Author: பதாகை

எச்சங்கள்

செந்தில் நாதன்

remnants

தேசிய நெடுஞ்சாலை 27ல் இருந்து பிரிந்து மாநில நெடுஞ்சாலைக்கு இறங்கியவுடன் ”ஹரப்பா நாகரிகத்தின் பெரு நகரம் உங்களை வரவேற்கிறது” என்ற ஆங்கில வரவேற்புப் பலகை கண்ணில் பட்டது. கீழே பொடி எழுத்துகளில் ”தோலாவிரா அகழ்வாராய்ச்சிக் களம் – 116 கிமி”.

சிந்து சமவெளி (ஹரப்பா) நாகரிகத்தின் முக்கியமான அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று தோலாவிரா. ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளன. இந்தியாவில் இருக்கும் அகழ்வாராய்ச்சி களங்களில் முக்கியமானது தோலாவிரா. எகிப்திய பிரமிடுகள் அளவிற்குத் தொன்மையான நகரம். கார்த்திக்கின் நீண்ட நாள் கனவு. இன்னும் 116 கிலோ மீட்டர் தூரத்தில்.

“அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று செளராஷ்டிராக்காரர் டி.எம்.எஸ். காருக்குள்ளே தமிழில் பாடிக் கொண்டிருந்தார். தமிழர்களான கார்த்திக்கும் வள்ளியும் அவரோடு சேர்ந்து உரக்கப் பாடிக்கொண்டே குஜராத்தில் பயணித்தார்கள்.

இருவரும் வேலை பார்ப்பவர்கள். வேலைப் பளு, குழந்தைகள், அவசர நகர வாழ்க்கை என்று எப்போதும் ஒரு படபடப்பிலேயே இருப்பவர்கள். நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்கள் தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் செல்லும் உணர்வைத் தரும். விட்டு விடுதலையாகிப் பறக்கும் சிட்டுக்குருவி போலே. அதற்காகவே அவர்களிருவருமாக அடிக்கடி பயணம் செய்வதுண்டு. இந்த முறை சற்று அதிக தூரம். சென்னையிலிருந்து குஜராத் வரை.

ஆளரவமற்ற சாலை. இரு பக்கங்களிலும் முள் செடிகள் மட்டுமே. இருபது கிலோ மீட்டரில் ராப்பார் என்னும் சிறுநகரம். அதைத் தாண்டியதும் கைபேசியில் சிக்னல் மாயமானது. கூகுள் மேப்ஸ் இனிமேல் பயனளிக்க இயலாது என வருத்தம் தெரிவித்தது. தோலாவிரா 95 கிமி என்றது நெடுஞ்சாலைப் பலகை. ஒரே சாலை தானே, பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றார்கள்.

தோலாவிரா என்ற பெயர்ப்பலகை மட்டும் அத்துவானக் காட்டில் நின்றுகொண்டிருந்தது. சரியான குக்கிராமம். யாரும் கண்ணில் படவில்லை.

சற்று முன்னே சென்றதும் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகம் வந்தது. அங்கிருந்த காவலர்கள் முறைத்துப் பார்ப்பது போலத் தோன்றியது. எதற்கு வம்பு என்று கார்த்திக் வண்டியை நேராக குஜராத் சுற்றுலாத்துறை விடுதிக்குச் செலுத்தினான். பயண இணையதளங்களில் குறிப்பிடப் பட்டிருந்த இடம். அங்கே யாரும் வழிகாட்டி இருந்தால் கூட்டிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் விடுதி பூட்டப்பட்டிருந்தது. காவலாளி கூட இல்லை.

அப்போது தான் அவனைப் பார்த்தார்கள். சின்னப் பையன், பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும். விடுதிக்குப் பின்னால் இருக்கும் கூரை வீடு ஒன்றிலிருந்து வந்தான். தலை படிய வாரப்பட்டிருந்த்து. முக்கால் காலுக்கு ஒரு பேண்ட், பளீர் சிகப்பில் டி ஷர்ட்.

உடைந்த இந்தியில் “இங்கே யாரும் கைடு உண்டா பையா” என்று கேட்டான் கார்த்திக்.

“நானே கைடு தான் சார். ஃபாசில் பார்க் பார்க்க 150 ரூபாய், எக்ஸ்கவேஷன் சைட் பார்க்க 150 ரூபாய் – மொத்தம் 300 ரூபாய் கொடுங்க போதும். இதே பெரியவங்களைக் கூட்டிப் போனால் 500 ரூபாய் கேப்பாங்க” என்றான் அந்தப் பையன். அவனது இந்தி கார்த்திக் பேசிய இந்தியை விட நன்றாகவே இருந்தது.

சூட்டிகையான பையனாய்த் தெரிந்தான். சரி, இவனையே வழிகாட்டியாய் கூட்டிப் போனால் என்ன என்று யோசித்தான் கார்த்திக்.

“ரொம்ப சின்னப் பையனா இருக்கானே, இவனுக்குத் தெரியுமா” வள்ளி சந்தேகத்துடன் கேட்டாள்.

“இரு அவன் கிட்டயே கேப்போம்” என்றபடி “உனக்கு எல்லாம் தெரியுமா பையா?” என்று கேட்டான் கார்த்திக்.

“தெரியும் சார். எங்க தாத்த இங்க கைடா இருக்கார், அவர் கூடப் போய் நான் எல்லாம் கத்துகிட்டேன்”

”சரி, வா கார்ல ஏறு. உன் பேர் என்ன”

“கண்பத் சார்”

வள்ளி பின் சீட்டுக்குப் போக கண்பத் முன்னால் வந்து அமர்ந்தான்.

“நேரா போங்க சார். முதல்ல ஃபாசில் பார்க் போயிடுவோம், வெயில் வரதுக்கு முன்னாடி அங்க பாத்துட்டு அப்புறமா எக்ஸ்கவேஷன் சைட் பார்க்கலாம்” என்றான்.

இரண்டு கிலோமீட்டர் போனதும் சாலை முடிவடைந்த்து. எதிரில் கரடு முரடான பொட்டல். வழி என்று எதுவும் இல்லை.

”இது தானா?” கார்த்திக் சந்தேகமாகக் கேட்டான்.

கண்பத் உற்சாகமாக “இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும் சார். இந்த மண் பாதைலயே போக வேண்டியது தான்”.

அவனது உற்சாகம் கார்த்திக்கையும் தொற்றிக் கொண்டது. சரி, போய்த் தான் பார்ப்போம் என்று காரை அந்த மண் பாதையில் இறக்கி ஓட்டினான். இரண்டு கிலோ மீட்டர் போவதற்குள் வள்ளிக்குப் பயம் வந்துவிட்டது.

“அவன் தான் சொல்றான்னா, நீயும் போய்கிட்டிருக்க. ஈ காக்கா கூட காணோம். வா, திரும்பப் போயிடலாம்” என்று தமிழில் சொன்னாள்.

அவளது பயம் கண்பத்துக்குப் புரிந்திருக்க வேண்டும். “இல்ல மேடம், தைரியமா வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்றான்.

கார்த்திக்கை முறைத்துக் கொண்டே வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கார்த்திக்குக்கும் ஏடாகூடமாக வந்து மாட்டிக் கொண்டோமோ என்று கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. தூரத்தில் இருந்த சிறு குன்றைச் சுட்டிக் காண்பித்தான் கண்பத்.

“அதோ அங்க தான் சார். அந்த மலை ஏறி அந்தப் பக்கம் இறங்கினா ஃபாசில் பார்க்” என்றான். கார் பரிதாபமாகக் கதறியது.

குன்றின் உச்சியில் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் இருந்தார்கள்.

“பி.எஸ்.எஃப் இங்க என்ன பண்றாங்க”.

“இங்கருந்து அம்பது கிலோமீட்டர் போனா பாகிஸ்தான் வந்துடும் சார்”

”அடப்பாவி, இங்க தான் இங்க தான்னு பாகிஸ்தானுக்கே கூட்டி வந்துட்டான்” வள்ளி அடிக்குரலில் முனகினாள்.

குன்று ஏறி இறங்கியதும் பயம் எல்லாம் பறந்தோடிவிட்டது. எதிரே ராண் என்று சொல்லப்படும் உப்பு சதுப்பு நிலம். கண்ணுக்கெட்டிய வரை நீண்டு கிடக்கும் உப்புக் கடல். அதன் வெண்மை கண்ணைக் கூசியது. சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்த உப்புக்கடலின் நடுவே தூரத்தில் ஒரு மலை.

”இங்கே மத்த மாசங்கள்ள தண்ணி இருக்கும் சார். நவம்பர்லேந்து பிப்ரவரி வரை நாலு மாசத்துக்குத் தண்ணி பின்வாங்கிடும். அப்ப தான் நீங்க இதைப் பார்க்கலாம்” கண்பத் சொல்லிக் கொண்டிருந்தான்.

கரையோரத்தில் கம்பி வேலிகளுக்கிடையே சில கெட்டித்துப் போன மரத் துண்டுகள் இருந்தன. கல் மரங்கள்.

“இதான் சார் ஃபாசில் பார்க். இந்த மரங்களெல்லாம் டைனோசார் காலத்தவை. பாறைக்குள் மாட்டிக்கொண்டு இதல்லாம் கல் மாதிரியே கெட்டியாயிடுச்சு. இந்த மாரி இங்கே பன்னெண்டு மரத் துண்டுகள் இருக்கு. முன்னாடி சும்மா தான் இருந்தது. இப்ப தான் கவர்மெண்ட்ல வேலி போட்டிருக்காங்க”

”தூரத்தில இருக்கே மலை, அது பேர் என்ன.”

“அது காலா டங்கர் சார். அங்க தான் குரு தத்தாத்ரேயர் திருவிழா வருஷா வருஷம் நடக்கும். அந்த மலைக்கு அந்தப் பக்கம் பாகிஸ்தான் இருக்கு”

திரும்பிப் போகும் போது பயமில்லை. வறட்டு வெயில் கூட அழகாயிருந்தது. எதிரே ஒரு மாருதி கார் கடந்து போனது. அதிலிருந்த வயதானவர் கண்பத்தைப் பார்த்துக் கைஅசைத்தபடி சென்றார்.

“உனக்குத் தெரிஞ்சவரா அவர்”

“எங்க தாத்தா சார். அங்க இருக்க பி.எஸ்.எஃப். வீரர்களுக்கு சாப்பாடு கொண்டு போறார்”

“உங்க அப்பா அம்மா இங்க தான் இருக்காங்களா” பின் இருக்கையிலிருந்து வள்ளி கேட்டாள். காரைக்குடியைச் சேர்ந்தவளாயிருந்தாலும் அவள் ஹிந்தி நன்றாகவே பேசுவாள்.

“இந்த வருஷம் மழை இல்லை மேடம், விவசாயம் படுத்துடுச்சு. அதனால் பக்கத்துல இருக்க ரேவத் ஊருக்குக் கூலி வேலை செய்யப் போய்ட்டாங்க. நான் இங்க எங்க மாமா வீட்ல தங்கி இருக்கேன்.”

“என்ன படிக்கிற”

“ஏழாங்கிளாஸ் படிக்கிறேன் மேடம். சனி ஞாயிறுகள்ல இந்த மாதிரி கைட் வேலை பாப்பேன்”

“இவனுக்கு நம்ம அனி வயசு தான் இருக்கும். எவ்வளவு பொறுப்பா இருக்கான் பாரு” வள்ளி கார்த்திக்கிடம் தமிழில் கூறினாள். அவளுக்கு கண்பத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

”இங்க இருக்க தனியார் விடுதில சாப்பாடு வேணும்னா இப்பயே ஆர்டர் கொடுக்கணும். சொல்லிட்டுப் போயிடுவோமா சார்” என்றான்.

”ஒரு வாரமா ஹோட்டல்ல நான், பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டு வெறுப்பாயிருக்கு. குஜராத்தி பாஜ்ரா ரோட்டி கிடைக்குமா”

“அது எங்க வீட்ல தான் சார் கிடைக்கும்”

“சரி, அப்ப உங்க வீட்லயே சாப்பிடலாம்” வள்ளி விளையாட்டாகக் கூறினாள்.

அதற்குள் கண்பத் வீட்டுக்கருகே வந்து விட்டிருந்தார்கள்.

“ஒரு நிமிஷம் சார்” என்றபடி காரில் இருந்து இறங்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் மூச்சிரைக்க ஓடி வந்து “எங்க அத்தை கிட்ட சொல்லிட்டேன் சார், எக்ஸ்கவேஷன் சைட் பாத்துட்டு வந்து நம்ம வீட்லயே சாப்பிடலாம்” என்றான்.

