நரோபா

அம்புப் படுக்கை

– நரோபா – 

IMG_0276

துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் நுரை தப்பி முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை சுதர்சனின் காதுகள் தொலைவிலேயே கண்டுகொண்டன. தர்மாவின் சைக்கிளுக்கென்றே இருக்கும் ஓசை, பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் ஓசை. அவனுக்கு தாத்தாவின் நினைவெழுந்தது. வலி மிகுந்து இருக்குமோ?

மூச்சிரைக்க காலூன்றி அவனிடம் நின்ற தர்மாவை நோக்கி. “இன்னமும் இந்த சைக்கிள விடலையாண்ணே?”.என்றான். “வேற போக்கில்லையே தம்பு” என்றபோது வழக்கமாக காதுகளைத் தொட முனையும் உதட்டோரக் கோடுகள் தயங்கிப் பாதி வழியில், கறைபடிந்து மழுங்கிய முன்பற்களைக் காட்டுவதோடு நின்றன. “தம்பு.. நம்ம ஆனாரூனா செட்டியாருக்கு சொகமில்ல .ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவச் சொல்லி ஆச்சி தாக்க சொல்லிவிட்டாக”.

மாலைச் சூரியன் மேகங்களுக்குள் மறைந்து மேக முனைகளில் மட்டும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பேட்டை கவ்வியிருக்கும் கேரியரை இழுத்துச் சரிசெய்தபடியே, “அம்மா உள்ளதான் இருக்காங்க..சொல்லிருங்க.” என்றான்.

“அப்பச்சி ஒன்னையதான் பாக்கணுமாம்”

அவர் பேரனும் சுதர்சனும் பள்ளித் தோழர்கள். அவன் இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை எனும் வருத்தம் இருக்கலாம். அவனை வரவழைக்க உதவி தேவையாய் இருக்கும் என எண்ணிக்கொண்டான்.

“நாச்சி இருக்கானா?’

“எல்லாரும் இங்கேயேதான் ரெண்டு நாளா இருக்காக”

“நானும் அம்மாவும் வர்றோம்” என்றபடி சைக்கிளை மீண்டும் காம்பவண்டுக்குள் நிறுத்தினான்.
ஆனாரூனா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ஒரு காலத்தில் அவருடைய பாத்திரக்கடை மிகப் பிரபலம். இப்போது கவனிக்க ஆளில்லை. டவுனில் நான்கைந்து காம்ப்ளெக்ஸ்கள் அவருடையது. வாடகையில் நல்ல வரும்படி. தர்மா அவருடன் பட்டறையில் இருந்தவன்தான். அது இதுவென்று எல்லா வேலையும் செய்வான். ஆள் தேவை என்றால் மருந்து இடிக்கவும் வருவான்.

தாத்தா மரணக் குறிகளில் தேர்ந்தவர். முதன்முறையாக அவர்கள் சந்தித்து கொண்டது பல வருடங்களுக்கு முன்னர். ஆனாரூனாவின் மூத்த மகன் பதினாலு நாள் காய்ச்சலில் துவண்டு கிடந்தான். மிஷன் ஆஸ்பத்திரி துரை டாக்டர் ஊசிக்குக்கூட மட்டுப்படவில்லை. நினைவிழந்து அரற்ற ஆரம்பித்தவுடன் பங்காளிகள் வைத்தியரைப் பற்றி கூறி அழைத்து வந்தார்கள். நாடி பார்த்து “யான நடதான்..மெதுவான்னாலும் வலுவா இருக்கு..பொழச்சிக்கிடுவான்” என்று அவர் சொன்னபடியே இரண்டொரு நாளில் மீண்டெழுந்தான். மூச்சிழுத்துக் கொண்டிருந்த பெரியாச்சியின் நாடியைப பார்த்துவிட்டு “தளந்துருச்சு..ஆனாலும் ஆத்தா கடிவாளத்த இறுக்கமா பிடிச்சிருக்கா.. பொறுக்காம போதும்னு விட கொஞ்சம் நாழியாகும்.. ரெண்டு நாள் கழிச்சிதான் ஆகும்” என்றார். அவர் வாக்கைக் காக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவள் போல் மூன்றாம் நாள் உதயத்தில் உயிர்விட்டாள் பெரியாச்சி.

அதன் பின்னர் ஆனாரூனா வைத்தியரைப் பார்க்க அடிக்கடி வரத் துவங்கினார். வாயு குத்தல் கால் குடைச்சல் என ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு போவார். ஒவ்வொரு முறையும் பர்மாவிலிருந்து தான் தப்பிவந்த கதையை தவறாமல் புதுப்புது கிளைக் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் சொல்வார். தாத்தாவும் பொழுது போக வேண்டுமே எனக் கேட்டுகொண்டிருப்பார். ஆனாரூனா கிண்டல் செய்வது கூட பிடிபடாத அளவுக்கு வெள்ளந்தி.

“நெலம சரியில்லன்னு பட்டவுடனே பணத்த தங்கமா மாத்தி கப்பல பிடிச்சு வந்துட்டேன்ல….எல்லாம் அந்த ஆறுமுகசாமி அருள். வாங்கடான்னு சொன்னேன் ..என் வார்த்தைய நம்பாத பயலுக எல்லாம் ஓட்டாண்டி ஆய்ட்டைங்க” என்று ஒருமுறை சொன்னபோது “கப்பல்ல ஏற முன்ன ஒரு ஃபைட் சீனு உண்டுங்கானும் மறந்துட்டீர்” என தாத்தா எடுத்துக் கொடுப்பார். “சப்பான்காரன் போட்டாம் பாரு குண்டு.. மொத்தமும் காலி.. நானும் பாகனேரி சம்முகமும் மட்டும் கெடச்சத சுருட்டிகிட்டு ஊருக்கு ஓடியாந்தோம்…. போக்கு தெரியாம லாத்திகிட்டு கிடந்தோம்.. சோத்துக்கு வழியில்ல.. இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன் தான்.. அவம்புட்டு டாங்கு வண்டியில ஏத்தி இந்த லக்குல கொண்டாந்து விட்டுட்டான்” என்றால் “வழியில டாங்கு சக்கரத்துல காத்து போயிருக்குமே?” என்பார் தாத்தா.

