ஜிஃப்ரி ஹாசன்

ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-காலனிய இலக்கியத்தை, குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு குடியேற்ற நாடொன்றின் குடிமகனால் எழுதப்படும் இலக்கியங்கள்என இலக்கியக் கோட்பாட்டாளர்கள் வரையறுக்கின்றனர்.

காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடாக இந்தியா இருந்தபோதும் பின்-காலனிய இலக்கியங்கள் இங்கிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்தளவுக்கு தமிழில் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழின் புனைவெழுத்துகளை சராசரியான மனித வாழ்வும் அதன் உணர்ச்சிகரமான பக்கங்களுமே தீர்மானித்து வந்தன. தமிழ்ச்சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் கொட்டிக்கிடக்கின்றன மனித வாழ்வு பற்றிய நூற்றுக்கணக்கான பார்வைகள். இந்த வட்டத்தை  தமிழ்ப் புனைவுலகம் மிக அபூர்வமாகவே மீறியுள்ளது. ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்“ தமிழ்ச் சிறுகதை வெளியில் அத்தகையதொரு அபூர்வமான  மீறலே.

காலனித்துவ ஆட்சி பல பரிமாணங்களை உடையது. கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் தங்களது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்து அங்குள்ள பொருளியல் வளங்களைச் சூறையாடியமை காலனித்துவ ஆட்சியின் ஒரு பரிமாணம் என்றால் அங்குள்ள மக்களின், தனிமனிதர்களின் கனவுகளை, சுயமரியாதையை, வாழ்க்கையை சூறையாடியமை அதன் இன்னொரு பரிமாணமாகும். இவை தவிர வேறு பல பரிமாணங்களும் அதற்குண்டு.

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் காலனித்துவத்தின் பல பரிமாணங்களைப் பேசும் கதை. மேற்கில் அதிக மதிப்புமிக்கதாக விளங்கிய யானைத்தந்தம் எனும் பொருள் வளத்தை சூறையாடுவதற்காக வில்சன் எனும் வெள்ளைக்கார துரை  ‘ஊமைச்செந்நாய்’ என அந்த துரையால் அழைக்கப்படும் (அழைக்கப்படும் என்பதைவிட வசைபாடப்படும் என்பதே பொருத்தமானது) சுதேசியான வேட்டையாள் ஒருவனை உதவிக்கு வைத்துக்கொண்டு இந்தியாவின் அடர்வனமொன்றுக்குள் காட்டு யானை ஒன்றை வேட்டையாடும் ஒரு நிகழ்வுதான் இந்தக்கதையின் மையச் சம்பவமாக வடிவங்கொள்கிறது. அதேநேரம் மனிதர்களது கனவுகள் சுய மரியாதை என்பன இன்னொரு விதத்தில் எப்படி மோசமாக சூறையாடப்பட்டன என்பது கதையின் உபபரிமாணமாக வெளிப்படுகிறது. இந்த இரு பரிமாணங்களும் ஒற்றை வடிவங்கொண்டு ஒரு விசையுடன் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறது.

வளச்சூறையாடல் என்ற பெருந்தளத்திலிருந்து சுழலும் இக்கதையில் நுண்மையான மனித உணர்ச்சிகள்கூட புறக்கணிக்கப்படாமல் அதற்கே உரிய தீவிரத்துடன் சித்தரிக்கப்படுவது, காடு பற்றிய விபரணங்களின்போது காட்டின் மௌனத்தையும், அதன் ஓலத்தையும் கதையின் சொற்களுக்குள் உள்ளடக்கி இருப்பது, வாசகனைச் சோர்வடையச் செய்யாத கதைமொழி மற்றும் உணர்ச்சிச் சித்தரிப்பு போன்ற காரணங்களால் இந்தக் கதை ஜெயமோகனின் ஒரு மாஸ்டர்பீஸாகவும், தமிழின் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகவும் மாறுகிறது.

ஊமைச்செந்நாயிலிருந்து ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளக்கூடிய உண்மை காலனித்துவ சுரண்டல் என்பது வளங்களைச் சூறையாடுவதுடனோ, பண்பாட்டுத் திணிப்புடனோ நின்று விடாது ஒரு இனத்தின் மற்றும் தனிமனிதனின் சுய மரியாதையைக்கூட சூறையாடும் வரைக்கும் அதன் எல்லை விரிவுபட்டது என்பதுதான். ஊமைச்செந்நாயின் மையக் கதையாக இந்த உண்மைதான் வரிக்கு வரி அழுத்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு பிரச்சாரத்தன்மையாகத் தோற்றங்கொள்ளாமல் ஒரு புனைவுத் தன்மையாகவே வெளிப்படுகிறது. புனைவை கலைத்துவச் செறிவுமிக்கதாய் ஆக்கும் ஜெயமோகனின் வழமையான புனைவு மொழியிலிருந்தும், எடுத்துரைப்பிலிருந்தும் ஒரு நூலளவு வித்தியாசம் இக்கதைக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

வில்சன் எனும் பெயரையுடைய வெள்ளைக்கார துரை மேற்கின் குறியீடென்றால் ஊமைச்செந்நாயை இந்தியாவின் குறியீடாக கொள்ள முடியாது. ஏனெனில், காலனித்துவ சக்திகளை மூர்க்கமாகவும், சாத்வீகமாகவும் எதிர்த்து நின்றதே காலனித்துவ இந்தியாவின் வரலாறாகும். ஆனால் ‘ஊமைச்செந்நாய்‘ கதையின் இறுதியில் அடையும் தீவிரத்தை வேறெங்கும் அடைவதில்லை.

கதையில் வில்சன் பற்றிய விபரணம் காலனியப் பேரரசு பற்றிய விபரணமாக வாசகனின் மனதில் படிகிறது. வில்சன் பிரித்தானியா எனும் காலனியப் பேரரசினதும் வெள்ளை இன மையவாதத்தினதும் (Ethnocentrism) அகமும் புறமுமாக இருக்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ அக்கால இந்தியாவின் அகமும் புறமுமாக இருக்கிறானா என்பதை திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.

