சிறுகதை

துக்கத்தின் இறுதி கட்டம்

எஸ். சுரேஷ்

 

ஆறு மாதங்கள் இருக்கும், லஞ்ச் சாப்பிட தட்டை எடுத்து மேஜையின் மேல் வைத்தபோது அவன் மொபைல் ஒலித்தது. “சரவணா. ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் வாடா. அப்பாவுக்கு ஏதோ ஆகிடுச்சு. எல்லா டாக்டரும் இப்போ ரூம்ல இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு சரவணா. உடனே கிளம்பி வா”.

அம்மாவின் குரலில் தெரிந்த பயம் சரவணனையும் தொற்றிக்கொண்டது. அவன் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது அம்மாவின் அழுகைக் குரல் உள்ளேயிருந்து கேட்டது. அப்பா மாரடைப்பு வந்து, திரிப்ள் பைபாஸ் முடிந்து. தேறி வரும்போது எதிர்பாராதவிதமாக அவர் மரணம் நிகழ்ந்திருந்ததது. டாக்டர்கள் எல்லோரும் அவர் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்று சொல்லியிருந்தார்கள். சற்று சோர்வடைந்திருந்தாலும், சரவணனிடமும் அவன் அம்மாவிடமும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் இப்படி திடீரென்று காலமானது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“உங்க அம்மா ஒரு மகராசி. எப்போவும் சிரிச்ச முகத்தோட இருக்கும் அவள இந்த நிலைமைக்கு கடவுள் ஆளாக்கிட்டானே. சுமங்கலியா போயிருக்க வேண்டியவளுக்கு இந்த கதியா?”, என்று சரவணனிடம் சொல்லி தெரு முக்கில் பூ விற்கும் கிழவி அழுதாள். சரவணன் எங்கு சென்றாலும் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். அம்மாவை புகழும் அளவுக்கு அப்பாவையும் புகழ்ந்தார்கள். “எல்லாரிடமும் எவ்ளோ நல்லா பழகுவார் தம்பி. அவர் பேச ஆரம்பிச்சா நாங்க எங்க வேலையா விட்டுட்டு அவர் பேச்ச ரசிப்போம். அதனால்தான் அவரு பெரிய சேல்ஸ ஆபிசரா இருந்தாரு”, என்று மளிகைக் கடை அண்ணாச்சி கூறினார். கறிகாய் விற்கும் கிழவி,“ இது போல ஒரு புருஷன் பொஞ்சாதி ஜோடிய நான் பாத்ததே இல்லை தம்பி. நாசமா போற எவன் கண்ணோ பட்டிடிச்சி”, என்றாள்.

வீடு மதுரையில் இருந்தாலும், அப்பாவுக்கு தென் தமிழகமெங்கும் சுற்றும் வேலை. அவர் என்று போனாலும் வெள்ளிக்கிழமை இரவு மதுரைக்கு வந்துவிடுவார். மறுபடியும் திங்கட்கிழமை கிளம்புவார். வார இறுதியில் பௌர்ணமி என்றால் சரவணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அன்று அவர்கள் மூவரும் கொல்லைப்புறத்தில் உட்கார்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடுவார்கள். அம்மா பழைய தமிழ் பாடல்களை இனிய குரலில் பாடுவாள். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் அப்பா தன்னுடைய விருப்பமான பாடல் ஒன்றை கேட்பார். அம்மா அதைப் பாடுவாள். சில நாட்கள் நள்ளிரவு வரை இந்த கச்சேரி நடக்கும். இது போன்ற நாட்களில் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

இப்படி மகிழ்ச்சியுடன் இருந்த அம்மா இப்போது இப்படி ஆகிவிட்டாளே என்று சரவணன் அழுதான். அம்மாவையோ, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் அழுகை பத்து நாட்களுக்கு நிற்கவேயில்லை. திருச்சியிலிருந்து சரவணனின் பாட்டி வந்திருந்தாள். “என் பொண்ண தனியா விட்டுட்டு போயிட்டானே அந்த மனுஷன்”, என்று அவளும் அழுதாள். சரவணனுக்கு என்னை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. இவ்வளவு நாட்கள் அவன் அம்மா அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்திருந்தான். அவனுக்கு எந்த ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் அவர்கள்தான் தீர்த்து வைப்பார்கள். அவன் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் பஸ் பிடித்து மதுரைக்கு வந்துவிடுவான். மூன்று வருடங்களாக அவன் இதை செய்து வருகிறான். அவனுக்கு எப்பொழுதும் அம்மா அப்பாவுடன் இருக்கவேண்டும். இப்பொழுது அவன் தான் அநாதை ஆகிவிட்டது போல் உணர்ந்தான்.

சோகத்திலிருந்து மீண்டபோது அம்மா கோபமாக இருந்தாள். அவள் சிரித்த முகம் சினம் கொண்ட முகமாக மாறியிருந்தது. அவளுக்கு எப்பொழுது கோபம் வரும், யார் மேல் கோபம் வரும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. அம்மாவின் இந்த முகத்தை கண்டு பயந்த சரவணன், தன் அலுவலகத்துக்கு வரும் மனோதத்துவ நிபுணரிடம் இதை பற்றி கேட்டான். “சரவணன், பெரும் துயரம் ஏற்படும்போது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பல படிநிலைகளை ஒருவர் கடந்து வரவேண்டும். முதலில் நடந்ததை ஏற்க மறுப்பார்கள், அடுத்ததாக அவர்களுக்கு தங்கள் மீதும் இந்த உலகத்தின் மீதும் கோபம் வரும். மெதுவாக கோபம் தணிந்து சுயபச்சாதாபம் ஏற்படும். அதை கடந்தவர்களுக்கு வாழ்வின் மேல் ஒரு வெறுப்பு உண்டாகும். அதை கடந்து வருபவர்கள் துயரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை மறுபடியும் தொடங்குவார்கள். உன் அம்மா இப்பொழுது இரண்டாம் படிநிலையில் நிற்கிறாள். நாட்கள் ஆக ஆக மெதுவாக இந்த துயரத்தை ஏற்றுக்கொள்வாள். அதுவரையில் நீ அவளுக்கு வேண்டிய தெம்பை குடு”, என்றார்.

அவர் சொன்னது போல் அம்மா கோபமாக இருக்கும் கட்டத்தை கடந்து, சுய பச்சாதாப கட்டத்தை கடந்து, இப்போது வாழ்க்கை மேல் வெறுப்புடன் இருந்தாள். சரவணனுக்கு அவள் மெதுவாக தேறி வருவது போல் தோன்றியது. சென்னையில் இருக்கும்பொழுதெலாம் அவளுடைய நினைவாகவே இருந்தது. தினமும் இரு முறை தொலைபேசியில் அம்மாவுடன் பேசினான். பாட்டி அம்மாவுடன் இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வார இறுதியில் அவன் மதுரைக்கு வந்துவிடுவான். அம்மாவை சென்னைக்கு வருமாறு அழைத்தான். அம்மா சம்மதிப்பாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவளோ, சரி வருகிறேன், என்று சொல்லியிருந்தாள். சரவணனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒருவாறாக வாழ்க்கை மறுபடியும் சீராகச் செல்கிறது என்று அவன் நினைத்தபொழுது அந்த இடி விழுந்தது.

சனிக்கிழமை காலை மதுரைக்கு வந்த சரவணனை அவன் மாமா தொலைபேசியில் அழைத்து, “பத்து மணிக்கு வீட்டுக்கு வா”, என்றார். அவர் சரவணனை ஒரு வக்கீலிடம் அழைத்து சென்றார். இருவருக்கும் தாம் எதற்காக அங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. “வக்கீல் வரச்சொன்னாரு. ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னாரு”

வக்கீல் அவர்களை வரவேற்றார். அவருடன் இன்னொரு வக்கீல் இருந்தார். “இவர் என் நண்பர் ஆறுமுகம். திருநெல்வேலியில் வக்கீலா இருக்காரு. அவர் உங்களுடன் மிக முக்கியமான ஏதோ ஒன்ன பேசணும்னாரு.”

வக்கீல் ஆறுமுகம் சரவணனைப் பார்த்து, “தம்பி, உங்ககிட்ட நான் இதை எப்படி சொல்லணும்னு எனக்கே புரியல”. சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு,. “உங்க அப்பா அடிக்கடி டூர் போவார் இல்லயா?”, என்று கேட்டார்.

“ஆமாம்”, என்றான் சரவணன்.

“திருநெல்வேலிக்கு போவாருன்னு உனக்கு தெரியுமா?”

“தெரியும். அங்க அடிக்கடி போவாரு. எங்களுக்கு இருட்டுக் கடை ஹல்வா வாங்கிட்டு வருவாரு”

மறுபடியும் வக்கீல் மௌனமாக இருந்தார்.

“சொல்லுங்க”, என்றான் சரவணன்.

“சொல்றத நிதானமா கேளுங்க. நான் சொல்றது எல்லாம் உண்மை. அது உண்மைனு நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இருக்கு”, என்றார்.

சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. “என்ன உண்மை? என்ன நிரூபிக்க போறீங்க?”, என்று கேட்டான்.

சரவணன் தோளின் மேல் ஆறுமுகம் வக்கீல் கை போட்டு சொன்னார், “இது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் தம்பி ஆனா இது உண்மை. உன் அப்பா திருநெல்வேலியிலே வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாரு”

சரவணன் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான். அவன் மாமா வக்கீலை பார்த்து கத்த ஆரம்பித்தார். “டேய். யாரப் பத்தி என்ன சொல்ற. அவர் எந்த மாதிரி ஆள் தெரியுமா, அவர் பேர கெடுக்கறதுக்குனு திருநெல்வேலியிலேர்ந்து வந்தயாடா நீ”. கோபம் பொங்கி எழ வக்கீலை அடிக்க வந்தார்.

சரவணனின் வக்கீல் அவரைத் தடுத்தார். பிறகு ஆறுமுகத்தை பார்த்து, “ஆறுமுகம். என்னய்யா இப்படி குண்ட தூக்கி போடற? இவங்க அப்பாவுக்கு இங்க எவ்வளவு பெரிய பேரு தெரியுமா, நீ சொல்றத எங்களாள எப்படியா ஏத்துக்க முடியும்?”

ஆறுமுக வக்கீல் ஒரு மொபைல் ஃபோனை சரவணன் முன் நீட்டினார். “இதில் இருக்கும் மெசேஜ் எல்லாம் பார். நான் சொன்னது உண்மைன்னு உனக்கு புரியும்”

சரவணன் குறுஞ்செய்திகளை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு செய்தியும் அவன் அப்பாவின் உடல்நிலை பற்றி அவரே அனுப்பியது போல் இருந்தது. அவர் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவரை பார்க்கும் டாக்டர் பேர் என்ன, என்ன மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள், யாரெல்லாம் அவரை பார்க்க வந்தார்கள் என்ற விவரங்கள் அதில் இருந்தன.

“வாட்ஸ்ஆப்பும் பாரு”, என்றார் ஆறுமுகம்

வாட்ஸாப்பில் அப்பாவின் ECG, அவர் மருந்து சீட்டு ஆகியவற்றின் படங்களும், அப்பாவின் செல்ஃபியும் இருந்தன. அதில் வேறொரு பெண்மணியின் செல்ஃபியும் இருந்தது. ஒரு படத்தில் அந்த பெண்மணியுடன் ஒரு சிறு பெண் இருந்தாள்.

ஆறுமுக வக்கீல் சொன்னார், “இது அந்த அம்மாவின்  ஃபோன்”. அவருடைய பையிலிருந்து ஒரு மொபைலை எடுத்து, “இது உங்க அப்பாவோட இன்னொரு ஃபோன். இதிலிருக்கும் படங்கள பார்” என்றார்.

அந்த மொபைலில் சரவணனின் அப்பா அந்த பெண்மணியுடன் இருப்பது, அந்தச் சிறு பெண்ணை தூக்கி விளையாடுவது, லுங்கியுடன் சோபாவில் உட்கார்ந்திருப்பது, சாப்பிடுவது என்று பல படங்கள் இருந்தன.

சரவணன் அவன் மாமாவை பார்த்தான். அவருக்கு வேர்த்திருந்தது. இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவர் இப்பொழுது வாயடைத்து நின்றிருந்தார். சரவணனும் சிலை போல் நின்றிருந்தான்.

சரவணனின் வக்கீல், “ஆறுமுகம். நீ திருநவேலிலேருந்து இதை மட்டும் சொல்ல வரலைன்னு எனக்கு தெரியும். நீ வந்த விஷயம் என்ன?”, என்று கேட்டார்.

“உட்கார்ந்து பேசுவோமா”, என்றார் ஆறுமுக வக்கீல்

எல்லோரும் உட்கார்ந்தார்கள். “மூணு மாசத்துக்கு முன்னாடி, நான் அமெரிக்கா கிளம்பற நாள் அன்றைக்கு உங்க அப்பா கிட்ட அவர் எழுத சொன்ன உயிலை எழுதி கொடுத்துட்டு போனேன். நான் அமெரிக்கா போற அவசரத்துல அவர் கையெழுத்து வாங்க முடியல. “நான் படிச்சி பாத்து கையெழுத்து போட்டு வைக்கறேன்”, என்று உங்க அப்பா சொன்னாரு. நான் கிளம்பினதும் கொஞ்சம் நாளிலேயே அவர் காலமாயிட்டாரு. அந்த உயில் இப்போ எங்கே இருக்குனு எனக்கு தெரியல. ஆனா உங்க அப்பா என்னை அந்த உயில் எழுத சொன்னது உண்மை. வேணும்னா இந்த மெயில் பாருங்க,” என்று ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். பிறகு அவர் பையிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். “இது தான் அந்த உயிலோட நகல்”, என்று சரவணனிடம் கொடுத்தார்.

“என்ன எழுதியிருக்குன்னு நீயே சொல்”, என்றார் சரவணனின் வக்கீல்.

ஆறுமுக வக்கீல், “நீங்க வாடகைக்கு விட்டிருக்கும் ஒரு பெட்ரூம் பிளாட்டும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் என் கட்சிக்காரருக்கு கொடுக்கணும்னு உன் அப்பாவுடைய ஆசை”, என்றார்

சரவணன் பேசுவதற்கு முன் அவனுடைய வக்கீல், “வில் இன்னும் ரிஜிஸ்டர் செய்யலியே. இவன் அப்பா கையெழுத்து போட்டார் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. அவர் கையெழுத்து போட்ட உயிலும் உங்ககிட்ட இல்ல. இந்த கேஸ் செல்லுபடி ஆகாது”, என்றார்

“நான் உயிலை சரவணனின் அப்பாவிடம் கொடுத்ததற்கான சாட்சி இருக்கு. அங்க வேல பாக்குற நர்ஸ் நான் கொடுத்ததபாத்திட்டிருந்தா. இவன் அப்பா அதில் கையெழுத்து போடுவதையும் அவ பாத்திருக்கா. அவர் இறந்த பிறகு அந்த உயில் காணல. கோர்ட்ல வாதாட எனக்கு வேண்டிய ஆதாரம் இருக்கு”, என்றார்.

“அப்போ கோர்ட்ல பாத்துப்போம்”

ஆறுமுகம் நிராசையுடன் கிளம்பினார். சரவணனும் மாமாவும் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தனர். மாமா சோர்வாக இருந்தார். “உங்க அம்மா கிட்ட இத எப்படி சொல்றது? அவ உடைஞ்சி போயிடுவா”, என்றார். சரவணனால் இந்த செய்தியை இன்னும் நம்ப முடியவில்லை. “அப்பா எப்படி மாமா அப்படி பண்ணாரு?”. இருவரிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை.

அவர்கள் நினைத்தது போல் அம்மா செய்தியை கேட்டு அதிர்ந்து போயிருக்க வேண்டும், ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தாள். அவள் மௌனம் சரவணனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பாட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அப்பாவை வைய ஆரம்பித்தாள். ஓ என்று கதறி அழுதாள். அன்று மாலை பெரியப்பா, சித்தப்பா மற்றும் அத்தை வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் ஒரு பூகம்பம் வெடித்தது. பாட்டி அவர்கள் எல்லோரையும் திட்ட, அவர்கள் பதிலுக்கு திட்ட அவர்கள் குடும்பங்களுக்கு நடுவே உறவு முறிந்து போனது.

சரவணன் உடைந்து போயிருந்தாலும் அவன் அம்மா உடையவில்லை. “நாம எதுக்குடா வெட்கப்படணும்? நாம வேண்டியத எல்லாம் கொடுத்தோம். அந்த மனுஷன் புத்தி அப்படி போச்சுன்னா நாமா பொறுப்பு. ஊர் வாய்க்கு பயந்து வீட்லையே கிடக்காத. தல நிமிர்ந்து வெளியே போயிட்டு வா.” இதை சரவணனிடம் சொன்னதோடு அல்லாமல், அப்பா இறந்த பிறகு வெளியே செல்லாத அம்மா இப்பொழுது வெளியே செல்ல ஆரம்பித்தாள்.

ஒரு மாதம் கழித்து ஊரில் எல்லோரும் இதை மறந்துவிட்டிருந்தார்கள். மறுபடியும் வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டது என்று சரவணன் எண்ணும்போது அடுத்த குண்டு விழுந்தது.

ஒரு நாள் அதிகாலை பெரியப்பா, சித்தப்பா, அத்தை எல்லோரும் சரவணன் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அத்தை, “ஐயோ. ஐயோ. பணத்துக்கு ஆசப்பட்டு என் அண்ணனை கொன்னுட்டியேடா”, என்று சரவணனின் சட்டையை பற்றிக்கொண்டு உலுக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. அத்தையின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

கூச்சல் எல்லாம் சற்று ஓய்ந்த பிறகு நடந்தது என்ன என்று தெரிய வந்தது. சரவணனுக்கு அவன் அப்பாவின் துரோகம் முன்பே தெரிந்து விட்டதாகவும், அவன் தான் அப்பாவை கொன்றுவிட்டான் என்றும் யாரோ புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்த சண்டையை பற்றி கேள்விப்பட்ட சரவணனின் வக்கீல் அவன் வீட்டுக்கு வந்தார். அவர் பெரியப்பாவை பார்த்து, “உங்களுக்கு இவ்வளவு வயசாகியும் எந்த விஷயமும் நிதானமா யோசிக்கணும்னு தொணலையா? யாரோ சொன்னாங்கன்னு அநியாயமா இந்த பையன் மேல இப்படி ஒரு பழிய போடறீங்க. இத பாருங்க. நடந்தது இதுதான். மதியம் ஒரு மணி வரை சரவணன் அவன் அப்பாவுடன் இருந்தான். அவன் கிளம்புற வரையிலும் காத்திருந்த திருநெல்வேலி வக்கீல், அவன் கிளம்பியதும் அறைக்குள் வந்து சரவணனின் அப்பாவிடம் ஒரு பத்திரத்த கொடுத்திருக்காரு. இத ஒரு நர்ஸ் பாதிருக்கா. அப்புறம் சரவணன் அம்மா வந்து அப்பா நிலைமை மோசமாயிட்டதைப் பாத்து அழுது டாக்டரைக் கூப்பிட வீட்டுல இருந்த சரவணனை போன் பண்ணி சொல்லியிருக்காங்க. அப்பா இறந்த சமயம் சரவணன் அங்க இல்ல. நீங்க இப்படி பேசி ஒரு சின்ன பையன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க. உங்களுக்கெல்லாம் வெக்கமா இருக்கணும்”, என்று கூறிவிட்டு எல்லோரையும் அங்கிருந்து வெளியே அனுப்பினார்.

அந்த சம்பவத்துக்கு பிறகு சரவணன் வெகுவாக மாறிவிட்டான். எல்லோருடன் கலகலப்பாக பேசுபவன் இப்பொழுது மௌனமாக இருந்தான். அம்மாவும் மாமாவும் எவ்வளவு சொல்லியும் வேலையை விட்டுவிட்டான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளித்தான். சில வேளைகள்  சாப்பிட மறுத்தான். அவன் டீப் டிப்ரெஷனில் இருப்பதாக டாக்டர் சொன்னார்.

ஒரு நாள் மதியம் மாமா சரவணனிடம், “சரவணா, நமக்கு நல்ல காலம் பொறக்கப் போகிறது. இன்னிக்கி ராத்திரி நாம நாகர்கோவிலுக்கு புறப்படுறோம். அக்கா நீயும் எங்களோட வர”, என்றார்.

“நாகர்கோவில்ல என்னடா?”

“அங்க ஒரு மாந்த்ரீகன பாத்திருக்கேன். அவர் ஆவிகள வரவழைப்பாராம். மாமா ஆவிய வரவழைச்சு அவர் கிட்டயே அவர் ஏன் இப்படி செஞ்சார், எப்படி செத்தார், உயில் விஷயம் என்னன்னு கேட்டுடலாம். அவர் சொன்னா எல்லார் வாயும் மூடவேண்டியதுதான். அதுக்கப்புறம் யாரும் அத பத்தி பேசக்கூடாது”

பீதி கலந்த குரலில் அம்மா கேட்டாள், “ஏன்டா. ஆவி பேய் பிசாசுன்னு இதெல்லாம் எங்கடா போய் முடியும். இதெல்லாம் நல்லதுக்காடா?”

மாமா பதில் சொல்வதற்கு முன் சரவணன், “நாம போலாம் மாமா. நா என் அப்பாவோட பேசணும்”, என்றான். அவனுக்கு இப்பொழுது புதிதாக தெம்பு வந்திருந்தது.