ஒருமுறை பர்மாவிலிருந்து தன் தலைமையில் ஒரு படையை நடத்தியே ஊருக்குக் கூட்டிவந்த பிரதாபத்தைக் கூறினார். இவருடைய வீரச்செயலை பாராட்டி நேதாஜி வங்காளத்தில் எழுதிய நன்றிக் கடிதத்தைதான் காணவில்லை என்றும். கிடைத்தவுடன் காண்பிப்பதாகவும் சொன்னார்.

ஆனாரூனா கதைகளில் மாறாதது ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் தப்பிப் பிழைப்பார். புறங்கழுத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மரண தேவதையை மூச்சு வாங்கச் செய்து தப்பித்து வந்தார். “குண்டு போடுறான் போடுறான்னு கத்திகிட்டு சனமெல்லாம் தெருவுல ஓடுதுங்க.. பிளேனு சத்தம் கேட்டாலே வயித்துல அரளும்.. அவென் என்னத்துக்கு வாரான்னு தெரியாது.. ஒருநா ராத்திரில பொண்டு புள்ளைகளோட யங்கூன் கேம்புக்குள்ள உறங்கிட்டு கெடந்த சனம் மேல குண்டு போட்டான்.. ஒரு யுத்த தர்மம் வேணாம்?.. தண்ணி மோள எந்திருச்சு வெளிய வந்தவேன்.. தெகச்சு நின்னுட்டேன் .. டமார்ன்னு பெருஞ்சத்தம்.. அப்பிடியே தரையோட தரையா மட்டமா படுத்துக்கிட்டேன்.. கண்ணு முன்னாடி கேம்ப் பத்தி எரியுது….. இந்தக் காது மந்தமானது அன்னிலேந்துதான்..நீங்க கூட கேப்பீகளே” என்றார்.

“எப்படியோ எவென் கையிலும் ஆப்படாம இந்த பக்கட்டு வந்து சேந்து நிம்மதி மூச்சு விட்டா அந்த பகவானுக்குப் பொறுக்கல.. பெரிய ஆறு.. முழங்கால் மட்டு தண்ணில சனம் இறங்கி நடக்க ஆரம்பிக்குது.. எங்கையோ மலைக்கு அங்குட்டு மழ கொட்டி திடுமுன்னு தண்ணி.. சுதாரிக்க முடியல. .. அடிச்சுக் கொண்டே போயிடுச்சு.. கண்ணுமுன்னாடி பாத்தேன்.. இவளுக்கு முள்ளு குத்துனதால நெம்பிகிட்டு கிடந்தேனோ பொழச்சேன்.. ரெண்டு நிமிஷம் தான்”. ஒருமுறை ஆற்றில் கண்ணாடி விரியன் தன்னுடன் வந்தவரைக் கடித்து சாகடித்ததாக சொல்வார். பழனிக்கு நடக்கும்போது திருடர்களிடம் மாட்டி கவரிங்க் கடுக்கனை கொடுத்து தப்பியதை சொல்வார்.

கர்னல் சாமுவேல் மிகக்கறாரான பேர்வழி. சுதேசி எனச் சந்தேகம் வந்தால்கூட போதும், லாடம் கட்டிவிடுவார். விசாரணைக்குச் சென்ற பலரும் ஊமைக் காயங்களால் இரண்டு மூன்று நாட்களில் ரத்த பேதியாகி இறந்து போவார்கள். சுதேசி போராட்டத்திற்கு நிதி சேகரித்த வகையில் செட்டியாரும் மாட்டிக் கொண்டாராம். “என்னிக்கி இருந்தாலும் அவுகதான பாதுகாப்பு, நீங்க போயிருவீக.. நாளைக்கு எங்கள அவுக ஒதுக்கிடப்பிடாது பாருங்க” என நைச்சியமாக கர்னலிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சரிக்கட்டி தப்பித்தாராம். அவருக்கு மரணம் தன்னை வேட்டையாடுவதாக ஒரு பயம்.

தாத்தா நல்ல அறிவுத் தெளிவோடு இருந்த கடைசி நாட்களில் ஒருநாள் அவரும் ஆனாரூனாவும் பேசிக்கொண்டிருந்தது சுதர்சனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஆனாரூனா, “நம்மள குறி வெச்சுகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன்” என்றபோது தாத்தா “குறி வெக்குற அளவுக்கெல்லாம் பகவானுக்கு பொறும இருக்காது ஓய்…. நாம என்ன ராவணனா கம்சனா.. அதுக்கும் ஒரு ஆகிருதி வேணும்.. குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்.. அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம் ..நீர் சொல்லிட்டீர்.. ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கததான்…” என்றார்.

பாம்புகளிடமும் தோட்டாக்களிடமும், திருடர்களிடமும், இராணுவத்திடமும், கிளர்ச்சியாளர்களிடமும், குண்டுகளிடமும், தப்பித்து பிழைத்திருக்கிறார் ஆனாரூனா. “ஒங்க தாத்தா நல்லா ஜேம்ஸ்பாண்ட் பட சீனெல்லாம் அடிச்சு விடுறார்” என சுதர்சன் நாச்சியிடம் சொன்னதற்காக கொஞ்சகாலம் கோபித்துக் கொண்டு அவன் பேசாமலிருந்தான்.

எது உண்மை என்று எவரும் தோண்டித் துருவியதில்லை. தேவையுமில்லை. பர்மாவில் இருந்தார். பர்மிய மனைவிமார்களை வேறு வழியின்றி உதறிவிட்டு, குழந்தைகளை மட்டும் தூக்கி வந்த அப்போதைய வழமைக்கு மாறாக தன் வாரிசைச் சுமந்த பர்மிய ஆச்சியையும் அத்தனை இக்கட்டுகளை மீறி ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்பதும். அன்றைய தினத்தில் பேரழகியாக அறியப்பட்ட, தன்னை விட பல வருடங்கள் இளமையான, ஆச்சியின் பூர்வாசிரம வரலாற்றைப் பாதுகாக்க பெரும்பாடு பட்டார் என்பதும். பர்மாவிலிருந்து வரும் வழியில் காலில் அடிபட்டு எலும்பு முறிந்ததில் கெந்தி கெந்தித்தான் நடக்கிறார் என்பதும். இன்றும் பர்மிய முகச்சாயல்கொண்ட பேரன் பேத்திகள் புழங்குகிறார்கள் என்பதும் மூத்த ஆச்சியும் அவர் வழி வந்தவர்களும் இவரோடு புழங்குவதில்லை என்பதும் தீர்மானமான உண்மைகள். ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்தவர் தன்னை எப்படி முழுவதுமாக இந்த மண்ணில் கரைத்துக் கொண்டார் என்பது சுதர்சனுக்கு வியப்பாய் இருக்கும். தர்மாதான் ஏதாவது கதைகளைச் சொல்வான். “கேட்டுக்க தம்பு ஆச்சி ரொம்ப ராங்கி அப்பல்லாம், அப்பச்சிக்கும் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம்.. ஆருட்டையும் பேச மாட்டாக பொழங்க மாட்டாக.. மெதுமெதுவா எல்லாமுமா ஆய்ட்டாக.. மீனாச்சி ராச்சியம்தான்..” எனச் சொல்லிச் சிரித்தான்.