எதிரில் பிரம்மாண்டமாக இருந்த்து தோலாவிரா புதையுண்ட நகரத்தின் கோட்டைச்சுவர். கண்பத் பழக்கப்பட்ட வழிகாட்டியாய் அவர்களுக்கு அந்த நகரத்தின் வரலாற்றை விவரித்தான். அவன் வார்த்தைகள் வழியே அந்த 4500 வருடப் பழங்கால நகரம் உயிர்பெற்று எழுந்தது. கோட்டை வாசல், அரசர் இருக்கை, தானியக் கிடங்குகள், நீர்த் தேக்கங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லிச் சுற்றிக் காண்பித்தான்.

”தோலாவிரா அந்தக் காலத்துல கடற்கரையோர நகரமா இருந்தது சார்.

வெளிநாட்டிலிருந்தெல்லாம் வியாபாரிகள் வருவாங்க. ராஜா இங்க தான் உக்காந்து அவங்கள வரவேற்பார்.” உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனான் கண்பத்.

”எதுக்கு இத்தன ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க?”

“இங்கல்லாம் ரெண்டு மூணு வருஷம் கூட மழை பெய்யாமப் போகும். அந்த சமயத்துல தேவைப் படும்னு தான் இப்படிப் பதினாறு ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க. இப்ப கூட அப்படித்தான் சார். இந்த வருஷம் முழுக்க மழை இல்ல. ஏ.எஸ்.ஐ. குவார்ட்டர்ஸ் உள்ள இருக்கற ஒரு கிணத்துல தான் தண்ணி இருக்கு. எங்க கிராமத்தில இருந்து இங்க வந்து தான் தண்ணி எடுத்துட்டுப் போவாங்க”

வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது.

“இது தான் சார் குளியல் தொட்டி.. மேலே இருக்க கல்பாதை வழியாத் தண்ணி வரும். கீழே இருக்க குழியக் கல்லால அடைச்சிருப்பாங்க. அந்தக் கல்ல எடுத்துட்டா தண்ணி போயிடும்” என்று பெரிய விஞ்ஞானக் கோட்பாட்டை விவரிப்பது போல் விவரித்தான்.

“எங்க ஊர்ல இன்னமும் வளவுல தூப்பாக்குழிய கல் வச்சு தான் அடைக்கிறோம்” வள்ளி தமிழில் சொல்லிச் சிரித்தாள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் கண்பத்தும் சிரித்தான்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. வரலாற்று எச்சங்களைப் பார்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் வருவதில்லை போலும்.

அங்கிருந்த சிறு அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது மணி பன்னிரெண்டாகி விட்டிருந்தது.

“அவ்வளவு தான் சார். வாங்க, சாப்பிட வீட்டுக்குப் போகலாம்” என்றான்.

அவர்களும் களைத்துப் போயிருந்தார்கள். அவன் பின்னே மெதுவாக நடந்து சென்றார்கள். வீட்டுக்கருகே போனதும் கண்பத் சற்று நின்றான்.

கூச்சத்துடன் “சார், சாப்பாட்டுக்கு நூறு ரூபாய் எங்க அத்தை கிட்ட கொடுத்துடுங்க” என்றான். அவ்வளவு நேரம் பெரிய மனுஷ வழிகாட்டியாய் இருந்தவன் சட்டென்று சின்னப் பையனாய் மாறியதைப் பார்த்ததும் கார்த்திக்குக்கு சிரிப்பு வந்தது.

வட்ட வடிவமான சுதை சுவர் கொண்ட கூரை வேய்ந்த வீடு. ஒன்றரை அறைகள் தான் மொத்தமே. சுத்தமாக இருந்தது. உள் அறைக்கு அவர்களை அழைத்தான் கண்பத். தரையில் அமரப் போனவர்களைத் தடுத்து, அங்கு இருந்த ஜமுக்காளம் ஒன்றை விரித்து உட்காரச் சொன்னான். முகத்திரையுடன் வந்த அவனது அத்தை வணக்கம் சொல்லிவிட்டு சாப்பாடை எடுத்து வைத்து விட்டுப் போனாள்.

ஒரு தட்டு நிறைய முரட்டு பாஜ்ரா (கம்பு) ரொட்டி, தொட்டுக்கொள்ளப் பல காய்கள் போட்ட ஒரு சப்ஜி, சூடான சாதம். சொம்பு நிறைய மோர். ஊர் பேர் தெரியாத இடத்தில் வீட்டு சாப்பாடு தேவாமிருதமாக இருந்தது. கண்பத் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நாசூக்காக வெளியே சென்றான்.

“பாரு, எவ்வளவு நல்ல பையன். சாப்பிடறப்ப பக்கத்துல இருந்தா நமக்குக் கூச்சமாயிருக்கும்னு விட்டுட்டுப் போய்ட்டான்” என்றாள் அவனது விசிறியாகவே மாறிவிட்டிருந்த வள்ளி.

திருப்தியான சாப்பாட்டுக்குப் பிறகு அவனது அத்தைக்கு நன்றி சொல்லிவிட்டு கையில் இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கார் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தான் கண்பத்.

கார் கண்ணாடியில் தோலாவிரா பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.

அருங்காட்சியகத்தில் கொடுத்த துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தபடி “நாலாயிரம் வருஷம் முன்னாடியே எவ்வளவு அமைப்பா இருந்துருக்கோம் என்ன. தொன்மையான நாகரிகம் தான்” என்று வள்ளி முணுமுணுத்தாள்.

“ஆமாம், நாகரிகமான ஊர் தான்” என்றான் கார்த்திக்.

ஸ்டீஃபன் வில்லியம் ஹாகின்

பானுமதி ந

‘நான் முதலும் முடிவுமாக ஒரு அறிவியல் ஆய்வகன். என் உடல் குறைகளைப் பேசுவதை நான் விரும்பவில்லை. அவைகளை நான் குடும்பத்திடம்கூட சொல்வதில்லை.’

உடலின் செயல்பாடுகள் நரம்பு இயக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் இயற்பியலிலும், பிரபஞ்ச ஆய்வியலிலும் தனக்கென தனியிடம் தேடி அடைந்தவர் ஹாகின்.

ப்ரிட்டன் இவ்ரது தாயகம். குவாண்டம் விசையியலிலும், பொது சார்பு தத்துவத்திலும், பிரபஞ்ச கோட்பாடுகளில் உலகின் 100 விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.

21 வயதிலேயே இறக்கக்கூடும் என்று கணிக்கப்பட்ட ஒருவர் இன்று 75 வயதில் ‘கடவுள் துகள்’ பற்றி பேசுகிறார், எழுதுகிறார். அத்தனையும் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து கொண்டே. மனிதன் தன் அறிவால், உடலை வென்று சாதித்த சரிதம் இவருடையது.

08-01-42ல் பிறந்த இவர், இயற்பியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். ALS எனப்படும் Motor Neuron Disease இவரது 21 வயதில் தொடங்கிவிட்டது. சிறிது சிறிதாக இவரது நடை, இயக்கம், பேச்சு தடைபட்டது. சக்கர நாற்காலியில் செயல்படவேண்டிய நிலை. ஆனால் அறிவுத் தளம் முற்றிலும் வேகமாக இயங்கியது. எந்நிலையிலும் சாதித்துக் காட்ட மனிதனால் இயலும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு இவர்.

தன்னுடன் படித்த ‘ஜேன் வைல்ட்’ என்பவரை 1965-ல் திருமணம் செய்தார். 1995-ல் விவாகரத்து நடந்து, பின்னர் 2005ல் இருவரும் குடும்பத்துடன் சேர்ந்தனர். ’எலைன் மேசென்’ என்பவரை 1995-ல் திருமணம் செய்து பின்னர் 2006-ல் விவகரத்தும் நடந்தது. ’மேசென்’ இவரை கவனித்துக் கொள்ள செவிலியாக வந்து, அவருடன் பின்னர் நெருக்கமாகி, கல்யாணமும் செய்து கொண்டு, ஹாகின்னை மிகவும் உடல் துன்பத்திற்கு உள்ளாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஹாகின் எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்லவில்லை, காவல் துறையின் உதவியையும் நாடவில்லை. முதல் திருமணத்தின் மூலமாக இவருக்கு 2 ஆண்குழந்தைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர்.

ஹாகின் உலகின் மிகச் சிறந்த 22 அறிவியல் பதாகைகள் பெற்றுள்ளார். மிகவும் எளிய நடையில் சிக்கலான அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் திறமை படைத்தவர். அவரது  ‘A Brief History of Time’ பண்டிதர் முதல் பாமரர் வரை  போற்றிய ஒரு நூல்.

‘கருந்துகள்கள் வெளியிடும் கதிர்வீச்சு’ இவரது புகழ் பெற்ற பிரபஞ்ச கோட்பாடு.இன்றளவும் ‘Penrose-Hawking Theorems’ இயற்பியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

‘பிரபஞ்சத்தை யாரும் (கடவுள்) உருவாக்கவில்லை. காலவெளியின் ஒருமையும், அதன் ஜியோமிதியும் இதை ஏற்படுத்தின. விஞ்ஞான சட்டங்களுக்கு உட்பட்டு உருவாகிய இந்த அகிலத்தில் சொர்க்கம், நரகம் என ஏதுமில்லை. இந்த பிரும்மான்டத்தில் வேறு உலகங்களும், அவற்றில் உயிரினங்களும் சாத்தியமே. ஆனால், நம் நோக்கம் அவர்களை கண்டுபிடிப்பதல்ல. இந்தப் புவியில் என்னேரமும் திடீரென அணு ஆயுதப் போர் நிகழும் வாய்ப்பு இருப்பதால், விண்வெளி குடியேற்றங்கள் மிகவும் தேவை. அதற்கு மிக மிக மேம்பட்ட உன்னதமான செயற்கை அறிவும் தேவை. அறிவியல், சட்டங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு தன்னை வளர்த்துக் கொள்கிறது. தன்னை நிரூபிக்க அது தவறுவதில்லை. தத்துவங்கள் தேக்க நிலையில் உள்ளன. மனிதனின் இன்றைய தேவையும் அறிவியலே”, என்கிறார் இவர்.

உடல் இயக்கத்தில் அவர் பிறரை நாட வேண்டிய நிலை- மிக இளமையில் இருந்தே பிறரை சார வேண்டி இருந்தாலும் தன் குறையால் அவர் வாழ்வை வெறுக்கவில்லை. சக்கர வண்டியை இயக்கினார்; கைகள் செயலிழந்தபோது பேச்சின் மூலம் கட்டளைகள் பிறப்பித்து செயலாற்றினார் .’Intel’ நிறுவனம் அவரது மூளையின் சிந்தனைகள் மற்றும் முகபாவங்களை படிக்கும் கணினியை அவரது சக்கர நாற்காலியில் இணைத்து உதவியது. இன்று பேச இயலாத நிலையில், அவர் கன்னத்தின் ஒரு தசை மட்டும் இயங்கும் நிலையில் அதைப் படிக்கும் கணினி கொண்டு அவர் அறிவியல் சிந்தனைகளைப் பகிர்கிறார். அரசியல், மற்றும் சமுதாய நடப்புகளிலும் ஆர்வம் மிக்கவர். வியட்னாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.. ஒருங்கிணைந்த ப்ரிட்டனை ஆதரிப்பவர். தன் குறைகளைக் காட்டி ஆதாயம் தேடாமல் அறிவால் தன் ஆற்றலை நிரூபித்தவர். தாழ்வு மனப்பான்மை அற்றவர்.

என்ன குறை இவருக்கு? ஒன்றும் குறையில்லை.

பிரசவ வெளி

கலைச்செல்வி

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் கதவை திறந்து மூடுவதில் தெரிந்தது. குடும்ப எண்ணிக்கையொன்று கூடுகையில் ஏற்படும் இயல்பான சந்தோஷம்.

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த லேபர் வார்டில் இருந்தோம். சற்றே பெரிய சதுரமான அறை. என்னை தவிர்த்த இரு பெண்களும் உச்சக்கட்ட வலிக்கான காத்திருப்பில் இருப்பது போலிருந்தனர். பக்கத்திலிருந்தப் பெண் பிரசவத்தின் வெகு நெருக்கமான இடைவெளியில் இருப்பதை அவளின் அங்க அசைவுகள் உணர்த்திக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த பச்சைத் திரைத் தடுப்புகளினால் உள்ளே நடப்பவை துல்லியமான பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் தெளிவற்று தெரிந்துக் கொண்டுதானிருந்தன. மருத்துவரும் செவிலியரும் தாதியுமான சிறு கூட்டம் அவளை சூழ்ந்திருந்தனர். தாளாத வலியில் அவள் முனகியது என் உயிர் வரை ஓடி பய நரம்பை சுண்டியது. எண்ணிப் பார்த்தேன். இந்த பயம் இன்றில்லை.. நாள் தள்ளிப் போன பிறகு செய்த சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் காட்டிய அன்று வந்த பயம்.