அன்று மாலை சரவணன், அவன் அம்மா, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை என்று எல்லோரும் நாகர்கோவில் கிளம்பினார்கள். நாகர்கோவிலில் மாந்த்ரீகனை பார்த்ததும் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. பரட்டை முடியுடன், வெள்ளை தாடியுடன் வயதான ஒருவரை எதிர்பார்த்த அவர்களுக்கு முன் காவி வெட்டி உடுத்திய ஒரு இலைஞன் நின்றுக்கொண்டிருந்தான்.

“எங்க அப்பா ஆவிய உங்களால வர வைக்க முடியுமா. நான் அவரோட பேசணும்” என்று சரவணன் அவனிடன் கேட்டான்.

மாந்த்ரீகன் சற்று நேரம் ஆகாயத்தை உற்றுப் பார்த்தான். பிறகு, “ஆவிகளை எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியும். ஆவிகள் என் அழைப்பை கேட்டு வரும் என்ற உத்தரவாதத்தை என்னால் குடுக்க முடியாது. அவர் வந்தா அது உங்க குடுப்பினை”, என்றான்.

அன்று இரவு எல்லோரும் ஒரு பெரிய அறையில் கூடினார்கள். அறை நடுவில் ஒரு ஹோமகுண்டம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் வரட்டியும் விறகுகளும் இருந்தன. ஒரு பெரிய பாத்திரம் முழுக்க நெய் வைக்கப்பட்டிருந்தது. சந்தனமும் குங்குமமும் தடவிய இரண்டு பெரிய குத்துவிளக்குகள் இரண்டு பலகைகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்தன. ஹோமகுண்டத்தின் அருகில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த பெரிய பலகையில் மாந்த்ரீகன் உட்கார்ந்தான். குத்துவிளக்குகளுக்கு அருகில் உள்ள பலகைகளில் சரவணனையும் அவன் அம்மாவையும் உட்கார சொன்னான். மற்ற உறவினர்களை சற்று தூரத்தில் உட்கார சொல்லிவிட்டு, “இத பாருங்க. ஆவி வந்தா சரவணனும் அவன் அம்மாவும் மட்டும்தான் பேசணும். வேற யாரும் பேசக்கூடாது. வேற யாராவது பேசினா என்ன ஆகும்னு என்னால சொல்ல முடியாது”. பிறகு சரவணனையும் அவன் அம்மாவையும் பார்த்து, “எந்த காரணத்துக்காகவும் நீங்க ஆவியோட பேச வேண்டாம்னு நினைச்சா குத்துவிளக்க தள்ளிவிடுங்க. அதை தள்ளினா ஆவி மறஞ்சிடும். பிறகு அழைச்சாலும் வராது” என்றான்.

மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும் அறை முழுவதும் இருள் கவிந்தது\. எல்லோருக்கும் பயமாக இருந்தது. மாந்த்ரீகன் ஹோமகுண்டத்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் வெளிச்சத்தில் சரவணனின் கண்களில் இருந்த எதிர்பார்ப்பும், அவன் அம்மாவின் கண்களில் இருந்த பீதியும் நன்றாக தெரிந்தது.

மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மாந்த்ரீகன் தீயை வளர்த்தான். அக்னி ஜ்வாலை மேலெழுந்தது. நெய் ஊற்ற ஊற்ற தீ உயர்ந்தது. மாந்த்ரீகனின் குரல் உயர ஆரம்பித்தது. எல்லோரும் தீக்கு கட்டுப்பட்டவர்கள் போல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மெதுவாக தீயில் ஏதோ உருவம் தெரிவது போல் இருந்தது. இதை கண்ட சரவணனின் கண்கள் பிரகாசமடைந்தன. எல்லோரும் நிமிர்த்து உட்கார்ந்தார்கள். பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லோர் கண்களிலும் தெரிந்தது. மாந்த்ரீகன் நெய் ஊற்றி மந்திரங்களை உரக்கச் சொல்ல,  “அப்பா” என்று சரவணன் உரக்க கத்தினான். எல்லோரும் நெருப்பில் தோன்றிய முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

“அப்பா” என்று சரவணன் மறுபடியும் அழைத்தான்.

அந்த முகம் சரவணனை உற்று நோக்கியது. “நீங்கதானா அப்பா?”. சரவணன் நம்ப முடியாமல் கேட்டான்.

உருவம் தலையசைத்தது

சரவணனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. அவன் அம்மாவை பார்த்தான். அவள் கோபமாக நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரவணனுக்கு அவள் முகத்தை பார்க்க பயமாக இருந்தது.

அவன் மறுபடியும் அந்த உருவத்தை பார்த்து கேட்டான், “அப்பா. உங்கள யாரோ கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையா?”

அந்த உருவம் குலுங்கிக் குலுங்கி ஆழ ஆரம்பித்தது. இவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை என்றாலும், அந்த உருவம் அழுவது நன்றாக தெரிந்தது. உறவினர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மாந்த்ரீகன் அவர்களை நோக்கி முறைத்த பிறகு அங்கு அமைதி நிலவியது.

சரவணன் ஆச்சரியமும் பயமும் கலந்த கண்களுடன் அந்த உருவத்தைப்  பார்த்தான். மெதுவாக உருவம் அழுவதை நிறுத்தியது. சரவணன் அதை நோக்கி, “அப்பா, உங்கள கொன்னது யார்?”, என்று கேட்டான்.

குனிந்த தலையை அந்த உருவம் நிமிர்த்தும்பொழுது அம்மாவின் முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு கீழே விழுந்து உருண்டது. நெருப்பில் தெரிந்த உருவம் மெல்ல மறைந்தது.

 

 

 

அகம்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் 

சுஜன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். ஒரு பக்கம் ஒதுங்கியதாக கதவு. மறுபக்கம் நீண்ட திண்ணை நான்கு தூண்களுடன். தூணைப் பிடித்துக்கொண்டு சுற்றி வருவது சுஜனின் வழக்கம். அன்று விளக்கு வைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மாடத்தில் இன்னும் விளக்கு ஏற்றப்படவில்லை. வாசலிலேயே உட்கார்ந்திருக்க முடிந்ததே ஒழிய உள்ளே செல்ல சற்றும் மனமில்லை. வாசலையே பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

உள்ளே அம்முனி அத்தை பேசும் சப்தம் கேட்டது. இரைஞ்சும் சப்தம் எனலாம். கேட்டதுதான் தாமதம் சுஜன் திண்ணையில் எழுந்து நின்று இரண்டடி பின்னே போய் சிறு ஓட்டம் எடுத்து ரோட்டில் குதித்தான். சுவரோரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்தான். விசுக் விசுக் கென்று முதலில் மிதிக்கையில் கொஞ்சம் உழட்டும், கொஞ்சம் வேகமெடுத்தப் பிறகு பெடலை கால் இயக்குகிறதா காலை பெடல் இயக்குகிறதா எனத் தோன்றும் மிதப்பு. லகுவாக கணபதி செட்டியார் ஸ்கூலை கடக்கும் போதுதான் தான் எங்கு செல்ல வேண்டும் என முடிவெடுக்கவில்லை எனும் நினைவு வந்தது. சுரேன் ஷாகுல் நிம்மி கௌதம் ஒவ்வொரு நண்பன் வீடாக நினைவுப்படுத்தி விலக்கினான். சரி சைக்கிள் விட்ட திசை செல்வோம் என்று நேராக ஒத்தைத் தெருவின் எல்லையில் தெருவை நோக்கி அமைந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒற்றை தீபம் மங்கலாக ஒரு மஞ்சள் ஒளி பரப்பாக சிறு புள்ளியாக, மாடத்தில் வேனி அக்கா அகல் ஏற்றுகையில் சிறுபுள்ளியாக அவள் முக்குத்தி மினுங்குவது போல ஒளிர்ந்தது. ஒத்தை தெரு பெருசு என்று தோன்றியது.

விசுவநாதர் ஆலயம் வந்ததும்தான் அங்கு பெரிய மாமா கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். யாருமற்ற கோயில். காசி விசுவநாதர் தன்னை அமைதியில் உடுத்திக்கொண்டு அமர்ந்திருப்பதாய் தோன்றும் அமைதி. சைக்கிளை கோயிலை ஒட்டி நிற்கும் வில்வ மரத்தில் சாய்த்தான். அருகிலிருக்கும் சிறு குளத்தில் காலை கழுவிவிட்டு கோயில் கல்நிலைப்படியில் கால் வைக்காமல் தாண்டிச் சென்றான். சிறு ஆலயம் ஒரு சுற்றுப் பிரகாரம் விசுவநாதரைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியை ஒட்டி பெரிய மாமா தியானத்தில் அமர்ந்திருந்தார். நான் வந்திருப்பதை மாமா அறிந்திருப்பாரா என யோசித்தபடி சப்தமெழாமல் அடி வைத்து அவர் முன் சென்று அமர்ந்தான். முகத்தில் சிரிப்பில்லை ஆனால் மலர்ந்திருந்தது. மாமா என்று மெல்ல உதட்டை மட்டும் அசைத்தான். சுஜனுக்கு சிரிப்பு வந்தது அங்கு அவ்விதம் கண்மூடி அமர்ந்திருக்கும் மாமா முன் அவர் அறியாமல் அமர்ந்திருப்பதை நினைத்து. மாமா எதை யோசித்துக் கொண்டிருக்கிறார் ? ஒருமுறை கேட்டான் அவரிடம். அன்று ஊரின் பெரிய கோயிலான ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு மாமாவுடன் சென்றிருந்தான்.

“கண்ணமூடி உக்கார்ரப்ப எத பத்தி யோசிப்பீங்க மாமா?”

மாமா மேல் சட்டை அணிவதில்லை. அவன் அறிந்து அவர் மேல் சட்டை அணிந்தே பார்ததில்லை. இடையில் ஒரு வேஷ்டி. இடைசுற்றியோ எப்போதாவது தோளிலோ கிடக்கும் காவித் துண்டு. தரிசனம் செய்யப்போகையில் இடைசுற்றி இருக்கும். முடிந்தபின் தோளில் தளர்வாக கிடக்கும். அப்போது இடையில் சுற்றியிருந்தது.

“எதையுமே யோசிக்கக்கூடாதுங்கறதுதான் நோக்கம்”

“எதுவுமே யோசிக்காமையா… அப்டி இருந்தா என்ன ஆவும்?”

சிரித்தபடி “எனக்கு அப்டி இருக்க பிடிச்சிருக்கு.உனக்கு விளையாட பிடிக்குமில்லையா அதுமாதிரி.”

கோயில் யானை நின்றிருந்தது. சின்ன பையன் போல் சுஜனின் அதே துடிப்புடன் தலை உடலை அலைத்தபடி நின்றிருந்தது. மாமாவைப் பார்ததும் பாகன் “வணக்கம் சாமீ” என்றான். மாமா பதிலுக்கு புன்னகை வீசினார்.

“மாமா இந்த யான தியானம் பண்ணுமா?”

மீண்டும் சிரித்தபடி, “அதுக்கு தியானம் தேவையில்ல. அதோட விளையாட்டுகல்ல தியானங்குற விளையாட்டுகான தேவையில்ல” என்றார்.

அதற்குள் சன்னதிக்குள் வந்துவிட்டார்கள். அன்று சுஜன் சரியாக தரிசிக்க வில்லை. அங்கும் இங்கும் பார்வை பார்த்தபடி நின்றுவிட்டு வெளியே வந்தான். ஆனால் ராகோபாலசுவாமியின் முகம் அவனுக்கு மிகவும் பழகிய முகம். கண்கள் மூடி சாந்தமான முகம். காசி விசுவநாதர் மனித ரூபமில்லையென்றாகும் லிங்க ரூபமாக இருக்கும் அவரிலும் ஒரு சாந்தம். தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் அம்மனும் சாந்தம். திருவாரூர் தியாகராஜரும் சாந்தம். ஆனால் தஞ்சாவூர் ரோட்டிலுள்ள கீழ்கனபட்டியில் இருக்கும் அவர்கள் குல தெய்வமான வீரன் கையில் அரிவாளுடன் உக்கிரமான முகம் கொண்டு நிற்கும். லாடமுனியும் கோபாவேசத்துடன் நிற்பவர். கருப்பனும் அப்படித்தான். பெரியாச்சி ஒரு பெண்ணை மடியிலிட்டு தொப்புல்கொடியை வாயில் கடித்துக் கொண்டிருப்பவள். ஒரு கையில் குழந்தையை பிடித்திருப்பாள். பாதத்தில் ஒரு மனிதனை மிதித்துக் கொல்லும் கோலம். காட்டேறி கருமை நிறம் கரிய ஆடை கோர பற்கள் நீள ஒரு கையில் தீச்சட்டியுடன் நிற்பவள். அந்த வீரன் கோயிலே கோரமானதுதான். வாசலில் நிற்கும் இரண்டாளுயர குதிரையும் அதன் அருகில் நிற்கும் குதிரைக்காரனும் அருகிலிருக்கும் நாய் சிலையும் கோரமானதுதான். இரவில் அக்கோயிலை நினைக்கவே பயமாயிருக்கும், ஆனால் அக்கோயிலில் வீரன் சிலைக்கு அருகிலேயே இருக்கும் சப்த கன்னியர் மட்டுமே சாந்தமாக அமர்ந்திருப்பார்கள். சுடரொளியில் பார்க்க மனம் நிறையும்.

மாமா அன்று சாந்தமாக அமர்ந்திருப்பதாக தோன்றியது. மாமா எப்பொழுதுமே சாந்தம்தான். எப்போதாவது கோபப்படுவார். அது மற்றவரை சரிப்படுத்த மட்டுமாகவே இருக்கும். மாமா அன்போடு கோபப்படுவதாய் சுஜனுக்குத் தோன்றும். அவன் எதிர்பாராத கணம் மாமா கண் விழித்தார். பேச மனமில்லாதவர்போல் எழுந்து சைகையில் வா என்றார். அவன் உடன் சென்றான். நந்திக்கு பின் புறமிருந்து விசுவநாதரை தரிசித்துவிட்டு நெடுஞ்ச்சான் கிடையாக விழுந்து வணங்கினார். எழுந்து அவனைப் பார்த்தார். அவனும் விழுந்து வணங்கினான்.

“சைக்கிள எடு. வீடுக்குப் போவொம்.” என்றார்.

மாமா எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார். அவர் இல்லம் காசி விசுவநாதர் ஆலயம்தான். இப்பொழுது ஏன்.. அதுவும் இப்போது போய் ஏன் வீட்டிற்கு ?

“ராஜகோபாலசுவாமிய பாத்துட்டு வரலாமே” என்றான்.

“பாக்கலாம் இப்ப வீட்டுக்கு போயே ஆகணும். ஓட்டு சைக்கிள”

“எனக்கு டபுள்ஸ் பெரியவங்கள வச்சு ஓட்ட வராதே”

சிரித்தபடி “அதெல்லாம் வரும் விட்றா” என்றார்.

“கீழ போட்டுருவேன்”

“விழுந்தா நம்ம ரோடு விழுவோமே” என்றார்.

“இப்ப வீட்டுக்கு வேணாமே வேறெங்காவது போலாமே” என்றபடி அவன் உந்தி சீட்டில் அமர்ந்ததும் சற்று தள்ளிவிட்டு, கடைசியாக ஒரு உந்தலுடன் ஏறி அமர்ந்தார். சுஜனுக்கு மகிழ்ச்சியானது தான் மாமாவை வைத்து சைக்கிள் ஓட்டுவது. யாராவது பார்க்கிறார்களா என மனம் தேடியது, வேனி அக்கா பார்க்கவேண்டும். சின்ன அம்மு பார்க்க வேண்டும் . சிரித்தபடி மிதிவண்டியை விட்டான். மீண்டும் கணபதி செட்டியார் ஸ்கூலை கடந்த போது நாம் ஏன் முதலில் வீட்டிலிருந்து கிளம்பினோம் என நினைவுக்கு வந்தது. அம்முனி அத்தையின் இரைஞ்சும் சப்தம். அதற்குள் வீடு அணுகி விட்டது. நாலு வீட்டிற்கு முன்னாடியே அம்முனி அத்தையின் பேரோலம் கேட்டது. கூடவே அதிர்ந்தெழும் கோபக் குரல்களும் இரைச்சல்களும். சைக்கிளை நிறுத்துவதற்குள் மாமா குதித்து இறங்கினார்.

சைக்கிளை மீண்டும் சுவரோரம் சாய்த்துவிட்டு திண்ணையில் விளக்கு மாடம் ஒட்டி அமர்ந்துகொண்டான். உள்ளே பாத்திரம் உருளும் சப்தமும் மனிதர்கள் போடும் இரைச்சலும் அதிலும் அம்முனி அத்தையின் கீச்சுச் குரல் சுருதி கலைந்த கம்பி வாத்தியம் போலிருந்தது. சின்ன மாமா கத்துவது அவ்வப்போது தெளிவாகக் கேட்டது. ஆனால் முழு வாக்கியங்களை உருவாக்கும் நிலையை அவ்வில்லத்தார் அன்று கடந்துவிட்டிருந்தார்கள். சுஜனுக்கு இது சற்று பழக்கமாகிவிட்டாலும் பதற்றம் என்னவோ முதல் முறை போலவேதான் இருந்தது. அவனால் இச்சச்சரவுகளின் காரணிகளை அறிந்து கொள்ளமுடியவில்லை. தாத்தா பாட்டி மூன்று மாமாக்கள், மூவருக்கும் மூத்த மாமாக்குத்தான் விசுவாநாதர் ஆலயத்தில் வாசம், மூன்று அத்தைகள், தஞ்சாவூர் சித்தி கும்பகோணம் சித்தி, மூன்று மாமாக்களின் பிள்ளைகள் என பெரிய குடும்பம் பெரிய வீடு. மாதமொருமுறை வந்து போகும் அத்தர் விற்கும் நசீம் பாய் போல தவறாமல் ஒரு பெரிய சண்டை.

போனமுறை நன்றாக நினைவுள்ளது சுஜனுக்கு. சுஜன் சின்ன அம்மு முத்து சபரி சுபி என வாண்டுகளாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இட்லி வரத்து கொஞ்சம் தாமதமானது. இது பற்றிதான் அம்முனி அத்தையிடம் தஞ்சாவூர் சித்தி எதோ கேட்கப் போனாள். இட்லி பற்றித்தான் துவங்கியது. வாக்கியங்கள் முழுமையாக உச்சரிக்கப்பட்டன. ஒருவர் பேசி முடிப்பதற்குள் கடைசி இரண்டு மூன்று வார்த்தைகள் மிச்சமிருக்கையிலேயே மற்றவர் பேசத் துவங்குவார். ஸ்கூலில் கண்ட ரிலே ரேஸ் நினைவுக்கு வந்தது சுஜனுக்கு. ஆனால் பேசுபொருள் இட்லியிலிருந்து வெவ்வேறு விஷயங்களுக்கு மாறியது. கொஞ்சம் உயர்ந்த குரல்கள். வழக்கமாக அம்முனி அத்தைதான் கீச்சுக் குரலில் எல்லைமீறிய ஒரு ஓலத்தை எழுப்பியபின் வாக்கியங்களை அமைப்பாள். பின் வெறும் இரைச்சல். அவ்வளவு இரைச்சலிலும் ஒருவர் சொல்வதற்கு மற்றவர் பதிலுரைப்பது போலத்தான் இருக்கும்.

அன்று அம்முனி அத்தை சித்தியை அறைந்துவிட்டாள் பேசிக் கொண்டிருக்கையிலேயே. பின் இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு கோரமாக சண்டையிட்டார்கள். பாட்டி வேனி அக்கா மற்றோரு சித்தி தடுக்க முயன்றார்கள். சின்ன அத்தை தன் அறை வாயிலிலிருந்து வெறுமனே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். சின்ன அம்மு முதலில் அழத் தொடங்கினாள். தொடர்ந்து முத்துவும் சுபியும் இணைந்து கொண்டார்கள். அப்போதுதான் சின்ன மாமா நுழைந்தார். அம்முனி அத்தையை அறைந்து இழுத்து தள்ளினார். அத்தை மறுப்புக்கு நீர் அண்டாவை மூடியிருந்த தாம்பாலத்தை எடுத்து நெட்டுக்குத்தாக வீசினாள். மாமாவின் முகத்தில் ஒரு நிரந்த வடு அன்று உருவானது. இரத்தம் வழியும் முகத்தோடு “உன்ன கொண்ணுருற்றண்டி” என முத்தத்தில் இரங்கி மறு பக்கமிருக்கும் அறைக்குள் ஓட முயன்ற அத்தையை துரத்திப் பிடித்தார், அத்தை வேகுவேகனப் பிராண்டினாள் மாமாவின் கைமுகழுக்க. மீண்டும் அறைந்து தள்ளி கழுத்தை நெரித்தார். அம்முனி அத்தையின் கண்முழிப் பிதுங்கியது. பாட்டி விட்டுற்றா விட்டுற்றா என்று அலரினாள். வேனி அக்கா சித்தப்பா விட்று சித்தப்பா எனக் கெஞ்சினாள். அத்தையின் கருவிழி மேலேறிக் காணாமல் போனது.