இரும்புக் கட்டிலில் எவர் முகமும் காணப் பிடிக்காதவர் போல் ஜன்னலைப் பார்த்து வலது புறமாக கண்மூடி ஒருக்களித்து படுத்திருந்தார் ஆனாரூனா. உடல் முழுவதும் அடர்ந்திருந்த ரோமம் வெள்ளி புற்களாக நீண்டிருந்தன. வேட்டி நெகிழ்வின் ஊடாக மூத்திரப்பை நாளம் வெளித்தெரிந்தது. நாச்சியும் வேறு பலரும் நின்று கொண்டிருந்தார்கள். “ஐயா நீ நாடி பிடிச்சு பாக்கனும்னு சொல்றாரு.. தாத்தா இருந்த வரைக்கும் அவருதான் பாப்பாரு.. தாங்குமா தாங்காதான்னு பாத்து சொல்லுப்பா.” சொற்கள் முடிவதற்குள் ஆச்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சுதர்சனுக்கு எரிச்சலாக இருந்தது. நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்? இன்னமும் இதை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் விஜயதசமிக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தவன் தீபாவளிக்கு திரும்பி வந்திருக்கும்போது. வேண்டா வெறுப்புடன் முதல்நாள் முதல் வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் பேராசிரியர் ஸ்ரீகாந்த ரெட்டி “இது ஒரு கல்லூரி அல்ல, செத்த காலேஜ்.. நீங்கள் படிப்பது மருத்துவ அறிவியல் அல்ல வெறும் வரலாறு” என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உருவிச் சென்றிருந்தார்.

தாத்தாவினால்தான் இந்த கதி. அவருக்குப் பிறகு சுதர்சன்தான் மருத்துவனாக, அதுவும் ஆயுர்வேத மருத்துவனாக, வரவேண்டும் என்பதே தனது ஆசை என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்காக மூட்டை நிறைய சுவடிகளையும் ட்ரங்க் பெட்டி நிறைய மருத்துவ நூல்களையும் சொத்தாக விட்டு சென்றார். எத்தனையோ முறை அவர் வாத பித்த கபம் என வகுப்பெடுக்க முயலும்போதெல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுவான். கடைசி காலங்களில் நினைவு தப்பத் துவங்கியதும் மருந்துகள் மறந்து அனைவருக்கும் நிரந்தர புன்னகையுடன் திருநீறு அளித்து கொண்டிருந்தார். அதற்கும் நோய் சரியாகிவிட்டது என காலில் விழுந்து கொண்டிருந்தார்கள். சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பவர் திடுமென்று விழித்து “ஆரட்டியம் ..சீ ச்சீ..போயிரனும் சீக்கிரம் போயிரனும் “ எனப் புலம்புவார்.

தாத்தாவிற்கு தண்டுவட டி.பி. மிகக்கொடூரமான வலி. “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்கு காட்டுறான்.. போதும் கிருஷ்ணா..” எனப் புலம்புவார். தண்டுவடம் முழுக்க ஆயிரம் கூர்வாட்கள் குத்திக்கொண்டிருப்பது போல வலி. உச்சகட்ட வலிக்கு அப்பால் வாழ எப்படியோ பழகிக்கொண்டார். அங்கே அவர் என்னவாக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் புன்சிரிப்புடன் கண்மூடிக் கிடந்தார். மனம் அதிலிருந்து வழுவி போதம் திரும்பும்போதுதான் வலி அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனது. “என்னக் கொண்டுபோ.. கொன்னுடு” என அரற்றுவார். மரணக் குறிகள் மட்டும் நினைவில் எழுந்தன. “இன்னும் சக்கரவட்டம் வரல..” என்பார். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் “காட்டுப்பீ..” என புன்னகைத்தார். கடைசியில் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலை. வலியின் தீவிரத்தில் ஒருநாள் இதயம் ஸ்தம்பித்து மரித்தார்.

“ஆச்சி நாடில ஒன்னும் தெரியாது”

“அதெல்லாம் நீ பாத்து சொல்லுப்பா.. தாக்க சொல்லிவிடனும்” என்றாள் ஆச்சி. சுதர்சனைக் காட்டிலும் அவன் மீது அவளுக்கு அதீத நம்பிக்கை.

“ரிபோர்ட்ஸ் கொடுங்க” எனக் கேட்டு ஃபைலை பிரித்து பார்த்தான். சுதர்சனின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போல் செட்டியாரின் இளைய மகன் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தார் “இஸ்கீமிக் ஹார்ட் டிசீஸ்னு சொன்னாங்க தம்பு.. இப்ப தண்ணி கோத்துகிட்டு கெடக்கு.. ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். ஊரிலேயே இருந்து செட்டியாரைப் பார்த்துக் கொள்பவர் அவர்தான். டவுனில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

செட்டியார் அருகே ஸ்டூலில் அமர்ந்தான். மூடிய திரைகளுக்கு அப்பால் விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தொண்டையைக் கடக்கும் காற்றின் ஒலி புறா அகவல் போல் வெளியே கேட்க முடிந்தது. ஆவல் மின்னும் விழிகள் சூழ சுதர்சன் அமர்ந்திருந்தான்.

“அய்யா.. நல்லா இருக்கீகளா.. நாடி பாக்க வைத்தியர் பேரன் வந்திருக்காரு.. தெரியுதா?” என கூட்டத்திலிருந்த முன் வழுக்கையர்களில் ஒருவர் உரக்க கூவினார். பெரிய சலனமேதும் இல்லை. “அய்யா சுதர்சன் வந்திருக்கான்” என்று நாச்சி காதருகே குனிந்து சொன்னான்.