ஆங்கிலேய வெள்ளைத் திமிர் வில்சன் வழியே கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

துரை கண்களைச் சிமிட்டினான். பதிலுக்கு நாம் சிமிட்ட முடியாது என்று கதையின் தொடக்கத்திலேயே கதைசொல்லி சொல்லும்போது அது வெள்ளையனுக்கும்-இந்தியனுக்குமிடையிலான  ஒரு சமநிலையின்மையை காட்டுகிறது. அச்சமநிலையின்மையே கதையின் மையப்புள்ளியும் கூட.

துரையின் பாலியல்  தேவைக்காக கிராமத்திலிருந்து அழைத்துவரப்படும் பெண்ணோடு துரை வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். அவனுடன் சமமாகப் படுப்பதற்கு, யோனி வழி புணர்வதற்குக்கூட இந்தப்பெண்கள் கீழானவர்கள் என்ற வெள்ளைத்திமிர் இது போன்று இன்னும் பல இடங்களிலும் வெளிப்படுகிறது.

வில்சன் துரை ஊமைச்செந்நாயிடம் நீ வெள்ளைக்காரப் பெண்ணோடு எப்போதாவது புணர்ந்தாயா?” எனக்கேட்கிறான். ஊமைச்செந்நாய் வழமை போன்று மௌனமாக இருக்கிறான்.

 ”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”

என்கிறான் வில்சன் துரை. ஒரு இந்தியப் பெண்ணுக்கும் வெள்ளையனுக்கும் பிறந்தவன்தான் ஊமைச்செந்நாய். அதனால் ஓரளவு வெள்ளையனின் சாயலை ஊமைச்செந்நாய் பெற்றிருந்தது வில்சன் துரையால் சகித்துக்கொள்ள முடியாமல் போகிறது. ஒரு வெள்ளையன் ஒரு போதும் அடிமையாக இருப்பதில்லை, என செந்நாயை நோக்கி கத்துகிறான் துரை.

இப்படி கதையின் பல இடங்களிலும் வெள்ளைத் திமிர், காலனிய அகம்பாவம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு எந்த விதத்திலும் குறைவுபடாமல் ஊமைச்செந்நாயின் தாழ்வுணர்ச்சியும், அடிமை மனப்பான்மையும் சமாந்தரமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக ஒரு வாசகன் கருதவும் இடமுண்டு. ஊமைச்செந்நாய் என அவனுக்கு வழங்கப்பட்ட அடையாளத்தைக்கூட அவன் எதிர்த்து நிற்பதில்லை. புறத்திலிருந்து அவன் மீது திணிக்கப்பட்ட அடையாளம் அது. தனது அடையாளத்தை தன் புறத்திலிருந்து, தனது சுயத்திலிருந்து அவன் சூடிக்கொள்வதில்லை. காலனித்துவவாதியால் தன் மீது திணிக்கப்பட்ட அந்த அடையாளத்தை ஒருவாசகன் இந்திய தேசத்தின் மீதான, அதன் குடிமக்களின் மீதான அவமானத்தின் அடையாளமாகவே காண்கிறான். கதை நெடுகிலும் ஊமைச்செந்நாய் மௌனமாகவே அதைக் கடந்து சென்று விடுகிறான். ஆனால் ஒரு கீழைத்தேய வாசகன் பெரும் அதிர்ச்சியுடன் அவனது மௌனத்தை எதிர்கொள்கிறான். ஊமைச்செந்நாயின் மௌனத்தை அவனால் இலகுவில் கடந்துசெல்ல முடிவதில்லை.

கதைசொல்லியான ஊமைச்செந்நாய் வில்சன் துரையைப் பற்றிச் சொல்லும் போது-

அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பது வயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தாடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். ”

காலனித்துவ பேரரசின் மீதும் வெள்ளையினத்தின் மீதும் ஒரு எல்லையற்ற மயக்கம் குடியேற்றநாட்டு மக்களின் மனங்களில் மறைமுகமாக ஏற்றப்பட்டிருந்ததைத்தான் இந்தவரிகள் வெளிப்படுத்துகின்றன. காலனித்துவத்தின் ஒரு உளவியல் பரிமாணம் அது. அது நம்மை அறியாமல் நமக்குள் வந்துவிடுவது. ஜெயமோகனால் கூட அதனை தவிர்க்கமுடியாமல் போய்விட்டது.

காலனிய ஆட்சியாளர்களுக்கும், வெள்ளைத்திமிருக்குமெதிரான இந்திய மிடுக்கு கதையின் எந்தவொரு புள்ளியிலும் வெளிப்படுவதாக இல்லை. கதைமுடிவில் ஊமைச்செந்நாய் எடுக்கும் முடிவு இந்தியாவின் மிடுக்கைப் பறைசாற்றப் போதுமானதாக இல்லை. ஊமைச்செந்நாயையும் அவன் தேசத்தையும் கன்னா பின்னா என்று கடுமையாக அவமரியாதை செய்யும் வில்சனை ஒரு சந்தர்ப்பத்தில் ஊமைச்செந்நாய்தான் சாவின் விளிம்பிலிருந்து மீட்டுக்கொண்டு வருகிறான். எதிர்ப்புக் குணமற்ற முழுமையாக சரணாகதியடைந்த பாத்திரம் அவன்.

கதையின் முடிவில் செந்நாய் உயரத்திலிருந்து சறுக்கி கீழே விழ நிகழும்போது பதிலுக்கு துரையும் அவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறான். ஆனால் செந்நாயோ அவன் தயவால் உயிர் பிழைப்பதைவிட சாவை அல்லது சுயமாகத் தப்பித்தலைத் தெரிவு செய்து, கடைசியில் துரையை சபித்துவிட்டு மரணப் பள்ளத்தாக்கை நோக்கி விசையுடன் இறங்குகிறான்.

ஊமைச்செந்நாய் வில்சனை சாவிலிருந்து மீட்டெடுத்ததற்கும் வில்சனால் காப்பாற்றப்படுவதை தவிர்த்துக்கொண்டமைக்கும் வேறு பண்பாட்டுக்காரணிகள் இருக்கக்கூடும். ஆனால் வாசகனுக்கு அவை பூடகமானவை.  ஊமைச்செந்நாயின் அந்த முடிவு துரையினதும் அவன் தேசத்தினதும் ஆணவம், ஒரு எளிய மனிதனின் முன்னால் எதுவுமே இல்லை என்பதைச் சொல்வதோடு அவனை (ஊமைச்செந்நாயை) ஒரு சரித்திரச் சித்திரமாகவும் மாற்றிவிடுகிறது.

