Author: பதாகை

கொலாட்கரின் ஜெஜூரி, ஓர் அறிமுகம் – அமித் சௌத்ரி

(நியூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் கிளாசிக் பதிப்புக்கு அமித் சௌத்ரி எழுதியுள்ள ஓர் அறிமுகம்)

1976ஆம் ஆண்டில் ஜெஜூரி பதிப்பிக்கப்பட்டபோது என் வயது பதினான்கு. அதைப் பற்றி அடுத்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். அப்போது அந்த நூல் காமன்வெல்த் கவிதைப் பரிசு வென்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்திருந்தது, அதனுடன் அருண் கொலாட்கர் பற்றிய ஒரு கட்டுரையையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியாக இருந்தால், அதன்பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கவிஞர், புத்தகம், மற்றும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாத்திரைத் தலமான ஜெஜூரி பற்றிய கட்டுரைகள் அந்தச் செய்தித்தாளில், வந்திருந்தன. அப்போது அதில் பார்த்த ஒரு புகைப்படத்தால்தான் கொலாட்கரின் தொங்கு மீசையும் நீண்ட தலைமுடியும் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்.

இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்பதுபோல் இப்போது கடந்த பத்தாண்டுகளாக பாவனை செய்து கொண்டிருக்கும் அந்தச் செய்தித்தாள், ஒரு கவிஞருக்காக அத்தனை நியூஸ்பிரிண்ட்டை அப்போது செலவு செய்தது என்பது இன்று அசாதாரண விஷயமாகத் தெரிகிறது; ஆனால், பம்பாயின் பண்பாட்டுச் சூழல், ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய கவிதைகளின்பால் அன்றெல்லாம், ஏறத்தாழ எதுவுமே யோசிக்காமல், வரையறைத்துக் கொள்ளாமல், நட்பு பாராட்டுவதாகத்தான் இருந்தது, தான் பொழுதுபோக்கு கேளிக்கைகளாகக் கொண்ட பலவற்றுக்கும் காட்டிய அதே இணக்க உணர்வுதான் இங்கும் அதற்கிருந்தது. (more…)

றியாஸ் குரானாவுடன் ஒரு நேர்முகம்

பதாகை வாசகர்களுக்கு றியாஸ் குரானாவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாண்டு பதிப்பிக்கப்பட உள்ள தனது கவிதை தொகுப்பு குறித்து, பதாகையுடன் அவர் நிகழ்த்திய மின் அஞ்சல் உரையாடல் இங்கு- 

பதாகை – இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தங்கள் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டம் என்ன என்று சொல்ல முடியுமா?

றியாஸ் குரானா – கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.

பதாகை – இதில் உள்ள கவிதைகளுக்குப் பொதுத்தன்மை உண்டா?

றியாஸ் குரானா – பொதுவாக கவிதை என்பதற்கு பொதுத்தன்மை இல்லை. ஆனால், கவிதைகள் குறித்து பேச முற்படுபவர்கள், அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். பொதுத்தன்மையை கண்டடைவதும், பொதுத்தன்மையை உருவாக்குவதுமே கவிதைப் பிரதிகளை அனுகுவதற்கான விமர்சன முறை என நினைத்திருக்கின்றனர். உண்மையில் அதிகம் பாவிக்கப்படும் விமர்சன முறையும் இதையே கோருவதாக இருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால், விரிந்த தளத்தில் அல்லது ஆழமாக தென்படுவது, பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் துாண்டும் விமர்சனமுறைதான் தேவையான ஒன்று. ஒன்றிலிருந்து மற்றது எப்படி வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்போதுதான் கவிதைப்பிரதி உயிர்ப்பு நிறைந்ததாக செயலுக்கு வருகிறது. இப்படி வேறுபாட்டை நோக்கி சிந்திக்கும்போதுதான் பொதுத்தன்மை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. வேறுபாட்டை அறிந்துகொள்ளும் நோக்கில் பிரதியை அணுகும்போது சந்திக்கும் பொதுத் தன்மைகள் கவிதையில் நடந்திருக்கும் மாற்றத்தை அறிவதற்கு உதவுகிறது. எனவே, பொதுத் தன்மை என்பது கவிதை குறித்த பழைய விசயங்களை அடையாளங்காண உதவுகிறது.

அத்தோடு, குறித்த ஒருவருடைய கவிதையின் பொதுத்தன்மையை முன்வைப்பதற்கு தேவைப்பாடுகள் ஏற்படும்போது மட்டும் அது பற்றி அக்கறை கொள்வதில் பிரச்சினையில்லை. அந்த வகையில் சொல்வதானால், இதிலுள்ள கவிதைப் பிரதிகளுக்கான பொதுத்தன்மை என்பது, நாம் நவீன கவிதை என நம்பிக் கொண்டிருக்கும் கவிதைப் பிரதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான். அதே நேரம் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டதே. எனது கவிதைகள் வேறுபடுவதின், அதாவது பிறிதாக இருப்பதின் அரசியலை தீவிரமாக அக்கறை கொள்கிறது. (more…)

