A Land Made of Words என்ற தலைப்பில் Asymptote தளத்தில் Fakhri Saleh எழுதியுள்ள ஒரு கட்டுரை
(மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) நினைவில்)
பாலஸ்தீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்துலகின் மையத்தில் பாலஸ்தீனப் பேரழிவு உள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட, குடிபெயர்ந்த, ஊனமாக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விழும் துயரப் பெருநிழலை பல்வகைப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புனைவு வகைமைகளையும் கையாண்டு உலகின்முன் சித்தரிக்க இவர்கள் முயற்சி செய்திருக்கின்றனர். குறிப்பாக, கவிஞர் (மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) (1941-2008), நாவலாசிரியர்கள் கஸ்ஸான் கனாபானி (Ghassan Kanafani) (1936-1972), ஜப்ரா இப்ராஹிம் ஜப்ரா (Jabra Ibrahim Jabra) (1920-1994), மற்றும் எமில் ஹபீபி (Emile Habiby) (1921-1996), இவர்களில் தனித்து நிற்கின்றனர். இவர்களது தனித்துவம் கொண்ட, புதுவித இலக்கிய நடை தம் மண்ணை இழந்த மக்களின் துயர்மிகுர்ந்த பாலஸ்தீன நக்பாவை (பேரழவு) எழுத்தில் கைப்பற்றுகிறது.,
பாலஸ்தீனத்துக்கு என்று செறிவான இலக்கிய மரபு உண்டு- மிக நுட்பமான இலக்கண வரம்புக்கு உட்படுத்தப்பட்ட கவிதை வடிவங்கள், நாடகங்கள், நாவல்கள் இங்குண்டு. ஆனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தோற்றம் பெற்றபோது அதன் இலக்கிய வாழ்வு திடீரென்று துண்டிக்கப்பட்டது. மிகச் சில அச்சுநூல்களும் கைப்பிரதிகளும் மட்டுமே காப்பாற்றப்பட்டன. அதன்பின், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய செறிவான இலக்கியம் குறித்த சித்திரத்தை மீளுருவாக்கம் செய்வது வரலாற்று ஆய்வாளர்களின் பணியாயிற்று. இதன் காரணமாகவே, 1948ஆம் ஆண்டுக்குப்பின் படைக்கப்பட்ட பாலஸ்தீன இலக்கியம் புலம்பெயர் இலக்கியமானது. பாலஸ்தீனர்கள் தம் தாய்மண்ணை விட்டு வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். முதலில் 1948ல் இஸ்ரேலியர்கள் பல பத்தாயிரம் பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்து நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றியபோது இது நிகழ்ந்தது. இரண்டாம் முறை 1947ஆம் ஆண்டு வெஸ்ட் பாங்க் மற்றும் காஸா ஸ்ட்ரிப் மீது இஸ்ரேல் படையெடுத்தபோது இது நிகழ்ந்தது. அங்கு அதுவரை பெரும்பாலும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் தம் தாய் மண்ணை விட்டு மீண்டுமொரு முறை அகதிகளாய் வெளியற வேண்டியதாயிற்று. இன்றும் பாலஸ்தீனிய வெளியேற்றம் தொடர்கிறது. நாடு கடத்தல் மட்டுமல்ல, காஸா ஸ்ட்ரிப் மற்றும் வெஸ்ட் பாங்க்கில் சீரழிந்து வரும் சமூக, அரசியல், பொருளாதார நிலையின் காரணமாக சுயவிருப்பத்தின் பேரிலும் மக்கள் வெளியேறுகின்றனர். இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியர்களும் வெளியேறியபடி உள்ளனர். (more…)