துக்கத்தின் இறுதி கட்டம்

எஸ். சுரேஷ்

 

ஆறு மாதங்கள் இருக்கும், லஞ்ச் சாப்பிட தட்டை எடுத்து மேஜையின் மேல் வைத்தபோது அவன் மொபைல் ஒலித்தது. “சரவணா. ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் வாடா. அப்பாவுக்கு ஏதோ ஆகிடுச்சு. எல்லா டாக்டரும் இப்போ ரூம்ல இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு சரவணா. உடனே கிளம்பி வா”.

அம்மாவின் குரலில் தெரிந்த பயம் சரவணனையும் தொற்றிக்கொண்டது. அவன் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது அம்மாவின் அழுகைக் குரல் உள்ளேயிருந்து கேட்டது. அப்பா மாரடைப்பு வந்து, திரிப்ள் பைபாஸ் முடிந்து. தேறி வரும்போது எதிர்பாராதவிதமாக அவர் மரணம் நிகழ்ந்திருந்ததது. டாக்டர்கள் எல்லோரும் அவர் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்று சொல்லியிருந்தார்கள். சற்று சோர்வடைந்திருந்தாலும், சரவணனிடமும் அவன் அம்மாவிடமும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் இப்படி திடீரென்று காலமானது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“உங்க அம்மா ஒரு மகராசி. எப்போவும் சிரிச்ச முகத்தோட இருக்கும் அவள இந்த நிலைமைக்கு கடவுள் ஆளாக்கிட்டானே. சுமங்கலியா போயிருக்க வேண்டியவளுக்கு இந்த கதியா?”, என்று சரவணனிடம் சொல்லி தெரு முக்கில் பூ விற்கும் கிழவி அழுதாள். சரவணன் எங்கு சென்றாலும் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். அம்மாவை புகழும் அளவுக்கு அப்பாவையும் புகழ்ந்தார்கள். “எல்லாரிடமும் எவ்ளோ நல்லா பழகுவார் தம்பி. அவர் பேச ஆரம்பிச்சா நாங்க எங்க வேலையா விட்டுட்டு அவர் பேச்ச ரசிப்போம். அதனால்தான் அவரு பெரிய சேல்ஸ ஆபிசரா இருந்தாரு”, என்று மளிகைக் கடை அண்ணாச்சி கூறினார். கறிகாய் விற்கும் கிழவி,“ இது போல ஒரு புருஷன் பொஞ்சாதி ஜோடிய நான் பாத்ததே இல்லை தம்பி. நாசமா போற எவன் கண்ணோ பட்டிடிச்சி”, என்றாள்.

வீடு மதுரையில் இருந்தாலும், அப்பாவுக்கு தென் தமிழகமெங்கும் சுற்றும் வேலை. அவர் என்று போனாலும் வெள்ளிக்கிழமை இரவு மதுரைக்கு வந்துவிடுவார். மறுபடியும் திங்கட்கிழமை கிளம்புவார். வார இறுதியில் பௌர்ணமி என்றால் சரவணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அன்று அவர்கள் மூவரும் கொல்லைப்புறத்தில் உட்கார்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடுவார்கள். அம்மா பழைய தமிழ் பாடல்களை இனிய குரலில் பாடுவாள். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் அப்பா தன்னுடைய விருப்பமான பாடல் ஒன்றை கேட்பார். அம்மா அதைப் பாடுவாள். சில நாட்கள் நள்ளிரவு வரை இந்த கச்சேரி நடக்கும். இது போன்ற நாட்களில் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

