இலைகள் விழுந்து சருகாவதிலும் சருகாகி காற்றில் வீழ்வதிலும் நியதிகள் எங்கும் மீறப்படாதபோது கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து சுடர் அடங்கி அணைந்தாலும் ஒற்றை விளக்கின் திரியிழுத்து இருளின் கருமையில் இணைந்தாலும் புலரியின் பொலிவு குறைபடாதபோது சொற்களின் குறைவில் பிறந்தாலும் மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் கவிகளின் வீச்சு கறைபடாதபோது அலை வீசி ஆர்ப்பரித்து கரை தாண்டி சென்றாலும் கால்தடவி கலம்தாங்கி கட்டுக்குள் நின்றாலும் ஆழியின் அற்புதம் புரிபடாதபோது அனைத்தும் ருசிக்க அனைத்தும் புரிய அனைத்திலும் இழுபட அனைத்திலும் இழிபட நான் காத்திருப்பதில் தவறென்ன?
Author: பதாகை
கண்ணாடி துடைப்பவன் – சிவேந்திரன்
– சிவேந்திரன் –
சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தாலும் அனலடிக்கத் தொடங்கியிருந்தது. முகமன்கூறி வெளிவரும்போது, “ஏன் நீங்கள் இந்தக் கோடையில் வந்தீர்கள்? சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த காலம் ஒக்டோபரில் இருந்து மார்ச் வரைத்தான்”, என்றாள் ஹோட்டல் வரவேற்பறைஃபிலிப்பினோப் பெண். ஜூன் மாதம் பாலை நிலத்தில் பயணம் செய்வதற்கு உகந்ததல்ல. ஆனால் அதற்கு அடுத்துவரும் மாதங்கள் இதைவிட மோசமானவை. இந்த மாதத்தில்தான் எனக்கு விடுமுறை எடுக்கமுடியும். நான் சிரித்துக்கொண்டே, கோடைகாலத்தைத் தாங்கிவிடலாம், ஆனால் குளிர்காலத்தில் உங்கள் ஹோட்டல் கட்டணத்தைத் தாங்கமுடியாதே, என்றேன்.அவள் சிறிது தடுமாறி, குட் ஜோக், என்றாள். நான் பிரதான வாயிற்கதவை அடைய, குட் மோர்னிங்க், என்றவாறு கதவைத் திறந்துவிட்டான் ஆபிரிக்கக் காவலாளி.
வெளியில் வெய்யில் அலையலையாக படர்ந்திருந்தது. செல்லவேண்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. ஒரு இருபது நிமிட நடை. டாக்ஸிக்காக நின்று ஏறுவதற்குப் பொறுமை இல்லை. வெய்யிலை பொருட்படுத்தாமல் ஆட்கள் அங்கும் இங்குமாக விரைந்துகொண்டிருந்தார்கள். பல்வேறு நிறத்தவர்கள். அதிகம் இந்தியர்கள். இவர்கள் திமோரின் கடற்கரைகளிலுள்ள ஸ்ட்ராபெரி ஹெர்மிட் நண்டுகள் இறந்த கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளில் வாழ்வது போன்று அந்நிய தேசங்களில் வாழ்கிறார்கள் என்று தோன்றியது.
பாரசீக வளைகுடாவில் இருந்து உள்ளோடி வந்து காயல் தளும்பிக் கொண்டிருந்தது. இந்த வெயிலில் தண்ணீரை பார்ப்பதே மனதுக்கு குளிர்மையை வரவழைத்தது. நடந்து வந்த களைப்புக்கு, கடல் நீர் ஏரியை நோக்கியவாறு போடப்பட்டிருந்த நிழல்குடைகளுடனான நீண்ட மர இருக்கைகள் அருமையாக இருந்தன.இக்கரைச் சிறிய துறைக்கும் அக்கரைச் சிறிய துறைக்குமாக, முனைவுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றைத்தூண்களில் கூரையைக் கொண்ட படகுகள் மிதமான வேகத்தில் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தன. படகில் வெய்யில் விழும் பக்கமாக அமர்ந்திருந்தவர்கள் மட்டைகளாலோ வெறும் கைகளாலோ தலையை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். கால்கள் வைக்கும் இடம் சுற்றிவர படகின் விளிம்பில் இருந்து சிறிதே பதிந்திருந்தது. அமர்வதற்காக நடுவில் ஒரு சாண் உயரத்தில் மேடை. அமர்ந்திருந்தவர்கள் தலைகீழாகக் கவிழ்த்த ‘வீ ‘ எழுத்தாக முழங்கால்களை உச்சியாகக் கொண்டு மடித்திருந்தனர். மேடையில் நடுவில் பெட்டிவடிவமாக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் நின்றுகொண்டு படகோட்டி அதைச் செலுத்திக்கொண்டிருந்தான். மறுகரையில் சில பெரிய சரக்குக் கப்பல்கள் கரையுடன் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. சரக்குகள் ஏற்றிய கப்பல் ஒன்று காயலிலிருந்து வளைகுடாக் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் மேற்புறத்தில் சரக்குகள் பாலித்தீன் போன்ற பெரிய கூடாரத் துணியொன்றால் மூடிக் கட்டப்படிருந்தன.
நான் இருந்த மர இருக்கையில்கூட மெதுவாக சூடு ஏறுவதை உணரமுடிந்தது. அணிந்திருந்த அரைக் கை சட்டையின் முன் பொக்கட்டைத் தடவிப் பார்த்தேன். அந்த ஒரு திர்ஹாம் நாணயம் கிடந்தது. அதன் ஒரு புறத்தில் ஒன்று என்ற இலக்கம் அரபியில் பொருக்காக உயர்ந்திருந்தது. மறுபக்கம் தேநீர் கேத்தல் போன்று சற்று நீண்ட வடிவம். அலாவுதீனின் அற்புதவிளக்காக இருக்கவேண்டும். பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் அதைத் தடவி துணியைத் தாண்டி உணர்ந்து கொண்டிருந்தேன்.வெளியில் எடுத்து தன்னிச்சையாக மேலே சுண்டி மீண்டும் பிடித்துக்கொண்டேன்.
இந்தச் சூட்டிலும் இவ்விடத்துக்கு வந்ததற்குக் காரணம் இன்றும் அவன் இவ்விடத்துக்கு வருவான் என்று நம்புவதால்தான். நேற்றைய மிகுதி வேலை இருக்கக்கூடும்.அவனைச் சந்திக்காமல் சென்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளாத பதிலொன்றோ அல்லது பதிலளிக்கப்படாத கேள்வியொன்றோ மனதில் கொழுவி இழுபட்டுக்கொண்டு இருக்கக்கூடும்.
நான் சிப்பிரியானோ அல்விஸ் அமரல்.தாய்லாந்துக்கான கிழக்குத் திமோர் தூதரகத்தின் பொறுப்புநிலை அதிகாரி. அப்படியென்றால் தூதர் இல்லாதவிடத்து அவரின் கடமைகளையாற்ற வேண்டிய நிலையில் இருப்பவன். விடுமுறைக்காலத்தின் சிலநாட்களுக்கு தனிப்பட்ட சுற்றுலாவாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறேன். மீதி விடுமுறையை கிழக்கு திமோரில் சொந்த ஊரில் கழிப்பதென்று திட்டம். இந்தப் பாலைவன தேசம் தன்னை எப்படிக் கட்டியெழுப்பி இருக்கின்றது என்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. செல்வச் செழிப்பின் பிரமாண்டமான, நவீன கட்டிடக்கலையில் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கட்டிடங்களும், செயற்கையான பொழுதுபோக்கு அம்சங்களும் சமாதானத்தினதும், அரசியல் உறுதிப்பாட்டினதும் காரணமான சர்வதேச வர்த்தகத்தின் விளைவுகள். செயற்கையின் அத்தனை பிரமிப்பையும் தாண்டி எனக்கு மிகவும் பிடித்தது இந்தக் காயல்தான். பண்டைக்காலத்தில் மீன்பிடித்தலுக்கும், முத்துக்குளித்தலுக்கும், பிற நாட்டு வர்த்தகத்துக்கும் களமமைத்த மேடை இது என்று சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு கூறுகிறது. இந்த நாட்டின் ஆத்மா என்றே கூறவேண்டும். இதன் இருகரைகளிலும் இருந்துதான் இந்த நாடு உருவாகி உட்பரம்பியது.
இங்கு வந்த நாளில் இருந்து காலைப் பொழுதில் இதன் கரைகளில் நடந்து செல்வதும், சற்று அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் விருப்பமாகிவிட்டிருந்தது. அப்படித்தான் அவன் நேற்று என் கண்ணில் பட்டான். கடும் பச்சைநிற நீளக்காற்சட்டையும் அதே நிறத்திலான மேற்சட்டையும் அணிந்திருந்தான். அதன் முதுகுப்பக்கமாக டொப் கிளினிங்க் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இடுப்புப்பட்டியில் முன்னாலும் பின்னாலும் தனித்தனியாக இரு பைகள் தொங்கின. வலதுபுறத்தில் வாள் உறைபோன்ற சற்று பெரிய கூம்புவடிவிலான தொட்டி தொங்கிக்கொண்டு இருந்தது. கையில் கூடைபோன்ற, செவ்வகவடிவிலான வாயைக்கொண்ட நீலநிறத்திலான தொட்டி. அதன் அரைப் பங்குக்கு மேலாக வெண்ணிறமாக நுரைத்துக் கொண்டிருந்த திரவம் நிரம்பியிருந்தது. மறுகையில் ‘டி’ வடிவிலான நீண்ட துடைப்பான் போன்றவொன்று.
நீலநிற பிளாஸ்டிக் தொட்டியை நிலத்தில் வைத்த பின்னர் அந்த ‘டி’ வடிவிலான கருவியை சுவரில் சாத்திவிட்டு அதன் கண்ணாடியை விரலால் தொட்டுப் பார்த்தான். கண்ணாடி தூசு படிந்து ஒளி புகவிடாத பனிக்கட்டிபோன்று தென்பட்டது. சுட்டுவிரலால் அதில் நிமிர்ந்த நிலையிலான முட்டைபோன்ற உருவைக் கீறியவன் அதன் இடது மேற்பக்கத்தில் இருந்து வலது கீழ்ப் பக்கம்வரை மூலைவிட்டம்போன்று கோடு இழுத்தான். சிறிது உற்றுப்பார்த்தவன் ‘டி’ வடிவக் கருவியை எடுத்து தொட்டியின் நுரைத்திரவத்தை நனைத்தெடுத்தான். வேகமாக மேலிருந்து கீழாக கண்ணாடியில் பூசத்தொடங்கினான். சீமெந்து விளிம்புகளில் சற்று உள் தள்ளியிருந்த செவ்வகவடிவ நீண்ட கண்ணாடிகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக பூசிக்கொண்டே சென்றான். பின்னர் முதலில் பூசிய கண்ணாடிக்கே வந்து இடுப்பில் கட்டியிருந்த கூம்புக்கூட்டிலிருந்து வழிப்பானை எடுத்தான். மேற்புறத்திலிருந்து வானவில் போன்று இடமிருந்து வலமாக வழித்தெடுக்கத் தொடங்கினான். இவ்வாறே அடிக்கண்ணாடிவரை வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக என்று துரிதமாக வானவில் வழிப்பை செய்துகொண்டான். எஞ்சிய நீர் கண்ணாடியில் கீழ்விளிம்பால் வழிந்துகொண்டது. கூம்புக்கூட்டில் முதல் வழிப்பானை வைத்துவிட்டு அதில் இருந்து சிறிய வழிப்பானை எடுத்து கீழ்விளிம்பில் தேங்கிய நீரை இழுத்துப் வெளியில் விட்டான். இடுப்புப் பட்டியில் பின்னால் தொங்கும் துணியை எடுத்து கண்ணாடியைத் துடைத்த பின்னர் அதை முன்னாலுள்ள பையில் போட்டுக்கொண்டான். இதையே வரிசையாக செய்துகொண்டு நகர்ந்தான். கட்டிடத்தின் பக்கவாட்டில் அவனைப்போன்றே சீருடை அணிந்த மேலும் இருவர் கண்ணாடியைத் துடைக்கும் வேலையில் இருந்தனர்.
நான் சற்று நகர்ந்து சென்று அருகில் உள்ள மர இருக்கையில் அமர்ந்து அவர்களின் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வெயில் உருக்கி ஊற்றத் தொடங்கிவிட்டது. 40°C இற்கு அதிகமாக இருக்கலாம். அவர்களின் உடைகள் வியர்வையில் தோய்ந்து உடலுடன் அங்கும் இங்குமாக ஒட்டிய இடங்கள் கருநிறமாகக் காட்சியளித்தன. அந்த இளைஞன் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றி உதறினான். எனது அடிவயிற்றிலிருந்து இனப்புரியாத புகை எழுந்து மூச்சைத் திணறடித்தது போன்று தடுமாறினேன். இருக்கையின் மரச்சட்டத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். அந்த மேலாடையை மடித்து பையில் வைத்தவன் உள்ளிருந்து வேகமாக டி சேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு நான் இருந்த இருக்கையை நோக்கி வந்தான்.
