ஒருவகையில் உறக்கத்தில் இருந்து கொண்டிருந்த ஆசிரமத்தை இந்நிகழ்வுகள் விழிப்படையச் செய்து விட்டது.

வேலி அமைக்க ஒரு மேஸ்திரி, பணியாட்கள் 9 பேர், என ஒரு குழு வந்து ஆசிரமத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டது , 8 அடி தூரத்திற்கு ஒரு கல்லுக்கால் என வைத்து இரும்பு முள்வேலிக்  கம்பிகள் சுற்றி வேகமாக வேலை செய்து கொண்டிருந்தனர், இதில் கம்பிகளை வரிசை முறையில் சீராக இழுப்பதுதான் கொஞ்சம் கடினமான பணி, அதற்காகவென ஒரு குறுக்கு கட்டை வைத்து இறுக்கி இழுக்கும் ஒரு யுக்தியை பயன்படுத்தினார்கள், மொத்தம் ஐந்து நாட்களுக்குள் வேலி போட்டு முடித்து விட்டார்கள். ஆச்சரியமாக, வேலி அமைக்க முதல் கல்லுக்கால் போட துவங்கியதிலிருந்தது இப்போது வரை எந்த பொருளும் திருடு போகவில்லை, ஒவ்வொரு நாளும் எல்லோரும் எதிர்பார்த்து ஏமாறுவதாக நாட்கள் போனது.

சந்திரானந்தாசாமி வெற்றிப் பெருமிதத்துடன் ஆசிரமத்தில் வளைய வந்துகொண்டிருந்தார் . ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணம் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது , வேலி ஒரு கூண்டு போல சிறைபடுத்தி விட்டது என. வேலி போட்ட மறுநாளே சந்திரானந்தாசாமி பக்கத்தில் இருந்த கிராமத்திற்கு போய் ஒரு வயசாளியை கூட்டி வந்து வாசலில் காவலாளியை போல அமர்த்தி விட்டார், அந்த காவலாளி உள்ளே வருபவர்களையும் வெளியே செல்பவர்களையும் திருடனை போலவே பாவித்து அனுப்பிக் கொண்டிருந்தார். ஆசிரம சூழலே சிறைசாலை மாதிரி ஆகிவிட்டது போல உணர்ந்தேன் , என் உணர்வு சந்திரானந்தா சாமி தவிர பிறர் எல்லாருடைய முகத்திலும் பிரதிப்பலிப்பதை உணர்ந்தேன் .

சந்திரானந்தாசாமியிடம் இதை எப்படி சொல்வது என தவித்தேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி காவலாளியை நீக்க எண்ணி சமயம் பார்த்து காத்திருந்தேன். அதிசயமாக அவர் எந்த வேலையும் செய்யாமல் வேப்ப மரம் அருகில் இருந்த கல்லாலான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது போய் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது. அருகில் சென்று நின்றபோது என்ன என்பது போல பார்த்தார் .

ஆசிரம சூழலே மாறிடுச்சு சாமி”

“ஏன் திருட்டு நடக்கலைனா …”

நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன். அவர் அருகில் அமரச் சொன்னார்.

“கந்தா , இந்த ஆசிரமம் உனக்கும் எனக்குமோ இல்ல உள்ள இருக்கற பெரியவருக்கோ மட்டுமே சொந்தமானதுல்ல, இனி இங்க வரப் போகிற எல்லாருக்கும் சொந்தமானது, அதுக்கு இந்த ஆசிரமம் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம்…”

“மத்தவனுக்கு பயந்து நாம கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி தோணுது சாமி”

மெல்ல புன்னகைத்தவர் என்னில் இருந்து பார்வையைத் திருப்பி தூரத்தில் இருந்த வேலியைப் பார்த்தார். “கந்தா , இன்னைக்கு பொருள் திருடு போகுதுன்னா நாளைக்கு நிலமும் திருடு போகும்னு அர்த்தம் ”

அதீதமாக எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றியது, பதில் சொல்லாமல் அவரை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன் .

“இங்க இருந்து காணாம போன ஒவ்வொரு பொருளும் வெளிய பாக்குறேன் , அவனுகளோடதா …”

நான் உண்மையா என்பது போல பார்த்தேன், ஆனால் இவர் முன்பெல்லாம் பகலில் ஊர்களில் சுற்றி திரிவார் , சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் ஆசிரமம் வருவார், இந்த திருட்டு பிரச்சனைக்கு பிறகே அவர் ஆசிரமத்தில் பகலிலும் இருந்தார் .

“கந்தா , எந்த பொருளும் யாருக்கும் உரிமையானதில்லை , ஆனா அப்படி எல்லோரும் நினைக்கும்போது மட்டும்தான் அது சரி, மத்தவங்க ஒவ்வொன்னுக்கும் உரிமை கொண்டாடும்போது நாம எல்லாம் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தா பிறகு நமக்கு பயன்படுத்தக்கூட ஏதும் இல்லாம போயிடும் ”

“இது வெத்து பயம் சாமி”

“நம்ம ஆசிரமத்துக்குனு சொந்தமா கொஞ்சம் நிலம் வெளியில இருந்தது, இப்ப அது நம்ம கைல இல்ல…”

எனக்கு விஷயம் லேசாக புரிபட ஆரம்பித்தது.

“பெரியவர் இதெல்லாம் கண்டுக்க மாட்டாரா” என்றேன்.

“அவர் இதையெல்லாம் ஏன் கண்டுக்கணும் , அவரோடது சமயப் பணி, அதை அவர் செய்யட்டும், நான் இதை செய்யறேன், அவ்வளவுதான்”

“சாமி , நான் இதுவரை இங்க உணர்ந்தது ஒன்னுதான், ஆசிரமம் இங்க வர யாரையும் பிரிச்சு பார்க்காம வரவேற்கும், சாப்பாடு போடும், நான் இங்க வர ஆளு பசியோட இருக்கானான்னு மட்டுமும்தான் பார்ப்பேன், அவனுக்கு சாப்பாடு போடறதுதான் என் வேலை, அவன் திருடனோ, நல்லவனோ அது எனக்கு தேவையில்லை, பெரியவர் என்னைச் செய்ய சொன்ன வேலையும் இதுதான் ”

சந்திரானந்தாசாமி பிரியமாக முதுகில் தட்டினார், பிறகு ஏதும் சொல்லாமல் ஆசிரமம் பின்பு தெரியும் மலைகளை பார்த்தபடி இருந்தார், கிளம்பலாம் என எண்ணினேன், எழும்போது அவர் பேசத் தொடங்கினார் .