இப்படி மகிழ்ச்சியுடன் இருந்த அம்மா இப்போது இப்படி ஆகிவிட்டாளே என்று சரவணன் அழுதான். அம்மாவையோ, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் அழுகை பத்து நாட்களுக்கு நிற்கவேயில்லை. திருச்சியிலிருந்து சரவணனின் பாட்டி வந்திருந்தாள். “என் பொண்ண தனியா விட்டுட்டு போயிட்டானே அந்த மனுஷன்”, என்று அவளும் அழுதாள். சரவணனுக்கு என்னை செய்ய வேண்டும் என்று புரியவில்லை. இவ்வளவு நாட்கள் அவன் அம்மா அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்திருந்தான். அவனுக்கு எந்த ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் அவர்கள்தான் தீர்த்து வைப்பார்கள். அவன் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் பஸ் பிடித்து மதுரைக்கு வந்துவிடுவான். மூன்று வருடங்களாக அவன் இதை செய்து வருகிறான். அவனுக்கு எப்பொழுதும் அம்மா அப்பாவுடன் இருக்கவேண்டும். இப்பொழுது அவன் தான் அநாதை ஆகிவிட்டது போல் உணர்ந்தான்.

சோகத்திலிருந்து மீண்டபோது அம்மா கோபமாக இருந்தாள். அவள் சிரித்த முகம் சினம் கொண்ட முகமாக மாறியிருந்தது. அவளுக்கு எப்பொழுது கோபம் வரும், யார் மேல் கோபம் வரும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. அம்மாவின் இந்த முகத்தை கண்டு பயந்த சரவணன், தன் அலுவலகத்துக்கு வரும் மனோதத்துவ நிபுணரிடம் இதை பற்றி கேட்டான். “சரவணன், பெரும் துயரம் ஏற்படும்போது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பல படிநிலைகளை ஒருவர் கடந்து வரவேண்டும். முதலில் நடந்ததை ஏற்க மறுப்பார்கள், அடுத்ததாக அவர்களுக்கு தங்கள் மீதும் இந்த உலகத்தின் மீதும் கோபம் வரும். மெதுவாக கோபம் தணிந்து சுயபச்சாதாபம் ஏற்படும். அதை கடந்தவர்களுக்கு வாழ்வின் மேல் ஒரு வெறுப்பு உண்டாகும். அதை கடந்து வருபவர்கள் துயரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை மறுபடியும் தொடங்குவார்கள். உன் அம்மா இப்பொழுது இரண்டாம் படிநிலையில் நிற்கிறாள். நாட்கள் ஆக ஆக மெதுவாக இந்த துயரத்தை ஏற்றுக்கொள்வாள். அதுவரையில் நீ அவளுக்கு வேண்டிய தெம்பை குடு”, என்றார்.

அவர் சொன்னது போல் அம்மா கோபமாக இருக்கும் கட்டத்தை கடந்து, சுய பச்சாதாப கட்டத்தை கடந்து, இப்போது வாழ்க்கை மேல் வெறுப்புடன் இருந்தாள். சரவணனுக்கு அவள் மெதுவாக தேறி வருவது போல் தோன்றியது. சென்னையில் இருக்கும்பொழுதெலாம் அவளுடைய நினைவாகவே இருந்தது. தினமும் இரு முறை தொலைபேசியில் அம்மாவுடன் பேசினான். பாட்டி அம்மாவுடன் இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வார இறுதியில் அவன் மதுரைக்கு வந்துவிடுவான். அம்மாவை சென்னைக்கு வருமாறு அழைத்தான். அம்மா சம்மதிப்பாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவளோ, சரி வருகிறேன், என்று சொல்லியிருந்தாள். சரவணனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒருவாறாக வாழ்க்கை மறுபடியும் சீராகச் செல்கிறது என்று அவன் நினைத்தபொழுது அந்த இடி விழுந்தது.

சனிக்கிழமை காலை மதுரைக்கு வந்த சரவணனை அவன் மாமா தொலைபேசியில் அழைத்து, “பத்து மணிக்கு வீட்டுக்கு வா”, என்றார். அவர் சரவணனை ஒரு வக்கீலிடம் அழைத்து சென்றார். இருவருக்கும் தாம் எதற்காக அங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. “வக்கீல் வரச்சொன்னாரு. ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னாரு”

வக்கீல் அவர்களை வரவேற்றார். அவருடன் இன்னொரு வக்கீல் இருந்தார். “இவர் என் நண்பர் ஆறுமுகம். திருநெல்வேலியில் வக்கீலா இருக்காரு. அவர் உங்களுடன் மிக முக்கியமான ஏதோ ஒன்ன பேசணும்னாரு.”