தலைமாட்டில் செட்டியாரின் மூத்த மருமகள் லோட்டா பாலில் நெய்க் கரண்டியுடன் தயாராக இருந்தார். கங்கை நீர் நிரப்பிய தாமிரச் சொம்பை வைத்துக்கொண்டு இரண்டாம் மருமகள் நின்றிருந்தார். கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்த பெரிய மகன் எவரிடமோ “காரியம் முடிச்சு நாலாம் நாள் வந்து கையெழுத்து போடலன்ன ஏன்னு கேளுங்க” என உணர்ச்சிகரமாக கிணற்றடியில் மன்றாடிக் கொண்டிருந்தது அசாதாரண நிசப்தத்தை கீறிக்கொண்டு அறையை நிறைத்தது.

மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான். ஆள்காட்டி விரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் கபம். வாதம் – பித்தம் – கபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். நாடி ஒரு அலை போல எழுந்து மூன்று விரல்களையும் தொடுவது போலிருந்தது. வாதம் – பித்தம் – கபம். மோதிரவிரலையும் நடுவிரலையும் தீண்டாமல் வளைந்து சென்ற ஒரு பாம்பு விருட்டென ஆள்காட்டி விரலை கொத்தியது. சிற்றலைகள் எழுந்தன தாமரை மிதக்கிறது. ஆழத்திலிருந்து ஒரு கடலாமை நிதானமாக மேலெழுந்து வருகிறது. அதன் ஓடு மோதிரவிரலை தொட்டு மூச்சிழுத்து மீண்டும் ஆழத்திற்கு சென்றது. மெல்லச் சலனமற்று அடங்கியது. பதட்டத்தில் கனவு கலைந்து எழுந்த சுதர்சன் கண் விழித்து நோக்கினான். மீண்டும் பேரலை விரல்களை தொட்டு சென்றது.

எழ முற்பட்டபோது அவர் விரல்கள் அவனைத் தீண்ட முனைவது போலிருந்தது. மீறி எழுந்தான். நாசி வளைவு கண்ணீரின் ஈரத்தில் மின்னியது. உதடுகள் துடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொல்லிவிடு, சொல்லிவிடு, என மன்றாடித் துடிக்கும் கண்கள் அவனுக்கு மிகப் பரிச்சயமானவை என தோன்றியது. சுதர்சன் எழுந்தான். அவனையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு எழுந்தது. “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல.. நாடி எல்லாம் நல்லா இருக்கு.. பழைய மாதிரி ஆயிடலாம்.. கவலப்படாதீங்க.. நீங்க சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” எனக் கையை இறுகப் பற்றி உரக்கச் சொல்லிவிட்டு, “வர்றேன்,” என்றபடி வெளியே வந்தான்.

“என்ன தம்பு ஆளுகளுக்கு தாக்க சொல்லிவிடலாமா?” என்றார் இளையவர்.

“அவசியம் இருக்காது “ என்றபடி சைக்கிளில் ஏறிக் கிளம்பியபோது வாயிலில் புங்கை மர நிழலில் தன்னுடைய சைக்கிளைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தர்மா, “வாங்க தம்பு” என உதட்டோர கோடுகள் காது தொட வழக்கம் போல் சிரித்தான்.

சைக்கிள் தெரு முக்கைக் கடப்பதற்கு முன்பே ஆச்சியின் பெருங்குரல் கேட்டது. அவனை நிறுத்த விடாமல் சைக்கிள் உந்திக் கொண்டு போனது.

கொலை இயந்திரம்

– நரோபா

போட்டிருக்கும் சட்டையை முதலில் கழட்ட வேண்டும்
கசங்கி இருந்தாலும் பரவாயில்லை,
ஈரத்தில் ஒட்டியிருந்தாலும் கூட,
காயும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கிழித்தாவது எறியத்தான் வேண்டும்.
ஆனால் வேறு சட்டை வேண்டுமே என கேட்பது காதில் விழுகிறது
அதற்குதான் சித்தாந்த பயிற்சி இருக்கிறதே.
தனக்கான சட்டையை தானே நெய்து கொள்பவன் மனிதன்.
முடியவில்லை என்றாலும் பாதகமில்லை.
எப்படியும் வேறொருவன் கழட்டிப் போட்டது கிடக்கும்.
கிடைக்கவில்லை என்றால்தான் என்ன?
சட்டை இருப்பது போல்
ஒரு பாவனை செய்துகொள்ளக்கூட
திராணியற்றவனா என்ன?
காலரை இழுத்துவிட்டுக் கொள்ளவும்
பித்தான்களைக் கழட்டி மாட்டவும்
வயிற்றை எக்கி உள்ளிழுத்தால்
நம்பகத்தன்மை கூடும்.
விளையாட்டாகவே செய்யலாம்
கடமையுணர்ச்சி கொஞ்சம் இருந்தால் இன்னும் உசிதம்
ஆகச்சிறந்த கொலை இயந்திரம்
இப்படித்தான் தயாராகிறது.

நிலமும் நினைவும்- சு. வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நாவலை முன்வைத்து

– நரோபா

DSC_0186

சு வேணுகோபால்

“யசோதா அக்கா சூடச்சுடர் முன் மண்டியிட்டு வணங்கினாள். சேலையையும் நாடாவையும் தளர்த்தி இறக்கினாள். தொய்வில்லாமல் வயிறு புடைத்திருக்கிறது. இரு கைகளிலும் செம்மண்ணை அள்ளி ஈசான மூலை வேம்பாண்டசாமி கோயிலை நோக்கி வணங்கினாள். அந்த மண்ணைத் தன் வயிற்றில் மெல்லத் தடவ சேலையிலும் நிலத்திலும் உதிர்ந்து விழுந்தது. உதிராத மண்ணோடு சேலையை ஏற்றிக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.“
-நிலம் எனும் நல்லாள், சு.வேணுகோபால்.

சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாளில் வரும் இச்சித்தரிப்பு என்னுள் பல நினைவுகளை, கேள்விகளைக் கிளர்த்தியது. சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் முருகையாவை பார்ப்பேன். வழக்கமாகச் செல்லும் உறவினர் வீட்டு அடுக்குமாடி கட்டிடத்தின் வாட்ச்மேன் அவர். எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பிரியம். பதினெட்டு ஏக்கர் நஞ்சை, தென்னந்தோப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆறாயிரம் சம்பளத்திற்காக பட்டணம் வந்து வாயில் காத்துக் கொண்டிருக்கிறார். ஊர் திரும்புவதைப் பற்றியும் மீண்டும் விவசாயம் செய்வதைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். கடந்தகாலத்து நினைவுகளும் என்றேனும் ஒருநாள் ஊர் திரும்பி விவசாயம் செய்து விட முடியும் எனும் எதிர்காலத்து கனவும் நிகழ்காலத்து அவமானங்களை அசவுகரியங்களைப் பொறுத்துக்கொள்ளச் செய்கிறது.

சென்றமுறை சென்னைக்குச் சென்றபோது முருகையா அங்கில்லை. வேறு எவரோ ஒரு கிழவர் பெரிய மீசையுடன் நின்றிருந்தார். முதுகுளத்தூரோ சிங்கம்புணரியோ தெரியவில்லை. கேட்கவேண்டும். முருகையா ஒருவேளை ஊர் திரும்பியிருப்பாரோ என மகிழ்ந்து விசாரித்தேன். அந்த பில்டர் கட்டும் புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு நம்பகமான காவலாள் தேவை என அழைத்துச் சென்றதாக சொன்னார்கள். புதைகுழியென நகரம் தன்னுள் எல்லோரையும் இழுத்துக் கொள்கிறது. இந்தக் காட்சி இந்த ஒட்டுமொத்த கதையின் சாரத்தையும் தன்னுள் திரட்டி வைத்திருப்பதாகக்கூட தோன்றுகிறது.

சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நவீன இந்திய சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளான இடப்பெயர்வை, நகரமயமாதலை பழனிகுமார் எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு விரிவாகப் பேசுகிறது. நிலம், நினைவுகள், குடும்பம், பொருளியல் தேவை என பல்வேறு விசைகளால் அவன் இழுபடுகிறான். அண்ணன் தம்பியென தேனிக்கு அருகே கிராமத்தில் விவசாயம் செய்து வாழும் பெரும் குடும்பம் அவனுடையது. படித்து கிராமத்தை விட்டு வெளியேறி ஏதோ ஒரு அலுவலக வேலைக்காக மதுரைக்கு வருகிறான். வேலைபார்க்கும் மனைவியும் குழந்தைகளும் கோவைக்கருகே வசிக்கிறார்கள். விடுமுறையில் ஊரிலிருக்கும் அம்மாவையும் தம்பி குழந்தைகளையும் காண வேண்டும் என விரும்புபவன் மனைவி பிள்ளைகளைக் காணச் செல்வதோடு துவங்குகிறது கதை.

அன்னை நினைவுகளோடும் சேர்ந்து வளர்ந்த நிலத்தோடும் இணை வைக்கப்படுகிறாள். மனைவி நிகழ் வாழ்க்கையோடும் புதிய நிலத்தோடும். கதையின் துவக்கமே நேரடியாக அதன் மைய சிடுக்குக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. இருவேறு விசைகள் வெவ்வேறு திசைகளில் அவனை இழுக்கின்றன. ஒருவகையில் அவைகளுக்கு இடையிலான சமரச புள்ளியை கண்டடைவது தான் கதை எனலாம். பழனியின் தரப்பைப் பேசத் துவங்கும் கதை அவன் மனைவி ராதாவை முதலில் இகழ்கிறது. மெல்ல ராதாவின் தரப்பை நோக்கி நகர்ந்து அதை புரிந்துகொள்ளும் முயற்சியில் பழனியின் மனம் திறந்துகொள்வதோடு கதை முடிகிறது. புதிய நிலத்தில் வேர் துளிர்க்கிறது.

பெண்ணையும் நிலத்தையும் ஒப்பும சொல்வது நம் மரபின் வழக்கம். பூதேவி எனும் அன்னையின் வடிவமாக நம் புவியை வணங்குகிறோம். எல்லா வளத்தையும் தன்னில் புதைத்துக் கொள்பவள். வேணு இந்த உருவகத்தையே நவீன கதையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். புதிய நிலத்தில் பழனி அன்னியமாகும் இடங்களை நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். பேருந்துகளில் கூட அவனுக்கு எவரும் இடமளிப்பதில்லை. பழனி தன்னை பயன்மதிப்பற்று உணர்கிறான். அவன் அங்கு எவருக்கும் தேவைப்படவில்லை. தன் பிள்ளைகள்கூட மனைவி வழி உறவையே அறிந்து வளர்கின்றன. அவனிடம்கூட ஒட்டுவதில்லை. அவர்களாவது தன்னிடம் ஒட்டவேண்டும் என ராதாவிற்கு தெரியாமல் ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறான். வேண்டியதை வாங்கித் தருகிறான். ஊரில் தன் சுற்றம் சூழ வாழ்ந்த போது தன் சொல்லிற்கு இருந்த மதிப்பை எண்ணி வருந்துகிறான். கதையின் கடைசியில் ஆட்டுக்குட்டியின் வயிற்றிலிருந்து சிதைந்த குட்டிகளை எடுத்து ஆட்டைக் காப்பாற்றுவதன் வழியாக தனக்கான பயன் மதிப்பை உணர்ந்து கொள்கிறான்.

கதைக்குள் கர்ணபரம்பரை கதையாக சொல்லப்படும் நாகலாதேவி கதை முக்கியமானது. நாகலாபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க பழனியின் தாத்தாவின் தாத்தா ஆறு மைல் அப்பாலுள்ள காளனூருக்கு வந்தார்கள். ‘நாகலாபுரத்தான்’ என்றே பழனியின் தாத்தா அவருடைய கூட்டுக்காரர்களால் அழைக்கப்படுவாராம். பழனியின் அப்பா காளனூரை தன் உயிராக எண்ணுபவர். பழனியின் மகன் அவன் வளர்ந்த கொங்கு மண்ணை இயல்பாக அப்படித்தான் எண்ணுவான் அல்லவா? முன் எப்போதோ இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக (இதற்காக அவர் மீது இந்துத்துவ முத்திரை குத்தப்பட்டது என்றெண்ணுகிறேன்) ஆந்திரத்தில் இருந்து பெயர்ந்து தான் நாகலாபுரம் வந்தார்கள். அவர்களுடைய குலதெய்வம் நாகலாதேவி வாக்களிப்பதாக வரும் பாடலில்

‘தெற்கு நோக்கி நடங்கள்..

