தருணாதித்தன்
“சார், கார்லுக்கு நம்ம பிலிப்பைன்ஸ் அலுவலகத்திலிருந்து கோபி லுவாக் என்ற காபி வர வழைக்க வேண்டும் “ என்றான் ரகுராவ்.
“என்னது? நம் ஊரில் கிடைக்காத காபியா? உள்ளூர் காபி பிடிக்காது என்றால் ஸ்டார்பக்ஸ் காபி வர வழைக்கலாம்,“ என்றேன்.
“சார் அவர் அந்தக் காபிதான் சாப்பிடுவாராம் . அது என்ன சிறப்பு தெரியுமா, புனுகுப் பூனை உண்ட காபிப் பழங்கள் செரித்து , கழிவில் வெளியே வரும் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுவது. ஒரு கிலோ காபிக் கொட்டை ஆயிரம் டாலருக்கு மேல் விலை“
நான் முகம் சுளித்தேன்.
“தலை எழுத்து, கழிவுக் காபி, அந்தக் கழிவை நாம் வெளி நாட்டிலிருந்து வரவழைக்க வேண்டும் “
நாங்கள் கார்ல் ஷ்மிட் என்கிற எங்களுடைய பன்னாட்டு நிறுவனத்தின் உலக சி இ ஓ வின் வருகைக்குத் தயார் செய்து கொண்டிருந்தோம். அவர் சுமார் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு வருகை புரிவார். நம் பிரதமர் நாகாலாந்து ,அந்தமான் என்று விஜயம் செய்து அங்கே பழங்குடியினருடன் நடனம் ஆடி படம் எடுத்துக் கொள்வதைப் போல. நான் எங்கள் கம்பெனியின் இந்தியத் தலைவராக ஆன பிறகு கார்ல் முதல் வருகை. ஒரு தவறும் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். சென்ற முறை கார்ல் வந்தபோது நடந்த சிறு சம்பவத்தினால் பெரிய பின் விளைவுகள் ஆயின. அவர் தங்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிறைய மரம் செடிகள் இருந்தன. இரவு ஜன்னலைத் திறந்து வைத்ததில் அவருடைய படுக்கையில் ஏதோ ஒரு பூச்சி வந்து அவரை பயமுறுத்தி விட்டது. எனக்கு முன்பு இந்தியத் தலைவராக இருந்தவர் திடீரென்று இங்கிருந்து ஆப்ரிக்காவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது.
எல்லா ஏற்பாடுகளையும் ரகுதான் கவனித்துக் கொண்டான். ரகுதான் சரியான ஆள்.
என்னை, “சார் இன்றைக்கு தொண்டை சற்று சரி இல்லை போல இருக்கிறதே, எதற்கும் வென்னீரே குடியுங்கள், நாளை டெல்லியில் உங்கள் பேச்சு இருக்கிறது,“ என்று கவனித்துக் கொள்ளுவான்
“சார், அடுத்த மாதம் உங்களுடைய மனைவி பிறந்த நாள், காலண்டரில் மீட்டிங் எதுவும் இல்லாமல் வைத்திருக்கிறேன், எம் ஜி ரோடில் புதிய நகைக் கடை திறந்திருக்கிறார்கள். வைர நகைகள் எல்லாம் பாம்பே டிசைன்,“ என்று நினைவுபடுத்துவான்.
என்னை மட்டும் மட்டும் இல்லை, எங்கள் கம்பெனி டைரக்டர்கள், விருந்தாளிகள், எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மத்திய ஆடிட் குழு என்று முக்கியமான யார் வந்தாலும், அவர்களை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவான்.