அவன் எனக்கு காற்றில் வீசப்படும் சவுக்கை நினைவூட்டினான். உடற்கட்டுமானப் பயிற்சியால் கட்டியெழுப்பப்பட்டது போன்றதாக அல்லாமல் அவனின் உடல் குறுந்தூர ஓட்டவீரனுக்குரிய ஒடுங்கி இறுகியதாக இருந்தது. அவன் வலிமையில் நிற்கும் யானையல்ல, வேகத்தினை உடலாகக் கொண்ட சிறுத்தை போன்றவன் என்று எண்ணிக்கொண்டேன். சிறு புன்னகையுடன் அவனை எதிர்கொண்டேன். கடுமையான வெய்யில், 40°C இருக்கக்கூடும் என்று அவனுக்கு ஆங்கிலம் புரியுமோ என்ற தயக்கத்துடன் கூறினேன். இல்லை;45°C இருக்கும் என்று ஆங்கிலம் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இன்றி சாதாரணமாகக் கூறினான். அருகில் அமர்ந்த அவனுடன் பேசுவதற்கு விரும்பினேன். அவனும் பேசுவதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். மெதுவாகத் தொடங்கிய உரையாடல் ஏதோ ஒரு கட்டத்தில் சுழன்று என்னைப் பற்றியதாக மெலெழுந்தது. அவன் கண்கள் விரிய ஒருவிதமான ஈர்ப்புடன் எனது கதையைக் கேட்டது என்னை உற்சாகத்துடன் மேலும் மேலும் பேசத்தூண்டியது.
தொண்ணூறொன்றாம் ஆண்டு மே மாதம் ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு திமோரின் தலைநகருக்குத் திரும்பியபோது மீண்டும் சில காலத்தின் பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவிடுவேன் என்றே நினைத்திருந்தேன். அப்பொழுது நான் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன். பதினெட்டு வயது நிரம்பி பத்தொன்பது வயதில் இருந்தேன். திலியில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தலைமறைவு இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இயக்கம் மலைப்பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்தது.அதற்குப் புறம்பாக மாணவர்கள், இளைஞர்களை கொண்ட நெகிழ்வான கட்டமைப்புடனான இரகசிய இயக்கம் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் குடிசார் எதிராட்டத்தை இந்தோனேசிய அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக நடத்திக்கொண்டிருந்தது.
உலகிலேயே இந்தோனேசியாவைப் போன்ற பன்மைத்துவ நாடு இல்லை. மற்றைய நாடுகள் மக்களால் மட்டுமே பன்மைத்துவமுடையவை நிலத்தால் பெருமளவுக்கு இணைக்கப்பட்டவை. இந்தோனேசியா மக்கள் தொகையால் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்காண தீவுகளாலான தேசம் என்பதால் பூகோளத்தாலும் பன்மைத்துவமுடையது. ஆனால் அதனுடன் இணையவிரும்பாத எம் கிழக்குத் திமோர் தேசத்தை படைவலுவால் கைப்பற்றிக்கொண்டமை பன்மைத்துவம் என்பதையே கேலிக்குரியதாக்கிவிட்டது. கூட்டாட்சியின் அதிகாரத்தின் கீழல்லாமல் சுதந்திரமாகவும் சிறு தேசங்கள் இருக்கமுடியும் என்பதும் பன்மைத்துவம்தான்.
இந்தோனேசியா எமது நாட்டில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கையை கையளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான போத்துக்கேய நாட்டுப் பிரதிநிதிகளையும் ஊடகவியலாளர்களையும்கொண்ட குழுவொன்று வருகைதர இருந்தது. இது வரலாற்றில் முக்கியமான தருணம் என்பதால் எனது நாட்டில் இருந்தேயாக வேண்டும் என்று ஜகார்த்தாவில் இருந்து திலிக்குத் திரும்பினேன். மக்கள் மத்தியில் குழுவின் வருகை தொடர்பான செய்திகள் பெரும் உற்சாகக் கொந்தளிப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தன. எந்தவிடத்திலும் மக்கள் சந்தித்தால் முதலில் இதைப்பற்றியே பேசிக்கொண்டார்கள். போத்துக்கல் குழுவின் வருகையின்போது கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும். அதனால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவிட வேண்டும் என்று தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டோம். அதேவேளை கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் மாகாணம் என்றும் அதற்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை கிழக்குத் திமோரியர்களைக் கொண்டே நடத்துவதற்கும் அரசு தீர்மானித்து செயற்பட்டது.
அரசின் ஆர்ப்பாட்டத்துக்கான ஆட்சேர்ப்புகளில் கிழக்குத் திமோர் ஆதரவாளர்களும் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் அதை அப்படியே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றிவிடுவது அவர்களின் திட்டம். அதேவேளை இராணுவமும் உளவாளிகளும் திமோர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். முன்னர் பாப்பரசர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தமையால் இந்தக் குழுவின் வருகையின் போது இடம்பெறலாம் என்று இராணுவம் சந்தேகித்தது. அவ்வாறு எதிராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியவாறு இருந்தனர்.சில இடங்களில் இராணுவம் பகிரங்கமாக பாரிய புதைகுழிகளைக் கிண்டியது. அதன் செய்தி தெளிவானது.
கதையை நிறுத்தி சற்று இடைவெளிவிட்டு அமைதியாக அவனைப் பார்த்தேன். அவனின் முகத்தில் இருந்த, சிக்கித் தெரிந்த உணர்வுகளை வேறுபிரித்துக் கொள்ளமுடியவில்லை.
சற்று நேரத்தில், பிறகு?, என்றான் அவன்
தடியொன்றின் இருமுனைகளிலும் தென்னோலைகளால் மீன்களைக் கட்டித்தொங்கவிட்டு, தோளில் சுமந்து செல்லும் மீன் வியாபாரியைப் பின்தொடர்ந்து செல்லும் பூனைகளைப் போன்று இளைஞர்கள்,மாணவர்கள் பின்னால் கிழக்குத் திமோரிகளை உள்ளடக்கிய இராணுவ உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமான பலரும் கைது செய்யப்பட்டனர். எனது வீட்டுக்கும் வந்து தேடிவிட்டு சென்றனர். அப்பொழுது வெளியில் சென்றிருந்தேன். தகவல் எட்டியதால் திரும்பிச் செல்லாமல் நண்பன் வீட்டில் தங்கிவிட்டேன்.
நாட்கள் நெருங்க நெருங்க தேடுதல்களும் கைதுகளும் தீவிரமடைந்தன. எதிர்ப்பை உலகறியச் செய்யவேண்டும் என்ற வெறி கூடிக்கொண்டே வந்தது. தேவாலயங்கள் தேடுதலுக்குள்ளாகும் சந்தர்ப்பம் அரிதாக இருந்ததால் மோடெயல் தேவாலயத்தில் குழுவொன்று தங்கியிருந்து பணிகளில் ஈடுபடுவது நல்லதென்று முடிவெடுத்தோம். மோடெயல் தேவாலயம் என்படும் திலியின் புனித அந்தோனியார் தேவாலயம் கடலை நோக்கியவாறு வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றிருந்தது. மறுபுறம் தொலைவில் தெரிந்த மலைகள் அந்தத் தேவாலயத்தின் வரலாற்றுக்கும்கூட சாட்சியாக அமைதியாக ஓய்ந்திருந்தன. நெடிந்து நீண்ட பிரார்த்தனை நடுக்கூடம். பிரதான வாயிலுக்கு முன்புறமாக சற்றுப்பதிந்து இறங்கிய தாழ்வாரம். அதில் தாமரை இதழின் மேற்பாதிபோன்ற, இருபுறமாக மேல்வளைந்து உச்சிகொண்ட நான்கு நுழைவாயில்கள். தேவாலயத்தின் முன் இடது மூலையில் சுவருடன் ஒட்டி, நீண்டு உயர்ந்த மணிக்கூட்டுக் கோபுரம். அதன் உச்சியிலும் முன்பக்க நுழைவாயில்கள் போன்று தாமரை இதழின் மேற்பாதிபோன்ற இடைவெளிகளால் முழுமையாக வெளித்தெரியும்படி மணி கட்டப்பட்டிருந்தது. தேவாலயத்தின் இருமருங்கிலும் முன்புறம் போலவே தாழ்வாரங்கள் சுவரின் உச்சியில் இருந்து சற்றுக் கீழே ஆரம்பித்து சரிந்து நீண்டிருந்தன. ஆனால் அவை திறந்தவாறு அமையாமல் மூன்று புறமும் சுவரெழுப்பி கதவிடப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. நான்காம் பக்கம் சுவரற்று, நடுக்கூடத்தின் வெளியுடன் தனது வெளியை இணைத்தவாறு இருந்தது.
தேவாலயம் என்றால் அதன் கட்டிடமல்ல அதன் ஓங்கி உயர்ந்த உட்புறவெளிதான். பலமுறை சென்றிருந்தாலும் அந்த உட்புறம் பாதுகாப்புணர்வையும், பதட்டத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்துவதை தவிர்க்கவே முடிவதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்மனதில் படிந்த குகை வாழ்க்கை நினைவுகள் தூண்டுவதால் அந்தப் பாதுகாப்புணர்வு வருகின்றது என்று எண்ணிக்கொள்வதுண்டு. பதட்டத்துக்கான காரணத்தைத்தான் புரிந்துகொள்ளமுடிவதில்லை. மனிதனின் தேவைக்கு மிக அதிகமான, மேலதிக வெளி அளிக்கும் அசௌகரியமாக அது இருக்கக்கூடும்.
காலை மாலை இருநேரமும் ஆராதனைகள் நடைபெறுமாயினும் மாலையிலேயே கூட்டம் நெருக்கும். அந்தோனியாரை வேண்டிக் கொள்வதுடன் சூரியன் வீழ்ந்து மறைவதை ரசித்தபடி கடற்கரையோரமாக சிறுநடை செல்வதற்காக அதிக கூட்டம் வருகின்றது. ஆராதனை முடிந்து கூட்டம் கலைந்த பின்னர் இரவு முழுவதும் தேவாலயம் எமது கைக்குள் இருக்கும். தாழிட்டுவிட்டு உட்புறமாக தேவாலய மின் குழல் விளக்குகளை நிறுத்திவிடுவோம். நான்கைந்து பேராக குழுக்களாக வட்டவடிவில் அமர்ந்து இரவிரவாக பதாதைகள் வரைவது, படங்கள் வரைவது, கொடிகள் செய்வதென்று பணிகள் நீளும். நடுவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கும்.
போத்துக்கேய குழுவின் வருகை நாள் அண்மிக்க அண்மிக்க, நாடெங்கிலும் எதிர்பார்ப்புடனான பதட்டமும், பயமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. மக்களின் பேச்சுகள், தொடர்புகள், நடவடிக்கைகளில் எல்லாம் உளஎழுச்சியும் எச்சரிக்கை உணர்வும் நிறைந்திருந்தன. காற்றில்கூட அவை பரவித் ததும்புவதுபோன்று இருந்தது. ஒவ்வொருவரும் அதைப் பற்றிய உணர்வே இன்றி இயல்பாக இருப்பதாக இராணுவத்தினருக்கும், உளவாளிகளுக்கும் காட்டுவதற்கு முற்பட்டுத் தோற்றுக்கொண்டிருந்தனர். மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்படும், காணாமல்போகும் தகவல்களை நாளாந்தம் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம் .தம்மைமீறி எதுவும் நடைபெறக்கூடாது என்பதில் அவர்கள் வெறியுடனிருந்தார்கள்.
தேவாலயத்தில் நாங்கள் எச்சரிக்கையாகவே செயற்பட்டோம்.அப்படியிருந்தும் வெளியே சென்று திரும்பிய சிலர் இந்தோனேசிய உளவாளிகளின் கண்களில் பட்டுவிட்டார்கள்.வழிபாட்டுக்குச் செல்வதாக கூறிவிட அவர்களும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.இந்த நிகழ்வு ஆலயத்தினுள் ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. உளவாளிகள் பெரிதுபடுத்தாமல் சென்றதாலும், திடீரென்று வேறு இடத்துக்கு அனைத்தையும் மாற்றுவது சாத்தியமில்லை என்பதாலும் பணிகளைத் தொடர்ந்து செய்தோம்.
பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற சில பத்திரிகையாளர்களின் வருகையை இந்தோனேசிய அரசு எதிர்த்தமையால் போத்துக்கல் குழு வருகையை நிறுத்திவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை. மெதுமெதுவாக மறைவான இடங்களுக்கு பதாகைகளையும், கொடிகளையும் கொண்டுபோய் சேர்த்த பின்னர் நாங்களும் இடம் மாறிக்கொள்ளலாம் என்று நினைத்தோம். தொண்ணூற்றொராம் ஆண்டு ஒக்டோபர் இருபத்தெட்டாம் நாளை எதை மறந்தாலும் என்னால் மறக்கமுடியாது. நள்ளிரவு தாண்டி ஒரு மணி இருக்கும்.தூரத்தில் நாய்களின் ஊளை எழுந்தது. அதைத் தொடர்ந்து நாய்களின் ஊளைகள் கிறிஸ்மஸுக்குக் கொழுத்தும் சரவெடி போன்று ஒன்றன்பின் ஒன்றாக நெருங்கி வந்தன. காற்று தேவாலய வளாகத்தை பல்வேறு அளவிலான ஊளை ஒலிகளைக் கொண்டுவந்து நிரப்பியது. என்ன நடக்கின்றது என்ற பதட்டத்து எழுந்து நின்ற எங்களை ஒவ்வொரு பக்கமாக ஊன்றப்பட்டிருந்த மெழுகுதிரிகள் பல்வேறு திசைகளில் நிழல்களாக விழுத்தின. சில அடர்ந்தியானவை, சில மற்றைய ஒளியில் மங்கியவை. ஒன்றுடன் ஒன்று கலந்தும், பிரிந்தும்,குறுக்குவெட்டியும் அசைந்த நூற்றுக்கணக்கான நிழல்கள் நாய்களின் ஊளைச் சத்தத்துக்கு ஏற்ப நடனமிடுவது போன்றிருந்தன. வெளியில் ட்ரக் வண்டிகளின் இயந்தி ரஇழுவிசை ஓசைகள் கேட்டன. தேவாலயத்தின் உட்புறவெளி அச்சமாக மாறி அனைவர் மீதும் அழுத்தியது.
