எழுத்து

சுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்

மெய்யுணர் வழிகள் என நம் மரபு எவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளது என்று கணக்கு எடுத்தால் அது நீண்ட பட்டியலாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக காஷ்மீரி சைவ நூலான விஞ்ஞான பைரவ தந்திரத்தில் அவற்றை 112-வழிகளாக பொதுமைப் படுத்தியுள்ளது. ஒரு சார்வகனிற்கோ லௌகீகனிற்கோ இது அனைத்தும் பிறழ்வாகவே தோன்றும். அவ்வளவு ஏன்? இன்று அனைத்தும் தீர்மானிக்கின்ற ஜனநாயக நுகர்வோனுக்கு மெய்யுணர்தல் என்ற ஆன்மீக சாராம்சமே பொருள்சேர் என்ற கருதுகோளாகவே புரியும். இதுவே ஒரு பிறழ்வுதான்.

அறுதி உண்மையான மெய்ஞானப் பாதையில் உள்ளோர் எக்காலத்திலும் சிறுபான்மையினராகவே உள்ளனர். அப்படி இருந்தும் ஒரு பொது சமூகம் அந்த சிறுபான்மையினரை அடையாளங்கண்டு ஏற்றுக்கொள்வதென்பது அந்த பாதைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். மேலும் பொது சமூகத்திற்கு அது நல்லதும்கூட. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. பிறழ்வே வழியாகக் கொண்டோரை இந்த சமூகம் எப்படி ஏற்கும். கொடிறுடைக்கும் கூன்கை கொண்ட சமூகம் அவர்களுடன் வன்முறையால்தான் உரையாடும். அதுவே பிறழ்வின் பக்கவிளைவு.

சமூகம் தன் எண்ணற்ற நடத்தைகளில் பிறழ்வை எப்படி அடையாளங்காணும்? மனக்கட்டுறுதி குழைதல் எனும் விழுக்காட்டு வரையறைக் கணக்கில்தான். அந்த வரையறைக்கு மேலோ கீழோ போகும்போது அது பித்து பிறழ்வு என்றாகிவிடுகிறது. மனக்கட்டுறுதி என்பது சமூக ஏற்புப் பரப்பில் அந்த விழுக்காட்டு வரம்பிற்கு உட்பட்டவையாக இருத்தல் வேண்டும். அதுவே ஏற்புடையது என்று நம் பொதுபுத்தி கருதுகிறது.

இந்த நாவலின் நாயகன் பிறழ்வின் வழி சேர்ந்தவன். அவ்வழி அவனை அறுதி பிரக்ஞையான மெய்ஞானத்திற்கு இட்டுச்சென்றதா? அப்பாதைக்கு அவனை கொண்டுசேர்த்தது என்ன? அங்கே அவன் கண்ட சாபங்கள் வரங்கள் விமோச்சனங்கள் என்ன? ஆதாரப்புலன்களால் ஆட்கொள்ளப்பட்டபோது அதனிடம் தன்னை விரும்பி ஒப்புக்கொடுத்தானா? அல்லது புயலில் மாட்டியவன் கதியென ஆனானா? இப்படி பல கேள்விகளாக நம் மனம் விரியும்.

மனக்கட்டுறுதி உடற்கட்டுறுதி குழைதல் என்ற அந்தகாசத்தில் தெய்வங்கள் நிகழும். இதை காரண காரியத்திற்கு உட்பட்ட பட்டுணர்ச்சி தொட்டுணர்ச்சி விதிகளின் கீழ் நிரூபிக்கமுடியாது. அப்படி நிரூபிக்கமுடியாத ஆனால் ஆழுள்ளம் அறிந்த ஒன்றை இப்படி கதைகள் கவிதைகளின் மூலம் சொல்லிவிடலாம்.

