கட்டுரை

பரியுடை நன்மான் – வளவ.துரையன் கட்டுரை

ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. ஆனால் அதைச் சொல்லியாக வேண்டும். இந்த நிலையில் அக்கருத்தை மறைபொருளாகச் சொல்லும் வழக்கத்தை நம் முன்னோர் மரபாகவே கடைப்பிடித்து வந்தனர். இதையே மங்கலம், குழுஉக்குறி, இடக்கரடக்கல் என்று இலக்கணம் கூறுகிறது. பெரும்பாலும் துன்பச் செய்தியைத்தான் இப்படி மறைத்துக் கூறினார்கள். செத்தார் என்பதைத் துஞ்சினார், விண்ணுலகு அடைந்தார், காலமானார் என்னும் சொற்களால் இன்றும் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது.

பண்டைய இலக்கியங்கள் இதை இறைச்சி என்றும் குறிப்பிட்டுள்ளன. நவீனத்தில் நாம் படிமம் என்று கூறுகிறோம். சங்க காலத்தலைவி தன் தலைவனுக்கு இழுக்கு நேரும் சொல்லை ஒருபோதும் உரைக்க மாட்டாள். அவன் தவறு செய்தபோதும் அதை வெளிப்படையாகச் சொன்னால் அது அவனின்பால் உள்ள குறையைத் தான் குறிப்பிட்டதாக ஆகிவிடும் எனக் கருதி அதனை மறைத்தே பேசுவாள். ஆனால் அவளிடம் வந்து உரையாடுவோர் அக்குறிப்பை உணரும் தன்மையைக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

ஐங்குறுநூறு ஓர் அருமையான அகத்துறை இலக்கியம். அதில் தலைவன் ஒருவன் தன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் இல்லம் சென்று தங்கி விடுகிறான். இது அக்கால வழக்கமாகும். தலைவி தனியே பிரிந்து வருந்திக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தலைவனிடத்திலிருந்து வந்த சிலர் “அவன் விரைவில் இங்கு வந்து விடுவான் எனக் கூறுகின்றனர். ஆனால் அவன் அவ்வளவு எளிதாக வரமாட்டான் என்பது தலைவிக்குத் தெரியும். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துப் பேசுகிறாள்.

”அங்கிருக்கும் பரத்தையர் ஊர் முழுதும் தூங்கினாலும் தாங்கள் தூங்காதத் தன்மை கொண்டவர்” என்று மட்டும் கூறுகிறாள். அவர்கள் உறங்காதபோது அவன் எப்படி அவர்களுக்குத் தெரியாமல் வரமுடியும் என்பது மறை பொருளாகும்.

”பரியுடை நன்மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சுஊர் யாமத்தும், துயில்அறி யலரே. [வேழப்பத்து—3]

இப்பாடலில் வேழம் என்னும் சொல் வருகிறது. அதற்கு யானை என்று பொருள் கூறுவது வழக்கம். இந்த இடத்தில் வேழம் என்பதற்கு. வேழக்கரும்பு அல்லது கொறுக்கச்சி என்று பொருளாகும். இக்காலத்தில் இது கொறுக்கந்தட்டு என்று வழங்கப்படுகிறது. பத்துப் பாடல்களிலும் இந்த வேழம் குறிப்பிடப்படுவதால் இப்பகுதிக்கு வேழப்பத்து என்றே பெயர் வந்தது. அதேபோல பரி என்பது பெரும்பாலும் குதிரையைக் குறிக்கும் சொல்லாகும். இங்கே மான் என்பது குதிரையைக் குறிக்க பரி என்பது குதிரையின் விரைவைக் காட்டுகிறது. உளை என்பது குதிரையின் தலையில் அணிவிக்கப்படும் சுட்டியாகும். அதுவெண்மையாக இருக்கிறது இப்படித் தமிழ்மொழியின் ஒருசொல் பலபொருள் சிறப்பும் இப்பாடலில் விளக்கப்படுகிறது.

”மிகுந்த விரைவைக் கொண்ட தலைவனின் குதிரையின் நெற்றிச் சுட்டியைப் போல வெள்ளையாகப் பூ பூக்கின்ற வேழம் இருக்கிற குளிர்ச்சியான ஊரை உடையவன் அவன். அங்கு ஊர் தூங்கும்போதும் பெண்டிர் தூங்கமாட்டாரே” என்பது தலைவி கூற்றாகும்.

பரியுடை நன்மான் என்பது தலைவியின் கற்புத் திறத்தைக் காட்டும். அக்குதிரையின் நெற்றிச்சுட்டி போல வேழம் பூ பூக்கும் என்பது பிறமகளிரைக் காட்டும்.

வேழப்பத்தின் இறுதிப்பாடல் மற்றும் ஒரு கருத்தை மறைவாகப் பேசுகிறது.

”அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்,
காம்புகன் டன்ன தூம்புடை, வேழத்துத்
துறைநணி ஊரனை உள்ளி,என்
இறைஏர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே” என்பது பாடல்.

இதில் ஒரு காட்சி காட்டப்படுகிறது. ”ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய வண்டு, நூறு இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவில் முட்டைகளை இடுகின்றது. அம்முட்டைகளை அருகில் உள்ள மூங்கில் என்னும் வேழம் அழைக்கிறது”. இக்காட்சியைச் சொல்லி, ”அவற்றை உடைய ஊரைச் சேர்ந்தவன் அவன். அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் முன்கை வளையல்கள் கழன்று ஓடுகின்றன” என்று தலைவி இப்பாடலில் கூறுகிறாள்.

தன்னை அழகான தாமரைப் பூவில் உள்ள முட்டையாகவும், அதைச்சிதைக்கும் வேழமாகப் பிறமகளிரையும் அவள் மறைவாகப் புலப்படுத்துகிறாள். மற்றொரு பொருளாக, வண்டின் முட்டையாகத் தன் புதல்வனையும், அவனைத் தலைவன் நினைவில் இருந்து பிற மகளிர் மறைப்பதாகவும் கூறவும் வாய்ப்புள்ளது.

ஆக தலைவி, தன் இல்லற வாழ்வுக்கு ஊறு ஏற்படும்போது கூட அதை ஊரார்க்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைத்துக் கூறும் திறம் படைத்தவள் என்பதை ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.

கூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்

கூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

ஆங்கில/ மராத்திய எழுத்தாளரான விலாஸ் சாங் எழுதிய ”த தம்மா மேன்” ( தமிழில்: தம்மம் தந்தவன் ) நாவல் வழியாகவே அவரை முதன் முதலில் அணுகுகிறேன். புத்தரின் வாழ்வைத் தத்துவ ரீதியிலாகவோ, போதனைகள் வழியாகவோ அணுகும் முறை உண்டு. ஆனால் இவர் அந்த நாவலில் புத்தரை அவரது அலைச்சல்களைக் கொண்டே அவதானித்தவர். புத்தரின் போதனைகள் அத்தனை இருந்தாலும் அவர் அந்த ”த தம்மா மேன்” நாவலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு போதனை குறிப்பிடத்தக்கது.

 

சகோதரா! நீ உனக்குள் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டு அங்கேயே இருப்பாயாக! உனக்கு உன்னைத் தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் கோராதே! யாருக்கும் புகலிடமும் அளிக்காதே! உன் தீவாக தம்மத்தை எண்ணிக்கொண்டு அதற்குள் மட்டுமே வாழ்ந்து வா! ’ என்பதாகும் அது

 

அவரது சிறுகதை தொகுப்பான கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பைப் படிக்கும் போது, அந்த வரிகளை அடைய அவர் மேற்கொண்ட சோதனைகளோ இந்த கதைகள் எல்லாமே என்று எனக்குத் தோன்றியது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்தும் இவர்  இத்தனை ஆண்டுகளாக் எழுதிய கதைகளின் நாயகர்/நாயகிகள் அனைவருமே வேறு வேறு வகைகளில் தனித்தலையும் புத்தர்களாகவே இருப்பது எனக்கு அப்படித் தோன்றச் செய்தது. 

