அதிகாரநந்தி

பெரியவர்களின் வீடு

நான் பெரியவர்களின் வீட்டில் இருக்கிறேன்
இங்கே நீல நிற வெண்டைக்காய்கள் கிடையாது

உங்களுக்குத் நீல வெண்டைக்காய்களைத் தெரியுமா?
உதிர்த்தால் உள்ளே சிகப்பு நிற விதைகள் இருக்குமே…

இங்கே கோடுகள் கோடுகளாக இருந்தாக வேண்டும்
வட்டங்கள் வட்டங்களாக இருந்தாக வேண்டும்

வண்ணங்களைக் குழைத்து நீரில் கலந்திருக்கிறீர்களா?
தண்ணீரில் வண்ணங்கள் வளர்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
அதாவது, வண்ணங்களை வீணாக்குவது.

இங்கே கண்ணாடியில் வரையக் கூடாது
நீரில் கலந்த வண்ணங்கள் விரைந்து ஓடுவதை ரசிக்க முடியாது

இது பெரியவர்களின் வீடு
சிறிவர்களுக்கு இடமில்லை; இங்கே இருக்க
நானும் பெரியவளாகத்தான் வேண்டும்.

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

யாருக்கோ

– அதிகாரநந்தி –

 

கீழே போய்க் கொண்டிருப்பதில் எனக்கும் சம்மதம்தான்
பார்த்ததையே பார்க்க வேண்டியிருக்கும்
இன்னும் மேலே போக வேண்டும்
உனக்கு இதெல்லாம் புரியுமா தெரியவில்லை
நாம் ஆசைப்பட்டதைத் தான் செய்யப்போகிறேன்

நாம் அறிந்த வழியில் அல்ல
எல்லோரும் இசைந்து இன்புற்று
நம்முடைய பாதையை விட்டு விலகிவிடுவார்கள்
என்பது முட்டாள்தனம்
வலி, தவிர்க்க முடியாததாகி விட்டது
மற்றவர்களுக்கும் எனக்கும்
நான் இன்னும் மேலே போக வேண்டும்
சுபிட்சத்திற்காக அல்ல
என்னைத் தெரிந்து கொள்வதற்காக
என் எல்லையைத் தெரிந்து கொள்வதற்காக

 

image credit: link2universe

எல்லைகளற்ற மனம்

– அதிகாரநந்தி –

கனவென்று ஒன்று
நிஜமென்று ஒன்று
நேற்று தச்சனாக இருந்தேன்
இன்று வீட்டுத் தோட்டம் போடுகிறேன்
நாளை ஆடுகள் வாங்குவேன்
பிறகு யானை வளர்ப்பு
சுய வரலாற்றுக்கு இவை போதுமில்லையா
குப்பைமேட்டில் விழுந்த பாகல் விதை
திசைகள் பாராது பரவி
தனக்குள்ளே சுற்றிக் கொண்டு நிற்கிறது