அறுதி நிலை என்பது உலகியல் எல்லைக்கு அப்பால் உள்ள வீடுபேறு எல்லைக்குள் வரும் என்று நாம் ஊகிக்கலாம். அந்த விழுமிய எல்லைகளில் பயணிப்பவர்களுக்கு கட்டுறுதி குழைதல் என்பது இன்றியமையாதது. குரு என்பவர் தன் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அந்தகாசப் பரப்பில்; ஞானப் பாதையில் இருப்பவனை குழைத்தும், மறுத்தும், தகர்த்தும் மாற்றியமைப்பார். அது தன்னிலை அழிதல். எந்த ஆன்மீக முறைமைகளும் தன்னிலை அழிதலையே பிரதானமாக செய்யும். அப்படி குரு இல்லாத பயணிப்பவனுக்கும் பித்தனுக்கும் குண வித்தியாசங்கள் இருப்பதில்லை. நாவலில் இதுவே நடக்கிறது

விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் தன் புலன் அறிவையே பிரமானமாகக் கொண்டு அதையே மெய்காண் முறைமையாக வகுத்துக்கொண்டவன். ஆனால் நம் கதை நாயகனோ காம யட்சியால் ஆட்கொள்ளப்பட்டவன். தன்னிலை அழிந்து பிறிதொன்றாக ஆனவனல்லன். வேறொன்றாக ஆனதினால் தன்னிலை அழிந்தவன். சாபம் சாபவிமோசனம் என்று புராண கதை மரபில் பார்த்திருக்கிறோம்; அதையே இந்நாவல் நவீன மொழியின் ஆழ்பரப்பில் நிகழ்த்திக் காட்டுகிறது. நம் அறிவுசேகர எல்லைக்கு அப்பால் உள்ள, அனுபவ அளவைகளால் அள்ள முடியாத ஒன்று உள்ளது என்று நம் ஆழ் மன பிரக்ஞை அதை கற்பனையால் உரசி அறிகிறது. இதுவே இந்நாவலின் வெற்றியாக எனக்கு படுகிறது.

நாவலில் பல்வேறு இடங்களில் நம் மனம் மேலெழுந்து பரவசம்கொள்கிறது. நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஜநாகம் ஒரு பெரிய குறியீட்டு வெளியாக மனதில் பதிகிறது. காமத்தையும் அதன் பிறழ்வுகளையும் கதாசிரியர் தன் முதற்தர சொற்தேர்வுகளால் அதன் ஆதார அம்சத்தை நம் கண் முன் விரித்து காட்டுகிறார்.

மெய் தீண்டிய கதை நாயகனிடம் ஒரு வெள்ளாட்டு குட்டி இயல்பாக வந்து ஓட்டுகிறது நாவலில் ஒரு இடத்தில். மயில்வாகனனிற்கு ஆதியில் அஜவாகனம் என்று நினைக்கையில் அந்தக் காட்சி மேலும் துலங்கி மனதின் பீடத்தில் அமர்கிறது.

வளர்த்த குழந்தையைத் தீண்டும் கரங்கள், அங்கு நிலைகொள்ளும் சாபம், உயிர்பலிகள், அதுவே கதை நாயகனின் திரிப்பிற்கான ஊற்றுக்கண், கடைசியில் யட்சியின் பழிதீர்த்தலும் சாபவிமோசனமும் என்று நாவல் முழுவதும் வரும் அதிர்ச்சிகள்.

ஞானப் பாதையில் மனிதனிற்கு மட்டும்தான் மேற்கூரை இடப்படாமல் இருக்கிறது. அவனது கால்கள் மண்ணில் நிலைபெற்றிருந்தாலும் அவன் மேல் எழும்போதெல்லாம் தன்பிரக்ஞை வான் நிறைக்கும். மற்ற ஜீவராசிகளிற்கு ஜீவித்தல் மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மனிதன் ஜீவித்தலோடு நிறுத்த தேவையில்லை. அவன் மேலெழும் பாதை எதுவாகவும் இருக்கலாம். பிறழ்வாகக்கூட.

