ஸ்ரீதர் நாராயணன்

இரங்கற்குறிப்பு

– ஸ்ரீதர் நாராயணன் –

pyrefire

வழுவழுப்பான சிறிய கூழாங்கல்லால் இடறப்பட்டோ
வன்மத்துடன் பாய்ச்சப்பட்ட கோடரியாலோ
வெறுமையான வயோதிக நொடிகளுக்குள்
புதைந்து போயோ

இலைச்சருகென இயல்பாக உதிர்ந்தபடியோ
மனக் கொந்தளிப்போடு மலையுச்சியிலிருந்து குதித்தோ

உற்றார் எல்லோரும் கொண்டாடும்
பொலிவான வாழ்க்கை முடித்து
வரலாற்று நாயகராகவாகவோ

துப்பாக்கிகுண்டின் விரைவிற்கு
தோற்றுப் போனவர்களாகவோ

எப்படியோ இங்கு ஒரு
வாழ்க்கை முடிந்து போகிறது..

ஆறுதல் முகங்களை
காட்டிச்செல்ல விரும்புபவர்களிடையே
ஒரு கணக்கு ஓடுகிறது,

எரியும் சிதையிலிருந்து
எத்தனைக் கொள்ளிகளை
பிடுங்கிக் கொண்டுப் போய்
தங்கள் வழிகளை ஒளியேற்றுவதென,

உயிருற்று இருப்பதுதான்
எவ்வளவு துயரமானது.

Picture courtesy: Videoblocks.com

பாவனைகள்

 purple_play_dough

பர்ப்பிள் வண்ண களிமண்ணில்
ஒரு கோப்பை செய்கிறாள்.

நாவால் நக்கி சுத்தமாக்கப்பட்ட
ஐஸ்க்ரீம் டப்பாவிலிருந்து
பால் விட்டதும்,
கோப்பையில்
அப்பாவிற்கான காப்பி நிறைகிறது.

சற்றே கோணலென
நீண்டிருக்கும் விளிம்பின் ஓரத்தை
பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

அகமலர்ச்சியோடு கோப்பையை வாங்கி
உறிஞ்சுகிறான்.
உடன் புரைக்கேறி விடுகிறதாம்.

அப்பாவின் செருமலும் இருமலும்
அவளை சிரிக்க வைக்கின்றன

கைப்பிடியை சரியாகப்
பிடித்துக் கொண்டு
கோப்பையை கவிழ்க்காமல்
செருமும் வித்தையை
அவனுக்கு செய்துக் காட்டுகிறாள்.

பாவனைகளற்ற உலகம் ஒன்று
அவர்களைச் சுற்றி பரவுகிறது.

pic courtesy: Mommypotamus

ஏரிக்கரை

IMG_0711

 

ஒற்றைக்காலில்
தவம் செய்யும்
மல்லார்ட் வாத்து
பித்தளை மூக்கை தூக்கி
காற்றில் வாசம் பிடிக்கிறது.

துலங்கும் வெளிச்சத்தில்
மின்னும் மரகதக் கழுத்தை
சுற்றிச்சுற்றி வந்து
படம்பிடித்து தள்ளுகிறவர்களை
அரைக்கண் சரித்துப் பார்க்கிறது

கேமிராவும் ஃபேஸ்புக்கும்
கண்டுபிடிக்கப்படாத காலமொன்றில்,
எள்ளுப்பிண்ணாக்கையும், மக்காசோளத்தையும்
உருண்டை பிரட்டி
உலர்ந்த மீன்களை
கொண்டு வந்திருப்பார்களாக இருக்கும்.

வண்ணமயமான இறக்கைகளுடனான
உடலைக் கொஞ்ச நேரம்
அவர்களுக்குக் காட்டிவிட்டு
ஏரிக்குள் மறைகிறது.

நம்புங்கள்

– ஸ்ரீதர் நாராயணன்

dad_daughter

வருங்காலத்தின் அத்தனை அநிச்சயங்களையும்
அச்சுறுத்தும்வகையில் உருவகப்படுத்தி
அவளுக்கு பொறுப்புணர்ச்சி உண்டாக்கவும்,

அடுத்து வரும் வகுப்புகளில்
கவனமாக
dஐ d போலவும் Yயை y போலவும்
மாற்றாமல் எழுத வேண்டும் எனவும்,

கண்டிப்பான சுடுசொற்களை வீசி
அவளுக்கான முன்னேற்றத்தை
வழிப்படுத்தத்தான் எண்ணியிருக்கிறேன்.

இப்படி,
கிளிப்பிள்ளைப் போல
அவள் சொல்லும் சொற்களின்
வேடிக்கையை கேட்டு
திரும்பத் திரும்பத் சொல்லி
கெக்கெலித்து பூரிப்பதற்காக இல்லை.

 

Picture courtesy: Ashok’s blog

புன்னகை

– ஸ்ரீதர் நாராயணன்

காப்பிக்கடை ஜன்னல் வழியே
கோப்பையைத் தரும்-
கோடென வரைந்த தாடியுடனான-
இளைஞனின் புன்னகை.

முன்னர் அதே ஜன்னலில்
காப்பி கோப்பையை தந்து கொண்டிருந்த-
நீள தலைமுடியை
தொப்பியினுள் செருகிக் வைத்திருக்கும்-
இளைஞனின் புன்னகையை
நினைவுப்படுத்தியது.

இருவரும் ஒன்றாகவும் இருக்கலாம்.

கவனத்திற்குட்பட்டவைக்கும்
அல்லாதவைக்குமான
ஊசலாட்டத்தினிடையே
அந்தப் புன்னகை மட்டும்
பத்திரமாக இருக்கிறது.