சிறுகதை

மறுமுகம்

வைரவன் லெ ரா

வாட்சப் டிபியில் வழக்கத்திற்கு மாறான அழகில் ஜொலித்தாள். இரண்டாம் ஆண்டு முதல் நாள் வகுப்பில் நுழையும் போது, அவள் தலைமுடியை ஒதுக்கியப் படியே சில நொடிகள் பார்வையை என் பக்கமாய் குவித்ததும், கால்கள் தடுமாறி போனது, நெஞ்சு விடைத்தது இன்று நடந்தது போலவிருக்கிறது. கேப்பிடீரியாவில் வெகு நேரம் இருந்தது போல உணர்வு, வாங்கிய காபி ஆறிப் போய் இருந்தது. விரல்கள் மாறி மாறி அலைபேசியின் ஒளிப்பானை மாற்றி ஏதாவது மாறப் போகிறதா என்ன? முதுகில் யாரோ மென்மையாய் தட்ட திரும்பினேன். “ஹலோ ஒன் ஹௌரா என்ன பண்ற. ரிலீஸ் வாக் த்ரோ இருக்கு மறந்துட்டியா. ஸ்க்ரம் மாஸ்டர் நீதான் பா. வா போலாம்” கைகளை இழுத்து கூட்டிச் சென்றாள். இவளை பார்க்கும் போதெல்லாம் வாட்சப்பில் மட்டுமே பார்ப்பவள் தூரமாய் போய் விடுகிறாள்.

விரித்த தலைமுடியில் ஹேர் கண்டிஷனரின் வாசனை அவள் அழைக்காமலே பின்னால் நகர வைத்தது. சட்டென்று நின்று விட அவள் எத்தனிக்கும் போதெல்லாம், என் நடையின் வேகம் அனிச்சை செயலில் தானாகக் குறைந்தது. சுருட்டை முடி என்ன அழகு. கல்லூரிப் பேருந்தில் ஒலிக்கும் பாடலில் சில முன்னவளுக்கென இடையிடையே இணைத்திருப்பேன். பின் இருக்கையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தால், அவள் முடியை காற்றில் அலைய விட்டு உறக்கத்தில் இருப்பாள். அவளோடு இணைந்து கேட்க விருப்பப்பட்ட பாடல் என்னுள் மட்டுமே கரைந்து அமிழ்ந்து கொண்டிருக்கும். இருந்தாலும் உறங்கி விழித்தப்படி அவளுடைய நிறுத்தத்தில் இறங்கும் போது பார்வையை வீசாமல் தவறவிட்டது இல்லை, சற்றே வீங்கிய விழிகளும், சிறிதாய் விரியும் புன்னகைக்கும் என்னை காத்திருக்க விட்டதில்லை.

“என்ன மறுபடியும் பீலிங்கா, போப்பா. அவளுக்கு கல்யாணமே ஆயிடுச்சு. இன்னும் வாட்சப் டிபி பாத்துட்டு சுத்துற. லேப்டாப் எடுத்துட்டு ப்ளூ பெரிக்கு போலாம். மீட்டிங் ரூம் ஸ்செடுல் அங்கதான் பண்ணிருக்கு. இன்னும் எத்தன நாள் டிபிய வெறிச்சுட்டு இருப்ப. ஷி இஸ் நாட் யூர்ஸ்”. கூறிவிட்டு என்னையும் இழுத்துக்கொண்டு நடந்தாள். ஒரு சாதாரண டெவெலப்பர், பின் சீனியர் ஆகி, இப்போது டெக் லீட். நான் விரும்பிய பணியும் அல்ல, அதற்காக இதனை வெறுப்பதுமில்லை,நிகழ்ந்தது. இதுவே தொடரும் என்பதையும் அறிவேன். எதையும் முயற்சிக்காத குணம், இங்கே இருத்தத்தில் எவ்வித கேடுகளும் இல்லை. பிறகென்ன கால்கள் இங்கேயே அழுத்தமாய் பதிந்துவிட்ட உணர்வு. ஒருவித சுய ஆசுவாசம். நீடித்த வேலையின் ஆண்டிறுதிகளில் பணி ரீதியான மதிப்பீட்டு நேரங்களில் என் கேள்விகளை நான் அவிழ்த்துவிட்டதுமில்லை. உண்மையாக கல்லூரியில் கட்டிய பணத்திற்கு, அவர்கள் பெரும்தொகையை முதலீடாக எங்களின் வேலைக்கென செய்தார்கள், இப்பெரும் முதலீடு அப்பா அளித்தத்தில் நூற்றில் ஒரு சதவிகிதம் எனலாம், பணம் மாத்திரமா? எவ்வளவு நேரம் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு இயந்திரத்தைப் போல எனக்கு ஒப்பிக்கப்பட்டவை சரியான நேரத்தில் வெளிவர பணி நியமனம் கிடைத்தது. பின் புகைப்படத்துடன் நாளிதழ்களில் அரைப்பக்க விளம்பரம். நானே முதலீட்டில் ஒரு பங்குதாரராய் உணர்ந்த தருணம்.

மீட்டிங் வழக்கம் போல, இரைச்சலுடன் சுயசிந்தனையில், இயல்பாக ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பும் முகாந்திரத்துடன் நடந்தது. என் இடத்திற்கு மட்டுமே போட்டியில்லை, பதினான்கு மணி நேரம் உழைக்க யார்தான் தயார். “நெஸ்ட் வீக் ரிலீஸ், சப்போர்ட் டீம், டெஸ்டிங் டீம், ரிலீஸ் டீம் எல்லாருக்கும் மெயில் அனுப்பியாச்சு, சைன் ஆப் ரெடி. இதுவர ஸ்மூத்தா போகுது, லெட்ஸ் சீ. சோ ஹாப்பி வீக்எண்ட்” எனக்கும் சேர்த்து அவளே பேசினாள். அனைவரும் அறையை காலி செய்ததை அவள் என்னை அழைத்த தருணம் தான் உணர்ந்தேன். எழுந்து நிற்கவும் “உக்காருப்பா, என்ன அவசரம். நாளைக்கு என்ன பிளான்”. இதற்கு முன்னும் இதே கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன், பதிலை எதிர்பார்க்காமல் அவளின் திட்டங்களை கூறுவாள், கடைசிவரை என்னுடைய பதில் எனக்குள்ளே கொலை செய்யப்படும். அவள் பேசட்டும் என அமைதியாய் இருந்தேன். “சரி, நாளைக்கு ஈசிஆர் போலாமா? ஒரு லாங் டிரைவ், ஈவினிங் சின்ன பார்ட்டி. எப்படி உனக்கு ஓகே வா”, நாளை எனக்கான திட்டங்கள் வழக்கம் போல எதுவுமில்லை. வாரஇறுதியை மிச்சம் இருக்கும் வேலையிலும், மீதி நேரம் வெறுமையாய் போர்ன்னில் கழிப்பது மாத்திரமே பொழுதுபோக்கு. “ரொம்ப யோசிக்கிற, என்ன போலாமா. வேணாமா. கொஞ்சம் பிரீயா இருக்கலாம். உனக்கே தெரியும், ஒரு மாசமா ரொம்ப இறுக்கமான மனநிலைல இருந்துட்டோம். நீயும் கொஞ்சம் இலகுவா ஆக வேண்டாமா. என்ன நம்மள பத்தி டீம்ல ரொம்ப பேசுறாங்கன்னு யோசிக்கிறியா. அது இருக்கட்டும். பரவாயில்ல”. சரி என்பது போல தலையசைத்தேன். “காலைல பத்து மணிக்கு உங்க பிஜில பிக்கப் பண்ணிக்கிறேன்”. இருவருக்கும் இடையே மெல்லிய இடைவெளி இருக்கிறது. இவளை நான் அல்லவா நேர்காணல் செய்தேன், எவ்வளவு நேர்த்தியான பதில்கள், எளிதாய் எதிர்கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் தள்ள, என் டீமில் இப்படிப்பட்ட ஆள் வேண்டுமென அடம்பிடித்தேன். அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட அதிகமாகவே அவளுக்கு ஆண்டு சம்பளம் கொடுக்கப்பட்டது. அவளின் காரிலே இதோ என்னை விடுதிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆக, சுற்றி இருப்பவர்கள் வெளிப்படையாகவே குசுக்குசுக்க வாய்ப்புகள் வசதியாகவே எங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

சராசரி உயரம், ஒல்லியான உடல்வாக்கு, சவரம் செய்யாத முகம் கண்ணாடியில் ஒருமுறை முடியை ஒதுக்கி என்னை அவளுடன் ஒப்பீடு செய்தேன். அப்படியொன்றும் என்னைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. கச்சிதமான உடையில், எப்போதும் மலர்ச்சியான முகத்துடனும், விரித்து விட்ட முடியுமாய் இருக்கும் இடமெல்லாம் ஒருவித சௌகர்யம் அவளால் உருவாக்கப்படும். பணி சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அவளின் தலையீடு இருப்பதில்லை, என்னுடைய திட்டமிடல்களில் அபரீதமான ஈடுபாட்டை அளிப்பாள். அவளின் ஊர், பெற்றோர், சொந்தங்கள் எனப் பேச்சு சென்றாலும் குறைவான நேரத்தில் அதையும் இழுக்காமல் நிறுத்திவிடுவாள். மாறாக நானோ, பலவற்றை எதற்கெனவென்றே அறியாமலே சொல்லிவிடுவேன். அவளிடம் பேச ஏதாவது உபயோகப் படுமென்றால் அதனை மறைக்க உத்தேசிப்பதில்லை.

சரியான நேரத்தில் அவள் வர, இருவரும் கிளம்பினோம். சனிக்கிழமை என்பதால் இருசக்கர வாகனங்கள் சாலையில் அதிகமாய் தென்பட்டன. “நீ பைக் ஓட்டுனா நாமளும் போயிருக்கலாம். எனக்கும் பிடிக்கும், நீதான் ஓட்டமாட்டியே” போலியான முகப்பாவனையோடு சொன்னாள். ஏற்கனவே அதன் காரணம் அறிந்தவள், நண்பனை சாலை விபத்தில் இழந்து, இறுதிசடங்கில் அவரின் பெற்றோர் கதறியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் காரணமாய் கால்கள் பைக்கில் ஏறினாலே நடுங்கும், இதுவும் ஒருவித போபியா. பாடல்களை ஒலிக்க விட்டாள். இளையராஜாவும், ரஹ்மானும் இசைத்த பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒலித்தன. அவளும் முணுமுணுத்தாவாறே பாடினாள், குறையில்லா குரல்தான், ‘எங்க போன ராசா’ மரியான் பாடல் ஒலிக்க, “உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா” என்றேன். எனக்கு “சக்தி ஸ்ரீகோபாலன் குரல் ரொம்ப பிடிக்கும்” என்றாள். “ஏன்” என்றேன். “வழக்கமான குரல் கிடையாது. பெண் குரல்னா கொஞ்சம் கொஞ்சி, கொளஞ்சி பாடுற விதம் இல்லாம. பாட்டுக்கு பெண்ணோட குரல் இப்படி இருக்கணும்னு எதையோ மீறி வர ஒரு குரல், யோசிச்சு பாரு, ஜானகி, சுசிலா, சித்ரா குரலை எல்லாம். அதுக்குன்னு அவங்க பாட்டு பிடிக்காதுன்னு இல்ல” நிறுத்திக் கொண்டாள். பின் சிரிப்புடன் ஒரு கையால் முடியை ஒதுக்கி பார்வையை சில நொடிகள் குவித்து மீண்டும் பாட ஆரம்பித்தாள்.

இந்த சாலையிலே கடற்கரைக்கா பஞ்சம். காரை ஒரு வளைவில் திருப்பி, கடலோரம் நிறுத்தினாள். அருகிலே ஒரு மீனவ கிராமமும், கோயில் ஒன்றும் இருந்தது. இருவரும் செருப்புகளை காரிலே விட்டு, கடலை நோக்கி நடந்தோம். “எங்க அப்பா கடலுக்கு கூட்டிட்டே போக மாட்டார். அப்படியே போனாலும் ‘சடங்கு ஆனப் பிள்ளைக்கு இந்த மயிறு எதுக்கு’ன்னு சொல்லிட்டே, தம்பிய மட்டும் கூட்டிட்டு குளிக்கப் போவாரு. அம்மாவும் நானும் கரையிலே நிப்போம். இத்தனைக்கும் எங்க ஊர் கன்னியாகுமாரி” என்றாள். “எதுனாலே” என்றேன். “அது எங்க ஆச்சியோட குணம். அப்பா பாவம் தான். ஒன்னு தெரியுமா? சாயந்திரம் வீட்டு விட்டு வெளிய போனா கைல ஒரு இரும்பு ஆணி, இல்ல சாவியை கொடுப்பார். கருக்கள் நேரம் கண்டதும் அலையும் நாமதான் பாத்து போனும்னு சொல்லுவாரு” சிரித்துக்கொண்டே கால்களை நனைத்துக் கொண்டாள். முதல்முறையாக அவளின் அப்பாவை பற்றி பேசுகிறாள். காற்று வீச, ஒரு துளி நீர் அவளின் புருவத்தில் வைரம் போல மின்ன, ஒரு கையால் அதனை துடைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். எதையோ மறைக்க முயற்சிப்பது போல வேகமாய் “நானும் பாட்டிய ஆச்சின்னு கூப்புடுவேன். திருனவேலில அப்படிதான் கூப்புடுவோம். நீங்களாவது பரவாயில்ல. எங்க அப்பா என்னையவே இருட்டுற சமயம் வெளிய அனுப்ப மாட்டாரு. எனக்கும் பயம் தான். நா ஊர தாண்டுனதே இஞ்சினயரிங் படிக்கதான்” என்றப்படி கடலை பார்த்தேன். அவள் கரையிலே அலைவரும் தூரம் நின்றாள். அவளின் ஒட்டிய சுடிதாரின் மேடான வளைவுகளில் பார்வை சென்றது. முடியை முன்பக்கமாய் இழுத்து விட்டு இருந்தாள். முதுகின் நடுவே மெல்லிய மயிர்கோடு செல்வது என்னுள்ளே ஒரு பயம் கலந்த சுகத்தை கொடுத்தது, அவளின் காதுமடல் செவ்வொளியில் சிவந்தப்படி தெரிந்தது. அவளுக்கான இடம் மரியாதைக்குரிய வகையில் இருந்தாலும், சில சமயங்களில் அவளின் நினைவுகள் சுயமைதுனம் செய்வதில் வருவது தவிர்ப்பதுக்குரிய இடமாகவும் இல்லை. என்னை உயர்ந்தவனாய் காட்ட எத்தனிக்கும் போதெல்லாம், கண்களை கட்டுப்படுத்த, சிந்தனைகளை வேறுவழியில் திசைதிருப்ப முயற்சிக்கும் நான் பெரும்பாலும் தோற்றுவிடுகிறேன். அவள் கவனத்திருப்பாளா, கண்டிப்பாக அறியாமல் இருக்கமாட்டாள்.

“கல்யாணம் எப்போ பண்ணிக்க போற. வயசு முப்பது ஆயிடுச்சுல” குறுகுறுப்பான பார்வை வெளிப்பட கேட்டாள். எதிர்பாராமல் வார்த்தைகள் என்னைக் குலைத்தது, என்றாவது கேட்கப்படும் எனத் தெரிந்தும், விடையை நோக்கி மனதை குவிக்காமல், முடிவு செய்த விடையாக இல்லாமல், அத்தருணத்தில் வெளிவரட்டும் என்றே விட்டு விட்டிருந்தேன் . ஒரே மகன், அப்பா கடந்த ஆண்டு கொரோனாவில் தவறி விட, அம்மை மட்டுமே ஊரில் இருக்கிறாள். சுற்றிலும் உறவுகள் இருக்க பயப்பட எதுவுமில்லை. இருப்பினும் திருமணம் ஏனோ கைக்கூடவில்லை. வரன்கள் புது புது காரணங்களால் தள்ளிப் போனது. இவளின் வருகைக்கு பின் தான் நடந்தவை நல்லதற்கே என்று எண்ணினேன். பதில் இருக்கிறதா என்ன? நீதானே பதில் என்பது போல, அவளையே வெறித்து பார்த்தப்படி மௌனமாய் நின்றேன். “நீங்க எப்போ பண்ற பிளான்” பதிலுக்கு கேட்டேன். “நான் ஏன் இன்னொன்னு பண்ணனும்” என்றவள், என்னுடைய எதிர்வினைக்கு காத்திருப்பது போல, இமை மூடாது நோக்கினாள். ஏதோ புரிந்தவன் போல, சில அடிகள் அருகே சென்று கைகளை பிசைந்தப் படி “என்னங்க விளையாடுறீங்க” என்றேன். “ஏன் விளையாடணும், ஏன் பொய் சொல்லணும். ஏன் மறைக்கணும். இல்லையா” என்றவள். கடலுக்குள் கொஞ்சம் நடந்து, அலைவரவும் ஓடி என்னருகே வந்தாள். அதேவிடத்திலே நின்று கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று முறை இதையே செய்தாள். ஓடும் போது சிறுமியைப் போல பாவனை செய்கிறாளா? இல்லை அதுதான் நிஜமா?, அவள் கூறியது வாஸ்தவமாக இருந்தாள். “கல்யாணம் ஆயிடுச்சா” குரலில் வழுவில்லை. “ஆமா” என்றப்படி அருகே வந்தாள். நான் வேகமாய் காருக்கு அருகிலே சென்றேன். அம்மையிடம் இவளைப் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன், அம்மைக்கும் சம்மதம் தான். ‘எந்த சாதியா இருந்தா என்ன, சம்பாதிக்கா, உனக்கு பிடிச்சு இருக்கு. அப்பா இருந்தா காரியம் நடக்காது. இருக்கப்ப நீ பிடிச்ச எதையாவது பண்ண விட்டாரா! இதுல அம்மைக்க முழு சம்மதம்’ அம்மையின் வார்த்தைகள் எவ்வளவு சுகமாய் இருந்தன. ஆனால் கடைசியில் வாழ்க்கை கூட அப்பாவைப் போல பிடித்ததை பிடுங்கி கொள்கிறது.