இதையே நாம் வேறுவிதமாகவும் பார்க்கலாம். புராண நெடுகிலும் சிவனின் சுக்கிலத்தில் இருந்து அதிசய பிறப்புகளும் நிகழ்வுகளும் காணக்கிடைக்கிறது. முருகனே அப்படி பிறந்தவன்தான். யோக தந்திரத்திலும்கூட ஒருவனின் வீரிய பாதுகாப்பு பேசப் படுகிறது. பாதுகாப்போ விரயமோ ஏதுவாகிலும் அறுதி ஞானத்திற்கு அதுவே வழியாக அமையும். நாவலில் நம் கதை நாயகனை குழந்தையாக, காதலனாக, பிறழ்வுற்ற பித்தனாக, முடவனாக, மெய்தீண்டியவனாக, இறுதியில் சுக்கில மணியாக என ஆறுமுகமாக காண்கிறோம். அங்கிருந்து மேலும் நம் மனம் பல திசைகளில் விரிந்து சென்றுகொண்டே இருக்கிறது.

இந்த தேசம் புண்ணிய பூமி என்று எனக்கு எள்ளளவோ சொல்லளவோ சந்தேகமில்லை. சுபிட்ச முருகன் இங்கு மட்டுமே நிகழக்கூடியது.

​எதிரீடு – கா.சிவா கவிதை

ஒவ்வொரு தடவையும்
விலகிட துடிப்பதற்கு​​
முந்தைய கணம்
ஒருதுளி சொட்டியிருக்கும் …

அவள் மீதான பிரியம்
மிளிர்கரு வண்ணத்
தேன் துளியாய்
சேகரமாகும் கண்ணாடிக் குடுவையினுள்

இன்னுமொரு துளி விழும்போது
தோன்றுகிறது
இனந்தெரியா வெறுப்பு

பிறிதொருமுறை சொட்டும்போது
எழுகிறது பெருஞ்சினம்

குதிக்கும் பெருவிழைவை
எழுப்பியபடி பெருகும்
கடுவிடத் துளிகளை
பதைப்புடன் நோக்கியபடி
அமர்ந்திருக்கிறது ..
ஈரக்காற்றிற்கே உதிர்ந்திடும்
மென் சிறகை
மெல்ல விசிறியபடி
என்னுள் அமைந்த வண்ணத்துப்பூச்சி…

க்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்

க்ளைமேட்’, சிறுபத்திரிகை, ஆசிரியர் வியாகுலன், இணையாசிரியர் துரை அறிவழகன், விலை ரூ.30, ‘கலைவெளி மாத இதழ்’, முதல் பிரதி மே மாதம் வந்திருக்கிறது. ‘சுபமங்களா’ போன்ற ஒரு இடைநிலை இதழாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள்– “தீவிர மனநிலைக்கும் ஜனரஞ்சக மனநிலைக்கும் இடையே இயங்கும் ஓர் வட்டம் தமிழக வாசகப் பரப்பில் உள்ளது என்பதை பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் புறக்கணித்தும் விடுகிறார்கள்”இந்த வெறுமையை இட்டு நிரப்பும் ‘க்ளைமேட்’. “அனைவருக்குமான இதழ், அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களுக்குமான இதழ்…” என்று கோமல் கொண்டிருந்ததைப் போல், “‘க்ளைமேட்’ மாத இதழ் புதிய எழுத்தாளர்களையும் புதிய வாசகர்களையும் கண்டடைந்து நவீன இலக்கியப் பரப்பில் புத்தம் புதிய பக்கங்களை தொடங்க உள்ளதுஅனைத்து தரப்பு எழுத்தாளர்களிடமிருந்தும் படைப்புகளை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று எழுதுகிறார்கள் (நண்பர்கள் klymatte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பிப் பார்க்கலாம்).

முதல் இதழ் நன்றாகவே வந்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணன், ‘புருவம் இல்லாத பொம்மைகள்,’ என்ற கதையையும் யுவன் சந்திரசேகர், ‘புழுதிப் புயல்’ என்ற கதையையும் எழுதியுள்ளார்கள். இரண்டு கதைகளுமே இடைநிலை வாசகர்களை புதிர்ப்படுத்தும் என்று நினைக்கிறேன் (“தனிமனிதனின் அகச் சிந்தனைகளையும் அம்மனிதன் சார்ந்துள்ள குழுக்களின் தத்துவார்த்த சிந்தனைகளையும் தாங்கி வரும் சிறுபத்திரிக்கைச் சூழல்…” என்பதை வைத்துப் பார்த்தால் சிறுபத்திரிக்கை ஆர்வலர்களுக்கான கதைகள் இவையல்ல என்று சொல்ல வேண்டும், ஆனால் இத்தன்மைகள் இல்லாத காரணத்தால் தீவிர இலக்கிய முத்திரை குத்தப்படக்கூடாத கதைகளாகி விடுவதில்லை இவை. யதார்த்த கதைகளுமல்ல, யதார்த்தத்திலிருந்து தப்பிக்க உந்தும் விழைவேக்கத்தை நிறைவு செய்யும் கதைகளுமல்ல– “இந்தக் கதையில் என்ன சொல்ல வரார்? உண்மையில் என்னதான் நடந்தது?” என்று நினைக்கச் செய்கின்றன.)