“நானும் அப்படி பிரிச்சுப் பாக்கறவன் கிடையாது, உண்மைல எவன் எப்ப திருடினான் னுகூட தெரியும், திருடற சமயத்தில் அதை பார்த்தும் பார்க்காத மாதிரியெல்லாம் இருந்திருக்கேன். மக்கள் இயல்புங்கிறதை உண்மைல எவ்வளவு யோசிச்சாலும் வகுத்து சொல்லிட முடியாது. அப்பறம் எல்லா மக்களும் ஆன்மிகம் நோக்கி திரும்பணும்னும் , நல்லவர்கள் ஆகணும்னெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் முட்டாள்தனம் , தேடல் உள்ளவனுக்கு ஒரு இடம் வேணும், அதுக்காக இந்த ஆசிரமம் எப்போதும் இருக்கணும்னு நினைக்கிறேன் . இது எப்போதும் இருக்கணும்னுனா இது பாதுக்காக்கப்படனும் ,அதை நான் செய்ய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்”

“சாமி , பெரியவரை கவனிச்ச வரை அவருக்கு பேதமில்ல, இந்த ஆசிரமம் மக்கள்கிட்ட இருந்து தள்ளி இருக்கக்கூடாது னு நினைக்கிறார், இந்த பாதுகாப்பு நெருங்க விடாம தள்ளி வைக்குதுன்னு தோணுது ”

“இப்படி விலகி இருக்கறது நல்லது, அது மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும்,” என்று சொல்லிச் சிரித்தார், மேலும், “உண்மையான ஆர்வம், மதிப்பு வரும்போதுதான் உருவாகும்,”  என்றார் . ராபட் பிராஸ்ட் எழுதின ஒரு கவிதை இருக்கு , “வேலியை விரும்பாத ஒன்று”னு ஆரம்பிக்கும், எனக்கும் அந்தக் கவிதையோட மனநிலை பிடிக்கும், ஆனா அயலனுக்கும் நம்மைப் போல அபகரிக்க விரும்பாத மனநிலை இருக்கற போதுதான் இந்த வேலியே வேண்டாங்கற மனநிலை சாத்தியம், அப்படியில்லாம நாம மட்டும் அந்த மனநிலையில் இருந்தா இழப்பு நமக்குத்தான் ”

“இது எதிர்மனநிலைனு தோணுது,” சொல்லும்போது என்னை மீறி என்னில் புன்னகை வெளிப்பட்டது.

“இல்ல , இதுதான் யதார்த்தம், மனுஷன் ஒன்னுல இருந்து அடுத்ததுக்கு தாவ பார்க்கற குணம் உள்ளவன், இன்னும் இன்னும்கிறதுதான் அவன் இயல்பான குணம், அதுதான் அவனை நகர்த்தற விசை, அவன் அப்படிதான் இருப்பான், தற்காலிகமா வேணும்னா நீதி நேர்மைனு சொல்லி மட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான் முடியும் ”

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிரார்த்தனை கட்டடத்தில் சிறிய பரபரப்பு தோன்றியது, இருவரும் பேசுவதை அப்படியே விட்டு கூடம் நோக்கி நடந்தோம். பெரியவர் உடன் இருந்து சேவகம் செய்யும் அந்த இளம் சந்நியாசி எங்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தவன், ” பெரியவர் வெளிய பயணம் போக விரும்பறார், உங்ககிட்ட ஏற்பாடு செய்ய சொன்னார்”

சந்திரானந்தாசாமி, “எங்க, பக்கத்துலயா?” என்றார்.

“இல்ல வடக்கே, திரும்ப வருவாருனு தோணல, உங்ககிட்ட இதைப் பத்தி பேசதான் உங்களை அழைத்து வர சொன்னாருனு தோணுது ”

சந்திரானந்தா திரும்பி வேலியைப் பார்த்தார் , எனக்கு இனி இவர்தான் இந்த ஆசிரமத்தின் பெரியவர் என்று தோன்றியது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி.

“ஸார்…”

“பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் தன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…”

“அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்”

“பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் இருக்கு, தாம்பத்திய உறவுக்கு உதவி செய்யும் செல்ப் ஹெல்ப் புக் டைட்டிலையும் ஞாபகப்படுத்துது. இலக்கியத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், “கதையும் எழுத்தும் மட்டுமென்ன இலக்கிய தரமாவா இருக்கு!” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன்? மசோகிஸ்ட் என்பதாலோ அவரைத் தவிர வேறு யாரும் என் கதைகள் குறித்து பேசுவதில்லை என்பதாலோ நான் அவரை சகித்துக் கொள்வதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை விளக்குவதற்காக, எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதோ (அதை ஏற்கனவே கதையாக எழுதி விட்டதால்), அந்தக் கதைக்கான லிங்க்கை இங்கு கொடுத்து உங்களின் வாசிப்பனுபவத்தை கலைத்துப் போடும் யுத்தியையோ உபயோகப்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அதை – கதைக்குள் கதை அல்லது ஹைபர்லிங்க் கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – செய்து விட்டேன் என்பதைவிட முக்கிய காரணம், இப்போதெல்லாம் என் மனம் கதை வெளியேற்றப்படாத கதை மீதுதான் குவிகிறது.

“ஸாரி நா வேற ஏதோ யோசிச்சிட்டிருந்தேன், என்ன சொன்னீங்க ஸார்?”

“தப்பா எடுத்துக்காத, ஒனக்கு செக்ஸுவல் ப்ரஷ்ட்ரேஷன் எதுவும் இல்லைல?”

அந்தரங்க விஷயங்களைப் பற்றி கேட்ட பின்பு என்ன “தப்பா எடுத்துக்காத”? கிழம் இப்படி நோண்டுவதைப் பார்த்தால் அவர் மீதே எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயமாகப் பார்த்து விஷயத்தை கறந்து விட வேண்டும், இன்னொரு கதை தயார்.

“நீங்கதான ஸார் சொந்த அனுபவங்கள் வெச்சே காலத்த ஓட்டற, அதெல்லாம் புனைவா மாற மாட்டேங்குது, மாத்தி எழுதுன்னு சொல்லிட்டே இருப்பீங்க. அதான் இந்தக் கதை எழுதிருக்கேன். எழுத்தாளனையும் அவன் எழுத்தையும் ஒண்ணா பாக்கறது சரியா ஸார்? நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா?”