தமிழக எழுத்தாளர்களில்  கி.ராஜநாராயணன் வரிசை இலக்கியவாதிகளை கதை சொல்லிகள் என்றும் அசோகமித்திரன் வகை இலக்கியவாதிகளை ”கதை எழுதுபவர்கள்” என்றும் விமர்சகர் பார்வையில் எழுத்தாளர் ஜெயமோகன் பிரிக்கின்றார் (இலக்கிய முன்னோடிகள்).  விலாஸ் சாரங் -ன் இந்த தொகுப்பைப் படித்தவரையில் அவர் இவ்விரண்டில் அசோகமித்திரன் வழியில் வருபவர் என்பதை அவர் எழுத்தில் வெளிப்படும் வெறுமை, அங்கதம் இவ்விரண்டையும் வைத்து எளிதாக சொல்லிவிடமுடியும். இவரைத் தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களில் இணை வைத்துப் புரிந்து கொள்ளலாம்

 

உதாரணமாக, அசோகமித்திரனனின் ”தப்ப முடியாது” என்கிற சிறுகதையை சொல்லலாம்.  குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஒரு குடிசைவாழ் பெண்மனி சேர்த்து வைத்திருந்த பணத்தை அவளது குடிகார  கணவன் எடுத்துக்கொண்டு குடிக்கக் கிளம்புகிறான். அதைத் திரும்பப் பெறக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொடு வரும் அவனது மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கிளம்புகிறான் அவன். அதை அங்கு ஓரமாக திருட்டு தம் அடிக்க வந்த அந்தக் கதையின் நாயகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இரவு படுக்கையில் அவன் அந்த சம்பவத்தைப்பற்றி சிந்தித்தித்துக் கொண்டே இருப்பான். ”பாவி இப்படி பண்ணிடானே அந்தக் குழந்தை என்னவாகும்” என்று அவன் யோசிப்பான்.. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்து ’அருகில் இருந்த நான் அவனை அதட்டியிருந்தால் அவன் போயிருப்பான்’ என்று தன் மீது அவன் கோபம் திரும்பும். அப்போது அவன் இன்னொரு மனம் அவனிடம் ’நீ இன்றும் தப்பு செய்யவில்லை.. விருப்பு வெறுப்பு இன்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..அதை தத்வமஸி என்று உபநிடதம் சொல்கிறது’ என்று ஆசுவாசப்படுத்தும். அப்போது அந்த முந்தைய மனம் மீண்டும், ‘நீ என்ன கிழித்தாய்! இப்படில்லாம் சொல்லி உன் கோழைத்தனத்தை மூடிக் கொள்ளாதே’ என்று குத்திக் காட்டும்.. அவன் அப்படியே உறங்கிப் போவான். அந்தக் கதை இப்படி முடியும்..” அப்படியே யோசித்தபடி நான் தூங்கி விட்டேன்.. மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தேன்.. எல்லாம் சரியாக இருந்தது..” என்று. அசோக மித்திரன் கதைகளில் வரும் ’நான்’ மிக முக்கியமானது. விலாஸ் சாரங் கதைகளும் இதேபோல துவங்கி ‘நான்’ என்றே தன்னிலையில் எழுதப்பட்டு செல்வதையும் ஒருவித அங்கதத்தில் முடிவதையும் ஒப்பிட்டுக் காண முடிகிறது. ஒரு அபத்த சூழ்நிலையை தத்துவார்த்தமார்க்கும் முயற்சியும் ஒரு அரிய சூழலை அபத்தமாக்கும் முயற்சியும் இவர் எழுத்தில் தென்படுகின்றன.  உதாரணமாக, தன் நண்பனின் தாயின் பிணத்தை எரிக்கையில் அதில் குளிர்காயும் ஒரு தருணம். மற்றொன்று இதில் வரும் ஈக்கள் கதையில் அவர் ஒவ்வொரு ஈயாக எப்படி தப்பவிட்டு எப்படி கொன்று அதை சித்ரவதை செய்து பாடாய் படுத்துகிறார் என்று சொல்லிவந்து அதை இறுதியில் ‘ நான் இப்பொழுது சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி முடிப்பது. புத்தரின் சிலையை எரித்து ஒரு துறவி குளிர்காயும் அந்த புகழ்பெற்ற ஜென்கதையை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம்

 

கிட்டத்தட்ட இந்த சிந்தனையையே பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் விலாஸ் சாரங். அவருக்கு இந்தியப் புராணங்களின் மீது ஒரு பெரும் பயிற்சி இருக்கிறது. அதே நேரத்தில் அதை ஒரு நவீனத்துவனின் நோக்கில் காணும் பார்வையும் இருக்கிறது. 

 

இந்திரனின் ஆயிரம் கண்கள் என்கிற தொன்மத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். அவர், அந்த இந்திரனிடமிருந்து வரும் மணத்தை  அழிவின்மையின் மணமாக மாற்றுகிறார். இந்திரன் ரிஷி பத்தினிகளொடு அவர்கள் அறியாமல் உறவு கொண்டவர். அவன் இந்திரன் என்பதைப் பத்தினிகள் உணர்ந்ததே இல்லை. ஆனால் சிகப்பு விளக்குப் பகுதியில் விபச்சாரியாக இருக்கும் சம்பா அவனின் முதற்தொடுகையிலேயே ’நீங்க இந்திரன்தானே’ என்று கேட்கிறாள். இந்திரன் அவளுக்கு ஆயிரம் கண்களை அளிக்கிறான். அவளது பார்வையைக் காணமுடியாத ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வையைத் திருப்பிக் கொள்கின்றனர். அவளை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை.  தன் உண்மையைப் சாதாரணப் பெண்களின் பார்வையிலிருந்து மறைத்து ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி விடலாம். ஆனால் ஒரு விபச்சாரிப் பெண்ணிடம் ஒருவன் பீற்றிக் கொள்ள முடியுமா என்ன? அந்தக் கதையின் முடிவில் மக்கள் அவளைத் தெய்வமாக்கி தசரா விழாவில் அவளை துதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே அவர் தன் அங்கதத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. இதேபோல ஓம்லிங்கம், தெய்வங்களின் புரட்சி, கஸ்தூரிமான் என்று இவர் சில தொன்மங்களைக் கையாளும் கதைகளிலும் இவ்விதமான நவீனத்துவரின் பார்வையை நாம் காணமுடிகிறது