அன்று குடும்பமே ஆரவாரத்தில் மூழ்கி விட எனக்குள் சந்தோஷத்தை விட பயமே அதிகமாக வந்து உட்கார்ந்தது. இத்தனைக்கும் சினிமா.. சீரியல்களில் வருவது போல் எனக்கு மயக்கம் வரவில்லை. வாந்தி போன்ற தொந்தரவுகளும் இல்லை. மயக்கம் தெளிந்த கதாநாயகிகள் கட்டிலில் போர்வைக்குள் படுத்தப்படி வருங்கால குழந்தையை பற்றி வெட்கமும் ஆசையுமாக கணவருடன் பகிர்ந்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படியேதும் தோன்றாமல் பயம் வந்ததுக் குறித்து பயமாகதான் இருந்தது. ஓருவேளை அடிக்கள்ளி.. என்ற தேய்ந்த வசனத்தை என் கணவர் பேசாததுதான் காரணமோ என்ற எண்ணவோட்டம் உதட்டில் புன்சிரிப்பை வரவழைத்தது.

கர்ப்பவதி.. புள்ளத்தாச்சி என்ற வார்த்தைகளின் புனிதம் ஜீன்களின் வழியாகவும் சமுதாய கற்பிதங்களாலும் என்னுள் கடத்தப்பட்டிருந்தாலும் எதிர்ப்படும் கர்ப்பவதிகளின் மனநிலை குறித்த ஆராய்ச்சி என் மனதில் அனிச்சையாக ஓடிக் கொண்டேயிருந்தது. என் நாத்தனாரின் பிரசவம் குறித்து பேசும்போதெல்லாம் என் மாமியார் “எம்பொண்ணு செத்து தான் பொழச்சா..” என்றது வேறு பயத்தை அதிகப்படுத்தியது. “பொண்ணுக்கு பிரசவங்கறது மறுஜனனம்தான் என்றாலும் இந்த நவீன மருத்துவ யுகத்தில்..’ என்று டி.வியில் பேசிக் கொண்டே போகும் மகப்பேறு மருத்துரின் முதல் வரிகளோடு மனம் நின்று போனது. பெரிய வயிறுடைய பெண்கள் அடுத்து வரும் மாதங்களில் பூந்துவாலைக்குள் குழந்தையை இறுக்கியப்படி நடப்பதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. இப்போது எனது பழக்கவழக்கங்கள் கூட மாறியிருந்தது. முன்பெல்லாம் கோபம் வரும்போது சாப்பாட்டில்தான் அது வெளிப்படும். ஆனால் இப்போது கோபம் கிளம்பும் போதே சமாதானப்படுத்தப்பட்டதில் சலிப்புதான் வந்தது. ‘சாப்பாட்டுல கோவத்த காட்டாதே.. இப்ப நீ ரெண்டு உயிர்..’ எல்லோரும் சொல்லும் போது பயம் இன்னும் கூடிப் போனது.

வாரிசு ஏக்கத்தை கண்களில் சுமந்திருந்த கணவரிடம் வயிற்றுச்சுமையை தள்ளிப் போட எண்ணும் என் எண்ணம் அரங்கேறாமலேயே அஸ்தமித்துப் போனதில் வயிறு மேடிட துவங்கியிருந்தது. வெளிப்படுத்தியிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்..? சமாதானத்தின் இறுதியிலோ அல்லது சண்டையின் இறுதியோ வயிற்றுச் சுமைக் கட்டாயமாக்கப்பட்டிருக்கும். என் சம வயது பெண்களில் குழந்தைப்பேற்றை தள்ளிப் போட்டவர்கள்.. குழந்தை தரிப்பதற்காக மருத்துவ ஆலோசனையிலிருப்பவர்கள்.. இன்னும் திருமணமாகாதவர்கள்.. இவர்களோடு என்னை ஒப்பிடுவதில் என்னுடைய தாய்மைப்பேறுக் குறித்து என் அம்மாவுக்கும் பெருமைதான். தனது மகள் பெண்ணாக பிறப்பெடுத்ததை பூர்த்தி செய்து விட்டாள் என்ற நிறைவுடனேயே இந்த பத்து மாதங்களும் வளைய வந்திருந்தாள் அவள். என் மனதை வெளிப்படுத்தியிருந்தால் முதலில் ஆச்சர்யம்தான் வந்திருக்கும் அம்மாவுக்கு. ‘இப்டி கூட யாராவது நினைப்பாங்களா..?’ என்பாள். பிறகு நிச்சயமாக மருமகனின் கட்சிக்கு தாவி விடுவாள்.

மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வருவது.. ஐந்தாம் மாதம் மருந்துக் கொடுப்பது.. என நேரங்கள் நெரிசலாகக் கடந்துக் கொண்டிருந்தது. துறுத்தலான வயிற்றை ஆசையாக வருடி புளங்காகிதம் அடையும் கணவருக்கு இப்போதெல்லாம் வயிற்றுக் குழந்தையை தவிர்த்து என்னிடம் பேச விஷயங்களற்றுப் போனது. தடுப்பூசிகள், ஸ்கேன் ரிப்போர்ட் இவைகளோடு மாதாந்திர செக்கப் முடிந்து மருத்துவர் அறையிலிருந்து வெளியே வரும் போது எனது திகில் நிறைந்த கண்களை பார்த்து பதறும் கணவரிடம் ‘பேபி நல்லாயிருக்காம்..’ என்ற வார்த்தைகள் அவரை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் மருத்துவ செக்கப் செய்யும் முறை என்னை விரக்தியடைய வைத்திருந்தது.

இரவுகள் கூட கலக்கத்திலேயே கழிந்துக் கொண்டிருந்தது. புதிதாக குழந்தைப் பெற்ற உறவுக்காரப் பெண்கள் குழந்தையே உலகமாக மாறி போவதை மனக்கண்ணுக்குள் இருத்தி பார்க்கும் போது வரும் இன்பம், பிரசவம் குறித்த பயத்தில் கரைந்துப் போகும்.  வரப்போகும் குழந்தையை பற்றிய கனவுகளில் மூழ்கியப்படியே மெல்லிய குறட்டையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுத்திருப்பார் கணவர். பத்து பனிரெண்டு குழந்தைகளை உடல் உழைப்பு மிகுந்த அந்த காலக்கட்டத்தில் சர்வசாதாரணமாக பெற்றெடுத்த பாட்டிமார்கள் எனக்கு சாதனையாளர்களாக தெரிந்தனர். மருத்துவச்சி பார்க்கும் பிரசவம்.. வளராத விஞ்ஞானம்.. சமுதாய அழுத்தம்.. புனித வேள்விக்குள் அடைப்படும் தாய்மை இவைகளுக்கு மத்தியில் கயிற்றில் நடக்கும் சாகஸகாரர்களாகவே ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்திருப்பதாக எனக்கு தோன்றியது. விஞ்ஞானம் போர்த்திய இன்றைய சமுதாயத்தில் கூட மலடி.. போன்ற ஆண்பாலற்ற சொற்கள் வெகு விமரிசையாகவே வலம் வந்துக் கொண்டுதானிருக்கிறது. தாங்கள் பெறும் குழந்தைகள் குறித்த உரிமையை  பெண்கள் இன்னும் பெறவில்லை என்று ஏதேதோ எண்ணங்கள் மூழ்கடிக்க மீதி இரவும் துாக்கம் தொலைந்தே கடக்கிறது. துாக்கமின்மை பகல்களை அரைமயக்க நிலையிலேயே வைத்திருப்பது போலிருக்கும். “நாள் நெருங்க நெருங்க துாக்கம் வராதுடீ.. இதெல்லாம் வயித்துப்புள்ளக்காக நாம செய்ற தவம்டீ.. குடுத்து வச்சிருக்கணும்..” என்பாள் அம்மா உருக்கமாக.

வயிறு பெரிதானதில் கைகளின் துணையின்றி உட்காரவோ எழுந்துக் கொள்ளவோ.. புரண்டு படுக்கவோ முடியாத களைப்பு நிரந்தரமாக முகத்தில் படர்ந்துப் போனது. “உள்ள இருக்கறது பொம்பளப்புள்ளதான்.. பொண்ணுங்கதான் தாயோட அழகை களவாடிக்கும்பாங்க..” என்ற ஜோதிடம் சொல்லும் அம்மாவுக்கு “இல்லீங்க.. ஆம்பளப்புள்ளதான் அசதிய கொடுக்கும்..” என்பார் மாமியார் விட்டுக் கொடுக்காதவராக. டபக்.. டபக்.. என உள்ளிருந்து வரும் அசைவுகள் சற்று நேரம் வராது போனாலும் பயமேற்பட்டது. ‘குழந்தை மூவ்மெண்ட்டே இல்லையாம்..’ வீடே அல்லோலகல்லோலப்பட்டது. ஸ்கேன் எடுத்ததில் குழந்தை ‘நார்மல்’ என்றது ரிப்போர்ட். நான் தான் நார்மலாக இல்லாமல் நடுக்கத்துடன் பிரசவ தேதியை எதிர்ப்பார்த்திருந்தேன். வளைகாப்பு வளையல்கள் உடைந்து விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்ததில் யாருடைய உடலுக்குள்ளோ புகுந்துக் கொண்டது போலிருந்தது. என் அலைபேசியிலிருந்து போகும் அழைப்புகளோ அலைபேசிக்கு வரும் அழைப்புகளோ பிரசவத்தைப் பற்றிய பேச்சிலேயே சுற்றி வந்து முடங்கிப் போவது ஒரு வித சலிப்பை தந்தது.

ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே மருத்துவமனைக்கென பெரிய பேக் ஒன்று எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. அம்மாவும்தான். ஃபிளாஸ்க் டம்ளர்கள்.. பெரிய பெரிய டவல்கள் சலவை செய்து புதிதாக்கப்பட்ட வெள்ளை வேட்டிகள் ஸ்பூன் சாத்துக்குடி பிழியும் கருவி குளுக்கோஸ் பாக்கெட்டுகள் நைட்டி நாப்கின் பாக்கெட் என நிரம்பியிருந்த அந்த பேக் கண்ணில் படும் போதெல்லாம் பீதியை கிளப்பிக் கொண்டேயிருக்கும். “மாப்ளை நம்ம பொண்ண நல்லா கவனிச்சுக்குறாரு.. குழந்தை மூவ்மெண்ட்ட வாட்ச் பண்ணிக்கிட்டே இரு.. வலி வர்றாப்பல இருந்தா ஒடனே ஆஸ்பிடலுக்கு கௌம்பிடு.. நேரத்துக்கு சாப்புடுன்னு ஒரே அட்வைஸ்தான் பொண்டாட்டிக்கு..” அம்மாவுக்கு பெருமைப்பட விஷயமிருந்தது. எனக்கோ என் கணவர் என்னிடமிருந்து விலகி விட்டது போலிருந்தது.

தயாராக இருந்த அந்த பெரிய பேக்கிற்கு நேற்று மாலை உபயோகம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். முதலில் கர்ப்பபையில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கு அனஸ்தீஷியா அலர்ஜி என்பதால் நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்றார்கள். பெல்விஸ் எலும்பு விரிவடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றார்கள். இரு வீட்டார் குலதெய்வங்கள் சிறு தெய்வங்கள் என பிரசாதங்களால் எனது நெற்றி நிறைந்திருந்தது. ‘எம்பொண்ணு நல்லப்படியா பெத்து பொழைக்கணும்..’ அம்மாவின் சத்தமான வேண்டுதல் வலியை அதிகரித்தது. பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த  என்னை இனிமா கொடுக்க அழைத்துச் சென்றனர்.

பொங்கி வழிந்த வயிற்றோடு ஒருக்களித்து கால்களை முன்னும் பின்னுமாக்கி படுக்க சூடான சோப்புத் திரவம் எனக்குள் இறங்கியது. பிறகு கழிவறைக்கும் படுக்கைக்குமாக அலைந்தேன். ‘தண்ணி வழுக்கும்டீ.. பாத்து நட..’ முதுகில் ஒலித்த அம்மாவின் குரல் பலித்தால் தேவலாம் என்றிருந்தது. வலியோடு அவஸ்தைப்படுவதை விட குழந்தையோடு இறந்து போகலாம். கழிவறை கதவை மூடுவதற்குள் கால்களின் வழியே சிறுநீர் வழிந்தோடியது. வழக்கமாக இருப்பது போலின்றி சற்று பிசுபிசுப்பாக இருந்தது அது. நான் அம்மாவிடம் சொல்ல.. அம்மா நர்ஸிடம் அலற.. உடனே பச்சை அங்கிக்குள் நுழைக்கப்பட்டு ஸ்ரெச்சரில் கிடத்தப்பட்டேன். ஸ்ரெச்சரோடு பயணித்த என் கணவரின் பதற்றம் நிறைந்த விழிகள் என்னை கோபப்படுத்தியது. ‘இந்த பதட்டமெல்லாம் வயித்துக் கொழந்த நல்லப்படியா வெளிய வருணும்னுதான்..’ பொறுமலோடு கண்களை மூடிக் கொண்டேன். ஸ்டெச்சர் நகர்ந்தது. மனம் வெறிச்சோடியிருந்தது.