வக்கீல் ஆறுமுகம் சரவணனைப் பார்த்து, “தம்பி, உங்ககிட்ட நான் இதை எப்படி சொல்லணும்னு எனக்கே புரியல”. சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு,. “உங்க அப்பா அடிக்கடி டூர் போவார் இல்லயா?”, என்று கேட்டார்.

“ஆமாம்”, என்றான் சரவணன்.

“திருநெல்வேலிக்கு போவாருன்னு உனக்கு தெரியுமா?”

“தெரியும். அங்க அடிக்கடி போவாரு. எங்களுக்கு இருட்டுக் கடை ஹல்வா வாங்கிட்டு வருவாரு”

மறுபடியும் வக்கீல் மௌனமாக இருந்தார்.

“சொல்லுங்க”, என்றான் சரவணன்.

“சொல்றத நிதானமா கேளுங்க. நான் சொல்றது எல்லாம் உண்மை. அது உண்மைனு நிரூபிக்க என்கிட்ட ஆதாரம் இருக்கு”, என்றார்.

சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. “என்ன உண்மை? என்ன நிரூபிக்க போறீங்க?”, என்று கேட்டான்.

சரவணன் தோளின் மேல் ஆறுமுகம் வக்கீல் கை போட்டு சொன்னார், “இது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் தம்பி ஆனா இது உண்மை. உன் அப்பா திருநெல்வேலியிலே வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாரு”

சரவணன் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான். அவன் மாமா வக்கீலை பார்த்து கத்த ஆரம்பித்தார். “டேய். யாரப் பத்தி என்ன சொல்ற. அவர் எந்த மாதிரி ஆள் தெரியுமா, அவர் பேர கெடுக்கறதுக்குனு திருநெல்வேலியிலேர்ந்து வந்தயாடா நீ”. கோபம் பொங்கி எழ வக்கீலை அடிக்க வந்தார்.

சரவணனின் வக்கீல் அவரைத் தடுத்தார். பிறகு ஆறுமுகத்தை பார்த்து, “ஆறுமுகம். என்னய்யா இப்படி குண்ட தூக்கி போடற? இவங்க அப்பாவுக்கு இங்க எவ்வளவு பெரிய பேரு தெரியுமா, நீ சொல்றத எங்களாள எப்படியா ஏத்துக்க முடியும்?”

ஆறுமுக வக்கீல் ஒரு மொபைல் ஃபோனை சரவணன் முன் நீட்டினார். “இதில் இருக்கும் மெசேஜ் எல்லாம் பார். நான் சொன்னது உண்மைன்னு உனக்கு புரியும்”

சரவணன் குறுஞ்செய்திகளை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு செய்தியும் அவன் அப்பாவின் உடல்நிலை பற்றி அவரே அனுப்பியது போல் இருந்தது. அவர் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவரை பார்க்கும் டாக்டர் பேர் என்ன, என்ன மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள், யாரெல்லாம் அவரை பார்க்க வந்தார்கள் என்ற விவரங்கள் அதில் இருந்தன.

“வாட்ஸ்ஆப்பும் பாரு”, என்றார் ஆறுமுகம்

வாட்ஸாப்பில் அப்பாவின் ECG, அவர் மருந்து சீட்டு ஆகியவற்றின் படங்களும், அப்பாவின் செல்ஃபியும் இருந்தன. அதில் வேறொரு பெண்மணியின் செல்ஃபியும் இருந்தது. ஒரு படத்தில் அந்த பெண்மணியுடன் ஒரு சிறு பெண் இருந்தாள்.

ஆறுமுக வக்கீல் சொன்னார், “இது அந்த அம்மாவின்  ஃபோன்”. அவருடைய பையிலிருந்து ஒரு மொபைலை எடுத்து, “இது உங்க அப்பாவோட இன்னொரு ஃபோன். இதிலிருக்கும் படங்கள பார்” என்றார்.