அப்போதுதான் ஒரு பலமான அடி ஒன்று சின்னமாமாவின் பிடறியில் விழுந்தது. ஆறடி உயரம் நிற்கும் சின்ன மாமா நிலை குலைந்து விழுந்தார். சித்தி இன்னும் அடங்கிய பாடில்லை. அவளை நிறுத்தும் வழி ஒன்றே. அவள் சக்தியெல்லாம் தீர்ந்து போக வேண்டும். அம்முனி அத்தைக்கும் அப்படித்தான் சின்ன மாமாவின் கழுத்து நெரிப்பொன்றே அவளை பேசச் சக்தியின்றியாக்கும். பெரிய மாமா சித்தியை நோக்கி வந்து கன்னத்தை ஏந்தினார். அவள் வார்த்தைகள் அர்த்தமின்றி வந்துகொண்டிருந்தது. “தங்கம்மா இங்க பாரு.. சரி சரி விடு என்றார்” அவள் தொய்ந்து பெரிய மாமாவின் மீது சாய்ந்தாள். அழுதவளை சறறு தட்டிக் கொடுத்து முற்றத்தின் பக்கம் உட்கார வைத்தார். அம்முனி அத்தை பிராணனின்றிக் கிடந்தாள். பெரிய மாமா கைபிடித்துப் பார்த்து பின் நீர் தெளித்தார். அத்தை மெல்ல கண் திறந்தாள். திறந்தவுடன் அழவும் செய்தாள். வீடு ஓய்ந்தது மெல்ல. ஆனால் காற்றில் ஓலத்தின் அதிர்வுகள் இன்னும் இருப்பதாய்த் தோன்றியது சுஜனுக்கு.

இன்றும் அதே போல்தான் எனப் பட்டது. உள்ளே பெரிய மாமாவின் அதட்டும் குரல்கள் கேட்டது. இன்று மற்ற மூன்று மாமாவும் வீட்டிலிருந்தார்கள். பிரச்சனை ரொம்பவும் பெரிதுதான். ஓலங்கள் சபிக்கும் குரல்களாக மாறியது. கைக்கலப்பு இல்லை எனத் தோன்றியது சுஜனுக்கு. “சின்ன குட்டி நீ வெளிய போ.. சுஜன் அங்க இருக்கான் பாரு அவங்கிட்ட போ” என்று கூறும் பெரிய மாமாவின் குரல் கேட்டது. சின்ன அம்மு வெளியே வந்தாள். சுஜனுக்கும் சின்னவள். அவள் முகத்தில் கீறல்களும் காயங்களுமிருந்தது. சுஜன் அவளை கையைப் பிடித்து அமர வைத்தான். “ஏய் பாப்பு என்ன ஆச்சு? யாரு?” என்றான். சின்ன அம்மு எதுவும் சொல்லும் நிலையில் இல்லை. பதற்றத்தில் சிறிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

சுஜன் அம்முவின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டு அருகில் அமர்ந்தான். உள்ளே உச்சஸ்தாயி நோக்கி சென்றது. உள்ளே தள்ளுமுள்ளு நடப்பது குரல்களிலேயே தெரிந்தது. மல்லுக் கட்டும் குரல்கள். அறிவு, வார்த்தை என ஒவ்வொரு எல்லையாக மீறி வெறும் உடல்கள் வெறுப்பின் உருவாக நின்று ததும்புவதன் ஒலி. பின் மடீர் மடீர் எனும் ஒலி. சிவனின் கோபம்தான் இடி என்பார் மாமா. இது பெரிய மாமாவின் அடிதான் என சுஜனுக்குப் புரிந்தது. யாருக்கு விழுகிறது. இம்முறை ஒரு பெண்ணுக்கும் விழுந்தது என்பது தொடர்ந்து வந்த குரலில் தெரிந்தது. மாமா கை ஓங்கினால் பின் மெல்ல அமைதி வரும். இன்னும் ஓயாத ஒரு அமைதி. பேரிரைச்சல் நீங்கும் ஒரு அமைதி.

பெரிய மாமா வெளியே வந்தார். கையில் ஒரு கிண்ணம். “சின்ன குட்டி” என்றவரிடம் மேலும் அழுதபடி சின்ன அம்மு பாய்ந்து கட்டிக்கொண்டாள். கிண்ணத்தை தின்னையில் வைத்துவிட்டு , குழந்தையை அணைத்துக்கொண்டார். சின்ன அம்முவை திண்ணைக்கட்டையில் அமர வைக்கப்பனவர் முழுதும் இருட்டிவிட்டதை உணர்ந்து “வேனிம்மா… ” அதற்குள் வேனி அக்கா கையில் அகலுடன் வந்தாள். அகலை விளக்கு மாடத்தில் வைத்தாள். விளக்கில் ஒளிரும் மூக்குத்தியுடன் அகல் சுடரை தூண்டி நிற்கும் வேனி அக்காவைப் பார்த்தபோது சப்த கன்னியரை நினைத்துக்கொண்டான் சுஜன். விளக்கொளியில் பெரிய மாமா அம்முவின் காயங்களுக்கு மருந்திட்டார். அம்மு இன்னும் கையில் ஏந்திய கோழிக் குஞ்சைப் போல நடுங்கிக் கொண்டிருந்தாள். வேனி அக்கா அழுதபடி மாமாவின் தோளில் சாய்ந்து கொண்டாள். சுஜனுக்கும் அழத் தோன்றியது. மாமா சிரிக்கும் முழியை உருட்டி அழக்கூடாது என செய்கை செய்தார். தோளில் சாய்ந்திருக்கும் வேனி அக்காவிடம் “வேனிம்மா அழக்கூடாது. எல்லா சரியாப் போவும்.” அக்கா மேலும் தேம்ப “ஆச்சுஆச்சு… கிளம்பும்ங்க நாம் ராஜகோபாலசுவாமிய போய் பாத்துட்டுவருவோம்” என்றார். சுஜனுக்கும் துருதுருவென ஆடும் கோயில் யானையை பார்த்தால் தேவலாம் போன்றிருந்தது.

கடவுளுக்கு கண்ணில்லை – ஒரிய மொழி- பிரதிப்தா குமார் மிஸ்ரா ஆங்கிலம் : லீலாவதி மொகாபத்ரா ,கே.கே. மொகாபத்ரா தமிழில்: தி.இரா.மீனா

 

தி. இரா. மீனா

 

கடவுளுக்குக் கண்ணில்லை. ஆமாம். இல்லைதான். பரம ஏழையான என் மீது அவன் காட்டும் வன்மத்தை வேறு எப்படிச் சொல்ல முடியும்? கடவுள் இப்படிச் சொல்லியிருப்பார்; “ சக்ரா ! என்னைக் குறை சொல்லாதே! ரயில் நிற்கும்போது எல்லா கம்பார்ட்மெண்டுகளுக்கும் நீ போக முடியாததற்கு நான் என்ன செய்வேன்?” என்று. ஆனால் என் பதில் இப்படியிருக்கும்: கடவுளே! நீ எப்படி இரண்டு முகம் கொண்டவனாக இருக்கிறாய்? பரத்தை எடுத்துக் கொள். அவனுக்கு ஒரு கண்ணில் பார்வை இருப்பதால் அவனால் முழு ரயிலுக்குள்ளும் போக முடிகிறது .காலியான இடங்களுக்குப் போய் நேரத்தை விரயம் செய்யவேண்டிய அவசியம் அவனுக்கில்லை. ஏன் என்னை முழுக் குருடனாகப் படைத்தாய்? பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஜனங்கள் இருப்பதாக நினைத்துக் காலியான சீட்டுகளுக்குப் போய் நிற்கும் நிலை எனக்கு. பரத் ஒருநாளைக்கு ஆறு ரூபாய் சம்பாதிக்கிறான். எனக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனாலும் நீ கடவுள் என்ற பெருமையை எடுத்துக் கொள்கிறாய். இதுபோக எந்தச் சண்டை வந்தாலும் அவனுக்கு நீ சாதகமாக இருக்கிறாய். போகட்டும். நான் பரத்தைப் போல கெட்டிக்காரனில்லை.ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான்  எனக்குக் குறைவாய்க் கிடைக்கிறது. நியாயம்தான். பத்து, பன்னிரண்டு வயதில் ஒரு சிறுவன் என் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாக் கம்பார்ட்மெண்டுகளுக்கும் என்னைக் கூட்டிக்கொண்டு போக நீ உதவ வேண்டும் என்று நான் உன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டேனே! அந்தச் சிறுவன் செய்ய வேண்டியதெல்லாம் என்னை அழைத்துக்கொண்டு போகவேண்டியதுதான். நான் பேச்சில் கெட்டிக்காரன். “கனவான்களே! எஜமான்களே! இந்தக் குருடனுக்கு காசுகொடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் என்று சொல்வேன்”, என்ற என் பிரார்த்தனை  உன் காதில் விழுந்ததா? ஏன் விழவில்லை?

ரயில் ஸ்டேஷனில் நிற்கும்போது எல்லாக் கம்பார்ட்மெண்டுகளுக்கும் என்னை அழைத்துச் செல்ல வழிகாட்டி யாருமில்லை.சரி. ஒப்புக் கொள்கிறேன். இந்த பிளாட்பாரத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு பத்துத் தூண்கள் உள்ளன.“ இதில் ஒரு தூணை எடுத்துக் கொண்டு நீ அங்கேயே இருக்க வேண்டும். வேறெங்கேயாவது உன்னைப் பார்த்தேன் என்றால் இங்கிருந்து ஒரேயடியாக உன்னைத் துரத்திவிடுவேன்” என்று ஒரு போலீஸ்காரன் சொன்னான். நான் போவதற்கு முன்னாலேயே நல்ல தூண்கள் இருக்குமிடத்தை மற்றவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். தங்களுடைய கம்புகள், சாக்குகள், பாத்திரங்கள் ஆகியவற்றை அந்த இடத்தில் வைத்துத் தங்கள்  உடைமையாக்கிக் கொண்டு விட்டனர். கடைசித் தூண் தான் எனக்குக் கிடைத்தது. அதுவும் பரத் சொல்லித்தான் தெரிந்தது. நான் வந்த நாளன்றே அங்கு போகும்படி அவன்தான் சொன்னான். வந்தது முதல் அங்குதானிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கும். நேற்று பரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்,

“பரத்! ஏன் எப்போதும் என் வருமானம் ஒரே மாதிரியாக இருக்கிறது?”

“உன் தூண் எதிரில் சரக்கு கம்பார்ட்மெண்ட்தான் நிற்கும். அதில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் உனக்குக் காசு போட யாருமில்லை.”

“இது நியாயமில்லை. எது நல்ல இடமென்று எனக்குத் தெரியாது. நான் குருடன். ஆனால் கடவுளுக்கு இரக்கமில்லை. நான் கேட்பது சிறிய உதவிதான் என்று அவருக்குத் தெரியாதா? என் தூண் முன்பாக மனிதர்கள் இருக்கும் கம்பார்ட்மெண்ட்டை நிற்கச் செய்வது அவர் வேலையல்லவா?” என்றேன்.

இரவு முழுவதும் சக்ரா தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். நல்ல தூக்கமில்லை. கோபமாக கடவுளோடு மோதிக் கொண்டிருந்தான்.எனக்குக் கை,கால், மூக்கு, காதுகள் என்றுஎல்லாவற்றையும் கொடுத்திருக்கிறாய். ஏன் ஒரு ஜோடிக் கண்களை மட்டும் கொடுக்கவில்லை? ஏன் இந்த தண்டனை?

கடவுள் தன்னிடம் வரும்வரைக் காத்திருப்பது என்று சக்ரா முடிவு செய்தான். கடவுளை முகர்ந்து கண்டுபிடிப்பதில் கஷ்டமில்லை. அவன் தூணுக்கு அருகே ஒரு முறை நல்லவாசனை வந்தது. அங்கிருப்பவரிடம் பேசத் தைரியமில்லை. நல்லவேளை, பேசவில்லை. பொருட்களை விற்கும் ஒருவர்தான்  விலை மலிவான சென்ட்டைப் போட்டுக் கொண்டிருந்தார் என்று பரத் சொன்னான்.

கடவுள் தன்னைக் கடக்க மாட்டாரா? சிறுவன் ஒருவன் தன் கையைப் பிடித்துக்கொண்டு  ரயில் கம்பார்ட்மெண்டுகளுக்கு அழைத்துச் செல்லும் நாள் வரவே வராதா?  அந்தச் சிறுவனுடன்  டீல் வைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தான். ஒரு நாளைக்குப் பத்து பைசாவும், இரவு உணவாக ரொட்டியும் தரத் தயாராக இருந்தான். ஆனால் சிறுவன் கிடைக்க வேண்டுமே.

சக்ரா தன்னை மிக பலவீனமாக உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் மோசமாகக் கழிந்தது. இன்று மிகவும் மோசம். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நொண்டிப் பெண்மணி கூட வரவில்லை .தும்மிக் கொண்டும், முனகிக் கொண்டும், தவழ்வது போலவும் அவள் அங்கிருப்பாள் . நாற்றம் பொறுக்க முடியாவிட்டாலும் ஆறுதலாக இருக்கும். நேற்றிரவு தங்களுக்குள் நடந்த உரையாடலை  நினைத்துப் பார்த்தான்.
“கோரமண்டல ரயில் வந்துவிட்டுப் போய்விட்டதா?”அவன் கேட்டான்.

“உம். போய் விட்டது.”

“நீ இரவு என்ன சாப்பிட்டாய்?”

“மார்க்கெட் அருகேயுள்ள கடையில் வெந்த காய்களோடு இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டேன். எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.” அந்தப் பெண்மணி இதற்கு முன்பு ஒரு மோசமான சந்தில் வசித்து வந்தாள். அவளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். சில சமயங்களில் ஓர் இரவுக்கு ஐந்நூறு ரூபாய் வரை கிடைத்தது. ஆனால அவளுக்கும் கஷ்டம் வந்தது. அவளைவிட அழகான, வயது குறைந்த பெண்கள் வந்ததால் அவள் தொழில் கெட்டது. எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் போலீசுக்குக் கமிஷன் கண்டிப்பாகத் தர வேண்டியிருந்தது.

சக்ரா தும்மினான். அப்போது அவனுக்குப் பழக்கமான அந்த நெடி வந்தது. சத்தமும் கேட்டது. அவள் வந்து தரையில் தன் சாக்கை விரித்திருக்க வேண்டும். எப்படி அவள் அந்த இடத்திற்கு நேரடியாக வரமுடியும்? அவள் ஏன் வேறிடம் பார்க்கக் கூடாது? ஒவ்வொரு இரவும் அவள் ஏன்  இங்கு வரவேண்டும்? இன்று அவள் முனகுவதும்,முக்குவதும் அதிகமாகக் கேட்டது.

“பெண்ணே!  உடல் நலமில்லையா?”

“ஒன்றுமில்லை. அந்தக் கூலிக்காரன் என்னைக் காலியான சரக்கு கம்பார்ட்மெண்டுக்கு இழுத்துக் கொண்டுபோனான். அவனிடமிருந்து தப்பி வரும்போது காலில் அடிபட்டுவிட்டது.”

“இப்படியான மனிதர்களிடமிருந்து நீ விலகியிருக்க வேண்டும்”

“விலகித்தானிருப்பேன். ஏனோ இன்று இப்படியாகிவிட்டது. அவன் என்னை இழுத்தபோது மறுத்தேன். வயிற்றில் எட்டி உதைத்தான். மயக்கமாகி விழுந்து விட்டேன்.”

“வேறு யாரிடம் அவன் பலத்தைக் காட்ட முடியும்? என்னால் அவனைப் பார்க்க முடியாமலிருக்கலாம். ஆனால் என் கையில் அவன் கிடைத்தால் எலும்பை முறித்து விடுவேன்”.

அவளுடைய மெல்லிய சிரிப்பு காற்றில் மறைந்தது. சக்ரா பின் வாங்கினான். இதில் என்ன வேடிக்கை? அவள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாளா?

“இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. எனக்குச் சரியாகி விட்டது . நீ போய்த் தூங்கு.”

அவள் அருகே வந்துவிட்டாளா? இப்போதெல்லாம் அவள் அவனுக்கு அருகில்தானிருக்கிறாள். இந்த பிளாட்பாரத்திற்கு வந்த புதிதில் ஒரு கடைவாசலில்தான் படுத்திருந்தாள். கடையில் ஏதோ திருட்டு நடந்தபோது போலீஸ் அவளைச் சந்தேகப்பட்டு அடித்தது. பிறகு தண்ணீர் டாங்க் அருகேயிருந்தாள். அங்கும் சிக்கல்.  பிறகு கடைசியாக இந்தத் தூணுக்கு வந்தாள். சக்ராவைப் பார்த்தாள். அங்கிருந்தால் எந்தத் தொந்தரவும் வராதென்று நினைத்தாள். அங்கேயே படுத்தாள். இவனுடைய மனைவியாகி விட்டாலென்ன என்று கூட யோசித்தாள். தப்பித் தவறிக்கூட அவன் அவளைத் தொட்டதில்லை. என்ன மனிதன் இவன்!  ரயில் வரும்போது அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டாக அழைத்துச் செல்லலாம்.அவர்கள் வருமானம் ஜாஸ்தியாகும். ஒர் அறை கொண்ட குடிசையை ஸ்டேஷனுக்கு அருகில் கட்டமுடியும். அவள் அங்கு கீரை  பயிரிடுவாள். அவள் சக்ராவைத் திரும்பிப் பார்த்தாள். குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தான்.

மிகவும் பசியாக இருக்கும் போது சக்ரா நன்றாகத் தூங்கிவிடுவான். சில சமயங்களில் போலீஸ் அவனைக் கடக்கும்போது இரண்டு தட்டு தட்டுவார்கள். அவன் இங்குமங்கும் உருள்வான். கோடையில் இது பெரிய தொந்தரவில்லை. குளிர்காலத்தில்தான் தொல்லையாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் “பெண்ணே ! உனக்குச் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டான். அது ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் நேரம்.

“பாட்டி இருந்தாள். அவளும் செத்துப் போய்விட்டாள்.”

“வேறு யாரும்?”

“வேறு யாரு?”

“கணவன்?”

“என்னைப் போன்ற பெண்களுக்கு எப்படிக் கணவன் இருக்க முடியும்?”

“நீ வேறுயாரையாவது ஏன் பார்க்கக் கூடாது?”

ரயில் வந்து நின்றது.  பான், பீடி, சிகரெட், வாழைப்பழம், டீ, முட்டை ,அவித்த  முட்டை…. குர்தா ரோடு ஸ்டேஷனா என் மீது ஏறிக்கொண்டுதான் உன் சீட்டுக்குப் போக வேண்டுமா.. பின்கள்.. கல்தட்டுக்கள்  கம்மி விலையில்..

குரல்கள்..

நான்காவது பிளாட்பாரத்தில் அன்றுகாலை ஒரு பெரியவர் இறந்து போய் விட்டார். அவர் உடலைக் கேட்டு யாராவது வந்தார்களா அல்லது அவர் அனாதையா என்று அவன் அறிய விரும்பினான். அவர் மனைவி வந்ததாகவும், கூலிக்காரர்கள் அவரை அடக்கம்செய்யப் பணம் தந்ததாகவும் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகவும் சொன்னார்கள்.

“கொடுத்து வைத்தவர். சொந்தமண்ணில் அடக்கம் செய்யப்படுவது என்பது எவ்வளவு புண்ணியம் தெரியுமா? எனக்கு என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? பெண்ணே! நான் பிச்சுக்குளி என்ற கிராமத்திலிருந்து வந்தவன். பிறக்கும்போதே பார்வையில்லாமல்தான் பிறந்தேன். குருடன் சக்ரா என்றால் பிச்சுக்குளியில் எல்லோருக்கும் தெரியும். சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்படக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்,” என்று சொன்னான்.

சில நாட்களில் ஓரளவு வருமானம் கிடைத்து விட்டால் சக்ரா வீடுகளுக்கு முன்னால் போய் நின்று பக்திப்பாடல்கள் பாடுவான். அங்கு கிடைக்கும் காசை வைத்து ஒன்றிரண்டு இனிப்புகள் வாங்கிச் சாப்பிடுவான். சில சமயங்களில் பொடியும் வாங்குவான். அடிக்கடி சிறிய மீனின் விலையைக் கேட்பான். அவனுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவனால் தனக்கென்று ஒன்று கூட வாங்கிச் சாப்பிட முடிந்ததில்லை. ரத்த சோகை காரணமாக அவன் நிறம் இப்போது மஞ்சளாகி விட்டது. அந்த நொண்டிப் பெண்மணி தன்னருகில் படுக்கத் தொடங்கிய பிறகு அவன் வேறு எங்கும் போவதில்லை. அந்தக் கூலியோ அல்லது தரை சுத்தம்செய்பவனோ அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது . எவ்வளவு நேரமானாலும் கம்பைத் தரையில் தட்டியபடி அங்கு வந்துவிடுவான். கொஞ்சம் தள்ளிப்படு என்று சொல்லும்போது அவனுக்குள் ஒரு மகிழ்ச்சியும்..

“ஏன் இன்று இவ்வளவு நேரம்?”

“உனக்கென்ன அதனால்? நீ வேறிடம் பார்த்துக்கொள். ஜனங்கள் நம்மைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.”

