
நாங்கள் ஊர் திரும்பிய பிறகு, ஐரோப்பாவில் எங்கோ வரப்போகும் யுத்தத்தைப் பற்றிய வதந்தி காற்றெங்கும் நிரம்பியிருந்தது. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், வண்ணக்கழுத்துக்கு போர்ப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். ஒருவேளை பிரிட்டிஷ் போர்த் துறை சார்பில் தூது செல்ல அவன் அழைக்கப்பட்டால் இப்பயிற்சி அவசியமானதாக இருக்கும். வடகிழக்கு இமாலயத்தின் தட்பவெட்பநிலைக்கு அவன் பழக்கப்பட்டுவிட்டதால், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அவன் ராணுவத்தின் இன்றியமையாத தூதுவனாக இருக்கமுடியும். இன்றும் கூட, கம்பியில்லாத் தந்தி, வானொலி போன்றவை இருந்தாலும் கூட எந்தவொரு படைக்கும் தூதுப் புறாக்கள் இல்லாமல் முடியாது. இந்தக் கதை தானாக விரியும் போது இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குப் புரியவரும்.
போருக்கான தூதுப் புறாக்களைப் பயிற்றுவிக்க நானாகவே வகுத்துக்கொண்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றினேன். அதற்கு கோண்டின் ஒப்புதலும் இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், அந்த வயசாளியும் எங்களுடனேயே நகரத்திற்கு வந்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். பிறகு, கிளம்ப முடிவு செய்தார். “இந்த நகரைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எந்த நகரத்தையும் நான் விரும்பியதில்லை என்றாலும் இந்த நகரம், ட்ராம் வண்டிகளாலும் மோட்டார் வண்டிகளாலும் என்னை பயமுறுத்துகிறது. சீக்கிரமே இந்த நகரின் தெருப்புழுதியை என் காலிலிருந்து உதறித் தள்ளாவிட்டால், நான் கோழையாகிப் போய் விடுவேன்.. காட்டுப் புலியும் என்னை பயமுறுத்தியதில்லை, ஆனால் ஒருமோட்டார் வண்டி பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நவீன நகரங்களில் சாலையைக் கடப்பதில் ஒரு நிமிடம் பணயம் வைக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை, மிகப்பயங்கரமான காடுகளில் ஒரு நாள் முழுக்க இருக்கும் ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காட்டிலும் அதிகம். போய் வருகிறேன். எங்கே மரங்கள் அமைதியை ஆடையாய் உடுத்தியிருக்கின்றவனோ, எங்கே காற்று மாசும் வாடைகளும் அற்று இருக்கிறதோ, வெட்டி எடுக்கப்பட்ட ரத்தினம் போன்ற வானம் எங்கு கம்பங்களாலும் தந்திக் கம்பிகளாலும் குறுக்கும் நெடுக்கும் வெட்டப்படாமல் முழுமையாக இருக்கிறதோ, அங்கே போகிறேன். தொழிற்சாலையின் சங்குகளுக்கு பதில் பறவைகளின் சத்தங்களைக் கேட்கலாம், திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பதிலாக அப்பாவி புலிகளையும் கருஞ்சிறுத்தைகளையும் நேருக்கு நேர் பார்க்கலாம். போய் வருகிறேன்!” என்று கிளம்புவதற்கு முன் சொன்னார். (more…)