நானும் சிலரும் தேவாலயத்தின் தாழ்வாரம் மறைத்தபடி இருந்த பின்பகுதியின் பக்கவாட்டுக் கதவை திறந்து மெதுவாக வெளியில் வந்தோம். காற்று சுழன்றவாறு உள்நுழைந்து மெழுகுதிரிகளை அணைத்த வேளையில் ட்ரக் வண்டிகளின் ஓசை நின்று தடதடவென்று சப்பாத்துக்கால்கள் நிலத்தில் குதிக்கும் சப்தம் கேட்டது. கண நேர இடைவெளியில் தேவாலயக்கதவு உக்கிரத்துடன் தட்டப்படுவதும் அதைத் தொடர்ந்து கதவு உடைந்து திறபடும் சத்தமும், உள்ளிருந்தவர்களின் அபயக்குரல்களும் எழுந்தன. இந்தோனேசிய மொழியிலும், டெட்டும் மொழியிலுமான கூச்சல்களும், வாதாட்டங்களும், தள்ளுமுள்ளுகளும் கலந்து கேட்டது. அதைத் தொடர்ந்து வேட்டுச் சத்தங்களுடன், கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற அலறல் எழுந்தது. நான் பக்கவாட்டுச் சுவரில் உன்னி ஏறிக் கூரையில் குப்புறப்படுத்துக் கொண்டேன். கூரையில் படுத்திருப்பது புத்திசாலித்தனமானதல்ல. பக்கவாட்டில் தொலைவில் இருந்து பார்த்தால் கண்டுவிடக்கூடும். எந்த நேரமும் வெடி விழலாம் என்ற பதட்டத்தில் மூளையில் சிந்தனைகள் மங்கியோடின. இறங்கி ஓடினால் வெடி நிச்சயம். திடீரென்று கோயில் மணி ஒலிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்து மக்கள் கோயிலை நோக்கி வரும் சலசலப்புகள் கேட்டன. மக்கள் தேவாலயத்தைச் சூழ குழுமத் தொடங்கிவிட்டார்கள். கொலைகாரர்கள் என்று இராணுவத்தை திட்டுவதும்,கோயில் வளாகத்துக்குள் நுழைய முனையும் வாக்குவாதங்களும் தெளிவில்லாமல் இரைச்சலாகக் காதில் விழுந்தன.
சிறிது நேரத்தில் ஆயர் பெலோவின் குரல் கேட்டது. இராணுவத்தினருடன் வாதாடும் ஒலியும் அவர்கள் ஏதோ கூறுவதுமாக தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாத ஓசைகள். மக்கள் உள்ளே கூட்டமாக வளாகத்துக்கு நெருக்குப்பட்டு வேகமாக உள்வருவது தெரிந்தது. நான் மெதுவாக இறங்கி அவர்களுடன் கலந்தேன். தேவாலய முன்றலில், மின்விளக்கின் ஒளியில் இரு உடல்கள் கிடப்பது தெரிந்தது. பிரதான வாயிலில் இருந்து துடைப்பத்தால் பூசப்பட்ட தீந்தை போன்று விழுந்து கிடக்கும் உடல்கள் வரை இரத்தம் இழுபட்டிருந்தது. மண்ணில் தோய்ந்து ஒருபுறம் சரிந்திருந்த முகம்.நண்பன் செபஸ்டியாவ் கோமஸ். ஏசுவே… கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. சற்று தலையை உதறி மற்றையதை நோக்கினேன் வாயைப் பிளந்தபடி கிடந்த அது இராணுவ உளவாளி அஃபொன்ஸோ. அவன் உடலில் செருகப்பட்டிருந்த கத்தியின்பிடி மட்டும் வெளித்தெரிந்தது. மக்கள் கூட்டத்தை தள்ளியபடி இராணுவத்தினர் ஏனைய நண்பர்களை ட்ரக் வண்டிகளை நோக்கி இழுத்துச் சென்றார்கள். கூட்டத்தின் மத்தியில் நான் தலையைக் குனிந்துகொண்டு நின்றேன். செபஸ்டியாவ்வின் உடலின் அருகில் இராணுவ சப்பாத்தினால் உருவான பள்ளத்தில் வழிந்த இரத்தம் தேங்கிநின்றது. ஆயர் பெல்லோ அதில் குனிந்து எதையோ எடுத்தார். செபஸ்டியாவ் அணிந்திருந்த சிலுவையுடனான சங்கிலி. இரத்தம் அதில் இருந்து துளித்துக் கொண்டிருந்தது.
கலைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சென்று நண்பன் ஒருவனின் வீட்டில் அடைக்கலமானேன். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தேவாலயத்தில் இருந்து சிலர் தப்பியதை அறிந்து கொண்ட இராணுவம் தேடுதலை முடுக்கிவிட்டது. இரண்டு நாட்களுக்கு அதிகம் ஒரே இடத்தில் மறைந்திருக்காமல் இடம் மாறியபடியே இருந்தேன். இராணுவத்தினர் ஒருமுறை நான் தங்கியிருந்த வீட்டையும் தேடினர். வீட்டின் பின்புறமுள்ள கால்களை மடித்தவாறு ஒருவர் குந்தியிருக்ககூடிய கிடங்கில் நான் அப்பொழுது ஒளிந்திருந்தேன். அதன் மீது காற்று வருவதற்கான சிறு இடைவெளிவிட்டு மரப்பலகை இடப்பட்டு அதன் மேலாக மண்ணைப் பரப்பிப் பழைய பொருட்களை இட்டிருந்தனர். இராணுவத்தினர் பின்புறம் எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் வரலாம் என்று சந்தேகம் எழுந்ததால் இரவோடு இரவாக வேறு இடத்துக்கு மாறவேண்டியதாகிவிட்டது.
போத்துக்கேயக் குழுவின் வருகை நிறுத்தப்பட்டது மக்களின் உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது. மழை சற்று தூறியிருந்தாலும் நவம்பர் மாதத்தில் காற்றில் தூசுகள் அடங்கவில்லை. அந்தத் தூசுகள் போன்று விரக்தி ஒவ்வொருவர் மீதும் படிந்து கொண்டிருந்தது. செபஸ்டியாவ் கோமஸின் படுகொலை உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அதையும், எதிர்பார்ப்பு முறிந்த ஏமாற்றத்தையும் இராணுவத்தின் ஆயுதங்கள் மீதான பயம் சாம்பலாக மூடியிருந்தது. ஆயினும் நாம் மனம் தளரவில்லை. செயற்பாட்டாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து வேலை செய்து கொண்டிருந்ததால் தேவாலயக் கைதுகளுக்குப் பிறகும் தேக்கம் ஏற்படவில்லை. இதை எப்படி சாதகமாக மாற்றுவது என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தோம். எமது வழக்கப்படி இறப்பின் பின்னரான பதினாலாம் நாள் நினைவு வழிபாடு மேற்கொள்ளப்படும்.
செபஸ்தியா கோமஸின் நினைவுநாள் வழிபாட்டை இந்தோனேசிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றுவதற்குத் தீர்மானித்தோம் .ஃபலின்டில் விடுதலைப் போராட்டத் தலைமைக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. குடிசார் எதிராட்டத்துக்கான இரகசிய இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கத்தில் இருந்துவேறா க,சுயாதீனமாகச் செயற்பட்டாலும் முக்கிய நடவடிக்கைகளை அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் ஈடுபடுவதில்லை. விடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பில் அவர்களின் முதன்மை இடத்தை அங்கீகரித்தவர்களாகவே இருந்தோம். எந்தவித வன்முறையிலும் ஈடுபடாது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு ஃபலின்டிலிடம் இருந்து பதில் வந்தது. ஆயத்தப்பணிகள் தீவிரமடைந்தன. தங்குமிடங்களும் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பிரதிநிதி திலிக்கு வந்திருந்தமையால் அவர் இருந்த இடத்துக்கும் நினைவு நிகழ்வுடன் ஊர்வலமாகச் செல்வதற்கு திட்டமிடப்பட்டு நிகழ்வு ஒரு நாள் பின்தள்ளி வைக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாள் விடிவதற்கான பதட்டத்துடன் சரிந்து கிடந்தேன். மனதில் ஏதேதோ குழப்பங்கள். நள்ளிரவில் திடீரென்று இரகசிய செயற்பாட்டு நண்பன் ஒருவன் வந்தான். அவசரமாக ஓரிடத்துக்கு செல்லவேண்டும் வா என்று அழைத்துச் சென்றான். வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகளாலும் வளவுகளுக்குள்ளாலும் இராணுவத்தால் உடைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்றான். சுற்றிவர புதர்கள் அடர்ந்து கூரைகள் எதுவுமற்ற சுற்றுப்புறச்சுவர் மட்டும் எஞ்சி நின்றது. கதவுகள், சாளரங்களின் நிலைகள் கழற்றி எடுக்கப்பட்ட வெறும் சிமெந்துச் சுவர்கள்.உள்ளே நிலத்தில்கூட வெடிப்புகள் ஏற்பட்டு ஆங்காங்கே புதர்கள் எழுந்திருந்தன. கூரையுள்ள வீடு மனிதனுக்குத்தானே தேவை.
உள்அறை ஒன்றுக்கு சென்ற போது அதில் சிலர் துணியொன்றை விரித்து வட்டமாக அமர்ந்திருந்தனர். அருகில் கூடை ஒன்று கவிழ்க்கப்பட்டு இருந்தது. நெருங்கிச் சென்றபோது அவர்கள் இரகசிய செயற்பாட்டு நண்பர்கள் என்பது தெரிந்தது. ஒருவரை மட்டும் அடையாளம் தெரியவில்லை. நடுத்தர வயதுடையவர்; நெற்றி கால்வாசி தலை வரை மேலேறி விட்டிருந்தது.அதைச் சமப்படுத்தும் வெறியுடன் வளர்க்கப்பட்டு பின்புறமாக வாரி இழுத்த, சிக்கெடுக்கப்படாத முடி தோள்களில் புரண்டது. அதே போன்றே ஒழுங்காக்கப்படாத மீசை. யாரது என்ற பார்வையை நண்பனில் விட்டெறிந்தேன். ‘எல் செவின், எல் செவின்’ என்று தேவாலயத்தில் ஆராதனை நடைபெறும் போது பக்கத்தில் நிற்பவரிடம் அவசரமாக எதையாவது கூற நேர்வது போன்ற ஒருவித பதட்டத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்காமலே கூறினான்.
நான் உறக்கத்தில் கனவு காண்கிறேனா இல்லை உண்மையாகவே நாட்டுப் புறக்கதைகளின் வீரனைக் காண்கிறேனா என்று திகைப்பெழுந்தடங்கியது. எல் செவினைப் பற்றி எத்தனை கதைகள். ஒருமுறை எல் செவினை இந்தோனேசிய இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கியபோது புகையாக மாறி மெலெழுந்து சென்றதாகவும் மலையைக் கடந்து சென்று மறுபக்கம் மழையாகப் பெய்து மீண்டும் எல் செவினாக மாறியதாகவும் வியப்புடன் பேசிக்கொள்வர். காட்டில் கொடியாக மாறி மரத்தில் படர்ந்து உச்சி வரை சென்றிருந்ததாகவும் இராணுவம் அதைக் கவனிக்காமல் கடந்துவிட்டதாகவும், இன்னுமொரு முறை பச்சைப் புறாவாக மாறிப் பறந்து சென்றதாகவும் இப்படிப் பல கதைகள்.
உங்களுக்காக இன்று எத்தனையோ அபாயங்களைத் தாண்டி வந்துள்ளேன். உடனடியாக செய்து முடித்துக் கிளம்பவேண்டும் என்று மெல்லிய புன்னகையுடன் அவரின் மீசை அசைந்தது. மற்றவர்களுடன் நானும் அரைவட்டமாக அமர்ந்தோம். நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் ஃபலின்டில் என்று எழுதப்பட்டிருந்தது அதன் மேற்புற விளிப்பின் மையத்தில் மரத்தாலான சிலுவை கிடையாக வைக்கப்பட்டிருந்தது.
எல் செவின் எழுந்து கூடையைத் தூக்கி கழுத்தில் பொன்னிற இறகுகளும் பழுப்பு நிறமும், சாம்பல் வெள்ளை சிறகுகளுமாக க்கெக் க்கெக் என்றுகொண்டிருந்த சேவலைப் பிடித்துக்கொண்டு வந்து அமர்ந்தார். தலையில் இருந்து மெதுவாகக் கழுத்துவரைத் தடவினார். சேவல் சிலிர்த்து அரைக் கண்ணை மூடியது. நாளை எமக்கு வெற்றியாக அமைய வேண்டும்.முன்னோர்கள் மலைகளில் இருந்து இறங்கி வந்து எமது கால்களிலும் தோள்களிலும் வலுச் சேர்க்கவேண்டும் என்று முணுமுணுத்தவாறு சடுதியாக ஒற்றைக் கையால் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். சிறகுகள் இரண்டும் படபடவென்று அடித்து இறகுகள் பறந்தன. உடல் துடித்து அமைதியானது. பின் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கியவாறு கழுத்தில் மெல்லிய கீறல். துணியில் வைக்கப்பட்ட குவளையில் இரத்தம் ஒழுகி நின்றது. வீட்டுக்கு வந்து படுத்தபோது மனத்தில் எதுவும் இருக்கவில்லை. மலை மீது ஏறி இறங்கியபின் வரும் ஆழ்ந்த உறக்கத்தில் வீழ்ந்தேன். சேவல் கூவும் சத்ததுடன் எழுந்தேன். நேற்றைய உறக்கம் வியப்பாக இருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கான நேரம் நெருங்க உடலெங்கும் பதட்டத்துடனான பரவசமொன்று உருவாகிக் கொண்டிருந்தது.