அந்த மொபைலில் சரவணனின் அப்பா அந்த பெண்மணியுடன் இருப்பது, அந்தச் சிறு பெண்ணை தூக்கி விளையாடுவது, லுங்கியுடன் சோபாவில் உட்கார்ந்திருப்பது, சாப்பிடுவது என்று பல படங்கள் இருந்தன.

சரவணன் அவன் மாமாவை பார்த்தான். அவருக்கு வேர்த்திருந்தது. இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவர் இப்பொழுது வாயடைத்து நின்றிருந்தார். சரவணனும் சிலை போல் நின்றிருந்தான்.

சரவணனின் வக்கீல், “ஆறுமுகம். நீ திருநவேலிலேருந்து இதை மட்டும் சொல்ல வரலைன்னு எனக்கு தெரியும். நீ வந்த விஷயம் என்ன?”, என்று கேட்டார்.

“உட்கார்ந்து பேசுவோமா”, என்றார் ஆறுமுக வக்கீல்

எல்லோரும் உட்கார்ந்தார்கள். “மூணு மாசத்துக்கு முன்னாடி, நான் அமெரிக்கா கிளம்பற நாள் அன்றைக்கு உங்க அப்பா கிட்ட அவர் எழுத சொன்ன உயிலை எழுதி கொடுத்துட்டு போனேன். நான் அமெரிக்கா போற அவசரத்துல அவர் கையெழுத்து வாங்க முடியல. “நான் படிச்சி பாத்து கையெழுத்து போட்டு வைக்கறேன்”, என்று உங்க அப்பா சொன்னாரு. நான் கிளம்பினதும் கொஞ்சம் நாளிலேயே அவர் காலமாயிட்டாரு. அந்த உயில் இப்போ எங்கே இருக்குனு எனக்கு தெரியல. ஆனா உங்க அப்பா என்னை அந்த உயில் எழுத சொன்னது உண்மை. வேணும்னா இந்த மெயில் பாருங்க,” என்று ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். பிறகு அவர் பையிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். “இது தான் அந்த உயிலோட நகல்”, என்று சரவணனிடம் கொடுத்தார்.

“என்ன எழுதியிருக்குன்னு நீயே சொல்”, என்றார் சரவணனின் வக்கீல்.

ஆறுமுக வக்கீல், “நீங்க வாடகைக்கு விட்டிருக்கும் ஒரு பெட்ரூம் பிளாட்டும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் என் கட்சிக்காரருக்கு கொடுக்கணும்னு உன் அப்பாவுடைய ஆசை”, என்றார்

சரவணன் பேசுவதற்கு முன் அவனுடைய வக்கீல், “வில் இன்னும் ரிஜிஸ்டர் செய்யலியே. இவன் அப்பா கையெழுத்து போட்டார் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. அவர் கையெழுத்து போட்ட உயிலும் உங்ககிட்ட இல்ல. இந்த கேஸ் செல்லுபடி ஆகாது”, என்றார்

“நான் உயிலை சரவணனின் அப்பாவிடம் கொடுத்ததற்கான சாட்சி இருக்கு. அங்க வேல பாக்குற நர்ஸ் நான் கொடுத்ததபாத்திட்டிருந்தா. இவன் அப்பா அதில் கையெழுத்து போடுவதையும் அவ பாத்திருக்கா. அவர் இறந்த பிறகு அந்த உயில் காணல. கோர்ட்ல வாதாட எனக்கு வேண்டிய ஆதாரம் இருக்கு”, என்றார்.

“அப்போ கோர்ட்ல பாத்துப்போம்”

ஆறுமுகம் நிராசையுடன் கிளம்பினார். சரவணனும் மாமாவும் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தனர். மாமா சோர்வாக இருந்தார். “உங்க அம்மா கிட்ட இத எப்படி சொல்றது? அவ உடைஞ்சி போயிடுவா”, என்றார். சரவணனால் இந்த செய்தியை இன்னும் நம்ப முடியவில்லை. “அப்பா எப்படி மாமா அப்படி பண்ணாரு?”. இருவரிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை.