அந்த நவீனம் என்பது அவர் தன் எழுத்துக்களைக் கையாண்ட முறை என்றும் சொல்லலாம். அதைக் கொண்டு அவர் மரபையோ தொன்மத்தையோ நிராகரிக்கவும் இல்லை. அதை தற்காலத்துடன் பொருத்துகிறார். அதிகநாள் மும்பையில் நிலை கொண்டிருந்தாலும் அவர், அவர் தன் பணி நிமித்தமாக பல தேசங்களில் வாழ்ந்திருக்கிறார். அவரது படைப்புகள் உளகளாவிய ஆங்கிய பத்திரிக்கைகளில்தன வந்திருக்கின்றன. சொல்லப்போனால்,  அவர் பிற்காலத்தில் மராத்தியில் எழுதிய படைப்புகளுமே அவர் முதலில் ஆங்கிலத்தில் சொற்றொடர்களை அமைத்துப் பின் அதை மராத்திக்கு மாற்றியவைகள் தான். இதுபோல பல உலகின் பல தேசங்களில் வசித்த எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் அந்த தேசத்தின் பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார்கள். ஒருபக்கம் அ.முத்துலிங்கம் ஒவ்வொரு நாட்டின் மனிதர்களின் உன்னதத்தை அறியாமையை எழுதியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் சென்ற வருடம் சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் சிவா கிருஷ்ண முர்த்தி அவர்கள் ஒவ்வொரு நாட்டு மக்களின் உள்ளார்ந்த கீழ்மையை எழுதியிருக்கிறார். அந்த இரு எல்லைகளையும் வைத்துப் பார்க்கையில் விலாஸ் சாரங் தன் கதைகளில் தான் பணிபுரிந்த நாடுகளின் பெயரை அரிதாகவே குறிப்பிடுகிறார். சில கதைகளை வைத்து நாம் யூகிக்க முடிந்தாலும் அதை அவர் சொல்லாததன் காரணம் அவர் தனிப்பட்ட மனிதன் குறித்துதான் எழுதுகிறார் என்பது மட்டுமே. அவர் மொழி தேசம் என்று மனிதர்களை பிரித்துக் காட்டுகையில் அவர்களின் பின்புலம் தேவையற்ற குழப்பங்களை எற்படுத்தி கதையை திசை திருப்பிவிடும் என்று கூட கருதியிருக்கலாம். எந்த தேசமானாலும் அவர் கதாபாத்திரங்கள் ஒரு அறையில், ஒரு வீட்டில், ஒரு வாடகை குடியிருக்கில், ஒரு டார்மென்ரியில் இருக்கும் மனிதர்களே. கூண்டுக்குள் இருக்கும் பெண்களே அவரது கதை மாந்தர்கள். 

 

அவர்கள் தனக்குள்ளே ஆழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். இண்ட்ரோவெர்ட் என்று சொல்வோம் இல்லையா அப்படி.  அவர்கள் அதிகம் மற்றவர்களிடம் வெளிப்படுவதில்லை. அவர்கள் ஒருவித சுயஆய்வு செய்கிறார்கள். ’வரலாறு தன் பக்கம்’ என்று சொல்லிக் கொண்டு அவர்கள் தனித்து இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு உலகியலுடனோ அரசியலுடனோ  ஒரு தத்துவத்துடனோ அவர்கள் மோதிக் கொள்கிறார்கள். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வெளித்தள்ளிய கருத்துக்களே பல்லியாக மீண்டும் அவருக்குள் திரும்புகின்றன. அவரது சிறுகதைகள் அந்த தருணத்தில்தான் நிகழ்கின்றன. விலாஸ்சாரங் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் அவரது இந்த உள்ளொடுங்கிய கதைத் தனைக்கு காரணமாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. மரபு எழுத்துகளுக்கு உரை எழுதுவது பண்பாடு. நவீன எழுத்துக்கள் ஒவ்வொரு வாசகனுக்கும் அந்தரங்கமானவை. ஆகவேதான், இவர் ஒரு நவீன எழுத்தாளர் என்பதாலேயே அவரது கதைகளுக்கு உரை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. அவரது மற்ற பரிணாமங்கள் குறித்தும் பார்க்கலாம்

 

விலாஸ் சாரங் என்கிற ஒரு கவிஞன் வெளிப்படும் தருணம் அவரது கதைகளில் மிக முக்கியமானதாக விளங்குகின்றன. கவிஞர்கள் கதைகள் எழுதும்போது அந்த அனுபவம் சில வரிகளில் நமக்கும் வந்துவிடும். யூமாவாசுகியின் ரத்த உறவு நாவலில் சுவீட் கடையின் பெயரை அந்தச் சிறுவன் மைக்கில் சொல்லும் தருணம்.. வேட்டை என்கிற சிறுகதையில் அவர் அந்த வாழை மரங்களை வெட்டும் தருணம்.. பிரான்ஸிஸ் கிருபா, கன்னி நாவலில் “ சிலுவையே! நீ உணர்ந்தது மீட்பரின் இறப்பையா அல்லது உயிர்ப்பையா “ என்று கேட்கும் தருணங்களில் இதை எழுதுபவன் நாவலாசிரியன் அல்ல கவிஞன் என்று நாம் உணர்வது நிகழும். எழுத்தாளர்களின் அபூர்வ வரிகள் இவ்வகையில் எழுந்து வரும். ”முகிலில் வாழ்கிறது அணையா நெருப்பு” என்று துவங்கும் ஜெயமோகனின் வெண்முகில் நகரம் நினைவுக்கு வருகிறது. ( உண்மையில் இந்த இடத்தில் விலாஸ் சாரங் இருந்தால் ஒரு பிராக்கெட்டில்(!) இந்த பேச்சாளர் இதையெல்லாம் படித்திருக்கிறார் என்று ஒரு ஆச்சரியக் குறியும் போடுவார் என்பதை நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இடையூறுக்கு மன்னிக்கவும்.. )

 

ஆம் கவிதை வரிகள் பற்றி மீண்டும் வருவோம்.. சில கவித்துவ வரிகள் இவரது சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. இவரது ஒரு வரி எனக்கு தேவதச்சனை நினைவூட்டியது..

துணி துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்.. காதில் விழுகிறது.. குருவிகள் போய்விட்ட நிசப்தம்.

அடுத்த துணி எடுத்தேன்.. காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகளின் சப்தம்

 

இது தேவதச்சனின் கவிதை

 

மேற்கண்ட கவிதையை என்னைத் தேடச் செய்தது..விலாஸ் சரங்கின் வரலாற்றின் முடிவு என்கிற கதை. இந்தக் கதையைப் பற்றி முதலில் குறிப்பிடவேண்டும். இந்தக் கதையே இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாகவே எனக்குப் பட்டது. காரணம் அவரை எவ்வாறெல்லாம் நாம் பகுக்கலாமோ அல்லது அவர் தன்னை தொகுப்பின் கதைகளை ஐந்தாகப் பிரிப்பதன் மூலம் (வேட்கைச் சூழல், கடலோர நகரம், சிற்றுயிர்கள், நிவானத்தின் தரிசனம் குலாக்கின் நிழல் ) அவர் தன்னை எப்படிப் பகுத்துக் கொள்கிறாரோ அந்த அனைத்திற்கும் பொதுவான கதை அது. அதை எந்த பிரிவில் வைத்தலும் அதனுடன் ஒன்றியிருக்கும். 

 

முன்பு சொன்ன தேவதச்சன் கவிதைக்கு வருவோம்.. அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரம் ஒவ்வொரு வரலாற்று இடத்திற்கும் போய் அங்கு இருக்கும் நிசப்தத்தைப் பதிவு செய்கிறது. அந்தக் கதை முழுக்கவே உள்ளொடுங்கியவனை சந்திக்க  அவரது மாணவன் வருவதைப் பற்றியது.. அதில் ஒரு வரி,

”‘தனித்திருப்பவன் தன் ஷூவை உள்வெளியாக அணிகிறான். மற்றவன் எதிர்பார்க்காதபடி என்றோ ஒருநாள் கையில் துப்பாக்கியுடன் வருகிறான். யாருடைய காலடிகள் பின்னோக்கிப் பதிகின்றன?’ என்று ஒரு எழுதுறார். வேறொரு கதையில் ‘என் காலணியின் நாடாக்களின் நிலைமை  விவாதத்திற்கானது அல்ல.. நானும் அதைக் கோரவில்லை..’ என்று ஒரு வரி.. அவரது மொழிக் கச்சிதத்திற்கு அவர் ஒரு கவிஞர் என்பதும் முக்கியமான காரணம். என்று தோன்றுகிறது. அந்த கச்சிதத்தையும் அங்கதத்தையும் மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கும் ஸ்ரீநிவாசன் அவர்களின் மொழிபெயர்ப்பும் முக்கியமாக இந்த இடத்தில் குறிப்பிடப் படவேண்டும்