சுத்தமாகி,உடைகளை மாற்றிக்கொண்டேன்.சுருட்டப்பட்டிருந்த பழைய படுக்கை விரிப்பை விரித்து உள்ளடங்கியிருந்த பதாகையையும் கொடியையும் எடுத்தேன். மேற்சட்டையை கழற்றி உடம்பின் சுற்றிக்கொண்டு மீண்டும் அணிந்து கொண்டேன். காலைக் குளிருக்கு இதமாக இருந்தது. தேவாலய ஆராதனைக்கு சென்றால் உளவாளிகள் என்னை அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதனால் ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவில் கலந்துகொள்வதற்காக காத்திருந்தேன். ஆராதனை அதிகாலை ஆறுமணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. முடிவதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். பதட்டத்துடனான காத்திருப்பு.
ஆர்ப்பாட்டத்தின் குரல் அலையலையாக நெருங்கி வந்துகொண்டிருந்தது. வீவா திமோர் லெஸ்தே, வீவா ஸனானா முழக்கங்களுடன் கலந்த இரைச்சல். உடல் சிலிர்த்தது. நூற்றுக்கணக்கானோரையே எதிர்பார்த்தோம். ஆனால் நிச்சயமாக அதைத் தாண்டியிருக்கின்றது. அருமை திமோர் லெஸ்தே உன் விதி மாறுகின்றது என்று பாடினேன். ஆர்ப்பாட்டத்தின் முனை நான் இருந்த இடத்தை தாண்டியது. கடந்து சென்று கொண்டிருப்பவர்களின் முழக்கமும் வந்துகொண்டிருப்பவர்களின் முழக்கமும் இருவேறு திசைகளில் இருந்து வரத்தொடங்கின .மின்னலென வெளிவந்து கூட்டத்துடன் கலந்தேன். அதே வேகத்தில் பதாகையும், கொடியும் உடலில் இருந்து வெளியில் வந்தன.
பெருமழை பெய்து வீடுகள், வளவுகள் எங்கிலும் இருந்து நீர் வீதிக்கு ஓடிவந்து இணைவது போன்று செல்லும் வழியெங்கும் திசைகள் எங்கிலும் இருந்து இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெண்கள், பாடசாலைக்கு வந்த மாணவர்கள் இணைந்துகொண்டே இருந்தார்கள். காந்தமொன்று இரும்புத் துணிக்கைகளுக்கு இடையால் இழுக்கப்படுவதாக மக்களை ஊர்வலம் தன்னிச்சையாக ஈர்த்துக்கொண்டே சென்றது. பொலிசாரும், இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளிலும், வீதியோரங்களிலும் பெருமளவில் நின்றார்கள். அவர்கள் முகங்கள் நம்பவே முடியாத ஆச்சரியம், கோபம், வெறுப்பு என்று கலந்துகட்டிப் பிரதிபலித்துக் கொண்டன. இத்தனை மாதங்களாக எது நடைபெறக் கூடாதென்று இராப்பகலாகப் பாடுபட்டார்களோ அது அவர்களின் கண்முன்னே நடந்துகொண்டிருந்தது.
அரசியல் நாடகங்களால் ஆனது. வெறும் அரசியல் நிலைப்பாடுகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதன் அடிப்படையில் நடத்தப்படும் நாடகங்களே வரலாற்றை நகர்த்துகின்றன என்பது எம் இரகசிய அமைப்பினரின் கூட்டங்களில் அடிக்கடி கூறப்படும் வாசகமாகும். நிலைப்பாடு சரியாக இருந்தாலும் நாடகம் சரியாக அமையாவிட்டால் அந்த நிலைப்பாட்டை முன்னகர்த்த முடியாதென்பது அதன் இன்னுமொரு வடிவம். கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் ஒரு அங்கம் என்பதைக் காட்டுவதற்காக ஜகார்த்தா அரசும், தனி நாடு என்பதைக் காட்டுவதற்காக நாமும் போத்துக்கேயக் குழுவின் முன் ஆர்ப்பாட்ட நாடகங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தமை வருகை நிறுத்தப்பட்டதுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் ஒத்திகையை வீணாக்காமல் விடுதலை ஆதரவாளர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதை மறுதரப்பு ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் பார்த்துக்கொண்டு நிற்கிறது.
திட்டமிட்டபடி ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தங்கியிருந்த ஹோட்டல் அமைந்த வீதிக்கு திரும்ப முயன்றோம். ஆனால் பொலிஸாரின் கடுமையான தடுப்பைமீறிச் செல்ல முடியவில்லை .தெற்காகத் திரும்பி இடுகாட்டை நோக்கித் தொடர்ந்து செல்லத் தொடங்கினோம். மண் எனும் சிலுவையில், எழவே முடியாதபடி மனிதர்களை வைத்து அறையப்பட்ட, ஒன்றைப் போன்று ஒன்றல்லாத சிமெந்து ஆணிகளின் தோட்டம் ஸண்டா க்ரூஸ். புகைப்படங்கள் பதிக்கப்பட்டவை, கண்ணைப் பறிக்கும் வண்ண டைல்ஸ் பதிக்கப்பட்டவை, இயேசுவின் சிலைகளைத் தாங்கியவை, சிறுவீடுகள் போன்றவை, பரிசுத்த ஆவியான புறா இறங்கிக் கொண்டிருப்பவை என்று கூறிக்கொண்டே போகலாம் .இவற்றுடன் செபஸ்டியாவ் கோமஸினதும் இணைந்துவிட்டது. புதிய மண் குவிக்கப்பட்டு பெரிய வெள்ளை சிலுவை உயர்ந்து நின்றது. நெடுக்காக ஆர்.ஐ.பி, பிறப்பு இறப்பு திகதி விபரங்களும், குறுக்காக செபஸ்டியாவ் கோமஸ் என்ற பெயரும் கறுத்த மையால் எழுதப்பட்டிருந்தன. பெரிய மலர் வளையம் ஒன்றை சிலுவையின் கழுத்தில் இட்டார்கள் .இதுவரை இருந்த ஒட்டுமொத்த உற்சாக மனநிலை வடிந்து வெறுமை குடிகொண்டது. இன்று அவனும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்! அவன் இருந்தால் இது நடைபெற்றே இருக்காதே என்று மறுவிநாடி தோன்றியது.
இடுகாட்டுக்குள்ளும் வெளியிலுமாகக் கூட்டம் நெரிபட்டது. எதிர்ப்புக் முழக்கங்கள் ஓயவில்லை. நான் மீண்டும் வெளியில் வந்து, வீதியைப் பார்த்த வண்ணம் ஏற்கனவே மதிலில் நின்றிருந்தவர்களுடன் ஏறிக் கொண்டேன். வீதியெங்கும் நிறைந்து வழிந்தது. வீவா திமோர் லெஸ்தே,வீவா ஸனானா முழக்கங்கள் எழுந்தன.
இராணுவ வாகனங்கள் வந்து கூட்டத்தின் காரணமாகத் திரும்புவதும் அதில் இருந்து சீருடை முழுமையாக அணிந்தவர்களும்,மேலாடை இல்லாமல் காற்சட்டை மட்டும் அணிந்தவர்களுமாக இறங்கி எதிரில் இருந்த இராணுவத்தினரின் இடுகாட்டுக்கு வரிசைகட்டிச் செல்வதும் தெரிந்தது. சற்று நேரத்தில் அவ்விடுகாட்டின் மதிற்சுவர்களிற்கு மேலால் துப்பாக்கிகள் எம்மை நோக்கி நீண்டன. பீதியுடனான கூச்சல் எழுந்தது. கையில் இருந்த மெகாபோனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருவர் நாம் அமைதியாகவே எதிர்ப்பைக் காட்டுகின்றோம், இராணுவத்தினர் எமக்குப் பாதுகாப்பளிக்கவே வந்துள்ளனர் என்று பதட்டத்துடன் கூறியவாறு நின்றிருந்தார். இராணுவத்தினர் வரிசையாக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நின்றதையும் விசையை அழுத்தத் தயாரான அவர்களின் நிலையையும் புறக்கணித்தாலும்கூட அவர்களின் கண்களில் உறைந்து கொண்டிருந்த வேட்டையாடும் வெறி மூளையில் எச்சரித்தது. பின்புறமாகக் குதிக்கவும் துப்பாக்கிகள் வெடிகளைத் தீர்க்கவும் சரியாக இருந்தது.
எங்கும் கூக்குரல், மரண ஓலம். சில நிமிடங்கள் தொடர்ச்சியாக துப்பாக்கிகள் வெடித்துத் தள்ளின. நான் ஓடியும், கல்லறைகளுக்குள் பதுங்கி ஊர்ந்தும் நகர்ந்து கொண்டிருந்தேன். உண்மையில் பீதியில் கூச்சலும் வெடிச்சத்தமும் கேட்டதே தவிர சுற்றிவர என்ன நடக்கின்றது என்பதை எனது புலன்கள் அறியவில்லை. மூளை உறைந்துவிட்டது போன்ற நிலை. என்னைச் சுற்றி இருட்போர்வை போர்த்துக்கொண்டது போலவும் ஓடுவதற்கான காலடி வைக்கும் இடங்கள், பற்றுவதற்குரிய இடங்களை மட்டும் அப்போர்வை கிழிந்து கிழிந்து வெளிச்சத்தை அனுமதிப்பது போன்றும் இருந்ததாக பின்னர் நினைவுக் கூரும்போது தோன்றுகின்றது. இடுகாட்டின் பின்புறத்துக்கு வந்து மூச்சிரைக்க கல்லறையொன்றின் மறைவில் படுத்துக்கொண்டேன். சற்று தொலைவில் இன்னொரு கல்லறை மறைவிலிருந்து வெள்ளையர் ஒருவர் தனது வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்தது தெரிந்து சற்று தெளிவடைந்தேன். எதிர்ப்பாட்டத்தை குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் அவர்.
சட்டை முழுதும் இரத்தம் தெறித்திருந்தது. தடவிப் பார்த்தேன் . கால் கைகளில் சிராய்ப்புக் காயங்களைத் தவிர வேறில்லை. கூட்டமாக ஓடியபோது யாருடைய இரத்தமாவது பட்டிருக்க வேண்டும். முதுகில் குளிர்வது போன்று இருந்தது. கையால் தடவினேன் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தது. மனப்பதைப்புடன் இழுத்தெடுத்தேன் . இரத்தத்தால் ஊறிய தலைமயிர்கள் ஒருபுறமாகவும், பசைபோன்று வழுவழுத்த இரத்தம் சதைகளுடனான மறுபுறத்தையும் கொண்ட மண்டையோட்டின் துண்டு. கையை உதறி வீசினேன். முன்னரைப் போன்று தொடர்ச்சியாக அல்லாமல் இடைக்கிடை வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காயப்பட்டு விழுந்து கிடந்தவர்களைச் சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் மெதுவாக உள்ளே வந்து கொண்டிருந்தனர். விழுந்து துடித்து க்கொண்டிருந்த ஒருவரை சுடுவதற்கு முயல்வதும்.ரவை தீர்ந்ததால் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து அவர் வயிற்றைக் கிழிப்பதும் தெரிந்தது. கழுத்தில் குளிரேறித் தலை விறைத்துக்கொண்டு வந்தது . கால்களில் வலுவைத் திரட்டி பின்மதிலால் பாய்ந்து ஓடத்தொடங்கினேன்.
மீண்டும் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பித்தது. ஸண்டா க்ரூஸ் மயானத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று பின்னர் தெரியவந்தது. நாளாந்தம் பயங்கரமான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் பலர் இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு இராணுவத்தினர் பெரிய கற்களால் மண்டைகளைப் பிளந்தும், காயங்களுக்கு குளிர்நீர் ஊற்றியும் அவர்களைப் படுகொலை செய்ததாக ஒளிந்திருந்து தப்பியோர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டோர் பலர் ஆற்றங்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டு வீசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. காயமடைந்தோர் நகரிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் தேடித்தேடி கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
தலைமறைவாக எவ்வளவு காலத்துக்கு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. தேடுதல் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருந்தது. பல்கலைக்கழகக் கல்வியை இடை நிறுத்திவிட்டு வந்த சில காலத்திலேயே மீண்டும் திரும்பிச் செல்லமுடியாத ஒற்றையடிப் பாதை வழியாக வெகுதூரம் வந்துவிட்டேன் என்றெண்ணித் திகைத்து நின்றேன். இனித் திரும்பிப் பார்ப்பதில் பயனில்லை.