அவள் கரையிலே நெடுநேரம் நின்றாள். நவம்பர் மாத மழை சென்னையில் எப்போது வேண்டுமானாலும் பொழியலாம், இன்று அதை எனக்குறியதாய் நினைத்துக் கொண்டே, காரில் ஏறி பாடல்களை மீண்டும் ஒலிக்க விட்டேன். ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா’ மனோவின் குரல் மனதை இன்னும் கனக்க வைத்தது. மழையின் வேகம் அதிகரிக்க ஓடி காருக்குள் வந்தவள், ஒலிக்கும் பாடலை கேட்டு என்னையே சில நொடிகள் பார்த்துக்கொண்டே சட்டென்று சிரித்தாள். “மழைல இந்த பாட்டு. செம பீலிங் இல்ல” என்றவள், என் அமைதியை குலைக்கும் படி “ஐ லவ் யூ” என்றப் படியே நெற்றியில் முத்தமிட்டாள். நான் தடுமாறிப் போனேன். முதல் முறை பெண்ணின் உதடுகள் அம்மையை தவிர்த்து உடலின் ஒரு பாகத்தில் பட, மொத்த உடலும் குலுங்கி அதிர்ந்து இன்னும் என்னென்ன உண்டோ? எல்லாமும் ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் ஆட்கொள்ள அவளை இழுத்து உதடுகளை கவ்வினேன். ஆரம்பித்தது நானாக இருந்தாலும், அவளின் ஆக்கிரமிப்பே அதிகம் தெரிந்தது. பிறகு இருவரும் சுயமாய் ஒருவரின் பிடியில் இருந்து வெளிவர, நான் சிரித்துக் கொண்டே “ஏன் கல்யாணம்னு பொய் சொன்னீங்க” என்றேன். “அட, அது பொய் இல்ல. அதுலாம் பழையக் கதை” என்றவள். வெளிறிய முகத்தை பார்த்து பரிதாபப்பட்டோ! என்னவோ! பேச ஆரம்பித்தாள்.

“அப்பா பழைய ஆள். ஆச்சி உடம்புக்கு முடியாம போக, அவங்க கடைசி ஆசைனு இஞ்சினயரிங் படிக்கப்பவே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவனுக்கு என்ன விட பன்னிரண்டு வயசு அதிகம். ஜெர்மனில வேலை பார்த்தான். இது போதாதா? பெருசா எதுவும் விசாரிக்கல. அப்போ நான் தேர்ட் இயர். பரீட்சை லீவ்ல டூரிஸ்ட் வீசா போட்டு கூட்டிட்டு போனான். நல்லவன் தான். பட் ராத்திரி மிருகம். செக்ஸ்வுலா ரொம்ப கொடுமைனே சொல்லலாம். நான் சின்னப் பொண்ணு. மொழி தெரியாத நாடு. அவன பகைக்கவே இல்ல. அதிகமான வலி, சிலசமயம் பிளட் வரும். யாருகிட்ட சொல்ல. இங்க வந்ததும் யாருகிட்டயும் சொல்லல. அடுத்த மாசம் நாள் தள்ளிப் போச்சு. பத்து மாசம், அவன் மேலே உள்ள வெறுப்பு. வயிறும் வீங்கி காலேஜ்ல ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் வந்தான். கூட ரெண்டு வாரம் இருந்துட்டு போய்ட்டான். குழந்தையை வளர்த்தது எல்லாமுமே அம்மா தான். இப்போவும் அம்மாவதான் தன்னோட அம்மாவ நினைச்சுட்டு இருக்கு” என்றவள் அமைதியானாள். “மழை விட்டுடுச்சு வெளிய நடக்கலாமா?”, நானும் சரியென்றேன்.

அவள் முன்னாலே நடந்தாள். ஏனோ அவளின் பாதச் சுவட்டை மண்ணிலே காணும் போது, முகம் அறியாத ஒருவனின் சுவடும் தெரிந்தது. நின்றவள் சில அடி பின்னால் வந்தாள், தயக்கமான பார்வை. விழிகளில் நீரின் திரை தெரிந்தது. அவளின் நாடியை பிடித்து, முகத்தை என் உதட்டின் அருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டேன். கைகள் அதுவாய் கோர்க்கப்பட்டது. “அம்மாட்ட எல்லாத்தையும் சொன்னேன். எல்லாம் கேட்ட அம்மா, அப்பாட்ட என்ன சொல்லிச்சோ தெரியல. அப்பா ஒரு பேப்பர்ல சைன் போட சொன்னாங்க. படிச்சு பாத்தேன், அது விவாகரத்து பேப்பர்”. பெருமூச்சு விட்டவள் “அப்புறம் ஆளே வரல. நானும் படிச்சுட்டு வேலைன்னு சென்னை வந்துட்டேன். வீட்டுல கல்யாணத்துக்கு கேட்டுட்டே இருக்காங்க. வீட்டுல உன்ன பத்தி பேசலாம்ல” என்றாள். நான் தலையசைத்துக் கொண்டே அவளை அணைத்தேன். அவளின் மார்பு காம்புகள் நெஞ்சில் படவும், கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

பெற்றோர், நெருங்கியோர் இருக்க சென்னையிலே வடபழனியில் திருமணம் நடந்தது. பிறகு அருகிலே ஒரு சின்ன வரவேற்பு, சோழிங்கநல்லூரில் நல்ல அபார்ட்மெண்ட் வீடும் எடுத்தாச்சு. பிறகு முதல் இரவு எனக்கு மட்டும். பழகியவள் என்பதால் தயக்கமின்றி விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டன. அவளின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்தேன். முத்தங்கள் சரியாய் கொடுக்கப்பட்டது, கைகள் மெதுவாய் தழுவப்பட்டது. உணர்ச்சிகள் சிறுக சிறுக பெருக்கி இருவரும் முயங்க, நான் இயல்பை மீறி வேகம் ஆனேன். உடலில் வலு மொத்தமாய் ஏறுவது போல உணர்வு, அவளின் மொத்த சதையும் குலுங்கியது, எதிர்பார்ப்பை மீறி, வலது கையால் அவளின் புட்டத்தில் ஓங்கி அடித்தேன். அதுவே இரண்டு முறை நடக்க, அவள் கண்களை நோக்கினேன், நீர் நிரம்பி, அருவருப்போடு என்னை பார்த்தாள். என் ஆண்மை வெளியேற நான் தலை குனிந்தேன்.

கொதிப்பு

ஐ கிருத்திகா

கொடியடுப்பில் முள்ளங்கிக் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அதன் வாசம் நாசியைத் தொட்டு ராசுப்பயலை எழுப்பிவிட்டது. அவனுக்கு முள்ளங்கிக் குழம்பென்றால் பெரும்பித்து.

“எங்கம்மா முள்ளங்கிக்கொளம்பு வைக்கும் பாரு. அதுக்கு ஒரு தனி ருசிடா…” நண்பர்களிடம் கதையளப்பான்.

“நல்லா தாராளமா பருப்ப வேவுச்சி கடஞ்சி ஊத்தி இம்மாம் வெங்காயத்த வதக்கி கொளம்ப கொதிக்கவுடும். முள்ளங்கிய நெலாத்துண்டாட்டம் நறுக்கி வதக்குறப்ப ஒரு வாசமடிக்கும் பாரு. வார்த்தையால சொல்லமுடியாது.” அவன் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.

“மேல சொல்லுடா…” நண்பர்கள் தூண்டிவிடுவார்கள்.

“முள்ளங்கிக் கொளம்புன்னா மஞ்சத்தூள ரெண்டுசிட்டிக கூடுதலாத்தான் போடும் எங்கம்மா. அதனால கொளம்பு மஞ்ச, மஞ்சேர்ன்னு இருக்கும். மொதநா கொளம்பவுட மய்க்கா நா கொளம்புக்கு ருசி அதிகம்.”

” அதெப்புடிடா…?” வேண்டுமென்றே கேட்பார்கள்.

” எங்கம்மா காலம்பற எந்திரிச்சதும் மொத வேலயா மீந்த கொளம்ப கொடியடுப்புல போட்டு சுண்டவைக்கும்.அதுல ரெண்டு கைப்புடி முருங்கைக்கீரைய உருவிப் போட்டுடும். அந்த வாசம் புடிச்சா நாக்கு ஊறும். காந்த வாசனை அடிக்கிற கொளம்புல வெந்த முருங்கக்கீர வதங்கி சவுக், சவுக்குன்னு கடிபடும். அதெல்லாம் தின்னாத்தான்டா தெரியும்.”

ராசுப்பயலுக்கு பள்ளிக்கூடம் போகும் வரை சொல்வதற்கு தினமும் ஆயிரம் கதைகளிருந்தன. நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கழியில் புத்தகப்பையை மாட்டி இருவர் மாற்றி இருவராக சுமந்து செல்வார்கள். பள்ளிக்கூடம் சற்று தூரம்தான்.

ராசுப்பயலின் பேச்சு தூரத்தைக் கடக்க தினமும் தேவைப்பட்டது. சோறு, அரசமரப்பிள்ளையார், தடி வாத்தியார், இலவச டிவியில் பார்த்த சினிமா என்று ஏதோ ஒன்று ராசுப்பயலுக்கு சொல்லக் கிடைத்துவிடும். சிலசமயம் ஏற்பாடில்லாமல் கதையை ஆரம்பிப்பான். கதை அவனைத் தன்பாட்டுக்கு இழுத்து சென்றுவிடும். நண்பர்கள் உம் போட்டபடி செல்வர்.

ஐந்தாறு பேர் ஒரு குழுவாக பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். பள்ளிக்கூடம் கடைத்தெருவிலிருந்தது. கடைத்தெரு முடியுமிடத்தில் இடதுபுறம் திரும்பி பத்து தப்படி நடந்தால் பள்ளிக்கூடம். அந்தத் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோவிலுண்டு. அங்கு வந்ததும் பேச்சை நிறுத்தி விழுந்து கும்பிட்டுவிட்டு கிரில் கதவின் கம்பிகளில் சிந்திக்கிடக்கும் விபூதியை பூசிக்கொள்வார்கள். ராசுப்பயல் பெரும்பட்டையாக இட்டுக்கொள்வான்.

அவனுக்குப் பள்ளிக்கூடம் செல்வதொன்றும் அவ்வளவு விருப்பமான செயலாக இருக்கவில்லை. மதியசோறும், முட்டையும் அவனை வா, வாவென்று கூப்பிட்டதில் போய்க்கொண்டிருக்கிறான். பள்ளி முடிந்து வீட்டுக்குவருபவன் புத்தகப்பையை கடாசிவிட்டுத் தெருப்புழுதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவான் .

“வெளக்கு கொளுத்தியாச்சி. இந்தப் பயல இன்னும் காணும். பொஸ்தவத்த எடுத்து ஒரு எளுத்து படிக்க மாட்டேங்கிறான். நல்லவிதமாவும் சொல்லிப் பாத்துட்டன், வெளக்கமாத்தால வெளுத்தும் பாத்துட்டன். வெளங்காத பய….அவுங்கப்பனாட்டமே ஊர் மேய கெளம்பிடுறான்.”

ஈசுவரி பக்கத்து வீட்டு முத்தரசியிடம் புலம்பித் தீர்த்தாள். நாலெழுத்து படித்து மகன் உருப்பட்டுவிட வேண்டுமென்பதுதான் அவள் நினைப்பு.

“பள்ளிடத்துல பேக்கு, டவுசர், சட்ட, பொஸ்தவம் எல்லாம் குடுத்து சோத்தையும் போட்டு படிக்க சொல்லுறாங்க. புத்தியுள்ள புள்ள அத பயன்படுத்திக்கிட்டு முன்னேறி வந்துடும். இது என்னாவுமோ, மண்ணாத்தான் போவுமோ…” தலையிலடித்துக்கொள்வாள்.

மழை வரும் போலிருந்தது. மாடக்குழியில் ஏற்றி வைத்திருந்த விளக்கு, வீசிய காற்றுக்கு அல்லாடியது. ஈசுவரி ஆடுகளைப் பக்கவாட்டிலிருந்த தொழுவத்தில் அடைத்து புல்கட்டை பிரித்து உதறிவிட்டாள். அன்று நல்ல வளப்பமான புற்கள் பெருத்த கட்டாக அறுத்துக் கட்ட கிடைத்திருந்தன. கைக்கு லாவகமாய் பிடித்தறுக்க பெரிது, பெரிதான புற்கள். ஈசுவரிக்கு மனசு நிறைந்துவிட்டது. மண்டைக்காத்தான் கண்டால் சவட்டிவிடுவான்.அவன் வயலை ஒருவரும் அண்டமுடியாது. மழைக்குப் பயந்து ஈசுவரி துணிந்து விட்டாள். நல்லவேளையாக அவன் தலைகாட்டவில்லை. புற்கள் வீச்சு, வீச்சாக வளர்ந்து கிடந்தன. ஒரேமூச்சாக அறுத்துப் பெருங்கட்டாக கட்டிவிட்டாள்.

கோடைவெயிலுக்கு எரிந்து கிடக்கும் புற்களைக் கண்டு மனம் வெதும்பி நிற்பதற்கு மாறாக பொங்கும் புதுப்புனல் போல மனம் நுரைத்துப் பொங்கிற்று. ஆடுகள் புசு,புசுவென்று மூச்சு விட்டபடியே பருபருவென்று புற்களைத் தின்றன. ராசுப்பயல் குதிரைமுகம் வரை புழுதியப்பிய கால்களோடு வந்து நின்றான். கையிலிருந்த பனையோலை காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.

“பசிக்கிது சோறு போடும்மா…”

குனிந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்புறம் நின்று குதிகால்களை எக்கிப்பார்த்து சொன்னான். ஈசுவரி பதில் சொல்லவில்லை.

“சோறாக்கலயாம்மா…?”

சுழன்று கொண்டிருந்த காற்றாடியைக் கட்டைச்சுவரில் வைத்துவிட்டு அடுப்புமேல் மூடியிருந்த குண்டானைத் திறக்கப் பாய்ந்தான். ஈசுவரி திரும்பி, ஓங்கின வேகத்துக்கு முதுகில் ஒன்று வைத்தாள்.

“வெளக்கு வச்ச நேரத்துல ரெண்டு வார்த்த படிச்சோமுன்னு இல்லாம தெருத்தெருவா சுத்திட்டு வந்து சோறு போடுன்னா, சோறு எங்கேயிருந்து வரும். ஒங்கப்பனா கையெளுத்துப் போட்டு சம்பாரிச்சி கொண்டாந்து கொட்டுறான்.”

அவளுக்கு ஆவேசமாக இருந்தது. முட்டைப் போல் வயிறு பெருத்திருந்த சமயத்தில் இன்னொருத்தியுடன் ஓடிப்போனவனைத் திட்டுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்க தேவையிருக்கவில்லை. எதொன்றுக்கும் அவனை இழுத்துவைத்து வசவுகளை விட்டெறிவதற்கு அவளுக்குக் கைவரப்பெற்றிருந்தது.

ராசுப்பயல் திண்ணையில் அமர்ந்தான். முதுகு திகுதிகுவென்று எரிந்தது. வலது கையை எட்டும் மட்டும் வளைத்துப் பின்புறம் துழாவி தடவிக்கொண்டான். மழைத்தூறல்கள் போட்டது. சாய்வு, சாய்வான ஊசித்தூறல்கள். மழைக்குப் பயந்துதான் அவன் இவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கு வந்ததே. இல்லாதுபோனால் இருளின் வீச்சு முழுமையடைந்திருக்கும்போது மெல்ல தலைகாட்டும் பசியை உணர்ந்து அலுப்புஞ்சலிப்புமாய் விடைபெற்றுக்கொள்வான். சோறு, சோறு என்று வயிறு குதியாட்டம் போடும். தெருவில் அநேகமாய் விளக்குகள் எரிவதில்லை. இருட்டு மசி போல் அப்பிக்கிடக்கும் தெருவில் அவன் மனதிலூரும் பயத்தை அடக்க சத்தம் போட்டுப் பாட்டு பாடியபடியே வருவான்.

கையில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும். அதை அப்படியும், இப்படியுமாக அசைத்து தன் கவனத்தை அதில் பதித்துக்கொள்வான். ஈசுவரி வெளியே எட்டிப்பார்த்தாள். பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

“எந்திரிச்சி வந்து சோத்தத் தின்னு. கரண்டு போச்சின்னா தொளாவணும்.”

அவன் அசிரத்தையாக எழுந்தான். புழுங்கலரிசிச்சோறின் மணம் மூக்குக்கு இதமானதொரு வாசத்தைப் பரப்ப, அக்கறையில்லாதவன் போல் தட்டின் முன் அமர்ந்தான். குண்டுபல்பின் மஞ்சள் ஒளியில் சோறு மினுமினுத்தது. உதிரி, உதிரியாய் கொஞ்சம் புளியம்பூ நிறத்தில் தட்டு நிறைய சோறு.

அள்ளித் திங்க வேண்டும்போல மனசு பரபரத்தது. ஈசுவரி குழம்பை சோற்றின் மேல் பரவலாக ஊற்றினாள். கத்தரிக்காய் துண்டுகள் சோற்றில் விழுந்தன.

“கால், கை களுவுற பளக்கமெல்லாம் இருந்தா நீ உருப்புட்டுடமாட்ட…”

ராசுப்பயல் எழுந்துபோய் ஒழுகிய மழையில் கால், கையை நீட்டி கழுவிவிட்டுவந்தான்.

“களுவிட்டன்.”

வேகமாய் அமர்ந்து குனிந்து சாப்பிடத் தொடங்கினான். பள்ளிக்கூடத்து மதியசோறு வயிறு நிரம்பத்தான். மற்றபடி அதொன்றும் ருசியாக இல்லை என்பான் அவன்.

“கல்யாண ஊட்டுல எல நெறச்சி சோறு போடுவாங்க. ரெண்டு வகை காயி, வடை, பாயசம்னு எக்கச்சக்க அயிட்டம் இருக்கும். அந்தமாரி சாப்பாடு சாப்புட்டு பாக்கணும்டா ” என்று நண்பர்களிடம் சொல்லி, சொல்லி மாய்ந்து போவான்.

தெருவில் நடக்கும் விசேஷங்களுக்கு ஈசுவரி மட்டும் போவாள். வரும்போது வடையையோ, போண்டாவையோ மடியில் கட்டிக்கொண்டு வருவாள். ராசுப்பயல் தானும் வருவதாக சொன்னால் முதுகில் சாத்துவாள்.

“இருவது ரூவாய வச்சிப்புட்டு ரெண்டுபேரு வந்து தின்னுபுட்டுப் போறாங்கன்னு பின்னாடி பேசுவாளுங்க…வேணுமுன்னா நீ போ. நான் போவல” என்பாள்.

“கறியும், கூட்டும் திங்கவா போறன். நாலு சனம் வேணுமுன்னு போறன். நாளபின்னாடி என் எளவுன்னா தூக்க நாலுபேரு வரணுமில்ல.” குரல் அழுகையில் பிசிறடிக்கும். ராசுப்பயல் பேசாமல் அமர்ந்திருப்பான்.

மழை மறுநாளும் தொடர்ந்ததில் பள்ளிக்கூடம் விடுமுறை அறிவித்திருந்தது. பள்ளிக்குப் போகாமல், விளையாடவும் போகமுடியாமல் வீடடங்கி கிடப்பது ராசுப்பயலுக்கு பெரும் அவஸ்தையாயிருந்தது. மின்சாரம் அவிந்து போயிருந்ததில் இலவச டிவி இருண்டு கிடந்தது.