“கவலைப்படாதே, நான் வேறிடம் போய்விடுவேன். உனக்கு என்னால் எந்தத் தொந்தரவுமில்லை என்றுதான் இத்தனை நாளாய் நினைத்து இருந்தேன். ஆனால் நான் இப்போது வேறிடம் பார்க்க வேண்டும்.”

“விளையாட்டுக்குத்தான் சொன்னேன். இங்கேயே இரு.  எப்போதும் இரு”

“நான் போய்விடுவேன் என்று நினைத்தாயா? நானும் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.” இந்த மாதிரி யார் இருக்க முடியும்,  அவன் ஆச்சர்யப்பட்டான். அவள் என்னை விரும்புகிறாளா?அதனால்தான் போக விரும்பவில்லையா? அவள் காலில் குறையிருந்தால் என்ன?  கையைப் பிடித்துக் கொண்டு என்னை எல்லா கம்பார்ட்மெண்டுக்களுக்கும் அவளால் அழைத்துச் செல்லமுடியும். இரண்டுபேரும் சேர்ந்து பிச்சை எடுத்தால் ஓரளவு வருமானம் கிடைக்கும். ஒரு டப்பாவில் அதைப் போட்டு வைக்கலாம். அவள் விருப்பத்தைக் கேட்டால் கேலி செய்து சிரிப்பாளோ? கேட்பதா, வேண்டாமா குழப்பமாக இருந்தது. அவனுக்கு இரண்டு கண்ணும் குருடில்லை. வலது கண்ணில் எப்போதும் எரிச்சல். எப்போதாதாவது இரத்தம் அந்தக் கண்ணிலிருந்து வரும்.

அந்தப் பெண்மணி நடுங்கிக்கொண்டே தூங்கிவிட்டாள். மெல்லிய போர்வை. காலை மூடிக்கொள்ள நினைத்தால் தலைப்பகுதி வெளியே தெரிந்தது. சக்ரா தன் மூட்டையிலிருந்து சால்வையை எடுத்துப் போர்த்தி விட்டான். குளிர் கொஞ்சம் குறையும்.”

அவள் எழுந்து விட்டாள். “விடிந்து விட்டதா? ”

“விடிந்து விடவேண்டுமென்று உனக்கு ஆசையாயிருக்கிறதா? உனக்குத் தெரியாது. காலையில்தான் நமக்கு பசி பத்து மடங்காக இருக்கும். மதியத்தில் குறைந்துவிடும்.”
“தினமும் இரவில் ரொட்டி சாப்பிட்டு அலுத்துவிட்டது. கொஞ்சம் அரிசி வாங்கி அந்த வேப்பமரத்தடியில் நாம் ஏன் சமைத்துச் சாப்பிடக் கூடாது?”

“வேண்டாம். இங்கு கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் எல்லோரும் இன்னும் அதிகமாக என்னைக் கேலி செய்வார்கள். ஆசையாயிருந்தால் நீ சமைத்துச் சாப்பிடு .எனக்கு ரொட்டியே போதும்.”

“எனக்கும் போதும். ஒருத்தருக்காக யார் சமைப்பது?”

“சரி. இப்போது தூங்கு. காலையில் தண்ணீர் வரிசையில் நிற்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும்”

திரும்பிப் படுத்த சக்ராவுக்கு கடவுள் இன்னும் ஏன் பிரசன்னமாகவில்லை என்று தோன்றியது. சரக்கு ரயில் கம்பார்ட்மென்ட் தன் தூணுக்கு முன்னால் நிறுத்தப்படுவதைத் தொடரப்போகிறாரா? எந்தச் சிறுவனும் உதவிக்கு வராமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறாரோ? மறைவில் நின்று சக்ராவின் திசையைப் பார்க்கிறவர்களைத் தள்ளிக் கொண்டு போய்விடுகிறாரோ? யாருக்குத் தெரியும்? இப்படிச் சொல்லலாம்; இங்கே பார்!   அந்தத் திசைக்குப் போகாதே! ஒரு புலி பாய்வதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது. சக்ராவுக்கு கடவுளைப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவர் விரட்டி விடுவார். எவ்வளவு இரக்கமற்றவர் அவர்!

அந்தப் பெண்மணியைத் தன்னோடு வாழும்படி கேட்கலாமா?அவர்கள் ஒரு  குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவனுக்கு உடம்பு சரியில்லாத போது அவள் பார்த்துக் கொள்வாள். சுடுதண்ணீர் வைத்துத் தந்து.. தலை பிடித்து.. அவளுக்கு எது வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான். அவனுக்குத் தலைவலியும் , அவளுக்கு முதுகுவலியும் பொறுக்க முடியாமலிருக்கிறது. இருவரும் அருகருகே இருந்து கொண்டு ஒருவருக்கொருவர்  உதவி செய்து கொள்ளா விட்டால் என்ன பயன்?

“கவுண்ட்டர் எண் ஐந்தில் யாருக்கோ அடிபட்டு ரத்தம் வந்ததாமே?” கேட்டான்.

“நம் கூட்டத்தில் ஒருவருக்காகத் தானிருக்க வேண்டும். சீக்கிரம் தூங்கு. உன் சால்வையை ஏன் எனக்குத் தந்தாய்? நாளையிலிருந்து நாமிருவரும் சேர்ந்து பிச்சை எடுப்போம். நான் உன் கையைப் பிடித்துக் கொள்கிறேன்.” அவள் அவன் தலைமுடியைக் கோதினாள். இன்னும் இரவு எவ்வளவு நேரமிருக்கிறது? அவன் யோசித்தான்.

மெட்ராஸ் மெயில் வந்து நின்றது. கூலிகள் இங்குமங்குமாக ஓடினர். ஒரு வயதான போலீஸ்காரன் பிச்சைக்காரர் கும்பலில் யாராவது புதிதாக வந்திருக்கிறார்களா, மிரட்டிக் காசு வாங்கலாம் என்று வந்து கொண்டிருந்தான். வழக்கமான குரல்கள்.. டீ.. சூடான டீ. முட்டை.. இந்த சீட்டை எடுத்துக் கொள்ளலாம்.. இல்லை. இது என்னுடையது. என் கர்ச்சீப்பை முன்பே போட்டு வைத்திருந்தேன். ரயில் சரியான நேரத்துக்கு வந்ததா.. தாமதமா? கவலைப்பட வேண்டாம் . சரி செய்துகொள்ளலாம்.. இப்படி…

இருட்டு கடுமையாகி அவர்கள் மீது பரவியது. சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும். இறைச்சிக் கடையில் கறிவாங்கக் கூட்டம் கூடிவிடும். அவன் தூங்க முயற்சித்தான்.

அந்தப் பெண்மணி எழுந்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து தலையை வாரிக் கொண்டாள். நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சக்ரா எழுந்து கொள்வதற்கு முன்னால் மார்க்கெட்டுக்குப் போகவேண்டும். ரயில் வரும்போது சக்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லா கம்பார்ட்மெண்டுகளுக்கும் போவதை இன்று ஆரம்பிக்க வேண்டும். நொண்டியும், குருடனும் சேர்ந்து பிச்சையெடுப்பதைப் பார்த்து ஜனங்கள் காசு தருவார்கள். கடவுளருளால் காசு அதிகமாகக் கிடைக்கும்.

சக்ரா எழுந்தபோது அந்தப் பெண்மணி அங்கில்லை. அவள் மூட்டை மட்டுமிருந்தது. அவள் எங்கே போயிருப்பாள்? அவள் எப்போதும் தாமதமாகத்தான் எழுந்திருப்பாள். அந்தக் கூலி இழுத்துக் கொண்டு போய்விட்டானோ? ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு தடவை அவளை அடித்த போலீஸ்காரனைப் பார்த்து பயந்து ஓடி விட்டாளோ? ஆனால் எதற்கு அவள் மூட்டையை  இங்கே வைக்க வேண்டும்? என்ன திட்டம் ?

“அவள் ஓடிப் போயிருக்க வேண்டும்” பரத் சொன்னான். ஒரு வேசியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு முறை தவறு செய்தவர்கள் தவறு செய்பவர்கள்தான்.

“இங்கே பார்! பரத். அவள் என் கூட  இருக்க வேண்டுமென்று எந்தச் சட்டமுமில்லை. அவள் இங்கிருந்து போக விரும்பினால் அது அவள் விருப்பம். நீ ஏன் அவள் மீது இவ்வளவு கோபப்படுகிறாய்?அவளுடன் நான் இருக்க விரும்பியதும் சேர்ந்து பிச்சை எடுக்க நினைத்ததும் உண்மைதான். சில கனவுகள் கனவுகளாகத்தானிருக்கும். போகட்டும். பரவாயில்லை. கொனார்க் எக்ஸ்பிரஸ் வரும் நேரமாகி விட்டதே? வா, போகலாம்.”

அன்றுகாலை சக்ரா எந்த ரயிலையும் தவறவிடவில்லை. அவன் பிச்சை எடுக்கப் போனாலும் அந்தப் பெண்மணியின் நினைவு வந்து கொண்டே இருந்தது. அவள் ஏன் அப்படிப் போனாள்? ஏன் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் போனாள்? அவனோடு தங்கும்படி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப் பட்டாள். இரவில் வந்து விடுவாளா? அவனருகே படுப்பாளா? அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் அவனுக்கு. போவதற்கு முன்னால் ஏன் அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை? ஒரு வார்த்தை மட்டும் அவனுக்குப் போதுமே.

சாயங்காலம் பரத் தான் அந்த விஷயத்தைச் சொன்னான்.

“உனக்குத் தெரியுமா சக்ரா? அந்தப் பெண்மணி இன்று காலை தன் இரண்டு கால்களையும் இழந்து விட்டாளாம். மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சிக்னல் அருகே, அவள் மேல் ஒரு ரயில் ஏறிவிட்டதாம். கையில் ஒரு புதிய பாத்திரம் வைத்திருந்தாளாம். அது நொறுங்கிக் கிடந்ததாம். தன் புடவையில் முடிச்சாக வைத்திருந்த அரிசி அப்படியே இருந்ததாம். நெற்றியில் குங்குமம் அப்படியே இருந்ததாம். அவளைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்”.

“ரயில் ஏறிவிட்டதா?” சக்ரா அதிர்ந்தான். இரண்டு கால்களும் போய் விட்டதா? அவன் இப்போது எங்கே போவான்? எந்தத் திசையில்?அவன் நின்று கொண்டிருந்த தரையைக் குச்சியால் சுழட்டியடித்தான். அவன் குச்சி குட்டையாக இருப்பது போலத் தோன்றியது. ”பரத்! என்னை அந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறாயா? நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன்”.

“அந்த விபத்தைப் பார்த்த சில புத்திசாலியான போலீஸ்காரர்கள் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்விட்டனர்.” சொல்லி விட்டு அவன் சக்ராவைத் திரும்பிப் பார்த்தான். “ஐயோ! உன் வலது கண்ணிலிருந்து ரத்தம் வருகிறது,” கத்தினான்.

“கவலைப்படாதே பரத்! என் கண்ணைப் பற்றிக் கவலைப்படாதே. நான் யுதிஷ்டிரனில்லை. என் கண்ணிலிருந்து விழும் ஒரு சொட்டு ரத்தம் பூமியை பன்னிரண்டாண்டுகளுக்கு தரிசாக்கிவிடாது. என்னைப் போன்ற ஓராயிரம் குருடர்களின் ரத்தம் ஆறாக ஓடினாலும் ஒன்றுமே நடக்காது. கொஞ்சம் என்னைத் தனியாக இருக்கவிடுகிறாயா? நீ உன் இடத்திற்குப் போ. சிறிது நேரம் நான்  நானாக இருக்க விரும்புகிறேன்.”

———————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series II,  Sahitya Akademi

 

 

புனலும் கனலும்

உஷாதீபன் 

 

முகத்தில் பெருத்த கலவரத்தோடு தன் ஆட்டோவில் ஏறி அமர்ந்த அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்து விட்டு வண்டியை சட்டென்று உயிர்ப்பித்தான் சரவணன். நல்ல வேளை அவனும் அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்ப இருந்தான். அந்த ஆட்டோ ஸ்டாண்டில் மற்ற எல்லோரும் அன்று என்னவோ சற்று சீக்கிரமாகவே வீட்டிற்குப் போய் விட்டார்கள். அன்று சரியான முகூர்த்த நாள். காலையிலிருந்து எல்லோருக்குமே நல்ல சவாரி. ஆட்டோ ஸ்டாண்ட் முழுக்கக் காலியாக இருந்தது அன்றுதான்.

ஒருவர் பின் ஒருவராகத்தான் பேசி வைத்துக் கொண்டு வண்டியை எடுப்பார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை வேறு எங்கும் இருக்குமா என்பது சந்தேகமே. குறைந்தது பத்து வண்டிகள் நிற்கலாம் அங்கே. ஆனால் தற்போது நின்று கொண்டிருப்பது எட்டுதான். சரவணன்தான் அங்கே ஸ்டாண்டை உண்டாக்கினான். முதன் முதலில் குப்பை மேடாகக் கிடந்த  அந்த இடத்தில் மரம் ஒன்று கிளை விட்டுப் படர்ந்து நல்ல நிழல் தந்து கொண்டிருப்பதைக் கவனித்தவன் அவன்தான். ஆனால் அந்த மரம் வேலிக்கு அந்தப்புறம் இருந்து வந்தது. வேலிக்கு வெளியே குப்பை மேடு. வேலிக்கு உட்புறமாக இருந்த பெரிய கட்டிடம் வெகு நாளாக மூடியே கிடப்பதைக் கண்டு விசாரித்தான். அது ஒரு மில் என்றும் சரியான கவனிப்பு இன்றி உற்பத்தி குறைந்து மில்லையே மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே கூலி வேலைக்குப் போய் விட்டார்கள் என்றும் தொழிலாளர்களுக்கு எந்த விதப் பணப்பலன்களும் கொடுக்கப்படாமலேயே கழிந்து விட்டது என்றும் விபரங்கள் அறிந்தான். அந்த இடத்தில் நிற்கும்போதெல்லாம் அங்கு அந்த மில் ஓடிக் கொண்டிருந்தால் அந்த இடம் எவ்வாறிருக்கும் என்று கற்பனை செய்து கொள்வான். மில் ஓடும் சத்தமும் வெளித் தார்ச்சாலையில் பேருந்துகள் போக வர இருக்கும் இரைச்சலும்தான் அந்த இடத்தில் ஸ்டாண்ட் போட ஏற்ற இடமாக அமைந்திருக்குமா என்று யோசிப்பான். ஆனாலும் பலநூறு தொழிலாளர்கள் வேலையில்லாமல் போனது அவன் மனதைப் பெரிதும் இடர்ப்படுத்தும்.

ஆரம்பத்தில் வண்டியை நிறுத்திய காலங்களில் அங்கு சில தொழிலாளர்கள் தினமும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்வது என்ன வேலைக்குப் போவது யார் யார் என்னென்ன வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள் எந்த வேலையானாலும் சரி போனவர்கள் எவரெவர் என்றெல்லாம் அவர்கள் பேசிக் கொள்வதும் சித்தாள் வேலை, மூட்டை தூக்கும் வேலை, நெல் மண்டி வேலை, இ.பி. தினக் கூலி வேலை என்று போனவர்கள் பற்றியெல்லாம் அவர்கள் சங்கடத்தோடு பகிர்ந்து கொள்வதும் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்பதான தோற்றத்தை இவன் மனதில் ஏற்படுத்தும்.

நல்லவேளை. அப்பா செய்து கொண்டிருந்த வேலையான இந்த ஆட்டோ ஓட்டும் பணி தனக்கும் வந்து விட்டது. ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல ஏரியாவாகத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்பதாக அவன் சிந்தனை பல சமயங்களில் தள்ளாடுவது உண்டு. ஆனால் பழகின இந்த இடத்தை விட்டு எப்படிப் போவது? இங்கேயே காலூன்றி எத்தனையோ வாடிக்கையாளர்களைக் கையில் வைத்திருக்கையில் புதிய இடத்திற்குப் போவோம் என்ற சிந்தனை சரி வருமா? இப்படி யோசித்து யோசித்தே விட்டு விட்டான் சரவணன். ஏதோ பாதகமில்லாமல் அவன் பாடு கழிந்து கொண்டிருந்தது. அவன் தந்தை மட்டும் அந்த விபத்தில் இறக்காமல்  இருந்திருந்தால் குடும்பம் எவ்வளவு செழித்திருக்கும்?

“ஏன் இவ்வளவு மெதுவாப் போறீங்க? சீக்கிரம் போறீங்களா?”

தன் ஆட்டோவில் பயணி ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்து போனதுமாதிரித் தான் இருந்து விட்டது சட்டென்று உறுத்த ‘சரிம்மா’ என்று விட்டு போக வேண்டிய இடத்தை ஒரு முறை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டான் சரவணன்.

சே. எவ்வளவு அவசரமாக ஏறி உட்கார்ந்தார்கள். அதை மறந்து விட்டு நான்பாட்டுக்கு அதற்குள் வேறு  ;சிந்தனைக்குள் புகுந்து விட்டேனே? மனதிற்குள் வெட்கப்பட்டவாறே போய்க் கொண்டிருந்தான.

அந்த ஆஸ்பத்திரி முன்னால் வண்டியை நிறுத்தியபோது இறங்கி கிடுகிடுவென்று ஓடியது அந்தப் பெண் தனக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இன்றி இந்த ஓட்டம் ஓடுகிறதே என்று வாயடைத்துப் போய் எதுவும் கேட்கவோ சத்தமிடவோ திறனின்றி அப்படியே நின்று கொண்டிருந்தான் சரவணன்.

( 2 )

சுற்றி நின்ற காவலர்களின் கட்டுப்பாட்டினை மீறி தம்பியின் மார்பின் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள் சாந்தா. அவளால் தன் அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. எந்தத் தம்பிக்காகவும் தங்கைக்காகவும் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அவனுக்கே இந்தக் கேடு ஏற்படுமானால் அவளால் எப்படிப் பொறுக்க முடியும்?

தன் நினைவின்றிக் கிடந்தான் முத்து. இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்தவன் அவன். கடலில் முத்தெடுத்தாற்போல் கிடைத்த அவனை அத்தனை செல்லமாக வளர்த்தார்கள் அந்தக் குடும்பத்தில். இனி குழந்தை பாக்கியமே இல்லை என்று நினைத்திருந்த காலத்தில் பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பிறந்ததனால் அவனுக்கு அத்தனை செல்லம் அந்த வீட்டில். அப்பாவே வெட்கப்பட்டுத்தான் போனார். அழித்து விடுவோம் என்று கூடக் கூறினார்.

“உங்களுக்கு ஆண் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை. மனசுல இத்தனை ஆசையை வச்சுக்கிட்டு கடவுளாப் பார்த்துக் கொடுத்திருக்கிறப்போ அதப் போய் அழிக்க நினைப்பாங்களா யாராச்சும்?” – சாந்தாதான் சொன்னாள் அப்பாவிடம். தன் பெண்ணே தனக்கு இது பற்றிக் கூறுவதில் கூசிப்போனார் அவர். அம்மா கூட அழிக்கத்தான் பார்த்தாள். இவர்களுக்குத் தெரியாமல் என்னென்னவோ சாப்பிட்டு அது இல்லாமல் போகட்டும் என்று முனைந்தாள். பிறந்து இந்த உலகத்தில் வலம் வந்துதான் ஆகவேண்டும் என்று இருக்கையில் யார்தான் அதைத் தடுத்து விட முடியும்?

முத்து பிறந்து கைக்குழந்தையாய் இருக்கையில் அவனை வாழை இலையில்தான் போட்டு வைத்திருந்தார்கள். உடம்பு அத்தனைக்கும் அவ்வளவு கொப்புளங்கள். வேனல் தணலாய் வெடித்திருந்தன எல்லாம்.

“எல்லாம் நீ பண்ணின கூத்துதான். கருவை அழிக்கணும்னு எதை எதையோ சாப்பிடப் போக அதெல்லாம் சேர்ந்து இப்போ குழந்தையைப் பாதிச்சிருக்கு.பாரு செக்கச் செவேல்னு பிறந்திருக்கிற குழந்தைக்கு சிவப்பு சிவப்பா உடம்பு அத்தனையும் எப்படிக் கிடக்கு? இது உனக்கே நல்லாயிருக்கா? எங்களுக்கு ஒரு தம்பி இல்லையேன்னு நாங்களே வருத்தப் பட்டுக்கிட்டு இருந்தோம்.;. பத்து வருஷ இடைவெளில இந்தச் சொத்துக் கிடைச்சிருக்கு. இடை இடைல வயித்து வலி, வயித்து வலின்னு எவ்வளவு கஷ்டப் பட்டே? எவ்வளவு மருந்து சாப்பிட்டே? அத்தனைக்குப் பிறகும் இந்த பாக்கியம் கிடைச்சிருக்குன்னா நீயும் அப்பாவும் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும்? உன்னோட அதிர்ஷ்டம்னு சொல்றதை விட அப்பாவோட மனசுன்னுதான் சொல்லணும் இதை. அவர் நல்ல மனசுக்கு, விகல்பமில்லாத கல்மிஷமில்லாத அந்த மனுஷனுக்குக் கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் இது.”