இந்த இரு கதைகளுக்கு இணையாக இரண்டு நேர்காணல்கள் இருக்கின்றன. ‘வெளிச்சம் என் உயிர்’ என்ற தலைப்பில், நடேஷ் முத்துச்சாமியின் நேர்முகமும், “எனக்கு சினிமாக்காரர்கள் போல் கதை சொல்லத் தெரியாது” என்ற தலைப்பில், வண்ணநிலவன் நேர்முகமும் இடம் பெற்றிருக்கின்றன. நடேஷ் நேர்முகம் பேச்சு நடையில் நிறைய ஆங்கிலச் சொற்களுடன் கொச்சைத் தமிழுக்கு அஞ்சாது அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு. ஆனால் ஆங்கிலச் சொற்களை ஆங்கில மொழியில் அச்சிட்டிருக்க வேண்டாம், எழுத்துரு கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது என்பது போக, எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன– “கலரு வந்து deel பண்ணினது ரொம்ப லேட்டு” (இங்கு லேட்டு ஏன் தமிழ்?), “அவன் lyricsamத்தை தூக்கி வெளியே போட்டான்,” “Mathematicalலா convent பண்ணிருவான்,” என்பதெல்லாம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுக்கும் பாதகம். மிகவும் அனுபவித்து ரசிக்க வேண்டிய நேர்முகத்தை இம்சையான வாசிப்பாக்கி விடுகின்றன இந்த பிழைகள். வண்ணநிலவன் பேட்டி பற்றி சொல்ல வேண்டாம், ஆரம்ப நிலை வாசகன் எடுத்துக் கொள்ள ஏதாவது ஒன்று ஒவ்வொரு பேட்டியிலும் இருக்கும். இதிலும் இருக்கிறது– “தமிழில் எவ்வளவோ படைப்பாளிகள் கவிஞர்கள் இன்று உலகத்தரத்தில் இயங்குகிறார்கள் என்பதை நான் பெருமையுடன் பார்க்கிறேன். ஆனால் எப்பேர்பட்ட படைப்பும், கிணற்றில் போட்ட கல் மாதிரி விமரிசகர்கள் இல்லாமல் தடுமாறுகிறதே, இந்த நேரந்தான் க.நா.சு.வை எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறதுகநாசு மாதிரி, வல்லிக்கண்ணன் மாதிரி, திகசி மாதிரி மறுபடியும் தமிழில் ஒரு விமரிசனச்சூழல் உருவாக வேண்டும் என்பதே இன்றைக்கு நன்றாக எழுதிக் கொண்டிருக்கிற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு முக்கியமான தேவையாகவே நான் கருதுகிறேன்”. விமரிசனம் என்றால் போட்டுத் தாக்க வேண்டாம், நம் குழுவுக்கு வெளியே உள்ள ஒருத்தர் ஒரு கதையோ கவிதையோ நன்றாக எழுதினால், ‘நன்றாக இருக்கிறது’ என்று ஒரு வார்த்தை, ‘ஏன் நன்றாக இருக்கிறது’ என்று இன்னும் சில வார்த்தைகள் சொன்னால் போதும். சமூக ஊடகத்தில் இதற்கே நல்ல விளைவுகள் இருக்கும். பதாகை வாசகர்களாவது இதை தவறாமல் செய்ய வேண்டும்.