திடீர், திடீரென வீசிய காற்றுக்கு கிளேரியா மரம் அசைந்ததில் பெருத்த நீர்ச்சொட்டுகள் சொட்டித் தெறித்தன. ஆடுகள் சாரலுக்குப் பயந்து நெருக்கியடித்துத் திண்ணையில் நின்றிருந்தன. தெருவடைத்த மழை. இரண்டுநாள் மழைக்கு மண் வாந்தோடிப் போயிருந்தது. முன்பு இப்படியொரு பெரு மழையில்தான் அவன் பிறந்தான்.

“அப்பிய மாசம் பொத்துக்கிட்டு ஊத்துது. கருக்கிருட்டு புடிச்சி ஊரே இருண்டு கெடக்கு. ஒருவா கஞ்சி குடிச்சிப்புட்டு கம்முன்னு படுத்துக்கிடலாம்னு பாத்தா திடீர்ன்னு வலி பொரட்டியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. முத்தரசி கொடலையத் தூக்கி தலையில போட்டுக்கிட்டு ஓடிப்போயி ஒன் பெரியாத்தாள கூட்டியாந்தா. சிம்னி வெளக்க பொருத்தி வச்சிக்கிட்டு ஆத்தா பிரசவம் பாத்துச்சி.” ஈசுவரி சொன்ன கதையை ஜோடித்து ராசுப்பயல் தன் நண்பர்களிடம் கூறுவான்.

“கொளேர்ன்னு ஒரே இருட்டாம். அப்ப துணுக்கு சுடராட்டம் நான் பொறந்ததும் எல்லாருக்கும் கண்ணு கூசிப்போச்சாம். தவமா, தவங்கெடந்தாலும் இப்படியொரு புள்ள பொறக்காதுடின்னு ஆத்தா கண்ணு தண்ணி வுட்டுச்சாம்.”

அவன் சற்று நிறம்தான். அதனால் நண்பர்கள் அதை ஒத்துக்கொண்டு பேசாமலிருந்தனர். மழை நின்று வெயில் காட்டத் தொடங்கிவிட்டது. ஈசுவரி ஆடுகளைக் கொட்டகையில் தள்ளி கட்டிவிட்டு நூறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

பகல்பொழுதில் மேயவிட்டால் பச்சையைக் கண்டமேனிக்கு பாய்ந்துவிடும். நிலத்துக்குச் சொந்தக்காரன் பிடித்து வைத்துக்கொள்வான். போய் நின்றால் காது கூச கூச்சல்போடுவான்.

பிறகு தண்டமழுது கூட்டிவரவேண்டும். அந்தப்பாடுகளுக்கு பயந்து அவள் அவிழ்த்துவிடும் வேலை வைத்துக்கொள்வதில்லை. வேலை முடிந்து வரும்போது எங்காவது புகுந்து ஒரு கட்டுப்புல் தேற்றிவிடுவாள். விடுமுறை நாட்களில் ராசுப்பயலை நச்சரிப்பாள்.

“அவுத்துட்டுப் போயி மேச்சிட்டு வாயன்டா. சும்மாதான கெடக்குற…”
அவள் கேட்கும்போதெல்லாம் அவன் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி சமாளிப்பான்.

“பரிச்ச ஆரமிக்கப்போவுது. படிக்கணுமில்ல…” என்பான்.

“பெசல் கிளாசு வச்சிருக்காங்கம்மா. பள்ளிடம் போவணும் ” என்று புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான்.

வடக்குத் தெருவில் தாழப் படர்ந்திருக்கும் மரத்தின் கிளையொன்றில் அவன் பை தொங்கிக்கொண்டிருக்கும். அந்தத் தெருவில் அவனுக்கு ஏராளமான நண்பர்களுண்டு. அவர்களுடன் சேர்ந்துகொண்டு மண்டையில் தெறிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவான்.

விளையாட்டு அலுக்கும் நேரங்களில் நண்பர்களுடன் கடைத் தெருவை சுற்றிவருவான். ஊரில் ஒரேயொரு கிளப் கடை இருந்தது. காலையில் போட்ட பூரி கண்ணாடிப் பெட்டிக்குள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.

அதைப் பார்த்தபடி சற்றுநேரம் பொழுது போகும். பறக்கும் தட்டு போன்ற பூரிகள். அதன் உப்பல் ரகசியம் இன்றுவரை அவனுக்குப் பிடிபடவேயில்லை. ஒரேயொருமுறையாவது அந்தப் பூரியைத் தின்றுபார்த்துவிட மனசு ஆவலாய் துடிக்கிறது.

ஒரு செட் பூரி முப்பது ரூபாய். விளிம்பற்ற தட்டில் வாழையிலை போட்டு இரண்டு பூரிகளோடு கிழங்கு அள்ளி வைத்துத் தருவார்கள். வெளியிலிருந்து பார்த்தாலே மேசைகள் தெரியும். பொன் நிறமாய் மினுமினுங்கும் கிழங்கு தெரியும். அவக், அவக்கென்று விழுங்கும் வாய் தெரியும். ஆர்டர் சொல்லிவிட்டு ஆவலாய் பறந்தலைகிற கண்கள் தெரியும். இன்னொரு செட் என்று சொல்கிற குரலை வைத்து முதுகுகாட்டி அமர்ந்திருக்கிற காளிமுத்து மாமாவையோ, சின்னான் பெரியப்பாவையோ இனங்கண்டுகொள்ளமுடியும் .

தினம் கடையைக் கடக்கும் தருணங்களில் காற்றில் மசாலா வாடை அடிக்கும். சால்னாவோ, கிழங்கோ வாயு ரூபத்தில் வந்து மூக்கைத் தடவும். அது ஒரு சுகந்த மணம். அதை அனுபவிப்பதற்காகவே ராசுப்பயல் நடையைத் தளர்த்துவான். ஒருமுறை ஈசுவரியிடம் நைச்சியமாக கேட்டும் பார்த்தான். முப்பது ரூபாய் என்றதும் அவள் மலைத்துவிட்டாள்.

“அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுடா” என்று அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். முப்பது ரூபாயில் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வாங்கி பத்து நாட்களை ஓட்டிவிடுவாள்.

நண்பர்களில் யாராவது பூரி சாப்பிட்டதாக சொன்னால் பசி கப்பென்று காதையடைக்கும். பூரிப்பசி. அவர்கள் தின்றதை விட அதைப்பற்றி அவர்கள் கதையளப்பதைத் தாங்கிக் கொள்வது பெருங்கடினமாக இருந்தது அவனுக்கு.

தங்களுக்கும் கதை சொல்லத் திறமை வந்துவிட்டதைப்போல அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி, இப்படியென்று அவன் பட்டாளத்திலிருந்த அத்தனை பேரும் பூரி சாப்பிட்டிருந்தார்கள். சிலர் கடன் சொல்லி சாப்பிட்டதாக சொன்னார்கள். பின்னாடியே அவர்களுடைய அப்பாக்கள் வந்து கடனடைத்து விடுவார்களாம்.

ராசுப்பயலுக்கு முதன்முறையாக அப்பா இல்லாதது பெருங்குறையாகப்பட்டது. அதுநாள்வரை அப்பாவைப்பற்றி அவன் யோசித்ததில்லை. தெளிவற்ற பிம்பமாக கூட அவர், அவனுடைய விழிப்படலத்தில் உறைந்திருக்கவில்லை. சிறுநெல் மணியளவு கருப்பைக்குள் ஊன்றி தரித்திருக்கையிலேயே அவர் விட்டுப் போய்விட்டார்.

அம்மாவின் ஒவ்வொரு வசவின்போதும் அவரின் இருத்தல் குறித்த ஞாபகம் வரும். அம்மாதிரியான ஒரு உறவுக்கு வீரியமிருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. இப்போது பூரியின் மீதான காதலில் அவரின் நினைவு வந்தது.

காலையில் எழும்போதே ஈசுவரி அந்த சந்தோஷ செய்தி சொன்னாள். “எலே பயலே, உன் புத்தகப்பையி மேல காசு வச்சிருக்கேன். கிளப்பு கடையில பூரி வாங்கித் தின்னு.”

ராசுப்பயலுக்கு சட்டென்று காதுகள் அடைத்துக்கொண்டதைப் போலிருந்தது. திருதிருவென்று விழித்தான்.

“முப்பது ரூவாதான….?”

ஈசுவரி தலையாட்டிக் கேட்டாள். ஆவென வாயைத் திறக்க மா…..வுக்கு காற்று மட்டும் வந்தது.

“காசு பத்திரம்…”

ஈசுவரி அடுப்புச்சாம்பல் ஒதுக்கி சாணி மெழுகினாள். மூன்று பத்து ரூபாய்த்தாள்கள் பைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராசுப்பயல் புத்தகப்பைக்குள் ரூபாயை பத்திரப்படுத்திக்கொண்டான். அவசரமாக நீரை மொண்டள்ளிக் குளித்தான். பாட்டின் வார்த்தைகள் இஷ்டத்துக்கு வந்தன. பூரிகள் பறக்கும் தட்டுகளாய் கண்ணுக்கெதிரே காற்றில் அலைந்தன. அவசரமாய் சீருடை அணிந்து மாடத்தில் கிடந்த விபூதியை நெற்றியில் அப்பிக்கொண்டு புத்தகப்பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.

மற்ற பயல்கள் கிளம்பியிருக்கவில்லை. வெயில் மஞ்சள் படலமாய் விரிந்து கிடந்த தெருவில் ராசுப்பயல் ஒரு காலை அழுத்தி, ஒரு காலை உயர்த்தி, திரும்பவும் அதேபோல் அழுத்தி, உயர்த்தி பாட்டுப் பாடியபடியே ஓடினான்.

காலை நேரமென்பதால் கடையில் கூட்டம் அதிகமிருக்கவில்லை. நேரமாக, ஆக மண்டத் தொடங்கிவிடும். ராசுப்பயல் தயங்கியபடியே கடைக்குள் எட்டிப் பார்த்தான். கால்கள் கூசின. கொஞ்சம் படபடப்பாயிருந்தது. தோளில் கிடந்த பையை இடது கைக்கு கொண்டுவந்து துழாவினான். பணம் இருப்பதை உறுதி செய்துகொண்ட மனதுக்கு சற்று ஆசுவாசமாயிருந்தது.

“என்னாடா,,,,?” கல்லாவுக்கு அந்தப்புறமிருந்து முதலாளி எட்டிப்பார்த்துக் கேட்டார்.

“பூரி…..” ராசுப்பயலுக்கு குரல் எழும்பவில்லை.

“சாப்புடணுமா….?” கையை வாய்க்கருகில் கொண்டு சென்று கேட்டார். ராசு தலையாட்டினான்.

“காசு கொணாந்திருக்கியா….?” அவனுக்கு அவமானமாயிருந்தது. சட்டென உடல் கூசிப்போக கண்கள் கலங்கின. வேகமாய் தலையாட்டி பைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்தான்.

“உள்ளாற போயி ஒக்காரு…” அவர் கைக்காட்டிய இடத்தில் சென்றமர்ந்தான். இரண்டு கால்களுக்கிடையில் புத்தகப்பையை நிறுத்தி இறுக்கிக் கொண்டான்.

‘தம்பிக்கு ஒரு செட்டு பூரி குடுப்பா…” முதலாளியே அவனுக்காக குரல் கொடுத்தார். ராசுப்பயல் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருந்தான். கைவிரல்களைக் கோர்த்து தொண்டையை நனைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சமையல்கட்டை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே, கைவைத்த அழுக்கு பனியன் அணிந்திருந்த மாஸ்டர் பூரி தேய்த்துக் கொண்டிருந்தார். பிசைந்து வைத்திருந்த மாவிலிருந்து சிறிது கிள்ளி எடுத்து உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டினார்.

உருட்டிய மாவை அரை நொடியில் பெரிய வட்டமாய் தேய்த்தார். ராசுப்பயல் அதை அதிசயம் போல் கண்கள் விரியப் பார்த்தான். வட்டா நிறைய கொதித்துக் கிடந்த கிழங்கில் கல்பாசியின் தணியாத வாசம். சப்ளையர் பையன் ஒரு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ராசுப்பயல் கொஞ்சமாய் நீர் அருந்திக் கொண்டான்.

“தண்ணி குடிச்சா பசியடங்கிடும் ” என்பாள் ஈசுவரி. நீரில் எண்ணெய் கசண்டடித்தது.

பக்கத்து மேசையில் ஒருவர் பூரி மேல் குருமாவைப் பரப்பி மூன்று விரல்களால் பிய்த்து, பிய்த்து தின்று கொண்டிருந்தார். ராசுப்பயலுக்கு வாய்க்குள் உப்புநீர் சுரந்தது. உதடுகள் லேசாக பிளந்து கொண்டன. கருமணிகள் அசையாது அவரையே உன்னித்தன.

“பூரி……” சப்ளையர் ணங்கென்று தட்டை வைத்தான். அவன் ராசுவைவிட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். முகம் கடுகடுத்திருந்தது. திடீரென்று பக்கவாட்டிலிருந்து குரல் வந்ததில் தவம் கலைந்த தினுசில் ராசுப்பயல் அதிர்ந்துபோனான்.

தட்டில் இளம்பச்சை நிற குருத்து வாழையிலையில் இரண்டு உப்பல் பூரிகள். பக்கத்தில் மஞ்ச, மஞ்சேரென்று ஆவாரம்பூ குருமா. மூன்று விரலால் பிய்க்க வேண்டும். பக்கத்துமேசை மனிதர் சொல்லித் தந்திருந்தார். பிய்த்தான். பிஞ்சு விரல்கள் எண்ணெயில் மினுமினுத்தன. குருமாவில் தோய்த்தான். விழிகளில் பறந்தலைகிற ஆவல். தலையை லேசாக உயர்த்தி கிழங்கோடு பூரியை வாயிலிட்டுக்கொண்டான். அப்போது கண்கள் தானாக மூடிக்கொண்டன. அதுவரை அனுபவித்தறியாத ருசியின் தீண்டலில் நாக்கு இளஞ்சிவப்பு மலர் போல மலர்ந்து போனது. ஒவ்வொரு வாய்க்கும் எழுந்த கிளர்ச்சி மனதை பரபரக்க செய்தது. கால்கள் பையை இறுக்கிக்கொண்டன.

மூளையின் செல்களை உணர்வூட்டி விட்டது போல அவனுக்குள் கதைகள் கிளைத்தன. இன்னொருமுறை கடைக்கு வருவது போன்ற நிகழ்வை நிகழ்த்திப் பார்த்து மனசு சந்தோஷப்பட்டது. ஒவ்வொரு வாய்க்கும் இடைவெளி விட்டு ருசிக்க, கண்கள் சுற்றியலைந்தன. உடல் முன்னும், பின்னுமாக லேசாக அசைந்தது. கடைசிவாயை வழித்து வாயிலிட்டுக்கொண்டபோது வயிறு நிறைந்து போனது.

குருமாவின் மசாலா வாசம் உள்ளங்கையில் மிதந்தது. உள்ளங்கை எண்ணெய் மினுமினுப்பில் வாழைப்பூ போல இளமஞ்சள் நிறத்தில் பளபளத்தது. கழுவிய கையை
சட்டையில் துடைத்துக்கொள்ள பயமாயிருந்தது. ஒருமாதிரி அடிபட்ட கை போல உடம்பில் படாதவாறு வைத்துக்கொண்டு ராசுப்பயல் பிள்ளையார் கோவிலண்டை வந்து நின்றான். தூரத்தில் சகாக்கள் வருவது தெரிந்தது.

“ஒசத்தியான மஞ்ச நெறத்துல ஆவாரம்பூவாட்டம் குருமா. …” மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டான் .

இன்னொரு பக்கம்

ஸிந்துஜா

கிழக்கு மேற்காகத் திருப்பரங்குன்றம் சாலை ஓடிற்று. சாலையின் வடக்கில் இருந்த பஸ் ஸ்டாப்புக்குப் பின்புறம் வரிசையாக நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள்  சாலையைப் பார்த்தபடி நின்றன. இடது பக்கம் இரண்டு, வலது பக்கம் இரண்டு என்று பிரித்து நடுவில் உயர்ந்து நின்ற இரும்புக் கிராதியிட்ட கேட்டின் வழியே ஒரு பாதை சென்றது. பாதை வழியே உள்ளே சென்றால் உள்ளே இடது பக்கம் முன்பு கோடவுன் என்று கட்டப்பட்டு அப்புறம் வீடாய் மாறி விட்ட கட்டிடம். வலது பக்கம் பெரிய கிணறு. வீட்டுக்குள்ளேயே கக்கூஸ் கட்டிக் கொள்ளும் நாகரீகத்தை ஒத்துக் கொள்ளாத காம்பவுண்டின் சொந்தக்காரர்  கிணற்றைத் தாண்டி  மூன்று கழிவறைகள் கட்டியிருந்தார். தவிர பெண்கள் வீட்டின் முற்றத்திலேயே குளியல் வேலைகளை முடித்துக் கொள்பவர்களாக இருந்ததால், குடியிருக்கும் வீட்டு ஆண்கள் உபயோகிக்க என்று இரண்டு குளியலறைகளும் அங்கே இருந்தன. கோடவுனுக்கு என்று கட்டப்பட்டு யாரும் வராததால் இரண்டு மூன்று தடுப்புச் சுவர்களை எழுப்பி ஒரு வீடாக அதை வீட்டுச் சொந்தக்காரர் மாற்றியும் அது முறையான வீடாக அமையாதிருந்த

தால் குடி வருவதற்கும் ஆள் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் தர்மலிங்கம் குடும்பம் அந்தப் பின் வீட்டுக்குக் குடி வந்தது..

தர்மலிங்கம் வீட்டில் அவர், அவரது மனைவி, பிள்ளை நாராயணன் என்று மொத்தம் மூன்று பேர். அந்த வீட்டில் எப்போதும் ஒருவித மயான அமைதி நிலவியது. வீட்டில் உள்ளவர்கள் பேசும் குரல்களைக் கூட யாரும் கேட்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களா என்று கூட மற்றவர்களுக்கு ஐயம் இருந்தது.

காம்பவுண்டில் முன்புறம் சாலையைப் பார்த்து நின்ற நான்கு வீடுகளிலும் நடுத்தரக் குடும்பத்தினர்தாம் வசித்து வந்தனர். முதல் வீட்டில் பழனிச்சாமி வாத்தியார் என்று வீணை வித்துவான் குடி இருந்தார். சிபாரிசு, சபா போன்ற புழுக்களை அவர் மதிக்காமல் இருந்ததால் கேடு கெட்ட உலகம் அவர் பக்கம் திரும்பாமல் இருந்தது. ட்யூஷன்களிலும் மீனாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி போன்ற விசேஷக்  கச்சேரிகளிலும், அவ்வப்போது கிடைத்த கல்யாண வீட்டு வாசிப்புகளிலும் ஜீவனம் நடத்த முடிந்தது. அவர்களுக்கு விஜயா என்று  பெண். அவள் பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு நான்கு வருஷங்களாகக் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டாம் வீட்டில் இந்தியன் வங்கியில் வேலை பார்த்த வரதராஜுவும் அவர் மனைவி லட்சுமியும்  இருந்தார்கள்.