“நீ எழுதியது துப்பறியும் கதைன்னு நீதான் சொல்லிக்கணும், “துப்பறியும்”ன்னு தலைப்பு மட்டும் வெச்சா ஆச்சா? அதுல என்ன துப்பறிதல் இருக்குன்னு வாசகன் என்ன இன்வஸ்டிகேட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதுல க்ரிஸ்டிகூட ஒன்ன கம்பேர் பண்ணிக்கறியா, பேஷ்”

“கம்பேர்லாம் இல்ல ஸார், நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்”

“ஓகே, உன் மரிடல் லைப் நல்லாருக்குன்னே வெச்சுப்போம்”

“நெஜமாவே நல்லாத்தான் இருக்கு ஸார், வெச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல”

“சரி விடு, எனக்கெதுக்கு அந்த பிரச்சனைலாம், ஏதோ ப்ராஸ்டேட் வராம நான் தப்பிச்சுட்டேன், அதுக்காக மத்தவங்க…”

“எனக்கு அந்த வயசுலாம் இன்னும் வரலை ஸார்”

“டோன்ட் கெட் எக்ஸ்சைடட். யுவர் செக்ஸுவல் லைப், யுவர் ப்யுன்ரல். மணவாழ்வின் மதியம் கதைய பாப்போம், உன் கதைகள்ல வர பாத்திரங்களுக்கு மூஞ்சியோ, உடம்போ இருக்க மாட்டேங்குதே அதப் பத்தி யோசிச்சிருக்கியா?”

“அவங்க மனுஷங்கதான் ஸார், நான் எழுதின பேய் விளையாட்டு கதையோட குழப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன், அந்தளவுக்கா உங்கள அது பாதிச்சிருக்கு?”

“யோவ், பாத்திரங்கள் பற்றிய வர்ணனை இல்லைன்னு சொல்ல வரேன்யா, அதுக்காக நீங்கத்தானே சொன்னீங்க ஸார்ன்னு அடுத்த கதைல சாண்டில்யன் ரேஞ்சுக்கு பின்னழகு, முன்னழகுன்னு எழுதி வெச்சுடாத. சொல்றத சரியா புரிஞ்சுக்காதது உன்கிட்ட இருக்கற பெரிய ட்ராபேக்”

“இது புரியுது ஸார், கவனிக்கறேன்”

“புறச்சூழல் பத்தியும் பெருசா எதுவும் எழுத மாட்டேங்கற. அப்பறம் மனைவி நடந்துக்கற விதத்துக்கு கதைல ஜஸ்டிபிகேஷனே இல்ல, ஒரு நாள் நைட் வீட்டுக்கு வரலைன்னு இவ்ளோ வெறுப்பு ஏற்படுமா என்ன. அப்படி நடந்தா அந்த உறவுல ஏற்கனவே விரிசல்கள் இருந்திருக்கணும், அதைப் பத்தி கதைல எதுவும் இல்ல”

“இந்த மாதிரி இடைவெளிகளை வாசகர்கள்தானே ஸார் நிரப்பனும். எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிட்டா எப்படி”

“இடைவெளியை நிரப்பலாம்யா, ஆனா கதைல இந்த பாத்திரங்களின் கடந்த காலம் பத்தி இருப்பது ப்ளாக் ஹோல், அதுக்குள்ளே ரீடர் நுழைஞ்சா அவ்ளோதான்”

“இத பத்தியும் யோசிக்கறேன் ஸார்”

“இதெல்லாத்தையும் விட பெரிய பிரச்சனை உன் நடைதான். வாக்கியங்கள் நீ டைப் பண்ணின மாதிரி இல்ல, கடிச்சு துப்பின மாதிரி இருக்கு”

“தட்ஸ் ஹார்ஷ் ஸார்”

“ஹார்ஷா, மென்மையா சொல்லியிருக்கேன். உன் நடை உண்மைல எப்படி இருக்கு தெரியுமா, கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இருப்பவன், ரொம்ப நேரம் முக்கி, ரத்தக் கசிவோட..”

“ஸார் நிறுத்துங்க. நான் எழுதறது மினிமலிஸ்ட் ரைட்டிங், அதனால உங்களுக்கு இப்டிலாம் தோணுது”

“மினிமலிஸம்ன்னா கரடு முரடா இருக்கணும்னு எவன்யா சொன்னான், ஹெம்மிங்வே, கவாபாட்டா இவங்க ரைட்டிங் அப்படியா இருக்கு. இப்படி சில லிடிரரி ஜார்கன்ஸ அரைகுறையா புரிஞ்சுகிட்டு அப்படியே புடிச்சுக்க வேண்டியது. அப்புறம் பொருந்துதோ இல்லையோ, சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் யூஸ் பண்ணிடறது”

“நாம இப்ப பேசிட்டிருக்கறதுக்கு அரைகுறையா பிட் ஆகுதே ஸார்”

“நல்லா வக்கணையா பேசற, எழுதறதுதான்… நீயும் தொடர்ச்சியா எழுதி என்ன இம்ப்ரூவ் ஆகிருக்க? எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா?”

“ஒரு கதைக்கு ஆறேழு வெர்ஷன் வரை திருத்தறேன். அதுவும் எடிட்டர் கொஞ்சமாவது சேடிஸ்பை ஆறது ரொம்ப கஷ்டம். நானும் இத்தன வருஷமா ட்ரை பண்றேன் மனுஷன் கல்லுளிமங்கனாட்டம் இருக்கார், உங்கள மாதிரியேதான்”

“என்ன எடிட்டிங்? உன்ன சும்மா என்கரேஜ் பண்றாரு, நாங்க என்ன எதுவும் தெரியாமயா இருக்கோம்? கும்பல் சேத்துட்டு குழுவா கும்மி அடிக்கற நீ, லாபி”

“லாபியா, கிழிஞ்சுது போங்க, அது ஒண்ணுதான் கொறச்ச ஸார்,” என்று நான் சொன்னதை கண்டுகொள்ளாமல், “பாம்புக் கதை ஒண்ணு எழுதின, அதுல ஒண்ணுமே இல்லைன்னு அப்பவே நான் சொன்னேன். கடசில என்னாச்சு, இந்தாள் கதை எழுதலைன்னு யார் அழுதாங்கன்னு செம சாத்து சாத்தினாங்க,” என்றார்.