இந்த நான்கு போக, பாவண்ணன், கே.என். செந்தில் இருவரும் தம் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். பாவண்ணன் கட்டுரை தலைப்புக்கேற்ப, ‘மாபெரும் கனவு’, கனவுகளை தேக்கி வைத்த வாக்கியங்கள் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்பனை தோய்ந்த நடை, “ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு காட்சி அல்லது ஒரு அசைவு என்னைத் தூண்டி விடும்போதெல்லாம் மின்னேற்றம் பெற்றதும் காந்தத் துண்டென மாறி விடுகிறது மனம். அதுவே கதை பிறக்கும் தருணம்.” கொஞ்சம் சோதிக்கிறது என்றாலும் ஒரு கவி மனதின் உரைநடையை இங்கே பார்க்க முடிகிறது– “:அப்படித்தான் நானும் ஓர் எழுத்தாளனாக மலர்ந்தேன். இரவெல்லாம் சொல்லரும்புகளைக் கோர்த்துக் கோர்த்து என் முதல் சிறுகதையை ஒரு மாலையென புனைந்து முடித்தேன். இன்னும் இருள் பிரியாத காலையில் குயில்களின் பாடல் கேட்டது. என் நெஞ்சில் ஊற்றெடுத்த உல்லாசத்தையே அக்குரல் பிரதிபலித்தது. வானத்தில் ஆழ்ந்து பின்னோக்கிச் செல்லும் நட்சத்திரங்களையும் அவற்றை நோக்கிப் பறந்து செல்லும் காக்கைகளையும் பார்த்துப் புன்னகைத்தேன். வானமே, மேகமே, காற்றே, பறவைகளே, மரங்களே, மலர்களே, பாருங்கள், பாருங்கள், என என் கதையைக் காட்டி பெருமிதமடைந்தேன்.” இந்தக் காலத்தில் இப்படியும் எழுதுகிறார் ஒருவர்! ஆனால் இதுவும் இது போல் இன்னும் பலவும் வெவ்வேறென வேண்டும்.

தன் கதைகளைப் பற்றி எழுதியுள்ள கே. என். செந்தில் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்– “ஒரு போதும் மோஸ்தரான மேற்பூச்சு கொண்ட மொழியினால் மட்டும் அமைந்த கதைகளை எழுத முயன்றதில்லை. மொழியினால் நிற்கும் கதைகளை எழுதியிருக்கிறேன். வளவளவென, சோடையாக மொழி அமையுமென்றால் அதை எழுதாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணமே எனக்குள்ளது. ஈராயிரம் வருட மரபு கொண்ட மொழியில் எழுத வரும்போது அம்மொழியை கைகொள்வது சார்ந்து, வலுவாக பயன்படுத்துவது சார்ந்து எழுந்த யோசனைகள் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.” கதைகளைப் பற்றி சொல்லவில்லை, இது போன்ற கட்டுரைகள் எழுதும்போது கே.என். செந்தில் ஷோல்டரைச் சற்று இறக்கிக் கொள்வது நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருக்கும்.

இந்த ஆறு போக, சோ. தர்மனின் “கூத்துக் கலை: சிறந்த கதைசொல்லி” என்ற கட்டுரை வந்திருக்கிறது. இது ஒரு தொகைநூலில் இடம் பெரும் சிறப்பு கொண்டது. “என்னுடைய குழந்தைப் பருவத்தில் பகவான் ஸ்ரீராமனின் தோளில் உட்கார்ந்து பயணப்பட்டிருக்கிறேன். லட்சுமணனின் கைகளில் தவழ்ந்திருக்கிறேன். சீதையின் மடியில் உறங்கியிருக்கிறேன். தனியே சுழற்றி வைக்கப்பட்ட ராவணனின் பத்து தலைகளும் அனுமனின் நீண்ட வாலும் விகார முகமும் என் விளையாட்டுப் பொருட்களாய் இருக்க, சலங்கை கெச்சங்களின் தாளலயத்துடன் ஆடும் ராமாயணக் கும்மியாட்டம் நடைபெறும். என்னுடைய அப்பாதான் கதாநாயகன் ஸ்ரீராமன். என் சித்தப்பா லட்சுமணன். மாமா ராவணன் வேஷம்.” கூத்துக்கலையின் தொடர்ச்சியாகவே தன் கதைசொல்லலைக் காண்கிறார் சோ. தருமன். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான சோ. தருமன், தன் புனைவில் கூத்துக்கலையின் தாக்கம் பற்றி சொல்லியிருப்பது மட்டுமன்றி, திராவிட இலக்கியம் மற்றும் சுதந்திரகால லட்சியவாத எழுத்து தன்னை ஈர்த்து சலிப்படையச் செய்தது பற்றி சொல்லியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் (இதில் திராவிட இலக்கியம் பற்றி மிகக் கடுமையாகவே சொல்லியிருக்கிறார்).