இந்தக் கதைக்கு மற்ற இரண்டு குடித்தனக்காரர்களைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை.

வரதராஜுதான் எல்லோரிடமிருந்தும் மாத வாடகையை வசூலித்து அவர் அலுவலகம் போகும் வழியில் இருந்த வீட்டுக்காரரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.  இதற்காக மாதம் ஒரு முறை அந்தந்த வீட்டுக்

காரர்கள் வரதராஜுவிடம் வந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொடுத்து விட்டுச் செல்லுவார்கள். இந்த வசூல் விவகாரத்தின் பொருட்டு தர்மலிங்கத்துக்கு வரதராஜுவுடன் பேசும் பழக்கம் ஏற்பட்டது. முதல் மாத வாடகை கொடுக்க வந்த போது வரதராஜு அவரிடம் “இதுக்கு முன்னாலே எங்கே குடியிருந்தீங்க?” என்று கேட்டார்.

அவர் “கல்கத்தாலே” என்றார். “ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதுதான் சொந்த ஊரு. ஆனா நாப்பது வருஷங் கழிச்சும் பரமகல்யாணியைத் தினமும் சேவிக்கிற பாக்கியம் கிடைக்கலே” என்று சிரித்தார்.

வரதராஜு ‘ஏன், என்ன ஆச்சு?’ என்று பார்வையாலேயே கேட்டார்.

“பையனுக்கு இங்கே காலேஜில் சீட்டு கிடைச்சிது. ஆஸ்டல்லே விடலாம்னுதான் இருந்தேன். ஆனா என் சம்சாரம் ஒத்துக்கலே. இங்க ஒரு மூணு வருஷம் மீனாச்சியைப் பாத்துகிட்டு சிவனேன்னு கிடடான்னு நமக்கு எழுதியிருக்கு.”

“நாப்பது வருஷமா? வேலையெல்லாம்?”

“ஒரு வெள்ளைக்காரன் கம்பனியிலே. சேந்தப்போ பத்து மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கே போயி கூட்டிப் பெருக்கணும்; டேபிள் சேர் எல்லாத்தையும் துடைக்கணும். பாத்ரூமைக் கழுவி சுத்தம் பண்ணனும். ஆபீஸ்லே வேலை பாக்கறவங்களுக்கு சமோசாவும் டீயும் அவங்க கேக்கிறப்போ வாங்கிக் கொடுக்கணும். ரூமுலேதான் தங்கி இருந்தேன். அங்கே திரும்பிப் போக ராத்திரி ஆயிரும்.  கடைசி பத்து வருஷத்திலே வீட்டுக்கும் ஆபீசுக்கும் சேத்து யூஸ் பண்ணக் கார் கொடுத்தாங்க. பதினோரு மணிக்கு ஆபீஸ். நாலு மணிக்கு வீடு. கம்பனி கஸ்டமர்களுக்கும் சப்ளையர்களுக்கும் தீபாவளிக்கு ரசகுல்லாவும் துர்கா பூஜைக்கு சோன் பப்டியும் பாக்கெட் பாக்கெட்டா அட்டன்டர்களை விட்டு அனுப்புவேன். மாசத்திலே பாதி நாள் இன்கம்டாக்ஸ், சேல்ஸுடாக்ஸ் ஆபீசர்களுக்கு ஸ்டார் ஹோட்டல்லே பார்ட்டி கொடுக்கிற நெலைமைக்கு ஏத்தி விட்டுட்டான் வெள்ளைக்கார பாஸ்” என்று புன்னகை செய்தார்.

பிறகு “நீங்க இந்த ஊர்தானா?” என்று தர்மலிங்கம் வரதராஜுவைக் கேட்டார்.

“எனக்குப் புட்டபர்த்தி பூர்வீகம். இங்கே ஒரு மில்லுலே வேலை கிடைச்சுதுன்னு வந்தேன். அப்புறம் பேங்கிலே வேலை கிடைச்சு இங்கேயே செட்டில் ஆயிட்டேன்” என்றார் வரதராஜு. “நானும் மீனாச்சி கிட்டே வந்து முப்பது வருஷம் ஆயிடுச்சு.”

“புட்டபர்த்தின்னா சத்திய சாயி பாபா?”

“ஆமா.”

“நிஜமாவே விபூதி எல்லாம் மேலேந்து கொட்டுமா?”

“எல்லாம் நம்பிக்கைதான். கடவுள் தலைக் கொண்டையிலே கங்கையை முடிஞ்சு வச்சார்னும், கெட்டவனுக்குப் பத்து தலை இருந்ததுன்னும், செங்கடலை  வத்த வெச்சு மத்தவங்க நடக்கறதுக்கு வழி பண்ணிக் கொடுத்தார்னும் சொல்லிட்டு இருக்கறதை எப்பிடி நம்புறோம்? அது மாதிரிதான்” என்றார் வரதராஜு.

“நீங்க கல்கத்தாலே இருந்தது பத்திப் பேசிட்டிருந்தீங்க. கல்கத்தாலே நீங்க எங்க குடியிருந்தீங்க?” என்று வரதராஜு யதார்த்தமாகக் கேட்டார்.

தர்மலிங்கம் கொஞ்சம் யோசித்தவர் போல மௌனமாக இருந்தார். பிறகு “அலிப்பூர்லே” என்றார். “நீங்க கல்கத்தா வந்திருக்கீங்களா?”

“நாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒரு பத்து நாள் என் மச்சான் வீட்டுலே போய்த் தங்கினோம். அவன் அங்கே ரயில்வேலே இருக்கான்” என்றார் வரதராஜு

“அலிப்பூர்லேயா?”

“இல்லே. ஜே  சி போஸ் ரோடுக்குப் பக்கத்திலே. அங்கேர்ந்து அலிப்பூர் பக்கந்தான்னு  என் மச்சான்  சொல்லுவான் அங்கே அவனோட மாமனார் வீடு இருந்திச்சின்னு அடிக்கடி போவான். நாங்க கல்கத்தா போனப்போ எங்களையும் ஒரு தடவை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப்  போயிக் காமிச்சான் ” என்றார் வரதராஜு.

” ஓ சம்பந்திங்க வீடா? அவங்க எங்கே இருந்தாங்க அலிப்பூர்லே? ” என்று தர்மலிங்கம் கேட்டார்.

வரதராஜு கொஞ்சம் யோசித்தார். பிறகு “எனக்கு ரோடு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது” என்றார். “ஆனா நாங்க போனப்போ சம்பந்தி வீடு பக்கத்திலே ஒரு ஆஸ்பத்திரி இருந்திச்சு. பெரிய ஆஸ்பத்திரி.”

தர்மலிங்கம் “ஆஸ்பத்திரியா? அப்போ கமாண்ட் ஆஸ்பத்திரியாதான் இருக்கும்” என்றார்.

வரதராஜு “ஆமா. அதேதான்” என்றார்.

“சரி, நான் கிளம்பறேன்” என்று எழுந்தார் தர்மலிங்கம்.

அவர் கூடவே வாசலுக்கு வந்த வரதராஜு “அப்ப எங்க இருந்தீங்க?” என்று கேட்டார்.

தர்மராஜு திடுக்கிட்டு “என்ன? என்ன?” என்றார்,

“இல்லே, நீங்க அலிப்பூர்லே எங்கே இருந்தீங்கன்னு கேட்டேன்” என்றார் வரதராஜு. .

“ஓ, அதுவா?” என்றார் தர்மலிங்கம். “ஆஸ்பத்திரிக்குக் கொஞ்சம் தள்ளி.”

“ஒரு வேளை நீங்க என் தம்பியைக் கூடப் பாத்திருப்பீங்க. அவனுங் கூட உங்களைப் பாத்திருப்பான்” என்றார் வரதராஜு.

தர்மலிங்கம் “அப்ப நான் வரட்டுமா?” என்று கேட்டபடி வெளியே சென்றார்.

அதற்குப் பின் அடுத்த மாதம்  வாடகை கொடுக்க வந்தார் தர்மலிங்கம், அவர் வரும் போது மாலை நாலரை இருக்கும். வரதராஜு காப்பி குடித்துக் கொண்டிருந்தார்.

வந்தவரைப் பார்த்து “வாங்க. உக்காருங்க. காப்பி சாப்பிடுங்க” என்று உபசரித்தார் வரதராஜு.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் அப்புறமா வரட்டுமா?” என்று கேட்டார் தர்மலிங்கம் நின்று கொண்டே.

“அட, உக்காருங்க சொல்லுறேன். நம்ம வீட்டுக் காப்பியையும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று வரதராஜு சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி ஒரு தட்டில் பட்சணங்களைக் கொண்டு வந்து ஒரு ஸ்டூலில் தர்மலிங்கம் முன்னால் வைத்து “சாப்பிடுங்க” என்றாள்.

அவர் சங்கோஜத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தார். தட்டிலிருந்து

அல்வாத்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.

வரதராஜுவிடம் “பிரமாதமா இருக்கே. நாகப்பட்டினம் மிட்டாய்க் கடையிலே வாங்கினதா?” என்று கேட்டார்.

“இல்லே. நம்ம வீட்டிலே செஞ்சதுதான்” என்றார் வரதராஜு சிரித்துக் கொண்டே.

“அடடா, எவ்வளவு பிரமாதமா இருக்கு? நான் ஒரு முட்டாள், நாகப்

பட்டினம் கடை அல்வாதான் உலகத்திலேயே டேஸ்டின்னு நினைச்சு

கிட்டு இருந்தேன்” என்று சிரித்தார். “அப்படியே கரையுதே நாக்கிலே! என்னமா ஒரு ஸ்மெல்லு!” என்று விடாமல் புகழ்ந்தார்.

“கொஞ்சம் மிச்சரையும் எடுத்துக்குங்க. காப்பி குடிக்கறப்போ

நாக்குலே கொஞ்சம் காரம் இருக்கணுமில்லே” என்றார் வரதராஜு.

மிக்சரை எடுத்து வாயில் போட்டு மென்றார். “இப்பவாச்சும் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசணும்! இது வீட்டிலே செஞ்சதுதானே!” என்றார்.

உள்ளேயிருந்து சிரித்துக் கொண்டே வந்த லட்சுமி அவரிடம் காப்பிக் கோப்பையைக் கொடுத்தாள்.

“இவ்வளவு காப்பியா?” என்று அவர் பிரமித்தார். “இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டிலே நான் ஒண்ணும் சாப்பிட வேணாம்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க” என்றார். அப்புறம் வாடகைப் பணத்தைக் கொடுத்தார்.

“உங்க மச்சான் இந்தப் பக்கம் வருவாரா?” என்று கேட்டார்.

திடீரென்று அவர் அப்படிக் கேட்டதும் வரதராஜூவுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தார்.

“அதான் கல்கத்தாலே இருக்காருன்னிங்களே!”

“ஓ அவனா? எனக்கு மொத்தம் மூணு மச்சாங்க இருக்காங்க. அதான் நீங்க திடீர்னு கேட்டதும் முழிச்சிட்டேன். அவன் எங்க இப்ப கல்கத்தாலேந்து வர்றது? போன வருஷந்தான் வந்திட்டுப் போனான். குடும்பத்திலே எல்லாரையும் இழுத்துப் பிடிச்சி அழச்சிட்டு வரதுன்னா சும்மாவா இருக்கு?” என்றார் வரதராஜு.

“அது சரி, அது சரி” என்று எழுந்தார் தர்மலிங்கம்,

லட்சுமி உள்ளேயிருந்து வந்து ஒரு பாத்திரத்தை அவரிடம்கொடுத்தாள்.

“கொஞ்சம் அல்வாவும், மிச்சரும் வச்சிருக்கேன். அம்மாவுக்கும் தம்பிக்கும் கொடுங்க.”

வியப்பு அவரை அடித்துத் துவைத்துப் போட்டது போல ஒரு நிமிஷம் தர்மலிங்கம் அப்படியே நின்றார். பிறகு லட்சுமியைப் பார்த்து வணங்கி விட்டு மெதுவாக வெளியே சென்றார்.

வரதராஜு “இந்த மனுஷன் ஒரு மாசம் கழிச்சு வந்து எதுக்கு உன் தம்பியைப் பத்தி கேக்கறாரு? ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியாம முழிச்சிட்டேன்” என்றார் மனைவியிடம்.

“கல்கத்தாலே உங்க மச்சான் இருக்கான்னதும் நீங்க ரொம்ப சொந்தமாயிட்டீங்க போலிருக்கு” என்று சிரித்தாள் அவர் மனைவி,

“அப்பிடியா சொல்லுறே? எனக்கு என்னமோ அப்படித் தோணலியே?” என்றார் வரதராஜு.

“பின்னே எப்பிடித் தோணுதாம்?”

அவர் ஒன்றும் சொல்லாமல் அவளைப்  பார்த்தார்.

“வந்ததுக்கு ஏதாவது பேசிட்டுப் போகணும்னு நினைச்சிருப்பாரு. பாவம்” என்றாள் லட்சுமி.

 

ரு நாள் தாயம்மா லட்சுமியிடம் வந்து “நம்ம அய்யாவோட பிரெண்டு

ஊருக்குப் போயிருக்காரு” என்றாள்.

“யாரு? எந்த ஊருக்கு?” என்று லட்சுமி கேட்டாள்.

“அதான் பின்  வூட்லே இருக்காரே அவருதான்.”

“யாரு கல்கத்தாக்காரரா?”

“ஆமா. அவருதான். அந்த ஊருக்குத்தான் போயிருக்காராம்” என்றாள் தாயம்மா.

லட்சுமிக்கு வியப்புடன் கூடவே சற்றுக் கோபமும் வந்தது. கல்கத்தா போற மனுஷனுக்கு நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லத் தோணலை பாரு என்று நினைத்தாள். தர்மலிங்கம் போவதை அவளிடம் தெரிவித்திருந்தால் தம்பிக்குக் கொஞ்சம் பலகாரங்கள் செய்து கொடுத்திருப்பாள். அடுத்த மாதம் அவன் மனைவிக்குப் பிறந்த நாள் வருகிறது. அதுக்கு ஒரு  புடவை வாங்கிக் கொடுத்தனுப்பி இருக்கலாம்.

மாலையில் வரதராஜு வீட்டுக்கு வந்த போது அவள் தாளமாட்டாமல் அவரிடம் பொருமினாள்.

“போன மாசம் ஒரு நாள் திருச்சிக்கு அவரு மாத்திரம் ஒரு கலியாணத்துக்குப் போயிட்டு வரேன்னு உங்ககிட்டே சொல்லிட்டுப் போனாரில்லே? இப்போ உங்க மச்சான் இருக்கற ஊருக்குப் போகறதைக் கூட சொல்லாமப் போறாரு! ஏதாச்சும் பார்சல் கட்டிக் கொடுத்திருவோமுன்னு பயமா?”

“சரி விடு. அந்த மனுஷனுக்கு என்ன பிரச்சினையோ, நமக்கு என்ன தெரியும்? திடீர்னு போயிருக்காருன்னா ஒண்ணும் குறை சொல்ல முடியாது. ஆனா பிளான் போட்டு ஊருக்குப் போனாருன்னா நாமதான் அவருகிட்டேர்ந்து விலகி நிக்கணும். இல்லியா?” என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து தர்மலிங்கம் திரும்பி விட்டார்.அவர் டாக்சியிலிருந்து இறங்கும் போது வாசலில் நின்ற வேப்பமரத்திலிருந்து வரதராஜு வேப்பங்குச்சியை ஒடித்துக் கொண்டிருந்தார். தர்மலிங்கம் கூட ஓர் இளைஞனும் இறங்கினான். உயரமாக, கட்டுடலுடன், செவேலென்று இருந்தான். காரிலிருந்து ஒரு பெட்டியும் இரு தோள் பைகளும் இறக்கப்பட்டன. தர்மலிங்கம் அவரருகே வரும் போது வரதராஜுவிடம் “இது என் பையன் சார். செல்வம்னு பேரு. நாராயணனுக்கு அண்ணன். கல்கத்தாலே வேலை பாக்குறான்” என்றார். அவனைப் பார்த்து “சாருக்கு வணக்கம் சொல்லுடா” என்றார். அவன் கை தூக்கி அவரை வணங்கினான்.

“திடீர்னு கிளம்பிப் போக வேண்டியதா ஆயிடிச்சு. அதான் உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிக்கக் கூட முடியாமப் போயிருச்சு” என்றார் தர்மலிங்கம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. போன வேலை திருப்தியா ஆச்சுன்னா சரிதான்” என்றார் வரதராஜு.  அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்தார்கள். அந்தப் பையன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான்.

அடுத்து வந்த நாள்களில் காம்பவுண்டில் உள்ளவர்களுக்கு செல்வம் பெரும் காட்சிப் பொருளாகி விட்டான். தினமும் மாலையில் அண்ணனும் தம்பியும் வெளியே கிளம்பி விடுவார்கள். செல்வம் அணிந்திருந்த உடைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தன. ஒரு நாள் அணிந்த உடையை அவன் மறுநாள் அணிந்து யாரும் பார்க்கவில்லை. அண்ணனும் தம்பியும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு செல்வார்கள்.

ஒரு நாள் மாலையில் வாத்தியாரின் மனைவியும் லட்சுமியும் பேசிக் கொண்டிருந்த போது விஜயாவின் கலியாணப் பேச்சு வந்தது.

“நானும் படாதபாடு படுறேன். இந்தப் பொண்ணுக்கு ஒரு சம்பந்தம் அமைஞ்சிட்டா தேவலே” என்றாள் வாத்தியாரின் மனைவி.

“நாமதான் கையிலே வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையறமோன்னு தோணுது” என்றாள் லட்சுமி.

“என்ன சொல்றீங்க?”

“ஆமா. இந்தப் பின்வீட்டுலே இருக்காரே தர்மலிங்கம், அவர் பிள்ளையைப் பாத்தீங்கள்ளே? ராஜா மாதிரி இருக்கான். கல்கத்தாலே வேலையிலே இருக்கான்னு சொல்றாங்க. அவனை விஜயாவுக்குப் பாக்கலாமில்லே?”

“ஆனா யாரு எப்பிடிப் போயி கேக்கறது? அவங்க வீட்டுலே இருக்கிறவங்க சண்டிகேஸ்வரரைக் குலதெய்வமா வச்சிருக்கிற மாதிரியில்லே இருக்காங்க? அவங்க யாரும் இங்கே  யாரோடையும் பேசி நான் பாத்ததில்லையே!” என்றாள் வாத்தியாரின் மனைவி. அவள் குரலில் லட்சுமியின் யோசனைக்கு வரவேற்பிருந்தது.