அவர்கள் நினைத்தது போல் அம்மா செய்தியை கேட்டு அதிர்ந்து போயிருக்க வேண்டும், ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தாள். அவள் மௌனம் சரவணனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பாட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அப்பாவை வைய ஆரம்பித்தாள். ஓ என்று கதறி அழுதாள். அன்று மாலை பெரியப்பா, சித்தப்பா மற்றும் அத்தை வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் ஒரு பூகம்பம் வெடித்தது. பாட்டி அவர்கள் எல்லோரையும் திட்ட, அவர்கள் பதிலுக்கு திட்ட அவர்கள் குடும்பங்களுக்கு நடுவே உறவு முறிந்து போனது.

சரவணன் உடைந்து போயிருந்தாலும் அவன் அம்மா உடையவில்லை. “நாம எதுக்குடா வெட்கப்படணும்? நாம வேண்டியத எல்லாம் கொடுத்தோம். அந்த மனுஷன் புத்தி அப்படி போச்சுன்னா நாமா பொறுப்பு. ஊர் வாய்க்கு பயந்து வீட்லையே கிடக்காத. தல நிமிர்ந்து வெளியே போயிட்டு வா.” இதை சரவணனிடம் சொன்னதோடு அல்லாமல், அப்பா இறந்த பிறகு வெளியே செல்லாத அம்மா இப்பொழுது வெளியே செல்ல ஆரம்பித்தாள்.

ஒரு மாதம் கழித்து ஊரில் எல்லோரும் இதை மறந்துவிட்டிருந்தார்கள். மறுபடியும் வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டது என்று சரவணன் எண்ணும்போது அடுத்த குண்டு விழுந்தது.

ஒரு நாள் அதிகாலை பெரியப்பா, சித்தப்பா, அத்தை எல்லோரும் சரவணன் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அத்தை, “ஐயோ. ஐயோ. பணத்துக்கு ஆசப்பட்டு என் அண்ணனை கொன்னுட்டியேடா”, என்று சரவணனின் சட்டையை பற்றிக்கொண்டு உலுக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. அத்தையின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

கூச்சல் எல்லாம் சற்று ஓய்ந்த பிறகு நடந்தது என்ன என்று தெரிய வந்தது. சரவணனுக்கு அவன் அப்பாவின் துரோகம் முன்பே தெரிந்து விட்டதாகவும், அவன் தான் அப்பாவை கொன்றுவிட்டான் என்றும் யாரோ புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்த சண்டையை பற்றி கேள்விப்பட்ட சரவணனின் வக்கீல் அவன் வீட்டுக்கு வந்தார். அவர் பெரியப்பாவை பார்த்து, “உங்களுக்கு இவ்வளவு வயசாகியும் எந்த விஷயமும் நிதானமா யோசிக்கணும்னு தொணலையா? யாரோ சொன்னாங்கன்னு அநியாயமா இந்த பையன் மேல இப்படி ஒரு பழிய போடறீங்க. இத பாருங்க. நடந்தது இதுதான். மதியம் ஒரு மணி வரை சரவணன் அவன் அப்பாவுடன் இருந்தான். அவன் கிளம்புற வரையிலும் காத்திருந்த திருநெல்வேலி வக்கீல், அவன் கிளம்பியதும் அறைக்குள் வந்து சரவணனின் அப்பாவிடம் ஒரு பத்திரத்த கொடுத்திருக்காரு. இத ஒரு நர்ஸ் பாதிருக்கா. அப்புறம் சரவணன் அம்மா வந்து அப்பா நிலைமை மோசமாயிட்டதைப் பாத்து அழுது டாக்டரைக் கூப்பிட வீட்டுல இருந்த சரவணனை போன் பண்ணி சொல்லியிருக்காங்க. அப்பா இறந்த சமயம் சரவணன் அங்க இல்ல. நீங்க இப்படி பேசி ஒரு சின்ன பையன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க. உங்களுக்கெல்லாம் வெக்கமா இருக்கணும்”, என்று கூறிவிட்டு எல்லோரையும் அங்கிருந்து வெளியே அனுப்பினார்.

