Author: பதாகை

சவாரி

அதிகாரநந்தி

நான் ஏறிக் கெண்டேன்
ஏன் என்றெல்லாம் கேட்காதீர்
ஏறிக் கொண்டேன் அவ்வளவு தான்
இப்படி ஓடுமென்று யார் கண்டார்கள்
விழுந்துவிடலாம்
ஆசை விடவில்லை

வேகமுமில்லை
திசையுமில்லை
ஒன்றுமில்லை என்கையில்
ஒருபிடி பிடறி மயிரைத்தவிர

பிடித்திழுக்கலாம்
கட்டி முத்தமிடலாம்
இது எனது சவாரி
எனது விருப்பப்படி

அருண் கொலாட்கர்- தமிழாக்க கவிதைகள் இரண்டு

நம்பி கிருஷ்ணன்

மகராண்ட்:

பூஜை செய்வதற்காக
சட்டையைக் கழற்றிவிட்டு
உள்ளே செல்ல வேண்டுமா
யார், நானா?

நன்றி. ஆனால் வேண்டாம்
நீங்கள் தாராளமாக உள்ளே செல்லுங்கள்
உங்களுக்கு அப்படியொரு விருப்பமிருந்தால்.

போகுமுன்
வத்துப்பெட்டியை என்னிடம்
தந்துவிட்டு போக முடியுமா ?

நான் வெளியே முற்றத்திலிருக்கிறேன்.
அங்கு யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள்
நான் புகை பிடிப்பதை.

மனோஹர் :

கதவு திறந்திருந்தது.
இன்னொரு கோவிலா?
மனோஹர் நினைத்தான்.

உள்ளே எட்டிப் பார்த்தான்
எந்த சாமி எங்கிருக்குமோ என்பதை
கற்பனை செய்தபடியே.

சட்டென தலையை திருப்பிக்கொண்டான்
கன்றொன்று அகல்விழிகளுடன்
அவனைத் திரும்பிப் பார்த்த போது.

இது கோவிலே இல்லை
வெறும் மாட்டுக்கொட்டில்
என்று கூறிக்கொண்டான்.

அப்பாவிற்கான கனவுகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

little_girl_sleeping

அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.

பெரிய இறக்கைகளோடு
பறக்கும் வீடு ஒன்று
அப்பாவின் முதுகு போல்
அவளை சுமந்து செல்கிறது எங்கும்

அவள் கனவில் வரும்
புத்தகங்கள் எல்லாம்
அப்பாவின் குரலில் கதைசொல்கின்றன.

குதித்தோடும் தோட்டத்து முயல்கள்
அப்பாவின் பற்களைக் காட்டி
சிரித்து செல்கின்றன.

அப்பாவின் விழிபுலத்தை நிறைத்தபடி
அலங்கார மேஜையின் கண்ணாடி
அவளைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது

அம்மா கூட
அப்பாவின் கரங்களோடுதான்
உணவு ஊட்டிவிடுகிறாள்.

கிளைகள்தோறும்
ஊஞ்சல்களை வீசி ஆடியபடி
கூடவே நடந்து வரும்
மரங்களின் காற்று
அப்பாவின் மூச்சு போல
அவளை ஆசுவாசமடைய வைக்கிறது.

அவள் கனவுகள் எதுவும்
கலைந்து போகாமலிருக்கும்
ஒரு கனவை
அவனும் எழுதி வைக்கிறான்.

அஜ்ஜி மாதிரி

இருவரும் சாக்லேட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தனர் அவள் போன பின்பும் வெகு நேரம் அவள் போன திசையை குழப்பத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான் தந்தை “அப்பா, சாக்லேட் வேணும்” மகனும் மகளும் ஒற்றை குரலில் கேட்டார்கள் நான் ஏதோ வாங்க அந்தக் கடைக்கு சென்றிருந்தேன் என்ன வாங்கச் சென்றேன் இப்பொழுது மறந்துவிட்டது “இல்லை” என்றான் அவன் நடுத்தர வயது உடம்பு முழுக்க மரத்தூள் ஏதோ அபார்ட்மெண்ட்டில் கார்பெண்டர் வேலை செய்கிறான் போல்

கலைந்த கேசம் அதிலும் மரத்தூள் அழுக்குச் சட்டை அடர்ந்த மீசை

“அப்பாஆஆ, ஒரே ஒரு சாக்லேட்” சிணுங்கினாள் சிறுமி மறுபடியும் தலையசைத்து இல்லை என்றான்

பட்டுப் புடவை கட்டிய மூதாட்டி ஒருவர் ஏதோ வாங்க வந்தார் ஏதோ கல்யாணத்திற்குச் செல்கிறார் போல் “எந்த சாக்லேட் வேணும்?” என்று சிறுவர்களைக் கேட்டார் இருவரும் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு தந்தையை பார்த்தனர்