எனினும் கதையில் இந்தக்கட்டம் காலனித்துவ அடக்குமுறைக்கெதிரான இந்தியாவின் சுதந்திர உணர்வை இப்படியான அடிமை உணர்வுள்ள மனிதர்களைக்கொண்டு மாற்றீடு செய்வது ஒரு வரலாற்று அபத்தம் என இன்னொரு கோணத்திலும் வாசிக்கப்பட முடியும். கதைக்குள் அதற்கான சாத்தியங்கள் திறந்தே கிடக்கின்றன.

கதையின் ஒட்டுமொத்தத்தையும் ஒரு அறிவுத் தளமன்றி உணர்வுத்தளமே தீர்மானித்திருக்கிறது.  கதைக்குள் ஒரு பின்காலனிய அரசியல் பரிமாணம் அதன் எல்லாப் பண்புகளோடும் இல்லாமல் இருக்கிறது. காலனிய முதலாளித்துவ அரசியல் மீதான விமர்சனமாக கதை அமைந்துவிடாமல் வேறொரு தளத்துக்கு ஜெயமோகன் கதையை நுட்பமாக நகர்த்திக்கொண்டு செல்கிறார். ஊமைச்செந்நாய் என வில்சன் துரையால் கிண்டலாக அழைக்கப்படும் சுதேசி ஊழியமற்ற ஒரு வேட்டை உதவியாளனாகவே வருகிறான். அவன் தனது தன்னுணர்வு சார்ந்தும், உழைப்பு சார்ந்தும், இருப்பு சார்ந்தும் பல பரிமாணங்களில் சுரண்டப்படுகிறான். சுருக்கமாகச் சொல்வதானால் வில்சன் துரை எனும் ஆங்கிலேயப் பேரரசின் காலனித்துவப் பசிக்கு முழுமையாக அவன் இரையாகிறான். இந்த அரசியல் கதைக்குள் ஊடுபாவி இருக்கிறது. ஆனால் அதுவே கதையாக இருப்பதில்லை. மனித உணர்ச்சிசார்ந்த சித்தரிப்புத்தான் கதையை நகர்த்தும் மைய விசையாகவுள்ளது.

இக்கதை முடிவடைவதில்லை. ஊமைச்செந்நாயின் கதை மட்டுமே முடிகிறது. கதையின் தலைப்பாக ஊமைச்செந்நாயை வைத்து கதையை முடித்திருக்கிறார் ஜெயமோகன். மற்றப்படி கதை மேலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஊமைச்செந்நாயின் கதையை முடிப்பதன் மூலம் கதைக்கு ஒரு நிறுத்தம் மட்டுமே ஏற்படுகிறது.

கதை காலனித்துவச் சில்லுகளாலேயே உருண்டு செல்கிறது. கதாபாத்திரங்கள் காலனிய சுரண்டலை ஏதோ ஒருவிதத்தில் அனுபவிப்பவர்கள். அந்தவகையில் பின் காலனிய புனைவுகளின் தன்மைகளைப் பெற்றதாகவுள்ளது. ஒரு புனைவாக அது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

நிறமாற்றம்

ஜிஃப்ரி ஹாஸன்

நிறங்களை மாற்றி மாற்றி
எழுதுகிறது விதியின் பேனை
சூரியனை நீலமாக வரைந்தது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
கடலை வரைந்தது
ஆரஞ்சு நிறத்தில்
நட்சத்திரங்களையும்
இருண்ட கருமை நிறத்தில்
நிலவையும் வரைந்தது
கிளியை கறுப்பு நிறத்திலும்
காகத்தை பச்சை நிறத்திலும் வரைந்தது
கொக்குகளை ஊதா நிறத்திலும்
செவ்வரத்தையை
வெளிர் நீல நிறத்திலும் வரைந்தது
உண்மையின் குரல்கள் மௌனமான
கணப்பொழுதுகளில் விதியின் கைகள் திறக்கும்
சாளரங்களின் வழியே
உலகம் இப்படித்தான்
தன் முகத்தை கணத்துக்குக் கணம்
நிறம் மாற்றிக்கொள்கிறது

இரவின் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

இரவுகள் தூங்கிக் கொண்டிருந்தன
நினைவுகள் பிளந்து கொண்டு
தன்போக்கில் அலைந்தன
தூங்கும் இரவுகளிடம்
முறையிடல்களை முன்வைத்த
மனிதர்களை நான் கண்டேன்
பாஷைகளற்ற மௌனம்
சூழ்வதையும் பின் கலைவதையும்
ஒவ்வொரு முறையிடலுக்குப் பின்னும்
கேட்கிறேன்
ஓய்விலிருக்கும் ஒவ்வொன்றும்
தனக்கென்றொரு தவத்தை
தனக்கென்றொரு வரத்தை
தானே கண்டடைகின்றன
கையளிக்க எதுவுமற்ற
வரண்ட இரவுகள் இவை
அதனிடம் எதையும் எதிர்பார்த்திருப்பதன்
அர்த்தமின்மையை உணரும் தருணம்
ஒரு பேருறக்கத்தினுள்
நான் என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
பாஷைகளற்ற மௌனம்
என்னை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது

ஒரு குருட்டு நட்சத்திரத்தை தானும்
விட்டு வைக்காத வரண்ட இரவுகள்
மௌனமாய் உறைந்திருந்தன
எனது ஆன்மாவின் அங்கலாய்ப்பை
எனது தனிமைத் தவத்தை
பேயுரு கொண்டு கலைக்கிறேன்
இரவுகள் துயில் கலைந்து
வனத்தின் ஆழத்துள் சென்று மறைகின்றன
இந்த நூற்றாண்டின் இரவுகள் இயங்குவதற்காகவும்
பகல்கள் உறங்குவதற்காகவும் என காலத்தை
மாற்றியமைக்கும் வெறியுடன்
தூங்கும் இரவுகளை பேயுரு கொண்டு
கலைக்கிறேன்

தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்“: தமிழ்ச் சிறுகதையின் இன்னுமொரு முகம்

 

ஜிஃப்ரி ஹாஸன்

தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் நீண்ட பட்டியலை நாம் புதுமைப்பித்தன், கி.ரா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணதாசன் என ஒரு சுருக்கமான பட்டியலாகப் போட்டுக் கொண்டால் அதில் தமிழவனையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்வதா? அல்லது, இந்தப் பட்டியலை விடுத்து ஒரு புதிய பட்டியலைத் தமிழவனிலிலிருந்து தொடங்குவதா என்ற கேள்விதான் தமிழவனின் கதைகளை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டது. அவரது கதைகளை வாசிக்கும்போது இதே கேள்வி உங்களுக்கும் எழுவதற்கு அதிக சாத்தியமுள்ளது.