“நா எங்க வீட்டுக்காரரைக் கேக்கச் சொல்லறேன். அந்த வீட்டு மனுஷன் நாலுலே ரெண்டிலே இவங்க கிட்டே வந்து பேசிட்டுப் போவாரு” என்றாள் லட்சுமி. அன்றிரவு அவள் வரதராஜுவிடம் இதைச் சொன்ன போது “இந்த ஐடியா நல்லா இருக்கே. தர்மலிங்கத்துக்கிட்டே கேட்டுப் பாக்கலாம்” என்றார். ஆனால் மறுநாள் அவர் ஆபிசிலிருந்து வரும் போதே இரவு மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்ததும் சூடாகத் தோசை சுட லட்சுமி அடுப்படிக்குச் சென்றாள்.

எட்டரைக்கு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது ‘ஓ’வென்று பெருங் குரலில் யாரோ ஓலமிடுவது கேட்டது. பதறியடித்துக் கொண்டு வரதராஜு வாசலுக்கு ஓடினார். ஆனால் சத்தம் பின் வீட்டிலிருந்து வந்து கொண்டு இருந்தது. அவர் வேகமாகத் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்தார். அவருக்குப் பின்னாலேயே பழனிச்சாமி வாத்தியாரும் ஓடி வந்தார். வரதராஜு “தர்மலிங்கம் சார், தர்மலிங்கம் சார்!” என்று சத்தமாக அழைத்தார். உள்ளேயிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. உள்ளே இருந்த அழுகுரல் சத்தத்தில், தான் கூப்பிடுவது கேட்கவில்லை போலும் என்று வரதராஜு கதவைத் தட்டினார். வாத்தியாரும் சேர்ந்து கொள்ள இருவரும் பலமாகக் கதவைத் தட்டினர். ஆனால் எந்தவித பதிலும் உள்ளிருந்து வரவில்லை. சில வினாடிகளில் அழுகுரலின் உக்கிரம் அடங்கி நின்றது. ஓரிரு நிமிஷங்கள் இருவரும் காத்திருந்து விட்டுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.

மறுநாள் காலையில் தர்மலிங்கம் வீட்டில் பால் கொண்டு வந்து தரும் கறுப்பாயி, லட்சுமியிடம் வந்து அவர்கள் வீட்டில் கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை என்று சொன்னாள். வரதராஜூவுக்கும் லட்சுமிக்கும் வயிற்றில் கலவரம் பிடுங்கித் தின்றாலும் வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதை உணர்ந்தார்கள். வரதராஜு மாலை வீடு திரும்பியதும்  லட்சுமி அவரிடம் அன்று மத்தியானம் தர்மலிங்கம் வீட்டை விட்டு வெளியே வந்து தண்டல்காரன்பட்டிப் பக்கம் நடந்து சென்றதாகச் சொன்னாள். ஒரு மாதிரி தள்ளாடிக் கொண்டே அவர் சென்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது என்றாள்.

ஆனால் அடுத்த இரண்டு நாள் கழித்து நடந்ததுதான் மிகுந்த அதிர்ச்சியை வரதராஜுவிடம் ஏற்படுத்தி விட்டது. வரதராஜுவின் வீட்டுக்கு அன்று  மாலையில் வந்து வாத்தியார்தான் விஷயத்தைச் சொல்லிக் கோபப்பட்டார். அன்று காலை வாத்தியாரின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாக அவர் வீட்டுக்குள் வெகு வேகமாக செல்வம் ஓடி வந்தானாம். வந்தவன்  வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் அதே வேகத்தில் திரும்ப வந்தானாம். வெள்ளிக்கிழமையென்று அப்போதுதான் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வெளியே வந்த விஜயாவின் மீது மோதி அவள் கீழே விழுந்து விட்டாள். அவன் நின்று அவளைப் பார்த்துச் சிரித்தானாம். அவள் பயந்து போய் “ஐயோ ஐயோ!” என்று கத்தியதைக் கேட்டு விஜயாவின் அம்மா வந்து பார்த்து அவளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். செல்வம் மறுபடியும் திரும்பி வாசல் வழியே ஓடிப் போய் மெயின் ரோடில் நின்றானாம். அங்கே அப்போது பஸ்களும் லாரிகளும் கார்களும் பறந்து கொண்டிருந்த நேரம். இதற்குள் அவன் வீட்டில் இல்லாததைக் கண்டு பிடித்த நாராயணன் வாசலுக்கு வந்து ரோடில் நிற்பவனைப் பார்த்திருக்கிறான். அவனை நோக்கி ஓடிய இவனைப் பார்த்து அவன் ரோடின் குறுக்காக எதிர் முனைக்கு ஓடினானாம். அப்போது வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் மேல் மோதி செல்வம் ரோடில் விழுந்து விட்டான். கையிலும் காலிலும் நல்ல அடி. தோல் சிராய்ப்பினால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரே களேபரமாகிக் கடைசியில் நாராயணன் அவனை ஒரு ரிக் ஷாவில் ஏற்றிப் பக்கத்தில் இருந்த கிளினிக்குக்கு எடுத்துச் சென்றான். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டதாம். கைகளிலும் கால்களிலும் கட்டுப் போட்டிருந்த அவனை நாராயணன்தான் ரிக் ஷா விலிருந்து தூக்கிச் சென்றானாம்

கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த முகத்துடன் இதையெல்லாம் சொல்லி விட்டு பழனிச்சாமி அவரிடம்  “என்ன சார் இங்கே நடக்குது? வீட்டுக்குள்ளாற ஒருவன் தாந்தோணியா ஓடி வாரான். குளிச்சிட்டு வந்த பொம்பளைப் புள்ளே மேலே இடிச்சு அதைக் கீளே தள்ளி விட்டுருக்கான். போதாதுக்கு அவ கீளே விளுந்து கிடக்கிறதைப் பாத்து சிரிச்சுகிட்டே நின்னானாம். மனுஷத்தன்மையே இல்லாத பயலால்லே இருக்கான்? ‘இப்பிடி ஆயிருச்சே, மன்னிச்சுக்குங்க’ன்னு ஒரு வார்த்தை அந்தப் பயலோட அப்பன் கிட்டேயிருந்து இதுவரைக்கும் வரலே. என்னை என்னா கையாலாகாத பயலுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்களா? வீச்சரிவா எடுத்தா ஒரே போடுதான். நான் செயிலுக்குப் போனாலும் ஆயிட்டுப் போகுதுன்னு வெட்டிப் போட்டிருவேன்” என்று  கத்தினார்.

“சார். பதட்டப்படாதீங்க. உங்க கோபம் எனக்குப் புரியுது. உங்க நிலைமையிலே இருந்தா நான் கூட இப்படித்தான் இருப்பேன். நாம  அங்கே போயி தர்மலிங்கத்தையே கேப்போம்”  என்று வரதராஜு அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.

“நாம போவோம். ஆனா நீங்க நாளைக்கு வீட்டுக்காரரைப் பாத்து முதல்லே இந்தக் குடித்தனத்தை வெளியே போகச் சொல்லணும்” என்றார்.

“நிச்சயமா. காலேலே மொத வேலையாப் போயி வீட்டுக்காரரைப் பாத்துப் பேசிடறேன்” என்றார் வரதராஜு. அவராலும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார்கள். தர்மலிங்கம்தான் கதவைத் திறந்தார். அவரைப் பார்த்ததும் வரதராஜு திடுக்கிட்டு விட்டார். சில தினங்களில் ஒருவரால் இவ்வளவு கிழடு தட்டிப் போக முடியுமா? நைந்த கண்களும், வதங்கிய முகமுமாகக் காணப்பட்ட அவர் கதவைப் பிடித்துக் கொண்டிராவிட்டால் கீழே விழுந்து விடுவார் போலத் தோன்றியது. கோபத்துடன் வந்த வாத்தியார் கூட ஒரு நிமிடம் அரண்டு போய் நின்றார்.

தர்மலிங்கம் அவர்களை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார்.

“இன்னிக்கிக் காலையிலே உங்க பையன் எங்க வீட்டுக்கு வந்து அடிச்ச கூத்து உங்களுக்குத் தெரியுமா?” என்று பழனிச்சாமி தர்மலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கேட்டார்.

தர்மலிங்கம் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். “என்ன ஆச்சு? எனக்குத் தெரியாதே” என்றார் குரல் நடுங்க.

பழனிச்சாமி அன்று அவர் வீட்டில் நடந்ததைக் கூறினார். “இது வெளியே தெரிஞ்சா எம் பொண்ணுக்கு எவ்வளவு அவமானம்.  பெத்த மனசு துடிக்குது.”

தர்மலிங்கம் வாத்தியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இதை உங்க காலா நினைச்சு விழுந்து கும்பிடறேன். தயவு செய்து மன்னிச்சிருங்க என்னை” என்றார்.

வாத்தியார் “நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க? அந்தப் பயித்தியக்காரப் பயலைக் கூப்பிடுங்க. நீங்க மட்டும் இல்லேன்னா, இத்தினி நேரத்துக்கு அவன் கையைக் காலை முறிச்சிப் போட்டிருப்பேன்” என்றார் கோபமாக.

“நீங்க சொல்லுறது ரொம்ப சரி. அவன் பயித்தியக்காரன்தான். இப்ப ரூமுக்குள்ளாறே அடைச்சுப் போட்டிருக்கோம்” என்றார் தர்மலிங்கம்.

“என்னது?”

“இது என்ன வியாதின்னு தெரியலே. எல்லாரையும் மாதிரி ஒழுங்கா பேசுவான், நடப்பான், சாப்புடுவான், தூங்குவான். முன்னாலே ஒரு வருஷத்துக்கு ஒன்றரை வருஷத்துக்கு ஒரு வாட்டி திடீர்னு யாரோட கண்ட்ரோலுக்கும் அடங்காம, திடீர்னு சிரிச்சுக்கிட்டு  திடீர்னு அழுதுகிட்டு, தனக்குள்ளேயே பேசிகிட்டு ஓடுவான். ஏன் இப்பிடின்னு யாருக்குமே தெரியாது. இன்னிக்கி உங்க வீட்டுக்குள்ளே ஓடி வந்த மாதிரி திடீர்னு வீட்டை விட்டு வெளியே வந்து ஓடிப் போயிருவான்.

ஆனா இப்ப இந்த ஒரு வருஷத்திலே இது மாதிரி நடக்கறது மூணாவது தடவை. அதுக்குத்தான் பதறிட்டு கல்கத்தா போனேன். டாக்டர் அவனைத் தனியா விடாதீங்க. கொஞ்ச காலம் உங்க கூடவே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. அதனாலே இங்கே கூட்டிக்கிட்டு வந்தேன்” என்றார்.

சத்தம் போட வந்தவர்கள் சத்தமடங்கிக் கிடந்தார்கள்.

தர்மலிங்கம் பழனிச்சாமியிடம் “சாரு கூட என்னையத் தப்பா நினைச்சிருப்பாரு. அவரு நான் கல்கத்தாவில் இருக்கறதை பத்திக் கேக்குறப்போ அதை மறிச்சிகிட்டு வேறே எதாவது கேள்வி கேட்டு பதில் சொல்லிப் பேச்சை மாத்தப் பாப்பேன். என் பையனை இவரோ இவரு உறவோ பாத்துறக்கூடாதுன்னுதான் அப்பிடி நடந்துக்கிட்டேன்” என்று மன்னிப்புக் கோரும் குரலில் சொன்னார்.

“நா அதெல்லாம் மனசிலே வச்சிக்கலையே” என்று வரதராஜு பரிவுடன் அவரிடம் சொன்னார். “ஆனா அன்னிக்கி ராத்திரி உங்க வீட்டுலேந்து அழற குரல் வந்தப்போவே எனக்கு சந்தேகமா இருந்துச்சு. நீங்கதான் நாங்க ரெண்டு பேரும் வந்து அப்பிடிக்  கதவைத் தட்டியும் கதவைத் தெறக்கவேயில்லை” என்றார் வரதராஜு.

தர்மலிங்கம் அவர்கள் இருவரையும் பார்த்து “ரெண்டு நிமிஷம் நாம வெளியிலே போய்ப் பேசலாமா?” என்று இறைஞ்சும் குரலில் கேட்டார்.

அவர்கள் மூவரும் வாசலில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றார்கள். சாலையில் போக்குவரத்து எதுவுமில்லாமல் நிசப்தம் தெருவை அடை காத்தது. இருந்த இருள் வெளியில் ஏதோ ஒரு வீட்டில் சுவர்க்கோழிஒன்று  ‘ணிக்’கிட்டுக் கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களின் மனப் போராட்டங்களை எதிரொலித்து வேப்ப மர இலைகள் அசையாமல் நின்றன. அவர்களைப் பார்த்து உறுமிக் கொண்டே ஒரு தெரு நாய் ஓடிற்று.

தர்மலிங்கம் “என் சம்சாரத்தை வச்சுக்கிட்டுப் பேச வேணாமின்னுதான் இங்க உங்களைக் கூட்டிகிட்டு வந்தேன்” என்று சொன்னார். “அன்னிக்கி ஏன் அப்பிடி செல்வம் பய அழுதான் தெரியுங்களா? ராத்திரி எட்டு மணிக்கு சாதாரணமா சிலோன் ரேடியோலே பாட்டு கேட்டுகிட்டு இருந்தவன் தீடீர்னு டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டுட்டு அம்மணமா நிக்குறான். டேய் டேய் என்னடா பண்ணுறேன்னு அவங்கிட்டே நான் ஓடறேன். அவன் சிரிச்சுகிட்டே எதோ ஓடிப்பிடிச்சு விளையாடற குழந்தை மாதிரி கொல்லப்பக்கம் ஓடுறான். என்ன சத்தம்னு அவங்கம்மா வெளிலே வந்து பாத்து அப்படியே கலங்கி நின்னுடுச்சி. நாராயணன்தான் அவன் பின்னாலேயே ஓடிப் போயி தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ளாற  இழுத்திட்டு வந்தான். கழட்டிப் போட்ட உடுப்பை மாட்டுறான்னா மாட்டேன்னு மணிக் கணக்கா அடம் பிடிக்குறான். கெஞ்சிக் கதறி மெரட்டி சொன்னாலும் கேக்காம உடுப்பைக் கழட்டி எறிஞ்சு எறிஞ்சு ஓடப் பாக்குறான். நாராயணன் அவனை ரூமுக்குள்ளை தள்ளிக்  கட்டிப் போட்டான். அப்போ அவன் மூஞ்சிலே இந்தப் பய காறித் துப்பினான். வேணுமின்னே ஒரு வார்த்தை சொல்லாம உக்காந்தபடியே ஒண்ணுக்குப் போயிட்டான். அப்பதான் நாராயணனுக்கும் பொறுமை போயிருச்சு. உருட்டுக் கம்பை எடுத்திட்டு வந்து சாத்த ஆரமிச்சான். அடிக்காவது பயந்து அடங்கட்டுமின்னு. வலி பொறுக்காம அவன் அலறினதும் அப்பதான்.”

மற்ற இருவரும் வாயடைத்து நின்றார்கள். சமாளித்து வரதராஜுதான் தர்மலிங்கத்தின் முதுகில் அணைப்பாகக் கை வைத்து மெல்லத் தட்டிக் கொடுத்தார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து தர்மலிங்கத்தை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.

வீட்டுக்குத் திரும்பிய வரதராஜு லட்சுமியிடம் தர்மலிங்கத்தின் தோற்றத்தையும், செல்வம் மனநலம் சரியாக இல்லாதவன் என்பதையும் சொல்லிப் புலம்பித் தீர்த்து விட்டார்.

“நீங்க செல்வத்தைப் பாத்தீங்களா?”

“ஆமா. உள்ளே ஒரு ரூமிலே கட்டிப் போட்டு வச்சிருக்காங்க. லேசா கதவைத் திறந்து காமிச்சாரு தர்மலிங்கம். கட்டில்லே அவன்  படுத்திருந்தான். எங்க மூணு பேரையும் அவன் கண்ணு பாத்துகிட்டே இருந்திச்சு. அவன் மனசிலே என்ன ஓடிக்கிட்டு இருந்திச்சோ?” என்றார் வரதராஜு.

மறுநாள் வரதராஜு வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு நடைப் பயிற்சிக்குக் கிளம்பிப் போகும் போது பழனிச்சாமி அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

“என்ன இன்னிக்கி புதுசா வாக்கிங் ஆரமிச்சிருக்கீங்களா?” என்று பழனிச்சாமியைப் பார்த்து வரதராஜு சிரித்தார்.

“நீங்க வெளியே வரதுக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருந்தேன். வாங்க போகலாம்” என்று பழனிச்சாமி வரதராஜுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

நடந்து செல்கையில் “நேத்தி ராத்திரி இந்த தர்மலிங்கத்தையும் அவரு குடும்பத்தையும் நினைச்சு நான் சுத்தமா தூங்கவே இல்லே” என்றார் பழனிச்சாமி. “உலகத்துலே கடவுள் மனுஷனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறான் பாருங்க.”

“ஆமா. விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நானும் லட்சுமியும் கூட நேத்து ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கிக் காலேலே முடியாது. ஆனா சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து திரும்பி வரப்போ வீட்டுக்காரரைப் பாத்து சொல்லிட்டு வந்திடறேன்” என்றார் வரதராஜு.

“இல்லே. வேணாம். நீங்க வீட்டுக்காரரைப் பாத்து தர்மலிங்கத்தைக் காலி பண்ணச் சொல்ல வேணாம்.”

வரதராஜு அவரை உற்றுப் பார்த்தார்.

“நேத்து ராத்திரி விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டிருந்தேன். யோசிச்சுப் பாத்தா ஒருத்தன் பைத்தியமா இருக்குறப்போ அவனுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதான்னு சந்தேகமாத்தான் இருக்கு. ‘அவன் கண்ணு பாக்குறது காது கேக்குறது எல்லாம் அவன் மூளையிலே பதிஞ்சு பாக்குறானா கேக்குறானா என்ன?’ன்னு எனக்குத் தோணிச்சு. நாம வயசுப் பிள்ளைகளா இருந்தப்போ பக்கத்திலே எதுத்தாப்பிலே வர்ற நம்ம வயசுப் பொண்ணுங்களை ஓரக் கண்ணாலே பாப்போம். அவ பார்வை நம்ம பக்கம் இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சா அவ மேலே முழுக் கண்ணையும் வச்சுப் பாப்போம். அப்போ நம்ம மனசிலே அப்பிடி ஒரு சந்தோஷம் வரும். பயமும் வரும். நமக்கெல்லாம் அப்போ இருபது இருபத்திரண்டு வயசு இருந்திருக்குமா? இப்போ இந்த செல்வம் பயலுக்கும் அந்த வயசுதானே இருக்கும்? அன்னிக்கு செல்வம்  பய கீழே விழுந்து கிடந்த என் மகளைப் பாத்தப்போ அவன் கண்ணு அவ மேலே பட்ட மாதிரி இருந்திருக்கும். ஆனா பார்வை? அந்தப் பித்த நிலையிலே ஆம்பளை பொம்பிளைங்கிற வித்தியாசமெல்லாம் தெரிஞ்சிருக்குமா அவனுக்கு? எனக்கு நான் அது வரைக்கும்  குமுறிக்கிட்டே இருந்ததை நினைச்சு ராத்திரி ரொம்ப வெக்கமாயிருச்சு” என்றார் பழனிச்சாமி.