இதுதான் உள்நோயாளியாக எனது முதல் மருத்துவமனை அனுபவம். அறையின் தோற்றம் பயமுறுத்தலாக இருந்தது. பலியாடுகளாக கிடந்த மூவரோடு நானும் சேர்ந்ததில் நால்வராகிப் போனோம். அங்கிருந்த பெண் மருத்துவர் என்னை சோதித்து விட்டு ‘லேபர் பெயின் வர்ட்டும்.. வெயிட் பண்ணலாம்..” என்றபடியே எனது பச்சை உடுப்பை கீழே இழுத்து விடாமலேயே நகர்ந்தார். படுத்தவாறே குனிய முயன்றேன்.  “எழுந்திரிக்காதம்மா.. டிரிப்ஸ் போய்ட்டுருக்கல்ல..” என்றார் ஒரு நர்ஸ். பிறகு நான் கேட்டுக் கொண்டதன் போல் பட்டும்படாமலும் என் உடையை சரிப்படுத்தி விட்டு நகர்ந்தார். உடைப் பற்றிய பதற்றம் நீங்கியதில் மெல்ல கண்களைச் சுழற்றினேன். பக்கத்து படுக்கையிலிருந்த பெண் ஹீனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அந்தப் பெண்ணின் சத்தம் கூடிக் கொண்டேயிருந்தது. மரணத்தின் உச்சமே ஜனனம். மரணம் என்றால் அது மனதின் அந்தரங்க வலியாக இருக்கலாம். அல்லது உடல் வலியின் உச்சமாக இருக்கலாம். அல்லது நேரடி மரணமாகக் கூட இருக்கலாம். தத்துவார்த்தமான சிந்தனைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது அந்நேரத்திலும். இம்மாதிரியான சிந்தனைகள் எனக்கு புதிததல்ல. எனது பள்ளிநாட்களில் அவ்வவ்போது நான் அள்ளி விடும் வசனங்கள் நீதிபோதனை வகுப்பில் என்னை முன்னிலைப்படுத்தும். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை நீதிபோதனை டீச்சர் ‘உன் வயசு ஸிக்ஸ்டீனா.. ஸ்க்ஸ்டீயா..’ என்று கிண்டலடித்தார்.

பக்கத்து படுக்கைப் பெண் வலியில் எனக்கு சீனியர். அவள் அனுபவிப்பதையெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் நானும் அனுபவிக்க வேண்டும். வாழ்க்கையின் உச்சக்கட்டம். வலியின் உச்சக்கட்டம். பொறுக்கவியலாத வலியை பொறுக்க வேண்டிய கட்டாயம். பிளாஸ்டிக் பக்கெட்டும் கையுமாக அவசரமாக உள்ளே நுழைந்த இரு தாதிகள் பச்சைத்திரைக்குள் ஐக்கியமானார்கள். அந்தப் பெண்ணின் கால்களை இருவர் மடக்கி பிடித்திருப்பது தெரிந்தது. அவள் ஏதோ செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பொல்லாத வலி என்னை திசைத் திருப்பியது. வாய் விட்டு முனகினேன். நர்ஸ் என்னருகே வந்தார். ‘அடிவயித்துல வலி இறுக்கி புடிக்குதா..” என்றார். அப்படிதான் இருந்தது எனக்கும். “வலி வுட்டு வுட்டு வரணும்.. ரெண்டு நிமிஷத்துக்கொரு தடவை வந்து வந்து நின்னுச்சுன்னா பேபி வெளிய வர போவுதுன்னு அர்த்தம்..” வலியின் இறைச்சலுக்குள் மழலையின் குரல் மெலிந்து கேட்டது. அவளுக்கு குழந்தை பிறந்து விட்டது. ஆவலில் தலையை திருப்பிப் பார்த்தேன். அவளைச் சுற்றியிருந்த கூட்டம் குறையவில்லை. இடுப்புக்கு மேல் தான் தெரிந்தாள். பச்சைத்திரையை சற்றே நகர்த்தியிருந்தார்கள். நல்ல உணர்வுடன்தான் இருந்தாள். உடல் தொய்ந்து கிழிந்த நாராகி போனதை முகம் உள்வாங்கி களைப்பை வெளித்தள்ளியிருந்தது. குழந்தை இடைவிடாது அழுதது. அந்த ஒலி அவளை சலனப்படுத்தியிருக்குமோ.. தாங்க முடியாமல் அழுவாளோ.. முகத்தை உற்றுப் பார்த்தேன். சலனங்களற்றிருந்தது அந்த முகம்.

இரண்டு நிமிடத்திற்கு முன் விட்டு போயிருந்த அடி வயிற்றுவலி இப்போது மீண்டும் கவ்வி இழுத்தது. ‘அதே தான்.. அதே தான்..’ மனசு பயத்தில் சில்லிட்டது. “சிஸ்டர்.. சிஸ்டர்..” என்று கத்தினேன். நர்ஸ் வேகமாக வந்தார் என்னிடம். பழக்கப்பட்டுப் போன நிகழ்வாக நான் கால்களை விரித்துக் கொடுக்க “நாலு ஃபிங்கர் கேப் விட்டுருக்கு டாக்டர்..” என்றார் அவசரமாக.

இப்போது அவளிடமிருந்த பச்சைத்திரையை முழுவதும் நீக்கி என்னை நோக்கி நகர்த்தினர். நான் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டேன். என்ன நடக்கிறது எனக்கு..? மறுத்து போயிருந்தது மனம். உடை மாற்றும் அறையிலோ குளிக்கும் அறையிலோ கூட இதுவரை யாரையும் அனுமதித்ததில்லை நான். கையறு நிலை என்பது இதுதானோ..? “முக்கு.. நல்லா ஸ்டெயிரன் பண்ணி முக்கு.. ம்.. அப்டி தான்.. ம்ஹும்.. பத்தாது.. இன்னும்.. இன்னும்.. இன்னும் பெட்டரா டிரை பண்ணு.. ம்ம்.. அப்டி தான்.. இன்னும் கொஞ்சம்.. இங்க பாரும்மா.. நீ கோவப்ரேட் பண்ணலேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.. கால நல்லா விரிச்சு வக்கலேன்னா பேபி வெளிய வர முடியாது.. முக்கும்மா.. ஏற்கனவே பனிக்கொடம் ஒடஞ்சுடுச்சு.. லேட் பண்ணுனீன்னா பேபிக்கு ஸஃபகேட் ஆயிடும்..” மிதமாகவும் கோபமாகவும் கிரிக்கெட் கமெண்ட்ரி போல தொடர்ச்சியாக வந்த பெண் மருத்துவரின் குரல்கள் என்னை திக்குமுக்காட வைத்தன. சொன்னவைகளையெல்லாம் செய்தாலும் குழந்தை ஏன் வெளியே வரவில்லை..?  விரித்து பிடிக்கப்பட்ட என் கால்கள் வலியில் சோர்ந்திருந்தன. உடலின் கீழ்பாகம் முழுவதும் வலியால் சூழ்ந்திருந்தது. இந்த பிரசவத் தினத்தைக் குறித்து நான் கொண்டிருந்த பயங்கள் ஒன்றுக் கூட மிகையானதல்ல. ‘பிரசவம் ரொம்ப கஷ்டமானதுன்னா இத்தனைக் கோடி ஜனக்கூட்டம் எப்படி பெருகியிருக்கும்’ என்று எனக்கு நானே தேற்றி வைத்தவைகளெல்லாம் பொலபொலத்து உதிர்ந்துக் கொண்டிருந்தன.

சினிமாவில் கதாநாயகி கால்களை வலியில் அடித்துக் கொள்வாள். வேதனையில் துடிக்கும் அவள் முகத்தில் காமிரா படரும் நேரம் வீறிட்ட மழலை ஒலி எல்லா பின்னணி இசைகளையும் நிறுத்தி விட்டு தியேட்டர் முழுதும் எதிலொலிக்கும். வலிகளை மறந்து கதாநாயகி குழந்தையை வாரி அணைத்துக் கொள்வது என் மனக் கண்ணில் ஓடியது. என் பெரியப்பாவின் மகள் குழந்தையை பிரசவித்திருந்த போது அவளை பார்க்க போயிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகியிருக்கவில்லை. அவளது ஒருநாள் வயதுடைய குழந்தையை என் பெரியம்மா கைகளில் ஏந்தியிருக்க அக்கா அவஸ்தையாக என்னை பார்த்து சிரித்தாள். இப்போதுதான் அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்தது. வலிகளின் உச்சத்தை வென்று வந்த வேதனை சிரிப்பு அது. ‘நான் உங்கம்மாவ பெத்தெடுத்தது உங்க தாத்தனுக்கு கூட ரெண்டு நாளைக்கு பொறவுதான் தெரியும்..’ கூட்டுக் குடும்பத்திலிருந்த என் அம்மாச்சி எட்டாவதாக பெற்றிருந்த என் அம்மாவை பற்றி பேசியது இந்த நேரத்திலும் நினைவிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தியது.

“அப்டிதான்.. இன்னும் ஒரு தடவ.. அவ்ளோ தான்.. குட்..” பேசிக் கொண்டே இருந்த மருத்துவர் திடீரென வெகு உன்னிப்பானார். உடல் முழுவதும் வலி ஆக்கிரமித்த நேரம். என்னுள்ளிருந்து ஏதோ உருவப்பட்டது போன்ற உணர்வு. உடலை அசைக்கவியலாத நிலையில் பார்வையை மட்டும் திருப்பினேன். மருத்துவரின் கைகளுக்குள் உடலெங்கும் வெள்ளையும் சிவப்புமாக படிந்திருந்த அந்த சின்னஞ்சிறு உருவம் குறித்து மூளையில் உறைக்க எனக்கு சில நொடிகள் பிடித்தது.  ‘விடுதலை.. விடுதலை.. விடுதலை..’ மௌனமாக பாடியது மனம். வீறிட்டு அழுத குழந்தையை ஏந்திக் கொண்டு நகர்ந்தார் ஒரு நர்ஸ். குளிப்பாட்ட சென்றிருப்பாராக இருக்கும். எனது பெட்டில் தொங்கிக் கொண்டிருந்த எனது கேஸ் ஷீட்டில் குழந்தை பிறந்த நேரத்தை பதிவு செய்தார் ஒரு நர்ஸ். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியாத நிலை. நேரடி வலியின் வீச்சு நின்றிருந்தாலும் உடல் முழுக்க வலியும் உதிரமுமாக அவஸ்தை கூடியிருந்தது. தாதி ஒருத்தி அடிவயிற்றை மசாஜ் செய்வது போல அமுக்கியதில் அடிவயிறு வலித்தது. என் வலியையோ அவஸ்தையோ சட்டைச் செய்யாதவளாக கடமையே கண்ணாக இருந்தார் அந்த தாதி. இறுதியாக கட்டி கட்டியாக உதிரம் நிறைந்த வாளி என் படுக்கைக்கு கீழிருந்து அகற்றப்பட்டது. உதிரப்போக்குக்கு நாப்கின் வைக்கப்பட்டது. இரத்தக்கறை படிந்த எனது நீள அங்கிப் போன்ற உடை நீக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த எனது நைட்டி அணிவிக்கப்பட்டது. என்னிடமிருந்த சகலமும் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு முற்றிலும் மற்றவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த எனக்கு கையில் என்னவோ கட்டப்பட்டது. திருப்பிப் பார்த்தேன். சின்ன டோக்கன். எனக்கும் பேபிக்கும் மூன்றாம் எண் டோக்கன். குழந்தை மாறிவிடாதிருக்க. பூஞ்சையாய் கிடந்த தேகத்தை இரண்டு பேராக சேர்ந்து  மெதுமெதுவாக ஸ்டெரச்சருக்கு மாற்றினார்கள். ஊண்சத்தற்ற உடல் போல சக்கையாக உணர்ந்தேன்.