நான் இதுவரை கார்லை இரண்டு முறைதான் நேரில் பார்த்துப் பேசி இருக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரம் மட்டுமே. கார்ல் ஆறு அடி உயர ஜெர்மன். முகத்தில் முதலில் பெரிய மூக்குதான் தெரியும். எப்போதும் தீவிரமாக நேற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிப்பவர், ஏதாவது எங்களிடம் பேசும்போது கண்ணாடி மூக்குக்கு பாதியில் வந்து விடும். அவரைத் திருப்திப்படுத்துவது மிகக் கடினம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஜெர்மனியில் என்னுடைய நண்பர்களிடமிருந்து கார்லை எப்படிக் கையாள்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். முக்கியமாக அவர் கேள்விகள் கேட்கும்போது. நமக்கு பதில் தெரிந்திருந்தாலும், வரிசையாக சரியான பதில் அளிக்கக் கூடாது. அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு இன்னும் கோபம் கொள்ளுவார். அவர் தோண்டித் துருவ ஆரம்பித்தால், முன்றாவது கேள்விக்கு மேல், அவருடைய மூக்கு சிவப்பதற்குள் பணிவாக தெரியவில்லை என்று சொல்வது நலம். கார்ல் மகிழ்ச்சி அடைந்து நீண்ட விளக்கம் கொடுப்பார். கையில் ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் வைத்துக் கொண்டு குறிப்பு எழுதிக் கொண்டால் இன்னும் நலம்.
ரகு இருபத்து ஐந்து வயதானவன். மில்லனியல் எனப்படும் தலைமுறையைச் சேர்ந்தவன். தலையில் குடுமி மாதிரி கட்டிய போனிடெயில், ஒரு காதில் கடுக்கன், இந்தியச் சராசரிக்குச் சற்று அதிக உயரம். எப்போதும் கையில் மொபல், வாட்சப், இன்ஸ்டகிராம் என்று பார்ப்பதற்கு அடுத்த தலைமுறையாக இருந்தாலும், பழகுவதில் மிக அருமையானவன்.
அவன் சேர்ந்த புதிதில் நான் சொன்னேன், “ரகு உனக்கு வரப் போகும் மனைவி கொடுத்து வைத்தவள். இந்த மாதிரி பரிவுடன் கவனிக்கும் கணவன் எங்கே கிடைப்பான்? யார் அந்த அதிர்ஷ்டசாலியோ”
“ஸார், மயாதான் அந்தப் பெண், அவளை அடைவதற்கு நான்தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வேண்டும் “
“ஓ, ஒரு முறை அவளைச் சந்திக்க வேண்டும்,“ என்றேன்
சென்ற ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு எங்கள் வீட்டுக்கு அவளை அழைத்து வந்திருந்தான். மிக நல்ல பெண்ணாக இருந்தாள். இரண்டு பேரும் இழைந்து, சிரித்து, ரகு கிடார் வாசிக்க அவள் சேர்ந்து பாட்டுப் பாடி எல்லோரையும் மகிழ்வித்து அந்தப் பார்ட்டியே கலகலப்பாக இருந்தது.
அவளிடன் சொன்னேன், “மாயா, ரகு மாதிரி ஒருவன் கிடைப்பது அபூர்வம். மிகவும் பரிவாக உன்னை வாழ் நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளும் நல்ல கணவனாக இருப்பான், வாழ்த்துகள்”
அவளும் பெரிய புன்னகையுடன் அவன்மேல் சாய்ந்து, “ஆமாம் சார், என் அப்பாகூட இப்படிக் கவனித்துக் கொண்டதில்லை,” என்றாள்
“ரகு,மாயா உங்கள் இருவரையும் பார்த்தால் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது திருமணம் ?’
“திருமணம் என்ன சார், அது உலகத்துக்காக, நாங்கள் மனதால் ஒன்றாகி விட்டோம். சென்ற மாதம் மாயா என்னுடன் வந்து விட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம்,“ என்றான்.
நான் அதை எதிர்பார்க்கவில்லை, இருந்தாலும் முகக்குறிப்பு மாறாமல் இருவரையும், “ ஓ அப்படியா, என்னுடைய வாழ்த்துகள்,“ என்றேன். அன்றிரவு நானும் என் மனைவியும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். என் மகளும் படித்து முடித்து வெளிநாட்டில் வேலையில் இருக்கிறாள்.