அந்தச் செல்லத் தம்பி முத்துதான் கிடக்கிறான் இப்படி. வகுப்பில் முதல் இல்லாவிட்டாலும் முன்னோடி அவன். முதலை நோக்கியே அவனது பயணம் இருக்கும். பள்ளியில் நடக்கும் எல்லா விழாக்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறுவான். பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி, விளையாட்டுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடிப்புப் போட்டி, என்று எதுவும் வேண்டாம் என்று அவன் ஒதுக்கியதே இல்லை. இத்தனை திறமைகள் படைத்தவனாய் இருக்கிறானே, இவனின் ஆர்வத்திற்கு ஏற்ற வளர்ச்சியைக் கொடுக்கும் தந்தையாக நான் இருக்கிறேனா என்று பிரமித்திருக்கிறார் ராமலிங்கம்.

“நீங்க ஏன்ப்பா பயப்படுறீங்க.அவன் விருப்பப்படி எல்லாத்துலயும் அவன் முன்னேறுவதற்கு நான் துணையிருக்கேம்ப்பா.கவலைப்படாதீங்க.” சாந்தா எத்தனை முறை தன் தந்தையை சமாதானப்படுத்தியிருக்கிறாள்? அந்தத் தம்பி, தங்கக் கம்பி, இதோ இங்கே இப்படிக் கிடக்கிறான். எந்த வினையின் விளையாட்டு அவனை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறது? காலம் அவர்கள் இருவரையும் தன் கையில் ஒப்படைத்து விட்டு பெற்றோரை வாங்கிக் கொண்டது.

“அப்டி வாசல்ல இருங்கம்மா .” – குரலில் இருந்த கண்டிப்பு இவளை அங்கிருந்து எழ வைத்தது.

மனதில் கலவரத்தோடு தயங்கித் தயங்கி வெளியேறிய சாந்தா தம்பியின் முகத்தில் நினைவு வருவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லாதது கண்டு மனம் பதைத்தவாறே போய் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தாள். அங்கிருந்து கீழே நோக்கிய போது தான் வந்த ஆட்டோவும், அந்த டிரைவரும் அங்கேயே நின்று கொண்டிருப்பது கண்டு அவனுக்கு வாடகை கூடக் கொடுக்காமல் வந்து விட்டது அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்து அவள் மனதை சட்டென்று உறுத்த ஆரம்பித்தது. எழுந்து வேகமாகக் கீழ் நோக்கி நடந்தவள் தரை தளத்தை எட்டியபோது அந்த ஆட்டோ அந்த ஆஸ்பத்திரியின் காம்பவுண்டை விட்டு வெளியேறுவது கண்டு “ஏய்.ஆட்டோ.ஆட்டோ.” என்று குரலெடுக்க அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல் நகரின் பேரிரைச்சலில் அது கலந்து மறைந்தது.

( 3 )

“ஏண்டா இவ்வளவு நேரம்?” – உள்ளே நுழையும்போதே அண்ணன் இப்படிக் கேட்பார் என்று சரவணன் எதிர்பார்த்ததுதான். ஆட்டோ நுழையும்போதே அவர் பார்வையைக் கவனித்து விட்டான் இவன். பக்க வழியாகக் கொல்லைப் புறம் சென்று நிறுத்துவதுதான் அவனின் வழக்கமான வழக்கம். அங்குதான் உயர்ந்த காம்பவுன்ட் சுவர். கிணற்றடிக்கு ஒட்டி பெரிய சிமின்ட் தளம். கொண்டு நிறுத்தி உள்ளே நிம்மதியாய்த் தூங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பு.  நண்பர்கள், வாசலில் நிறுத்தி வண்டி காணாமல் போன கதை எத்தனையோ உண்டு. இவனுக்கு அமைந்த அவனின் அண்ணன் வீடு அத்தனை பாதுகாப்பு. அண்ணனும் பாதுகாப்பு. அவர் இடமும் பாதுகாப்பு. அப்படியிருக்கையில் கேட்காமல் இருப்பாரா? அல்லது கேட்கக் கூடாது என்றுதான் சொல்ல முடியுமா? அவரின் பாதுகாப்பில் இருக்கும் இவன் அவரின் எல்லாச் சொல்லுக்கும் கட்டுப்பட்டவன்தான். அவரின் பாசத்தின் முன், அவரின் அரவணைப்பின் முன் இவனின் எந்தக் கேள்விகளும் பதிலற்றுத்தான் போய்விடும்.

“கடைசியா ஒரு சவாரிண்ணே.அதான் லேட்டாயிடுச்சி.”

“ராத்திரி பத்து மணிக்கு மேலே என்னடா சவாரி.ஊரே கெட்டுக் கிடக்கு.டயத்துக்கு வந்துடணும்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது?”- கதிர்வேலுவின் குரல் சற்று உயரத்தான் செய்தது.

“கிளம்பத்தாண்ணே இருந்தேன்.கடைசியா ஒரு சவாரி பரிதாபமா வந்து மாட்டிக்கிடுச்சி.பார்க்கவே பாவமா இருந்திச்சி..அதான்.”

“அதுக்கில்லடா.பக்கத்து ஏரியாவுல ஒரு சம்பவம் நடந்திருக்கு.தெரியும்ல.”

“என்னண்ணே.தெரியாதே.?”

“என்ன ஆட்டோக்காரன் நீ.? எட்டரை ஒன்பது போல ஒரு ஆளை வெட்டிப்புட்டாங்கன்னுல்ல சொல்றாங்க.அந்தப் பக்கமே எந்த வண்டியுமே போகலையாமே?”

“எங்கண்ணே.ராம் நகர் பகுதியிலயா?”

“ஆமடா.அங்கதான்.எத்தனை நெருக்கமான ஏரியா அது.ஓரமா மார்ச்சுவரி கூட இருக்கில்லடா.ஒரே இருட்டாக் கிடக்குமே.ஆஸ்பத்திரியோட பின் பக்கமா வருமே.அங்கதானாம்.”

அதை ஒட்டிய மெயின்ரோடில்தானே, தான் அந்தப் பெண்ணோடு பயணித்தது? எந்தப் பரபரப்புமே இல்லையே? ஒரு வேளை அம்மாதிரிச் சம்பவம் நடந்ததனால்தானோ அந்த இடம் அப்படி இருந்தது? வழக்கத்திற்கு மாறான அமைதி காணப்பட்டதை அப்போதுதான் மனம் உணர்ந்தது சரவணனுக்கு. நிலவின் வெளிச்சத்தில் ஒன்றுமே தெரியவில்லையே? மயானம் மாதிரித்தானே கிடந்தது?

“மனுஷன மனுஷன் ஏன்தான் இப்படிப் பகைச்சிக்கிட்டு அலையுறாங்களோ? சமாதானமாப் பேசித் தீர்த்துக்கிறதுங்கிற முறைக்கே எடமில்லை போலிருக்கு.பிடிக்கலையா.ஆளக் காலி பண்ணுன்னு கிளம்பினா அப்புறம் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் என்னதான் வித்தியாசம்? வித்தியாசமில்லாமத்தான் போச்சு இப்பல்லாம். அந்தப் பயத்துலதான் கேட்டேன்.எங்க அந்த ஏரியாவுல போயி மாட்டிக்கிட்டியோன்னு.போலீஸ் வந்து என்கொயரி, அது இதுன்னு கிளம்பினா முதல்ல ஆட்டோக்காரங்களைத்தானே விசாரிக்கிறாங்க.உன்ன மாதிரி அப்பாவிப் பசங்களைத்தானே கடுமையா பயமுறுத்தி விசாரிப்பாங்க.அம்மா கேட்டுக்கிட்டே இருந்திச்சு.போ.அம்மாவ முதல்ல பாரு.”

“சரவணா.வந்திட்டியா? நேரமாச்சே காணலியேன்னு பயந்திட்டேயிருந்தேன்.காலா காலத்துல வீட்டுக்கு வந்து சேரக் கூடாதா? மனசு ஏனோ பயந்திட்டேயிருக்குப்பா.எல்லாரும் நேரத்துக்குக் கூட்டுக்குள்ள வந்து அடைஞ்சிட்டீங்கன்னா நா நிம்மதியாத் தூங்குவேன்.போ.போய்ச் சாப்பிடு.உங்க அண்ணியப் பாரு உனக்காக சோத்தச் சுட வச்சிட்டுக் காத்திட்டிருக்கா.”

அண்ணனின் குடும்ப அரவணைப்பில் அப்படியே நெக்குருகித்தான் கிடக்கிறான் சரவணன். வயிறாற உண்டுவிட்டு வந்து படுக்கையில் அவன் சாய்ந்தபோது அன்று கடைசியான தன் சவாரியைப் பற்றிய நினைவு வந்தது அவனுக்கு. அவ்வளவு தூரம் கொண்டு விட்ட நான் வாடகைக்காகக் காத்திருந்தேன் என்றுதான் அவள் நினைத்திருப்பாளோ? அவள் இருந்த கலவரத்தில் உடனே திரும்பினால் மீண்டும் அவளின் இடத்திற்கே கொண்டு விட்டு விடலாம் என்றுதானே காத்திருந்தது. பொழுது கடந்து விட்ட நேரத்தில் அவள் மீண்டும் எப்படித் தன் வீடு போய்ச் சேர்ந்திருப்பாள்? அத்தனை நேரம் காத்திருந்தோமே ஒரு முறை மேலே சென்று என்ன ஏது என்று பார்த்திருக்கலாம் அல்லவா? அது ஏன் தனக்குத் தோன்றாமல் போனது?

சிந்தித்தவாறே படுத்திருந்த சரவணனின் நாசியில் மண் வாசனை வருட ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மெலிதான தூரல் கிளம்பியிருப்பது தெரிந்தது. இந்த மழைக்காகத்தான் அங்கிருந்து புறப்பட்டது. சமீப நாட்களாக இரவு ஒன்பதானால் சொல்லி வைத்தாற்போல் மழை வந்து விடுகிறது. இன்று சற்றுத் தாமதம். அப்போதிருந்த இடியும் மின்னலும் தன்னைத் துரத்தி விட்டன. வீட்டிற்கு நேரத்தோடு வந்து அடைய வேண்டும் என்கிற பழக்கம். ஆனால் அந்தப் பெண் தனியளாக ஓடிக் கொண்டிருந்தாளே அந்த நேரத்தில்? வீடு; சேர்ந்திருப்பாளா? அல்லது அங்கேயே தங்கியிருப்பாளா?  இருந்து அவளை மீண்டும் அவள் வீட்டில் கொண்டு சேர்த்திருக்கலாமோ? –மனச் சங்கடத்தோடேயே உறங்கிப் போனான் சரவணன்.

( 4 )

“இந்தப் பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது யாரு?”

“நாங்கதான் சார்.” – வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த நால்வர் ஒருமித்து இப்படிக் குரல் கொடுத்த போது ஆச்சரியத்தோடே திரும்பிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.

“நீங்களெல்லாம் யாரு?” – அவரின் கேள்வி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சொல்வதற்கு நாங்களும் தயார் என்பதுபோல் அந்த நால்வரின் பார்வையும் இருந்தது.

“நாங்க அந்த ஏரியாவுல கடைகள் வச்சிருக்கோம் சார்.இவர் பெட்டிக்கடை இவர் டீக்கடை. இவர் ஒரு ஸ்டேஷனரி ஷாப் வச்சிருக்காரு.இவர் ஒரு புரோட்டாக்கடை நடத்துறாரு.”

“ஏட்டையா.இப்டி வாங்க.இவுங்க சொல்றத அப்டியே குறிச்சிக்குங்க.” – ஒரு வயதான தொந்தியும் தொப்பையுமாக சீருடையில் இருந்த ஒருவர் அவர்கள் அருகில் இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்து எழுதுவதற்குத் தயாரானார்.

“நீங்கள்லாம் ஏன் கூடுறீங்க.? இங்க என்ன வேடிக்கையா காண்பிக்கிறாங்க.போங்க.போங்க.” சுற்றி நின்று  கவனித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டினார்  இன்ஸ்பெக்டர்.  இப்போது அங்கே அவரும் அந்த ஏட்டையா என்று சொல்லப்பட்டவரும் அந்த நான்கு கடைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். தனது குரலைச் சற்றுத் தணித்துக் கொண்டு ஆரம்பித்தார் அவர்.

“இந்தப் பையனை யார் அடிச்சது?  ஏதாச்சும் விபரம் தெரியுமா?”

“எங்களுக்கு எதுவும் தெரியாது சார்.நாங்கதான் கடைய அடைச்சிட்டமே? இந்தப் பய ரத்தத்தோட கிடந்தான். மனசு கேட்கல.தூக்கிட்டு ஓடியாந்துட்டோம்.இவனையும் வெட்டிப் போடாம விட்டாங்ஞளேங்கிறதுதான் ஆச்சரியம். ஏன்னா இதுக்கு முன்னாடி அதே எடத்துல நடந்த இன்னொரு கொலைய அங்க பூ வித்திக்கிட்டிருந்த அம்மா பார்த்திடுச்சின்னு ரெண்டு நா கழிச்சி அந்தப் பொம்பளையையும் போட்டுட்டாங்ஞல்ல.?;.”

“ஒரு மணி கழிச்சி இவனைத் தூக்கியாந்ததா சொல்றீங்க.அப்போ அந்த பாடி கிடந்திச்சா அங்கே?”

“எந்த பாடி சார் சொல்றீங்க?”

“அதான்யா.கொலை செய்யப்பட்ட பாடியத்தான் கேட்கிறேன். வேறெதக் கேப்பாக.”

“அத நாங்க கவனிக்கலையே சார்.கண்ணுக்குப் பட்டமாதிரித் தெரிலயே.அது ஒரு இருட்டுப் பகுதி சார்.நாலு ரோடு; சந்திக்கிற முக்கு சார்.அங்க எத்தன லைட்டை கார்ப்பரேஷன்காரன் போட்டாலும் உடைச்சிப்புடுவாங்க..இந்த மாதிரிக் காரியத்துக்குன்னே அந்த எடத்தை ஒதுக்கிப்புட்டாங்ஞ.கஞ்சா வியாபாரமெல்லாம் கன ஜோரா நடக்கும் சார் அங்க.ஒங்க கிட்டப் போய்ச் சொல்றோம் பாருங்க.ஒங்களுக்குத் தெரியாததா? ஆனா ஒண்ணு சார்.நிலா வெளிச்சம் இருந்திச்சு சார்.அதத்தான் மரங்கள்லாம் மறைச்சுப்புடுதே! அப்புறம் என்னா தெரியும்? ஆளுக யார் போறா வர்றான்னு கூடத் தெரியாது சார்.”

ஜார்ஜ் பலத்த யோசனையில் ஆழ்ந்தார். கொலை செய்யப்பட்டவர் ஒரு பேராசிரியர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று சிவனே என்று இருப்பவர். அந்த அப்பாவியைப் போய் காலி பண்ணியிருக்கிறார்கள். ஏன்? யார் சொல்லி இது நடந்தது? எதற்காக அவரைக் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடிய அளவுக்கு அவர் செய்த தப்பு  என்ன? யாருடைய முன்னேற்றத்தைத் தடுத்தார் அவர்? யாருக்கு யாருடைய செயல்களுக்குத் தடையாக இருந்தார்?; உறவுகளிலேயே ஏதேனும் பொறாமையால் இது நடந்திருக்குமா? சொத்துத் தகராறா? பெண் பிரச்னையா? இறந்த பேராசிரியரின் காரெக்டர் எப்படி? எந்த விஷயத்தில் அவரின் முனைப்பு இருந்தது. எந்த முனைப்பு எதிராளியின் கவனத்தை சந்தோஷத்தைக் கெடுத்தது? அவரின் எந்த முன்னேற்றம் எதிராளிக்குப் பொறாமையாய் அமைந்தது? – கேள்வி மேல் கேள்வி விழுந்து கொண்டேயிருந்தது அவருக்கு.

“ஏட்டையா.அவுங்க சொன்னதையெல்லாம் எழுதிட்டீங்கல்ல.எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிக்குங்க.நான் விசாரணைக்குக் கூப்பிடறபோது வரணும்.யாரும் எங்கயும் போயிடக் கூடாது.”

“எங்க பொழப்பே இங்கதானங்க சார்.நாங்க எங்க வெளியூருக்குப் போகப் போறோம்.? இம்புட்டுத் தைரியமா அவனக் கொண்டு வந்து சேர்த்திருக்கோம்.அப்புறம் பயப்படுவோமா சார்.அந்த ஏரியாவுல ஒரு ஸ்பெஷல் பீட் போடணும் சார்.பரபரப்பான ஏரியாவா இருக்குது பிரச்னையான ஏரியாவாவும் இருக்கு.இது மூணாவது கொலை சார் அந்த எடத்துல.பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணு நடந்திச்சி சார்.அப்போ ஒரு பொம்பளையவே வெட்டிப்புட்டாங்ஞ சார்.நியாயம் கேட்ட ஒருத்திய நீ எப்டி அதக் கேட்கப் போச்சின்னு போட்டுத் தள்ளிட்டாங்ஞ சார்.அந்தக் குடும்பம் அதுக்கப்புறம் ஒண்ணுமில்லாமப் போச்சு சார்.ஆனா அவுங்ஞ மட்டும் இன்னும் நல்லாயிருந்துக்கிட்டிருக்காங்க சார்.அதே கும்பல்தான் சார் இப்பவும் கைவரிசையைக் காண்பிச்சிருக்கணும்.”

“ரொம்பப் பேச வேணாம்.புரியுதா.அப்புறம் உங்களயும் பிடிச்சி உள்ள போட வேண்டியிருக்கும்.பேசாமப் போயிடுங்க.கூப்பிட்டு விட்டா ஸ்டேஷனுக்கு வந்துட்டுப் போங்க.”

வாயைப் பொத்திக் கொண்டு இத்தோடு விட்டார்களே என்று கிளம்பியது அந்த நால்வர் கோஷ்டி. அதில் ஒருவன் சொன்னான்.

“பார்த்தீங்களாண்ணே.பரிதாபப்பட்டு உதவினா என்ன பேச்சு வருது பார்த்தீங்களா? மனசுல தைரியத்தோட ஒரு உயிரக் காப்பாத்துவோம்னு கடைமையா செஞ்சதுக்கு என்ன பலன் பார்த்தீங்களா? சொன்னாச் சொல்லிட்டுப் போகட்டும்.கூப்பிட்டு விட்டாக் கூடப் போயிட்டு வருவோம்.ஒரு பையனோட உசிரக் காப்பாத்தியிருக்கோமே.அத விட என்ன வேணும்? இவுங்க எப்பவும் இப்டித்தான்.இதுனாலதான் போலீஸ்னாலே ஒதுங்குறாங்க எல்லாரும். இழுக்குற இழுப்புக்கு அன்றாடப் பொழப்புப் பார்க்கிறவன் பாடு நாறிப் போகும்னு நமக்கெதுக்குடா வம்புன்னு கண்டுக்காமப் போறானுங்க.ஆனா சமுதாயத்துல மக்கள் விழிப்புன்னு ஒண்ணு இருக்கு.அது  வந்துட்டா அப்புறம் இந்தக் கூலிப்படையெல்லாம் சின்னா பின்னமாப் போகும்.சட்டம் ஒழுங்கு அப்போ தானாத் தலை நிமிரும்.காவல் துறை உங்கள் நண்பன்னு விளம்பரப் படுத்துறாங்களே.அது நூறு சதவிகிதம் உண்மையாகணும்.மக்களுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவுங்க பொறுப்பு..அப்போ மக்கள் தைரியம் அடைவாங்க.தவறு செய்றவங்க பயப்படவும் செய்வாங்க.”

பேசிக் கொண்டே அவர்கள் போய்க் கொண்டிருந்தனர். அது நேரம் வரை அவர்கள் பேசுவதை அந்தக் காவல்துறை ஆய்வாளருடன் அவர்கள் பேசியதை சற்றுத் தள்ளியிருந்தாலும் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்த சாந்தா தன் தம்பி அங்கு வந்ததற்கான காரணத்தை முழுமையாக அறிந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்துக் கிடந்தாள். .டியூஷன் முடித்து விட்டு அவ்வழியே வர வேண்டாம் என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். சுருக்கு வழி சுருக்கு வழி என்பான் முத்து. இளங்கன்று பயமறியாது.நல்ல வேளை புத்தகம் என்று எதுவுமில்லை. ஒரே ஒரு நோட்டு. அதுவும் எழுதித் திருத்தக் கொடுத்து விட்டு வந்து விடுவான்.  . காலையில்தான் அவனைப் பார்க்க முடியும் என்று காவல் கண்டிஷன் போட்ட போது வேறு வழியில்லாமல் அவள் கிளம்ப வேண்டியதாயிற்று. இந்நேரம் அம்மா அப்பா இருந்திருந்தால் தன்னால் சமாளித்திருக்க முடியுமா? என்று அவள் சிந்தித்த போது மனசு பெரிதும் தடுமாறியது அவளுக்கு. இப்பொழுது வீட்டிற்குச் சென்று தங்கை கௌசல்யாவை மட்டும் சமாளித்தால் போதும். அவளைக் கூட இவ்வளவு நேரம் தனியாக விட்டு வந்திருப்பது என்பது அபாயம்தான். ஆனால் கூடப் படிக்கும் சிநேகிதிகள் கூட இருந்து கொள்வாள். இந்த நினைப்பினூடே வீட்டை அடைந்தாள் சாந்தா.