தமிழ்ச் சூழலில் கவிதையை ஒட்டி நடந்த விவாதங்கள் அளவுக்கு சிறுகதை பற்றி பெரிதாக நடந்தேறவில்லை. மரபுக் கவிதை, நவீன கவிதை, பின்-நவீன கவிதை என்ற வகைப்படுத்தல்களும் அது தொடர்பான உரையாடல்களும் நமது இலக்கியவெளியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக கவிதை குறித்த புதிய பார்வைகளும், புதிய போக்குகளும் உருவாகின. தமிழ்க் கவிதைச் செயற்பாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் வளர்ச்சியையும் அவை ஏற்படுத்தின.

தமிழில் கவிதை அளவுக்கு ஒரு நீண்ட வரலாற்றை சிறுகதைகள் கொண்டிருக்கவில்லை. இலக்கிய காலப் பாகுபாட்டில் நவீனயுகம் எனப்படும் காலப்பகுதியிலேயே சிறுகதைகள் தோற்றம் பெற்றன. மரபுச் சிறுகதைகள் என எதுவும் கிடையாது. எனினும் நவீன கால தமிழ்ச் சிறுகதைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலைக் கோட்பாடுகளின் தாக்கத்துக்குட்பட்டு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய தளத்தில் சிறு அளவில் பயணத்தை தொடங்கி இருந்தன.

பின்னர், நவீனத்துவச் சிறுகதைகளில் காணப்பட்ட மையக் கருவொன்றைச் சுற்றியே கதையை நகர்த்துதல், உரையாடல்களில் கிளை மொழிப் பாவனை (ஒரு பிரதேச உரையாடல் மொழி இன்னொரு பிரதேச வாசகனுக்கு புரியாத போதிலும் அதையே கையாளுதல்), ஒரு கதைக்குள் ஒரு கதை மட்டும் காணப்படுதல், விவரணங்கள் குறைவாக இருத்தல் போன்ற பண்புகளிலிருந்து விடுபட்டு பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமானதாக தமிழ்ச் சிறுகதைகள் ஒரு புதிய பயணத்தை தொடங்கின.

பொதுவாக பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் மேலோட்டமானது போன்ற  தோற்றம் அளிக்கும் ஆழமான கதைகளாகும். வாசகர்களை கதையோடு பிணைக்கக்கூடிய மொழியைக் கொண்டவை. கிளைமொழி உரையாடல்களைத் தவிர்த்து ஒரு பொது மொழியில் உரையாடல்கள் கொண்டவை. அது கதையின் சுவாரஸ்யத்தை மேலும் மெருகூட்டுகின்றது. அவை நவீனச் சிறுகதைகளின் பிராந்திய உரையாடல் மொழிகளைத் தவிர்த்து வாசகனை கதைக்குள் உள்வாங்கும் நெகிழ்வுத் தன்மையான கதைகூறல் மொழியை கொண்டுள்ளன. ஒரு மைய சம்பவத்தையோ, மையக் கதாபாத்திரமொன்றையோ சுற்றி கதை இங்கு நகர்த்தப்படுவதில்லை.

மனித வாழ்வை, அதன் எல்லாப் பரிமாணங்களையும் ஒரு வித அங்கதத்துடன் சித்தரிக்கின்றன. இத்தகைய பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு சில நாவல்களும் உள்ளன. சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே. சில குறிப்புகள்”, சாருநிவேதிதாவின் ”ஸீரோ டிகிரி” போன்ற நாவல்களில் இந்த எழுத்துமுறை உள்ளது. ஏன் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’வோ, ‘ம்’ நாவலோ இந்த எழுத்துமுறைக்கு அவ்வளவு அந்நியமானதல்ல.

தமிழில் பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் என்ற வகையில் தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்” தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் நவீன சிறுகதை எழுத்தாளர்களோ, விமர்சகர்களோ இத்தகைய சிறுகதைகளை இலகுவில் அங்கீகரிப்பதில்லை. இலக்கியத்தரமுள்ள எந்தவொரு படைப்பும் நிராகரிக்கத்தக்கதல்ல. மாறாக அவை உரையாடப்படக் கூடியவையே. தேவையற்ற அச்சம் காரணமாக சில நவீன சிறுகதை எழுத்தாளர்களும், விமர்சகர்களும் தங்களிடமுள்ள அளவுகோளுக்குட்படும் கதைகளை மட்டுமே அங்கீகரிப்பதும் ஏனைய கதைகளை நிராகரித்தும் வருகின்றனர். இத்தகைய பின்-நவீனச் சிறுகதைகள் வாழ்க்கையை மேலோட்டமாகச் சித்தரிக்கின்ற மொழி விளையாட்டு என நிராகரிக்கின்றனர்.

ஆனால் இந்த நவீனத்துவப் பார்வையிலிருந்து சற்று விலகி இலக்கிய ஜனநாயக சிந்தனையின் அடிப்படையில் தமிழவனின் கதைகளை நாம் வாசிப்புச் செய்யும்போது அவரது கதைகளுக்கான இடத்தை வாசகன் கண்டுகொள்கிறான். படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களே தமிழ்ச் சிறுகதைகளின் மைய அம்சமாக கொண்டாடப்படும் ஒரு இலக்கிய காலத்தில்தான் நாம் இருக்கிறோம். தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்”  கதைத் தொகுதியிலுள்ள அநேக கதைகள் அவரது வாழ்வியல் அனுபவங்களைப் பேசுபவையாகவே இருக்கின்றன.