கார்ல் வருகைக்கு முன்பே, ரகு அவருடைய செக்ரெடரி மற்றும் உதவியாளனிடம் பேசி நிறைய தெரிந்து கொண்டு விட்டான். அவருக்கு விமான நிலையத்திலிருந்து என்ன கார், தங்கும் இடம், அறை, அறையிலிருந்து பார்த்தால் என்ன காட்சி ( இந்த முறை மரம் செடி எல்லாம் பூச்சிகள் வராதபடி சற்று தூரத்தில்), தலையணை எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும், அறையில் குளிர்பதனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து ஒரு நீண்ட பட்டியலே தயாரித்து விட்டான். தவிர சென்ற முறை முன் இந்தியா வந்தபோது என்ன எல்லாம் குளறுபடி ஆயிற்று என்று தெரிந்து கொள்ள அவருடைய உதவியாளனுடன் ஒரு வீடியோ கால் ஏற்பாடு செய்தான். “வீடியோ இருந்தால்தான் நல்லது, பேசுவதற்கும் மேலே முகத்தை பார்த்து நிறைய அறிந்து கொள்ளலாம்,“ என்றான்.
அவருடைய உதவியாளன், “அவர் பெர்ரியர் என்ற பச்சை பாட்டிலில் வரும் தண்ணீர்தான் குடிப்பார்,” என்று ஆரம்பித்து வரிசையாகச் சொன்னான். அப்படித்தான் கோபி லுவாக் எங்கிற கழிவுக் காபி வரவழைத்தோம். இவை எல்லாம் தவிர மிக முக்கியமான ஒன்று சொன்னான். அவர் சாப்பாட்டில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவருக்கு புதிதாக, “நட் அலர்ஜி” வந்திருக்கிறதாம். அதாவது நிலக் கடலை, பாதாம் என்று எந்தக் கொட்டையும் ஆகாது. சிறு அளவு உண்டால்கூட அவருக்கு மூச்சுத் திணறி மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு மோசமாக ஆகி விடுமாம். ரகு அவர் எந்த டாய்லட் பேப்பர் உபயோகிப்பார் என்று கேட்டான். நான் இது என்ன கேள்வி என்று பார்த்தேன்.
பிறகு என்னிடம், “இல்லை சார் நாம் அலுவலகத்தில் கான்ஃபரன்ஸ் ஹால் அருகில் இருக்கும் டாய்லட்களில் அவர் வழக்கமாக உபயோகிக்கும் டாய்லட் பேப்பர் வாங்கி வைக்க வேண்டும்,“ என்றான்.
நாங்கள் சில வாரங்களுக்கு முன்புதான் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்திருந்தோம். இங்கே நிறைய இடம் இருந்தாலும் மரம் செடிகள் எதுவும் இல்லை. கார்லுக்கு இயற்கையின் பசுமை மிகவும் பிடிக்கும். ரகு அவர் வருவதற்குள் மரம் செடிகள் வேண்டும் என்றான்.
“செடிகள் சரி, கொண்டு வந்து தொட்டிகளில் வைக்கலாம், மரத்துக்கு என்ன செய்ய முடியும்>” என்றேன்.
“சார், இங்கே லால்பாக் அருகில் ஒரு நர்ஸரி இருக்கிறது. பிரதமர் வருகைக்கு அவர்கள் வளர்ந்த மரங்களை இடம் பெயர்த்துக் கொண்டு வந்து நட்டார்கள் என்று செய்தி வந்தது, அவர்களிடம் பேசி விட்டேன். சற்று செலவு ஆகும், நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் செய்து விடலாம்,” என்றான். செய்தும் காட்டினான். இரண்டு நாட்களில் எங்கள் வளாகமே மரங்களுடன் மிக அழகாகி விட்டது.
மறு நாள் காலை அவர் சார்டட் விமானத்தில் வந்து இறங்குவார். நாங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பட்டியலை ஒருமுறை கடைசியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாம் தயாராக இருப்பது போல இருந்தது. நான் ரகுவுக்கு என்னுடைய நன்றியைப் பல முறை தெரிவித்தேன்.