 

முன்பே சொன்னது போல அவருக்கு இந்திய தத்துவங்களையும் தொன்மங்களையும் எழுதுவதில் மிகவும் விருப்பம் இருக்கிறது. அவரது ’த தம்மா மேன்’ புத்தகம் முழுதுமே இது குறித்த பார்வையையும் அதில் தன் கருத்தை அதைச் சார்ந்தும் எதிர்த்தும் எழுதியிருக்கிறார். நேராகவோ அங்கதமாகவோ அந்தக் கருத்துக்கள் வெளிப்படும்

 

சாவுமரம் கதையில் வரும் பாபா சிரசாசனம் செய்யும்போது, தன் ஆசிரமத்தில் இருக்கும் மண்டையோட்டு மரம் வானில் வேர் கொண்டு புவியில் கிளைபரப்பும்  தலைகீழ் மரமாக காண்பார். இதை பல இடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் படைப்புகளிலும் உரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். அது ஞானிகள் நமக்கு அளித்த கொடை. வானில் வேர்கொண்டு மண்ணில் கிளைபரப்பி  விரிந்திருக்கும் நம் மரபு அளிக்கும் ஞானத்தின் குறியீடு. இந்த மரம் என்னும் குறியீட்டை விலாஸ் சாரங் அவர்களும் பல இடங்களில் கையாளுவார். ’த தம்மாமேன்’ முழுக்கவே மரங்களை வைத்து கொண்டு செல்வார். ஆனால் அதையே இங்கு பகடியாக குறிப்பிடுகிறார். அப்படி எழுந்து வந்த ஞானம் இப்பொழுது தன் ஓவியங்களின் வழியாக விபூதி  கொட்டும் பாபாவிடம் வந்து நிற்பதன் அபத்தம் அது. 

 

இதைத் தாண்டி இதுல் இருக்கும் அரசியல் கதைகள். இந்திய வல்லூறு வின் வாக்கு மூலம் கதை அவர் முன்பே எழுதியிருந்தாலும் சமீபத்தில்தான் அந்த சைவ அசைவ உணவு விவாதமானது என்பது நினைவுக்கு வந்து. வேறொரு கதையில் இந்தியாவில் இராணுவ ஆட்சி வரும் என்பது அவருக்கு ஒரு  கனவில் தோன்றுகிறது. அதேநேரம், அவரது மற்ற கதைகளை விடவும் அவரது இந்த கதைகள் நாம் அறிந்த முடிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வதும் நாம் படித்த கதையையே மீண்டும் படிக்கும் எண்ணத்தை உண்டாக்குகின்றன. 

  மற்றும் ஒரு குறிப்பிடத் தக்க ஒன்று குரூர அழகியல். அந்த பீபத்ஸம் என்பதும் கூட வெறும் அதிர்ச்ச்சிக்காக அவரால் பயன் படுத்தப்படவில்லை

 தேவதேவன் தன் கவிதை ஒன்றில் சொல்வார்:         

’கடலோரம் வெளிக்கிருந்து /கால்கழுவி எழுந்த பின்புதான் /கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று’ ஆம்.. அத்தனை பிரம்மாண்டம்தான் என்றாலும் அவனவனுக்கு அவனவன் அவசரங்கள் அவஸ்தைகள் முக்கியம்.  அதில் முக்கிக் கொண்டிருப்பவனிடம் சென்று ஒரு ஆகாயத்தின் கடலின் அழகைப் பேசுவதைத்தான் அவர் தன் அந்தக் கதைகளில் சுட்டுகிறார். உலகியல் பிரச்சனைகளில் திளைத்துக் கொண்டு இருப்பவனிடம் கவித்துவத்தைக் காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு அபத்தம் உண்டு.  அதைத்தான் விலாஸ் சாரங் கும் பகடி செய்கிறார்.  ஒரு விதத்தில் அது அவரையே அவர் சுயபகடி செய்து கொள்வதாக வெளிப்படுகின்றன. அதனால்தான் அவர் தன் கதைகளை பெரும்பாலும் தன்னிலையில் எழுதுகிறாரோ என்றும் தோன்றுகிறது 

 

இந்த தொகுப்பைப் படித்ததும், அவர் கதைகளில் வெளிப்படும் ’இடம் /காலமற்ற தன்மையும்,’ ’கவித்துவமும்,’ ’பீபத்ஸம் எனப்படும் குரூர அழகியலும்தான்’ அவரது தனித்தன்மையாக நம் நினைவில் நிற்கின்றன. அந்த தருணங்களில்தான் அவரது  எழுத்துக்கள் உச்சம் பெறுவதும் நிகழ்கிறது . நாம் நம் அலுவலகத்தில் வேறு தேசத்தின் நேரத்தில் ஆழ்ந்து வேலை செய்திருக்கலாம். சில நேரங்களில் நம் வாசிப்பில் கால நேரம் பார்க்காமல் ஆழ்ந்திருக்கலாம். அதன்பின் நிகழ்காலத்திற்கு மீள்கையில் யதார்த்தத்த்தைக் கண்டு திகைத்து நிற்கும் ஒரு கணநேரத் தருணம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.  தன் கதைகளில் இவ்வாறு காலமும் தூரமும் வைத்து  விளையாடும் விலாஸ் சாரங்-ன் கதைகள் நமக்கும் அத்தகைய ஒரு திகைப்பைத்தான் அளிக்கின்றன

 

ஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை

மனத்தில் என்றும் மன்னனே!

சங்க கால மக்கள் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று தம் வாழ்வை நடத்தினர். அரசன் முறையாக ஆட்சி செய்து குடிமக்களை நன்கு ஓம்பி வந்தால்தான் தங்கள் வாழ்வு சிறக்கும் எனக் கருதினர். ஐங்குறுநூறு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐங்குறுநூற்றின் மருதத் திணையில் அடங்கி உள்ள வேட்கைப் பத்தில் உள்ள பத்துப் பாடல்களிலும் இதைக் காண முடிகிறது. வேட்கை என்பது விருப்பம் என்று பொருள் படும். தாய், தலைவி, தோழி ஆகியோரின் விருப்பத்தைக் கூறுவதால் இது வேட்கைப் பத்தாயிற்று

தலைவன் தலைவியைப் பிரிந்து புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஈடுபட்டான். பின்னர் “இது தகாது” என உணர்கிறான். தலைவியோடு கூடி வாழ வருகிறான். அப்பொழுது அவன், “நான் உங்களைப் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்ன கருதினீர்கள்” என்று கேட்கிறான். அதற்கு விடையாகத் தோழி கூறுவதாகப் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன, எல்லாப் பாடல்களுமே அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த அவினி என்னும் பெயருடைய சேர மன்னனையும் அவன் குடியாகிய ஆதன் என்பதையும் வாழ்த்தி, “வாழி ஆதன் வாழி அவினி” என்றே தொடங்குகின்றன. எந்த ஒரு செயலும் மன்னனை முதன்மைப்படுத்தி அவனை வாழ்த்திய பிறகே மக்கள் தொடங்கினர் என்று இதன்வழி உணரலாம்.