 கதைசொல்லிகள் தங்களது கதைகளில் அவர்களின் சொந்த அனுபவங்களை முதன்மைப்படுத்துவது நமது சிறுகதையின் மரபான பண்பாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் தமது சொந்த அனுபவங்களை தமிழவன் வெளிப்படுத்தும் முறையில் ஒரு பின்நவீனத் தன்மை வெளிப்படும் விதத்தை வாசகர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

மனித வாழ்வின் மீதான நுண்ணிய அதிகாரங்களையும், அவமதிப்புகளையும் அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் மன அதிர்வுகளையும் தமிழவன் தன் கதைகளில் பதிவு செய்கிறார். தமிழவன் கதைகளில் உலவும் மனிதர்கள் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் வேட்கையுடன் வருகின்றனர்.

நமது தமிழ்ச் சிறுகதைகளின் கதைநிகழ்களத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று அர்த்தப்படுத்தும் முனைப்பு தமிழவனின் அநேகமான கதைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு கோட்பாடாகவே வடிவம் கொண்டுள்ளது.

தமிழவனின் இந்தக் கதைத்தொகுதி தமிழின் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து ஒரு புரட்சிகரமான மீறலைச்செய்துகொண்டு தமிழ் எதார்த்தத்தை, தமிழ் வாழ்க்கையை புதியதொரு கோணத்தில் பேசுகின்றன. இத்தொகுப்பிலுள்ள அநேக கதைகள் தமிழ் வாழ்வை அதற்கு முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் வைத்து ஆனால் அதற்கு மிகவும் நெருக்கமான மனிதர்களைக் கொண்டு பேசுகின்றன.

சிலகதைகள் முதல் வாசிப்பில் தந்த அனுபவத்தை விட இன்னுமொரு வாசிப்பில் பிறிதொரு அனுபவத்தை தருகின்றன. ஆக, வாசகனுக்குள் ஒரு கதை ஏற்படுத்தும் அனுபவங்களின் ஒற்றைத் தன்மையை ஒரேயடியாக உடைத்தெறிகிறார் தமிழவன். எனினும் வாழ்வின் நுண்மையான அனுபவங்களை விடவும் பேரனுபவங்களையே அவர் பேசுகிறார். இதனால் வாழ்க்கையை கலைத்துவமாக சிருஷ்டித்துக் காட்டுவதற்கு பதிலாக தத்துவார்த்தமாக சிருஷ்டித்துக் காட்டுகின்றன தமிழவனின் கதைகள்.  

இத்தொகுப்பிலுள்ள கதைகள் சிறுகதைகளின் வழமையான அளவில் (சைஸ்) ஒரு புதிய மீறலைச் செய்கிறது. சிறுகதைகள் என்ற வகைப்பாட்டுக்குள் வரும் கதையின் அளவைவிட சற்று சிறியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. அண்மைக்காலமாக அவை Short Fiction என்றொரு வகையாகவும் பார்க்கப்படுகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கதைகள் கதைகூறும் முறையிலும் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து விலகிச் செல்கின்றன. தொடக்கம், உச்சம், முடிவு எனும் அரிஸ்டோட்டிலிய நியம முறைக் கதைகூறல் பண்பை தமிழவன் முற்றாகவே புறக்கணித்துள்ளார். இதனால் அவரது கதைகள்நன்கு கட்டமைக்கப்படாதகதைகளாக தமிழில் ஒரு புதிய போக்கை முன்னெடுத்துச் செல்லும் தன்மையுடன் மேற்கிளம்புகின்றன.   இங்கு கதைகள் உரையாடல்களற்று கதைசொல்லியின் விவரணங்களால் மட்டுமே புனைவாக்கம் பெறுகின்றன. மேலும் இக்கதைகள் ஒரு விதத்தில் முடிவடையாததாகத் தோன்றுவதோடு முடிவுகளை வாசகனே எடுத்துக்கொள்ளும் வாசக சுதந்திரத்தைக் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலுமே தமிழவன் காப்பாற்றி இருக்கிறார்

இக்கதைகளுக்குள் மையக் கதாபாத்திரம் என்று யாரும்/எதுவும்  இருப்பதில்லை. மையமான கதைச்சம்பவம் என்றும் எதுவும் இருப்பதில்லை.  இதனால் நவீனத்துவச் சிறுகதைகளுக்குப் பின்னரான ஒரு புதிய கதைப்போக்கின் ஆரம்பமாக தமிழவனின் கதைகள் தோற்றங் கொள்கின்றன. கதைக்குள் ஒரு மையக் கதாபாத்திரத்தை உருவாக்குவது அல்லது கதைசொல்லியே ஒரு மையக் கதாபாத்திரமாக மாறிவிடுவது என்பது கதைக்கு ஒருமுகத்தன்மையை வழங்கிவிடுகிறது. இங்கு மையக் கதாபாத்திரங்களற்ற பின்நவீன நிலைமையானது ஒரு கதையைகதைஎன ஒருமையில் அழைப்பதை விடகதைகள்என பன்மையில் அழைக்கவும் அணுகவும் தூண்டுகிறது. இப்படித்தான் தமிழவனின் இந்தத் தொகுப்புக்குள்ளிருக்கும் ஒரு கதைகதைகளாகவடிவங் கொள்கிறது.

உதாரணமாக, ‘மொழிபெயர்ப்பு நிறுவனம்” எனும் கதையில் மொழிபெயர்ப்புத் துறைப் பொறுப்பாளனா?, 17 வயதுச் சிறுவனா, அல்லது மொழிபெயர்ப்பு பணியகப் பணியாளர்களில் ஒருவரா யார் மையக் கதாபாத்திரம் என்ற கேள்விக்கு வாசகனால் இறுதிவரை விடை காண முடிவதே இல்லை.

“மூவரும் மௌனமானார்கள்” எனும் கதையிலும் இதே அனுபவத்தைத்தான் வாசகன் பெற்றுக் கொள்கிறான். அதனால் இந்த அனுபவம் வாசகனுக்கு தொடர்ச்சியாக தமிழவனின் கதைகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மையக் கதாபாத்திரம் யார் என்ற கேள்விக்கு விடை இல்லாவிட்டாலும் கதை வாசக இரசனைக்கு மிக நெருக்கமானதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பு நிறுவனம்“ எனும் கதை டெல்லியை தலைமையகமாகக் கொண்டியங்கும் மொழிபெயர்ப்பு நிறுவனமொன்றுக்குள் தொழிற்படும் நுண்ணிய அதிகாரமானது மொழிபெயர்ப்பு எனும் துறையையே எப்படிச் சீரழித்துவிடுகிறது என்பதைப் பேசுகிறது.