கார்ல் காலை அலுவலகத்துக்கு வரும்போது மகிழ்ச்சியாக இருந்தார். ரகு காலை உணவின்போது ஜெர்மன் பேக்கரியிலிருந்து அவர் வழக்கமாக சாப்பிடும் செங்கல் மாதிரியான ரொட்டியும், சீஸும், கழிவுக் காபியும் ஏற்பாடு செய்திருந்தான். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு நன்றி சொன்னார். நாள் முழுவதும் எல்லா நிகழ்ச்சிகளும் கிரமமாக நடந்தன. எல்லோரும் சொல்லிக் கொடுத்தபடி மூன்றாவது கேள்விக்குமேல் தெரியாது என்று சொன்னார்கள். கார்ல் விளக்கம் கொடுத்தபோது குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். கார்ல் மிக உற்சாகமாக இருந்தார். மாலை விருந்தும் நல்ல படியாக முடிந்தால் வெற்றி என்று நினைத்துக் கொண்டேன். வேறு எதுவும் குளறுபடி ஆகாமல் முடிய வேண்டும்.
ரகு இரவு விருந்து ஒரு புதிய நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக ஹாலில் ஏற்பாடு செய்திருந்தான். நாங்கள் மொத்தம் பனிரெண்டுபேர்தான். இந்திய நிறுவனத்தின் தலைமை ஆட்கள் மட்டும். யார் எங்கே உட்காருவது என்று ரகு திட்டம் வகுத்திருந்தான். கார்லுக்கு நேர் எதிரே நான். அலுவலக விஷயங்களை விட்டு விட்டு உலக, நாட்டு நிலைமைகளைப் பற்றிப் பேசினோம். சைனா, அமெரிக்கா எல்லா விவகாரங்களையும் அலசினோம். மிக விரிவான மெனு. வரிசையாக உணவுகள் வந்து கொண்டே இருந்தன. ஏழு கோர்ஸ் என்றான் ரகு. நிறமும் அலங்காரமும் சுவையும் உணவு மிக அருமை. கார்லுக்கு இந்திய உணவு பிடிக்கும், காரம் இல்லாத வரை. அதனால் கேரளத்து வாழை இலை சுற்றி சமைத்த மீன், அதிகம் மசாலா சேர்க்காத ஹைதராபாத் பிரியாணி என்று விதம் விதமாக அமைத்திருந்தார்கள். அந்த நட்சத்திர விடுதியின் தலைமை செஃப் தானே வந்திருந்து விசாரித்தார்.
கார்ல் அவரை பாராட்டி, திடீரென்று, “கார்லிக் நான் கிடைக்குமா?“ என்று விசாரித்தார். நான் ரகுவைத் திரும்பிப் பார்த்தேன். நாங்கள் அதை மெனுவில் சேர்த்திருக்கவில்லை.
ரகு என்னிடம் மெல்லிய குரலில் சொன்னான் “சார், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் போல, அப்படி இருந்தால்தான் பூண்டு எல்லாம் சாப்பிடுவார் என்று அவருடைய உதவியாளன் சொன்னான்,” என்றான்.
தலைமை செஃப் மகிழ்ந்து போய் உடனே கார்லிக் நான் செய்து கொண்டு வரச் சொன்னார். கூடவே ஷாஹி பன்னீர் காரம் இல்லாமல் நன்றாக இருக்கும் என்றார். நான், “பனீர் என்பது இந்திய சீஸ், தவிர பனீரின் மென்மை சுவையை வைத்தே ஒரு ரெஸ்டாரன்டின் தரத்தை மதிப்பிடலாம்,” என்று விளக்கம் கொடுத்தேன். கார்ல் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.
கார்லிக் நான் பெரிதாக, அங்கங்கே தந்தூரில் சுட்ட கரியுடன், தாராளமாகத் தூவின பூண்டுத் துண்டுகளுடனும், உருகிய வெண்ணெய் ஒழுக பார்த்தாலேயே நாவில் எச்சில் ஊற வந்தது. கூடவே ஷாஹி பன்னீர். அதுவும் அருமையான ஆரஞ்ச் வண்ணத்தில், மேலே க்ரீமினால் செய்த அலங்காரத்துடன் வந்தது. கார்ல் அதற்குள் தானாக கார்லிக் நானை எடுத்து கையினாலேயே பிய்த்து சாப்பிட ஆரம்பித்தார். ஆச்சரியமாக இருந்தது. அவர் வெறும் கைகளால் எதுவும் சாப்பிட மாட்டார் என்று எங்கள் குறிப்புகளில் இருந்தது. நான் ரகுவைப் பார்த்து புன்னகைத்தேன். ஆனால் அவன் மொபலைப் பார்த்து ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். நான் இளைய தலைமுறைக்கு ஐந்து நிமிடம் கூட மொபைலைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.