ஏழாச்சா, எட்டாவதாக, நபகோவ் மொழியாக்கம் பற்றி கூறியுள்ளவை, மற்றும் அவர் அவ்வாறு கூறியதன் பின்னணி குறித்து ஜி. குப்புசாமி எழுதியுள்ள ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்,’ என்ற கட்டுரை விரிவாக இருக்கிறது. இதில் அவர், தான் சொல்ல வரும் விஷயங்களை தெளிவாக எழுதியிருக்கிறார். நபகோவ் பற்றி ஒரு நல்ல அறிமுகம், ருஷ்ய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்புலம், நமக்கு தெரிய வருகிறது.

இதெல்லாம் போக சா. தேவதாஸ் சூடான் நாட்டுக்கதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஸ்ரீநேசன், ராணி திலக், . பெரியசாமி, அதீதன், ஸ்ரீஷங்கர் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அப்புறம் கடைசியாக ஒன்று. ‘க்ளைமேட்’ இதழின் ஆசிரியர் வியாகுலனின் கவிதை தொகுப்பு பற்றி ஸ்ரீ ஹரி ஒரு நூல் விமரிசனம் எழுதியிருக்கிறார், இதை முதல் இதழிலேயே பதிப்பித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒருவர் எவ்வளவு சிறந்தவராகவோ சாதாரணமானவராகவோ இருந்தாலும் ஒருத்தரைப் போல் ஒருத்தர் இருக்க முடியாது, ஒருத்தர் செய்ததை இன்னொருத்தர் செய்ய முடியாது. இந்த இதழில் உள்ள அக்கறையும் ஆர்வமும் ரசனை தேர்வுகளும் இனி வரும் இதழ்களிலும் இருந்தால், ‘சுபமங்களா’ செய்ததைச் செய்கிறதோ இல்லையோ, ‘க்ளைமேட்’ செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று சில ஆண்டுகளில் இன்னும் சில பேர் நினைக்கக்கூடும்.

(க்ளைமேட், மாத இதழ், 66 பக்கங்கள், ரூ.30, 14 A, அப்பர் தெரு, காமகோடி நகர், வளசரவாக்கம்,சென்னை 600087, செல்– 88258 99791, மின்னஞ்சல் முகவரி – klymatte@gmail.com)

பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்

அவளுக்கு சிறு வயதிலேயே குளூகொமாவும் காடராக்டும் வந்து விட்டது, ஆனால் அவள் எப்படியே சமாளித்துக் கொண்டிருந்தாள், தொடர்ந்து சின்னச் சின்ன கோலங்கள் கொண்ட க்ரோசட் பின்னினாள், கிளைப் பின்னலில் சிறு பறவைகளையும் மண்ணிலிருந்து சுருண்டு வெளியே எழும் டூலிப்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொள்வதையும் ஓவியங்களாய் துணியில் நெய்தாள். அது அவளது ஏழு குழந்தைகளுக்கும் அவர்களது துணைகளுக்கும் அந்த ஏழு குழந்தைகளின் பத்தொன்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியளித்தது.