“எடிட்டருக்குக்கூட அந்தக் கதை பத்தி டவுட் இருந்தது, பொதுவா அவர் சொல்ற திருத்தங்களை ஏத்துப்பேன், ஆனா அந்தக் கதைல வெறும் “ழானர்” எழுத்தைதான் ட்ரை பண்ணினேன், சூப்பர்நேச்சுரல், நாட் ஹாரர்.”
“உச்சரிப்ப மட்டும் சரியா சொல்லு. ஜானர், ழானர் என்ன பெரிய வித்தியாசம். கடைசில கதை குப்பைனு வெளிப்படையா சொல்லாம ஒத்துக்கறதுதான். ழானர்னு சொன்னேன்னா இலக்கியம் படைக்கற கடமையிலிருந்து நீ எஸ்கேப் ஆயிட முடியுமா?”

“அப்டில சார், கதை சூப்பர்நேச்சுரல்னாலும் சில உள்ளடுக்குகள் என்னையும் அறியாம கதைக்குள்ள புகுந்திருக்கலாமே, எனக்கும்கூட அந்தக் கதை மேல பெரிய இல்லுஷன்லாம் இல்ல ஸார்”
“இப்டி பொறுப்பில்லாம எழுதறதுனாலதான் நீ பாலகுமாரனைத் தவிர யாரையும் படிக்கலனு சொல்றாங்க”

“அதுக்கு நான் என்ன ஸார் பண்றது”

“ஏன் நல்லா எழுத ட்ரை பண்றது, நீ எழுதறது ஒண்ணு பாம்பு, பேய் மாதிரி போகுது இல்ல சம்பவங்களின் தொகுப்பு, நத்திங் எல்ஸ். ஒன் கதையை பத்தி வந்த கருத்தைவிட உன் வாசிப்பைப் பத்தி இப்படி சொன்னதுக்குதான் யு மஸ்ட் பி அஷேம்ட்”

“நல்லா எழுததான் ஸார் ட்ரை பண்றேன், வேணும்னேவா யாராவது இப்படி எழுதுவாங்க. இப்போ அசோகமித்திரன் ஜீனியஸ், ஆனா அவருக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ் கல்கி, அலெக்ஸாண்டர் டூமா. என் கேஸ் தலைகீழ்னு வெச்சுக்க வேண்டியதுதான், நான் படிக்கறவங்க ஜீனியஸ், எழுதறது ரைட் ஆப்போசிட்டா வருது.”

“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிரு, சரி இந்த மணவாழ்வு கதைக்கு தமிழ் சிறுகதை மரபுல என்ன இடம்னு சொல்லு பார்ப்போம்”

“எதிர் மரபு இல்ல அ-மரபுன்னு வெச்சுக்கலாமே ஸார். குடும்ப உறவு பற்றிய இன்னொரு பார்வை…”
“ரிச்சர்ட் யேட்ஸோட ரெவோல்யுஷ்னரி ரோட் படிச்சிருக்கேல, அப்பறம் என்ன புதுசா எதிர் மரபு?”

“இந்தக் கருவை வெச்சு நெறைய புனைவுகள் இருக்குதான் ஸார், ஆனா ஆல் ஹேப்பி பேமிலீஸ் ஆர் அலைக், பட் ஈச் …”

“நிறுத்து, டால்ஸ்டாயலாம் நீ க்வோட் பண்ணவே கூடாது, அவர் எங்க நீ எங்க. ஒன் ஸ்டோரீஸ்ல என்ன தரிசனம் இருக்கு. காலாகாலத்துக்குமான அறம் ஏதாவது அதுல இருக்கா. திருப்பி கேக்கறேன், உன் கதைகளுக்கு தமிழ் இலக்கிய மரபுல என்ன இடம் இருக்கு? நீ மட்டும் இல்ல, உன் கதைய பப்ளிஷ் பண்றவங்களும் இந்த கேள்வியை தங்களையே கேட்டுக்கணும், இல்லைனா நீ பாட்டுக்கு குப்பையா எழுதி குவிச்சுகிட்டே இருப்ப. அத தடுப்பது ஒரு வாசகனா, விமர்சகனா எங்க கடமை”

“இனிமே யதார்த்த புனைவு தான் ஸார், ஏதாவது தரிசனம் தானா மாட்டாமையா போயிடும். இப்போ நான் எழுதிட்டிருக்கற கதைய சட்டுன்னு “லவ்” பத்தினதுன்னு சொல்லிடலாம், ஆனா அதுல கூட …”

“லவ்வா, சரிதான். உன் முகம் கண்டேனடி இல்லைனா என் உயிரே கண்ணம்மா இப்படி ஏதாவதுதான் தலைப்பு வைக்கப் போற”

“இல்ல ஸார், இப்ப செல்லம்மாள் கதை இருக்கு இல்லையா, அதை காதல் கதைனா சொல்வீங்க, ஆனா அதுல வர தூய அன்பு..”

“அப்ப புதுமைப்பித்தன் கதையோட நீ எழுதியே முடிக்காத கதைய கம்பேர் பண்ற, உன்ன விட்டா குப்பையா எழுதிட்டே போவேன்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க”

“ஸார், புரிஞ்சுக்குங்க. நான் எழுதறதும் நீங்க குறிப்பிட்ட டைட்டில் உள்ள கதைங்க மாதிரி இல்லைன்னு தான் சொல்ல வரேன். ஒரு கேள்விக்கான பதிலை செவன்த் ஸ்டாண்டர்ட்லேந்து ஒரு பையன் தேடறான். ரியலிஸ்டிக் ஸ்டோரிதான், அதுல லவ்வும் இருக்கு, இப்ப நா என்ன விளக்கினாலும் சரியா புரியாது. தாமஸ் ஹார்டியோட கவிதை வரிகளோட கதைய முடிக்கப் போறேன்”

“என்ன எழவோ, பிஞ்சுலையே பழுத்த பையன் போலிருக்கு”

“இது ஸ்வீபிங் ஸ்டேட்மென்ட் ஸார், அவனுக்கு பண்ணண்டு வயசிருக்கும். அந்த வயசுல இந்த உணர்வு நாச்சுரல்தான, உங்களுக்கும் வந்திருக்குமே,” என்று சொன்னதற்கு பெரியவர், “அட நீ வேற” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாலும், அவர் உள்ளூர பால்யத்தின் காட்சியொன்றை மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறார் என்பதை அவரின் அதன் பின்னான மௌனம் உணர்த்தியது. தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் அப்பறம், இப்ப ஒன்னப் பத்திதான பேசிட்டிருக்கோம், என்ன திடீர்னு லவ்ல இறங்கிட்ட?”