ஸ்ரெச்சர் லேபர் வார்டை விட்டு வெளியே நகர்ந்தது. யாரையும் பார்க்க ஆவலின்றி கண்களை மூடிக் கொண்டேன். ஆதரவாக அம்மா தலையை கோதுவது தெரிந்தது. சின்ன விசும்பல் சத்தம். அம்மா அழுகிறாள் போல. ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டா எம்பொண்ணு..’ அவளின் வாய் முணுமுணுத்தது. கணவனின் விழிகள் குழந்தையை தேடியிருக்கும். ஸ்ரெச்சரின் வீல்கள் வளைந்தன. அறைக்குள் நுழைகிறேன் போலும்.

சுடுநீரில் துடைக்கப்பட்ட உடலும் இதுவரை அனுபவித்த வலியும் துாங்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது எனக்கு. அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தாள். பிரயத்தனப்பட்டு லேசாக விழித்துப் பார்த்ததில் சூழ்ந்திருந்த அனைவரும் வேற்றுக்கிரகவாசிகளாய் தெரிந்தனர். அல்லது நான்தான் இறந்து வேற்றுக்கிரகத்திற்கு வந்து விட்டேனா..? எதுவும் விளங்கவில்லை. ‘சமுதாயமானது தாய்மையை புனிதப்படுத்தி பெண்களை வாய் மூடி மௌனிகளாக்கி மிக சரியாக காய்களை நகர்த்தி மாறாத வெற்றியை தக்க வைத்துக் கொண்டே வந்துக் கொண்டிருக்கிறது. அதன் மிகச்சமீபமான பலி நான்..’ என்று கறுப்பு அங்கியோடு கோர்ட்டில் வாதிடும் போது நான் எழுப்பப்பட்டேன். சிறு அசைவு கூட எனக்கு சாத்தியப்படவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

“ஏன் இவ்ளோ கும்பல்.. எல்லாரும் கௌம்புங்க..” அதட்டியப்படியே உள்ளே நுழைந்த நர்ஸ் அதே அதட்டலோடு “எழுந்திரிம்மா.. பேபிக்கு பால் குடுக்கணும்..” என்றார். தலையணையில் சாய்ந்து அமர வைக்கப்பட்டேன். குழந்தையை மார்போடு ஏந்துகையில் வலுவின்றி கை நடுங்கியது. அம்மா உதவினாள். “நீங்க நவுருங்கம்மா.. அவளுக்கு பழக்கப்படுத்தணும்..” நர்ஸ் வெகு இயல்பாக குழந்தையை துாக்கி என் கைகளில் வைத்தாள். அவள் சர்விஸில் என்னை போல ஆயிரம் பேரை பார்த்திருந்த அனுபவம் அதில் தெரிந்தது.

“இங்க பாரும்மா.. இத்தன மாசம் சுமந்தது பெருசில்ல.. பெத்ததும் பெருசில்ல.. வளக்கறதுதான் பெரும்பாடு.. குழந்தைக்கு சரியான நேரத்துக்கு பால் குடுக்குணும்.. பசின்னாலும் அதுங்க அழுவும்.. எறும்பு கடிச்சாலும் அழுவும்.. வயித்த வலிச்சாலும் அழுகைதான்.. பேபி எதுக்காக அழுவுதுன்னு நமக்குதான் தெரியணும்.. அழுவாம துாங்கிட்டே இருந்தாலும் அப்டியே விட்டுடக் கூடாது.. எழுப்பி விட்டு பால் கொடுக்கணும்.. பால் குடிக்கும் போதே கூட அதுங்களுக்கு துாக்கம் வந்துடும்.. வாய் வைக்க தெரியாம அல்லாடுங்க.. பால் மூக்குல ஏறிக்காம கவனமாக இருக்கணும்..” ஒப்பிப்பது போல சொல்லியப்படியே நைட்டியை விலக்கினாள். இப்போது உடலின் மேல்பகுதி என் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்தது. சிறிய சதைக்குவியலில் ஒரு கோடு போலிருந்தது அதன் வாய். குழந்தைக்கும் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. எனக்கும் என்ன செய்ய வேண்டும் என விளங்கவில்லை. நர்ஸின் அனுபவம் வென்றதில் குழந்தை வீறிட்டு பின் எதையோ சப்பி விட்டு துாங்கி போனது. நர்ஸ் கிளம்பிய பிறகு  “அப்டியே மருமகன்மாதிரியே இருக்குதுடீ புள்ள..” என்றாள் அம்மா. அதுவரைதான் நினைவிருந்தது. பிறகு நானும் துாங்கிப் போனேன்.

யாரோ எழுப்பியது யுகங்களை கடந்து மீண்டது போலிருந்தது.  “புள்ளக்கு பசி வந்துருக்கும்.. பால் குடும்மா..” என்றாள் அம்மா. கண்களை திறக்க முடியாத அசதி. குழந்தையை என்னருகே படுக்க வைத்தாள். “கண்ண தொறந்து பாத்து பால் குடுடீ.. மூக்குல ஏறிக்கும்..” திறக்க முடியாதிருந்த கண்களை யாருடைய வருகையோ திறக்க கட்டாயப்படுத்தியது.

இரு வீட்டு ஆட்கள்.. தோழர்கள்.. அக்கம்பக்கத்தோர் என யாரோரோ வந்தபடியே இருந்தனர். ‘பால் குடுக்குறா.. குடுத்தவொடன கூப்டுறன்..” அம்மா சமாதானப்படுத்தும் போது ‘அவங்கள அப்டியே போக சொல்லும்மா.. நான் துாங்கணும்..” என்று சொல்லத் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். ஆண் உறவினர் மருத்துவமனை செலவுக் கணக்கு கேட்பதும் பெண்கள் அறையை நோட்டமிடுவதும் பிறகு குரலை தழைத்துக் கொண்டு ‘பால் இருக்குல்ல..’ என்று கேட்பதும் எரிச்சலாக இருந்தது. ‘எல்லாரும் வெளிய போய் தொலைங்க.’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா கைத்தாங்கலாக பிடிக்க செருப்பணிந்த கால்களுடன் ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தேன். அதற்குள் யாரோ வந்திருந்தார்கள். அப்படியே செருப்பைக் கழற்றி அடித்து விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கஷ்டப்பட்டு உள்வாங்கிக் கொண்டேன். அத்துமீறிய அலுப்பில் சற்று கண்ணயறும் அம்மாவை அங்கிருந்த டி.வி ரிமோட்டால் துhக்கி அடிக்க வேண்டும் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் வெறுமை. யாருமற்ற தனிமை என மனசு ரணக்களமாகியிருந்தது. “ஏன்டீ.. பசிக்குதாடீன்னு தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்டி சள்ளுபுள்ளு வுளுவுற..?” அம்மாவுக்கு சமயங்களில் கோபம் வந்து விடும். துாங்கும் தனது வாரிசைப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் பார்க்க வருபவர்களை கவனித்துக் கொள்வதுமாக என் கணவரின் நேரங்கள் பிஸியாகவே கழிந்ததில் மூன்று நாட்கள் கடந்தது.

வீடு ஆரத்தி எடுத்து வரவேற்றது. தொட்டில், புதிதாக வாங்கிய டேபிள்ஃபேன், மாற்றம் செய்யப்பட்ட கட்டில்,  என் படுக்கைக்கு அருகே உருவாக்கப்பட்ட புதிய சிறிய படுக்கை என வீடே மாறியிருந்தது. விதவிதமான ருசியற்ற உணவுகள் அதிகமான கட்டுப்பாடுகள் புதிதாக பிறந்திருக்கும் பொறுப்பு இவைகள் எனது தனிமையின் அளவை கூட்டிக் கொண்டே போயின. படுத்தே கிடந்ததில் சற்றே ஊதிப் போயிருந்த என் முகம் மற்றவர்களின் பார்வையில் தாய்மையின் பூரிப்பாக தெரிந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்த கணவர் பொறுப்பை மாற்றி விட்ட திருப்தியில் குழந்தைக்கான விளையாட்டு சாமான்களை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அம்மா குழந்தைக்கான சவரட்டணையில் முழ்கிப் போனாள். குழந்தையை எடுத்துக் கொடுக்க.. பால் குடித்தப்பிறகு துாளியில் போட.. பத்திய சாப்பாடு சமைக்க.. குழந்தையை குளிப்பாட்ட.. உறை மருந்து ஊற்ற.. என அம்மா பிஸியாகி விட சூழ்ந்து நின்ற தனிமை எரிச்சலைக் கூட்டியதில் தொட்டதெற்கெல்லம் எழுந்து விழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. குழந்தையை குளிக்க வைத்து என்னருகே படுக்க வைத்தாள் அம்மா. “நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ.. புள்ளப் பெத்த மாரு.. ஒருத்தரு கண்ணுப் போல இருக்காது.. திருஷ்டிப்பட்டுப் போச்சுன்னா பால் கட்டிக்கும்..” இயல்பாக சொல்லி விட்டு அம்மா சமையலறைக்கு சென்று விட்டாள். கூச்ச சுவாபியான எனக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.

‘புள்ள துாங்குதுன்னு பேசாம இருந்துடாதடீ.. கால சுண்டி விட்டு பால் குடு.. புள்ளக்கு பசி வந்துடும்..” கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் அம்மா. குழந்தையைப் பார்த்தேன். உடல் முழுவதும் பவுடர் வாசத்துடன் நெற்றியிலும் கன்னத்திலும் வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டுமாக துாங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் துாக்கத்திலேயே சிரித்தது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. குழந்தையின் வலது உள்ளங்காலை மெதுவாக நிமிண்டினேன். எழுந்துக் கொள்ளவில்லை. திரும்ப திரும்ப சீண்டியதில் நான் படுத்திருந்த பக்கம் திரும்பியது. அதன் பிஞ்சுக் கை எதையோ தேடி அலைந்து பிறகு எனது நைட்டியை பற்றிக் கொண்டது.

குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.

“தல நிக்காத புள்ளடீ.. பாத்து..” என்றாள் அறைக்குள் நுழைந்த அம்மா.

***

மீனாட்டம்

தி. வேல்முருகன்

கார்த்தி கடலூர் செல்லும் பஸ்ஸில் இருந்து அகரம் கடைத்தெருவில் இறங்கும்போதே மழை பிடித்துக் கொண்டது.

ஒடிப்போய் நரசிம்ம பெருமாள் கோயில் மேடையில் ஏறி சுவரை ஒட்டி நின்று கொண்டான். கோயில் முகப்புச் சாரம் நாட்டு ஓடு வேய்ந்து இருந்தது.  சாரத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அவனைப் பார்த்து பத்துவிரலும் கோயிலுக்கு ஓடி வந்தார். அவர் பின்னாடியே ஒரு  ஆடும் அதன் குட்டியும் ஒடிவந்து கோயில் மோடையில் ஏறிக் கொண்டன.

பத்துவிரலு, “ந்தா… ந்தா…” என்றார், ஆட்டையும் குட்டியும் பார்த்து. அது இரண்டும் கார்த்தி பக்கம் ஓடி வந்து அண்டிக் கொண்டு நின்றன.

“மாப்பிள்ளை நீ எங்கடா போயிட்டு வந்த?”

“பள்ளிக்கூடம் மாமா “

“எத்தனையாவது படிக்கர?”

“பதினென்னாவது”

“வயசு பதினாறு இருக்குமா?”

“ஆமாம் மாமா இப்ப தான் நடக்குது”

“இரண்டு கெட்டான் வயசு. ம்ம்…? நல்லா சாப்புடுரா”

கார்த்தி ஆட்டையும் குட்டியையும் பார்த்தான். ஆடு உடம்பை உதறிக் கொண்டது. குட்டி பால் குடிக்க பின்புறமாக முட்டியது.

பத்துவிரலு சிவப்பு நூல் துண்டால் தலையிலிருந்த ஈரத்தைத் தொடைத்துவிட்டு மடியில் இருந்த சுருட்டு வத்திப்புட்டியெடுத்து சுருட்டைப் பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார்.

“கச்சாங்காத்துடா மாப்பிள்ளை, அதான் மழை இப்ப”

உட்டுடூம்!

மழை அடித்துப் பெய்தது, மழை நீர் ஓட்டின் வழியாக வந்து நீர்க்கோடாக விழுந்து ஓடியது.  கார்த்தி காலையில் பள்ளிக்குச் சென்றவன், பசி வேறு. மழை எப்போதும் விடும், நனைந்து கொண்டே ஓடலாமா, என பார்த்தான்.

மழை விட்டபாடில்லை. இரண்டொருவர் நனைந்து கொண்டே சென்றனர். வேகமாக இரண்டு சைக்கிள்கள் சென்றன. ஒரு டவுன் பஸ் நின்று சென்றது. மழை சிறிது குறைய ஆரம்பித்ததும் பஸ்ஸில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களும் மழைத் தூறலை சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் சொல்லி வைத்தது போல் மழை நின்று சிறிது வெளிச்சம் கூட வந்தது.