தமிழவனின் சில கதைகள் உலக தளத்தை கதை நிகழ்களமாகக் கொண்டுள்ளன. நீ புரிந்து கொள்வாய் இறுதியாக எனும் கதை போலந்து இந்திய அனுபவங்களோடு விரியும் ஒரு கதையாகும். இரு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாகவும் இந்தக் கதையை பார்க்கலாம். ஒரு திரைப்படம் போல் நகரும் இக்கதையில் அடிக்கடி காட்சிகளும் மனிதர்களும் மாறியபடி இருக்கின்றனர். கதை ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி மட்டுமே சுழல்வதில்லை. அதனால் வாசகன் வேறு திசைகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறான். இந்த அலைக்கழிப்பு வாசகனுக்கு ஒரேநேரத்தில் வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.   

இந்தியத் தமிழ்ச் சிறுகதைகளில் மேலோங்கிக்காணப்பட்ட தமிழ்க் கலாசார மரபென்பது இந்து காலாசார மரபாகத்தானிருந்தது. தமிழவனின் கதைகளில் அந்த மரபு மீறப்பட்டுள்ளது. அவரது கதைகளில் கிறிஸ்தவ கலாசாரமும் அதன் மொழிக்கூறுகளும் அதிக கவனிப்புக்குள்ளாகின்றன. தமிழவன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் அது நேர்ந்திருக்கலாம்.

தமிழவன் கதைகளில் அழுத்தம் பெறும் கிறிஸ்தவக் கலாசாரப் பதிவுகள் அவரது கதைகளில் கவனிக்கத்தக்க ஒரு புதிய பண்பாக மேலெழுகின்றன. இதுவரை கால நமது அநேகமான தமிழ்ச்சிறுகதைகளில் தமிழர் பண்பாடு இந்து மதம் சார்ந்ததாகவும் மற்றும் இஸ்லாமியப் பண்பாடுமே அதிகமும் விபரிப்புக்குள்ளாகி வந்தன. தமிழ் பண்பாட்டின் கட்டடக்கூறான கோயில்கள் மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டின் கட்டடக்கூறான பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் பற்றிய வரலாறுகளையும், அவற்றின் தொன்மங்களையும், விபரணங்களையுமே நமது தமிழ்ச் சிறுகதைகளில் வாசித்து வந்திருக்கிறோம்.  

 தமிழவனின் இக்கதைத் தொகுப்பிலுள்ள கணேசன் மனைவி பறந்து போனாள் கதையில் கிறிஸ்தவ பண்பாட்டு நம்பிக்கையான பலிப்பூசை பற்றிய குறிப்புகளும், சர்ச் ஒன்றின் வரலாற்றுக் குறிப்புகளும் வருகின்றன. எனினும் அந்த சர்ச்சின் வரலாறு போர்த்துக்கீசர் காலம் வரையே செல்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவம் அந்தளவுக்கே பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்.

“மெழுகுதிரி எரிவதைப் பார்த்தேன்” ஏறத்தாழ 60 ஆண்டுகள் பழைமையான ஒரு கிறிஸ்தவக் குடும்பம் பற்றிய கதை. மின்சாரமற்று இருண்டு கிடந்த தெருக்களில், வீடுகளில், கடைகளில் வாழ நேரிட்ட மக்கள் பிரிவொன்றின் இருண்ட வாழ்வை மண்வாசனையற்ற ஒரு நேர்கோட்டு மொழியில் பதிவு செய்கிறார் தமிழவன். இப்படி தமிழில் அதிகம் எழுதப்படாத கிறிஸ்தவ வாழ்வை, கிறிஸ்தவப் பெயர்களைச் சூடிய கதாபாத்திரங்களை அதிகமதிகம் சிருஷ்டித்திருக்கிறார் தமிழவன்

தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே சுவாரஸ்யம் குன்றாமல் ஆயினும் வாசகனுக்கு புதிர் போட்டபடி இருக்கின்றன. வாசகன் புதிரை அவிழ்க்கும் தருணத்தில்தான் தமிழவனின் கதையுலகத்துக்குள் முழுமையாகப் பிரவேசிக்கும் பாதையை கண்டடைகிறான். பரபரப்பாக ஆரம்பித்து, பரபரப்பாக நகர்ந்து சென்று பரபரப்புடனேயே கதை முடியும் போது வாசகனையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்வது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த பரபரப்புடன் மட்டும் நின்று விடும் வாசகனால் மேற்கொண்டு தமிழவனின் கதைகள் நிகழ்த்த விரும்பும் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தொகுப்பிலுள்ள ”பூதாகரமான மனிதர்”  போலந்து நாட்டில் நிகழும் ஒரு கதை. பல்கலைக்கழக நூலகரான மார்தா மாக்கியோஸ்கியின் வீட்டில் இடம்பெறும் விருந்து நிகழ்வொன்றில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் மார்தாவின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிகழும் உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. கதையின் தொடக்கத்திலேயே அது பல்கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாக வடிவங்கொள்கிறது. இந்தியக் கலாசாரத்தின் தீண்டாமை எனும் சாதியத்துக்கெதிரான குரல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

“ஒரு மனிதர் இன்னொரு வகை மனிதரை தொடக்கூடாது என்றொரு விதி உள்ளது என்றனர்

என கதையில் வரும் ஒரு வரியே இந்தியப் பண்பாட்டின் நேர்மறையான இயல்பொன்றை மேலைத்தேய மனிதர்களோடு அல்லது கலாசாரத்தோடு பகிர்ந்துகொள்கிறது.

போலந்தின் முந்தைய தலைமுறைக்கும்- புதிய தலைமுறைக்குமிடையிலான இடைவெளியின் நீளத்தை அளவிட்டுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை தமிழவன் இந்தக் கதைக்குள் வாசகனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார். கதையில் போலந்தின் பழைய தலைமுறையின் குறியீடாக பூதாகரமான மனிதர் வருகிறார். ஓரிடத்தில் பூதாகரமான மனிதர் மௌனமாவது அந்த தலைமுறையின் சிந்தனைகள் நவீன தலைமுறையால் நிராகரிக்கப்பட்டதன் குறியீடாகும். இதன் மூலம் இந்தியப் பண்பாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியாமல் தலைமுறை தலைமுறையாய் தொடர்வதை மறைமுகமாக தாக்குகிறார். இதுவே இரண்டு கலாசாரங்களுக்கிடையிலான வேறுபாடாக தமிழவன் கருதுகிறார். ஆயினும் இந்தியப் பண்பாட்டில் தீண்டாமை இன்னும் எவ்வளவு தூரம் செல்லும் என்ற கோணத்தில் ஊகங்களைச் செய்வதற்கு வாசகனை கதை தூண்டுவதில்லை.