திமோரின் நீட்டுவாக்காக, முதுகெலும்பாக மலைத்தொடர் சென்றது. சமவெளிகள் தாய், தந்தை; மலைகள் பாட்டன், பாட்டி என்பது திமோரிகளின் வழக்கு.தாய், தந்தை கைவிட்டாலும் பாட்டன், பாட்டி கைவிடுவதில்லை என்ற நம்பிக்கை எம்முடன் பின்னிப் பிணைந்தது. நானும் வேறு சில செயற்பாட்டாளர்களும் ஃபலின்டில் இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமுள்ள மலையடிக் கிராமமொன்றை அடைந்தோம். கிராமத் தலைவரிலிருந்து கிராமத்தவர் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த மலைப் பிரதேசங்களில் இந்தோனேசிய இராணுவத்தினர் எளிதில் நுழைந்துவிட முடியாது இராணுவ நடவடிக்கையொன்றால் மட்டுமே வரமுடியும். அங்கிருந்து நான் ஃபலின்டிலுக்கான ஓட்டவீரனாக செயற்படத் தொடங்கினேன். அதை எஸ்டா ஃபெடா என்று கூறுவார்கள். கடிதங்கள், உணவு, இராணுவ நடமாட்டத் தகவல்களை மலைக்காடுகளிலுள்ள இயக்கத்தினருக்கு எடுத்துச் செல்லும் பணி.
விரைவில் படைப்பயிற்சி பெற்று ஃபலின்டில் முழு நேர உறுப்பினராகிவிட்டேன். ஸண்டா க்ரூஸ் படுகொலைகளுக்குப் பிறகு என்னைப் போன்று வேறுபலரும் இணைந்திருந்தார்கள். இந்தோனேசியா பெரிய நாடு. அதை நேரடியாக வெற்றிகொள்ள முடியாதென்பதை நாம் அறிந்திருந்தோம். எமக்கான சூழல் உருவாகும்வரை தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே ஃபலின்டிலின் நோக்கமாக இருந்தது. எதிரி நிலத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவன் நிம்மதியாக உறங்கக்கூடாது. நாங்கள் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செயற்பட்டோம். சிறுசிறு தாக்குதல்கள், கிராமங்களில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பது என்று பணிகள் இடைவிடாது இருந்துகொண்டிருந்தன.
ஸண்டா க்ரூஸ் படுகொலைகளின் ஒளிப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாக கிழக்குத் திமோர் மீதான சர்வதேசப் பார்வை மாறத்தொடங்கியது. அது அதிரடியான திருப்பம். வரலாறு சடுதியாக எமது பக்கம் திரும்பியது. வெளிநாட்டு அழுத்தங்களால் படுகொலைக்குப்பின் எட்டாண்டுகளில் இந்தோனேசியா பொதுவாக்கெடுப்பு நடத்தியதும் கிழக்குத் திமோர் தனி நாடானது நாம் எவருமே நம்பியிருக்காத வகையில் நடைபெற்று முடிந்தன.
நான் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தேன். கண்கள் ஒளியேறி மினுங்கின. எனது கைகளைப் பற்றி வாழ்த்துகள் என்றான். விடுதலையடைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும், பலமுறை இவ்வாறான வாழ்த்துகளை கேட்டிருந்தாலும், அவனின் வாழ்த்து எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அவனின் கைகளைப் பிடித்து நன்றி, நன்றி என்று மீண்டும் மீண்டும் கூறினேன்.
விடுதலைப் போராட்ட வீரர்களில் குறைந்தபட்ச எழுத்தறிவற்றவர்களைத் தவிர ஏனையோர் கிழக்குத் திமோருக்கான இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எதிர்காலத்துக்கான உத்தரவாதம் கிடைக்கும் என்றாலும் எனது இயல்புக்கு பொருத்தமற்றதென்பதால் நான் இராணுவத்தில் இணையவில்லை .எனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்று விவசாயம் செய்வதற்குத் தீர்மானித்தேன். செல்வதற்கு முன் ஆயர் பெல்லோவை சந்திக்கச் சென்றேன். எமது புதிய நாட்டுக்குக் கற்றவர்கள் அதிகம் தேவை. நாட்டுக்கான பணி என்றும் முடிவடையக் கூடியதல்ல. பல்கலைக் கழகத்தில் ஓராண்டு கற்ற உன்னைப் போன்றவர்களை விட்டுவிடமுடியாது. நீ தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்கிறேன்; படி என்றார் அவர். முப்பது வயதாகி விட்டது இனி எப்படி என்றேன் தயங்கியபடி. உனக்கு தாய்லாந்தின் அஸம்ஷன் பல்கலைக் கழகத்தில் இடமெடுத்துத் தருகின்றேன் என்று கூறி, அதன்படி இடமெடுத்துத் தந்தார். நீ புறச்சவால்கள் பலதை வென்றவன் என்று தெரியும். தாய்லாந்து உன் அகத்துக்கான சோதனை. அதில் வென்று வந்தால் மட்டுமே நீ உண்மையான விடுதலை வீரன். இல்லாவிட்டால் வெறும் சாகச விரும்பி மட்டுமே என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார் பெல்லோ.
அங்கு பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் படித்து முடித்தேன். அங்கிருந்த கிழக்குத் திமோர் தூதரகம் என்னை உள்வாங்கிக்கொண்டது என்று கூறிவிட்டு அமைதியானேன். சற்று நேரத்தின் பின்னர் என்னைப் பற்றி இவ்வளவு கூறிவிட்டேன், உன்னைப் பற்றி அறியலாமா என்று கேட்டு அவனை ஏறிட்டேன். தனது சட்டைப் பையைத் தடவியவன் நாணயக் குற்றியொன்றை எடுத்தான். ஒரு திர்ஹாம். தலையா வாலா என்றான். குழப்பத்துடன் தலை என்றேன். மேலே சுண்ட, நாணயம் எழுந்து இறங்கி சுழன்று சரிந்தது; தலை. அவன் முகத்தில் மெல்லிய முறுவல். அப்பொழுது அவனின் நண்பன் அவனை நோக்கி வேகமாக வந்து ஏதோ கூறினான். அவன் சிரித்தபடி எனக்கான வாகனம் வந்துவிட்டது. செல்கிறேன் என்றவாறு நண்பனுடன் வேகமாக சென்று கட்டிடங்களில் மறைந்தான். எனக்கு எதுவுமே புரியவில்லை.கீழே கிடந்த நாணயத்தை எடுத்துப் கையில் வைத்து திருப்பித் திருப்பிப் பார்த்தவாறு நின்றிருந்தேன் .சட்டைப் பையில் போட்டுக்கொண்டு ஹொட்டேலுக்குத் திரும்பினேன்.
அவன் மேற்சட்டையை மாற்றியபோது அந்த உடலில் கண்ட தழும்புகள் மனதில் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. நிச்சயமாக அவை ஆயுதங்களால் ஏற்பட்டவை என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனுடன் அவ்வளவு ஈர்ப்புடன் உரையாடினேன். அவன் தனது ஊரின் பெயரை ஆங்கிலத்தில் ஒருவிதமாகவும் அவனது மொழியில் ஒருவிதமாகவும் கூறுவார்கள் என்று உச்சரித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. பட்டிக்கலோ என்பது ஒன்று. மற்றைய பெயர் எவ்வளவோ நினைவுபடுத்த முயன்றும் வரவில்லை.
உறக்கமும் மரணமும் – ஹின்ரீச் ஹீன் (செந்தில்நாதன் மொழியாக்கம்)
![]()
எவ்வளவு ஒற்றுமை, இந்த இரு அழகர்களுக்கும்
இவர்களில் ஒருவன் மற்றவனை விட வெளுப்பாய்,
கடுமையாய் இருக்கிறான், என்னைக் கையில்
ஏந்தியவனைவிட அதிக கம்பீரம்
என்று கூடச் சொல்லலாம்-
அவன் புன்னகையில்தான் எத்துணை கனிவு,
பார்வையில்தான் எத்துணை பரிவு.
அவன் நெற்றியின் பாப்பி மலர்கள்
என் நெற்றியைத் தொட்டனவோ,
அவற்றின் மயக்கும் வாசம்
என் ஆழ்மன வலிகளைப் போக்கிற்று.
ஆனால் இந்த நிவாரணம் தற்காலிகம்தான்.
எனது நிரந்தரத் தீர்வு, அந்த மற்றொரு சகோதரன்,
வெளுப்பாய், கடுமையாய் இருப்பவன்,
தன் பந்தத்தை கீழிறக்கும்போதுதான்.
உறக்கம் நல்லது, மரணம் அதனினும் மேன்மை.
பிறவாமை அனைத்தினும் சாலச் சிறந்தது.
௦௦௦
ஆங்கிலத்தில்- Sleep and Death, Vikram Seth (translated from the German of Heinrich Heine)
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா
மொழியில் ஒளிரும் கணங்கள்- ஜேம்ஸ் சால்ட்டர் சிறுகதைகள்

ஜேம்ஸ் சால்ட்டரின் (James Salter) ‘Light Years‘ நாவலில் ஒரு பாத்திரம், “”One of the last great realizations is that life will not be what you dreamed,” என்று எண்ணுவதை அந்நாவலை மட்டுமல்ல, சால்ட்டரின் முழு புனைவுலகையும் இணைக்கும் பொதுச் சரடாகப் பார்க்கலாம். மேலும், தாம் தொடப்போகும் எல்லைகள் குறித்த கற்பனைகளுடன் பருவம் முதிர்ந்த (adult) வாழ்வைத் தொடங்கி, பின்பு ஒரு கட்டத்தில் தான் எங்கும் பயணம் செய்யாமல் இன்னும் கரையிலேயே நின்று கொண்டிருப்பதை/ அல்லது திசை மாறி வேறு எல்லைகளை அடைந்ததை உணர்பவர்கள் என பொதுப்படையாகவும், ஆண்- பெண் உறவில் தாம் அடைந்துள்ளதாக நினைக்கும் நிறைவை விரைவில் இழந்து, அதை வேறிடத்தில் தேடுதல் என்ற சுழலில் சிக்குபவர்கள் என்று குறிப்பாகவும் சால்ட்டரின் முழு சிறுகதைத் தொகுப்பை இரண்டு உட்கூறுகளாகப் பிரிக்கலாம்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகால எழுத்துலக பயணத்தில் சால்ட்டருக்கு இலக்கிய நடையாளர்/ stylist என்பதே முதன்மை அடையாளமாக உள்ளது. நிறைவின்மையினால் பீடிக்கப்பட்டாலும் செயலூக்கம் குன்றாமல் வாழ விழைபவர்களின், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் பல நேரங்களில் இன்னும் புதிய துன்பங்களையும் இட்டுச் செல்லும் அந்த விழைவின் அன்றாட கணங்களைத் தன் எழுத்தில் சிறை பிடித்து உறையச் செய்து “…give the ordinary its beautiful due” என்ற அப்டைக்கின் பிரசித்தமான மேற்கோளுக்கு சால்ட்டர் நியாயம் செய்கிறார். இதை சால்ட்டரின் வார்த்தைகளிலேயே, ” There is no situation like the open road, and seeing things completely afresh. I’m used to traveling. It’s not a question of meeting or seeing new faces particularly, or hearing new stories, but of looking at life in a different way. It’s the curtain coming up on another act,” என்று பிரயாணம் செய்வதைப் பற்றி அவர் குறிப்பிடுவதுடனும் ஒப்பிடலாம்.
தன் நடையின் நுட்பங்கள் மூலம் புதிய கோணத்தில் அன்றாட கணங்களை அணி செய்கிறார் சால்ட்டர். “Foreign Shores” என்ற கதையில், இலையுதிர் காலத்தின் வருகைக்கான எதிர்பார்ப்பு பற்றிய ஒரு விவரிப்பு இது- “..left behind, a grasshopper, a veteran in dark green and yellow, limped along.The birds had torn off one of his legs“, வெட்டுக்கிளி பற்றிய ஒரு காட்சித் துண்டு மட்டுமா? veteran, limp ஆகிய சொற்கள் இவ்வரியில் அத்தியாவசியமா? ஆனால் அவ்வார்த்தைகளே போரில் கால் இழந்த முதிய இராணுவ வீரரின் அந்திமக் காலத்தின் சித்திரமாகக் கூட இந்த வரியை உருவகிக்கச் செய்யக் கூடும், இல்லையா?
“Arlington” என்ற கதையில் ஆற்றின் அருகில் உள்ள தேவாலயத்தில் இராணுவ உயரதிகாரி ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. சடங்கின்போது இசைக்கப்படுவதை கல்லறைக்குச் செல்பவர்கள், “… walked with many others, toward the end drawn by faint music as if coming from the ancient river itself, the last river, the boatman waiting” என்பதாக சால்ட்டர் பதிவு செய்யும்போது, வாசகன் ஒரு கணம் கிரேக்க புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். (‘Charon‘ என்பவன் இறந்தவர்களின் ஆன்மாவை, வாழும்/ இறந்தவர்களின் உலகங்களைப் பிரிக்கும் ஆறுகளைக் கடக்க உதவும் படகோட்டி என்பது கிரேக்க தொன்மம் ).
இந்த இரண்டு விவரணைகளிலும் சால்ட்டர் அன்றாடத்தின் எல்லைகளை மீறவில்லை, அதாவது விவரணைகள் புறச் சூழலை யதார்த்தமாகவே வர்ணிப்பதாக உள்ளன, ஆனால் அவற்றை நாம் பார்க்கும் விதத்தை, அவற்றில் நாம் காண்பதை மட்டும் சற்றே மாற்றி அமைக்கும்போது, நாம் அதுவரை கவனத்தில் கொள்ளாத திரைச்சீலை விலகி புதிய பிம்பம் வாசகனுக்கு புலப்படுகிறது.