“சொல்லு. எந்த சாக்லேட் வேணும்?” என்று கேட்டார் மறுபடியும் கண்ணாடிப் பெட்டிக்குள் பளபளக்கும் சாக்லேட்டை இருவரும் நோக்கினர் பிறகு தந்தையை தந்தையின் அசையும் தலையை இருவரும் வேண்டாம் என்று தலையசைத்தனர்

“நான் உங்களுக்கு அஜ்ஜி மாதிரி. சீக்கிரம் சொல்லுங்க நான் வேற எடத்துக்கு போகணும்”

“வேண்டாம்” என்றான் தந்தை “விடுய்யா, அவங்க பாட்டி போல. ஆசையா வாங்கி தராங்க குழந்தைங்க சாப்பிடட்டும்” என்றான் கடைக்காரன்

குழந்தைகளில் கண்களில் ஆசை மறுபடியும் இருவரும் தந்தையைப் பார்க்க “இந்த சாக்லேட் ரெண்டு கொடு” என்று கேட்டு வாங்கி குழந்தைகளிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள் பாட்டியம்மா.

புத்தக கண்காட்சி – எம். ஏ. சுசீலாவுடன் ஒரு நேர்முகம்

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், செவ்வியல் மொழியாக்கம், பெண்ணிய ஆய்வு என்ற பல தளங்களில் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் புதிய படைப்பாக ‘யாதுமாகி’ நாவல் இவ்வருடம் வம்சி வெளியீடாக வருகிறது. இவருடைய முந்தைய படைப்பான ‘அசடன்’ (தஸ்தெய்வ்ஸ்கியின் ‘இடியட்’டின் தமிழ் மொழியாக்கம்) பல விருதுகளை பெற்று பெருவாரியான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நூல் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சுசீலா அவர்களுடன் பதாகை நிகழ்த்திய உரையாடல் –

yathumaagi

செவ்வியல் இலக்கிய ஆக்கங்களில் ஆழ்ந்த புலமையும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை எடுத்துச் செல்லும் வழிகாட்டியான பொறுப்பும் அனுபவமும் கொண்ட நீங்கள், ஒரு புது நாவல் படைப்பிற்காக மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டியிருந்ததா? இலக்கிய வகுப்பெடுப்பதும், இலக்கிய உருவாக்கமும் முரணான மனநிலைகள் கொண்டு செயல்பட வேண்டியதாக இருக்கிறதா?

அப்படிப்பட்ட முரணான மனநிலைகள் எனக்கு ஒருபோதுமே ஏற்பட்டதில்லை. மிகச்சிறு வயதிலிருந்தே இலக்கிய உருவாக்கத்தின் மீது நான் மாளாத காதல் கொண்டிருந்தேன். அதுவே வேதியியலில் இளம் அறிவியல் படித்த என்னை இலக்கியக் கல்வியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

நான் பெற்ற செவ்வியல் இலக்கியப்பயிற்சி என் மொழியை வளப்படுத்தியது. தமிழின் ஆழங்களையும் நுட்பங்களையும் அறிய வைத்தது. செவ்வியல் இலக்கிய ஆக்கங்களைப் படித்த காலகட்டம், அவற்றைப் பயிற்றுவித்த காலகட்டம் என இரண்டிலுமே சமகால இலக்கிய வாசிப்பை நான் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில் இல்லாதபோதும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஆர்வமுள்ள மாணவியருக்கு சமகாலத் தமிழ்ப்போக்குகளை இனம் காட்டிக் கொண்டிருந்தேன். சங்கத் தமிழும், காப்பியத் தமிழும், சமயத்தமிழும் இவை எதுவுமே படைப்பிலக்கிய உருவாக்கத்துக்கு இடையூறாக என் நடையையோ உள்ளடக்கத்தையோ பாதிக்கவில்லை; அவற்றை அடித்தளங்களாக மட்டுமே கொண்டு பண்டித நடையின் குறுக்கீடுகள் இன்றிக் கதைகளை எழுதிக்கொண்டு போவது ஒன்றும் இயலாத செயல் அல்ல; நான் செய்ததும் அதைத்தான். இளம் வயது முதல் நான் படித்த ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எனக்குத் துணையாக நின்றபடி – நான் பெற்ற இலக்கியக்கல்வியும் நான் போதிக்கும் இலக்கியமும் எந்த வகையிலும் என் படைப்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

1979 முதல் என் சிறுகதைகள் வரத் தொடங்கி விட்டதால் என்னை நான் மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவையே எனக்கு ஏற்படவில்லை. மேலும் முனைவர் பட்டத்துக்காக நான் தேர்ந்து கொண்டதும்கூட நவீன இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. என் நவீன இலக்கியச்சார்பு, சங்கத் தமிழைக்கூட நவீன இலக்கியப்பாணியில் கற்பிக்கும் கலையை எனக்கு சொல்லித் தந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். (more…)