ஆனால் இன்று பார்வை அவளுக்கு தொந்தரவாக இருக்கிறது. சமையலறை சன்னலில் நின்று, மலைகளை நோக்கி தலையை உயர்த்திப் பார்ப்பவள், எங்கே மலைகள் முடிகின்றன, எங்கே வானம் துவங்குகிறது என்பதைப் பிரித்துப் பார்க்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள். நேற்றிரவு அவளுக்கு வினோதமான கனவு வந்திருந்தது, உள்ளே எங்கேயோ இன்னும் அது அவளுள் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் அந்தக் கனவை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்; சூரியன் நகர்வதாய் அவள் கனவு கண்டாள், இல்லை, அது மெதுவாக வழுக்கிச் சென்றது, முதலில் ஒரு மலையைக் கடந்தது, பின்னர் மற்றதை, இறுதியில் மூன்றாவதைக் கடந்து அவளது பார்வையிலிருந்து மறைந்தது. பார்ப்பதற்கு சூரியன் மலைகளின் மீது ஸ்கேட்டிங் செய்து கொண்டு செல்வது போலவும், உள்ளடுக்கை தொட்டு விட்டது போலவும், வானத்திலிருந்து கீழே இறங்கி விட்டது போலவும், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது போலவும், சமையலறை சன்னலின் வழியே அவளை பார்ப்பதற்காக அத்தனை தூரம் வந்தது போலவுமிருந்தது. அவளைப் பார்ப்பதற்காக மலைகளின் மேலிருந்து சறுக்கி வந்தது போலவும், அவளே சமையலறை சன்னலில் சூரியனைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தது போலவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பது போலிருந்தது. அதன் பின் சூரியன் மறைந்து விட்டது.

அது ஒரு தீர்க்கதரிசனக் கனவு என்று பட்டதால், அவளது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் இது போன்ற கனவுகளை இதற்கு முன் இரண்டு முறை கண்டிருக்கிறாள். அவள் சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு முறை பாம்பு ஒன்றினால் வசியம் செய்யப்பட்ட பறவையைப் பற்றிய கனவு கண்டாள். அப்பறவை காற்றில் உறைந்து நின்றபடி பாம்பின் கண்ணை குத்திட்டு பார்த்துக் கொண்டிருக்க, தரையில் சுருண்டிருந்த பாம்பு முழுக்க எழுந்து ஒரு உலோகக் கம்பு போல் நிலைத்து நின்று அந்தப் பறவையின் பார்வையை சந்தித்தது. அதன் பின் சிறிது காலம் கழித்து அவள் தான் திருமணம் செய்து கொண்ட பையனைச் சந்தித்தாள்.

இரண்டாம் கனவு வெகு காலம் கழித்து, அவள் பெற்றெடுத்து வளர்த்த ஏழு குழந்தைகளும் சுற்றியுள்ள பண்ணைகளில் குடியமர்ந்து விட்டபின், ஏழு குழந்தைகளும், அவர்கள் பத்தொன்பது பிள்ளைகளும் பெற்ற பின், வந்தது. அவள் சமையலறை சன்னலருகே அமர்ந்திருப்பதாய் கனவு கண்டாள். அவளது கணவன் தன் கைகளை நெஞ்சில் குறுக்கே கட்டிக் கொண்டு, நீண்ட வெண்ணிற அங்கி அணிந்து சொர்க்கத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தாள். தரையிறங்கி அவள் முன் நிற்கும் வரை, அவன் அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, மெல்ல மிதந்து வந்தான். அதன் பின் கொஞ்ச நாளில் அவன் இறந்து விட்டான்.

அதற்குப் பிறகு அவர்களுடைய ஏழு குழந்தைகளும் பத்தொன்பது பேரக் குழந்தைகளும் அவளுக்கு துணையாய் இருக்க அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்தார்கள், சமையலறை மேஜையில் உட்கார்ந்து குறுக்கெழுத்து போட்டார்கள், பேச்சு கொடுத்தார்கள். அதெல்லாம் நன்றாகதான் இருந்தது, ஆனால் அவர்கள் தனக்காக வந்ததைவிட தங்களுக்காகவே வந்தார்கள் என்று அவளுக்குச் சில சமயம் தோன்றியது, அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு நியாயமாக நடந்து கொள்ளவே இங்கு வருகிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் எப்போதும் பிஸியாக இருந்தார்கள், செய்ய நிறைய இருந்தது. அவள் இங்கே வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், தினமும் சமையலறை மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு க்ரோசெட் போட்டுக் கொண்டிருக்கிறாள், துணியில் சித்திர வேலைப்பாடுகள் நெய்து கொண்டிருக்கிறாள். சன்னல் வெளியே வெளியே பார்க்கிறாள். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமில்லை. அவர்கள் வந்தார்கள். அவளும் அங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