ஒளி, அதில் துலக்கமாகும் பிம்பங்கள் இவர் எழுத்தில் எங்கும் பரவி இருக்கின்றன. அந்தி மாலையில் உயர்ந்த கட்டிடத்திலிருந்து பார்க்கும்போது தென்படும் – சாலைகளில் செல்லும் வாகனங்களில், வீடுகளில், கடைகள்/ அலுவலகங்களில் – ஒரே நேரத்தில்/ அடுத்தடுத்து செயலுக்கு வரும் செயற்கை ஒளி, வீடுகளை நிறைத்திருக்கும் விளக்குகள் இந்தக் கதைகளில் இருந்தாலும், சால்ட்டரின் அகத்தில் நிறைந்திருப்பது வெய்யோனின் தூய ஒளியே என்பதற்குச் சான்றாக வாசகனையும் அவ்வொளியை ஆசை தீரப் பருகச் செய்கிறார். முன்காலையின் வெளிச்சம் ஒரு வீட்டின்மேல் “In earliest morning,……The shadow of a tall elm beside it was traced on it as finely as if drawn by a pencil” (‘Last Night‘) படர்வதை விவரிப்பதில் – The shadow of a tall elm beside it was traced on it என்பதுடன், மரத்தின் நிழல் வீட்டின் மேல் படரும் பிம்பத்துடன், இந்த வரியை சால்ட்டர் முடித்திருக்கக்கூடும், ஆனால் அதை as finely as if drawn by a pencil என்று அவர் அதற்கு தரும் அழுத்தமே இதில் முன்காலையின் ஒளியின் அடர்த்தியை உணர்த்துவதோடு, அந்தக் கணத்திற்கு மிகப் பொருத்தமாகவும் உள்ளது. முன்காலையின் ஒளி இப்படியென்றால், பின்மதிய/ முன்னந்தியின் ஒளி “It was still light outside, the pure full light before evening, the sun in a thousand windows facing the park,” என எங்கும் செந்தழலாக படர்ந்திருக்கும் அக்கணத்தில் மூழ்கவே வாசகன் விரும்புவான்.
புறச்சூழலை மட்டுமின்றி அகத்தின் எண்ணங்களையும் நுட்பமாக வெளிக் கொணர்கிறார் சால்ட்டர். பாலுறவு பற்றிய விவரணைகளை விரைவாக கடந்து செல்லும் சால்ட்டர், அதன் முதல் படியான பாலியல் விழைவுக்கும், பாலுறவுக்கு பிறகான கணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தந்து, பாத்திரங்களின் உரையாடல்கள், மௌனங்கள், உடலசைவுகள், எண்ணவோட்டங்கள் மூலம் வாசகனுக்கு துல்லியமாக உணர்வுகளைக் கடத்துகிறார். ‘Charisma’ என்ற கதையில், விருந்தின் போது, 79 வயதான லூசனைப் பற்றி இரு மணமானப் பெண்கள் (அவர் வயதில் பாதிகூட அவர்களுக்கு இருக்காது என்று யூகிக்கலாம்) பேசும்,
“..Did he look old?”
“Yes, but you know, not that kind of old.”
“He’s had tons of affairs, hasn’t he? Fathered children left and right.”
“Is that true?”
“I heard that one of his girlfriends was fourteen years old. Her brother tried to kill him”.
“Fourteen, that’s a little too much.That’s still a child”
“I wonder how he would have met her”.
“Probably the daughter of a friend. He wanted her to model. And it took a long time and he was very attentive”
…
“How does he do it all?”
…
உரையாடலில், அவன் செயல்கள் குறித்து ஆர்வம், கொஞ்சம் கிசுகிசு, மென்மையான கண்டனம் ஆகியவை மேலோட்டமாக வெளிப்பட்டாலும், உண்மையில் அவன்பால் அவ்விரு பெண்களும் பாலியல் ரீதியாகக் கிளர்ந்திருக்கிறார்கள், அதை வெளிக்காட்டாமல், தாங்கள் உண்மையில் சொல்ல எண்ணுவதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்து பேசுகிறார்கள் என்பதை வாசகன் உணர முடியும். எனவே உரையாடலின் இறுதியில்
“I’d fuck him though,” she said.
“You would?”
“In a minute.”
“I would, too”
என்று அவர்கள் சொல்வது எதிர்பார்த்த ஒன்றுதான். பாலியல் கிளர்ச்சியின் வெளிப்பாடு, அதன் எரோடிக் தன்மை, மின்னோட்டமாக இவ்வுரையாடலின் முதல் பகுதி போல் நுட்பமாகவோ அல்லது அதன் இறுதிப் பகுதி போல் நேரடியாகவோ சால்ட்டரின் கதைகளில் ஊடுருவி உள்ளது.
“…someone who likes to rub words in his hand, to turn them around and feel them, to wonder if that really is the best word possible….” என்று ஒரு பேட்டியில் தன் எழுத்து முறை பற்றி சால்ட்டர் சொல்கிறார். வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து சொல்லமைப்பவர் அவர் என்பதை
“Outside, in the ordinary daylight, were the trees along the side of the property, the roof of a house, the lawn, some scattered toys. It was a landscape that seemed ominous, too idyllic, too still,” (‘Foreign Shores’)
என்ற பத்தியில் பார்க்கலாம். ஒரு தெருவின் வீடுகள் அமைதியாக உள்ள ஒரு கணத்தின் சாதாரணச் சித்திரம்தான் இது. ஆனால் இவ்வரி வாசகன் மனதில் தோற்றுவிக்கும் பிம்பத்திற்கும், “in the ordinary daylight,” என்பதை நீக்கி விட்டு படித்தால் (அதை நீக்கினாலும் அவ்வரி முழுமையானதாகவே இருக்கும்) தோன்றும் பிம்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணரும் வாசகன் சால்ட்டரின் அழகியலை நெருங்குகிறான். ‘Last Night‘ கதையில் நோயுற்றிருக்கும் பாத்திரத்தின் நிலையை “She had a face now that was for the afterlife and those she would meet there,” என்று சால்ட்டர் குறிப்பிடுவதில் ‘afterlife‘ என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன? நோயின் தீவிரத்தை உணர்த்த பல வார்த்தைகள் இருக்க இந்த வார்த்தை வாசகனின் மனதில் அப்பாத்திரம்/ அவரின் நோய் குறித்த சித்திரத்தை எந்த வகையில் உருவாக்குகிறது என்று யோசித்தால் அப்பாத்திரம் தன் இறுதிப் பயணத்தை தொடங்கியுள்ளதை இவ்வார்த்தை அளவிற்கு துல்லியாக உணர்த்துவது கடினம் என்று தெரிய வரும்.

ஆனால் இவ்வழகியலை மறுதலிக்கும் விதமாக, தன் இறுதி நாவல் ‘All that is” குறித்த ஒரு பேட்டியில் “I was constantly hearing people talking about their favourite passages, a sentence they’d underlined 10 times. I don’t know that that’s what you read a book for. I began to feel it was a fault. I got tired of it,” என்று அவர் சொல்கிறார். 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் தன்னைத்தானே கவனித்துக் கொண்டிருந்தவர் என்பதும், இறுதி வரை தன்னைப் புதுப்பிக்க நினைத்தவர் என்றும் அவரைக் குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது.
ஒரு சில வரிகளில், அதுவரை கதையின் மையம் இதுதான் என்று எண்ணியிருந்த வாசகனின் கோணத்தை மாற்றக் கூடியவர் சால்ட்டர். ‘Akhnilio‘ கதை ஃபென் (Fenn) அதிகாலை 3 மூன்று மணியளவில் விழித்துக் கொள்வதுடன் ஆரம்பிக்கிறது. ஏதோ ஓசை அவனை அழைப்பது போல அவன் உணர, நிலைகொள்ளாமல் அதைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறான். கதையின் போக்கில் அவன் வாழ்க்கை குறித்து நாம் அறியவருவது , அவன் கேட்கும் ஓசை (‘It seemed he was the only listener to an infinite sea of cries‘) அவனுடைய உளமயக்கா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவனுடைய மனகொந்தளிப்பைப் பின் தொடரும் சால்ட்டர், அவன் வீதியெங்கும் அலைந்து திரிவதைச் சித்தரிக்கிறார். முழுதும் இருள் படர்ந்த வானம் சிறிது சிறிதாக மேகங்கள் கலைய தன் அடர்த்தியை இழந்து விண்மீன்கள் மெல்லிதாக துலங்க ஆரம்பித்து, புலரியின் முதல்வெளிர் நிற ஒளி தோன்றும்போது ஆயாசத்துடன் ஃபென் வீடு திரும்புகிறான். அகச்சூழலின் சித்தரிப்பு மட்டுமின்றி, புறச்சூழலின் சித்தரிப்பிலும் (The only galaxies were the insect voices that filled the night) சால்ட்டர் அடைந்த உச்சங்களில் இக்கதை ஒன்று.
ஃபென்னை அவன் மனைவி எதிர்கொண்டு என்ன ஆயிற்று என்று கவலையுடன் கேட்கிறாள். ஆனால் அவளுடைய ஆதூரம் அவனுடைய கொந்தளிப்பை அதிகரித்து, மீதமிருந்த சமநிலையையும் குலைத்து முற்றிலும் உடைந்து போகச் செய்கிறது. இங்கு கதை முடிந்திருக்கக் கூடும். ஆனால் அவனுடைய சிறு வயதுப் பெண்ணின் “…remembered from the years she was first in school when unhappiness filled the house and slamming doors and her father clumsy with affection came into their room at night to tell them stories and fell asleep at the front of her bed,” என்ற எண்ணவோட்டங்களுடன் கதை முடியும்போது, ஃபென்னிடம் மட்டுமே குவிந்திருந்த வாசகனின் மனம் அவனுடைய மனச் சிதைவு அவன் குடும்பத்தையும் பாதித்த/ பாதிக்கப் போகும் விதத்தையும் குறித்து கவலைப்பட ஆரம்பிக்கிறது. அவன் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து முதல் முறையாக யோசிக்க ஆரம்பிக்கிறான் வாசகன். தனிநபர் மன உளைச்சலைப் பற்றிய கதையை ஒரே ஒரு பத்தியில், சிதைவில் விளிம்பில் இருக்கும் குடும்பத்தின் சித்திரமாக சால்ட்டர் மாற்றி விடுகிறார்.
‘Last Night‘ கதையில் வால்டர் (Walter), சுசான்னாவுடன் (Susanna) தன் வீட்டில் அமைதியின்றி அமர்ந்திருக்கிறார். அவர்கள் அவர் மனைவி மேரிட்டுக்காக (Marit) காத்திருக்கிறார்கள். மேரிட்டு அறைக்குள் நுழைந்ததுமே அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று புலப்படுகிறது. “On a saucer in the refrigerator, the syringe lay” போன்ற இடங்களில் அது இன்னும் துலக்கம் கொள்கிறது. மெதுவாக அவிழும் நிகழ்வுகள் வாசகன் மனதைக் கூர்மை கொள்ளச் செய்கின்றன. மூவரும் உணவகத்திற்குச் செல்கிறார்கள், வழக்கத்திற்கு மாறாக விலை உயர்ந்த மது அருந்துகிறார்கள், இயல்பாக இருக்கிறோம் என்று காட்ட முயன்றாலும் சற்றே சங்கடமான உரையாடலே நிகழ்கிறது. வீடு திரும்பியப் பின் வால்டர் நடுக்கத்துடன் மேரிட்டுக்கு ஊசியை செலுத்துகிறார். இனி என்ன? இவர்கள் வாழ்வின் இன்னொரு அடுக்கு இப்போது தெரிய வருகிறது. வால்டருக்கும் சுசான்னாவுக்கும் தொடர்பு உள்ளது. அதை மேரிட் அறிந்திருந்தாளா? அதனால்தான் தன் இறுதி இரவன்று சுசான்னாவை அழைத்தாளா என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தக் கேள்விகளுடன் கதையை முடிக்காமல் சால்ட்டர் இன்னும் விரிக்கிறார். அடுத்த நாள் காலையில் படுக்கையறையில் இருக்கும் . வால்டருக்கும் சுசான்னாவுக்கும், அங்கு வரும் மேரிட்டைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது. வால்டருக்கும், மேரிட்டுக்குமான உரையாடல்
“”Are you all right…
No, you must have done it wrong
….
I have to do it all over, Marit sobbed.
“I’m so sorry, he said..”
என்று செல்கிறது.
வால்டர் முதலில் கேட்கும் அபத்தமானக் கேள்வி, உயிர் தப்பியதைவிடவும் சென்ற இரவு முயன்றதை மீண்டும் முயல வேண்டுமே என்ற மேரிட்டின் சோகம், மீண்டும் வால்டரின் அபத்தமான மன்னிப்புக் கேட்டல் என்பதாக நீள்கிறது. வால்டர் கேட்கும் மன்னிப்பு தன்னை சுசான்னாவுடன் மேரிட் கண்டுகொண்டதால் கூட இருக்கலாம் இல்லையா? ஒரு பெண்ணின் இறுதி இரவு என்று வாசகன் முதலில் எண்ணுவது போல் இல்லாமல், சில உறவுகளின் இறுதி இரவைப் பற்றியதாகக் கதை முடிகிறது.
“Eyes of the stars” கதை கணவனை இழந்த 60 வயதான டெட்டியின் (Teddy), பழங்கால நினைவுகளோடு ஆரம்பிக்கிறது. பிறகு 40களில் உள்ள, எதிர்பாராமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து சிறிது புகழ் அடைந்துள்ள கெக் (Keck), தன் தொழிலின் அந்திமக் காலத்தில் (ஆனால் இன்னும் புகழோடு) இருக்கும் நடிகை டெபோரா (Deborah) இருவரும் கதையில் முன்னிறுத்தப்படுகிறார்கள். யார் இக்கதையின் மையம் என உறுதியாகச் சொல்ல முடியாதபடி குறுக்கு வெட்டாக பார்வைக் கோணங்கள் மாறுகின்றன. இருந்தும், டெட்டியின் கடந்த காலம், தான் கற்பனை கூடச் செய்திராத புகழை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பும் கெக் (டெபோராவுக்கு தன்னிடம் ஈர்ப்பு உள்ளதை உணர்ந்தாலும் அவனால் குடும்பத்தை நினைவிலின்று அகற்ற இயலவில்லை), தன் திரைப்பட வாழ்வு முடிவுக்கு வருவதை எரிச்சல் கலந்த எள்ளலுடன் கடந்து செல்ல நினைக்கும் (You men get all excited by young girls…You haven’t met a real woman, that’s the difference) டெபோரா என மூன்று இழைகளும் தனித்துவமான மூன்று வெவ்வேறு மனவுலகுகளை உருவாக்குகின்றன.