திருவிளக்கு நானாவேன்…

வெறியாட்டம் அடக்க..

வீரமெல்லாம் திரட்டி வருவேன்…

விட்டு வந்த மண்ணிலே..

பட்டுருள பிஞ்சுகள் வரும்.

.பட்டழிந்த காயமெல்லாம்..

செம்புழுதி மேவி ஆத்தும்…

வீரமெல்லாம் திரட்டிவர..

வேகமாக நடங்கள்.’

என்று முடியும் அப்பாடலின் இறுதியில் ‘தெற்கே வந்த நாகலாதேவி திரும்பாமலே உறங்குகின்றாள்’ என்றெழுதுகிறார் வேணு. இடப்பெயர்வு என்பது தவிர்க்கமுடியாதது என்பதை சொல்கிறது. அன்னை நிலம் பற்றிய கனவு மனிதர்களை இயக்குகிறது. ஒரு கோணத்தில் இந்த கதை நிலபிரபுத்துவத்திலிருந்து நவீன காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தலைமுறையின் அலைகழிப்பை பேசுகிறது. நவீன சமூகம் இத்தகைய பிடிப்புகளை பொருட்படுத்துவதில்லை. நிலத்தினுடனான உணர்வுரீதியான பிணைப்பை துண்டிப்பதன் வழியாகவே அது முன்னகர்கிறது.

வேணுவின் மிக முக்கியமான பலம் என்பது பாத்திரங்களை உருவாக்கி நிலைநிறுத்தும் அவருடைய முறை. நுண் விவரணைகள், மானுட இயல்புகளைப் பற்றிய கூரிய அவதானிப்புகள் மிகச் சரளமாக அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றன. பழனிகுமாருக்கும் ராதாவிற்கும் இடையிலான உரையாடல்களில் வன்மம் தெறிக்கிறது. பாத்திரங்களின் அக விவரிப்புகள் மிக நுட்பமானவை. ஆட்டம் குறுநாவலில் மத்திய வயதிலும் தனது மிடுக்கை நிரூபிக்கத் துடிக்கும் வடிவேலும், நிலம் எனும் நல்லாளில் இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் ஊடாடி புதிய நிலத்தில் வேர்விட முடியாமல் தவிக்கும் பழனிகுமாரும் அத்தனை கச்சிதமாக அவர்களுடைய கீழ்மைகளுடனும் உன்னதங்களுடனும் உருவாகி இருக்கிறார்கள்.

‘அடுத்தவனோடு தொடுப்பிருந்த’ காரணத்திற்காக புருஷனால் இடது கை வெட்டப்பட்ட மீனாட்சிபுரத்துகாரி, பொலிகாளையாக மாறி பொதபொதவென ஆன முன்னாள் கபடி வீரன் (ஆட்டம் குறுநாவல்) என முதன்மை பாத்திரங்களைத் தவிர்த்து உதிரி பாத்திரங்கள் கூட சொற்ப சொற்களில் உயிர்பெறுகிறார்கள். நினைவுகளின் வழியாக துலங்கிவரும் பழனிகுமாரின் தம்பி குமரனின் பாத்திரம் முக்கியமானது. குமரன் பள்ளி படிப்பில் ஆர்வமற்றவன். அனுபவத்தின் வழியாக விவசாய நுட்பங்களில் தேர்ந்தவன். வலிப்பு நோய்க்காரன் என்பதால் ஆசைப்பட்ட பெண்ணை அடைய முடியாதவன். குமரன் நிலத்தை தொழுதவன், அதன் ரகசியங்களை அறிந்தவன். பிற விவசாயிகள் தோல்வியடைந்த காலங்களிலும் கூட விடாப்பிடியாக விவசாயத்தை கைக்கொண்டு லாபம் பார்க்கிறான். குமரன் அவன் நம்பிய நிலத்திலேயே நிராதரவாக மூச்சடங்குகிறான். ‘எவ்வளவோ முயன்றும் மண் அவனை எழவிடாமல் வீழ்த்திக்கொண்டே இருந்தது’. நிலத்தின் மீதிருந்த இறுதி பிடிமானமும் அற்றுப் போய்விடுகிறது. பழனியால் ஒருபோதும் அவன் நிலத்திற்கு திரும்ப முடியாது.

நிலம் எனும் நல்லாள் நாவலின் இறுதியில் மாதவன் பழனியின் சிக்கலை துல்லியமாக சொல்கிறான். “நீ வாழ்ந்த்த நெனச்சுகிட்டே இருக்க. வாழப்போறதப் பத்தி நெனை. நெனைக்காதது தான் புதுசா வரும். அதுதானே வாழ்க்கை. அதுல முழுசா மூழ்கத்தான் வேணும். நீ ஒதுங்கியே நிக்கிறடா. இது இன்னொரு பயணம். நீ குதிச்சுதான் ஆகணும். தெரிஞ்சுக்கோ” என்கிறான். இப்புள்ளியில் கதை நினைவுகளுக்கும் நிகழ்காலத்திற்குமான ஊசலாட்டமாக தென்படுகிறது. வாழ்ந்த நிலமும் அன்னையும் கூட நினைவுகள் தானே. யானைக் கூட்டத்திலிருந்து விலகிய ஒற்றைக் கொம்பன் யானையை புதிய கூட்டம் ஏற்க மறுப்பதாக கனவு காண்கிறான் பழனி. பழனியால் உடலளவில் கிராமத்தை உதறிவிட முடிந்தாலும். மனதளவில் அவனால் கூட்டத்திலிருந்து தனித்து வந்துவிட முடியவில்லை. மிருகங்களால் நினைவுகளை உதறிவிட முடிகிறது மனிதர்களால் முடிவதில்லை என அங்கலாய்க்கிறான். அவை ‘நினைவுகள் குறைய குறைய தன் கடமைகள் குறைந்து நிம்மதியடைகின்றன.’ ஆனால் நாகலாதேவியை பற்றி எண்ணும் போது “உருமாறியபடியே இரு என நிர்பந்தித்தபடியே இருக்கிறது நவீனகாலம். அதனுடைய தாரக மந்திரமே அதுதானா. நினைவுகளை இழப்பது பெரும் துன்பம் தான். நவீனகாலம் மனிதர்களின் துன்பத்தைப்பற்றி நினைப்பதே இல்லை.” என்பதையும் உணர்கிறான்.