தோழி,

வாழி ஆதன் வாழி அவினி
பசிஇல் ஆகுக! பிணிசேண் நீங்குக”
என்வேட் டோளே யாயே யாமே”

என விடை கூறுகிறாள். “நாங்கள் மன்னன் வாழ்க என்றும், நாட்டில் பசி இல்லாமல் போகட்டும், நோய் அகன்று போகட்டும் என நினைத்திருந்தோம்” என்பது இதன் பொருளாகும். மன்னன் சிறப்புடன் வாழ்ந்து சிறப்பாக ஆட்சி செய்யும் நாட்டில் பசியும், நோயும் இருக்காது. அப்ப்டிப்பட்ட நாட்டை விரும்பினோம் என்கிறாள். உறு பசியும் ஓவாப்பிணியும் இல்லாததுதான் நாடு என்பார் வள்ளுவர்.மற்றொரு பாடலில், தோழி,

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக” என்கிறாள்.

அதாவது நம்அரசனுக்குப் பகை இல்லாமல் போகட்டும், அரசன் பல்லாண்டு வாழட்டும் என்று நினைத்திருந்தோம். ஒரு நாட்டுக்குப் பகைவர் இருந்தால் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கும். மக்கள் அமைதியாய் வாழமுடியாது என்று இது கூறுகிறது. மேலும் தங்கள் மன்னன் பல்லாண்டு சிறப்புடன் வாழவேண்டும் என்றும் விரும்புவதாக அவள் கூறுகிறாள்.

இப்படி ”நாட்டில் தீமை இல்லாமல் போகட்டும்; பால் வளம் பெருகட்டும்; நெல் மிகுதியாக விளையட்டும்; பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்றெல்லாம் நாங்கள் நினைத்திருந்தோம் என்று தோழி இப்பாடல்களில் கூறுகிறாள். தலைவனைப் பிரிந்து வருத்தத்தில் இருந்த போதும் மன்னனைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நினைத்த மக்களின் வாழ்வை எண்ணி நாம் பெருமைப்படத் தோன்றுகிறது.

சக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

தேர் என்றவுடன் அனைவருக்குமே ஒரு திருவிழா கொண்டாடும் குதூகலம் எப்படியோ ஒட்டிக் கொண்டு விடுகிறது. எந்தக் கோவிலோ, எந்த ஊரோ, தேரோட்டம் என்றாலே அது ஒரு மகிழ்ச்சி பொங்கும் விஷயம்தான். ஒரு கோவிலின் திருவிழா பத்து நாட்கள் என்றால், பத்தாவது நாள் தேர்த்திருவிழாதான். இந்தப் பத்தாவது நாளை நோக்கியே மொத்தத் திருவிழாவின் மகிழ்ச்சியும் கரை புரண்டோடும். தேர் அழகழகான வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, வாழையும், கமுகும் கட்டப்பட்டு, சுற்றிலும் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, அசைந்து வருவதே ஒரு அழகுதான். ஊத்துக்காடு வெங்குடுசுப்பையர், கண்ணனை, ‘ஆடாது அசங்காது வா கண்ணா” என்று அழைக்கும், பாடல் ஒலிப்பது போலவே ஒரு தேர் அசைந்து வருவது இருக்கும். தேரோட்டம் ஏன் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது??. கோவிலுக்குப் போக முடியாமல் இருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், கை கால் முடியாதவர்களுக்கும், கோவிலுக்குச் சென்று இறைவனைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் நிறைய இறைவனையே நினைத்து ஏங்குபவர்களுக்கும், அவர்களுடைய ஆசையைத் தீர்த்து வைப்பதற்காகவே இறைவன் தேரில் ஏறித் தெருவில் வருகிறான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால். ஒரு தேரை உருவாக்கி அதைத் தெருவில் ஓட வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அந்தத் தேரை வடிவமைப்பதிலிருந்து, அதனை அலங்கரித்துத் தெருவில் ஓட வைப்பது வரை அத்தனைக்கும் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள். இறைவன், எளியோரைக் காண ஓடோடி வருகிறேன் என்றாலும், மனிதர்களாகிய நாம் பிடித்துக் கொண்டு தொங்குவது மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட தேவையற்ற சம்பிரதாயங்கள் தானே? ஆனால், காலம் காலமாக கட்டமைப்பவர்கள் மேலோர் என்றும், மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுபவர்களாகவும், முன்னவர் ஆண்டைகளாகவும், பின்னவர் அடிமைகளாகவும் கருதப்படுகிறார்கள்.

இந்த மேலோர், கீழோர் என்பது பணம், பொருள் என்ற அடிப்படையிலும், சாதி, மதம் என்ற அடிப்படையிலும் அமைந்து விடுகிறது. கற்சிலை வடிப்பவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அதே சிலை கருவறைக்குள் இருக்கும்போது பூசை செய்பவன் மேலோனாகவே இருக்க வேண்டும். கோயிலையும், கருவறையையும் கட்டுபவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அந்தக் கருவறைக்குள் செல்லும் உரிமை மோலோனுக்கே உண்டு. இந்தப் பாகுபாடு காலம் காலமாக இன்னும் கூட வழக்கொழியாமல் இருந்துதானே வருகிறது???

தரமனிட்டி என்ற வடகன்னட கிராமத்தில் பாண்டுரங்கர் கோவிலில் வெகு காலமாக ஓடாத தேரை ஓட வைக்க நரபலி கொடுக்க வேண்டும் சாஸ்திரம் கற்றவர்கள் ராஜா ராணியிடம் தெரிவிக்கின்றனர். அந்தத் தேர் கல் சக்கரங்களாலானது. நரபலி கொடுக்க சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினரிலிருந்து ஒருத்தரைக் (ஆணோ, பெண்ணோ, குழந்தையோ) கொண்டு வரும்படி ராஜா கட்டளையிடுகிறார். இந்தச் செய்தி மக்கள் மத்தியில் கசிந்து, சேரி ஜனங்கள் இரவோடிரவாக ஊரையே காலி செய்து கொண்டு போய் விடுகிறார்கள். ஆளே கிடைக்காமல் இருக்கும்போது, ஆள் பிடித்து வர வேண்டிய பொறுப்பிலுள்ள கணக்குப் பிள்ளையின் மனைவி கோவிலுக்குப் போகிறாள். அங்கு கோவிலின் ஓரத்தில் தன் கர்ப்பிணி மனைவியோடும், ஆறேழு குழந்தைகளோடும், பசியோடு உட்கார்ந்திருக்கிறான் தோல்பாவை கூத்து நடத்தும் ஒருவன். அவனுக்கு, சோளம், அரிசி எல்லாம் மூட்டை, மூட்டையாக தருவதாக ஆசை காட்டி, அவர்களுடைய ஒரு குழந்தையை, தேருக்கு பலியிடத் தர வேண்டும் என்று கேட்கிறாள். தந்தை ஒத்துக் கொள்கிறான்; தாய் ஒத்துக் கொள்ளவில்லை. எப்படியோ ஒத்துக் கொள்ள வைக்கப் படுகிறாள். தேரோட்டத்தன்று குழந்தை தேர்க் காலில் பலியடப் படுகிறான். அதற்கு ஈடாக, ராஜா, அவனுடைய குடும்பத்திற்கு, கள்ளிக்குத்தி என்ற கிராமத்தில் நிலமும், வீடும் எல்லாம் ஒதுக்கித் தருகிறான். பத்திரம் எழுத்தி தந்து விடுகிறான். இது நடந்து முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ரத்த சேவை என்ற பெயரில், அந்த வம்சத்துக் குடும்பத்தில், மூத்த பையன், தேரோட்டம் தொடங்குமுன், அந்த கல் தேர்ச்சக்கரத்தில் தலையை முட்டிக் கொண்டு, அந்த ரத்தத்தில், தேர்ச்சக்கரத்தில் திலகமிட வேண்டும் என்ற வழக்கம் கொண்டு வரப்படுகிறது. முதல் தலைமுறையில், பதினைந்து நாட்கள் விரதமிருந்து, பல கோயில்களுக்கு யாத்திரையாகச் சென்று, சரியாக தேரோட்டத்திற்கு முதல் நாள் அந்த கிராமத்தில் சென்று தங்கி, அடுத்த நாள், ரத்த சேவையை ஆற்றி, பொருளீட்டி வருவது என்ற வழக்கம் நடக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளில், இந்த வழக்கம், கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து விடுகிறது. இவர்களும் அதை கடனே என்று செய்கிறார்கள். அவர்களும், அதை புனித சேவையாகக் கருதி பொருள் தருவதில்லை. நான்காவது தலைமுறையில் வரும், தேவப்பா பற்றியதாக நாவல் விரிகிறது.

