க. நா. சுப்ரமண்யம்

ஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை

க. நா. சுப்ரமண்யம்

ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனபோதுஅங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்தபோது ஒரு உண்மை தெளிவாயிற்று. அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களை லக்ஷ்யம் செய்யாதது மட்டுமில்லை, உற்றார் உறவினர் நண்பர்களை நசுக்கியே பணம் சேர்த்தார்கள். ஆகவேதான் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர்களை எல்லாரும் கைவிட்டு விட்டார்கள் என்று அறிந்து கொண்டேன். “ஆட்கொல்லி” என்று பணத்தைச் சொல்வதற்கு ஒரு புது அர்த்தம் அங்கு காணக் கிடைப்பது போலப் பட்டது எனக்கு. சாதாரணமாக பணத்திடம் ஈடுபாடுள்ளவனை, அவனுடைய நல்ல தனங்களைக் கொன்றுவிடும் பணம் என்றுதான் இதற்கு வியாக்கியாயனம் செய்வார்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் பணம் சுற்றத்தைக் கொன்றுவிட்டது என்பதனாலேயும் அதற்கு ஆட்கொல்லி என்கிற பெயர் பொருந்தும் என்று தோன்றிற்று எனக்கு.

என் மனத்தில் பல வருஷங்களாக ஊறிக் கிடந்த இந்த விஷயத்தை வெளிக்கொணர சென்னை அகில இந்திய ரேடியோவில் பணியாற்றும் என் நண்பர் டி. என். விசுவநாதன் எனக்கு உதவினார். ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் கேட்டபோது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலை சுலபமானதாக, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலமும் கனமான கருத்துள்ள, ஆழ்ந்து கவனிக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும்- சமூக சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன். அதற்கு வாய்ப்பளித்த என் நண்பருக்கு நன்றி.

தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும். அது தவிர்க்க முடியாத இலக்கிய விதி, தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம். நாவல் என்பது தனி ரகம்.

நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வதை, படிக்க முடியாததுதான் உயர்ந்தது என்று நான் சொல்வதாக எண்ணிக் கொண்டு கேலி செய்யலாம். சந்தர்ப்ப விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைகளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதைகூட இன்று பின்னர் வருகிற பிரிவுதான் என்கிற திடமான அபிப்பிராயம் உள்ளவன் நான்.

இந்த நாவலில் உருவாகிற வேங்கடாசலத்தையோ , ஜானகியையோ, மருமானையோ, ஏன், கண்ணப்பனையோகூட நான் அனுதாபத்துக்கோ, கோபத்துக்கோ, வெறுப்புக்கோ உரிய பாத்திரமாக நினைத்து சிருஷ்டித்துத் தரவில்லை. உங்களுக்கோ எனக்கோ பிடிக்கிறது என்பதற்காக இது இப்படி இல்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டி தத்துவத்தைக் கடைபிடித்துத்தான் நான் இந்த நாவலை எழுதினேன். சில சமயங்களில் மனிதனின் பலஹீனம் கலைஞனின் திடத்தை அசைத்து விடுகிறது. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், “இப்படி நேர்ந்துவிட்டதா? அடடா! இனிமேலாவது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என்று எண்ணிக்கொண்டு மேலே முயற்சி செய்ய வேண்டியது கலைஞனின் கடமை. இந்த மாதிரி பலஹீனம் இந்த நாவலைப் பற்றிய வரையில் கடைசிக் கட்டத்தில் ஒரு இடத்தில் வந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்துக்கு வந்திருக்கிறான். இன்னொரு மருமான் சமையல்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என்று ஏற்பட்ட மெலோட்ராமா (Melodrama). அதிகப்படுத்திக் கூறல், கோயின்ஸிடென்ஸ் (Coincidence)என்கிற வகையைச் சேர்ந்து விட்டது. அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது, போகட்டும், என்று விட்டுவிட்டேன்.

இந்த ஒதுங்கி நிற்கிற தத்துவ விஷயத்தில் உலகத்தில் பெரிய கலைஞர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள் எல்லோரும் ஒன்றுதான். அதை விவாதிக்க, விவாதித்து முடிவு கட்ட, இது இடமல்ல; ஓரிரண்டு கோடிகள் மட்டும் காட்டுகிறேன். ஹாம்லெட்டைப் பற்றி கவிஞன் நம்மை அழச் சொல்கிறானா? அனுதாபப்படச் சொல்கிறானா? கோவலன்- கண்ணகி முடிவைப் பற்றி எண்ணி நம்மைச் சிலப்பதிகார ஆசிரியன் கண்ணீர் உகுக்க எங்காவது சொல்லி இருக்கிறானா? பின்னர் எழுந்த நாடகங்களையும், நடுக்கால ஐயோ அந்தோ பரிதாப வியாக்கியானங்களையும் வைத்துக்கொண்டு சொல்லாதீர்கள். “கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன்,” என்பது முப்பது வருஷங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியம். “கண்ணீர்த்துளி வர உள்ளுருக்குதல்,” கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி. இதுவரையில் இலக்கிய உலகில் மிகப் பெரியவர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நாலைந்து பெர்வழிகளுக்கே கைவந்த கலை அது.

இந்த ஆட்கொல்லிச் சிந்தனையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்த்து இன்னும் ஒதுங்கி நின்று, சிந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. இன்னும் பத்து வருஷங்களில் கைகூடலாம் அது. அவசரம் ஒன்றுமில்லையே?

திருவனந்தபுரம், 25.3.57.

க. நா. சுப்ரமண்யம்

 

(நன்றி: சிறுவாணி வாசகர் மையத்துக்காக, பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே. புதூர் (P.O), கோவை – 641038. siruvanivasagar@gmail.com., 94881 85920/ 99409 85920)