“ஜனவரி 25க்காக…” இவரிடம் ஏன் அதெல்லாம் சொல்ல வேண்டும்? “ஏதோ தோணிச்சு ஸார் ப்ளான்லாம் பண்றதுல்ல. உங்க டீன் ஏஜ் பத்தி நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அதையே…”

“சும்மா இங்க இருக்கறத அங்க, அங்க இருக்கறத இங்க மாத்திப் போட்டு கதைன்னு சொல்லிட்டிருக்க, அப்பப்போ ரைட்டர்ஸ், புக்ஸ் நேம் வேற சேத்துக்கற. இதெல்லாம்… “

“அசோகமித்திரன்கூட தன் வாழ்க்கைல நடந்த இன்சிடென்ட்ஸ்ஸ கலைச்சு போட்டுதான்..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, “போதும் கெளம்புயா, கடுப்பேத்தாத. யாரோடெல்லாம் ஒன்ன கம்பேர் பண்ற, க்ரிஸ்டி, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தாமஸ் ஹார்டி, அசோகமித்திரன், ஒருத்தர விட மாட்டியா, என்ன விளையாட்டா இருக்கா?” என்று சத்தம் போட ஆரம்பித்தார் முற்றுப்புள்ளி.

முற்றுப்புள்ளியின் வீட்டிற்கு போவதற்கு ஆட்டோவை சில சமயம் உபயோகப்படுத்தினாலும், அவருடனான விமர்சன உரையாடல் முடிந்து திரும்பும்போது நாய் வண்டியையே எனக்குத் தகுதியான வாகனமாக உணர்வேன். இன்றும் அப்படித்தான், ஆனால் இப்போது எனக்கு சிந்திக்க தனிமை தேவைப்பட்டது. ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி, வீட்டு முகவரியைச் சொன்னேன். இந்திரா காந்தி சிக்னலில் காத்திருப்பு. நம்பிக்கை இழக்கப் போவதில்லை. இலக்கிய பயண பாதை இது, தமிழ் சிறுகதை மரபில் இடம் பிடித்து விடவேண்டும். காணி நிலமெல்லாம் தேவையில்லை, துண்டு விரிக்க இடம் கிடைத்தால்கூட போதும்.

எதிர் திசையில் நல்ல கூட்டம், இல்லை அது தவறான வார்த்தைப் பிரயோகம், மானுடத் திரள் என்பதே சரி. விரைந்து செல்லும் வண்டிகள். யாருக்கு என்ன அவசரமோ. முழுதும் போர்த்தப்பட்டிருக்கும் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, வண்டியை எங்கும் பிடித்துக் கொள்ளாமல் பைக்கில் பின்புறம் ஒருபக்கம் மட்டும் கால் போட்டு அமர்ந்திருக்கும் சேலை அணிந்த பெண். அவள் மருத்துவரைப் பார்க்க சென்று கொண்டிருக்கலாம், மருத்துவச் செலவிற்கு பணமிருக்குமா? ஆட்டோ அருகில் நின்றிருக்கும், பைக்கின் ஹார்னை அழுத்திக் கொண்டே இருப்பவர் எந்த முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறாரோ. எல்லா பக்கமும் நன்றாக ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இந்த ஜனத்திரளில் ஏதேனும் மானுட தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும், கதையாக்கி விடலாம்.

ஓயா அலை – கமல தேவி சிறுகதை

கமல தேவி

பனி இன்னும் முழுமையாக விலகவில்லை. விடுதியில் பெரும்பாலும் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க விஜி மதியை எழுப்பி, “நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேங்க்கா,” என்றாள்.

“தேவையில்லாத வேல பாக்கற நீ. நீங்க  என்ன எல்லாத்தையும் புரட்டப் போறீங்களா? நீயும் அவன்களோட சேந்துக்கிட்டு…”

“இல்லக்கா. டீச்சிங் ப்ராக்டிஸ் முடிஞ்சி காலேஜ் போறதுக்குள்ள நாலு டெஸ்ட் வைக்கனுல்ல”

“ஸ்கூல் நேரத்தில உங்களால மட்டும் கலட்ட முடியலயாக்கும். போய்த் தொல”

விஜி போர்வையை எடுத்து அவள்மீது மூடியபோது, அவளைப் பார்த்து மதி, “வயலெட் வித் வொய்ட் சாரி அழகாயிருக்கு”, என்று கண் சிமிட்டினாள். பொங்கலும், சாம்பார் வடையும் தின்றுவிட்டு அவள் முருகன் கோவிலில் அமர்ந்திருக்கையில் மணி ஒன்பது.

“ஏண்டிம்மா சனியன்னைக்குமா? மத்தவா எங்க?”

“அவங்க வேல முடிச்சிட்டாங்கய்யா. ஃப்ரண்டு வருவான். எனக்கு ஸ்கூல் வேல முடியல,”  என்றவளுக்குத் தலையாட்டிவிட்டு பட்டர் படிகளில் அமர்ந்தார். அவரின் சருகுகளின் அசைவுகள் போன்ற கசகசத்த குரலில்,

“நாணி இனியோர் கருமமில்லை
   நாலய லாரும் அறிந்தொழிந்தார்…..
……
நீரெனைக் காக்க வேண்டில்
ஆய்ப்பாடிக் கேஎன்னையுய்த் திடுமின்,”

என்று பாடி நிறுத்தினார்.

“ச்…”

“என்னடிம்மா?”

“கவிதைன்னா பொய்யாவேதான் இருக்கனுமா?”

“லோகத்தில இல்லாததையா பாடிட்டேன். மார்கழியானா வாயில தானா வர்றது. உனக்கு பாட்டு புரியறது அதான் என்னடான்னு இருக்கு. ஆனா உன்னால நடைமுறையில இதெல்லாம் நம்பறத்துக்கு முடியல்ல. சின்ன வயசில இதில இருக்கற  ஏக்கம் மனசுக்கு பிடிக்கவும் என் ஆசையில திரும்பத் திரும்ப ஆண்டாளை படிச்சேன்… அங்க பாரு உன் சகா,” என்றார்.

வெளியில் கையில் ஒருபுத்தகத்தோடு நின்ற மனோ கைகாட்டினான். கையில் திருநீருடன், வாயிலில் கையெழுத்து போட்டுவிட்டு வாயிலவரிடம் தலையாட்டி நடந்தாள்.

மனோவிடம் திருநீரை நீட்டினாள்.

“புதுசா என்ன? இதெல்லாம் இட்டுக்கறதில்லன்னு தெரியாதா…”

“ராகவ ஐயர் புத்ரனா நீர்?”

“காலையிலேயேவா? அங்க பாரு திருநீருக்கு ஆள் வருது,” என்று பேருந்திலிருந்து இறங்கிய பாலுவைக் காட்டினான்.