( 5 )

மாரிக்கு அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் உறுத்தத்தான் செய்கிறது. வெறும் உறுத்தல் என்றாலும் பரவாயில்லை. துடைத்து எறிந்து விட்டுப் போய்விடலாம். அப்படி எத்தனையோ முன்னர் செய்ததுதான்.”சேய்ய்.இதென்னடா எழவு.” என்று ஒரு உறாஃப் வாங்கி ஊற்றினால் ஆச்சு.அடுத்த சில கணங்களில் எல்லாமும் மறந்து மண்ணடித்துப் போகும். அப்படிப் போய்க் கொண்டிருந்ததுதான் இது நாள்வரை. ஆனால் இப்போதென்ன புதுசாய்? இது புதுசாஅல்லது ஏற்கனவே நடத்திய பாதகங்களின் படிமங்களா? அப்பொழுதே அவையெல்லாம் தன்னை இடறிக் கொண்டுதான் இருந்தனவா? கொஞ்சங்கொஞ்சமாய்ப் படிந்து வந்த கறைகள் இப்பொழுதுதான் கண்ணுக்குத் தெரிகின்றனவா? இனிமேல் கால் வைத்தாயானால் வழுக்கி உள்ளே இழுத்துக் குழிக்குள் தள்ளி விடுவேனென்று எச்சரிக்கிறதாக்கும்? அப்படியானால் இத்தனையையும் நிகழ்த்தித்தான் இது உணரப்பட வேண்டுமா? என்னவோ செய்கிறதே? எதுவோ தடுக்கிறதே? என்று தோன்றிய காலங்களிலேயே இது ஏன் உணரப்படாமல் போனது? எடுத்துச் சொல்லித் தடுப்பதற்கு ஆள் இல்லாமல் போனதா? அப்படித் தடுத்திருந்தால் தடம் புரண்டிருக்காதா? தடம் புரண்டதுதானே என்று அழுத்தமாக இப்பொழுதுதானே தோன்றுகிறது? முன்னரே இது இத்தனை ஆழமாய் இறங்கியிருந்தால் தடைப்பட்டிருக்குமா?

“உனக்கு மாரின்னு ஏன் ஆசையாப் பேர் வச்சேன் தெரியுமா? மழயா வந்து என் வயிறக் குளிர வச்சவண்டா நீ! கல்யாணங்கட்டி எட்டு வருஷங்கழிச்சு உங்கப்பன் கூத்தியாளத் தேடிப் போக இருந்தப்போ என் வயித்துல ஜனிச்சு அதத்தடுத்தவண்டா நீ! முற தவறிப் போகவிருந்த அப்பனுக்குத் தட போட்ட தகப்பன் சாமிடா நீ.இன்னைக்கு இப்படி ஆயிட்டியே!உன்னை இதுக்காகவா என் வயித்துல சுமந்தேன்? கொதிச்சுப் போயிக் கெடந்த என் வயித்துலயும் ரணமாக் கெடந்த என் நெஞ்சுலயும் பால வார்த்த நீயா இன்னைக்கு இந்தக் காரியஞ் செய்யிறே? இப்டி ஒரு பொழப்பாடா? இந்த மாதிரி ஒரு பொழப்புப் பொழக்கிறதுக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாமுடா.தூத்தேறி.எம்மூஞ்சிலயே முழிக்காதடா.இனிமே இந்த வீட்டு வாசப்படி மிதிக்காதே.சொல்லிப்புட்டேன்.”

“வாசப்படி மிதிக்காதவா? உறாஉறாஉறா.எங்கயிருக்கு வாசப்படி? என்னவோ கட்டி வச்சிருக்கிற மாதிரிச் சொல்ற? இந்த ஓட்டக் குடிசைக்கு வாசப்படி ஒரு கேடாக்கும்? கூரையப் பிச்சிக்கிட்டுக் குதிக்க வேண்டிதான்.நீ சொல்றபடியே கேக்குறேன்.ஆத்தா.உன் வாக்கத் தட்டவே மாட்டேன்.சர்தானா? இனிமே ராத்திரி வீட்டுக்கு வாரேல மேல் வழியாவே வாரேன்.பொளந்துக்கிட்டுத்தான் குதிப்பேன்.தள்ளிப் படுத்துக்க ஆம்மா.அப்புறம் உம்மேல விழுந்தேன்னு சொல்லாத.உன் வார்த்தயத் தட்டுனவங்கிற கெட்ட பேர் எனக்கு வாணாம்.”

என்ன எகத்தாளமான பேச்சு? அத்தனையையும் கேட்டுக் கொண்டு அழுது தீர்த்ததே ஆத்தா? அந்த அழுகை அப்போதெல்லாம் ஏன் தன் மனசைக் கரைக்கவில்லை?

“டே மாரி.சோமாரி.நீதாண்டா இந்தத் தடவை சரியான ஆளு.நா தீர்மானிச்;சிட்டேன்.எனக்கு நம்பிக்கையானவனும் நீதாண்டா.உன்னத்தான் என் மனசுல ஒக்கார வச்சிருக்கேன்.வேற எவனுக்கும் எடமில்ல.நீதாண்டா இந்தத் தடவ டார்கெட்ட முடிக்கணும்.ஆந்திராவுலேர்ந்து நாலு பேரு துணைக்கு.முகந்தெரியாத ஆளுக.கூட வச்சிக்க.புரிஞ்சிதா? தைரியமாப் போ.முடிச்சிரு.”

“எதுக்குண்ணே நா மட்டும்? அவிங்ஞள வச்சே முடிச்சிற வேண்டிதான? “

“அவிஞ்ஞள வச்சு முடிக்கணும்னா இன்னும் நாலு மாசம் போவணும்டா.நம்ம பொழப்பு என்னாவுறது? எடமெல்லாம் பழகணும்.ஆளுக பழகணும்.பேச்சு பழகணும்.எவ்வளவோ இருக்கு.எவனுக்குமே சந்தேகம் வராம இருக்கணும்.அது ரொம்ப முக்கியம்.அதுவரைக்கும் அவிங்ஞள வச்சி சோறு போடணும்.எவன்ட்ட இருக்கு ஐவேசு.அதெல்லாம் நடவாது.வந்தாங்ஞளா முடிச்சாங்ஞளா.போயிட்டேயிருக்கணும்.எங்க போனோம்.எங்க வந்தோம்னே எவனுக்கும் தெரியாது.தெரியக் கூடாது.ஒடனே பேக் பண்ணி அனுப்பிடணும்.ஆனா ஒண்ணு நீ மொட்டை அடிச்சிக்கி-டணும்.இந்த மொறை.முகத்துல துளி மசிரு இருக்கக்கூடாது.எல்லாத்தையும் மழிச்சிரு.எந்த மாதிரி மூஞ்சிய நாம பார்த்தோம்னு எவனுக்கு மண்டைல ஏறக் கூடாது.ஆளவந்தான்ல கமலப் பார்த்திருக்கேல்ல.அந்த மாதிரி கெட் அப்ப மாத்திக்கோ.உடம்பு மட்டுந்தான் ஒனக்குப் பொருந்தாது.வேசம் பச்சுன்னு ஒக்காந்துக்கும்.எவன்டா இருக்கான் ஒன்னை அடிச்சிக்க.”

கிறங்கித்தானே கிடந்தோம் போதையில். எல்லாமும் நடந்துதான் போனது. ஆனா ஒண்ணு.தங்கச்சியும் போயிருச்சே.அந்த நஷ்டத்தத்தானே தாங்கிக்க முடில.

“சீ. நீயும் ஒரு மனுஷனா? உன்ன என் அண்ணன்னு சொல்லிக்கவே கூசுது.நல்லவேள எங்கம்மா என்னோட நிறுத்திக்கிட்டாக.இன்னொன்ணைப் பெத்திருந்தா அதுவும் ஆம்புளயாப் பொறந்து என்னென்ன பாடு படுத்தியிருக்குமோ.நெனக்கவே பயமாயிருக்கு.நா சொல்றதச் சொல்லிப்புட்டேன்.இனிமே இந்தக் கேடு கெட்ட காரியத்துக்குப் போனே பெறவு நா இந்த வீட்டுலயே இருக்க மாட்டேன் ஆம்மா.இத்தன நாளா உன்னை வெளிய விட்டு வச்சிருக்கிறதே தப்பு.எதுக்காகவோ.சும்மா ஒண்ணும் செய்ய மாட்டாக.அதத் தெரிஞ்சிக்க.நீ பாத்து வச்சயே மாப்ள அதான் என் வீட்டுக்காரரு.டிரெயினிங் முடிச்சு வந்திட்டாரு நா போயிடுவேன் அவரோட.இந்த நாட்டுக்காக ஒழைக்கிறேன்னு அவுரு போறாரு.நீ என்னடான்னா கேடு கெட்ட பொழப்புப் பொழக்கிற.கல்யாணத்துக்கு முன்னாடி இப்டி நடந்திருந்தா அவரு என்ன வேண்டாம்னிருப்பாரு.அதான் நீ எனக்குச் செய்த பெரிய ஒதவி.தூ இதுவும் ஒரு பொழப்பா?”

“சொன்னது போல் அதுவும் கௌம்பிப் போயிருச்சே? தான் உண்டு தன் புருஷன் உண்டுன்னு வடக்க எங்கயோல்ல சொல்லிச்சு.அதயாவது கேட்டு வச்சிக்கிட்டனா? எதயும் கேக்குற மாதிரி நிதானத்துலயா நா இருந்தேன்.எவனோ எதையோ சொல்லட்டும் செய்யட்டும்

நாம இருக்கிறபடி இருப்போம்னுட்டு எம்பொழப்பு இப்டி நாறிக் கிடக்குதே.எவன்ட்டயாவது வாய்விட்டுச் சொல்ல முடியுமா? எதுக்குச் சொல்லணும்? அதான் ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயமாச்சே? பாக்குறவனெல்லாம் ஒதுங்கி ஒதுங்கிப் போகுறதப் பார்த்தாலே தெரியுதில்ல.ஆனாலும் அதுலயும் ஒரு கிக்கு இருக்கத்தாஞ் செய்யுது.எந்த எந்தப் பய வாய் கிழியப் பேசினானோ அவனெல்லாம் இருக்கிற எடம் தெரியாம ஒக்காந்திருக்கான் இன்னைக்கு.நேர்ல வரப் பயப்படவுல்ல செய்றானுக.ஒதுங்கி ஒதுங்கியில்ல போகுறானுவ.எல்லாரும் கூடிப் பேசி முடிவெடுத்திருப்பானுவளோ? ஆனா ஒண்ணு அன்னைக்கொருத்தன் சொன்னாம்பாரு.சாவடி கிட்ட .தங்கச்சிக்கு அழகா மாப்பிள்ளை பார்க்கத் தெரிஞ்சவனுக்கு தன்னைப் பார்த்துக்கத் தெரிலன்னு.அதுலதான் உறுத்திச்சு வெசயம்.அதுவும் ஆசத் தங்கச்சி வீட்ட விட்டுப் பிரிஞ்சி போனப் பெறவுதா அதிகமாச்சு.”

மாரி குழப்பத்தின் உச்சியில் தலைக் கிறுகிறுப்பில் நடு ரோட்டில் நிலை கொள்ளாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான்.

( 6 )

“டே.சாவுக்கிராக்கி.உறாரன் அடிக்கிறேன்.காதுல விழலியா? டமாரச் செவுடா ஒனக்கு.காலங்கார்த்தால என் வண்டிதானா கெடச்சது ஓரமாப் போடா எழவெடுத்தவனே.” யாரென்று பார்க்குமுன்னே கடந்து விட்டது லாரி. பழைய மாரி என்றால் இந்நேரம் கல் பறந்திருக்கும். இப்பொழுது எதெதற்கோ யோசிக்க ஆரம்பித்துவிட்ட மாரி. ஆனாலும் கூட குனிந்து பறந்து தேடத்தான் செய்கிறது மனசு. பழைய புத்தி அதுக்குள்ள விடுமா? சுற்றிலும் பெரிது பெரிதாகக் கற்கள் கிடக்கத்தான் செய்கின்றன. அதற்கென்ன பஞ்சம்? ஆனா கை தான் வரமாட்டேங்குது.ஏன்? எடுக்கத் தெம்பில்லையா அல்லது மனசில்லையா? அந்த அளவுக்கா மனது திருந்தி விட்டது? திருந்தி விட்டதா அல்லது திருந்த ஆரம்பித்திருக்கிறதா? நான் கூடவா திருந்த ஆரம்பித்திருக்கிறேன்? நம்ப முடியவில்லையே? இதுவரை பண்ணியுள்ள காரியங்களுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தாங்காதே? அத்தனையும் பாவங்களல்லவா?

“பட்டினியாக் கெடந்து உசிர விட்டாலும் விடுவனே தவிர நீ கொண்டார துட்டுல இந்த வயித்த நெப்பமாட்டேன்டா.ஞாபகம் வச்சிக்க.” சொன்னபடி போயே விட்டாளே பாவி.கோடித்தெரு தவசிதான் சொன்னான்..

“உங்க ஆத்தா நெடுவூர் வயக்காட்டுல கள பிடுங்கிட்டிருக்குடியோவ்.என்னயக் கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேன்னுடிச்சி.எங்க ஒங்கிட்ட வந்து சொல்லிப் புடுவனோன்னுட்டு பயம் அதுக்கு.ஏண்டா பெத்த தாயே பயப்படுறமாதிரியாவா ஒரு பொழப்புப் பொழக்கிறது? இதுக்காடா ஒன்னய இந்த பூமில விட்டாக.உன்னைப் பார்த்துப் பார்த்து உங்கப்பன் நஞ்சு நாராப் போயி உசிர விட்ட மாதிரி உங்க ஆத்தாளும் உன்னப் பார்க்காமயே உன் நினைப்புல அப்புடி  ஆகப் போகுது.உங்க ஆத்தாள இப்புடிக் கஞ்சிக்குக் காத்தாப் பறக்க விட்டுட்டியேடா? நீயெல்லாம் உசிரோட இருந்தா என்ன இல்லாட்டிதான் என்ன?”

பாக்கெட்டுக்குள் இருக்கும் பணம் பாம்பாய் உறுத்தியது மாரிக்கு. பயன்? யாருக்குமே பயன்படாத பணம் இருந்தென்ன போயென்ன?

“ஏண்ணே தெனம் இப்டி அலைய விடுறீக.காலைல காலைல எனக்கு இது ஒரு தண்டனையா? அஞ்சுக்கு பஸ் பிடிச்சாத்தான் ஆறுக்குள்ள வர முடியும்.லேட்டா வந்தா அதுக்கு வேற கத்துவீக? எறங்கி நடந்து.வர்றதுக்குள்ள.”

“பெரிய புடுங்கி இவுரு.காலு வலிக்குதாக்கும் அய்யாவுக்கு.பொடணில ரெண்டு போட்டன்னா.? கோர்ட் தீர்ப்புப்படி மாப்ள ஒழுங்கா வர்லன்னா பெறவு பார்த்துக்க.ஆளே இருக்க மாட்ட.இங்கயே கெடக்குறியா? எங்களுக்கும் சம்மதம்.போன வாரம் நடந்த கொலைல உன் பேர்லதாண்டீ அதிக சந்தேகம்.ஏற்கனவே இம்புட்டு கேசுகள வச்சிக்கிட்டு இங்க தெனம் வந்து கையெழுத்தும் போட்டுக்கிட்டு எங்களயே ஏமாத்துறியா? இதுல நீ என்னமோ வெளியூர்ல இருக்கிற மாதிரி வேறே படம் காட்டுற.? இங்கயே கெடக்குறியா? பேசாம ரெண்டு மூணு கஞ்சாக் கேசப் போட்டு நல்லா இறுக்கி உள்ளயே உக்காத்தி வச்சிடுவோம்.இப்போதைக்கு ஒதவும்ல.என்னா சொல்ற?”

பேசாமல் ஸ்டேஷனிலேயே கிடந்துவிடலாம்தான். வீடு என்று ஒன்று எங்கு இருக்கிறது தனக்கு? ஆசைத் தங்கச்சியும் இல்லை.அருமைத் தாயும் இல்லை.தன் மீது உள்ள குற்றங்களோ அதிகமாகிக் கொண்டே போகிறது.எந்த போதையில் அல்லது என்ன மன உளைச்சலில் இது நடக்கிறது?

“ஒன் கேடு கெட்ட நடத்தையால ஒங்கப்பன முழுங்கின.இப்போ உன்னோட ஆத்தாளயும் முழுங்கப் போற.”

“டாய்.” என்று பாய்ந்து குதறியிருப்பான்தான். அப்படிச் செய்து செய்துதானே இந்த நிலைக்கு வந்திருக்கிறது?

ஒரு வார காலத்திற்குள் ஏன் இந்த மாற்றம்? எங்கே தன்னையும் போட்டுத் தள்ளி விடுவார்களோ என்கிற பயம் வந்து விட்டதோ?

கூடத் திரிந்த சக்திவேல் கூட மாறித்தான் போய்விட்டான். எங்கோ கொல்லன் பட்டறையில் இரும்படிக்கிறானாம். கேட்டால் சிரிப்பாய்த்தான் இருக்கிறது. அவன் தகுதிக்கு அந்த இடமா? எப்படி மெத்தனமாய்த் திரிந்தவன். எவனும் வேண்டாம்.நான் ஒருத்தனே போகிறேன் என்பானே? அடுத்தவன் கதையை முடிப்பதில் எவ்வளவு துடிப்பு அவனுக்கு?

யாரோதான் சொன்னார்கள். “ஆனாலும் அது ஒழைச்சு வர்ற காசுடா.அதுல திங்கிற சோறே வேறடா.அதுதாண்டா ஒழுங்கா செமிக்கும்.இதெல்லாம் என்னைக்காச்சும் வயித்தப் பிடுங்கி ஆளத் தூக்கிடும்டா.இந்த ஈனப் பொழப்பு ஒரு பொழைப்பாடா?

“சே.என்ன இன்றைக்கு மனசைப் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது? எல்லாம் அண்ணன் பார்த்துக்குவாருன்னுல்ல இருந்தோம்.” – இந்த நினைப்பு திடீரென்று மனசில் வந்தபோது கூடவே பயமும் பெருக்கெடுத்தது மாரிக்கு.

( 7 )

“என்னங்க.அன்றைக்கு ஆஸ்பத்திரிக்குள்ள போனீங்களே.என்னாச்சு? அதுக்கப்புறம் உங்களைப் பார்க்கவே முடியலீங்களே.?- தற்செயலாய் சாந்தாவை அந்தக் கோயில் வாசலில் சந்தித்துவிட்ட சரவணன் பட்டென்று கேட்டு விட்டான். ஒரு கணம் அவன் யார் என்பதை ஊகிக்க முடியாமல் நின்றிருந்த சாந்தா “நாந்தாங்க.அன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மேலே உங்களை ஆஸ்பத்திரில கொண்டு விட்டேனே.ஞாபகமில்லியா.” என்றவுடன் புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.

“ஒண்ணுமில்லீங்க.என் தம்பி உடம்பு சரியில்லாம இருக்கான்.அதான்.” – அவள் தன்னிடம் மறைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் சரவணன். ‘

“ஓண்ணு தெரிஞ்சிக்குங்க.ஆட்டோக்காரனுக்குத் தெரியாத தகவல் கிடையாதுங்க.ஊர்ல எங்கெங்க என்னென்ன நடக்குதுன்னு எப்டியும் எங்க காதுக்கு வந்துடும்.அன்னைக்கு ராம் நகர்ல நடந்த கொலைல உங்க தம்பியை அடிச்சுப் போட்டுட்டாங்க.அதானே..இதெல்லாம் எங்களுக்குப் பழைய நியூசுங்க.அவன் உங்க தம்பிங்கிறதுதான் எனக்குப் புதுசு.அதுவும் இன்னைக்குக் காலைலதான் தெரிஞ்சிது.அந்த உறாஸ்பிடல் வாசல்ல இருக்கிற ஆட்டோக்காரங்க எல்லாரும் எனக்கும் நண்பர்கள்தாங்க.நீங்க தெனமும் வந்துட்டுப் போறதை அவுங்களும் கவனிச்சிட்டுத்தான் இருக்காங்க.அது கிடக்கட்டும்.இப்போ உங்க தம்பி எப்படி இருக்காரு.அதச் சொல்லுங்க.”

“பரவால்லீங்க.ஆனா பயம்தான் நீங்கினபாடில்ல.எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்.மனசுலேர்ந்து அந்தப் பதட்டம் வெலகின மாதிரித் தெரில.”

“சின்னப் பையன்தானேன்னு விட்டிருக்கலாம்.அந்தப் பசங்க எதுக்கும் அஞ்ச மாட்டானுங்க.இதுவே பெரிய ஆளாயிருந்திருந்தா இன்னொரு கொலைன்னு கூடப் பார்க்காம முடிச்சிட்டுப் போயிருப்பாங்க.பொடிப் பயதானேன்னு விட்டுட்டாங்க.நா சொன்னதா இத யார்ட்டயும் சொல்லிப் புடாதீங்க.ஏற்கனவே எங்கள விடாம வந்து மேய்ஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க.போலீசுக்கு பயந்தா எங்க பொழப்பே நடக்காதுங்க.”

அவன் சொல்வதை அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த சாந்தா “சரி வர்றேங்க.”என்று விட்டுக் கிளம்பினாள்.

“ஏங்க.வண்டில வாங்களேன்.கொண்டு விட்டுட்டுப் போறேன்.”