“ஓடிப்போடா, நான் பரங்கிப்பேட்டைக்கு போயிட்டு வந்துடறேன்”

கார்த்தி கோயிலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான். வானம் வெளுத்து வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததும் கடைத் தெருவில் நின்றவர்கள், “கம்ணாட்டி பய மானம் புரட்டாசி பாஞ்சு தேதியாயிடுச்சு மழை இறங்காம தரைய நனைச்சிட்டு ஓடுதுய்யா. விதவுட்டு ஒரு மாசமாச்சு இந்த வருசமாவது சமயத்தில பேயும்னு பார்த்தா இப்படி காயுத,” என்றனர்.

கார்த்தி மோட்டுத் தெரு வழியாக வீட்டுக்கு போகலாமா, என யோசித்தான். வேண்டாம் மணியங்கால் ஓடையில் தண்ணி கிடக்கும் ரோட்டு வழியாக போவும், என்று நடந்தான்.

பாலம் வரவும் மானம் முழுமையாக வெளுத்து விட்டது. பாலத்தின் கைப்பிடி கட்டையை பிடித்துக் கொண்டு தண்ணியை எட்டிப் பார்த்தான்.

பாலத்தின் அடியிலிருந்து மோட்டுத் தெரு கலியமூர்த்தி கையில் தூண்டிலும் நாக்குப் பூச்சு வைத்திருந்த தகர டப்பியோடும் பாலத்தின் மேல் வருவதற்கு ரோட்டுச் சருவலில் ஏற ஆரம்பித்தார்.

தூண்டிலைப் பார்த்த கார்த்தி மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நின்று விட்டான்.

கலியமூர்த்தி ரோட்டில் மேல் வந்து கார்த்தியை தாண்டிச் சென்று டப்பியை கீழே வைத்துவிட்டு தூண்டில் நைலான் கயிற்றை காற்றில் உதறி தண்ணியில் இரண்டு முறை அடித்ததும் ஏதோ விழுந்தது போல் தண்ணீரில் அலை எழுந்து கரையை தொட்டது. தக்கையாக செருப்பை அறுத்துக் கட்டி இருந்தார்.  அது மஞ்சள் நிறத்தில் நீர் மேல் மிதந்தது.

மீன் ஏதாவது கொத்தும் என கார்த்தி பார்த்தான். ஒன்றும் கொத்தவில்லை. தக்கை காற்றிலடித்துக் கொண்டு அவன் பக்கம் வந்தது.  உலர்ந்து இருந்த வாயிலிருந்து எச்சிலைக் கூட்டித் துப்பினான். எதிர்பாராமல் சரியாக தக்கை மேலே சென்று சொத் என்று விழுந்து விட்டது.

கலியமூர்த்திக்கு கடும் கோவம் வந்து, “நீலாம் என்ன மயிருடா படிக்கற?

உன் பேனா மேல எச்சி துப்புனா எப்படிரா இருக்கும்? அடிவாங்காம ஒடி போயிடு,” என்று சத்தம் போட்டார்.

கார்த்தி ஓடவில்லை. வாட்டமான முகத்துடன் சற்று தள்ளிச் சென்று தண்ணியை எட்டிப் பார்த்தான். பாலத்தின் அடியில் தண்ணிரில் தலையின் நிழலுக்கு நேர் கீழே ஒரு இரண்டு விரல் மொத்த விரால் மீன் நின்றது. தலையசைவின் நிழலில் மீனும் அசைந்தது. அவன் தலையை சீராக முன்னோக்கி நீட்ட நீட்ட மீன் முன்னோக்கி நகர்ந்தது.

அப்படியே தலையை சீராக பின்னோக்கி இழுத்துக்கொண்டே பார்த்தான். மீனும் அதன் வாலைத் தள்ளிக் கொண்டு நிழலின் பின் வந்தது.

வாலில் இருந்த புள்ளியும் கோடும்கூட தெளிவாக தெரிந்து அவனுக்கு நாகத்தை ஞாபகப்படுத்தியதும் உடல் சிலிர்த்துக் கொண்டான். மீன் அப்படியே நிழலசைவுக்கு தகுந்தாற்போல் வாலை ஆட்டி முன்னும் பின்னும் நகர்ந்தது.

கார்த்திக்கு அந்த மீனாட்டம் பிடித்து இருந்தது.

கலியமூர்த்தி பார்த்து விட்டால் வம்பாகிவிடும், மீனைப் பிடித்து விடுவான் என்று அப்படியே கிளம்பி வந்து விட்டான்.

மறுநாள் பள்ளி விட்டு வரும்போது பாலம் வந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பாலத்தின் அடியில் பார்த்தான். விரால் மீன் நின்றது. அதனுடன் நேற்று போலவே விளையாடினான். விரால் மீன் குஞ்சு ஏதோ சொல்ல வருவது போல் மேலே வந்து சிறிது வாயைக்கூட திறந்தது. அப்படியே இரண்டு காற்றுக் குமிழும் வந்ததும் தண்ணீரில் அலை வட்டம் உருவாகி கரையைத் தொட்டது.

மீன் தலை குப்புற கீழே வாலை ஆட்டிக் கொண்டு சென்று பிறகு மெல்ல மெல்ல நிழலை நோக்கி  தலையைக் கொண்டு வந்தது. ரொம்ப நேரம் ஆகி பசியெல்லாம் மறந்து, பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு மோட்டுத்தெரு கலியமூர்த்தி ஞாபகம் வந்து விட்டது. எங்கிருந்தாவது பார்த்து விட்டால் பிடித்து விடுவானே, என்று எழுந்தான்.

கலியமூர்த்தியை எந்த விளையாட்டிலும் ஜெயிக்க முடியாது. வச்சாவாகட்டும், பேந்தாவகட்டும், அடிஜானாகட்டும் எந்த கோலிக்குண்டுவாக இருந்தாலும் அவனுக்கு மட்டும் தனியாக கைவரும். நைலான் நூல் தூண்டி முள் தக்கையோடு உள்ளங்கையில் கரகர என்று வளையமாக சுத்தி வைத்து பாக்கெட்டில் மடித்து வைத்து இருப்பான். மீனைப் பார்த்து விட்டால் பிடிக்காமல் விடமாட்டான். விளையாட்டு என்றால் எல்லாரிடமும் கடைசி  வரை ஐெயித்துக் கொண்டே போவான். கபடி ஓடிப் பிடித்தல் எதிலும் ஜெயிக்க முடியாது கலியமூர்த்தியை.

“சைக்கிள்காரர. நில்லு நில்லு…  மீனு வேனுமா?” என்ற கலியமூர்த்தியின் குரலைக் கேட்டு விட்டு கார்த்தி பயந்து திரும்பி நின்று கொண்டான்.

ரோட்டின் தென்புறம் தண்ணீரில் தாழ்ந்து இருந்த கருவை மரத்தினடியிலிருந்து எழுந்து தூண்டிலை மண்ணில் சொருகி விட்டு கயிறில் வரிசையாக கோர்த்த சிலேபி மீன்களை கொண்டு வந்தான்.

“மீன்காரர? ஒரு கிலோ வரும்!  எவ்வளவு தருவ?”

“இரண்டு ரூபாய் தரம்ப்பா”

“யோவ் அஞ்சு ரூபாய்  இருந்தா பார, இல்லைன்னா போய்கிட்டே இரு”

“இல்லப்பா அவ்வளவு விக்காது ஒரு ரூபாய் சேர்த்து மூனா வாங்கிக்க”

“சரி, பீடி இருக்கா?”

“இந்தா? இரண்டு இருக்கு, நீ ஒன்னு எடுத்துக்க”

கலியமூர்த்தி மூணு ருபாயும் பீடியும் வாங்கிக் கொண்டு திரும்ப மீன் பிடிக்கச் சென்றதை பார்த்து கொண்டே வீட்டுக்கு நடந்தான்.

தொடர்ந்து அடுத்த அடுத்த தினங்களில் பள்ளி விட்டு வரும்போது கார்த்திக்கும் மீனுக்குமான விளையாட்டு தொடர்ந்தது. மீனுக்கு என்ன தின்ன கொடுக்கலாம் தீனி கொடுத்தால் சீக்கிரம் வளர்ந்து விடுமே? அப்புறம் யாராவது பிடித்து விடுவார்களே?

இப்படி நாள் முழுவதும் ஒவ்வோறு சமயம் மீனைப்பற்றிய கவலை வந்து அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் மீனைப் பார்த்தபிறகுதான் ஒரு ஆசுவாசம், ஒரு திருப்தி வரும் கார்த்திக்கு.

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தபோது மழைக்காலம் தொடங்கி விட்டது. பெருமழை பிடித்துக் கொண்டது. இரண்டு நாளில் புயலடிக்கும் என்று பேப்பரிலும் வானொலியிலும் டிவியிலும் சொல்கிறார்கள். மழை தொடங்கிய பிறகு தண்ணீர் பச்சை ஓணான் போல் நிறம் மாறி செங்காமுட்டி நிறமாக மாறிச் சென்றதும் கார்த்தியின் கண்ணுக்கு மீன் தட்டுப்படவில்லை.

குடையோடு கடைக்கு செல்லும்போது பாலத்தின் நின்று பார்த்தான். வெள்ள நீர் சுழித்துக் கொண்டு, அம்மா அரிசி களையும்போது வரும் நிறம் போல, சின்ன மதுவு வழியாக வெளியேறி நுரைத்துக் கொண்டு ஒடியது. கண்ணுக்கெட்டிய தூரம் மழை நீர் வெள்ளக்காடாக தெரிந்தது. வெள்ளாறு எகுத்து விட்டது, தண்ணீர் உள் வாங்கவில்லை.

இரவு எப்படியும் வெள்ளம் வரும் கூரை வீடுகள் அதோகதிதான்  என்று கடைத்தெருவில் பேசிக் கொண்டனர். சிலர் தண்ணீர் வடிவதைத் தடுக்கும் பழைய ரோட்டை வெட்டி விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும், இல்லை என்றால் கூரை வீட்டு மண் சுவர்கள் எல்லாம் இடிந்து கூரை சாய்ந்து விடும் என்று சொன்னார்கள்

ரோட்டை உடைத்தால் வம்பாகி விடும் என்றும் பயன்படுத்தாத ரோடை உடைக்க என்ன பயம் அட யாராவது உடைச்சு விடுங்க என்று பலவிதமாக பேசி கொண்டு இருந்தனர். சிலர் மண்வெட்டி பாரையோடு ரோட்டு பக்கம் வந்தனர்

சேராக்குத்தாரும், ஆண்டிக்குழியார் மகனும் முதலில் பழைய ரோட்டின் தாரை கொத்திப் பெயர்க்க ஆரம்பித்தார்கள். பழமையான ரோடு, மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அதற்குள் மேலு‌ம் சில இளைஞர்கள் சேர்ந்து வாய்க்காலாக தோண்ட ஆரம்பித்தனர். பச்சை கெட்ட வார்த்தையால் அழகர் மானத்தைத் திட்டினார்- ஒன்னு பேஞ்சு கெடுக்குது இல்லைன்னா காஞ்சு கெடுக்குது என்று

வாய்க்காலின் மையம் கார்த்தி  விரால் மீன்  பார்க்கும் இடத்துக்கு நேர் வந்து விட்டது. பாலத்தின் மையமும் அதுதான். தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்போது மீனை வெள்ளாத்துக்குக் கொண்டு செல்லும், பிறகு அப்படியே கடலுக்குப் போய்விடும். இனி அவ்வளவுதான், விரால் மீனைப் பார்க்க முடியாது.

இந்த சேராக்குத்தாருக்கு மட்டும் எது கேட்டாலும் செய்யக்கூடாது என்று நினைத்து கொண்டான்.

அன்று இரவு முழுவதும் கடும் மழை. மறுநாளும் மழை. சாயந்தரம் சீராக ஆரம்பித்த காற்று நேரம் செல்லச் செல்ல அதிகமாகி விட்டது. ஆடு மாடுகள் கத்தும் சத்தம் மனிதர்களின் சத்தம் அதனுடே காற்றின் உய்ய்ய்ய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய் சத்தம் வீட்டை ஒட்டி மரங்கள் முறிந்து விழும் சத்தம் என ஒரே பரிதவிப்பாக இருந்தது.

யாருக்கும் யாரும் உதவமுடியாத இருள். அப்போது இ டியும் மின்னலும் சேர்ந்து கொண்டதால் வெளியே பார்க்கக்கூட முடியவில்லை. கார்த்தியின் ஓட்டு வீட்டின் ஒடுகள் சில இடங்களில் பெயர்ந்தது காற்றில், மழை நீர் வீட்டினுள் விழ ஆரம்பித்ததும்  இடி படபட படீர் என்றும் தீடிர் தீடிர் என்று இடிச் சத்தம் கேட்கும்போது சுவர்கள் அதிர்ந்தன.