செஃப் தானே வந்து பன்னீரை பரிமாற ஆரம்பித்தார். ரகு மொபைலைப் பார்த்தபடி ஓடி வந்து அவர் கையைப் பிடித்து தடுத்தான். “நிறுத்துங்கள், நிறுத்துங்கள் “ நாங்கள் எல்லோரும் துணுக்குற்றுப் பார்த்தோம். “இதில் முந்திரிப் பருப்பு அரைத்திருக்கிறீர்கள் அல்லவா?” செஃப் “ ஆமாம், அதனால்தான் வளமையான சுவை வரும்,“ என்றார்.
அதற்குள் கார்லுக்குப் புரிந்து, ரகுவுக்கு மிகவும் நன்றி சொன்னார். நான் அவனை நன்றியுடன் பார்த்தேன். ரகு செஃபிடம் கார்லுக்கு நட் அலர்ஜி என்று விளக்கி, வேறு கொண்டு வரச் சொன்னான். செஃப் காலாதால் எடுத்து வரச் சொன்னார். அந்த உணவகத்தில் அது பெயர் போனதாம். ஊற வைத்த கருப்பு உளுந்து பல மணி நேரம் நேரம் மெல்லிய தீயில் சமைக்கப் பட்டது. கார்லுக்கு அது மிகவும் பிடித்தது. தெற்கு ஜெர்மனியில் அவர்கள் சாப்பிடும் லின்ஸென் போல இருக்கிறது என்று நிறையச் சாப்பிட்டார். விருந்து தொடர்ந்தது.
எல்லாம் முடிந்து கார்ல் மிக மகிழ்ச்சியாக இருந்தார். இந்தப் பயணம் நன்றாக இருந்ததாக மனதாரச் சொன்னார்.கிளம்பும்போது ஏற்பாடுகள் மிகச் சரியாக இருந்ததாக பாராட்டினார். ரகுவைத் தனியாக அழைத்து மறுபடியும் நன்றி சொன்னார்.
ஒருவழியாக அவரைக் காரில் ஏற்றி, நல்ல இரவு ஆகட்டும் என்று சொல்லி வழி அனுப்பி பெரு மூச்சு விட்டேன். ரகுவின் கையைப் பற்றி நன்றி சொன்னேன். அவனும் நிறைவாக இருந்தான்.
அப்போதுதான் இன்னொரு பக்கம் பான்க்வெட் ஹாலில் நிறைய விளக்குகள், ஓசையுடன் பார்ட்டி நடந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். சிவப்பு நிறத்தில் இருதய வடிவத்தில் பலூன்கள். நிறைய இளம் ஜோடிகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஓ! காதலர் தினம். கார்ல் பயண சந்தடியில் நினைவிலேயே இல்லை. அப்போதுதான் இன்னொன்று நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டுத் திரும்பினேன்.
“ரகு, இன்றைக்கு காதலர் தினம். நீ மாயாவுக்கு மோதிரம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளக் கேட்பதாக இருந்தாயே ? கார்ல் பயணத்தினால் தள்ளிப் போட்டு விட்டாயா ?”
ரகு என்னிடம் சென்ற மாதம் சொல்லி இருந்தான். இருவரும் இப்போது சேர்ந்து வாழ்ந்து, ஒரு மாதிரியாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விட்டார்களாம். மாயாவுக்கு இப்போது பாரம்பரியப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையாம். ஒரு பெரிய சாலிடேர் வைர மோதிரம் காண்பித்தான். காதலர் தினம் அன்று கொடுப்பதாக இருந்தான்.
“இல்லை சார் கொடுக்கவில்லை,“ என்றான் எங்கோ இருளில் பார்த்துக் கொண்டு.
நான் உறைந்து போனேன். என்ன ஆயிற்று, ஏன் என பல கேள்விகள். இருந்தாலும் உடனே கேட்கத் தோன்றவில்லை.
அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.
“சார், எங்கள் இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை, பிரிந்து விட்டோம்“ என்றான்.