“பார்த்தீங்களா.அன்னைக்கு உங்க வண்டில வந்ததுக்கே இன்னும் நான் காசு தர்லே.இந்தாங்க பிடிங்க.”

“இப்போ வர்றேன்னு சொல்லுங்க.வாங்கிக்கிறேன்.”

“இல்லீங்க.நான் பஸ்லயே போய்க்கிறேன்.”

“இந்த ஏரியாவுலே அடிக்கடி பஸ் வராதுங்க.ஏறுங்க.கொடுக்குறதக் கொடுங்க.”

அவனின் வற்புறுத்தலில் தளர்ந்து போன சாந்தா ஏறி உட்கார்ந்தாள். கடுமையான வாகன நெரிசலில் அநாயாசமாக அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு போவது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனின் ஓட்டுதலில் தெளிந்த நிதானத்தை உணர்ந்தாள் அவள். எதிர் வரும் வாகனங்களை சங்கடமின்றி விலக்கிக் கொண்டு தனக்கென்று உள்ள பாதையில் முன்னும் பின்னும் நகரும் வாகனங்களின் அருகாமையை அளவாக உணர்ந்து எந்தக் குலுங்கலும் பதட்டமும் இல்லாமல் அவன் முன்னேறியது அவளை திருப்திப் படுத்தியது. எந்தவொரு இடத்திலும் உறாரன் சத்தம் எழுப்பாமல் அவன் முன்னேறியதுதான் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“உறாரனே அடிக்க மாட்டேங்கறீங்க.?” கேட்டே விட்டாள் அவனிடம்.

“எதுக்குங்க தேவையில்லாம.? அதுதான் வரிசையா எல்லா வெஉறிக்கிளும் போய்க்கிட்டே இருக்குல்ல.ஒருத்தன் பின்னால ஒருத்தன் போயிட்டேதான இருக்காங்க.உறாரன் அடிச்சு தேவையில்லாம எதுக்குச் சத்தம் எழுப்பணும்.? நிறையப் பேரு அநிச்சையா அதைச் செய்திட்டிருக்காங்க.என்னவோ இவுங்க உறாரன் பண்றதுனாலதான் அவுங்க விலகுறாங்கங்கிற மாதிரி.அது அப்டியில்லீங்க.முன்னாடி போகுற வாகனத்தை மனசுல வச்சு அவனவன் ஸ்டெடியாப் போயிட்டிருந்தாலே எல்லா வண்டியும் தன்னால நகர்ந்திடும்ங்க.நம்ம வாழ்க்கை கூட அப்டித்தாங்க..”

“என்ன சொல்றீங்க.?” – புரியாமல் கேட்டாள் சாந்தா.

“ஆமாங்க.நமக்கு முன்னாடி வாழ்ந்து முடிச்சவங்க எப்டி எப்டி வாழ்ந்திட்டுப் போயிருக்காங்கங்கிறதைக் கூர்ந்து கவனிச்சாலே போதும்.நம்ம வாழ்க்கை தானாச் சீராயிடும்.நம்மள மீறி எந்தத் தப்பும் நடந்திடாது.”

“ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிப் பேசறீங்க.?”

“அன்றாட வாழ்க்கையே ஒரு அனுபவம்தாங்க.எத்தனை விதமான மனுஷாளை இந்த வண்டியில ஏத்திட்டுப் போயிருக்கோம்.நல்லவன் கெட்டவன்ங்கிற வித்தியாசமில்லாம.எல்லாவிதமான ஆளுகளையும் பார்த்தாச்சுங்க.கைப்பையை மறந்து வச்சவங்களும் இருக்காங்க.வேணும்னே விட்டுட்டுப் போனவங்களும் இருக்காங்க.திரும்பக் கொடுத்த போது நன்றி சொன்னவங்களும் இருக்காங்க.இது என்னுதுல்லையேன்னு வம்புல மாட்டி விட்டவங்களும் இருக்காங்க.”

“உங்களோட பேசினதுல நேரம் போனதே தெரிலீங்க.”

“அது சரிங்க.உங்க தம்பிக்கு யார் துணையிருக்காங்க.?”

“என் தங்கச்சிய உட்கார்த்தி வச்சிருக்கேங்க.நா இப்போ போயிடுவேன்.ராத்திரி அங்கதான் தங்கல்.”

“அப்போ ஒண்ணு செய்யுங்க.இந்த நம்பருக்கு ஒரு போன் பண்ணுங்க.நா கொண்டு விடறேன் உங்களை.”

வண்டியை நிறுத்தி சரவணன் தன் ஃபோன் நம்பரை ஒரு சிறு தாளில் எழுதிக் கொடுத்த போது வேண்டாம் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை சாந்தாவுக்கு. அவனின் மேல் ஏன் இந்த ஈர்ப்பு அவளுக்கு? தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ஒரு முறை. ரொம்பவும் அபூர்வமாகத்தான் அவள் ஆட்டோவில் பயணிப்பது வழக்கம். அப்படிப்பட்ட தான் எப்படி இதற்குச் சம்மதித்தோம்? பஸ்ஸில் போய்த்தானே பழக்கம்? இப்போது திடீரென்று எடுத்ததெற்கெல்லாம் ஆட்டோ என்றால் காசுக்கு எங்கே போவது?

“யோசிக்காதீங்க.ஒரு அவசரத்துக்குத்தானே..அதுக்கு உதவாட்டா அப்புறம் இந்தத் தொழில் செய்துதான் என்ன புண்ணியம்? நாங்க பிரசவத்துக்கு மட்டும் இலவசம் இல்லை.அவசரத்துக்கும்தான் இலவசம்ங்க.என்ன கொஞ்சம் சாவகாசமாப் பணம் வாங்கிக்கிடுவோம்.உங்கள மாதிரித் தெரிஞ்சவங்களுக்குத்தான் அந்தச் சலுகையும்.”

சரவணன் இதைச் சொன்ன போது இருவரும் தங்களை மறந்து சிரித்து விட்டனர். அந்த சந்தோஷத்தில் பணம் கொடுத்த அவள் கைகள் புதியதாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அந்தக் கணத்தில் வெகு மென்மையாக ஆதரவாக உணர்ந்தன.

“உங்க தம்பியப் பத்திக் கவலைப் படாதீங்க.அங்க வெளிய எங்க ஆட்கள்ட்ட சொல்லி வைக்கிறேன்.குணமாக்கி சேப்டியா வீட்டுக்குக் கூட்டி வந்திடலாம்.நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..அந்தக் கேசு வேறே திசைல போயிட்டிருக்கு. உங்க தம்பிக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோன்னுல்லாம் நினைக்க வேண்டாம்.பயப்பட எதுவுமேயில்லை.அதெல்லாம் பெரிய எடத்து விஷயம்.கதையே வேறே.”

சொல்லிவிட்டு அவன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு பறந்த போது அது செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. இரைச்சலும் போக்குவரத்தும் ஓய்ந்திருந்த அந்த நேரத்தில் ஒரு வாகனம் எந்த விகிதத்தில் செல்ல வேண்டுமோ அந்த சரி விகிதத்தில் சரவணனின் வாகனம் நகர்ந்ததாய்த் தோன்றியது அவளுக்கு. ரொம்பவும் நிதானமான பொறுப்பான பொருத்தமான ஒரு இளைஞனைத் தான் சந்தித்து விட்டதாய் அவள் மனம் சொல்லியது அப்போது.

( 8 )

மாரியின் மனசு கொதித்துக் கொண்டிருந்தது. அண்ணன்ட்டேயிருந்து எந்தத் தகவலும் இல்லையே.காரியம்னாத்தான் மட்டும் பேசுவாரோ.என்னடா தெனம் ஸ்டேஷன் போயிட்டிருக்கியா.சும்மா தைரியமாப் போயிட்டு வா.எல்லாம் நா பார்த்துக்கிடுறேன்.ஒரு வார்த்த சொல்லலியே.இத்தன நா இப்டி இருந்ததில்லையே.தங்கச்சி பிரிஞ்சி போயிடுச்சின்னு புலம்பினனே.அதுல கோபமாயிட்டாரோ.அதுகிட்ட ஒரு முறை வாலாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டாரே.அந்தக் கோபமோ.ஆத்தாளக் காணலன்னு அழுதேனே.அது பிடிக்கலையோ.அவருக்கென்ன எல்லாத்தையும் உதிர்த்தவரு.நம்பள மாதிரி அப்பா அம்மா தங்கச்சின்னு இருந்தாத்தான தெரியும்.அவுருக்குத்தான் எதுவுமே கெடையாதே.கூத்தியாளக் கட்டிட்டு அழுதிட்டிருக்குறவரு.சீ அதுவும் ஒரு பொழப்பா.அவளும் அவ மூஞ்சியும்.ஆனாலும் அவ ஒடம்பு ஆத்தாடீ.அன்னைக்கு என்ன மறந்து ஒரு பார்வை பார்த்தனே அந்தாளு மூஞ்சி எம்புட்டுச் சிறுத்துப் போச்சு.அவளும் என்னைப் பார்த்தாளே.அதான் பிடிக்கலையோ? சே.அப்பவே தங்கச்சி சொல்லிச்சு.மச்சானோட தங்கச்சி ஒண்ணு இருக்கு கட்டிக்கன்னு.இந்த முட்டாப்பய மண்டைல ஏறிச்சா? எல்லாரும் எனக்கு நல்லதுதான் சொன்னாக.நாந்தான் இப்டிச் சீரழிஞ்சு போயிட்டேன்.சும்மாத் திரிஞ்சிக்கிட்டு இருந்தவன கரெக்டா வலை போட்டுப் பிடிச்சிட்டானுக.அதுக்காக? எனக்கெங்க புத்தி போச்சு? எல்லாம் என் கேடு காலம்.இப்டித்தான் சீரழியணும்னு தலையெழுத்தோ என்னவோ? இல்லன்னா இப்போ இப்டியெல்லாம் நெனக்கத் தோணுமா? கெட்டுச் சீரழிஞ்சாத்தானே இப்டியெல்லாம் புத்தி வரும்? இதெல்லாமும் அன்னைக்கு ரத்தம் பார்த்த போது உண்டான தடுமாத்தமோ?

அதுக்கு முன்னாடி அந்த ஆந்திராக்காரப் பயலுக செய்துட்டுப் போயிட்டானுங்க.கையைக் காண்பிச்சதோட சரி.இப்போ நாமளேல்ல செய்ய வேண்டி வந்திடுச்சி.பாவம்யா அந்தாளு.எப்டிக் கால்ல விழுந்து கெஞ்சினான்.கெஞ்சக் கெஞ்ச வெட்டினானுங்களே.வெட்டினானுங்க என்ன.நானுந்தான வெட்டினேன்.சே! அன்னைக்கு ஊத்தாமப் போனதுதான் பெரிய தப்பாப் போச்சு.பொடியவாவது கசக்கி இழுத்திருக்கணும்.எப்டி ரெண்டையும் செய்யாமப் போனேன்.ஒரு வாரத்துக்கும் மேல ஆவப் போகுது.நம்ப கோஷ்டிக்காரனுவ எவனும் கண்ணுலயே படல.எல்லாத்தையும் புடிச்சி உள்ள தள்ளிட்டானுகளா?ஒரு வேள சரண்டர் ஆயிட்டானுவளோ? என்னைய மட்டும் விட்டுட்டானுக.தெனமும் டேஷனுக்கு வர்றேன்னு நோட்டம் பார்க்குறாகளோ? என்னப் பொறியா வச்சி மத்தவுகள வலை போடுறாங்ஞளோ? இந்தப் போலீசு வேலயே மர்மமால்ல போச்சு? எப்போ எதுக்கு உள்ள போடுவானுங்க.எதுக்கு வெளில விடுவானுங்கன்னே கணிக்க முடில்லயே? அண்ணன்கிட்ட அதெல்லாம் நமக்கு வேண்டாம்ணேன்னு பீத்தப் பேச்சுப் பேசினேன்.அது ஏன்? அந்தாளு கிரீடத்தத் தலைல வக்கப் போறான்னா?”

“அடுத்தவங்க சிந்துற ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் நீ பதில் சொல்லிதாண்டா ஆகணும்.உசிர எடுக்கிறதுக்கா உங்க ஆத்தா உனக்கு உசிரக் கொடுத்தா? நீ எடுக்கிற உசிரோட உசிரா இருக்காளே இன்னொரு ஆத்தா.அவளோட வயித்தெறிச்சல் வீண் போகாதுடா வீண் போகாது.அது உன்னை அழிச்சே தீரும்.அவ கும்பி கொதிச்சா நீ வெளங்குவியா? என் கும்பி கொதிக்குதுடா.இதுக்கே நீ அழிஞ்சு போவே.நீ சீப்பட்டுத்தான் சாகப் போறே பாரு.எவனோ ஒருத்தன் சொன்னானாம்.இவன் செய்தானாம்.ஒம்புத்தி எங்கடா போச்சு? அவன் பீயத் தின்னுன்னு சொன்னா தின்னுவியா? அறிவு கெட்ட முண்டம்.உன்னப் பெத்த ஆத்தாள விட அவன் எந்த வகைலடா பெரிசு? எதுல உசத்தி? அவ பேச்சக் கேட்காம அவன் பின்னாடி ஓடினியாக்கும்.? நீ அவனுக்குப் பயன்படுறவரைக்கும் தாண்டா வேணும் அவனுக்கு.பெறவு உன்னையும் போட்டுத்தள்ளத் தயங்க மாட்டாம் பாரு.உன் உசிரக் கொடுத்து அவனக் காப்பாத்துனேங்கிறியே.இன்னொரு உசிரை எடுக்கச் சொல்றவன் உன் உசிர எடுக்க  இன்னொருத்தன ஏவ மாட்டாங்கிறது என்ன நிச்சயம்? எத்தன நாளைக்கு விட்டு வைப்பான்னு நினைக்கிறே? அதுக்கும் குறி வச்சிட்டுத்தான் இருப்பாங்கிறதை மறந்திடாத.வேள வர்றபோது உந்தலையும் தப்பாதாக்கும்.இப்டியாச்சும் பொழச்சு உயிர் வாழணுமாடா?”

“அன்னைக்கு சக்திவேல் எம்புட்டுச் சொன்னான். எதயுமே காதுல வாங்கலியே நா.இதுக்கு ஆடு மாடா பன்னியாப் பொறந்து ஓரத்துல மேய்ஞ்சிட்டு சாக்கடைல பொறண்டுட்டுப் போயிடலாம்னானே? கடவுளே எம்புட்டு நடந்து போச்சு? சும்மாத் திரிஞ்ச காலத்துல இருந்த நிம்மதி கூட இப்ப இல்லையே? மனசு போட்டு இந்த அழுத்து அழுத்துதே! இதுதா நா சம்பாதிச்சதா? கை நிறையப் பை நிறையக் காசு வச்சிருக்கனே? அது நிம்மதியைத் தராதா? அது பாபக் காசா? யாருமே வேண்டாம்னுட்டாகளே.அதத் தொடக் கூட இல்லையே ஆத்தா? அவ ரத்தத்துலதான பொறந்தேன் நான்.ஏன் எனக்கு புத்தி இப்டிப் பொறண்டு போச்சு.? மாரிக்குத் தலை சுற்றியது.

( 9 )

கண்கள் இருண்டு லேசான தடுமாற்றம் மாரியை ஆட்கொண்ட போது சரேலென்று அவனை இடிப்பது போல் சென்று பறந்த அந்தக் காரைப் பார்த்து திடுக்கிட்டான் அவன். யாரோ உள்ளே கெக்கலியிட்டுச் சிரித்தது போலிருந்தது. பெரிய இடிச் சிரிப்பு. நான்கைந்து பேர் சேர்ந்து போட்ட கும்மாளச் சிரிப்பு அது! கேட்ட குரல்தானா? வெறும் சிரிப்பில் எதைக் கண்டு பிடிக்க முடியும்? எவர்களாயிருக்கும்? அண்ணனோ? சே.சே.அவருன்னா வண்டிய நிறுத்தாமப் போவாரா? நான்னு தெரியாமப் போயிருப்பாகளோ? தெரிஞ்சிருந்தா வண்டி நின்னிருக்குமே? என்ன விட்டிட்டு அவுக எந்தக் காரியத்தைப் பார்க்க? அது சரி அவுரு ஏன் இங்க வரணும்? ஒரு வேள ஸ்டேஷனுக்கு வந்திருப்பாரோ.அங்க என்ன அவருக்குச் சம்பந்தம்? எனக்குத் தெரியாமயா? எனக்கு மட்டுந்தான இங்க கொடுத்திருக்காக.அவருக்கு டவுனாச்சே.அதுவும் பழைய கேஸாச்சே.இதுக்குக் கெடயாதே.பின்ன இங்க ஏன் திரியராரு.எத்தன எடத்தத்தான் பழகி வச்சிருப்பாரு? போறது யாரு.உண்மையிலேயே அவுருதானா? இல்ல வேற பார்ட்டியா? வேற பார்ட்டி இந்த வேளைல ஏன் இங்க அலையணும்? அவுரு வண்டிதானா அது? இல்ல வேற யாருதுமா? அடடே.நம்பரப் பார்க்க விட்டிட்டமே.எதுக்காக எம்பக்கத்துல வந்து கட்டிங் போடுறானுங்க.?

மாரி நிதானிக்கும் முன் அந்த இரண்டு புல்லட்களும் அவனை இடித்துத் தள்ளுவது போல் அருகருகே ஒட்டி உரசியவாறே கடந்து பறந்த அந்தக் கணத்தில் சரேலென்று ஏதோ ஆபத்தை உணர்ந்தவனாய் தன்னை மறந்த ஒரு உத்வேகத்தில் சட்டென்று வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான் அவன். எங்கிருந்துதான் கால்களுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ.தறி கெட்டுப் பறந்த அந்தக் கால்கள் சந்தித்த மேடு பள்ளங்கள் அவனைப் புறட்டிப் போட யத்தனித்துத் தோற்றுப் போயின. தோண்டிப் போட்டிருந்த பள்ளங்களையும். சிமென்ட் குழாய்களையும் தடுப்புப் பலகைகளையும் தாண்டித் தாண்டிப் பாய்ந்து கொண்டிருந்த அவன் அந்தக் காவல் நிலையத்;துக்குள் நுழைய முற்பட்டபோது சரேலென்று எங்கிருந்தோ மின்னலெனப் பாய்ந்த அந்த நீண்ட வீச்சரிவாள் அவன் உயிரை அரைக் கணத்தில்  பறித்துக் கொண்டு அருகேயிருந்த குப்பை மேட்டில் போய் விழுந்தது. என்ன நடக்கிறது என்பதைக் கணிக்கும் முன் மேலும் நாலைந்து தடித்த உருவங்கள் அவன் உயிர் காவு கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு  கண்ணிமைக்கும் நேரத்தில்; அந்த இடத்தை விட்டு அந்தப் பெரிய வாகனத்தில் பறந்த போது வாசலில் காவலில் நின்ற காவலர்கள் பயத்தில் வெளிறிப் போய் பிணமாய் நின்று கொண்டிருந்தனர்.

( 10 )

நடந்த கொலைக்கு கண்ணால் கண்ட சாட்சிகளே இல்லையென்று வழக்கு தள்ளுபடியெனத்  தீர்ப்பான அந்த நாளில் சரவணன் மூலமாக அந்தச் செய்தியை அறிய நேர்ந்த சாந்தாவின் மனதில் என்னவோ ஒரு துக்கம் நெருடத்தான் செய்தது. அறியாப் பருவத்தில் பயத்திலிருந்து மீண்டு தன் கல்வியை செவ்வனே கவனித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை அவள் நினைத்துக் கொண்டாள். எத்தனையோ ஆயிரம் வழக்குகளில் ஒன்றாகிப் போன அந்தச் சம்பவம் காலத்தோடு காலமாகக் காணாமல் கரைந்து போனது.

“இது கலி காலமுங்க.இப்போ இப்டித்தான் நடக்கும்.மனுஷன மனுஷன்; வெட்டிக்குவான்.குத்திக்குவான்.எல்லாவிதமான முரணான விஷயங்களும் இந்த யுகத்துலதான் நடக்குமாம்.அநியாயமும்; அக்கிரமமும்தான் கொடி கட்டிப் பறக்குமாம். இந்த யுகத்துக்குப் பிறகுதான் கல்கி தோன்றுவாராம்.அப்போதான் எல்லாக் கெட்டவைகளும் அழியுமாம். அந்தக் காலம் வரைக்கும் இந்த உலகம் பொறுக்க வேண்டிதான்.நம்மள மாதிரி நடுத்தர வர்க்க சமுதாயம் இதுகளையெல்லாம் பார்த்து மனசுக்குள்ளயே கொதிக்க வேண்டிதான்.இல்லன்னா கண்ண மூடிக்கிட்டுக் கிடக்க வேண்டிதான்.ரொம்பச் சரியா யோசிச்சா அதத்தான் செய்ய முடியும்.தீமையை அழிக்கிறதும் நியாயத்தை நிலை நாட்டுறதும் கதைகள்லயும் சினிமாவுலயும் வேணும்னா பார்க்கலாம். பார்த்து ஆறுதல் பட்டுக்கலாம். நிஜத்துல நடக்கணும்னா அதுக்கு யுகாந்திர காலமாகும்.உங்களப் பொறுத்த வரைக்கும் உங்க தம்பி முழுசாக் கிடைச்சுட்டான்ல.அத்தோட விடுங்க.அவ்வளவுதான்.இந்த உலகத்துல எவ்வளவோ நடக்குது.நமக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்.அந்த ரொம்பக் கொஞ்சமே நம்மளை இவ்வளவு கஷ்டப்படுத்தினா இன்னும் பலதையும் தெரிஞ்சிக்கிட்டோம்னு வையுங்க.போதும்டா சாமின்னு ஆயிடும்.நா பேசுறது பொட்டத்தனமாக்கூட உங்களுக்குத் தெரியலாம்.ஆனா அதுதான் யதார்த்தம்.” – சரவணன் சொல்லிக் கொண்டே வண்டியைத் திருப்பினான். சாந்தாவின் வீடு வந்தது.