திருநீறை நெற்றியிலிட்டுக் கொண்டே பாலு, “சும்மா விளையாடிட்டு இருக்கக் கூடாது. நான் கணக்கு டெஸ்ட் முதல்ல வைக்கறேன். இரண்டாவது பிசிக்ஸ்,” என்றான்.

இவள், “நான் என்ன ஏமாந்த ஆளா?” என்றாள்.

மனோ, “பயாலஜிதானே விஜி. பசங்க மதியம்கூட எழுதிடுவாங்க,” என்றான். பள்ளியில் நுழைகையில் பிள்ளைகள் பேசிச் சிரித்தும், ஓடிப் பிடித்தும் ஆடிக்கொண்டிருந்தனர்.

பாலு, “இந்த டெஸ்ட் அவங்களுக்கு ஒரு விளையாட்டு,” என்றான்.

“ஆமா பாலு. அதான் மதியக்கா நேத்தே வைக்க வேண்டியதுதானே, படிச்சிட்டா வரப் போறாங்கன்னாங்க. அவங்க, இவங்க எல்லாம் சரிதான். நாமதான் வீணா…”

“விடு விஜி. பிள்ளைகளுக்கு படிக்க நேரம் கொடுக்கனும்ல. நாம சரியாதான் பண்றோம்,” என்றான் பாலு. பிள்ளைகள் அனைவரும் வந்துசேர மேலும் அரைமணியாயிற்று.

விஜி பிள்ளைகளை மைதானத்தில் கட்டிட நிழல் பகுதியில் வரிசையாக அமரவைக்க மனோ பசங்களை மரநிழல்களில் அமர்த்திக் கொண்டிருந்தான். பாலு வினாத்தாள்களை எடுத்து அமர்ந்திருந்த பிள்ளைகளிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சிட்டுகளும் காக்கைகளும் எழுந்து பறந்து சத்தமிட்டுக் கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில் மூவரும் நடக்கும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி.

விஜிதான் முதலில் விமலா இடப்பக்கமாக சரிவதைப் பார்த்தாள்.

“என்னாச்சு விமலா?” என்று ஓடியவளின் பின்னே பாலுவும், மனோவும் வேகமாக நடந்தார்கள்.

“விஜி பதறாத… காலயில சாப்பிடாம வந்திருக்கும்,” என்ற பாலு, விமலாவின் வாயில் நுரை வருவதைப் பார்த்ததும், “தள்ளு விஜி. யாராவது தண்ணி எடு,” என்று அவளைத் தூக்கி விஜி மீது சாய்த்தான். கன்னத்தில் தட்டி நீர் தெளித்ததும் கண்களை மூடித்திறந்து பின் மூடிக்கொண்டாள்.

சூழ்ந்த பிள்ளைகளை மனோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

“இங்க ஆட்டோ சீக்கிரம் கிடைக்காது சார். பின் கேட் வழியா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு பத்து நிமிசத்துல போயிரலாம் சார்”, என்றான் ஒருவன். அதற்குள் விமலாவின் கைக்கால்கள் உதறத் தொடங்கியிருந்தன.

“மனோ நீ ஸ்டூடண்ஸை வீட்டுக்கு அனுப்பிட்டு வா. விஜி நீ என்கூட வா”, என்று துவண்ட விமலாவைத் தூக்கி நிறுத்தி தோளில் போட்டுக்கொண்டு பின்கேட்டிற்கு விரைந்தான் பாலு.

பாதையில் வண்டி பிடித்து மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார்கள்.

செவிலி தன் குறிப்பு ஏட்டைப் பார்த்து,“வயசு என்ன?” என்றார்.

பாலு, “பதினேழு இருக்கும்,” என்றான்.

“நீங்க யாரு?”

“எங்க ஸ்டூடண்ட்ங்க,” என்ற விஜியையும் பாலாவையும் அந்தச் செவிலி மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்.

“ட்ரெய்னிம்மா”, என்றான் பாலா.

“ம். யாரு கையெழுத்து போடறீங்க?”

பின்னால் வந்த மனோ, “நாங்க ரெண்டு பேரும்,”என்றதை மறித்து, “நானும் போடறேன்,” என்றாள் விஜி.

“கேஸ் என்ன தெரியுமா? ஏதோ பாய்சன் சாப்பிட்டிருக்கு. உள்ள வாங்க”

மனோ, “இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்லருந்து வந்துருவாங்க,” என்றான்.

அவர்களால் விமலாவிற்கு வயிறு தூய்மை செய்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த இடம் அதற்கே உரிய ஒவ்வாத நாற்றத்தோடு இருந்தது.

அங்கிருந்த இளம் செவிலி, “நேரமாயிடுச்சுன்னு நெனக்கறேன்… சொல்ல முடியாது,” என்று கிசுகிசுத்தாள்.

விமலாவின் வயிறு பொருமி எழுந்தது. உடலையும் சேர்த்து உயிருடன் வெளியே தள்ளிவிட வாய் எத்தனிப்பதைப் போல திறந்து உறுமியது.

“நீங்க வெளிய நில்லுங்க”, என்ற குரலால் மூவரும் வெளியே வந்தார்கள்.

பெயர்ந்த தரை சில்லென்றிருந்தது. முன்னால் செடிகள் அடர்ந்து படர்ந்திருந்தன. வாசனையாலும் இருப்பாலும் அந்தக் கட்டிடம் தன் பழமையைக் காட்டிக் கொண்டிருந்தது . மருத்துவமனையின் கடைசியிலிருந்த தனி சிறு ஒற்றை அறை கட்டடம் அது. ஆள் நடமாட்டம் கூப்பிடும் தொலைவில் இருந்தது. வெளியே சாலையில் வாகனங்களின் ஒலிகள்.

விஜி நடுங்கும் இரு கரங்களாலும் பாலுவின் வலது மேல்கையை  பிடித்துக் கொண்டாள்.

“நீ போ விஜீ. நாங்க பாத்துக்கறோம்,” என்றாலும் பாலுவிடமிருந்த தடுமாற்றத்தை விஜியால் உணரமுடிந்தது.

“பொம்பளப் பிள்ளைங்கறதால விஜி இருக்கட்டும்,” என்றான் மனோ.

“ஒன்னுல்ல விஜி. பாத்துக்கலாம்,” என்ற பாலுவிற்கு உடல் வியர்த்து கசிந்தது.