அந்த சம்பவத்துக்கு பிறகு சரவணன் வெகுவாக மாறிவிட்டான். எல்லோருடன் கலகலப்பாக பேசுபவன் இப்பொழுது மௌனமாக இருந்தான். அம்மாவும் மாமாவும் எவ்வளவு சொல்லியும் வேலையை விட்டுவிட்டான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளித்தான். சில வேளைகள்  சாப்பிட மறுத்தான். அவன் டீப் டிப்ரெஷனில் இருப்பதாக டாக்டர் சொன்னார்.

ஒரு நாள் மதியம் மாமா சரவணனிடம், “சரவணா, நமக்கு நல்ல காலம் பொறக்கப் போகிறது. இன்னிக்கி ராத்திரி நாம நாகர்கோவிலுக்கு புறப்படுறோம். அக்கா நீயும் எங்களோட வர”, என்றார்.

“நாகர்கோவில்ல என்னடா?”

“அங்க ஒரு மாந்த்ரீகன பாத்திருக்கேன். அவர் ஆவிகள வரவழைப்பாராம். மாமா ஆவிய வரவழைச்சு அவர் கிட்டயே அவர் ஏன் இப்படி செஞ்சார், எப்படி செத்தார், உயில் விஷயம் என்னன்னு கேட்டுடலாம். அவர் சொன்னா எல்லார் வாயும் மூடவேண்டியதுதான். அதுக்கப்புறம் யாரும் அத பத்தி பேசக்கூடாது”

பீதி கலந்த குரலில் அம்மா கேட்டாள், “ஏன்டா. ஆவி பேய் பிசாசுன்னு இதெல்லாம் எங்கடா போய் முடியும். இதெல்லாம் நல்லதுக்காடா?”

மாமா பதில் சொல்வதற்கு முன் சரவணன், “நாம போலாம் மாமா. நா என் அப்பாவோட பேசணும்”, என்றான். அவனுக்கு இப்பொழுது புதிதாக தெம்பு வந்திருந்தது.

அன்று மாலை சரவணன், அவன் அம்மா, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை என்று எல்லோரும் நாகர்கோவில் கிளம்பினார்கள். நாகர்கோவிலில் மாந்த்ரீகனை பார்த்ததும் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. பரட்டை முடியுடன், வெள்ளை தாடியுடன் வயதான ஒருவரை எதிர்பார்த்த அவர்களுக்கு முன் காவி வெட்டி உடுத்திய ஒரு இலைஞன் நின்றுக்கொண்டிருந்தான்.

“எங்க அப்பா ஆவிய உங்களால வர வைக்க முடியுமா. நான் அவரோட பேசணும்” என்று சரவணன் அவனிடன் கேட்டான்.

மாந்த்ரீகன் சற்று நேரம் ஆகாயத்தை உற்றுப் பார்த்தான். பிறகு, “ஆவிகளை எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியும். ஆவிகள் என் அழைப்பை கேட்டு வரும் என்ற உத்தரவாதத்தை என்னால் குடுக்க முடியாது. அவர் வந்தா அது உங்க குடுப்பினை”, என்றான்.