பழனிச்சாமி பேசிக் கொண்டு வந்தார். வானம் அலம்பி விட்ட தரை போல சுத்தமாக இருந்தது. அவர்களைத் தழுவிச் சென்ற அதிகாலையின் இளங்காற்றில் பழனிச்சாமியின் வார்த்தைகள் குளித்தெழுந்து மெருகேறியது போல வரதராஜூவுக்குத்தோன்றிற்று.அவரைத்

தழுவிக் கொண்டு நிற்க வேண்டும் போலவும் அவரது கைகளையும் நெற்றியையும் முத்தமிட வேண்டும் போலவும் வரதராஜூவுக்கு இருந்தது. அக்கம் பக்கம் வந்து போய்க் கொண்டிருந்த ஜனம் வேடிக்கை பார்க்கும் என்ற தயக்கத்தில் அவர் எதுவும் செய்யாமல் நடந்து சென்றார்.

பழனிச்சாமி “தர்மலிங்கமும் என்னா பாடு பட்டுக்கிட்டு இருப்பாரு? சொந்த வீட்டிலே கண்ணுக்கு முன்னாலே சொந்த மகனை ஜெயில்லே போடுற மாதிரி கட்டிப் போட்டு பாத்துகிட்டு இருக்குறதை விட வேறே பெரிய தண்டனை இந்த வயசிலே அவருக்கு வேணுமா? அவரு சம்சாரத்தை நினைச்சா எனக்கு அப்பிடியே புரட்டிக்கிட்டு வருது. வயசுக்கு வந்த மகன்  உடம்புல ஒரு பொட்டுத் துணி இல்லாமே நிக்கறதைப் பாக்குற அம்மாவோட மனசு எப்பிடி முறிஞ்சு போயிருக்கும்? அந்தத் துக்கத்தை அவுங்க யாரோடவாவது பகிந்துக்க முடியுமா? நினைச்சு நினைச்சு மறுகுறதைத் தவிர வேறே என்ன செய்ய முடியும் அவுங்களாலே? தர்மலிங்கத்தோட சம்சாரம் அனுபவிச்சிட்டு இருக்கிற கஷ்டத்துக்கு முன்னாலே என்னோட வீட்டக்காரம்மா ஓரு நா பட்ட கஷ்டம் எந்த மூலைக்குன்னு நெஞ்சு பொங்கி கிட்டே இருக்கு. கடவுள் ஏன் இப்படியாப்பட்ட கஷ்டத்தைக் கொடுக்குற கயவாளியா இருக்கான்னு திட்டணும் போல இருக்கு” என்று உடைந்த குரலில் சொன்னார். அவரது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததை வரதராஜு பார்த்தார்.

“சரி, ரெண்டு நிமிஷம் உக்காந்துட்டுப் போகலாம்” என்று சாலை ஓரத்தில் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சுக்கு பழனிச்சாமியை வரதராஜு அழைத்துச் சென்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

வலி

ஸிந்துஜா

காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே முதுகு வலி தன் கைவரிசையைக் காட்டத் துவங்கி விட்டது. அன்றையக் காப்பி, சமையல் கடையைக் கவனிக்க வேண்டுமே என்று குஞ்சாலி எழுந்து விட்டாள். கொதிக்கும் நீரை முதுகில் விட்டுக் கொண்டு குளித்தது இதமாக இருந்தது. இன்று டாக்டரிடம் போக வேண்டும். மூன்று மாதமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏதோ மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குப் போவது போல டாக்டரிடம் போக வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமைதான் சந்திரசேகரனுக்கு வார விடுமுறையாதலால் அவரே குஞ்சாலியைக் கூட்டிக் கொண்டு போய் வருவது சிரமமில்லாதிருந்தது. ஆனால் இந்த வெள்ளிக்கிழமையன்று டாக்டருடைய மாப்பிள்ளை திருச்சியில் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்ததால் அவர் ஊரில் இருக்கவில்லை. அதனால் ஞாயிற்றுக் கிழமை வரச் சொல்லியிருந்தார்.

சந்திரசேகரன் அவள் முகத்தைப் பார்த்து விட்டு டாக்டரிடம் அவள் போவதை ஒத்திப் போட்டு விடலாம் என்றார். “இன்னிக்கி ஷாக் ட்ரீட்மெண்ட் வேறே கொடுத்துப் பாக்கலாம்னு சொன்னாரே. நானும் கூட இருந்தாத்தானே சரியா இருக்கும்” என்றார் குஞ்சாலியிடம்.

“அதெல்லாம் வேண்டாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன். ஒவ்வொரு நாளும் இந்த முதுகே இல்லாம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்னு வெறுப்பா இருக்கு” என்றாள் குஞ்சாலி. “நீங்க ஆபீசுக்குப் போங்கோ. நான் சீமாவை அழைச்சசிண்டு போயிட்டு வரேன்.”

“சே, குழந்தைக்கு என்ன தெரியும்?” என்றார் சந்திரசேகரன்.

பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சீமா “ஏன் தெரியாது? பத்தொம் போதாம் நம்பர் பஸ்ஸிலே ஏறி சின்னக்கடைத் தெருவிலே இறங்கி டாக்டரோட கிளினிக்குக்கு கூட்டிண்டு போறது என்ன பிரமாதம். அப்பா! நான் இப்ப ஏழாவது படிக்கிறேன்” என்றான்.

குஞ்சாலி “ஆமாண்டா என் ஆம்பிளை சிங்கம்” என்று சீமாவைப் பார்த்துச் சிரித்தாள்.பிறகு சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள். குனிந்து வேலை செய்யும் போது வலி ஜாஸ்தியாகத்தான் இருந்தது. குனிந்து நிமிராமல் சமையக்கட்டில் வேலை செய்யும் நிபுணத்துவத்தை ஏன் யாரும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை?

அவர்கள் இருவருக்கும் தோசை வார்த்தாள். சந்திரசேகரனுக்கு டிபன் செட்டில் சாப்பாடு வைத்துக் கொடுத்ததும் அவர் கிளம்பிச் சென்றார். குஞ்சாலி சீமாவிடம் “நான் சித்தே ஊஞ்சல்லே படுத்துக்கறேன். பதினோரு மணிக்குத்தானே வரச் சொல்லியிருக்கார். நாம் பத்து பத்தேகாலுக்குக் கிளம்பினா சரியா இருக்கும்” என்று சொல்லி விட்டுக் கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலை நோக்கிச் சென்றாள். சீமா ஊஞ்சல் மேலிருந்த தினமணியையும் அம்புலிமாமாவையும் எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான்.

பத்து மணிக்கு “அம்மா!” என்று கத்திக் கொண்டே சீமா வாசலிலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தான். குஞ்சாலி தரையில் உட்கார்ந்து கூடத்துச் சுவரில் சாய்ந்திருந்தாள். அவள் முகம் வேதனையில் சுருண்டிருந்தது. சிறு முனகல்கள் அவளிடமிருந்து வெளிப்பட்டன.

“ரொம்ப வலிக்கிறதாம்மா?” என்று சீமா அவள் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.அவன் கண்கள் கூடத்துச் சுவரின் மேலே தொங்கிக் கொண்டிருந்த அனுமார் படத்தை இறைஞ்சலுடன் பார்த்தன.

“ஆமா. என்னமோ தெரியலே. இன்னிக்கிக் கொஞ்சம் வலி ஜாஸ்தியாத்தான் இருக்கு. நீ எதுக்குக் கத்திண்டே உள்ளே வந்தே?” என்று குஞ்சாலி கேட்டாள்.

“பத்தொம்போது பைக்காராவுக்குப் போயிண்டிருக்கு. அவன் போயிட்டு அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவான். அதான் நீ கிளம்பறையா?” என்றான் சீமா.

“அது வரதுக்குப் பத்து நிமிஷம் ஆகும் போ” என்றாள் குஞ்சாலி. “நான் புடவை மாத்திண்டு வரேன்” என்று உள்ளேயிருந்த அறைக்குச் சென்றாள்.

‘சோமசுந்தரம் செட்டியார் நகை மாளிகை’ என்று அச்சாகியிருந்தஅம்மாவின் மஞ்சள் பையை சீமா கையில் எடுத்துக் கொண்டான். போன தீபாவளிக்கு அப்பாவின் தடிமனான கழுத்துச் சங்கிலியை அழித்து மூக்குத்தியும் தோடுகளும் செட்டியார் கடைக்குப் போய்ப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அப்போது கடையில் கொடுத்த பை அது. மூன்று மாசத்துக்கு முன்னால் வரை அது புதுக்கருக்கு அழியாமல்தான் இருந்தது. அம்மா அதைக் காட்ரெஜ் பீரோவுக்குள் வைத்திருந்தாள். எந்தப் புதுசு வந்தாலும் அதை அவள் அங்கே ஜாக்கிரதை பண்ணி வைத்திருப்பாள். தங்கம், வெள்ளிக்குக் கிடைக்கும் மரியாதை துணிப்பைக்கும் புதுக் கர்சீப்புக்கும் வளையல்களுக்கும் கிடைக்கும், ஆனால் வாரா வாரம் டாக்டரிடம் போக ஆரம்பித்த பின்னால் நோயைப் போல மஞ்சள் பையும் கூட ஒட்டிக் கொண்டு வந்தது. பணம் வைத்துக் கொள்ளும் சுருக்குப்பை, டாக்டர் சீட்டுக்களும் மருந்து பைல்களும் அடங்கிய சின்ன ஃபைல், டாக்டரிடமிருந்து திரும்பி பஸ்ஸில் வரும் போது வயிற்றைப் புரட்டினால் வாயில் போட்டுக் கொள்ளவென்று இரண்டு அசோகா பாக்குப் பொட்டலம், அப்பா ஆபிசிலிருந்து ஒரு தடவை கொண்டு வந்த ரைட்டர் பேனா என்று உள்ளடக்கிய பையின் மீது ஊரழுக்கும், கை வேர்வையும் படர்ந்து திட்டுத்திட்டாகக் கறுப்பு பரவியிருந்தது.

அவர்கள் இருவரும் வாசலுக்கு வந்த போது பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காவேரி மாமி “இந்த வெய்யில்லே எங்கே கிளம்பிட்டேள்? கறிகாய் மார்க்கெட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.

“ஆமா. எனக்கு டாக்டர் வீடுதான் கறிகாய் மார்க்கெட்டு” என்று சிரித்தாள். வெய்யில் உக்கிரமாகத்தான் இருந்தது. தலையைத் தூக்கி மேலே வானத்தைப் பார்த்தாள். சூடான தோசைக்கல் வானில் பளபளத்துக் கொண்டிருந்ததின் எதிரொலியில் ஊர் புழுங்கித் தவித்தது.

“இன்னிக்கி ஞாயத்திக்கிழமைன்னா?” என்றாள் காவேரி.

“ஆமா. வெள்ளிக்கிழமை போகலே. அதனாலே இன்னிக்கிவரச் சொன்னார்னு இப்ப போயிண்டிருக்கேன்.”

“சமையல்லாம்? நான் வேணா குழம்பு கறி ஏதாவது பண்ணி வைக்கட்டா?”

“அதெல்லாம் காலம்பறவே சீக்கிரம் எழுந்து பண்ணிட்டேன். அதான் முதுகைப் பிடிச்சு இழுக்கறது” என்றாள் குஞ்சாலி.

“அம்மா, பஸ் வரது” என்றான் சீமா.

அவர்கள் இருவரும் வீட்டு வாசலின் முன் இருந்த ஸ்டாப்பில் வந்து நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்டார்கள். அம்மா கடைசி வரிசையில் இருந்த பெண்களுக்கான இருக்கையில் காலியாக இருந்த ஒற்றை சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். உள்ளே உட்கார இடமில்லாமல் ஆண்கள் வாரைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். சீமா தனக்கு முன்னால் நின்ற ஒல்லியான ஆளின் பின் பக்கம் நின்றான். கண்டக்டர் சீமாவை நெருங்கிய போது “சின்னக்கடை ரெண்டு” என்று சொல்லி டிக்கட் வாங்கிக் கொண்டான்.

சீமாவுக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் “வேலு! எதுக்கு இன்னிக்கு ஞாயத்துக் கெளமை இப்பிடி ஒரு கூட்டம் வண்டியிலே?” என்று ஒல்லி ஆளிடம் கேட்டார்.

“இன்னிக்கி எம்சியாரு வாராரில்லே. அதுக்குத்தான். எந்த முக்கு திரும்பினாலும் சனக் கூட்டம்தான்” என்று சிரித்தான் வேலு

“அடக் கெரகமே! அவுரு சினிமாலே வரவருதானே? அவருக்கா இம்புட்டுக் கூட்டம்?”

“ஆமா. லச்சம் பேரு வருவாங்கன்னு தினத்தந்திலே போட்டுருக்காங்கே. தமுக்கத்திலே இல்லே கூட்டம்? அதுக்கு மேலேயும் கூட எக்கும் பெரியப்பா” என்றான் வேலு.

“ஓரு லட்சமா? அளகரு ஆத்துலே எறங்கறே அன்னிக்கிக் கூட இம்மாஞ் சனம் வராதேடா?” என்றார் பெரியவர்.

அவருக்குப் பக்கத்தில் இருந்த நாமக்காரர் “இப்பல்லாம் அழகரை விட அரிதாரத்துக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி!” என்றார் சிரித்துக் கொண்டே,

பெரியவர் மறுபடியும் “வேலு!எதுக்குடா இப்ப இதெல்லாம்?” என்று கேட்டார்.

“நாடோடி மன்னன் சினிமா ஓடிக்கிட்டு இருக்கில்லே? அதுக்கு விளா எடுக்கறாங்களாம். இந்த வண்டியிலே முக்காவாசிப் பேரு அங்க போறவங்கதான்.”

பஸ்ஸிலிருந்து யாரும் இறங்காததாலும் பயணிகள் நின்று செல்ல வேண்டிய நிலைமைக்கு வண்டி வந்து விட்டதாலும் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், நந்தவனம், சுப்பிரமணியபுரம் என்று ஒரு நிறுத்தத்திலும் நிற்காமல் பஸ் ஓடிற்று. வழக்கமான நேரத்துக்குச் சற்று முன்பே சின்னக்கடை ஸ்டாப் வந்ததும் சீமாவும் குஞ்சாலியும் இறங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் சற்று முன் சென்று இடது பக்கம் சென்ற திண்டுக்கல் ரோடில்
திரும்பி நடந்தார்கள்.

“இன்னிக்கி பஸ்ஸிலே கூட்டம் இருக்காதுன்னு நினைச்சிண்டு வந்தா அப்பிடி ஒரு கூட்டம். சினிமாக்காரான்னா எம்கேடி காலத்திலேர்ந்தே ஜனங்களுக்கு அப்படி ஒரு ஆகர்ஷணம் . நீதான் பாவம், வழி பூரா பஸ்ஸிலே நின்னுண்டே வந்தே” என்றாள் குஞ்சாலி.

“நல்ல வேளையா உனக்கு உக்கார இடம் கிடைச்சதே” என்று சீமா சிரித்தான்.

ராஜா பார்லியிலிருந்து பிஸ்கட் வாசனை காற்றில் மிதந்து வந்தது. அந்தக் கடைக்குச் சற்றுத் தள்ளியிருந்த இடது பக்கத்துத் தெருவில் நுழைந்து சென்றார்கள். டாக்டரின் கிளினிக் முன்பு அவரது ஆஸ்டின் கார் நின்றிருந்தது. வாசலில் டாக்டர் சாமிநாதன் எம்பிபிஎஸ் என்று போர்டு தொங்கிற்று. பெயரிலும் பட்டத்திலும் இருந்த புள்ளிகள் காலத்தின் இரையாக உயிரை விட்டிருந்தன. சீமாவின் அப்பாவுக்கு டாக்டரை வெகு காலமாகத் தெரியும்.

அவர்கள் உள்ளே போன போது வேறு யாரும் இல்லை. டாக்டரின் அறை வாசல் திறந்திருந்தது. குஞ்சாலியைப் பார்த்ததும் “வாங்கோ” என்றார். இருவரும் அவருக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.

“இன்னிக்கி சந்துருவுக்கு ஆபீஸோ? அதான் இந்தப் பெரிய மனுஷன் உங்களை அழைச்சுண்டு வந்திருக்கானா? என்று சீமாவைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைச் சிந்தினார்.

“வலி எப்படி இருக்கு முன்னைக்கு?” என்று கேட்டார்.

“அப்படியே தண்டு வடத்தைப் பிச்சு எடுத்து வீசியெறிஞ்சிட மாட்டமான்னு இருக்கு டாக்டர். ராத்திரியிலேதான் வலி பொறுத்துக்க முடியாம போறது.”

“சந்துரு வந்திருந்தா நன்னாயிருந்திருக்கும்” என்றார் டாக்டர்.

“ஏன் டாக்டர்?” என்று குஞ்சாலி கேட்டாள்.

“மூணு மாசமா இங்கே நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்கேள். முதுகு வலி அப்படி ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியலையே. மருந்தும் மாத்திரையும் சொல்றதை இந்த வலி கேக்க மாட்டேங்கறதேன்னுதான் சந்துரு கிட்டே சொன்னேன் எலெக்ட்ரிக் ஷாக் வேணா கொடுத்துப் பார்க்கலாம்னு” என்றார் டாக்டர் யோசனையுடன்.

“அதுக்கென்ன, கொடுக்க வேண்டியதுதானே?”

டாக்டர் அவளை வியப்புடன் பார்த்தார்.

“என்கிட்டேயும் அவர் சொன்னார். இன்னிக்கி மனசில்லாமதான் ஆபீசுக்குப் போனார். நான்தான் சொன்னேன். இது என்ன பிரமாதம், குணமாகணும்னா டாக்டர் சொல்றதை செஞ்சுதானே ஆகணும்; வழவழன்னு இதமா வெண்ணையைத் தடவி ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த வலி அடங்கும்னா டாக்டர் அதை நமக்கு மொதல்லேயே பண்ணிடுவாரேன்னேன்.”

டாக்டர் இன்னும் வியப்புத் தாளாமல் கண்ணகல அவளைச் சில வினாடிகள் பார்த்தார்.