வேணுவின் மற்றொரு மிகப்பெரிய பலம் அவர் கட்டமைக்கும் புற உலகத்தில் உள்ள நம்பகத்தன்மை. அதுவே கதையில் நம்மை மனம் விலகாமல் ஒன்றச் செய்கிறது. பள்ளியளவில் சாதாரணமாக கபடியாடியிருக்கிறார் என்றறிகிறேன். கபடி களத்தை, அவர்களுடைய அசைவுகளைத் துல்லியமாக படம்பிடித்து காட்ட முடிகிறது. நிலம் எனும் நல்லாள் குறுநாவலிலும் வேளாண்மை சார்ந்த தகவல்களை செறிவுடன் அடுக்குகிறார். அது சார்ந்த நுண் தகவல்களை நுட்பங்களை விவரிக்கிறார். பல எளிய நாட்டுமருத்துவக் குறிப்புகளை அளிக்கிறார். (உண்மையில் பல வேளாண்சார் வட்டார சொற்களுக்கு குத்துமதிப்பாகத்தான் பொருள் கொண்டேன்). அன்றாட விவரணைகளில் இருந்து கவித்துவ எல்லைக்குள் அவர் தாவிச் செல்லும் இடங்கள் மன எழுச்சி அளிக்கின்றன. தன் நிலத்தில் வளரும் சூரியகாந்தி மலர்களை குமரன் காணும்போது எண்ணுவதை ஒரு உதாரணமாக கொள்ளலாம்

“சூரியன் எழும் கணத்திலிருந்து மறையும் கணம் வரை மஞ்சள் முகம் காட்டி முத்தமிடத் துரத்தியபடியே இருக்கும் பரிசுத்தம். கோடானுகோடி நட்சத்திரங்கள் ஒளிவீசி அழைத்தாலும் ஏறிட்டுபார்க்காத தியானம். இரவெல்லாம் கனவுகளைத் திரட்டி திரட்டி விடிந்ததும் தலைதூக்கி சூரியனில் விழிக்கும் மனதிடம். வேரில் பசியிருந்தாலும் முகத்திலே வாடாத மஞ்சள் பொலிவுடன் அண்ணாந்து பார்க்கும் காதல். வாட்டத்தில் தலைபாரம் தாங்காது கழுத்து வளைந்தாலும் முகத்தை தூக்க முடியாமல் தொக்கி ஓரக்கண்ணால் போகும் சூரியனைப் புன்னகையுடன் பார்க்கும் உயிர்கோலம். எவ்வளவு பெரிய சூரியன். எவ்வளவு சிறிய மஞ்சள் பூமுகம். நேருக்குநேர் யாரால் பகலெல்லாம் இப்படி முத்தமிட முடியும். ஒளிமழையில் நனைந்து கருவுறும், தாய்மையடையும்.”

மொழி, உரையாடல், நம்பகத்தன்மை, புற – அக சித்தரிப்பு, கூர்மையான அவதானிப்புகள் ஆகியவை சு.வேணுகோபாலின் படைப்புகளில் கச்சிதமாக கைகூடி வருகின்றன. எனினும் ஒரு குறுநாவல் அளிக்கும் ஒட்டுமொத்த தரிசனம் என்ன? எனும் கேள்வி முக்கியமானதே. அது புதிய திறப்பை அளிக்கிறதா அல்லது புதிய கோணங்களை முன்வைக்கிறதா? எல்லா ஆக்கங்களும் புதிய தரிசனத்தை அளித்துதான் ஆக வேண்டும் என்பதல்ல. வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது. அந்த நன்னம்பிக்கை முன்முடிவின் அளவிற்கு செல்கிறதா? நிலம் எனும் நல்லாளை எடுத்துக் கொண்டாலும் சரி ஆட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி அவை முன்வைக்கும் இறுதி தரிசனத்தை இயல்பாக அடையவில்லையோ எனும் ஐயம் எழுகிறது.

ஆட்டம் குறுநாவலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வடிவேல் எண்ணிப் பார்க்கிறான். நெடுங்காலமாக குறுஞ்செய்திகளில் புழங்கி வரும் ஒரு செய்தி தான். அதை நாவலின் தரிசனமாக காண்பதில் தவறேதும் இல்லை தான். ஆட்டம் என்பதே இனிமை. இழப்பதற்கு ஏதுமில்லை. இலக்குகளை அடைவதைப்பற்றி கவலையின்றி ஆட வேண்டும். ஆட்டத்தை நிறுத்திவிடவும் கூடாது எனும் தரிசனத்தை வடிவேல் அடைகிறான். ஆட்டத்தில் வெல்ல வேண்டும் எனும் வெறியடங்கி ஆட்டத்தை புரிந்துகொள்ள முயல்கிறான். ‘நிலம் எனும் நல்லாளை’ பொறுத்தவரை மாதவன் என்றொரு நண்பன் எப்போதோ கூறியதை திடிரென்று கதை முடிவதற்கு கொஞ்சம் முன் எண்ணி பார்க்கிறான் பழனிகுமார். “நீ எத்தன வருசம்டா இந்த உலகத்தில இருந்திட போற. போறப்ப எத தூக்கிட்டு போகப் போற. இருக்கிற எடத்துல நல்லத மொதல்ல பாருடா. நீ வாழ்ந்த வாழ்க்கைய உன் பிள்ளைக வாழணும்னு நெனைக்கிற..அது எப்பிடிடா?” என்றும் இன்னும் பல கேள்விகளை கேட்கிறான், ஆலோசனைகளை சொல்கிறான். வேணுவின் படைப்புகளில் பிரசார தோனி எழுகிறது என விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இத்தகைய முடிவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. மையப் பாத்திரத்தின் நகர்வு இயல்பாகவும் அழுத்தமாகவும் அந்த பார்வையை அடையவில்லை என்பதே நிலம் எனும் நல்லாள் மற்றும் ஆட்டம் ஆகிய படைப்புகளின் பலவீனம். ஒருவேளை இன்னும் விரித்து எழுதி இருந்தால் இது நிரடாமல் இருந்திருக்கும்.