அன்று இரவு எல்லோரும் ஒரு பெரிய அறையில் கூடினார்கள். அறை நடுவில் ஒரு ஹோமகுண்டம் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் வரட்டியும் விறகுகளும் இருந்தன. ஒரு பெரிய பாத்திரம் முழுக்க நெய் வைக்கப்பட்டிருந்தது. சந்தனமும் குங்குமமும் தடவிய இரண்டு பெரிய குத்துவிளக்குகள் இரண்டு பலகைகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்தன. ஹோமகுண்டத்தின் அருகில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த பெரிய பலகையில் மாந்த்ரீகன் உட்கார்ந்தான். குத்துவிளக்குகளுக்கு அருகில் உள்ள பலகைகளில் சரவணனையும் அவன் அம்மாவையும் உட்கார சொன்னான். மற்ற உறவினர்களை சற்று தூரத்தில் உட்கார சொல்லிவிட்டு, “இத பாருங்க. ஆவி வந்தா சரவணனும் அவன் அம்மாவும் மட்டும்தான் பேசணும். வேற யாரும் பேசக்கூடாது. வேற யாராவது பேசினா என்ன ஆகும்னு என்னால சொல்ல முடியாது”. பிறகு சரவணனையும் அவன் அம்மாவையும் பார்த்து, “எந்த காரணத்துக்காகவும் நீங்க ஆவியோட பேச வேண்டாம்னு நினைச்சா குத்துவிளக்க தள்ளிவிடுங்க. அதை தள்ளினா ஆவி மறஞ்சிடும். பிறகு அழைச்சாலும் வராது” என்றான்.

மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும் அறை முழுவதும் இருள் கவிந்தது\. எல்லோருக்கும் பயமாக இருந்தது. மாந்த்ரீகன் ஹோமகுண்டத்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் வெளிச்சத்தில் சரவணனின் கண்களில் இருந்த எதிர்பார்ப்பும், அவன் அம்மாவின் கண்களில் இருந்த பீதியும் நன்றாக தெரிந்தது.

மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மாந்த்ரீகன் தீயை வளர்த்தான். அக்னி ஜ்வாலை மேலெழுந்தது. நெய் ஊற்ற ஊற்ற தீ உயர்ந்தது. மாந்த்ரீகனின் குரல் உயர ஆரம்பித்தது. எல்லோரும் தீக்கு கட்டுப்பட்டவர்கள் போல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மெதுவாக தீயில் ஏதோ உருவம் தெரிவது போல் இருந்தது. இதை கண்ட சரவணனின் கண்கள் பிரகாசமடைந்தன. எல்லோரும் நிமிர்த்து உட்கார்ந்தார்கள். பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லோர் கண்களிலும் தெரிந்தது. மாந்த்ரீகன் நெய் ஊற்றி மந்திரங்களை உரக்கச் சொல்ல,  “அப்பா” என்று சரவணன் உரக்க கத்தினான். எல்லோரும் நெருப்பில் தோன்றிய முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

“அப்பா” என்று சரவணன் மறுபடியும் அழைத்தான்.

அந்த முகம் சரவணனை உற்று நோக்கியது. “நீங்கதானா அப்பா?”. சரவணன் நம்ப முடியாமல் கேட்டான்.

உருவம் தலையசைத்தது

சரவணனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. அவன் அம்மாவை பார்த்தான். அவள் கோபமாக நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரவணனுக்கு அவள் முகத்தை பார்க்க பயமாக இருந்தது.

அவன் மறுபடியும் அந்த உருவத்தை பார்த்து கேட்டான், “அப்பா. உங்கள யாரோ கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையா?”

அந்த உருவம் குலுங்கிக் குலுங்கி ஆழ ஆரம்பித்தது. இவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை என்றாலும், அந்த உருவம் அழுவது நன்றாக தெரிந்தது. உறவினர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மாந்த்ரீகன் அவர்களை நோக்கி முறைத்த பிறகு அங்கு அமைதி நிலவியது.

சரவணன் ஆச்சரியமும் பயமும் கலந்த கண்களுடன் அந்த உருவத்தைப்  பார்த்தான். மெதுவாக உருவம் அழுவதை நிறுத்தியது. சரவணன் அதை நோக்கி, “அப்பா, உங்கள கொன்னது யார்?”, என்று கேட்டான்.

குனிந்த தலையை அந்த உருவம் நிமிர்த்தும்பொழுது அம்மாவின் முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு கீழே விழுந்து உருண்டது. நெருப்பில் தெரிந்த உருவம் மெல்ல மறைந்தது.

 

 

 

One comment

  1. The story was nice and interesting . Suspense story to find out the result the person who was responsible Saravanan’s father?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.