“உங்கம்மாவுக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி” என்றார் சீமாவிடம் . “அப்ப
இன்னிக்கி ட்ரீட்மெண்ட் ஆரமிச்சிடலாமா?” என்று குஞ்சாலியிடம் கேட்டார். அவள் சரியென்று தலையசைத்தாள்.

“நான் இப்ப மயக்க மருந்து கொடுத்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கறேன். ஷாக் கொடுத்து முடிஞ்சதும் ரொம்பவே வலிக்கும். அதனாலே இங்கேயே ஒரு மணி நேரம் படுத்துண்டு ரெஸ்ட்லே இருங்கோ. ஆத்துக்குப் போய் சாப்பிட்டதுக்கு அப்புறம் இப்ப நான் தர்ற மாத்திரையை சாப்பிடுங்கோ. ஒரு சார்ட் தரேன். பகல்லே ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை வலி எப்படி இருக்கு? குறைஞ்சிண்டு வரதா, இல்லே அப்படியே இருக்கா, இல்லே முன்னை விட ஜாஸ்தியா ஆயிண்டு வரதான்னு நோட் பண்ணி வச்சுண்டு அடுத்த தடவை வரப்போ கொண்டு வந்து காமியுங்கோ. ஒரு வாரத்துக்கு மாத்திரை தரேன். ஒண்ணையும் வெளியே போய் வாங்க வேண்டாம். முடிஞ்ச வரை ஆத்து வேலைகளைக் குறைச்சுக்கப் பாக்கணும். இது உங்களுக்குக் கஷ்டமான காரியந்தான். வேறே வழியில்லே. வாரத்திலே ரெண்டு நாள்னு அடுத்த மூணு வாரத்துக்கு வரணும். செவ்வாயும் வெள்ளியுமா வச்சுக்கோங்கோ” என்று சொல்லி விட்டு சீமாவைப் பார்த்தார். பிறகு தன் மேஜை டிராயரைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து “படிச்சிண்டிரு. இன்டரெஸ்டிங்கா இருக்கும்” என்று அவன் கையில் கொடுத்தார். மெதுவாகக் குஞ்சாலியை அவர் அடுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

சீமாவுக்கு இனம் தெரியாத பயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு கெடுதலும் நேரக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். அம்மா எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதை நினைத்துக் கொண்டான். டாக்டரை ‘எமகாதகன்’ என்று அவனுடைய அப்பா செல்லமாகத் திட்டுவதை அவன் பலமுறை வீட்டில் கேட்டிருக்கிறான். நிதானமும் திறமையும் உடைய டாக்டர் என மதுரையில் பெயர் எடுத்தவர் என்றும் அப்பா சொல்லியிருக்கிறார். சீமா உட்கார்ந்த இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். சிகப்பும், நீலமும் வெள்ளையுமாய் மூளை, முதுகுத் தண்டுவடம், இருதயம், கால்கள் கைகள் என்று கோட்டுப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

டாக்டர் கொடுத்த துப்பறியும் நாவலை எடுத்துப் பார்த்தான். அதை எழுதியவருடைய மற்ற துப்பறியும் நாவல்களையும் அவன் விரும்பிப் படித்திருக்கிறான். அதில் துப்பறிவாளரின் உதவியாளனாக வரும் கத்தரிக்காயை சீமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் பேசுவது செய்வது நடந்து கொள்வது எல்லாம் சிரிப்பை வரவழைக்கும். அந்தத் துப்பறிவாளரைப் போலவே தானும் ஒரு நாளைக்குப் ஏழெட்டுத் தடவை டீ குடிக்க வேண்டும் என்று சீமா ஒரு நாள் சொன்ன போது குஞ்சாலி “ஏண்டா, கீழ்ப்பாக்கத்துலேதான் அவாம் இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு போய் விட்டுட்டா தினம் ஏழெட்டு டீ உனக்கும் கிடைக்கும்” என்று சிரித்தாள்.

கையிலிருந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததும் அதன் சுவாரஸ்யத்தில் சீமா தன்னை இழந்து விட்டான். “அவ்வளவு நன்னாவா இருக்கு புஸ்தகம்?” என்று குரல் கேட்டு சீமா தலை நிமிர்ந்தான். டாக்டர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவன் வெட்கத்துடன் புத்தகத்தை மூடினான். “வேணும்னா நீ இதை ஆத்துக்கு எடுத்துண்டு போய்ப் படி” என்றார்.

சீமா உள்ளே இருந்த அறையைப் பார்த்தான்.

“பத்து நிமிஷம் கழிச்சு அவ முழிச்சுப்பா. அப்ப நீ போய்ப் பாரு. அப்புறம் அரை மணி கழிச்சு நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குக் கிளம்பினாப் போறும்” என்றார். சீமா சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பதினொன்றே முக்கால்.

பத்து நிமிஷம் கழிந்த பின் சீமா உள்ளே சென்றான். கண்களை மூடிப் படுத்திருந்த குஞ்சாலி அவன் வரும் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். முகத்தில் அயர்ச்சி படிந்திருந்தது. அவனைப் பார்த்ததும் புன்னகை செய்ய முயன்றாள். சீமா அவளருகே சென்று “எப்படி இருக்கும்மா?”என்று நடுங்கும் குரலில் கேட்டான். அவள் அவன் கையைப் பிடித்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.

“ரொம்ப வலிக்கறதுடா” என்றாள் ஈனஸ்வரத்தில். உடம்பு புரண்டு நெளிந்தது. “அம்மா, அம்மா” என்று வாய்விட்டு அழுதாள். சீமாவுக்கு என்னசெய்வதென்று
தெரியவில்லை. “நான் போய் டாக்டரை அழைச்சுண்டு வரேன்” என்று திரும்பினான்.

“அவர்தான் நன்னா வலிக்கும்னு சொல்லியிருக்காரே. நான்தான் பொறுத்துக்கணும். ஆனா, அம்மா, முடியலையே” என்று இரு கால்களையும் ஒட்டி முறுக்கிக் கொண்டாள்.

“நா முதுகைப் பிடிச்சி விடட்டுமாம்மா?” என்று கேட்டான் சீமா.

அவள் “நீ பாவம்டா” என்று ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு அவன் கையைத் தன் முதுகின் அருகில் எடுத்துச் சென்றாள்.

“இரும்மா. நான் அந்தப் பக்கம் வந்துக்கறேன்” என்று சொல்லி விட்டு அவன் கட்டிலைச் சுற்றிக் கொண்டு மறுபக்கம் சென்றான். இப்போது அவன் குஞ்சாலியின் முதுகைப் பார்த்தபடி நிற்க முடிந்தது. போர்வையை நீக்கி விட்டு இரண்டு கைகளாலும் அவள் முதுகை அமுக்கி விட்டான்.

“மெள்ள, மெள்ள, ரொம்ப அமுக்கினா அதுவே வலிக்கறது” என்றாள் குஞ்சாலி.

ஐந்து நிமிஷம் போயிருக்கும்.

“போறும்டா கண்ணா” என்றாள் குஞ்சாலி. சீமா கேட்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரைக்கும் தன் கைகளால் மெதுவாக அமுக்கி விட்டான்.

“அப்பாடா, எவ்வளவு இதமா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. சற்றுக் கழித்து “சரி, போறும். நிறுத்திக்கோ. அப்புறம் உனக்குக் கை வலிக்கும்” என்றாள்.

அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் மேலும் அவளது முதுகுப்புறத்தை அமுக்கி விட்டான்.

அவன் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று குஞ்சாலி முதுகைத் திருப்பி நேராக விட்டத்தைப் பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு “மணி என்ன?” என்று கேட்டாள்.

“பன்னெண்டு. பன்னெண்டேகால் இருக்கும்.”

“இப்ப கிளம்பினாலே ஆத்துக்குப் போய்ச் சேர ஒரு மணி ஆயிடுமே”என்றாள்.

“இன்னும் அரை மணி கழிச்சு டாக்டர் போகச் சொன்னார்” என்றான் சீமா.

“உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்டாள் குஞ்சாலி.

“இல்லே. இப்போ வயத்திலே பயம்தான் இருக்கு” என்றான் சீமா.

“சீ அசடே, இதுக்கென்ன பயம் வேண்டிக் கிடக்கு? உங்கப்பா சொன்னதும் சரிதான். சின்னப் பசங்களைக் கூட்டிண்டு வரக் கூடாதுதான். டாக்டர் எதோ புஸ்தகம் கொடுத்தாரே. என்ன புஸ்தகம்?”

அவன் சொன்னான். “ஓ, உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே. சரி அதை வச்சுண்டு வெளியே போய் உக்காரு. அரை மணி கழிச்சு நாம கிளம்பலாம்” என்றாள் குஞ்சாலி.

சீமா மறுபடியும் வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு கத்தரிக்காயை ருசிக்க ஆரம்பித்தான்.

குஞ்சாலியும் சீமாவும் கிளினிக்கை விட்டுக் கிளம்பும் போது பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது.

“அம்மா. நாம ரிக் ஷாலேயே போயிடலாம். நீ ரொம்ப டயர்டா இருக்கியே!” என்றான் சீமா.

“மனுஷனை மனுஷன் இழுத்துண்டு போறதுலையா? வேண்டாம். வேண்டாம். நாம பஸ்லேயே போலாம். உடம்பு அப்படி ஒண்ணும் உருகிப் போயிடாது.”

ராஜா பார்லியைக் கடக்கும் போது குஞ்சாலி அவனிடம் “ஒரு கேக் வாங்கிக்கோடா. கார்த்தாலே எட்டு மணிக்கு மூணு தோசை சாப்பிட்டது” என்று கடை வாசலில் நின்றாள். அவனுக்கு ஒரு சாக்லேட் கேக் வாங்கிக் கொடுத்தாள். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே அவளுடன் நடந்தான். பஸ் ஸ்டாப்பை நெருங்கும் சமயம் அப்போது வந்த பத்தொன்பதாம் நம்பர் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்றது. சீமா குஞ்சாலியிடம் “ஒரே கூட்டமா இருக்கேம்மா பஸ்ஸிலே இப்பக் கூட” என்றான்.

“அடுத்த பஸ் வர இன்னும் காமண்னேரம் ஆகும்” என்றாள் குஞ்சாலி
சலிப்புடன். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“இங்கே கொஞ்சம் உக்காந்துக்கறேன்” என்று பஸ் ஸ்டாப் அருகே இருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டாள்.

“நீயும் வரியா?” என்று சீமாவிடம் கேட்டாள்.

“நீ உக்கார்றதுக்கே அங்கே இடமில்லே” என்றான் சீமா

“அப்பாடா! என்ன வெய்யில், என்ன வெய்யில்!உஸ் !” என்று முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள் குஞ்சாலி..

ஆங்காங்கு இருந்த மரங்களுமே வெய்யிலில் வதங்கிக் கொண்டிருந்தன. இயற்கை மூச்சு விட மறந்து விட்டதை இலைகளின் அசைவு அற்று நின்ற மரங்கள் சுட்டின.

அப்போது அந்த வீட்டின் உள்ளிருந்து வந்தவர் குஞ்சாலியைப் பார்த்தார். “இந்தப் பாழாப் போன வெய்யில்லே எடமும் பத்தாம உக்காந்துண்டு இருக்கேளே. ஆத்துக்குளே வேணும்னா போயி சேர்லே சித்த நாழி உக்காந்துக்குங்கோ. பாத்தா ரொம்ப டயர்டா இருக்கேளே” என்றார்.

“இல்லே, இப்ப பஸ் வந்துடும்” என்றாள் குஞ்சாலி.

“கொஞ்சம் தேர்த்தம் தரட்டுமா?” என்று கேட்டவர் அவள் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீரும் ஒரு தம்பளரும் கொண்டு வந்து கொடுத்தார். குஞ்சாலி வாங்கிக் குடித்த பின் சீமாவுக்கும் கொடுத்தாள். பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கையில் “தவிச்ச வாய்க்குத் தூத்தம் கொடுத்தேள்” என்று நன்றியுடன் சொன்னாள்.

அடுத்த பஸ்ஸும் கூட்டத்தை அப்பிக் கொண்டு வந்து நின்றது. இரண்டு பேர் இறங்கினார்கள். குஞ்சாலிக்கும் சீமாவுக்கும் முன்னால் பஸ்ஸின் ஏறும் படியருகே மூன்று பேர் நின்றார்கள். பஸ்ஸை விட்டு இறங்கி வந்த கண்டக்டர் “ரெண்டு பேர்தான் ஏறலாம்” என்றான். அதைக் கேட்டு அந்த மூவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். குஞ்சாலியும் சீமாவும் ஏறிக் கொள்ள பஸ் புறப்பட்டது. பஸ் உள்ளே பெண்கள் பக்கம் காலியாக இருந்த ஒரே சீட்டில் குஞ்சாலி உட்கார்ந்து கொண்டாள்.

அவர்கள் வீட்டை அடையும் போது ஒன்றரை மணியாகி விட்டது. குஞ்சாலி சீமாவிடம் “வரப்பவும் கூட்டம் ஏன் தெரியுமோ? பசுமலை சர்ச்சிலே கல்யாணம்னு முக்காவாசி பஸ்ஸை ரொப்பிண்டு ஏழெட்டு குடும்பம் தல்லாகுளத்திலேர்ந்து வராளாம். என்ன மிச்சம்னா நீ திரும்பி வரச்சேயும் கால் கடுக்க நின்னுண்டு வந்ததுதான்” என்றாள். வீட்டை அடைந்ததும் அவர்கள் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் சீமா “அம்மா, நான் கோபாலாத்துக்குப் போறேன். இன்னிக்கி அங்கே கேரம் மேட்ச். ஆறு மணிக்கு வந்துடறேன்” என்றபடி கிளம்பினான்.

“ஏண்டா, கொஞ்சம் ஆத்திலே இருந்து ரெஸ்ட் எடேன். எனக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்றாள் குஞ்சாலி.

அவன் பதில் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து விட்டுக் கூடத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான். குஞ்சாலியும் டாக்டர் கொடுத்த மாத்திரையைப் போட்டுக் கொண்டு ஊஞ்சலில் படுத்தாள். ஆனால் அவள் தூங்க முடியாமல் முதுகைத் திருப்பியும் நெளிந்தும் புரள்வதை சீமா பார்த்தான்.

“அம்மா, இப்ப கொஞ்சம் முதுகைப் பிடிச்சு விடட்டுமா?” என்று சீமா கேட்டான்.

“வேண்டாம். வேணும்னா நானே கூப்பிடறேன்” என்றாள் குஞ்சாலி. ஆனால் அவள் முன்பைப் போலவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப் பார்க்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். டாக்டர் கொடுத்த நாவலில் மனதைச் செலுத்த முயன்றான். அரை மணி கழித்து குஞ்சாலி அவனைக் கூப்பிட்டாள். இப்போது தரையில் ஒரு விரிப்பைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் “வலி விடமாட்டேங்கிறதேடா கண்ணா” என்றாள்.

பிறகு அவனிடம் “நான் குப்புறப் படுத்துக்கறேன். நீ உன் காலாலே கொஞ்சம் மெள்ள முதுகை மிதிச்சு விடறயா?” என்று கேட்டபடி குப்புறப் படுத்துக் கொண்டாள்.

சீமா வலது காலை குஞ்சாலியின் முதுகில் வைத்து மெல்ல அழுத்தினான். “ஆங், அப்படித்தான். அம்மாடா எவ்வளவு நன்னா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. “அப்படியே கொஞ்சம் மேலாகக் கழுத்து வரைக்கும் மிதிச்சிண்டு போயிட்டு வரியா?”

சீமா அவள் சொல்படி காலை வைத்து அமுக்கி விட்டான். சற்றுக் கழித்து இடது காலுக்கு மாற்றிக் கொண்டான்.

“வலிக்கிறதாம்மா உனக்கு? சரி போறும்” என்றாள்.

அவன் அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் தன் வேலையைத் தொடர்ந்தான். சற்றுப் பெரிதாக ஆரம்பத்தில் அவளிடமிருந்து வந்த குரல் இப்போது தேய்ந்து சிறு முனகலாக வெளிப்பட்டது. அந்த முனகலும் நின்ற போது சீமா மிதிப்பதை நிறுத்தினான்.

ஐந்து மணிக்கு சந்திரசேகரன் ஆபிசிலிருந்து வந்து விட்டார். அப்போது குஞ்சாலி தனக்குக் காப்பியும் சீமாவுக்கு ஓவல்டினும் போட்டுக் கொண்டிருந்தாள். கணவரைப் பார்த்ததும் அவருக்கும் காப்பி கலந்தாள்.

“நீ படுத்திண்டிருப்பேன்னு நினைச்சிண்டு வந்தேன்”என்றார் அவர் காப்பியை வாங்கிக் கொண்டு.

“நான் என்ன உங்க சித்தி பொண்ணு பத்மாவா? ஒரு தும்மல் போட்டா நாலு நாளைக்கிப் போர்வையைப் போத்திண்டு கட்டில்லே படுத்து ராயசம் பண்ணறதுக்கு?” என்று சிரித்தாள் குஞ்சாலி.

“எங்காத்துக்காராளைப் பத்தி ஒசத்தியா சொல்லாட்டா உனக்குத் தூக்கம் வராதே” என்றார் சந்திரசேகரன். “எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததுக்கு என்ன எஃபெக்ட்? ரொம்ப வலிக்கும்னாரே சாமிநாதன்?”

“ஆமா. வலிக்கும்தான்? யார் கிட்டயாச்சும் கொடுத்து முடியுமா? அழுதாலும் பிள்ளை நான்தானே பெறணும்? ஆனா பாவம் கொழந்தை. ரொம்பக் கஷ்டப்பட்டுடுத்து இன்னிக்கி” என்று வாஞ்சையுடன் சீமாவைப் பார்த்தாள் குஞ்சாலி.

“ஏன், என்ன ஆச்சு?”

“போகறச்சேயும் எம்ஜியார் வரார்னு அப்படி ஒரு கூட்டம் பஸ்ஸிலே. கொழந்தை நின்னுண்டுதான் வந்தான். திரும்பி வரச்சேயும் ஏதோ கல்யாணக் கூட்டம் பஸ்ஸை அடைச்சிண்டு வந்ததிலே கொழந்தை நின்னுண்டுதான் வரவேண்டியதாப் போச்சு. அதுக்குக் கால் இத்துப் போயிருக்கும். ஆனா ஒரு வார்த்தை சொல்லலியே?” என்றாள் குஞ்சாலி.

“இன்னிக்கி எம்ஜியார் வரார்னு கார்த்தாலேர்ந்து ஊரே திமிலோகப்படறது. இப்ப நான் வரச்சே ஆபீஸ் கார்லேதான் கொண்டு வந்து விட்டுப் போனா ” என்றார். பிறகு சீமாவைப் பார்த்தபடி. “ராஜா பார்லிலே ஒரு மொக்கு மொக்கியிருப்பானே!”