79 வயதான லூசன் (Lucien) பற்றி இரு பெண்கள் பேசிக்கொள்வதாக ஆரம்பிக்கும் ‘Charisma‘, கதையை “Not far from there, amid the countless lights of other apartments at night, was the one that Leila Aaron shared with a roommate” என்ற ஒற்றை வரியுடன், பால் (Paul) என்பவனுடனான லைலாவின் (Leila) சந்திப்பு அவள் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்ற இழைக்கு மிக இயல்பாக கொண்டு செல்வதோடு, அதனூடேயே பாலின் வாழ்வு பற்றி சில துளிகளையும் வாசகனுக்களிக்கிறார். கட்டற்ற பாலியல் விழைவு என்பது லூசனையும் பாலையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது, ஆனால் லைலாவின் கதையைச் சொல்லும், பாலின் மறைவுக்குப் பின் அவன் கல்லறையைத் தேடி கண்டுபிடிக்க முயன்று “.. it was just like him to have eluded me, in death as in life..” என்று தோல்வியுறும் கதைசொல்லி யார், லைலாவா அல்லது அவனுடைய பழைய காதலிகளில் ஒருவரா என்ற கேள்வி எழுந்தாலும், கதையின் மைய இழையிலும்/ பார்வைக் கோணத்திலும் ஏற்படும் மாற்றங்கள், அவற்றில் உள்ள தெளிவின்மை வாசகனை அந்நியப்படுத்துவதில்லை.
இந்தப் பாணியில், வாசகனுக்கான எந்த குறிப்புணர்த்தலும், சுட்டுதலும் இல்லாமல் காலத்தில், பல பாத்திரங்களின் கோணத்தில், முன்பின்னாகச் செல்லக் கூடிய கதைகள் தனித்தனி கணங்களின் சிதறல்களாக தோற்றமளித்தாலும், அவற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் இயல்பாக இறுக்கிப் பூட்டிய தந்தி போல அமைந்து இனிய இசையை வாசகனுக்கு அளிக்கின்றன.

சால்ட்டர் பெண்களை உபாசனை செய்பவர் என்றும், அப்படி அல்ல வெறும் இச்சைக்கான பொருளாகவே அவர் கதைகளின் பெண் பாத்திரங்கள் பார்க்கப்படுகிறார்கள் என்றும் இரு தரப்பிலும் (‘devil’s advocate‘ ரோலில்) வாதிட முடியும். ‘Comet‘ என்ற கதையில் “.. youth burning through her clothes” என்று ஒரு 22 வயது யுவதியின் வர்ணனையையும்”She was still young enough to be good looking, the final blaze of it..” என்று இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் 35 வயதிற்கு மேல் இருக்கும் என்று யூகிக்கக் கூடியப் பெண்ணின் சித்தரிப்பையும் எடுத்துக் கொள்வோம். இது ஒரு கதையின் துளி என்பதும், இவ்விரண்டு சித்தரிப்பிலும் உள்ள அழகியலும் அதில் உள்ள நுட்பமான வேறுபாடும் (young enough to be good looking) ஒரு புறமிருக்க, சால்ட்டரின் கதைகளில் உள்ள பெண்கள் இப்படித்தான் ஆண்களால் எந்தளவுக்கு விரும்பப்படுவார்கள் என்ற தராசில் எடை போடப்பட்டு வகைப்படுத்தப் படுகிறார்கள் என்று வாதிட முடியும்.
பெண்களை அடைவதையே நோக்கமாகக் கொண்ட ஆண்கள் இவர்களை வெறும் சதைப் பிண்டமாகவே பார்க்கிறார்கள், கசையடி தருவது போன்ற பாலியல் பிழற்வுச் (fetish) செயல்களால் -அச்செயலுக்கு முற்றிலும் தயாராகாத – பெண்களை இழிவு செய்கிறார்கள். பிரிந்திருந்த மனைவியுடன் சேர்ந்த பின் தான் தொடர்பு வைத்திருந்தப் பெண்ணை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆணால் உதறித்தள்ள முடிகிறது (‘Dusk‘). மகனை விபத்தில் இழந்து, கணவனும் பிரிந்து சென்ற பின், பற்றிக்கொள்ள கிடைத்த ஒரு உறவையும் இப்போது இழந்து, வேட்டைக் காலத்தில் (open season) ஒரு நாளன்று சுடப்பட்ட வாத்துக்கள் குறித்து “…lay one of them, dark sodden breast, graceful neck still extended, great wings striving to beat, bloody sounds coming from the holes in its beak,” என்று அப்பெண் எண்ணுவது வாத்துக்களுக்கு மட்டுமில்லாது நிராதரவாக இருக்கும் அவளின் சூழலுக்கும் பொருந்தும்.
ஆனால் இதற்கு எதிரான வாதத்திற்கான சான்றுகளையும் சால்ட்டரின் கதைகளில் இருந்தே கொடுக்க முடியும். இக்கதைகளில் பேராண்மை விழைவு (macho, hard boiled) கொண்டவர்களாக மட்டுமே இல்லாமல், மென்னுணர்வு கொண்டவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள். அதே ‘Comet‘ கதையில், இளமையின் இறுதித் தழல்கள் சூழ இருக்கும் அப்பெண்ணை அவள் கணவன் “…could have licked her palms like a calf does salt,” என்ற சித்தரிப்பிலும், “Arlington” கதையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடும் மனைவியைக் குறித்து “To put your hand on the small of her naked back was to have all you ever hoped to possess,” என்றும், அவளின் நம்பிக்கை துரோகம் குறித்து “He was loyal to her. It was one-sided, but that was enough,” என்றும் எண்ணுவதும், பெண்மைக்கு முன்னால் மண்டியிட்டு, தலைவணங்கி நிற்கும் ஆணையே காட்டுகின்றன.
ஆண்களின் கைக்கு சிக்காமல் எப்போதும் சற்று எட்டியே இருக்கும் தேவதைகள் போன்ற பெண்களும் இக்கதைகளில் உள்ளார்கள். ‘My Lord You‘ கதையில் மணமானப் பெண் ,எழுத்தாளர் ஒருவரின் வீட்டினுள் நுழைகிறார். யாரும் இல்லாத வீட்டில் அறை அறையாகச் செல்லும் அவர் அவ்வீட்டை தோட்டத்துடன் இணைக்கும் குளியலறைக்குள் நுழைகிறார். கண்ணாடியின் முன் நிற்கும் அவர், தன் மேலுடைகளை எந்த யோசனையோ/ காரணமோ இல்லாமல் கழற்றுகிறார். கதைக்குத் தொடர்புடைய நிகழ்வு இல்லை என்றாலும் இது உருவாக்கும் பெண்மையின் பிம்பம், கிளர்ச்சிக்கு மாறாக மூச்சடைக்க வைக்கும் திகைப்பையும், சிறிது அச்சத்தையும் ஒரு சேர உருவாக்கி அவரை அப்போது பார்ப்பவரை செயலற்றவராக ஆக்கக்கூடியது. வெளியே எங்கும் ஒளி சூழ்ந்த நிசப்தமாக இருக்க, அப்பெண் யாரும் அடையமுடியாத யட்சியைப் போல் அக்கணத்தில் அவ்வறையில் தோற்றம் கொள்கிறார்.
‘Palm Court‘ கதையில் வரும் ஆர்த்தர்(Arthur), நொரீனுடன் (Noreen) நெருங்கிப் பழகுகிறான். பிறகு அவள் தான் இன்னொருவனுடன் பழக ஆரம்பித்ததை சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்கிறான். ஓர் இரவு அவன் இல்லத்திற்கு வரும் நொரீன் தான் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அது குறித்து அவனுக்கு ஏதேனும் கருத்து உள்ளதா என்றும் கேட்கிறாள். அப்போதும் ஆர்த்தர் எதுவும் சொல்வதில்லை (இதே போல் ஒரு நிகழ்வு ‘The Remains of the Day‘ நாவலில் வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம்). பல்லாண்டுகள் கழித்து, இப்போது விவாக ரத்தான நொரீன் மீண்டும் அவனை சந்திக்க வருகிறாள். அவள் அவனுடன் மீண்டும் உறவேற்படுத்திக்கொள்ள நினைக்கிறாள் என்று தெரிந்தும், தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளதாக பொய் சொல்கிறான். இதைக் கேட்டு தன் கைகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நொரீன் பிறகு அவனை நோக்கி புன்னகைக்கிறாள். தன்னை அவள் எப்போதும் புரிந்து கொள்வாள், எனவே மன்னிக்கிறாள் என்று அவன் எண்ணுகிறான். நெகிழ்வான காட்சி. அவளிடம் விடை பெற்று வருபவன், ஆர்த்தர் ஏன் பொய் சொன்னான்? வெளிக்காட்டாவிட்டாலும் அவள் மீது வஞ்சம் கொண்டிருந்தானா? “He thought of the love that had filled the great central chamber of his life and how he would not meet anyone like that again,” என அவன் இல்லத்திற்கு திரும்புகையில் யோசிப்பதில் இந்தக் கேள்விக்கான விடை இருக்ககூடும். நொரீன் குறித்த அவன் மனதில் உள்ள சித்திரத்தை பாழ்படுத்த விரும்பாமல் இருந்திருக்ககூடும், அதே நேரம் தான் இனி அடைய முடியாததின் துயரை எண்ணியே தன் இல்லத்திற்கு செல்லும் வழியில், வீதிலேயே உடைந்து அழத் தொடங்குகிறான். கதை முடிகிறது.
‘Give‘ கதை கதைசொல்லியின் திருமண வாழ்க்கை பற்றிய சித்தரிப்போடு (ஒருவர் தன் துணையிடம் பிடிக்காத குணத்தைப் பற்றி சண்டையிடுவதற்கு பதிலாக, அதைத் என்னிடம் தந்து விடு எனக் கேட்டு, அப்பழக்கத்தை விட்டொழிக்கும் விதத்தை கண்டுகொள்கிறார்கள்) அராஜக குணம் கொண்ட கலைஞன் என்ற வகை மாதிரி பாத்திரமான பில்லியுடனான (Billy) அவனுடைய நட்பு பற்றியும் சொல்கிறது. பில்லி இவர்களுடன் தங்க வருகிறான். கதையின் போக்கு இவ்வாறு இருக்கும் என வாசகன் யூகிக்க ஆரம்பிக்கும்போது, கதைசொல்லிக்கும், பில்லிக்குமான தன் பால் உறவை தந்து/ விட்டு விடுமாறு கதைசொல்லியின் மனைவி கண்ணீருடன் கேட்கிறார். கதைசொல்லி அதை மறுக்க, அப்படி எந்த உறவும் இல்லையென்றால் பில்லியை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்று சொல்கிறாள். கதைசொல்லி இதை பில்லியிடம் கூறும்போது அவன் மனைவி பில்லியிடம் பேசவே விரும்பவில்லை என்று மிகைப்படுத்திக் கூறுகிறான். பில்லி அவர்களை நீங்கிச் செல்கிறான். மனைவிக்கும், தன் முதற் காதலனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கதைசொல்லி எடுத்திருக்கக்கூடிய எந்த முடிவும் அவனுக்கும், மனைவி/ நண்பன் இருவரில் ஒருவருக்கும் துயரத்தையே கொடுத்திருக்கக்கூடும். கதைசொல்லி ஏன் பில்லியிடம் பொய் சொல்லவேண்டும், அவனுக்கே அவ்வுறவு சலித்து விட்டதா என்ற சந்தேகம் அவனைப் பிரிந்தபின், “I felt the injustice for a long time.. I followed him from afar, the way a woman does a man she was never able to marry,” என்று அவன் மருகும்போது நீங்கி விடும்.
மிக மென்னுணர்ச்சி கொண்டவர்களாக இருக்கும் இக்கதையின் கதைசொல்லி மற்றும் ஆர்த்தரை (‘Palm Court‘) மிக சோகையானவன் (wimp) என்றும் \கூட ஒருவர் இரக்கமின்றி சொல்லக் கூடும். முதல் பார்வையில் ஹெமிங்வேயின் பாத்திரங்கள் போல் தோற்றமளிக்கும் சால்ட்டரின் பாத்திரங்கள், அவற்றிலிருந்து நுட்பமாக வேறுபடும் இடம் இது என்று சொல்லலாம். ஆண்-பெண் உறவெனும் ஆடலில் ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொண்டே இருப்பதின் இரு பக்கங்களை உணர்த்துகின்றன எனவாறு இக்கதைககளை புரிந்து கொள்ளலாம்.