தேவப்பா, இந்த தொன்மைப் பழக்க வழக்கங்களை விடுத்து, மனிதர்களை நேசிப்பதையும், சமூகத்திற்குச் சேவை செய்வதையும் இறைப்பணியாக எடுத்துக் கொண்டான் என்பதை நாவல் மறைமுகமாகக் கூறி முடிவடைகிறது.

பிறப்பாலேயே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று அடையாளப்படுத்தும் வழக்கம் இன்றளவும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஒரு தேரும், கிராமமும், கோவிலும் பற்றிச் சொல்வது போல இருந்தாலும், சமூகத்தில் உள்ள பாகுபாட்டையும்,, கருத்துருவாக்கத்தையும் நாவல் பேசுவதை வாசகனால் உணர முடிகிறது.

நூற்றியைம்பதாவது தேரோட்டத்தின்போது நடைபெறும் கொந்தலிகர் கதை மூலமாக ரத்தசேவை ஆரம்பித்த கதை விவரிக்கப்படுகிறது. எடுத்தவுடனே, அவர்கள் தேரின் அடுக்குகளை விவரிக்கிறார்கள்.ஒருபுறம், பரிணாம வளர்ச்சியின் அடுக்குகள் போல் அவை இருக்கின்றன. மறுபுறம், உச்சியில் ஒரு பிரிவினர் உட்கார்வதற்கு, கீழே இத்தனை பேர் அமுங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தேர் நகர்வதற்கு நரபலி வேண்டும் எனும் போது, மேல் சாதியினர் என்று சொல்லக் கூடியவர் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, அறியாமையினாலும், வறுமையினாலும் வாடும் கீழ்சாதியைச் சேர்ந்த கூத்து நடத்துபவனைப் பயன்படுத்திக் கொள்வது மேல் சாதியினரின் கயமைத்தனத்தைக் காட்டுகிறது.

ஒரு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் என்பவர், தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற அறிவும் அற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய அறியாமையையும், அவர்களோடு அவர்களின் வறுமையையும் சேர்த்தே பயன்படுத்திக் கொண்டது மேல் சாதி. வயிற்றை நிரப்பி, வஞ்சகமாக ஏமாற்றி வந்தது. காலம் மாற மாற, அவர்களிடம் விழிப்புணர்வு தோன்றியபோது, அவர்களை வேறு விதமாக ஏமாற்றுகிறது.. தவறான அரசியல் செய்வதற்கும், அவர்கள் நேரடியாகச் செய்யாத தவற்றின் பழி ஏற்பதற்கும் அவர்களப் பயன்படுத்திக் கொள்கிறது. தேவப்பா குடும்பத்திற்கு நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட நிலத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கிறது மேல்சாதி என்று சொல்லக் கூடிய கௌடர் குடும்பம். அதோடு, இறந்து போன குமரப்பாவின் மனைவியையும் தான் பெண்டாள அடிமைபடுத்தி கொள்கிறது. தொடர்ந்து இப்படி கீழ் சாதியினரை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் அவர்களின் ரத்த வேவை என்ற கட்டுக்களை மீறிக் கொண்டு ஒருவன் அந்தச் சாதியிலிருந்து வெளி வருவது கட்டுடைத்தலின் குறியீடாகும். அவன் தனக்குப் பிடித்தமான சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் இவை போன்ற செயல்கள் உயர்ந்த குலத்தில் பிறந்தோர்க்கு மட்டுமே சொந்தமானது என்பது போன்ற தோற்றத்தை உடைக்கிறான். காந்தியின் வார்தா ஆசிரமத்தில் போய் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான்..

அதே போல, நாவலில் இன்னொரு அழகான சித்திரமும் வரையப்பட்டிருக்கிறது. உயர்ந்தோர் எனச் சமுதாயத்தில் மதிக்கப்படும் கௌடர் பிறன் மனைவியையும், சொத்துக்களையும் வஞ்சகமாகச் சேர்த்து வைத்துக் கொள்கிறான். கோவில் நகைகளையும் கூட கொள்ளையடிக்கிறான். ஆனால், சமூகத்தில் கீழ்சாதி என்றும், தவறான பழக்கங்கள் கொண்டவன் என்றும் ஒதுக்கப்படும், தேவப்பா ஹோலிப் பண்டிகையில் நீர் ஊற்றுவதற்கு என்று நேர்ந்து விடப்பட்டிருக்கும் குலத்தைச் சேர்ந்த கைம்பெண்ணை, அவளுடைய இரண்டு குழந்தைகளோடு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏற்றுக் கொள்கிறான். தாலி கட்டித் திருமணம் செய்து கொள்ளாமலும், உடலால் கூடவே இல்லாமலும் கூட மனதளவில் மனைவியாக ஏற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். மனம் சார்ந்த உறவே முக்கியம் என்று கடிதம் மூலம் தெரிவிக்கிறான். இந்த இடத்தில் சமுதாயத்தில் உயர்ந்தோர் யார், தாழ்ந்தோர் யார் என்ற கேள்வி வாசகன் மனதில் தோன்றுகிறது.

தரமனிட்டி கிராமத்தில் வாழும், சோமப்பா எனும் பெரியவர், தான் ஜைன மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், பாண்டுரங்கர் கோயிலின் மீதும், அந்தக் கிராம நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும், அவர் சார்ந்த மதத்தினைச் சொல்லிச் சொல்லி அவமானப்படுத்தப்படுகிறார். இறுதியில், திருட்டுப் பழிக்காகவும் காவல் நிலையம் சென்று, தங்கள் மத வழக்கப்படி, சல்லேகண விரதமிருந்து உயிர் விட ஆயத்தமாகிறார்.

அன்பு, ஒற்றுமை, கருணை எல்லாவற்றையும் விட சாதி, மதம், பொருள், இவற்றை முன் நிறுத்தும் பொருள் வயமான ஒரு வட்டத்துக்குள் சுற்றி வருவதையே இந்தச் சமுதாயத்தில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்தக் கதையின் பின்னிணைப்பாக, ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்த தேவப்பாவின் குழந்தையைப் பலியிடுவதற்காக தேர்க்காலில் வைக்கும்போது, அந்த பாண்டுரங்கனே கருடனில் பறந்து வந்து, அந்தக் குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு போனானாம் என்று.