தொகுதியிலுள்ள கதைகளில் ஒரு தொடர்பறு எழுத்து முறையே பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை மையப்படுத்தாமல் சிதறலாக ஒரு கதைக்குள் பல கதைகளை நகர்த்துவதற்கு இந்த முறையே மிகவும் அணுக்கமானது. இதனால் தமிழவனின் எந்தவொரு கதைக்கும் கதைச்சுருக்கம் சொல்வது கடினம். ஆனால் அந்தக் கதைகளுக்கான விரிவாக்கங்களைத் தேடி நிச்சயம் நம்மால் பயணிக்க முடியும்.

சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

suja-cover

சுஜாதா செல்வராஜின்காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

புது எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்” நவீன தமிழ் பெண் கவிதைவெளியில் ஒரு குறிப்பிடத்தக்க வரவு. இக் கவிதைப் பிரதியில் பெண்- ஆண் எனும் இரண்டு தளங்களில் நகர்ந்து செல்லும் சொற்கள் கவிதையை உருவாக்கிச் செல்கின்றன. பெண்ணின் உலகத்தை ஆணின் கரங்கள் எப்படித் தீர்மானிக்கின்றன என்ற நுட்பத்தை சுஜாதா வெளிப்படுத்தும் தருணந்தான் அவரது கவிதைகளின் நிகழ் நேரம்.

தமிழின் நவீன பெண் கவிதைவெளிக்குள்ளிருக்கும் மௌனமும், அழகியலும், தீவிரமும் அப்படியே கிஞ்சித்தும் பிசகாமல் சுஜாதாவின் கவிதைகளுக்குள்ளும் இருக்கின்றன. பெண் குறித்த அவரது கவிதை மனத்தின் பல்வேறு பிரதிபலிப்புகளையும் இந்தத் தொகுதிக் கவிதைகள் பாசாங்குகளற்று வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் பெண்ணைத் தன்னிலைக் கதாபாத்திரமாகவும் ஆணைப் புறநிலைக் கதாபாத்திரமாகவும் கொண்டு பெண்ணின் வாழ்வை அதன் முழு அர்த்தத்தோடும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள முற்படுகின்றன.

பெண் தனது சராசரி வாழ்வை எப்படி வாழ விரும்புகிறாள் என்ற அவளது சுயவிருப்பத்துக்கும் அவள் எப்படி வாழ வேண்டும் என்ற ஆணின் அதிகார விருப்பத்துக்கும் இடையிலான போராட்டத் தருணங்களே சுஜாதாவின் கவிதைப் புனைவுக்கான அடித்தளமாக ஆகியுள்ளன.

ஆனால் அவரது இந்தப் போராட்டம் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை.

““நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லைதான்
ஆயினும் நாம் அதைக் கடக்கவோ
உடைக்கவோ முயன்றதில்லை”

என அவர் எழுதுகிறார். இங்கு எதிர்க் கதாபாத்திரமாக ஆண் இருக்கிற போதிலும் இருவருக்குமிடையில் சமரசத்துக்கான சாத்தியங்களே அதிகம் இருப்பதை அவர் கண்டுகொள்கிறார்.

பெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளையே கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. சாதாரண பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு மொழியின் கூடுதல் புதிர்த்தன்மை தேவையற்றது என்பதை புரிந்து கொண்டு அதனை இயன்றளவு சுஜாதா தவிர்ந்து கொண்டிருக்கிறார். மிகைக் கற்பனைகளும் அவரது கவிதைக்குள் இருப்பதில்லை. இந்த வகையில், இவரது கவிதைகள் யதார்த்தவாதத்துக்கும், இயல்புவாதத்துக்கும் மிக நெருக்கமாகவுள்ளன.

பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும்போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவிதையில்,

“என்றுமே நீ அறியப்போவதில்லை
வனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்
கூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்
வானம் வேறு என்பதை

இதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.

பெண் பற்றிய அறிவிப்புகளை தமது கவிதைகளில் வெளியிடுவது நவீன தமிழ் பெண் கவிதைகளின் பொதுப்போக்காகவே இருக்கிறது. ஆயினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து ஒரு நுண்ணிய வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சுஜாதா. பெண் பற்றிய சுஜாதாவின் அறிவிப்பு அவரது “மருதானிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில் நிகழ்கிறது.

“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்
கலை அறிந்தவர்கள்

என்கிறார். இன்னொரு வரியில்,

”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட
முனை மழுங்கிய பேனைகள்

என்கிறார்.

”மேலும் உங்கள் செங்கோல்
ஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்

என்கிறார்.

இந்த அறிவிப்பு தமிழ்க் கவிதைவெளியின் பொதுப்போக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறதென்றால், தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்துவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பெண்களை அறிமுகம் செய்வது அவருக்கான தனித்துவத்தை அர்த்தப்படுத்துகிறது.

சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக சுஜாதா அடையாளங் கண்டிருப்பவை எவையும்  கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும்போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.

“ஆளற்ற வீட்டின் முன்
எத்தனை நேரம்தான் வெறித்திருப்பாய்

என்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.

இப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.

“கண்மூடிக்கிடப்பதங்கே தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

என்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்

“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள்வெறி கொள்கிறேன்

என வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

நமது சமூக அடுக்கமைவு பாரபட்சமானதாக, ஆண்கள் தமது சொந்த விருப்புக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொண்டதான ஒரு தோற்றப்பாட்டையே கொண்டிருக்கிறது.  பெண்ணுக்கும்- ஆணுக்கும் என பகிரப்பட்டிருக்கும் பணிகள் எந்தவொரு தர்க்க ஒழுங்குகளையோ, அடிப்படைகளையோ கொண்டிருப்பதில்லை என்ற பார்வையை நமது பெண் கவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திக்  கொண்டே வருகின்றனர்.