“கூரை வீடுகளின் கதி ஆடுமாடுகள் கதி என்னவாகும் கடவுளே, எப்போது காத்து விடும்? மழை பெய்தால் கூட பரவாயில்லையே, இந்த பேய்க்காத்து நின்று விட வேண்டும்,” என அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.

ஊய் ஊய் என்ற அந்த பேய்காத்து விட்டு விட வேண்டும் பத்துவிரலு வீட்டு பனைமரத்தில் இருக்கும் காக்கா கூடு தப்பிக்க வேண்டும் என்று கார்த்தியும் வேண்டி கொண்டான்.

மறுநாள் பார்த் போது அவன் நினைத்ததைவிட புயல்காத்து மோசம் செய்து இருந்தது. தெருவிலிருந்த கூரை வீடுகள் எல்லாம் பாதிக்கு மேல் விழுந்து இருந்தன. வீட்டை ஒட்டி இருந்த முருங்கை மரங்கள், உறுதியான பூவரசு, வேப்ப மரங்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. வீட்டின் மேல் கிடந்ததை எல்லாம் வெட்ட ஆரம்பித்து இருந்தனர்.

வீட்டுக்கு பின்புறம் இருந்த பத்துவிரலு வீட்டு பனைமரத்தின் காய்ந்த மட்டைகள் கீழே விழுந்து வழியை அடைத்து கொண்டு கிடந்தது. அதில் இருந்த காக்கா கூட்டில் இருந்த குச்சிகள் சரிந்து தொங்கின.

பச்சைமுட்டையின் ஓடு பனையை ஒட்டி கிடந்தது. காகங்களை காணவில்லை. கார்த்தி சோர்ந்து  போய் திரும்பினான்.

மழை ஒரே சீராக பெய்து கொண்டு இருந்தது. கார்த்தி குடையோடு பாலத்திற்கு சென்று பார்த்தான். சேராகுத்தார் வெட்டிய வழி ஏற்படுத்திய பழைய தார் ரோடே இல்லை. எல்லாவற்றையும் மழை வெள்ளம் கொண்டு சென்று கொண்டு இருந்தது. சேராகுத்தார் வெட்டவில்லை என்றால் தண்ணீர் வீடுகளில் புகுந்து இருக்கும் என பேசிக்கொண்டனர்.

மழை வெள்ளம் பார்க்க கூட்டம் பாலத்தில் நின்று இருந்தது. எட்டிப் பார்க்கச் சென்றவனை, ரெண்டும் கெட்டான் பயல போடா எட்ட, என்று சத்தம் போட்டார்கள். ஆலப்பாக்கம், புதுச் சத்திரம் எல்லாம் தண்ணீரில் மிதப்பதாகவும் பெருமாள் ஏரி உடைந்து போக்குவரத்து நின்று விட்டதாகவும் அந்த தண்ணீரும் இந்த வழியாகதான் வடியும் என்று பேசிக்கொண்டனர். பாலத்தின் அடியில் குனிந்து பார்க்க வந்த கார்த்தி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ரேஷன் கடையிலிருந்து அரிசி விநியோகம் வீட்டுக்கு இரண்டு கிலோ என்று இளைஞர்கள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். தலையாரி மணியாரோடு விழுந்த வீடுகளை பார்க்கனும் என்றும் பேசி கொண்டனர்.

அப்போது கச்சா வலையை எடுத்துக் கொண்டு பத்துவிரலு அங்காளம்மன் கோயில் பக்கம் சென்றார். கார்த்தி அவரைப் பின்தொடர்ந்து கோயிலுக்கு சென்றான்.

இந்த மழை ஆரம்பித்ததிலிருந்து  கோயிலில்தான் அவனுக்கு பொழுது போய்க்கொண்டு இருந்தது. கொத்து வேலை,ஆசாரி வேலை, வயல் வேலைகளுக்குச் செல்ல முடியாத பெரியவர்கள் எல்லாம் கோயிலில் அமர்ந்து காசு வைத்து தாயம் விளையாடிக் கொண்டு இருப்பர்.

ஒரே சத்தமாக இருக்கும், சிறுவர்கள் எல்லாம் கோலி விளையாடுவார்கள். கார்த்தி நேரத்துக்கு தகுந்தவாறு இரண்டு விளையாட்டிலும் இருப்பான்.

பத்துவிரலு வாகாக கோயில் தரையில் உட்கார்ந்து வலையில் அதிகமாக கிழிந்து இருந்த துவாரங்களைத் தைக்கும் நோக்கோடு செப்பு ஊசியில் பருத்தி நூலை கோர்க்க ஆரம்பித்தார்.

“மாமா இந்த வலையால விராலு மீனு புடிக்கலாமா?”

“அட ஒங்க?  இ   ல்ல மாப்பிள்ள,இதுல புடிக்க முடியாதுடா, இது சும்மா வாய்க்கால் ஓரம் ஏந்துன்னா கெண்டகுஞ்சுவோ மாட்டும் மாப்பிள்ளை… கொழம்புக்கு ஆவும்ல”

“ம்ம்? மாமா அப்ப விராலு எப்படி புடிக்கறது?”

“அது சின்ன மீனு போட்டு பெரிய மீனு புடிக்கறதுடா மாப்பிள்ளை”

“சொல்லேன்?”

அது வந்து நல்லா வெய்யில் அடிக்கும்போது விராலு நிக்குதான்னு பார்க்கனும். தண்ணீர்ல விராலு இருந்தா அது தண்ணிய அடிக்கறது தெரியும் எங்க நிக்குதுன்னு பார்த்து தூண்டில சின்ன பொடி உயிர் மீன முள்ளுல மாட்டி தண்ணியில போட்டா விராலு மாட்டும். நீ ஏண்டா இதெல்லாம் கேக்கர?”

“சரி மாமா உனக்கு பத்து விரலுன்னு ஏன் பேர் வந்துச்சி? ”

“அட ஒக்காலவோழி,” திட்ட ஆரம்பித்தார்

“ஏய் மாப்பிள்ளை இங்கே வாடா நான் சொல்றேன்,” என்று பக்கிரி கூப்பிட்டார்.

பக்கிரி அவனிடம் தாயம் விளையாடச் சொல்லி எப்போதும் அவன் மேல் பந்தயம் வைப்பார்.

“யோவ் மாப்பிள்ளை ஐெயிக்கரான்யா… யாராவது பந்தயம் கட்டுரீங்களா? ஒரு ரூபாய், ஐம்பது காசு, ம்ம்…” என்பார்

“மாப்பிள்ளை போடரா தாயத்த என்பார்”

அவன் கையை குளுக்கி ஒரு இழுப்பு இழுத்து விடுவான். ஆறு தீத்திய புளியங்கொட்டையில் ஒன்று மட்டும் மல்லாந்து வெள்ளையாகவும் மற்ற ஐந்து புளியங்கொட்டகைகள் கவுந்து கருப்பாக கிடக்கும்.

“பார்த்தியா, மாப்பிள்ளை தாயத்த போட்டுட்டான் பார்”

காசு வைத்தவர்கள் அவனைத் திட்டுவார்கள்.

பக்கிரி சேதி தெரிந்த கார்த்தி நிக்காமல் ஓடினான். அவருக்கு பத்து விரலு என்று பெயர் எப்படி வந்தது என்று அவனுக்குத் தெரியும்.

பத்துவிரலு பேரு கலியபெருமாள், மனைவி பேரு லட்சுமி. “இந்த உலகத்திலேயே அந்த நாராயணனுக்குப் பிறகு எனக்கு மட்டும் தான் பெயர் பொருத்தம் அமைஞ்ச மனைவி,” நிறைபோதையில், “லெட்சுமி, லெட்சுமி,” என்பார்.

“ஊத்திட்டி வந்துட்டியா, சும்மா கிட”, என்பார்கள் அவர் மனைவி. பிறகு சத்தம் ஒன்றும் வராது.

பத்துவிரலு சும்மா இருக்க மாட்டார். கூலி வேலைக்குதான் போவார். வந்தும் சும்மா இல்லாமல் விறகு வெட்டவோ, மீன் பிடிக்க வலையை தோளில் மாட்டிக்கொண்டோ, விறகு பொளக்கவோ யாராவது வேலை என்றால் முன்பே வந்து நிப்பார். அப்ப காரியமாக ஏதேனும் சொல்லிக் கொடுத்தும் விடுவார். அது பத்திக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு நிற்பதால் அவருக்கு பத்துவிரலும் வேலை செய்யும் பத்துவிரலு என்று அதுவே பரிகாச பெயராகி விட்டது.

வெளியில் வேலை இல்லாதபோது, அவர் மனைவியே, “தம்பி பத்துவிரல அந்தப் பக்கம் பாத்தியா?” என்றுதான் கேட்பார்கள். வரிசையாக ஞாபகம் வந்து சிரித்துக்கொண்டான்.

இனி மழை விட்டு வெள்ளம் வடிந்துதான் விராலு மீன பார்க்க முடியும். அதுவும் வெள்ளத்தில் பெரிய பெரிய மரங்களே அடித்துச் செல்லும்போது விரால் மீன் மட்டும் எப்படி இருக்கும், அதுவும் போயிவிடும். சிரிப்பெல்லாம் கவலையாக இருந்தது அவனுக்கு

தொடர்ந்து வந்த நாட்களில் மழை விட்டு வெள்ள நீர் வடிய ஆரம்பித்து விட்டது. பாலத்தின் கட்டையில் மிகப் பெரிய பள்ளம் ஒன்றும் உண்டாகி இருந்தது.

கார்த்தி பள்ளி விட்டு வரும்போது மட்டும் அல்லாமல் பாலத்தின் மேல் செல்லும்போது எல்லாம் அவனுக்கு விரால் மீன் சிந்தனை வந்து எட்டிப் பார்க்காமல் செல்லவே மாட்டான்.

இப்படி நாட்கள் மாதங்களாக கடந்தபோது மணியங்கால் ஓடை தண்ணீர் வற்றி அங்கு அங்கே திட்டு திட்டாக குளமாக நிற்க ஆரம்பித்து விட்டது.

கலியமூர்த்திகூட காணவில்லை. வேலைக்கு வெளியூர் சென்று இருக்கவேண்டும். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது சிவன் படவர் தெரு பெரியவர் தன் விசிறு வலையை கையை ஒரு சுழற்று சுற்றி வீசினார். வலை வட்டமாக விழுந்து அலையெழுப்பியது. மீன்கள் வலையில் மாட்டி படபடவென தண்ணீரை அடித்தன.

அருகிலிருந்த நீர்த் திட்டையிலிருந்த இரண்டு கொக்குகளும் எம்பி பறந்து வட்டமிட்டு இறக்கையை அடிக்காமல் தண்ணீரில் இறங்கி நின்றன. பெரியவர் வலையை சுருக்கி இழுத்து கரைக்கு கொண்டு வந்து வலையை உதறி மீன்களை பொறுக்கினார். சின்னச் சின்ன கென்டை மீன்கள், சிலேபி மீன்கள் இருந்தது. அவர் பொறுக்காத பொடி மீன்களை  காக்காய்கள் சத்தமிட்டு கொத்திக் கொண்டு சென்றன.

மறுநாள் கார்த்தி பள்ளி விட்டு வரும்போது பாலத்தின் மேல் வந்து நின்று கீழே குனிந்து தண்ணிரை நோக்கிக் கொண்டு இருந்தான், நீர் சிறிது பாசி பிடித்து கலங்கலாக ஒரு பாசி நிறமாக தெரிந்தது. மீன் ஒன்றும் காணாமல் தலையை திருப்பும்போது ஒரு அசைவை கண்டான்.

திரும்பவும் நிதானமாக தண்ணீரைப் பார்த்தான். அப்போது பாலத்தின் அடிக்கட்டையில் இருந்த பத்திருப்பில் விரால் படுத்து இருந்தது தெரிந்தது.

கார்த்திக்கு என்னவோ போல் இருந்தது. மகிழ்ச்சியாகவும் அந்த மீனாக இருக்குமா இல்லை இது வேறா ஏன் மீனாட்டத்திற்க்கு வரவில்லை என்று சந்தேகமாகவும்.

திரும்பத் திரும்ப பழைய மாதிரி தலையை நீட்டிப் பார்ப்பதும் உள்ளிழுப்பதுமாக செய்தான். நிழல்கூட முன்பு போல் விழுவது மாதிரி தான் தெரிந்தது அவனுக்கு. ஆனால் விரால் மீன் முன்பு போல் மேலே வரவில்லை. மீன்கூட சற்று பெரியதாக தெரிந்தது. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாளைக்கு பார்க்கலாம் என வந்து விட்டான்.