வேணு ஆணாதிக்க எழுத்தாளர் என்றொரு விமர்சனமும் வைக்கபடுவதுண்டு. ஆனால் அது ஏற்புடையதல்ல. நிலப்பிரபுத்துவ மனநிலையை பிரதிநிதிப்படுத்தும் ஆண் கதையின் பிரதான பாத்திரமாகிறான். அவனுடைய தரப்புகளும் சிந்தனைகளும் எப்படி இருக்குமோ அதைத்தான் அவர் எழுதியிருக்கிறார். பிற பாத்திரங்கள் வழியாக அதைக் கேள்விகுட்படுத்தவும் செய்கிறார். பழனிக்கு எப்படி தன்னுடைய நிலத்தைப் பற்றிய கனவு இருக்கிறதோ அப்படி ராதாவிற்கு தனது நிலத்தை பற்றிய பெருமிதமும் பிடிப்பும் இருப்பது இயல்பே என்பதையும் பதிவு செய்கிறார். விவசாயம் நிலம் என கனவு கண்டுகொண்டிருக்கும் பழனியிடம் இத்தனை இருந்தும் நீ ஏன் கிராமத்தை விட்டு வெளியேறினாய்? எனும் கேள்வியை மாதவன் நேரடியாக பழனியிடம் கேட்கிறான்.

வேணுவிற்கு மனப்பிறழ்வு கொண்டவர்கள் மீது ஒருவித ஈர்ப்பிருக்கிறது. அவர்களின் களங்கமின்மை கடவுளுக்கு நிகராக எண்ணச் செய்கிறது. ஆட்டத்தில் வரும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஓட்டப்பந்தயத்தை போலவே நிலம் எனும் நல்லாளிலும் மாசாணி எனும் பதின்மூன்று வயது சிறுமி வருகிறாள். புதிய ஊரில் பழனி நெகிழும் முதல் நட்பு. அந்த மண்ணின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பு பிறக்கிறது.

தொலை நிலங்களில் வாழ்பவர்கள் எப்போதும் தங்கள் நிலத்திற்கு திரும்புவதைப் பற்றிய கனவுகளைச் சுமந்து அலைகிறார்கள். நிலம் வெறும் இடம் அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறையின் பிரதிநிதி. நினைவுகள் பின்னிக் கிடக்கும் அடர் கானகம். அதுவும் பெரும்பான்மை வேளாண் சமூகமாக இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் நிலம் ஆன்மாவிற்கு அணுக்கமானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய சமூகம் அதிவேகமாக நிறம் மாறி வருகிறது. நான் வாழும் பகுதியில் வேளாண்மையைக் கைவிட்டவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்குச் செல்வதை பார்க்கிறேன். சேற்றைக் காட்டிலும் சிமிண்டு கறை படிந்த கால்களையே அதிகமும் காண முடிகிறது. ஒரு மிகப்பெரிய உளவியல் மாற்றத்தின் குறியீடாக இதைக் காண்கிறேன். இயற்கையின் தயவில் இருந்த வாழ்வாதாரத்தைக் கைவிட்டு இயற்கைக்கு எதிராக வீம்புடன் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களை நம்பத் துவங்கிவிட்டார்கள். நிலம் மனிதர்களைக் கைவிடுகிறதா? அல்லது மனிதர்கள் நிலத்தைக் கைவிடுகிறார்களா? எனும் கேள்விக்கு அத்தனை எளிதாக விடையளித்துவிட முடியாது.

இறுதியில் பழனி எந்த நிலமும் எவரையும் வஞ்சிப்பதில்லை எனும் இடத்திற்கு வந்து சேர்கிறான். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் வந்தடைந்த அதே இடத்திற்க- “யாதும் ஊரே ..யாவரும் கேளீர்”

ஞானக்கூத்தன்: காலத்தின் குரல் – 2

நரோபா

முந்தைய பகுதியின் தொடர்ச்சி..

FRONT_PAGE_01_CORRCTION_02_for web

யவனிகா ஸ்ரீராம் ஞானகூத்தனை பற்றிய அவரது கட்டுரையில், 80களிலும் 90களிலும் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவரும், அவற்றுக்கு கவிதைகள் வழியாக எதிர்வினையாற்றியவரும் ஞானக்கூத்தன்தான் என குறிப்பிடுகிறார். அதற்கான காரணங்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

“நான் காப்பியங்களில் நம்பிக்கை கொண்ட கவிஞன்” என வெளிப்படையாக அறிவித்துகொள்ளும் அவர் “கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது” எனவும், “அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது” எனவும் திராவிட இயக்கங்களை பற்றி தீவிரமாக விமர்சிக்கிறார் (காலச்சுவடு நேர்காணல்). (more…)

ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்

நரோபா

அன்பைத் தவிர வேறொரு செய்தி

விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை

நீண்டதாய் எங்கும் செல்வதாய்

இருக்க வேண்டும் என் அன்பு

சக்கரம் பொருந்தி சுமையை

எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.

– உபதேசம், ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் எனும் கவிஞர் எனக்கு பரிச்சயமானது என்னவோ அசோகமித்திரனின் ஒற்றன் நாவலின் வழியாகத்தான். எழுத்தாளர்கள் அவையில் ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையை தியாகராஜன் மேடையில் வாசிப்பார். பின்னர் அங்கு விக்டோரியா இயக்கிய நாடகத்திலும் அந்தக் கவிதை உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் இடம்பெறும். அதில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். அம்மாவிடம், “வயதானவர்களுக்கு பொய் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியது என எண்ணினாயா?” எனக் கேட்பார்.

அவருடைய எனது பிள்ளைத்தமிழ் எனும் கட்டுரையில் இப்படி ஒரு வரி எழுதுகிறார்- “பௌராணிகச் சூழலில் வாழ்ந்ததால் நான் எதையும் நம்பினேன். தகுந்தவர் சொன்னால் போதும், நான் நம்புவேன். பகுத்தறியப்பட்டால் வீணாகிவிடும் அந்தக் கதைகள் ஏராளம்”. பொய்கள் வாழ்க்கையை எத்தனை எளிதாக்குகின்றன, அழகாக்குகின்றன. கொஞ்சம் இளைப்பாற அவகாசம் அளிக்கின்றன என எண்ணிக்கொண்டேன். அம்மாவின் பொய்கள் என்றென்றைக்கும் நம்மை பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன. (more…)