சுஜாதாவின் “இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதைக்குள் இந்தக் குரல் மேலும் ஆழமாக ஒலிக்கிறது-

“பெண்ணின் புகைப்படங்கள் தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதுமற்ற
வழுக்கும் சமயலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன
” 

இங்கு “சமையலறை“ என்பது ஆதியிலிருந்தே பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட ஒரு இடமல்ல. ஆதி நிலையிலிருந்த சமூகம் குடும்பமாக மாறி ஒரு மனையை நிர்மாணித்துக் கொண்டதன் பின்னர்தான் அதற்குள் பெண்ணுக்கென பிரத்தியேகமாக சமையலறையையும் உருவாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து அநேக பெண்களுக்கு “சமையலறை” மீட்சியற்ற ஒரு பணி அறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் நமது பெண்கவிகள் “சமையலறை“ மீதான தமது அதிருப்தியை தொடர்ந்தும் தமது கவிதைகளில் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆனால் தூமைத் துணிகள் சொருகப்பட்ட புழக்கடைவெளிகள் பெண்ணின் இயல்பான தன்மைக்காக பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அறையாக இருக்கிறது. இதற்கெதிராக பெண்கவிகள் கலகம் செய்யத் தேவை இல்லை என்பது என் அபிப்ராயம்.

பெண்ணின் இருப்பு குறித்த அர்த்தங்களைத் தேடியலைபவையாகவும் சுஜாதாவின் கவிதைகள் வடிவங்கொள்கின்றன. பெண்ணின் இருப்புக்கான சுதந்திரத்தின் எல்லைகள் எப்படி ஆண்களால் ஈவிரக்கமற்றுக் குறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுஜாதா வெளிப்படுத்தும் வரிகளில் பெண் அனுதாபத்துக்குரியவளாகவும், ஆண் அதிகாரத்துக்குரியவனாகவும் வாசக மனதில் பதிவாகின்றனர்.

”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

“ஆசுவாசம்” எனும் கவிதையில்,

“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்
அலறி ஓடும் ஓர் அம்மணம்

என்ற வரிகளில் மட்டுமல்ல

“என் திசை எங்கும்
நீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும்
நான் முள் பொறுக்கி்க்கொண்டிருக்கிறேன்

என்று நெகிழ்கிறார்.

அதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்

“சிறகுதிர்ந்த பட்டாம் பூச்சியென
பதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு

எனத் துயருறுகிறார்.

மேலோட்டமான வாசிப்பில் இத்தகைய அனுபவமற்ற ஒரு ஆண் வாசகனோ அல்லது வாசகியோ இந்தத் துயரம் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதாக உணர்வதற்கு சாத்தியமுள்ளது.

பெண் பற்றிய புரிதலில் நமது பாரம்பரிய தமிழ்மொழிச் சமூகங்களிலிருந்து நவீன தமிழ் மொழிச் சமூகங்கள் பெரிதளவுக்கு முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை. இத்தகையதொரு அபத்தமான சமூக சூழலில் பெண்ணின் இருப்பு சுஜாதா விபரிப்பது போன்ற கையறுநிலைக்குள்ளும், தகிப்புக்குள்ளும் இருப்பது இயல்பானதே. இந்தவரிகள் கவிஞர் வாழும் சமூகத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. எனவே பெண்ணின் இருப்பு பற்றிய சுஜாதாவின் இந்த வரிகள் மேலைத்தேய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்குள்ள சமூக சூழலில் ஒரு அர்த்தத்தை வழங்குவதில் தோல்வியடையக் கூடும். இதனால் இக்கவிதை நிலையான அர்த்தத்தைக் கொண்டதாகவன்றி ஒரு நிலைமாறும் அர்த்தப்பிரதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகிறது.

ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் “கலாசாரம்“ பெண்ணின் இருப்பு மீதும், அவளின் சுதந்திரத்தின் மீதும் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஓரளவு அடக்கி வாசிக்கும் பாணியில் வெளிப்படுத்துகிறார் சுஜாதா.  தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.

”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிதைக்கப்பட்ட
பெண்ணின் கூக்குரலாய் ஒலிக்கிறது

என்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.

எனினும் பிரதி முழுவதையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது தமிழ் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தையே கவிஞை சுஜாதா செல்வராஜால் முன்வைக்க முடிந்திருக்கிறது. இந்த சுயதணிக்கை அவரது கவிதைகளுக்கு மேலும் ஒரு நடைமுறைசார் அர்த்தத்தை வழங்கிவிடுகிறது.

ஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.

நினைவைக் கலைத்துக் கலைத்து
அடுக்கிப் பாரக்கிறேன்

தவறாமல் என் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்

போன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை வாசகன் கண்டுகொள்கிறான்.

பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.

அப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது. “சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,

காணாமல் போகும் “ஒன்று“
அதன் வாசனையை அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது

தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்

என்று சுஜாதா எழுதும்போது சந்தேகிக்கப்பட்ட ஒரு நிரபராதியின் மனத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை வாசகன் தீவிரமாக உணர்கிறான்.

இந்தக் கவிதைக்குள் வருபவன் ஒரு ஆணாக இருப்பினும் அவன் ஒரு விளிம்பாக இருக்கிறான் அல்லது அவ்வாறு சமூகத்தால் உணர வைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

ஆயினும் சுஜாதா சித்தரிக்கும் பெண்ணின் எதிர்நிலைக் கதாபாத்திரமான ஆண் காலங்களைக் கடந்து வருபவனாக இருக்கிறான். மிக மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்று வரை பெண் மீதான அவனது செயற்பாடுகளில் காலம் எந்தப்பெரிய உடைப்புகளையும் நிகழ்த்தி விடவில்லை என்ற உண்மையின் பல்வேறு பிரதிபலிப்புகளே சுஜாதாவுக்குள் ஒரு எதிர்ப்பாக வடிவங்கொண்டு, மொழியின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன.

சுருங்கக்கூறின் சுஜாதா செல்வராஜின் கவிதைகளின் அகம் ஒரு ஆணிண் வன்மத்தோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன. எனினும் எனது இந்த சுருங்கிய பார்வைக்கும் அப்பாலுள்ளது அவரது கவிதை.