“நா போகல. அந்தப் பொண்ணு உயிர் துடிக்கறத பாத்தியா? ஏன் இப்படி பண்ணிக்கறாங்க? இப்ப அவ ஒடம்புக்குள்ள ஒரு குருஷேத்ர யுத்தம்… தவறின தன்வாள் தன்னை வெட்றாப்ல தானே இது…” என்று கையை எடுத்து வலது காதை தேய்த்துக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அந்தக்கை வலது காதை தேய்த்துக் கொண்டிருந்தது.

“சும்மா இருக்க மாட்டியா விஜீ… எல்லாத்தையும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு… உன்னோட கை எவ்வளவு சில்லுன்னு இருக்கு பாரு. ஒரு டீச்சராக வேண்டியவ இவ்வளவு பதட்டப்பட்டா எப்படி? அவளுக்குத் திமிரு . வேறென்ன?” என்றான் பாலு. மனோ எதுவும் பேசாமல் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பையன் ஒருவன் உள்ளூர்ஆசிரியருடன் வருவது தெரிந்தது. விஜி பாலாவின் தோளிலிருந்து கையை எடுத்தாள்.

பாலு, “இதில என்ன இருக்கு… அவர் வந்தா என்ன?” என்றான்.

இவள், “பயப்படறது தெரியக்கூடாது பாலு”, என்றாள்.

“ம்”

கணக்கு வாத்தியார் வேகநடையில் வேட்டி சட்டையில் வந்தார். இந்த உடையில் சாதாரண தந்தையைப் போல இருந்தார்.

படிகளில் ஏறும்போதே, “யாருக்கிட்ட கேட்டு கிளாஸ் வச்சீங்க. நீங்க என்ன இங்க வொர்க் பண்ணவா வந்திருக்கீங்க? அதிகப் பிரசிங்கத்தனம். பிள்ளை எப்படி இருக்கு?” என்று குரலை உயர்த்தினார்.

“ஒன்னும் சொல்லல சார்”, என்றான் பாலா.

“ஐ திங்க் யூ ஆர் எ பர்பெக்ட் ஒன்”

“சார் ஹெச்.எம் சார்க்கிட்ட கேட்டுதான் வச்சோம். இந்த பொண்ணு இப்படி செஞ்சதுக்கும் பாலுவோட பெர்பெக்ஸனுக்கும் என்ன சம்மந்தம்?” என்ற விஜியைப் பார்த்து புருவங்களை சுருக்கிய கணிதஆசிரியர், “சட் அப்..” என்றபடி மனோ பக்கம் பார்வையை மாற்றினார்.

“ஸ்கூல் டேவா இருந்தா மட்டும் என்ன பண்ண முடியும்?”,என்றான் மனோ.

“இடியட். அதாண்டா…” என்றபடி ஆள் அரவம் கேட்டு திரும்பினார்.

வெளியில் வந்த செவிலி கையெழெுத்திட காகிதங்களைக் காண்பித்தாள். அதை வாங்கிய பாலுவிடமிருந்து பறித்த அவர் கையெழுத்திட்டு, “இவங்களும் ஸ்டுடண்ஸ்மா” என்று திருப்பிக் கொடுத்தார்.

“எப்படியிருக்கா?”

அவள், “பிழச்சுக்கும் சார்”, என்றபடி உள்ளே சென்றாள்.

பதறிய உடலும் நடையுமாக வந்த நடுவயது பெண், “நான் என்னடி சொல்லிப்புட்டேன். படிக்கற வயசுல வேற நாட்டம் வேணாண்ணு தானே”, என்ற குரலடைக்க தரையில் அமர்ந்தாள்.

விஜி ஓடிச்சென்று அவளைப் பிடித்து, “பயப்படாதீங்க… காப்பாத்தீட்டாங்க”, என்றாள். அவள் விஜியை மிரளப் பார்த்துவிட்டு மேலும் பதறினாள். தொடுகையிலேயே அவளின் அத்தனை நடுக்கங்களும் தெரிந்தது. தன்னியல்பில் கண்கள் கலங்குவதை விஜி கட்டுப்படுத்தினாள்.

“ஏம்மா பிள்ளங்கள பாத்து பதமா பேசறதில்லயா?” என்றார் சார்.

“என்ன சார் பேசிட்டேங்கறீங்க. ஒன்னுமே சொல்லக்கூடாதா… சொன்னா இந்த வேலயதான் பாப்பேன்னா… போகட்டுங்க,”என்று கத்தினாள்.

“சரிம்மா… சரிம்மா… கோவப்படாதீங்க”

செவிலி வந்து, “பயப்படாதீங்க… ரெண்டுநாள் இருக்கனும். போய் பாக்கலாம்,” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

உள்ளே அமைதியாய் விமலா படுத்திருந்தாள். அந்தம்மாள் விமலாவின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தபடி கத்தி அழுதாள். சார் விமலாவின் தலையை தடவிவிட்டு கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீங்க கிளம்புங்க…” என்று சார் மூவரையும் சொல்லிவிட்டு அந்தம்மாவை மெதுவாக அந்த இடத்திலிருந்து தள்ளி அழைத்துப் பேசத் தொடங்கினார்.

“சிங்கம் உறுமுது…” என்று தொடங்கிய விஜியை பாலு முறைத்ததும் அவள் பேசுவதை நிறுத்தினாள்.

“வேறொருத்தர்ன்னா நம்மள டென்சனாக்கி, நம்மையே கைய காட்டி விட்டுருப்பாங்க”, என்ற பாலு  நடந்தான். மனோவின் உடல் நடுக்கத்தை அருகில் நடந்த கணத்தில் உணர்ந்த விஜி, அவன் விலகியே நின்று கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள்.

இரு புறமும் செடிகள் அடர்ந்த அகலம் குறைந்த பாதையில் நடந்தார்கள். “இன்னக்கி காப்பாத்தியாச்சு… இந்த மாதிரி யோசிக்கற பிள்ளைய காவலா காக்க முடியும்?” பாலு முகத்தில் சலிப்பைக் காட்டினான்.

மனோ, “இனிமே மேக்சிமம் அப்படி செய்யமாட்டா…” என்றான்.

“அவ்வளவு உறுதியா எப்படி சொல்ற?”

“இதமாதிரி நானும் நினச்சவன்தாண்டா. யூ. ஜி முடிச்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி… எனக்கு கருமாதி பண்ற நேரம் வந்திச்சு… எத்தனையோ காரணங்கள்…” என்று பெருமூச்சு விட்டான்.

“அந்த வயசில என்ன பண்ண முடியும்?”

“அதான்… செத்துப்போலான்னு முடிவு பண்ணினேன்,”

“நீயா!” என்றான் பாலா.