“உள்ளே வாங்க அங்கிள்.வந்து சாப்டுட்டுப் போங்க.” – சாந்தாவின் தம்பியும் தங்கையும் அவனை ஆளுக்கொரு பக்கமாய்க் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது சாந்தா அதை ஏனோ தடுக்கவில்லை.

—————————————-

 

அமிழ்து

ஸிந்துஜா

“அப்பா இன்னும் நீங்க எத்தனை நாள்தான் தனியா அந்த ஆத்திலே உக்காந்துண்டு கஷ்டப்படப் போறேள்? எங்களோட பேசாம பெங்களூருக்கு வந்துடுங்கோ” என்று அன்று காலை மறுபடியும் ரங்கநாதனின் பிள்ளை திலீப் போனில் சங்கடப்பட்டான்.

“பாக்கலாண்டா” என்றார் ரங்கநாதன்.

“மூணு மாசமா இந்த காமராஜர் பதிலையே சொல்லிண்டு இருக்கேள்.”

அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரி, சாப்பிட்டாச்சா? என்ன டிபன் இன்னிக்கி?” என்று கேட்டான் திலீப்.

அவர் ஒரு கணம் பொய் சொல்லி விடலாம் என்று நினைத்தார். பிறகு மனதை மாற்றிக் கொண்டு “இல்லே. இன்னிக்கி டிபன் வேண்டாம்னு பாக்கறேன்” என்றார்.

“ஏன், உடம்பு சரியில்லையா? ஜுரமா?” என்று அவன் பதறுவது அவருக்குக் கேட்டது.

“இல்லே. வயிறு கொஞ்சம் மொணங்கறது. ஒரு வேளை லங்கனம் போட்டா சரியாப் போயிடும்” என்றார்.

திலீப் அவரிடம் “நேத்திக்கு கோபி ஐயங்கார் ஓட்டலுக்குப் போனேளா?” என்று குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான்.

“உன்னிடமிருந்து ஒரு குற்றவாளி தப்பித்து விட முடியுமா?” என்றார் ஆங்கிலத்தில். அவன் பெங்களூரில் லாயராகப் ஒரு பெரிய கம்பனியில் வேலை பார்க்கிறான். அவன் சொல்லுவதில் உண்மை இருக்கிறது. சட்டினியில் பச்சை மிளகாயை மட்டும் வைத்து அரைத்தது போல அப்படி ஒரு காரம். ஐம்பது வருஷத்துக்கு முன்னால் அவரது இருபதாவது வயதில் அந்த ஒரப்பு வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வயதில்?

“அதுக்குத்தான் சொல்றேன். நீங்க இங்கே வந்துடணும்னு. வீட்டு சாப்பாடுதான் உங்களுக்கு ஒத்துக்கும். சரி, இப்போ எளனி, ஹார்லிக்ஸ்னு நீராகாரமா சாப்பிடுங்கோ. மத்தியானம் தயிர் சாதம் சாப்பிட்டா சரியாயிடும். சாப்பிட்டதுக்கு அப்புறம் ஜெலுசில் போட்டுக்கோங்கோ. நீங்க அங்கேர்ந்து கிளம்பி இங்க வந்துடறதுதான் பெட்டர். ராத்திரி போன் பண்றேன்” என்று போனைக் கீழே வைத்து விட்டான்.

ரங்கநாதன் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின் மனைவியுடன் மதுரைக்கு வந்தார். சென்னையில் அவர் உத்தியோகத்தில் இருந்த போது மதுரையில் வாங்கிய வீடு. மதுரையில்தான் அவர் பிறந்தது படித்து வளர்ந்தது எல்லாம். வேலைக்காக என்று சென்னைக்குப் போய் விட்டாலும் சென்னையின் ஆரவாரம் அடங்காப்பிடாரித்தனம் அவரைக் கவரவில்லை. இதற்கு அவர் மனதில் ஏற்கனவே மதுரை ஒரு பெரிய கிராமம் என்று ஆழப் பதிந்து அதன் எளிமையும் பகட்டற்ற சூழலும் ஒரு வித நேசத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டதுதான் காரணமாக இருக்க வேண்டும். அவருக்கும் அவரது மனைவிக்கும் இருந்த ஆசைக்கு ஒரு பெண்ணும் அவர்களிடம் இல்லாத ஆஸ்திக்கு ஒரு பையனும் பிறந்தார்கள்.

பெண்ணைத் திருச்சியில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டார். பெங்களூரில் அவருடைய பையன் திலீபின் குடும்பம் இருந்தது. அவன் லா ஸ்கூலில் படிக்க பெங்களூர் வந்தவன் ஊர் பிடித்து விட்டதால் ஒரு வேலையையும் வாங்கிக் கொண்டு பெங்களூர்வாசியாகி விட்டான். அவனைத் திருமணம் செய்து கொண்ட நர்மதாவும் பெங்களூர்க்காரி. அவர்களுடைய ஒரே பெண் பத்மினி ஊட்டியில் லவ்டேலில் உள்ள ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தாள்.

அவர் மனைவி மூன்று மாதங்களுக்கு முன் காலமாகி விட்டாள். தனது வாழ்நாளில் வெந்நீர் போடக் கூடச் சமையலறையில் நுழைந்திராத அவருக்கு மனைவியின் மறைவுக்குப் பின் சாப்பாட்டுப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. ஊரிலிருந்து சாவுக்கு வந்திருந்த உறவினர்கள், காரியங்கள் முடிந்த பின் பத்துப் பதினைந்து நாள்கள் சமையல் செய்து போட்டு விட்டுப் போனார்கள். அப்புறம் அவர் வடக்கு மாசி வீதியில் இருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து டிபன், லஞ்ச், இரவு உணவு எல்லாம் வரும்படி ஏற்பாடு செய்து கொண்டார். என்றாவது மாலையில் வயிற்றைக் கிள்ளும் போதும் நாக்கு அரிப்பெடுக்கும் போதும் கோபி அய்யங்கார் கடைக்குப் போய் வெள்ளையப்பம், பஜ்ஜி, காரச் சட்டினி என்று இறங்கி அடித்து விட்டு வருவார்.

‘தகப்பனார் மதுரையில் எதற்காகத் தனியே கிடந்தது உழல வேண்டும்; அதுவும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு’ என்று திலீப் வாரத்துக்கு ஒரு முறை அவரைப் போனில் தொந்திரவு பண்ணிக் கடைசியில் பெங்களூருக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சமையல்கார மாமியை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். நன்றாகச் சமைத்துப் பழக்கப்பட்ட கை என்று அவர்கள் ஆறு மாதம் மகிழ்ந்து கொண்டிருந்த போதே அந்தக் கை கொஞ்சம் நீளமாகி விட ரங்கநாதனின் சில கைக்குட்டைகள், நர்மதாவின் பெர்ஃபியூம், திலீப் தனது அறையில் மறந்து விட்டுச் சென்று விட்ட சில பத்து ரூபாய்கள், சமையலறையில் ஒரு மாதத்துக்கு இருக்கட்டும் என்று வாங்கிப் போட்டிருந்த ஆறு எம்.டி.ஆர். இட்லிப் பொடிப் பாக்கெட்டுகளில் இரண்டு எல்லாம் கால் முளைத்து வீட்டை விட்டுப் போய் விட்டதால் மாமியையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விட்டார்கள். அதனால் சமையல் செய்யும் வேலை நர்மதாவின் தலையில் விழுந்தது. அவள் மிக நன்றாகச் சமைத்தாள். ரங்கநாதனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ரங்கநாதன் அவள் சமையலை ஆரம்பித்த முதல் நாளே சொல்லி விட்டார். “இதோ பாரும்மா. ரொம்ப இழுத்து விட்டுண்டு நீ எதுவும் செய்ய வேணாம். சமையக்காரி இருந்தப்பவே கார்த்தாலே பாதி நாள் அவ டயத்துக்கு வரமாட்டா. சனி ஞாயிறிலே திலீபுக்கு லீவுன்னு நேரே பிரென்ச்க்குப் போயிடுவோம். இல்லாட்டா அந்த ரெண்டு
நாள் மட்டும் மல்லேஸ்வரத்திலே இல்லாத ஹோட்டலா? அவன் ஏ 2 பி க்கோ, எம்.டி. ஆருக்கோ போய் டிபன் வாங்கிண்டு வரட்டும். அதனாலே நீ டிபன் கச்சேரியைக் காலம்பற வச்சுக்க வேண்டாம். தெனமும் பத்து பத்தரைக்கு நேரே லஞ்சு சாப்பிட்டுடலாம். சரியா?” என்று திட்டம் போட்டுக் கொடுத்து விட்டார்.

கணவனும் மனைவியும் நல்ல ஐடியா என்று ஒப்புக் கொண்டார்கள்.

ரங்கநாதன் மேலும் நர்மதாவிடம் “கொழம்போ சாம்பாரோ வக்யற
அன்னிக்கு ரசம் பண்ணாதே, கறி பண்ணினா கூட்டு எதுக்கு? கூட்டு பண்ற நாள்ல கறி ஒதுங்கிக்கட்டும்” என்று அவர் சொன்ன போது நர்மதா சிரித்தாள். “ரெண்டுமே இல்லாம ஒண்ணு ரெண்டு நாள் அப்பளாம், சிப்ஸ், ஊறுகாயை வெச்சுண்டு சமாளிச்சுக்கலாம். இல்லியா?” என்று திட்டத்தை முடித்து வைத்தார்.

ஆனால் சில வாரங்கள் கழித்து ரங்கநாதன் ஒரு பிரச்சினையைச்
சந்திக்க வேண்டியதாயிற்று. அதை யாரிடமும், குறிப்பாகப் பிள்ளையிடமும் நாட்டுப் பெண்ணிடமும், சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. நர்மதா சமைக்க ஆரம்பித்ததிலிருந்து திலீப் மாத்திரம் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போய் விடுவான். நர்மதா பத்து மணி வாக்கில் சமையலை முடித்து விடுவாள். ரங்கநாதன் பத்தரை மணிக்குச் சாப்பிடுவதைப் பழக்கிக் கொண்டார். திலீப்பின் பியூனும் அந்த நேரத்துக்கு வந்து நர்மதா கட்டி வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு போவான். நர்மதா நிதானமாகப் பனிரெண்டு மணிக்குச் சாப்பிட உட்காருவாள்.

நாளடைவில் இந்த சமையல் நேரமும் சாப்பிடும் நேரமும் மாற்றமடைந்தன. நர்மதா திடீரென்று நெட் ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சினிமாக்களை இரவு பார்க்க ஆரம்பித்ததால் படுக்கையில் இரவு விழ வெகு நேரமானது. அதனால் அவள் காலையில் நேரங் கழித்து எழுந்திருக்க ஆரம்பித்தாள். சமையல் செய்து முடிக்கவும் நேரமாயிற்று. அதனால் ரங்கநாதன் பதினோரு மணி, பதினொன்றரை மணிக்குதான் சாப்பிட முடிந்தது. அவ்வளவு நேரம் அவரால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் நர்மதாவிடம் சொல்ல அவருக்கு இஷ்டமில்லை. தானே வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக் கொண்டோமோ என்று கூட அவர் தன்னை நொந்து கொண்டார்.

ஒரு நாள் திருச்சியிலிருந்து பெண் கூப்பிட்டாள்.

“என்னம்மா சாரதா? எப்படி இருக்கே? மாப்பிள்ளையும் குழந்தைகளும் எப்படி இருக்கா?” என்று கேட்டார்.

அவள் பதிலுக்கு அவர்கள் மூவரையும் பற்றி நலம் விசாரித்தாள்.

“அப்பா, நான் இப்ப எதுக்கு உங்களைக் கூப்பிட்டேன்னா என்னோட மாமனாருக்கு இருபத்தி அஞ்சாம் தேதி சதாபிஷகம் நடக்கறது. நீங்க எல்லோரும் வரணும்னு இவரும் ரொம்ப சொல்றார்” என்றாள் சாரதா.

இருபத்தி ஐந்தாம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தது. ஆனால் தனக்கு ஆபீசில் வேலை இருப்பதால் வருவதற்கில்லை என்று திலீப் சொன்னான். ஆபிஸ் போகும் அவனைப் பார்த்துக் கொள்ள நர்மதாவும் வரவில்லை என்று சொல்லி விட்டாள். சம்பந்தியாக அவர் போவதைத் தவிர்க்க முடியாது. விசேஷம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னே அவர் மதுரை சென்றார்.

சதாபிஷேகம் முடிந்த பின்னும் மதுரையில் அவர் ஒரு மாதம் பெண்ணுடன் இருந்தார். இப்போது அவருக்கு வேளா வேளைக்கு உணவு கிடைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. அவர் அங்கு வந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் தான் எதிர்கொண்ட சாப்பாட்டுப் பிரச்சினையைப் பெண்ணுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர் பெங்களூருக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னபோது “இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போயேம்ப்பா” என்றாள் பெண். அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்தார்.

கிளம்பும் அன்று “எல்லாம் எடுத்து வச்சுண்டுட்டேளா?” என்று சாரதா ரங்கநாதனிடம் கேட்டாள்.

“எங்கியோ அமெரிக்காவுக்குப் போறாப்பிலேன்னா நூறு தடவை கேட்டுண்டு இருக்கே?” என்று ரங்கநாதன் பெண்ணைப் பார்த்துச் சிரித்தார். “இங்க இருக்கிற பெங்களூருக்கு ராத்திரி ட்ரெயின் பிடிச்சா காலங்காத்தால கொண்டு போய்த் தள்ளி விட்டுடறான்.”

“இல்லே, ஏதாவது மறந்து வச்சிடக் கூடாதேன்னுதான். கண்ணாடி, மொபைல்,வாட்ச், ஸ்லோகப் புஸ்தகப் பை, மருந்து டப்பான்னு எல்லாம் முக்கியமான ஐட்டங்களாச்சே!”

“திருச்சியிலே கிடைக்கிறதை விட இதெல்லாம் ஃபாஸ்டா பெங்களூர்லே கிடைச்சுடும். ஒழுங்கா வேளைக்குக் கிடைக்காதது சாப்பாடுதான்.”

சாரதா பரிவுடன் தந்தையை நோக்கினாள்.

“அதெல்லாம் சரியாயிடும். கவலைப்படாதேங்கோ.”

“கவலை என்ன கவலை எழுபது வயசுக்கு? அதுக்காக நானும் எவ்வளவு நாள்தான் பொண் வீட்டிலே உக்காந்துண்டு சாப்பிட்டாறது?”

“நீங்களா நினைச்சிண்டு இப்படிப் போறேள். நூறு வருஷத்துக்கு மின்னாலே எவனோ பொண்ணாத்திலே போய்க் கையை நனைக்கிறதே வெக்கம். அதிலே இன்னும் அங்க போய் நாள் கணக்குலே தங்கறதுங்கறது மானக்கேடுன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அதையே உடும்புப் பிடியாப் பிடிச்சிண்டு ..! ஹ்ம். காலம் எவ்வளவோ மாறிப் போயிடுத்து. இங்க நீங்க இருக்கறதைப் பத்தி நானோ உங்க மாப்பிள்ளையோ ஒரு வார்த்தை சொன்னோமா? நீங்க ரெண்டு குழந்தைகளுக்கும் கைடு மாதிரி இங்க இருக்கறது பெரிய அதிர்ஷ்டமா இருந்தது. ஏன் போறேள்னு அவருக்கும் ரொம்ப வருத்தம்தான்” என்றாள் சாரதா. அவர் பெண்ணைச் சமாதானப்படுத்தி விட்டு ரயில் ஏறினார்.

பெங்களூரில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

காரை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து அவரை அழைத்துச் சென்ற திலீப் அவரிடம் ” நாளைக்கு விடிகார்த்தாலையும் எனக்குப் பிக்கப் வேலை இருக்கு” என்று சிரித்தான். “பத்மினி ஊட்டிலேர்ந்து வரா!”

அவர் சில வினாடிகள் யோசித்து விட்டு “இப்ப ஒண்ணும் ஸ்கூல் லீவு கிடையாதே?” என்றார்.

“இல்லே. ஒரு மாசம் ஸ்டடி லீவ்ன்னு இங்க வரா. அப்புறம் பரீட்சை ஆரம்பிக்க ரெண்டு நாள் முன்னாலே திரும்பிப் போகணும்” என்றான்.

அன்று வழக்கம் போல் திலீப் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குப் போனான். நர்மதா சமையலை முடிக்கும் போது பதினொன்றே கால் ஆகி விட்டது. ரங்கநாதன் நல்ல பசியுடன் சாப்பிட உட்காரும் போது மணி பதினொன்றரை.

மறுநாள் காலையில் பத்மினி பெட்டி படுக்கையுடன் உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் . அவரைப் பாத்ததும் “தாத்தா!” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் . அவளுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.

“என்ன தாத்தா? இப்பிடி இளைச்சுப் போயிருக்கேள்?” என்று அவரது கையைப் பிடித்துப் பார்த்தாள்.

“நானா? என்ன விளையாடறியா? உங்கம்மா கைபாகத்திலே மாசா மாசம் எனக்கு வெயிட் கூடிண்டே போறது” என்று அவர் சிரித்தார்.

ஒன்பது மணிக்கு பத்மினி அவரிடம் வந்து “தாத்தா, வாங்கோ. டிபன் சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு போனாள்.

பொங்கலும் கொத்ஸும் டைனிங் டேபிளில் சட்னியுடன் வீற்றிருந்தன.

“அந்த ஹாஸ்டல்லே இதையெல்லாம் இவளுக்கு யார் பண்ணிப் போடறா? தினைக்கும் ப்ரெட்டும் ஜாமும் சாப்பிட்டுண்டுதானே கிடக்கறது குழந்தைகள். அதனாலேதான் இப்பிடி டிபன் பண்ணினேன்” என்றாள் நர்மதா ரங்கநாதனைப் பார்த்து. “அதுவுமில்லாம காலம்பற எட்டரைக்கு பிரேக் ஃ பாஸ்ட், மத்தியானம் பன்னண்டரைக்கு லஞ்ச், ராத்திரி எட்டு மணிக்கு டின்னர்னு ஹாஸ்டல்லே சாப்பிட்டுடறா. இங்கையும் அந்தந்த நேரத்துக்கு அப்படியே பண்ணிக் குடுத்துட்டாப் போச்சு.”

பத்மினி இருந்த ஒரு மாதமும் இப்படித்தான் சமையலும் சாப்பாடும் நடந்தன.

பத்மினி கிளம்புவதற்கு முதல் நாள் இரவு அவர்கள் வெளியே போய்ச் சாப்பிடலாம் என்று ஆஷா ஃபுட் கேம்ப் போனார்கள்.

“இங்கே நார்த் இண்டியன் நன்னா பண்றான் இல்லே?” என்றாள் நர்மதா.

“நார்த் இண்டியா போய்தான் நார்த் இண்டியன் ஐட்டம்ஸ் சாப்பிடணும்” என்று சிரித்தான் திலீப்.

“நாங்கூட எக்ஸாம் முடிஞ்சு ரெண்டு மாசம் லீவு விடறச்சே டெல்லி போலாம்னு இருக்கேம்ப்பா. என் ஃபிரென்ட் சுலேகா அவாத்திலே வந்து தங்கிண்டு அப்படியே கொஞ்சம் நார்த் இண்டியா எல்லாம் சுத்திப் பாக்கலாம்னு சொல்றா” என்றாள் பத்மினி.

ரங்கநாதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“போடி. வருஷம் பூரா உன்னைப் பிரிஞ்சு நாங்க இருக்கோம். லீவுலேயும் எங்கேயோ போறாளாம். சும்மாக் கிட ” என்றாள் நர்மதா.

ரங்கநாதன் நன்றியுடன் நர்மதாவைப் பார்த்தார்.

“அப்பா! பாருப்பா அம்மாவ!” என்று பத்மினி சிணுங்கினாள்.

திலீப் “ஆசைப்பட்டா அவ போயிட்டு வரட்டுமே. எப்பவும் நம்ம கூடவே கட்டிப் போட்டு வச்சுக்க அவள் என்ன கன்னுக்குட்டியா?” என்றான்.

ரங்கநாதன் ” இல்லே. அவ இங்கியே இருக்கட்டும். வெளியூர்லாம் போக வேண்டாம்” என்றார் குரலைக் கடுமையாக ஆக்கிக் கொண்டு.

பத்மினி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள். தன் குரல் கடுமைக்குப் பதிலாக இறைஞ்சலாய் ஒலிப்பதைத்தான் அவள் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் என்று அப்போது அவருக்குத் தோன்றியது.