பாலியல் விழைவுகள் பற்றிய இன்னொரு விபரீத பிழற்வையும் இவர் கதைகளில் காண முடிகிறது. “I want to be yours” என்று ஒரு மூன்று வயது பெண் குழந்தை தன் தந்தையிடம் சொல்வதாக வரும் – கதையின் (‘Platinum‘) போக்கிற்கு நேரடி தொடர்பில்லாத- உடனடியாக கடந்து செல்லப் படும் இடம் வாசகனை உறைய வைக்கும். இதே போல் ‘Bangkok‘ கதையில் குழந்தைகள் மீதான பாலியல் விழைவு குறித்தும், ‘Foreign Shores‘ கதையில் குழந்தைகள் பாலியலுக்கு பயன்படுத்தப்படுவது குறித்தும், ‘American Express‘ கதையில் 25-35 வயதில் இருக்கும் இளைஞன் பள்ளிச் சிறுமியை பாலுறவுக்காக வசப்படுத்துவது எனவும் சில சுட்டல்கள் (விரிவான சித்தரிப்புக்கள் அல்ல) உள்ளன. “Men’s dream and ambition is to have women, as a cat’s is to catch birds, but this is something that must be restrained,” என்று சால்ட்டர் ஒரு கட்டுரையில் சொன்னதாக மேற்கோள் காட்டப்படும் (மூலக் கட்டுரையின் சுட்டி இணையத்தில் கிடைப்பதில்லை) கூற்றின் பின்புலத்தில், இக்கதைகளில் உள்ளபாலியல் விழைவுகளை வாசகன் ஆராயக் கூடும்.
“.. a thirst rose in him, a desire to be recognized. He was walking for the hundredth time on streets which in no way acknowledged him…” என்ற ‘Via Negativa‘ கதையின் போராடும் எழுத்தாளன் நைலின் (Nile) விழைவு சால்ட்டரின் புனைவுலகின் இன்னொரு பொது அம்சம். “There’s no greatness without fame” என்று அவருடைய “Light Years” நாவலில் Viri சொல்வதும், “All that is” நாவலில் Philip Bowman தேடுவதும் இந்த அங்கீகாரத்தையே. தன் காதலியின் வீட்டிற்குச் செல்லும் நைல் “Viking” பதிப்பகம் தன் எழுத்தில் ஆர்வம் காட்டியிருப்பதாக சொல்கிறான். காதலி அது குறித்து அதிகம் ஆர்வம் கொள்ளாமல், அதே நேரம் மறுதலிக்காமல் இருப்பதிலிருந்து இது அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தும் யுத்தி என்றும், அவள் அதற்குப் பழகி, தான் அதை நம்பாவிட்டாலும் நைலுக்கு அதில் ஒரு மனநிறைவு கிடைத்தால் அதை ஏன் குலைக்க வேண்டும் என அமைதி காக்கிறாள் என்றும் யூகிக்க முடிகிறது. ஆனால் அந்த அமைதியே அவளுடைய எண்ணத்தை வெளிப்படுத்த நைல் மேலும் மேலும் பேசி அவளை நம்ப வைக்க முயன்றாலும், அவள் செயற்கையான ஆர்வத்தைக் காட்ட தயாராக இல்லை. இது நைலை நிலைகுலையச் செய்கிறது. அவள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின், பித்து நிலையில் வீட்டின் பொருட்களை நாசம் செய்து நைலும் வெளியேறுகிறான். இப்போது தெருக்களில் “They recognize me, he thought, they smell me in the dark like mares.” என அவன் எண்ண ஓட்டமே மாறுகிறது. இதுவும் அவனுடைய கற்பனைதான். காதலி வீட்டை நாசம் செய்தது கீழ்மையான செயல் தான் என்றாலும், கையறு நிலையின் வெளிப்பாடான அச்செயல் அவனுடைய மனச் சோர்வுக்கு ஒரு தற்காலிக வடிகாலாக உள்ளது என்பதும் உண்மையே.
“Lost Sons” கதையில், பல்லாண்டுகளுக்கு முன் தான் இராணுவ பயிற்சி எடுத்த அணியின் உறுப்பினர் சந்திப்பிற்காக வரும் “Reemstma” மற்றவர்களால் நுட்பமாக – அவன் கேட்கும் கேள்விக்குப் மிகச் சுருக்கமான பதில், சில நேரத்தில் அதுவும் இல்லை, அவனுடைய தற்போதைய வாழ்க்கை சூழல் பற்றிய அக்கறையின்மை -உதாசீனப்படுத்தப்படுகிறான். அவனுடைய இராணுவ வாழ்க்கை பற்றி அவன் மனைவியே கூட அதிகம் அறிந்திருக்கவில்லை என்றும், அவளுக்கு அதில் விருப்பமும் இல்லை என்றும் தெரியவருகிறது (எனவே அவள் இச்சந்திப்பிற்கு வரவில்லை). கடந்த காலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாத தனிமையில் உள்ள அவன் நிலைமை பரிதாபத்திற்குரியது. இப்போது அவன் ஓவியனாக உள்ளான் என்று தெரிந்தவுடன் அங்கு வந்துள்ள மற்ற ஆண்களின் மனைவிகள் அவனை வினோத ஜந்து போலப் பார்த்து “Do you make a living out of it?” என்று எங்கும் கலைஞர்களிடம் கேட்கப்படும் கேள்வியை அவனிடம் கேட்கிறார்கள். ஒரு பெண் அவனிடம் சற்றே அதிகம் கரிசனம் கட்டுவதாக என்னும் Reemstma அக்கரிசனம் விரிவது குறித்த கற்பனையில் ஈடுபடுகிறான். ஆனால் அவள், இவர்கள் அணியில் இப்போது புகழ் பெற்று இருக்கும் ஒருவனுடன் கூடுகிறாள் என்று சுட்டப்படுகிறது, அதை Reemstmaவும் உணர்கிறான்.
ஆணின் அங்கீகாரத்திற்கான வேட்கைக்கு, அவன் அடைந்ததாக எண்ணும் தோல்விகளுக்கு வடிகாலாக, பெண் (தன் கையாலாகாத்தனத்தை ஈடு செய்ய பெண்ணை அடைய நினைத்தல் / துன்புறுத்துதல்) தான் இரையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுவது நியாயமே. அதே நேரம் அவள் விடைபெறும்போது “It was very nice meeting you” என்று சம்பிரதாயமாக சொல்லிச் சென்றதைக் கூட எண்ணிப்பார்த்து, அவள் உணர்வுப்பூர்வமாகவே அப்படிச் சொல்லி இருப்பாள் என்று நினைத்து ஆறுதல் கொள்ள முயன்று, அந்த ஒற்றை வரியில் நிறைவைத் தேடும் Reemstmaவின் தனிமை கொடுமையானதே.
சால்ட்டரின் கதைகளில் இருந்து வாசகன் பெற்றுக் கொள்வது என்ன?. ‘Bangkok‘ கதையில் கரோல் (Carol) ஹாலிஸை (Hollis) பார்க்க வருகிறாள். பல காலத்திற்குப் பின் அச்சந்திப்பு நிகழ்கிறது என்றும், அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்து பிறகு பிரிந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. “She had been coming out of a restaurant one time, down some steps long after lunch in a silk dress that clung around the hips and the wind pulled against her legs. The afternoons, he thought for a moment,” என்று ஹாலிஸ் நினைவுகூர்கிறார். உணவு விடுதியில் இருந்து கரோல் வரும் காட்சிக்கு, எளிதில் கடந்து செல்லக் கூடிய பின்குறிப்பாக உள்ள “The afternoons, he thought for a moment,” என்ற வரி ஏன்? அவ்வரியில் ஹாலிஸின் அகக்கண்ணில் மட்டும் விரியும் காட்சிகள் – கண்ணாடி வழியே பொழியும் ஒளியினூடாக உணவு, மூடிய அறைகளின் சாளரங்களின் திரைச்சீலையினூடாக வரும் மெல்லிய ஒளியினூடாக மஞ்சத்தில் பாலுறவிலோ, மெல்லிய குரலில் பேசுவதிலோ ஈடுபடுவது – என எத்தனை மதியப் பொழுதுகள், அதை கவனிக்கத் தவறாத வாசகனின் அகத்திலும் தோன்றக்கூடும். தவற விட்டு விட்ட, இனி எப்போதும் மீண்டும் கிடைக்காத பல பொழுதுகள், துயரையும்/ இன்பத்தையும் சம அளவில் தோற்றுவிக்கும் அவற்றின் கணங்களை வாசகன் இந்தக் கதைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும்போது, தான் இழந்த இத்தகைய கணங்களையும் நினைவில் ஒளிரூட்டிக் கொள்வான். சால்ட்டரின் தலைப்புக்களின் வழி சொல்வதானால், ஒளியால் சூழப்பட்ட ஆண்டுகளின் (Light Years), அவியாக அளிக்கப்படும் நாட்களின் (Burning the days), எச்சமாக மிஞ்சுபவை (All that is) இக்கணங்கள்தான் இல்லையா?
குறிப்பு
“James Salter is a magician” என்று ஜான் பான்வலும் (John Banville) “It is an article of faith among readers of fiction that James Salter writes American sentences better than anyone writing today” என்று ரிச்சர்ட் போர்டும் (Richard Ford) சால்ட்டர் பற்றி சொல்கிறார்கள். சால்ட்டர் குறித்த பல புகழுரைகள் இருக்க, எழுத்தின் இரு வேறு தளங்களில் இயங்கும் – பான்வல் போன்ற நடையாளரும் (stylist), போர்டு போன்ற கறைபடிந்த யதார்த்த (dirty realism) எழுத்தாளரும் – ஒன்று போல் சால்ட்டரை உயர்வாக மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகிறது. எனினும், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி எழுத்துலகிற்கு வந்து தன் 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில், 6 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புக்கள் (20 சொச்சக் கதைகளே எழுதியுள்ளார்), நினைவுக் குறிப்பு நூல், மற்றும் பல அபுனைவு நூல்கள், திரைத்துறைப் பணி எனப் பலத் தளங்களில் இயங்கிய அவர் மைய நீரோட்டத்தின் கவனத்தைப் பெறவில்லை. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்பது போன்ற சொற்றொடர்களால் அவர் பாராட்டப்பட்டார்/விலக்கியும் வைக்கப்பட்டார். எழுத்தாளனின் வாழ்க்கையை அவன் புனைவில் தேடுவது அத்தியாவசியமானது இல்லையென்றாலும், அமரத்துவத்தை நாடும் அவர் பாத்திரங்களில் சால்ட்டரின் விழைவை உணர முடியும் என்று தோன்றுகிறது.
2013ல் வெளிவந்த அவருடைய இறுதி நாவல் ‘All that is‘ (அவருடைய மற்ற நூல்களுடன் ஒப்பீட்டளவில்) சற்றே பரவலான வெகுஜன கவனத்தைப் – நீங்கள் இதுவரை அறிந்திராத மிகச் சிறந்த எழுத்தாளர் போன்ற பாராட்டுரைகள்- பெற்றது அவருக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கக் கூடும். ஆனால் அதையும் அவர் சற்று அவநம்பிக்கையுடனேயே பார்த்துள்ளார்.
“Apparently, I have an audience, and this book is awaited.. “
“We’ll see what the truth of that is. I don’t want to get too excited about it one way or another. You can work yourself into a state of nerves: What did they say? What have you heard?”
என்று அவர் சொல்வது வெறும் அணிச் சொற்கள் அல்ல எனபதை ஒரு கட்டத்தில், எழுதுவதற்கான நம்பிக்கையை இழந்து, 6-7 ஆண்டுகள் எதுவும் எழுதாமலேயே இருந்ததாக அவர் குறிப்பிடுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உணர முடியும். தான் எதிர்பார்த்திராத இந்த வரவேற்ப்பைப் பற்றி கூட “It’s gratifying but a little unreal at the same time…The clothes feel a little loose on me, if you know what I mean.” என்று துயர அழகியலோடு சொல்ல அவரால் முடிகிறது. எனினும், அதில் முழுமையாகத் திளைக்க முடியாதவாறு 2015ல் அவர் காலமானது நகைமுரண் என்றாலும், காலம் கடந்தாலும் சிறிதளவேனும் தனக்கு அங்கீகாரம் கிடைப்பதை (அது கூட கிடைக்காத பலர் உள்ளனர் எனும் போது) அவர் கண்டார் எனபது சற்று ஆசுவாசமளிக்கிறது.
Dusk and Other Stories, Last Night என்ற அவருடைய இரு தொகுப்புக்களின் கதைகள் ‘Collected Stories‘ என்று ஒரே நூலில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – ஜிஃப்ரி ஹாசன்
ஞாபகங்களால் நிரம்பியுள்ளது எனது வீடு. வெறுமையான சுவர்களில் ஒட்டி இருக்கின்றன நினைவுகள். என்னை மெளனம் போர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் இதயத்தை நிரப்புகின்றன ஞாபகங்கள். வாழ்வு பற்றிய ஞாபகங்களுக்கு அஞ்சி ஒரு குழந்தையைப் போல் வீட்டின் மூலைகளில் பதுங்கிக் கொள்கிறேன். யன்னலின் வழியே யாரோ அழைக்கும் குரலுக்கு செவிசாய்த்தலின்றி என்னைக் கள்ளத்தனமாய் மூடுகிறது மௌனம். ஞாபகங்களின் கரங்கள் கதவில் பயங்கர இரைச்சலுடன் தட்டத் தொடங்குகையில் மௌனத்தின் ஆமை ஓட்டுக்குள் பதுங்குகிறது மனம். இந்தப் பொழுதும் ஞாபகமாய் நெஞ்சில் அறையுமுன் அதன் கனவுகள் இதயத்தில் இடறு முன் என் கதாபாத்திரத்தை நான் மாற்றிக் கொண்டு வருகிறேன். ஏனெனில், ஞாபகங்களால் நிரம்பியுள்ளது என் வீடு.