இந்த உயிர்த்தியாகம், பற்றுதலின்மையின் ஒரு வடிவமாகும். கபீர்தாசர், அதிதிகளுக்கு அமுது படைக்க வேண்டித் திருடப் போனபோது, கடைச் சொந்தக்காரன் கையில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக, தன் புதல்வனின் தலையை வெட்டி விடுகிறான். திருநீலகண்டர், ஈசன், பிள்ளைக்கறி கேட்டான் என்பதற்காக பாலகனாகிய தன் மகன் சீராளனை வெட்டி அமுது படைக்கிறான். இந்த இடங்களிலெல்லாம், இறைவன், அவர்களுடைய பற்றின்மையையும், பக்தியையும் சோதிக்கவே இப்படிச் செய்கிறான். நெஞ்சத்தில் தூய்மையாக இருந்து கொண்டு, துர்புத்திகள் இல்லாமல் இருப்பதே இறைத்தனமையை அடையும் மார்க்கம் என்பதை அகங்காரமும், ஆணவமும் கொண்டு பாகுபாட்டில் திளைக்கும் மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை என்பதையும் நாவல் பேசுகிறது என்பதை வாசகனால் உணர முடியும். சக்கரங்கள் உருண்டோடாமல், கலசம் தாங்கிய தேர் எப்படி ஓட முடியும்? தேர் என்பது வெறும் அடுக்குகளும் கலசமும் மட்டுமன்று. சக்கரங்கள் மண்ணில் அழுந்தி விடாமல் ஓட வேண்டும். ஓடினால்தானே தேரோட்டம்; நின்றால் அது வெறும் நிலைத்தேர். இது ஒரு படிமமாக இந்த நாவலில் அமைந்திருப்பது சிறப்பு.

ஏதோ ஒரு நாட்டுப்புறக் கதை போலத் தோன்றினாலும், இந்த நாவல், மிக நுட்பமாக, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் பேசுகிறது. மிகவும் சுவாரசியமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொந்தலிகர் சொல்லும் கதை வடிவில் சொல்லப்பட்டிருப்பது, நம் தமிழ் நாட்டின் வில்லுப் பாட்டு போல இருக்கிறது. அதன் பிறகும் கதை விவரணை, வாசகனைக் கட்டிப் போடுகிறது. ஏதோ கர்நாடாகவின் ஒரு கிராமத்துக்குப் போய் வந்த மாதிரி ஒரு உணர்வைப் பெற முடிந்தது.

ஒரு நாட்டுப் புறக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாவலைப் புனைந்திருக்கும் கன்னட எழுத்தாளர் ராகவேந்திர பாடீல் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். மொழிபெயர்ப்பு என்று தோன்றா வண்ணம் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல், தங்கு தடையில்லாத மொழிபெயர்ப்பாகச் செய்திருக்கும் பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். 2003 ல், கன்னடத்தில் வெளிவந்துள்ள இந்த நாவல், 2011 ல் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கூட அதிகமாக ஒன்றும் மாறிவிடவில்லை என்ற மனத் தாங்கலோடு புத்தகத்தைக் கீழே வைக்க வேண்டியிருக்கிறது.

அரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி

அரபிக்கடற்கரையில் உள்ள கோடி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களின் ,மண்ணின் கதை.அரபிக்கடற்கரையும் அதன்கழிமுகப்பகுதிகளும், அதையொட்டிய தென்னை மற்றும் புன்னை தோப்புகளும், மணற்மேடுகளும், ஏரியும், ஆங்காங்கு தள்ளி அமைந்த வீடுகளும், கோடிகிராமத்தை சுற்றியுள்ள ஐரோடி, மங்களூர், மந்தர்த்தி, ஹெங்காரகட்டே,படுமுன்னூர், உடுப்பி, குந்தாபுரம், மங்களூர்,பெங்களூரு,பம்பாய் மற்றும் மதராஸ் என்று கதைக்களம் விரிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கதை துவங்குகிறது.பார்வதி மற்றும் ராமஐதாளர் திருமணம் பெருமழைகாலத்தில் நடப்பதிலிருந்து கதை துவங்குகிறது.ஐதாளரின் விதவைதங்கை சரஸ்வதி.பார்வதி சரஸ்வதி இருவரின் உறவானது அன்பும், உழைப்பும்,புரிதலும் இணைந்த தோழமைஉணர்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

மழை ,பனி, கோடை காலங்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தேவையானவைகளை உழைத்து ஈட்டிக்கொள்ளும் எளிமையான வாழ்வு அவர்களுடையது.அவர்களுக்கு விவசாயத்தில் உதவும் செம்படவர்களுடனான அவர்களின் உறவு கடைசி வரை பிரிக்கமுடியாததாக உள்ளது.கடும் உழைப்பக்கோரும் வேலைகளை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.

ராமஐதாளர் பக்கத்துஊர்களுக்கு நடந்து சென்று புரோகித வேலைகளை செய்கிறார்.போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் என்பதால் மக்கள் எங்கும் நடந்தோ படகிலோ செல்கிறார்கள்.நடக்கும் தூரம் வரை உள்ள இடங்களே அவர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறது.

ஆண்டிற்கு ஒருமுறை வரும் கோடியின் கோடீஸ்வரர் திருவிழாவிற்கு செல்வது அவர்களுடைய எதிர்பார்ப்பு மிகுந்த நிகழ்வாக இருக்கிறது.சொல்லப்போனால் நிதானமான வாழ்க்கை.நெல், உருளைக்கிழங்கு, கீரைகள், தேங்காய், உளுந்து போன்றவை அவர்களின் முக்கியமான உற்பத்தி பொருட்கள்.

இந்த நாவலில் மூன்றுதிருமணங்கள் விரிவாக சொல்லப்படுகின்றன.வீட்டு முற்றத்தை சீராக்கி, கடலோரத்தில் குறைந்தது ஆயிரம்ஆட்களாவது கலந்து கொள்ளும் திருமணங்கள்.அந்தப்பகுதியின் உணவுப்பழக்கங்கள்,சடங்குகள்,பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் நாவலில் அவர்கள் வாழ்வுடன் பிணைந்து வருகின்றன.

குழந்தை பிறக்காததால் ராமஐதாளர் சத்தியபாமையை இரண்டாம் திருமணம் செய்கிறார்.அவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்கிற லச்சு,சுப்பம்மாள் என இரு குழந்தைகள்.ஐதாளரின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் சீனமய்யரின் வீடு இருக்கிறது.இருநண்பர்களும் கடனால் பிரிகிறார்கள்.காலம் முழுதும் இருவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் சொத்துக்களை வாங்குகிறார்கள்.

பெங்களூரில் சீனமய்யரின் பிள்ளைகள் சாப்பாட்டுக்கடை நடத்தி மிகுந்த வருமானம் ஈட்டுகிறார்கள்.ஐதாளர் தன் பிள்ளையை ஆங்கிலவழிகல்விக்கு அனுப்புகிறார்.ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி பணத்தை விரயமாக்குகிறான்.வீட்டிலும் யாருடனும் ஒட்டுதலின்றி இருக்கிறான்.

நீலவேணியை திருமணம் செய்த பிறகும் அவன் மாறுவதாக இல்லை.தீயசகவாசங்கள் வழி அவனுக்கு ஏற்படும் நோயால் நம்பிக்கை இழக்கும் ஐதாளர் மருமகளுக்கு தன் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கிறார்.பார்வதியும் ஐதாளரும் மறைகிறார்கள்.இது முதல் தலைமுறை.

இரண்டாம் தலைமுறையில் லச்சன் மனைவியை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி அழிக்கிறான்.அவன் மனைவியான நாகவேணிக்கு மூன்றாவதாக பிறக்கும் குழந்தை மட்டும் நிலைக்கிறது.அதற்கு ராமஐதாளரின் பெயரை இடுகிறார்கள்.குடும்பத்தை வறுமை சூழ்கிறது.இரண்டாம் தலைமுறை பெரியவர்களும் காலம் முடிகிறது.

தன் தந்தை வீட்டிலிருந்து நாகவேணி மகனை வளர்க்கிறார்.மீண்டும் பதினைந்து ஆண்டுகள் சென்று கோடிக்கு வருகிறார்.இடையில் வயலின் இசை கற்பது அவருக்கு மனநிம்மதியை தருகிறது.