அவள் சன்னல் வழியே வெளியே பார்க்கிறாள், மலைகளுக்கும் வானத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளுக்கு இன்றோடு தொண்ணூறு ஆகிறது. வயல்களுக்கு அப்பாலிருந்து முதல் விருந்தாளிகள் நடந்து வருவதைப் பார்க்கிறாள். மேஜையில் எல்லாருக்கும் தட்டு வைத்திருக்கிறாள், அதற்காக தனது சிறிய வீட்டில் இருந்த அத்தனை மேஜைகளையும் இதற்கு பயன்படுத்திக் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாள். எல்லா நாற்காலிகளையும் முக்காலிகளையும் கண்டெடுத்தாள். அருகே நெருங்கிக் கொண்டிருக்கும் நிழல்களை எண்ணப் பார்த்தாள், முடியவில்லை. அவளால் தன் மகன்களையும் அவர்களுடைய மனைவிகளையும் அவர்களின் நடையை வைத்து அடையாளம் காண முடிந்தது, சில பேரக் குழந்தைகளையும். ஒருத்தி குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறாள். அல்லது அவள் கேக் டின்னை சுமந்து வருகிறாளா? சன்னமாய் க்ரோசெட் செய்யப்பட்ட லேஸ் திரைச்சீலைகளை விலக்குகிறாள். அவர்கள் படியேறி வரும் சத்தமும், கதவின் கைப்பிடியைப் பிடித்து ஆட்டும் சத்தமும் கேட்கிறது. கதவைத் திறக்கப் பார்க்கிறார்கள். தட்டுகிறார்கள். அவள் நகரவில்லை. அழைப்பு மணி ஒலிக்கிறது. இன்னும் பல பேர் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள், அவளது குடும்பத்தினர், எப்போதும் நேரத்துக்கு வந்து விடுபவர்கள், அதை ஒப்புக் கொண்டாக வேண்டும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. கதவின் கைப்பிடியை பலமாய் ஆட்டுகிறார்கள். அவள் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். அவள் கதவைத் திறக்க விரும்பவில்லை. அவள் தயாராகவில்லை, கனவு இன்னும் அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாள், இன்னும் அது முடியவில்லை. அவள் தனியாய் இருக்க விரும்புகிறாள். அவர்களுடைய நிழல்கள் சன்னலை இருட்டடிப்பதைப் பார்க்கிறாள். அவர்கள் தட்டுகிறார்கள், அவளை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவள் குடும்பத்தினர் அனைவரும். ஆனால் அவள் திறக்க மாட்டாள்.

நிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை

என் இருப்பிலிருந்து
பிரித்துவிட முடியாதபடிக்கு
ஒன்றி பதுங்கியிருக்கின்றன
எனக்குத்தெரியாமல்
எப்படியோ
எனக்குள் குடியேறிவிட்ட
நிழல்கள்.

எங்கிருந்தோ வந்து
திடீரென நாற்காலி ஏறி
ஒண்டி அமர்ந்துகொள்ளும்
பூனைக்குட்டியைப்போல
என் வெம்மையின் பாதுகாப்பில்
வாழ பழகிவிட்டவை

அவைகளுள்
ஆகப்பெரியது ஒன்று
மாலைநடை செல்கையில்
விட்டு வெளியேறுவது போல
உடலிலிருந்தும் பிரிந்து
விலகி எனை தொடர்ந்து வரும்
கோயில் தெருவை வந்தடைந்து
தேரடித்தெருவில் நுழையும்போது
தடயமின்றி மறைந்துவிடும்

இதோ அகன்று விட்டது
என நிம்மதி அடைந்து
குறுக்குச்சந்தை விட்டு
வெளியேறுகையில்
பழகிய புலியைப்போல்
திரும்ப வந்து
அடைந்துகொள்ளும்

எப்படியாவது
தப்பிவிடலாம் என
விரைந்து ஓடுவேன்
விடாமல்
எனை துரத்தும்
என் நிழல்கள்.