கவிதை

மெய்யோ பொய்யோ

வே. நி. சூரியா

 

கண்ணாடியிலிருந்த
பறவையின் தவறி விழும்
சிறகுகளிலிருந்து
சிறுசெடியென அதே
கண்ணாடி
பிரதிபலிப்பிற்குள்
விழுகிறேன்.
பிரதிபலிப்பிற்குள்ளிருந்து
பெருஞ்செடியாக
அல்லாமலும் சிறுகாளான்
சூழாமலும் விதையென
வான் நோக்கி
முளைக்கிறேன்.
பிரதிபலிப்பிற்கு வெளியே
விழும் என் நிழலில்
செடிகளும் காளான்களும்
மரங்களும்
இளைப்பாறுகிறது.

ஜாம்

எஸ்.சுரேஷ்

சில்க் போர்டு டிராபிக்கில்
சிக்கிகொண்ட பூனை ஒன்று
கார் போனட் மேல் ஏறியது

காரில் அமர்ந்திருந்த ஐடி தம்பதியைப் பார்த்து
“இன்னிக்கி ஜாம் அதிகம்
நடுவுல ரெண்டு மாடு வேற படுத்திருக்கு
இதுங்களுக்கு வெவஸ்தையே இல்லை”
என்று கூறிவிட்டுச் சென்றது

சற்று நேரம் கழித்து
இரண்டு மாடுகள் காரை தாண்டி சென்றன
தம்பதியை பார்த்த காளை மாடு-
“என்ன முறைக்கறீங்க
எங்களுக்கும் ஜாம்தான்”

உள்ளாடைகள் எப்போதும்

மஜீஸ்

 

உள்ளாடைகள் எப்போதும்
அவமானத்தின்
குறியீடுகளாகவே மட்டும்
பழக்கப்பட்ட அவளுக்கு
முப்பது தாண்டியும்
உள்ளூரில் எந்த முடவனும்
கரம் பிடிக்க தயாரில்லை யென்றதும்
சம்பிரதாயங்களும், நிர்பந்தங்களும்
கழுத்து நீட்டச் சொல்ல
ஓசைகள் பெருத்த நகரத்து
அழுக்கனின் அந்தப்புரத்திற்கு
அடிமையாக வேண்டியாயிற்று
கண்ணீரால் லௌகீகக் காயங்களை
கழுவிக்கொள்ளும் நகரத்து
மனை வாழ்க்கையின்
நீட்சியில்
அவள் பழகிக்கொண்டதும்
மாற்றிக்கொண்டதும்
கொங்ரீட் காடுகளில் கசியும்
வெயிலுக்கு ஏதுவாக
கட்டப்பட்ட கொடியில் எந்த வித
சங்கோஜமுமின்றி துவைத்த
உள்ளாடைகளைக் காயப்போட
மட்டுமே.

மழைக் கால சோகம் போல…

ஜிஃப்ரி ஹாசன்

சங்கீத வார்த்தைகளால்
வானம் மழைக்கால கீதத்தை
இசைக்கிறது
கொதிப்பேறிக் கிடந்த
வரண்ட நிலத்தின் வெடிப்புக்களை
கண்ணாடிப் பூக்களாய்
மாற்றுகிறது மழை
இரசிக்கப்படாமலே
கைவிடப்பட்டுக் கிடந்த
இயற்கையை மழை அழகுபடுத்துகிறது
குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி
மழையின் தெருக்களில்
சிறகசைத்துப் பறப்பதை
முரட்டுக்கரங்கள் தொடர்ச்சியாகத்
தடுக்க முனைந்து தோற்கின்றன
மின்சாரக் காற்றில் உலர்ந்த உடல்களை
இயற்கையாய் வருடுகின்றன
மழையின் கரங்கள்.
மழைக் கால இரவுகள்
அன்பின் இரகசியத்தை ஈரச் சொற்களால்
பகிர்ந்துகொள்கின்றன
எனினும்
இனம்புரியாதவோர்
மழை நேரத்துச் சோகம்
மீண்டும் அதே ஈரச் சொற்களால்
துயரக் கவிதைகளை
இதயத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறது

நயாகரா

ஸ்ரீதர் நாராயணன்

Niagara

Niagara

தீரா விடாயுடன்
வாய்பிளந்து நிற்கும்
மலையிடுக்கில்
பொங்கி பிரவகிக்கிறது.

புளியேப்பக்காரர்கள்
துளிக்குறிப்புகளால்
நொடிக்கு எவ்வளவு நீர்
இடம்மாறுகிறதென
அளக்க முயல்கிறார்கள்

கிளிப்பிள்ளைகளின்
வாய்ச்சொற்களில்
அது எப்போதும்
மலைமகளின்
முகம் மறைக்கும் மணச்சீலை.

வெண்பனி நீர்த்துவாலை என்கிறார்,
வைரச் சொரிதல் என்கிறார்,
வானவில் வந்திறங்கும் நீர்மேடை என்கிறார்,
வண்ண ஒளிக்கற்றைகள் நடமிடும்
குதிரைக்குளம்பு என்கிறார்,

சொல் இல்லாதவன் என்னிடம்
புறங்கையில் உருண்டோடும்
சிறு திவலை,
அதன் பேரழகை
காட்டிச் செல்கிறது.