ராமன் மதராஸில் பி.ஏ படிக்க வருகிறான்.சுதந்திரபோராட்டதில் ஈடுபட்டு பலமாதங்கள் சிறை செல்கிறான்.மீண்டும் ஒருஆண்டு கோடியில் இருந்தபடி சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுகிறான்.பின்னர் மீண்டும் படிப்பை தொடர்கிறான்.வீட்டில் வயிற்றுக்கும்,துணிக்கும் இல்லாத வறுமை தாண்டவமாடுகிறது.

படித்தப்பின் வேலை கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.ராமன் இயந்திரத்தனமான வேலையின் மீது பிடிப்பில்லாமல் இருக்கிறான். அதை எதிர்கொண்டு வாழ்வில் தன்குடும்பம் இழந்த சொத்துக்களை, மரியாதையை திரும்பப்பெறுகிறானா என்பது மூன்றாம் தலைமுறைக்கதை.

நாவலில் நிறைய மனிதர்கள் வருகிறார்கள்.லட்சுவின் நண்பரான ஒரட்டய்யர்.இருவரும் தந்தையர் சொத்துக்களை தீயவழிகளில் அழிக்கப்பிறந்தவர்கள்.நாகவேணியின் சிறியதந்தை,செம்படவர்களான சூரன்,அவர் மகன் காளன் அவர் மனைவி சுப்பி,சுப்பராய உபாத்தியாயர்,நரசிம்மய்யர்,நாகவேணியின் குடும்பத்தார்,மதராஸ்குடும்பம்,ராமன் பம்பாயில் ஓவியம் கற்கும் நோவா என்று நாவல் முழுக்க மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் நிரம்பி இருக்கிறது.

கதை நேர்க்கோட்டில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அறுநூற்று ஐம்பது பக்கங்கள் உள்ள இந்தநாவல் எந்த இடத்திலும் சோர்வு தட்டுவதில்லை.மனித வாழ்வின், செல்வத்தின் நிலையாமையை நாவல் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.

நாவலில் வரும் காலநிலை,இட விவரணைகள் மனிதர்களின் வாழ்வுடன் இணைந்துள்ளது.முக்கியமாக கோடியின் ஆளரவம் அற்ற கடற்கரை.தாழை புதர்களும் ,பனைமரங்களும், புன்னைமரங்களும் வளர்ந்திருக்கும் மணல்வெளி.மணல்மேடுகள் ,கடலின் பின் மறையும் சூரியன் போன்றவை நாவலுக்கு உயிர்ப்பை அளிக்கின்றன.

விடுமுறையில் ராமனும் அம்மா நீலவேணியும் இரவெல்லாம் மணற்குன்றுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது வயலின் இசைக்கிறார்கள்.அத்தனை வறுமையான வாழ்வில் இயற்கையுடனான இந்த பந்தம் அவர்களுக்கு மாபெரும் ஆசுவாசத்தை அளிக்கும் இடங்கள் அலாதியானவை.நிலவொளியில் கடற்கரை மணல்குன்றில் தாயும் மகனும் அமர்ந்திருக்கும் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

மழைகாலத்திலும், காற்றுகாலத்திலும் மணல்மேடிடும் இடங்களை தொடர்ந்து சீர்செய்து விவசாயம் செய்கிறார்கள்.காய்கறி கீரை என்று தங்களுக்கான உணவை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்.மேலும் பால்வற்றிய கறவைகளுக்கு கடைசிவரை உணவும், நீரும், இடமும், அன்பும் அளித்துக்காக்கிறார்கள்.

ஒருநீண்ட வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை இந்தநாவலை வாசிப்பதனூடாக அடையலாம்.வாழ்வை அதன் போக்கில் சொல்லும் நாவல்.மனிதர்கள் பிறந்து வாழ்ந்து மறைகிறார்கள்.ராமனுடைய வாழ்வில் இவற்றுக்கப்பால் அவனுடைய ஒவியமும் இசையும் எஞ்சுகிறது.

ஒருநாள் அவன் கடல் கொந்தளிப்பான காற்றுகாலத்தில் அரபிக்கடலை வரைகிறான்.அதே கொந்தளிப்பை பம்பாயில் தன் நண்பர்கள் முன் இசையில் கொண்டு வர அவனால் முடிகிறது.அதே கொந்தளிப்பை நாட்டு விடுதலைக்காக பேசும் கூட்டங்களில் தன் பேச்சில் கொண்டுவர முடிகிறது.

அதே சமயம் ராமனிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு அவனையும் சுற்றியுள்ளவர்களையும் சிறிது நேரம் வாழ்க்கைப்பாடுகளில் இருந்து விடுவிக்கிறது.ஏழ்மையான வாழ்விலிருந்து எழும் வைராக்கியம், நேர்மை, தீவிரம் கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான்.ராமஐதாளரும் சரஸ்வதியும் கூட உழைப்பில் அவ்வாறு இருந்தவர்கள்.எதோஒரு தீவிரம் இல்லாத வாழ்வு லச்சனுடைய வாழ்வைப் போல வெறும் அலைகழிப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது.

ராமன் தாயிடம் வளர்ந்த பிள்ளையாதலால் பெண்கள்மேல் வாஞ்சையுடையவனாக, அவர்களுக்கான இன்முகம் கொண்டவனாக ,அவர்கள் பேசுவதற்கு காது கொடுப்பவனாக இருக்கிறான்.அம்மா,அத்தை,சுப்பி,பாட்டி,சித்தி என்று அவனுடனிருக்கும் பெண்கள் மேல் அதிகாரம் செலுத்தாதவனாக இருக்கிறான்.

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு இயல்புண்டு மனிதர்களுக்கும் அவ்வாறே.காலநிலைக்கேற்ப மண் மாற்றம் பெறுகிறது.மனிதர்களும் கூட அவ்வாறே.மாறாத நிலம் பாலை.தனிமனிதனோ மானுடமோ கூட அவ்வாறுதானே.

மண்ணின் இயல்பை மனிதர்கள் பெறுகிறார்கள் என்ற வாக்கியத்தை சிறுவயதில் கேட்கும் பொழுது புரியாது.ஆனால் வளர வளர தெரியும்.வளமான மண்ணில் பிறந்தவர்களில் முக்கால்வாசி ஆட்கள் சுகவாசிகளாக, சாதுவாக இருப்பார்கள்.வளமில்லாத மண்ணில் பிறந்தவர்கள் போராட்டகுணமும்,வலிய உடலும் உள்ளவர்களாக இருப்பார்கள்.மண்ணுடன் கொண்ட உறவால் விளையும் பண்புகள் எனக்கொள்ளலாம்.

ராமஐதாளரின் விவசாய வாழ்க்கை காலகட்டதிலிருந்து ராமனின் தொழில்மையமான காலகட்டம் வரையான அந்தமக்களின் வாழ்வை ,அலைகழிப்பை, கொண்டாட்டங்களை, வறுமையை,இழப்புகளை, கேள்விகளை, பொருளாதாரத்தை, மக்களுக்கிடையேயான உறவைப் பற்றி விரிவான வாழ்பனுபவத்தை இந்த நாவல் நமக்கு தருகிறது.

இந்த வாழ்வும் கலைகளும் எப்பொழுதுமே மண்ணிற்கும் மனிதர்களுக்குமானது தானே.அதை மீண்டும் உணரும் அனுபவமாக ‘மண்ணும் மனிதரும்’ நாவல் வாசிப்பனுபவம் உள்ளது.

நாவல்:மண்ணும் மனிதரும்

ஆசிரியர்:சிவராமகாரந்த்

மொழிபெயர்ப்பு:தி.ப.சித்தலிங்கையா