அப்போது ஆண்டுத் தேர்வு வேறு நடந்து கொண்டு இருந்தது. ஆனால் தினமும் வரும்போது பார்க்கத் தவறவில்லை. மீன் சட்டென்று பார்த்தால் தெரியாது. உத்துப் பார்த்தால்தான் தெரியும். சிறிதாக எச்சி துப்புவது, சின்ன குப்பைகளை போடுவது என்று அவனது முயற்சி இருக்கும். மீனிடமிருந்து எந்த அசைவும் இருக்காது. ஏமாற்றமாக இருந்தாலும் தினமும் பார்த்து உறுதி செய்து கொண்டான்.

அன்று கடைசி தேர்வு எழுதிவிட்டு வரும்போது முயற்சித்தான். மீன் ஒன்றும் சட்டை செய்யவில்லை.

அம்மா வேலை சொல்லும்போது வரும் எரிச்சல் அப்போது அவனுக்கு வந்து கல்லால் அடிக்கலாமா என சுற்றுமுற்றும் பார்த்தான். கல் ஒன்றும் இல்லை.

தூரத்தில் பெரியவர் வலையை வீசி சுருட்டி வாரிக்கொண்டு இருந்தார். சின்ன மதுவில் மோட்டு தெரு முருகன் மீன் பிடித்து கொண்டு இருந்தான். கார்த்தியை விட முருகன் நாலு வயது சின்னவன்.

சரசர என பாலத்தின் சரிவில் இறங்கினான். நரவலாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கி காலைப் பார்த்து வைத்துக் கொண்டு மீன் பிடிப்பதை பார்க்க கார்த்தி முருகனிடம் வந்தான். மீன் ஒன்றும் கொத்தவில்லை. கார்த்திக்கு அப்போது திடீரென அந்த யோசனை வந்தது.

“முருகா உனக்கு விரால் மீனு வேனுமா? “

“எங்கண்ண இருக்கு?”

“வா புடிக்கலாம். முருகா நீ போயி நாக்குபூச்சிய கொட்டிட்டு தா பாரு காலவாயிக்கு போற வழியில பெரியவர் வலையில விழற பொடி சிலேபி குஞ்ச தண்ணிபுடிச்சு டப்பால போட்டு எடுத்துட்டு ஓடியா சீக்கிரம்“

“தூண்டிலை நீ எடுத்துட்டு வர்ரியாண்ண?”

“இல்லடா முருகா, நீ எடுத்துட்டு வா. வீட்டுல யாராவது பார்த்துட்டா பிரச்சினையாயிடும்”

“சரிண்ண”

முருகன் தகர டப்பியில் இருந்த நாக்குப்பூச்சியை கொட்டிவிட்டு சிறிது தண்ணீரை மொண்டுக் கொண்டு பெரியவரிடம் சென்று அவர் வலையை கரைக்கு கொண்டு வரும்வரை காத்திருந்து மீனைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பாலத்தின் மேல் வந்தான்.

கார்த்தி குனிந்து விரால் மீன் படுத்திருப்பதைக் காட்டி தூண்டிலில் மீன் குஞ்சை மாட்டி கொடுக்கச் சொன்னான்.

முருகன் தூண்டில் முள்ளில் சின்ன சிலேபி குஞ்சை மாட்டி அதன் தலையில் எச்சிலைத் துப்பி, “போடுண,” என்றான்.

கார்த்தி தூண்டிலைத் தண்ணீரில் வீசியதும் மீன் குஞ்சு தூண்டிலில் தண்ணீர் மேலே நீந்தி கொண்டு விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு வராமல் இழுத்துக் கொண்டு சென்றது. தூண்டிலில் இருந்த தக்கை காற்று வாட்டத்திற்கு மீன் குஞ்சை இழுத்து சென்றது.

கார்த்தி மீன் குஞ்சை விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு நேர் சிரமப்பட்டு கொண்டு வரவும் படுத்து இருந்த விரால் மீன் மேலே வாலை ஆட்டி கொண்டு வரும்போதே கார்த்திக்கு புரிந்து விட்டது. அந்த மீன்தான் என்று!

விரால் மீன் குஞ்சை லபக்கென்று கவ்விக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது.

கார்த்தி என்ன செய்வது என திகைத்து நிற்க முருகன், “இங்கே குடுண்ண, உனக்கு புடிக்க தெரியல,” என்று தூண்டிலை வாங்கி விராலை ஒரே இழுப்பில் மேலே தூக்கி, “முள்ள முழுங்கிடுச்சு! வூட்டுல போயி கழட்டிக்கறேன்,” என்று ஓட ஆரம்பித்தான்.

விரால் மீன் தூண்டியின் முள்ளில் மாட்டி துடித்து கொண்டு இருந்தது.

லேடி- ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

என் சிறு வயதில் எங்கள் வீட்டில் சௌடம்மா என்று  ஒரு பாட்டி வேலை செய்து வந்தார். எங்கள்  அம்மாவிடம் நாங்கள் பேச முடியாதபடியெல்லாம் பேச அவருக்கு உரிமை உண்டு. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பார்த்தால், சொந்த அம்மாவும் மகளுமே பேசிக்கொண்டு இருப்பது போலத் தோன்றும். சொல்லப்போனால், ஊரிலிருந்து அவ்வப்போது வரும் எங்கள் பாட்டியிடம் பேசுவதை விட இந்தப்  பாட்டியிடம் அம்மா இன்னும் மனம் திறந்து பேசுவதாகவே நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம். இது ஒரு புறம் ஆனால் அவ்வளவு நெருக்கமாக பழகி வந்தாலும், அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேச்சு வந்தால் அம்மாவிடம் அவ்வளவு நெகிழ்ச்சியைக் காண முடியாது. ஆமாமா வேணுங்கறது எல்லாத்தையும் இங்கதான் கேட்டு வாங்கிப்பா, விசுவாசத்தை மட்டும் இன்னொருத்தர் கிட்ட காட்டுவா, என்ற ரீதியில் முனகி கொள்வார். எங்களுக்குப் புரியாது. எப்போதும் அம்மாவுக்கு சௌடம்மா மீது அந்த சந்தேகம் இருந்தது. சௌடம்மாவுக்கும் ஒரு பழக்கம் இருந்தது. அம்மாவிடம் நேரடியாக எந்த பதிலும் சொல்ல மாட்டார். காபி நல்லா இருந்ததா, என்று கேட்ட்டால், அதுக்கென்ன குறைச்சல் என்கிற ரீதியில்தான் பதில் சொல்வார். கொடுக்கப்படும் உணவுப் பண்டங்களை, அவ்வளவு லட்சியம் செய்யாமலேயே வாங்கிக்  கொள்வார். இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத முள் ஒன்று இருப்பதும் புரியும். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு காட்டினார்களா? அல்லது அன்பு இருப்பது போல நடித்து ஒருவரை ஒருவர் வெறுத்தார்களா? எஜமானியம்மா- பணிப்பெண் அல்லது எஜமான்- பணியாள்  உறவில் இது ஒரு பொதுவான விஷயம் என்பதை நண்பர்களுடன் பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் இதன் முழுப் பரிமாணமும்  தாத்பரியமும், பின்னர் ஆதவனின் “லேடி” சிறுகதையைப் படிக்கும்போது  உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாப்பா என்கிற நடுத்தர வயதுத் தமிழ்ப்பெண் தில்லியில், பல வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்து வருபவர். அவரது ஒருநாள் வாழ்க்கையே இந்தக் கதை. இதில், அவர் ஒரு தமிழ் வீட்டில் வேலை செயது வருகிறார். இயல்பாகவே மற்ற  ஹிந்தி மொழிக்காரர்கள் வீட்டுப் பெண்மணிகளை விட இந்தத் தமிழ் பெண்ணிடம் நெருக்கமும் உரையாடலும் அதிகம்.. ஆனால் தமிழ் பிராமணர்கள் குடும்பங்களில் வீட்டு வேலையாட்களுக்கு இருக்கக் கூடிய எல்லைகள் அங்கும் உண்டு. வீட்டில் சில இடங்களுக்கு போகக் கூடாது, சில பாத்திரங்களைத் தொடக் கூடாது என்றெல்லாம். இந்த மாதிரி குறைகளெல்லாமே பாப்பா பொறுத்துக் கொள்கிறார். வளர்ந்து வரும், படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்காக. வரும் வாரத்தில், அவளது மகனுக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதற்கு, பரிசாக ஒரு சட்டை வாங்கித் தருவதாக வாக்களித்த அந்த வீட்டுப் பெண்ணிடம், அது வேண்டாம், மகன் சாப்பிட ஒரு நல்ல தட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள், என்று கேட்டிருக்கிறார் பாப்பா. அவர்கள் அந்தப் பரிசு வாங்கித் தரும் நாள்தான் கதை நடக்கும் நாள்.

அன்று பரிசும் வருகிறது. மிகுந்த ஆவலுடன் அந்தத் தட்டினைப் பார்க்கும் பாப்பா கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார். அவர் எதிர்பார்த்திருந்த தட்டு அல்ல அது. வந்தது, பீங்கான் தட்டு..முகம் சுருங்க பாப்பா சொல்கிறார், “அய்ய இந்தத் தட்டு இல்லம்மா, இது வேணாம்.” “பின்ன எந்தத் தட்டுடி வேணும்?” என்று கேட்கிறார் வீட்டம்மா. “அத மாதிரி,” என்கிறார் பாப்பா. கைகள் அந்த வீட்டு அய்யமார்கள் சாப்பிடும் எவர்சில்வர் தட்டினைச் சுட்டிக்காட்ட, உடனே கோபமாக அந்த வீட்டம்மாள், “ஓஹோ, உனக்கு எவர்சில்வர் தட்டுதான் வேணுமாக்கும் இது வேணாமா?” என்று கேட்க, கண்டிப்பாக மறுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாப்பா. மறுக்கப்பட்ட அன்பினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார் அந்த வீட்டம்மா.

பொதுவாக மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையயும், மனக்குழப்பங்களையுமே அதிகம் எழுதியுள்ளவர் என்று அறியப்படும் ஆதவன், அதற்கு கீழே உள்ள வர்க்கத்தாரின் மனநிலையில் நின்று எழுதிய அரிதான சிறுகதை இது. எஜமானி- பணிப்பெண் உறவின் love – hate தன்மையை அற்புதமான உரையாடல்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பாப்பாவுக்கு அந்த வீட்டம்மாவால் காபி, சிற்றுண்டிகள், கொடுக்கப்படும் விதம், அந்த வீட்டில் பாப்பா திறந்து விடக்கூடாத கதவுகள், உள் நுழைந்து சுத்தம் செய்யக்கூடாத அறைகள் ஆகியவற்றின் மூலம் நுட்பமாக அந்த உறவின் சாதிய இடைவெளிகளையும், அது செயல்படும் விதத்தையும் வெகு இயல்பாக சித்தரித்திருக்கிறார். ஒரே சமயத்தில் அந்த வீட்டம்மா மீது பாப்பா கொண்டிருக்கும் ஒட்டுதலையும் விலகலையும், அவர்கள் வீட்டு வாழ்க்கை முறையின் மீதான ஆசையையும் விலக்கத்தையும், பாப்பாவின் மனவோட்டத்தின் மூலம் சித்தரிப்பது அருமை. திறக்கக்கூடாத அறையின் கதவிடுக்கு வழியாக தெரியும் ஒரு வெளுப்பு முதுகையும், எதிர்பாராமல் தன் மேல் மோதிவிடும் அந்த வீட்டுப் பிள்ளையின் உடல் தன் கணவனை நினைவூட்டுவதன் மூலமும் பாப்பாவின் மனதின் ஆழங்களை சித்தரித்திருக்கிறார்.

‘லேடி’, ஏழைகளின் தன்மானத்தையும், நடுத்தர வர்க்கத்தினரின் ஏழைகள் மீதான கரிசனத்தில் செயல்படும் ஒரு patronizing மற்றும் அதிலும் தென்படும் மேட்டிமை மனோபாவத்தையும்  ஒருசேரக் காட்டும் அபூர்வமான கதை. தலைப்பு  சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம். கதையின் இன்னொரு இழையாக, பாப்பாவின் மகன் மாரியின் சிநேகிதர்கள் குறித்த பாப்பாவின் கவலை, இறுதியில் மாரியின் பாண்ட் பாக்கெட்டில் அவர் கண்டுபிடிக்கும் சிகரெட் பாக்கெட் ஆகியவை, கதைக்கு இன்னொரு பரிமாணத்தை சேர்க்கின்றன.