விஜி, “ஒரு பையனுக்கும் பொண்ணுக்குமான அன்பு… ச்… எதுக்கு மழுப்பல்… காதல்  எப்பவும் ஆச்சர்யம், எப்பவுமே கேள்வி, எப்பவுமே பிரச்சனை…”என்று உதட்டைப் பிதுக்கி முகத்தைச் சுளித்தாள்.

மனோ ,“அந்த வயசில பெரிய மேஜிக்கும்தான்… எல்லாமே அழகா தெரியும்,” என்றான்.

பாலு,“அது சலிப்பானதும்தான்,”என்றான்.

எங்கிருந்தோ பேசுபவன் என மனோ, “அம்மா என்னை புரிஞ்சுகிட்டா… எங்கூடவே இருந்தா. சின்னப்பிள்ளையில அவக்கூடதான் படுத்துப்பேன். பத்தாவது பரீட்ச்சைக்கு படிக்க தனியா தூங்க ஆரமிச்சபிறகு எனக்கு தனி படுக்கைதான். நான் விமலா மாதிரி முடிவெடுத்தப்ப மறுபடியும் என் நெஞ்சில ஒரு கைய வச்சி தூங்க ஆரமிச்சா… எங்கூடவே இருந்தா. அதப்பத்தி எதுவும் பேச மாட்டா. நான் மூணு மாசம் வீட்டவிட்டு வெளிய போகல. மறுபடியும் எம்.எஸ்.சி முதல் நாளன்னிக்கி காலையில குளிச்சிட்டு துண்டோட வந்தப்ப அம்மா வீணைச் சத்தம் கேட்டுச்சு. நான் தோட்டத்து படியில நின்னுட்டேன். அந்த ராகத்துக்கு … காத்தில நடுங்கற கொடி மாதிரி ஒரு நடுக்கம்… பின்ன அதுவே எதுத்து நிக்க பண்ற பேலன்ஸ் மாதிரி எப்படியோ மாறிடுச்சு. வீணை நின்ன பிறகு பாத்தா அப்பா ஹாலில் உட்காந்திருந்தார். நான் மெதுவா வீட்டுக்குள்ள போய் நின்னேன். பூஜை ரூமிலருந்து வந்தவ பாஞ்சு என்னய கட்டிப் பிடிச்சுக்கிட்டா… இந்த முதுகுல இன்னமும் அந்தக் கை சூட்டோட இருக்கறாப்ல இருக்கு,” என்று முன்னால் பார்த்தபடி நடந்தான். மெயின் ரோட்டிற்கு வந்திருந்தார்கள்.

“அது ஒண்ணுமில்ல மனோ… இயற்கையாவே அந்த வயசில ஹார்மோனல்…” என்று தொடங்கிய விஜியின் தோளில் ஓங்கித்தட்டி, “என்னப்புள்ள நீ… அவன் என்ன சொல்றான்… நீ என்னத்த பேசற… வாயமூடிக்கிட்டு வா…” என்ற பாலுவை முறைத்துவிட்டு தோளைத் தடவியபடி வேகமாக நடந்து மனோ பக்கம் சென்றாள்.

பாலு மனோவிடம், “ரூமுக்கு போய் கொஞ்சநேரம் தூங்கிட்டு வேலயப்பாரு… விஜீ நீ ஒழுங்கா ஹாஸ்ட்டல் போய் சேரு,” என்றபடி  பேருந்தில் ஏறிக் கொண்டான்.

மீண்டும் மனோ, “நீ சொல்றாப்ல அந்தவயசில… வெய்யிலுக்குப் பின்னாடி நல்லமழ வந்து சட்டுன்னு நின்னாப்ல ஒரு ஏமாத்தம்…கோபம் , அதத்தாண்டி என்னமோ… இந்த வயசில உணர முடியாது விஜி. எல்லாத்துக்கும் காலத்துக்கிட்ட செக் உண்டுல்ல,” என்றான். விஜி தன்னுள் ஆழ்ந்தாள். அவர்கள் நின்றிருந்த புளியமரத்தின் நிழலில் குட்டி இலைச்சருகுகள் காற்றில் சுழன்று சுழன்று விழுந்தன.

மனோ, “விமலா அம்மாவுக்கும், அவளுக்கும் குடிக்கறதுக்கு ஜூஸ், சாப்பிட எதாவது  வாங்கி குடுத்திட்டு வர்றேன்,” என்று சுற்றி கடைகளைப் பார்த்தான்.

விஜி அவன் முதுகில் கை வத்து, “உண்மையாலும் சாகனுன்னு தோணுச்சா?!” என்றாள்.

“அது எப்பவுமே சந்தேகப்படற விஷயம்தானே…..”என்ற மனோ, விஜியின் கண்களைப் பார்த்து, “எல்லாத்துக்கும் காரண காரியம் தேடாத விஜி… படிப்பால உலகத்தப் பாக்காத…” என்றான்.

“பின்ன?” என்றவளைப் பார்த்து புன்னகைத்த மனோ, “நீ ஃபிசியாலஜி படிச்சத வச்சு அந்த பொண்ணுக்கு இப்ப எவ்வளவு கஸ்ட்டன்னு புரிஞ்சுகிட்ட மாதிரி , அதில மனச போட்டுப்பாரு. இப்ப என் முதுகில நீ கை வச்சிருக்கறது எதுக்கு? நீ எதாச்சும் சொல்வ… ஆனா அன்னிக்கு அம்மா வச்ச அதே கை,” என்றான்.

“இது ரொம்ப பைத்தியக்காரத்தனமா இருக்கு. மதர் அபெஃக்சென்ங்கறது …” என்று ஆரம்பித்த விஜியின் கையைப் பிடித்து நெரிசலாக சாலையைக் கடந்த மனோ, “நான் அப்படித்தான்… நீ இப்படித்தான் .என்னால உன்னப் புரிஞ்சுக்க முடியும்… உன்னால எப்பவுமே என்னைப் புரிஞ்சுக்க முடியாது…  நீ படிச்சத, நீ எப்படி இருக்கனுன்னு மத்தவங்க சொன்ன குப்பைகளை உன்மேல போட்டு மூடிட்ட. நீதான்  உதறனும்….”என்று சிரித்தபடி, “கண்ண உருட்டி உருட்டி கேள்வியா யோசிக்காம பாதையப் பாத்துப் போ..”என்றபடி கடைக்குள் நுழைந்தான் .புழுதி மங்கலாக்கிய சாலையில் மதிய வெயிலில் பசியுடன் விஜி நடந்தாள்.