பூமணியின் அஞ்ஞாடி – 2: இருட்டில் நிகழும் மோதல்கள்

– என். கல்யாணராமன் –

கட்டுரையின் முந்தைய பகுதி – பூமணியின் அஞ்ஞாடி – 1: அறிமுகம்

தான் அஞ்ஞாடி எழுத நேர்ந்த சுவாரசியமான கதையைச் சொல்கிறார் பூமணி. அவர் குழந்தையாய் இருந்தபோது, கட்டை விரல் இல்லாத ஒரு முதியவரைத் தன் கிராமத்தில் ஒரு மரத்தடியில் பார்த்திருக்கிறார். அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். 1899ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அருகிலிருந்த சிவகாசி டவுனுக்குள் கூட்டம் கூட்டமாக மக்கள் புகுந்து நாடார்களின் வீடுகளை சூறையாடியபோது தன் கட்டைவிரலை இழந்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். நாடார்கள் தங்கள் ஊரைப் பாதுகாத்துக் கொள்ள பயங்கரமாய் பதிலடி கொடுத்திருக்கின்றனர். முதியவர் தன் கையிலிருந்த ஈட்டியை வீசுவதற்குள் நாடார்கள் எறிந்த கல் ஒன்று அவரது வலது கையைத் தாக்கி, அவரது கட்டைவிரலை நசுக்கி விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வு ஒன்றை நேருக்குநேர் எதிர்கொண்ட அனுபவம், சிவகாசி கலவரம்பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை பூமணியின் மனதில் தூண்டிற்று. (more…)

புத்தக கண்காட்சி – பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்முகம்

kizhakku-publication-pathipagam-logo

வலைத்தள கட்டுரைகள், ஃபேஸ்புக் பதிவுகள், தொலைக்காட்சி நேர்முகங்கள் என்று இடையறாது  மும்முரமாக செயலாற்றிக் கொண்டிருப்பவரிடம், புத்தக கண்காட்சியை முன்னிட்டு உரையாட இயலுமா என்று கேட்டதும் தயங்காது திறந்த மனதுடன் பேட்டி அளித்தார்.   கிழக்கு பதிப்பகத்தின் நீண்ட பயணத்தின் ஒரு சிறு பரிமாணத்தை பத்ரி சேஷாத்ரியின் சொற்களில், பதாகை வாசகர்களுக்காக – 

பதாகை: புனைவு, கவிதை, இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் விஷயத்தில் கிழக்கு பதிப்பகத்தின் தேர்வுக் கொள்கை என்ன? அதாவது, எந்த அடிப்படையில் என்பதை விட, எந்த நோக்கத்தில்- லட்சியம் என்றே சொல்லலாம்- புத்தகங்களைப் பதிப்பிக்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பத்ரி சேஷாத்ரி: நாங்கள் பதிப்பிப்பவை பெரும்பாலும் (1) மறு பதிப்பு (2) நன்கு அறியப்பட்ட மூத்த எழுத்தாளரின் நூல்களின் முதல் பதிப்பு (3) அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகள் என்பதற்குள்ளாகவே அடங்கும். முதல் இரண்டிலும் ஆள்களைத் தேர்வு செய்துவிடுவதால் எழுத்துகளைத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மூன்றாவதில் மிக மிகச் சில முயற்சிகளை மட்டுமே வெளியிடுகிறோம். அதில் பெரிதாக கொள்கைகள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மூன்றாவதில் நாவல்கள் மட்டுமே வரும். அது முடிந்த அளவு வெகுஜன வாசகர்களை ஈர்க்கக்கூடியவையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். (more…)

புத்தக கண்காட்சி – அருண் நரசிம்மனுடன் ஒரு நேர்முகம்

america-desi-front

அறிவியல் நூல்கள் மூன்று  எழுதியுள்ள திரு அருண் நரசிம்மன் அவர்களின் அமெரிக்க தேசி என்ற சமூக நாவல் தமிழினி வெளியீடாக இவ்வாண்டு பதிப்பிக்கப்படுகிறது.  இவருடைய புனைவுகதைகளில் காணப்படும் தனித்தன்மையுடனான வடிவத்தை நாவலுக்கு எவ்வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார் என்று எதிர்பார்க்க வைக்கும் படைப்பு.   தன் நாவல் குறித்தும் இலக்கியம் தொடர்பான பிற விஷயங்கள்  குறித்தும் அவர் மின் அஞ்சல் உரையாடலில் பதாகையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு

பதாகை- அமெரிக்க தேசிஎன்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதேசுதேசி விதேசி தெரியும், அது என்ன அமெரிக்க தேசி?

அருண்-  தலைப்பில் இரண்டு சிலேடைகளை யோசித்திருந்தேன்.

அமெரிக்காவில் இந்தியர்களை பொதுவாக ‘தேசி’க்கள் (desis) என்றழைப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் என் நாவல் கதாநாயகன் பெயர் தேசிகன். சிலேடைச் சுருக்கமாய் தேசி (அவனுக்கு தன் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது).

நாவலில் எந்நாட்டினருக்கும் சளைக்காத ஒரு தமிழ் தன்னம்பிக்கையாளனை படைக்க விழைந்தேன். வீட்டில் ‘அமரிக்கை’ எனும் சொல்லை அமெரிக்கை என்றே உச்சரித்துப் பழக்கம். அதனால் தலைப்பின் முதல் பகுதியையும் சிலேடையாய் ‘அமரிக்க’ தேசி என்று வைத்திருந்தேன். அமைந்து வரவில்லை என்பதால் இறுதியில் அமெரிக்க என்றே மாற்றிவிட்டேன். (more…)