“ஆமா. கடவாய்க்குக் கூடப் பத்தாம ஒரு கோலிக்குண்டு சைசிலே கேக்குன்னு கொடுத்தான். ஆத்துக்கு வரச்சே ரெண்டு மணி ஆயிடுத்து. பாவம் நன்னா பசிச்சிருக்கும். அப்புறம்தான் கொழந்தை சாப்பிட்டான்.”

“அம்மா ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்குறப்போ என்னடா பண்ணினே பொழுது போறதுக்கு?”

“ஒரு நாளைக்கு ஏழெட்டு டீ குடிக்கறவர் புஸ்தகத்தை டாக்டர் அவன்கிட்டே கொடுத்தார்” என்று குஞ்சாலி சீமாவைப் பார்த்துச் சிரித்தாள். “ஆனா கொழந்தை நான் அங்கே படுத்துண்டு இருக்கறதைப் பாத்துப் பயந்து நடுங்கிடுத்து. சின்னவன்தானே? மணியாச்சே, பசிக்கிறதாடான்னு கேட்டா, இல்லே வயறு பூரா பயம் ரொம்பிக் கிடக்குன்னது. பாவம்” என்றாள் குஞ்சாலி.

“வேறென்ன சொன்னார் டாக்டர்? வலி ஜாஸ்தியாகாம இருக்க மருந்து கொடுத்திருக்காரா?” என்று கேட்டார் சந்திரசேகரன்.

“ம். கொடுத்தார். ஆனா வலியைக் கொறைக்கிற தன்வந்த்ரி இதோ நம்மாத்துலேயே இருக்காரே” என்று சீமாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். “ஒத்தடம் கொடுத்தாப்பிலே அதோட காலையும் கையையும் வச்சு என் முதுகிலே அமுக்கி அமுக்கி அப்படி ஒரு சிஷ்ருக்ஷை பண்ணித்து கொழந்தை. எப்படி வலிச்சிருக்கும் அதுக்கு காலிலேயும் கையிலேயும்?” என்றாள் குஞ்சாலி.

நிலம்

ராதாகிருஷ்ணன்

வீடு முன்பு யாரையும் காணவில்லை, உள்ளே பேசும் குரல்கள் கேட்டன, தன்னை இன்னும் யாரும் பார்க்காதது தருமனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, மெதுவாக வீடு இருக்கும் பாதையில் நகர்ந்து வீடு பின்புறம் இருக்கும் தென்னந்தோப்பை நோக்கி சென்றான்.தூரத்திலேயே வாய்க்காலில் தண்ணி போகாமல் இருப்பதால் உருவான வெடிப்புகள் தெரிந்தன, மரங்களிலும் பசுமை குறைந்து காய தொடங்கி இருந்தது. தருமன் தன்னையே நொந்து கொண்டான், வேகமாக போய் மோட்டாரை ஆன் செய்தான், தொட்டியில் நீர் விழ ஆரம்பித்ததது, தொட்டியின் உட்சுவர்களில் இருந்த பாசனம் வெயிலில் கருகியிருந்தன, அவையெல்லாம் நீருக்குள் மூழ்க, தொட்டி நிறைந்து தண்ணீர் வெளியேறி வாய்க்காலுக்குள் விழுந்து ஓடியது, வாய்க்கால்களில் சென்று ஒவ்வொரு தென்னையின் அடியில் வெட்டிவைத்த வட்டங்களில் சுற்றி நிறைத்து நீர் சென்று கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான். விடியற்காலை முதற்கொண்டு மனதினுள் உருண்டு கொண்டிருந்த அவஸ்தை போன நிம்மதியை உணர்ந்தான். தொட்டியில் இருந்து நீர் எடுத்து முகம் கழுவினான், சட்னென மறந்து போன ஞாபகம் மீண்டும் நுழைந்து பயம் கொண்டு வீட்டை நோக்கினான், யாரையும் காண வில்லை, யாரும் இன்னும் வெளியே வராதது அவனுக்கு சற்று ஆச்சிரியம் அளித்தது, எதிர்பார்ததது இன்னும் நடக்காததை அவன் உணர்ந்து கொண்ட போது, அவனுக்குள் தானாக பதட்டம் உருவானது, சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மோட்டாரை ஆப் செய்ய சென்றான், பட்டனை அழுத்தும் போது சிலர் ஓடிவருவது போன்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான், முருகனும் சில ஆட்களும் கட்டைகளுடன் தன்னை அடிப்பதற்காக வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

மூன்று நாள் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சுருண்டு படுத்து கிடந்தான், கற்பகம் அவன் விழித்திருந்த எந்நேரமும் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள், ஆனால் அவன் மனம் அந்த ஐந்து நிமிடங்களுக்குள் உழன்று கொண்டிருந்தது. முருகன்தான் முதலில் அடித்தான், “பேசிக்கலாம், அடிக்காதிங்க” என்று சொல்ல சொல்ல நான்கு பேரும் மாறிமாறி அடித்ததை அந்த ஒவ்வொரு அடிகளையும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தான், அடித்தாளாமல் கீழே விழுந்த போது மீண்டும் அடித்ததை, முதுகில், பின்பக்கத்தில் எல்லாம் அவர்கள் குரூரமாக மிதித்ததை நினைவு கூர்ந்தான், கடைசியில் அவர்கள் போகும்போது முருகன் ” இனி உள்ள வந்த பிணமாதான் போவ ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்னொருவன் வந்து முகத்தில் மிதித்தான், முருகன் அப்போது அவனைத்தடுத்து “விடுறா, செத்தற போறான் ” என்றான், தருமனின் கை அனிச்சையாக முகத்தை தடவி பார்த்தது, வலது பக்கம் கண்களை சுற்றி இருந்த இடங்கள் வீங்கி இருந்தன, அதை கைகளில் அழுத்தி தொட்டபோது வலி தெறிப்பதை உணர்ந்தான், பிறகு கண்களை மூடி கொண்டான், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான், கற்பகம் முன்பு அழ கூடாது என்று எண்ணினான்,பின் முடியாமல் திரும்பி படுத்து கொண்டான்.

காவல் நிலையம் முன்பு யாரையும் காணவில்லை, தர்மன் இதை எதிர்பார்த்ததுதான், எதற்கும் வாசலில் நின்று எட்டி உள்ளே எட்டி பார்த்தான், ஒரு போலீஸ்காரர் மட்டும் இருக்கையில் அமர்ந்து ஏதோ தாள்களை புரட்டி கொண்டிருந்தார், இவன் வந்ததை காணாமல் அவர் தாளிலேயே மூழ்கி இருந்தார், தர்மன் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்றிருந்த பைக் நோக்கி சென்று, அதில் சாய்ந்து நின்றுகொண்டான். உடலில் இன்னும் அடியின வலிகள் இருந்தன, செல்பேசியை எடுத்து நேரம் பார்த்தான். சரியாக 10 மணிக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள், மணி பத்து ஆகி இருந்தது. தனக்குள் சலித்து கொண்டான் “எப்ப வருவானோ ” என்று புலம்பி கொண்டான். தருமன் இப்படி இங்கு வருவது ஏழாவது முறை, முதலில் கேஸ் கொடுத்தது இவன்தான், ஆனால் இப்போது சப் இன்ஸ்பெக்டர் இவனை குற்றவாளி போல நடத்துகிறார். தன் பெரியப்பாவை திட்டி கொண்டான், அவர் பேச்சை கேட்டதுதான் இவனின் இப்போதைய எல்லா நிலைக்கும் காரணம்.

திருப்பூரில் தினமும் 15 மணிநேரத்திற்கு மேல் உழைத்து 10 ஆண்டுகளாக சேர்த்தி வைத்த பணம், சொந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்வதுதான் இவன் வாழ்நாள் ஆசை, அம்மாவும் அப்பாவும் விவசாய கூலிகள், இவன் பத்தாவது படிக்கும் சமயத்தில் ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்து இருவரும் அடுத்தடுத்த நாளில் இறந்து போனார்கள், இவன் ஒருவன் மட்டுமே பையன், தருமனை பெரியப்பாதான் வீட்டில் வைத்து பார்த்து கொண்டார், +2 பிறகு படிக்க பிடிக்காமல் ஊரில் இருப்பவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு போவதை பார்த்து அவர்களோடு சேர்ந்து கொண்டான், திருப்பூரில் வேலை தந்த கம்பனியே இருக்க இடமும் கொடுத்தது, அருகில் மெஸ்ஸில் கணக்கு வைத்து சாப்பிட்டுக்கொண்டான், பிறகு வேலை சூழலில் கிடைத்த நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி கொண்டான், பிறகு ஊருக்கு வருவது குறைந்தது, விசேஷ நாட்களில் மட்டும் வந்து சென்றான். பிறகு ஒரு பைக் முழு தொகை கொடுத்து கடனில்லாமல் வாங்கினான், அதிலேயே ஊருக்கு வந்தான், ஊரில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றினான். அதெல்லாம் இப்போது தர்மனுக்கு கவலைகள், பயங்கள் அற்ற பொற்காலம் என்று தோன்றியது, அந்த நாட்களை எண்ணி ஏங்கினான். ஐந்து வருடம் முன்பு பெரியப்பா அழைத்து பொண்ணு பார்த்திருக்கேன் என்று சொன்னபோது தருமனுக்கு தரையில் கால்கள் இல்லை, அறை நண்பர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டாடினான், அன்றிலிருந்து சரியாக 50 நாட்களுக்குள் திருமணம் முடிந்து விட்டது, கற்பகத்தை முதலில் அவன் பார்த்த போது விளையாட்டு பிள்ளை போல இருக்கிறாள் என்றெண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டான், இந்த நிலப்பிரச்சனை வந்து தருமன் இப்படி ஆனபிறகு, அவன் சித்தமெல்லாம் செத்து போய் நடைப்பிணமான பிறகு அவள் சொல்வதை மட்டுமே வேத வாக்கு போல செய்தான், அவள் மட்டுமே அவனுக்கு இவ்வுலகில் இருக்கும் ஒரே துணை. அவள் இல்லையென்றால் எப்போதோ தற்கொலை செத்திருப்பான் .

திருமணம் நிகழ்ந்து நன்றாக போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வு திசை மாறியது இந்த நிலம் வாங்கிய பிறகுதான், பெரியப்பா “மோட்டார் இருக்கற நல்ல தண்ணியுள்ள இடம்டா, பூரா தென்னை நின்னு கிடக்கு, முன்னாடி ஒரு ஓட்டு வீடும் இருக்கு, வீடு நல்ல அம்சமா இருக்கு, 8 லட்சம் னு சொல்றாங்க, நான் கொஞ்சம் பணம் தரேன், உன் பணமும் இருக்கு, மிச்சம் கடன் வாங்கலாம், பத்தலனா என் நில பத்திரத்தை கூட தாரேன், வாங்கிடலாம்டா ” என்றான். “உன் விருப்பம் பெரியப்பா, நீ எப்ப சொல்றயோ அப்ப அங்க வரேன் “என்றான். கிரயம் செய்யும் நாள் அன்றுதான் காலையில் போய் நிலத்தை பார்த்தான், கற்பகம் மகிழ்ச்சியில் புரண்டாள், கல்யாண சேலை உடுத்தி இருந்தாள், காலையிலேயே lகோவிலுக்கு என்னையும் கூட்டி கொண்டு போய் வந்தாள்.

நிலத்திற்கு உள்ளே நடந்து போய் பார்த்தான், தென்னைகள் எல்லாமே குழை தள்ளி இருந்தன, பெரிய தண்ணி தொட்டி, வாய்க்காலில் போன நீரை சற்று கையில் எடுத்து கண்களில் ஒற்றி கொண்டான், அம்மாவையும் அப்பாவையும் நினைத்து கொண்டான், கண்களில் நீர் திரண்டது, ” அம்மா ” என்று சொல்லி கொண்டான். கிரயம் முடிந்து அன்று இரவு பெரியப்பா வீட்டிலேயே தங்கினான், இவன் மீது பெரியம்மாவுக்கு மிகுந்த பிரியம் உண்டு, இரவு விருந்துணவு உண்டு கட்டியில் சாய்ந்து படுத்து கொண்டான், அம்மா நினைவு மட்டுமே அவன் மனதில் இருந்தது ” அம்மா நான் நிலம் வாங்கிட்டேன் மா, அப்பா ” என்று மனதிற்குள் அரற்றி கொண்டிருந்தான். பெரியப்பாவின் ஓசை கேட்டு திரும்பி பார்த்து எழுந்து அமர்ந்தான். பெரியப்பா அருகில் அமர்ந்து கொண்டார், ” நிலத்தை பாத்துக்கணும், என்ன பண்ணலாம் ” என்றான். இவனும் அது பற்றி யோசித்திருந்தான், இன்றைய அலைச்சலில் மறந்து விட்டான். ” ஆம பெரியப்பா, நானும் மறந்துட்டேன் என்ன பண்ணலாம் ” என்றான், ” மகனே, ஆள்வச்சு பார்த்தா, நாம கண்காணிக்கணும், காய் போடற சமயத்தில் இங்க இருக்கணும், உன் பொழப்பு கெட்டு போயிடும், ஒரு இரண்டு வருஷம் குத்தகைக்கு விடுவோம், கடனை அடைப்போம், பிறகு திருப்பூர் வேலை விட்டு இங்க வந்துடு, இதுல வர காசே நமக்கு போதும் ” என்றார், தருமனுக்கு இது நல்ல யோசனையாக பட்டது. பிறகு திருப்பூர் போய் விட்டான். ஒரு வாரத்திற்குள்ளாக பெரியப்பா போனில் அழைத்து ” குத்தகைக்கு ஆள் கிடைச்சுட்டாங்க, மாடசாமி மகன் முருகன் தான் எடுக்க இருக்கான், கிளம்பி வா “என்றார் தருமன் முருகனின் முகத்தை ஞாபக படுத்தி பார்த்தான், மங்கலாகத்தான் ஞாபகம் வந்தது, இவன் 5 படிக்கும் போது அவன் அதே பள்ளியில் 10 வகுப்பு படித்தவன், பிறகு படிக்காமல் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு விவசாயத்திலேயே இறங்கியவன், அதிகமாக பேச மாட்டான், பல வருடம் முன்பு அவனை தருமன் அவனை பார்த்தது, பிறகு தருமன் ஊருக்கு வரும்போதெல்லாம் அவனை பார்த்ததே இல்லை. அன்றிரவே ஊருக்கு கிளம்பி விட்டான்.

காலையில் பெரியப்பா வீட்டிற்கு முருகன் தன் அப்பாவுடன் வந்திருந்தான், கூட இன்னொரு ஊர்காரரும் வந்திருந்தார், பெரியப்பா இரண்டு ஊர் காரரை கூட்டி வந்திருந்தார், அதில் ஒருத்தர் ஊர்நாட்டாமை. அவரை பார்த்தவுடன் தருமன் வணங்கினான் , ” நல்லா இரு தம்பி ” என்றான். பிறகு அவர்தான் பேச தொடங்கினார் ” இரண்டு வருஷ குத்தகை, முடிச்சு கொடுக்கும் போது இப்ப எப்படி இருக்கோ அது போலவே இருக்கனும் ” என்றான், முருகன் சரி சென்று ஆமோதித்து கொண்டு பெரியப்பாவிடம் குத்தகைப் பணத்தை கொடுத்தான், அவர் தருமனை வாங்க சொன்னார், தருமன் வாங்கி பெரியப்பாவிடமே கொடுத்தான்.

இந்த இரண்டு வருடங்களிலும் மாதம் ஒருமுறை வந்து நிலத்தை பார்த்து போவான், முருகன் அந்த ஓட்டு வீட்டில் வந்து தங்கி கொண்டான், இவன் வந்தால் அருகில் பார்க்க நேர்ந்தால் ஓரிரு வார்த்தை பேசுவான். அவன் மனைவி லேசாக புன்னகைப்பாள், அவ்வளவுதான். தருமன் வந்தால் தண்ணித்தொட்டி பக்கம் போய் அந்த திண்டில் மேல் அமர்ந்து கொள்வான், பிறகு ஒவ்வொரு மரமாக போய் நின்று பார்த்து கொண்டிருப்பான், அப்படி பார்த்து கொண்டிருப்பது அவனுக்கு சலிக்கவே சலிக்காது, பிறகு இருட்டாக துவங்கும் போது மனமில்லாமல் கிளம்புவான்

இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட கடன்களை அடைத்து விட்டான், சொந்த ஊருக்கே வரும் ஆயத்தங்களில் இருந்தான். குத்தகை முடிந்த நாள் அன்று பெரியப்பா ஊருக்கு வந்து பெரியப்பா வீட்டில் இருந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான், இருட்ட தொடங்கியும் அவன் வரவில்லை, தருமன் மனம் எதிர்பார்த்து சோர்ந்திருந்தது, பெரிப்பா ” விடு, காலைல நாமளே போயிடுவோம் ” என்றான். அன்று இரவு தருமனுக்கு உறக்கமே வரவில்லை, இரண்டு மணிக்கு தூக்கம் வந்து 5 மணிக்குள் எழுந்து கொண்டான், காத்திருந்து 9 மணிக்கு பெரியப்பாவையும் அழைத்து நிலத்திற்கு போய் சேர்ந்தான், முருகன் வாய்க்காலை சீர் படுத்தி கொண்டிருந்தான், பார்க்கவும் மண்வெட்டியை கீழே போட்டு அருகில் வந்தான். “சொல்லுங்க என்ன விஷயம்” என்றான், தருமனுக்கு அதை கேட்க மனம் தூக்கிவாரி போட்டது. பெரியப்பா ” என்ன தம்பி, குத்தகை காலம் முடிஞ்சது தெரியாதா ” என்றார். அவன் அவரை பார்க்காமல் தருமனை நோக்கி ” இது என் நிலம், வேணும்னா கொஞ்சம் பணம் தாரேன், எனக்கு எழுதி கொடுத்துடு, மத்தபடி நீ எழுதி தராட்டியும் இது என் நிலம்தான், எவனை வேணும்னாலும் கூட்டி வா பாத்துக்கலாம் ” என்றான். தருமனுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது ” இது நான் கஷ்டப்பட்டு வாங்கினதுங்க” என்றான், முருகன் அவனை பார்க்காமல் “வேலை கிடக்கு, கிளம்புங்க “என்றான், பிறகு போகும் போது ” இங்க வர வேலை வச்சுக்காதீங்க ” என்றான். பெரியப்பா தருமனை நோக்கி ” இவன்கிட்ட எதுக்கு பேசிட்டு, வா நாட்டாமைட்ட போவோம், இவன் தன்னால வழிக்கு வருவான் ” என்றார்.

பஞ்சாயத்தில் எல்லோரும் வந்தும் முருகன் மட்டும் நேரம் கழித்து அப்பா மாடசாமியை கூட்டி கொண்டு வந்தான், அவன் எதுவுமே பேச வில்லை, நாட்டாமை ” நாளைக்கு அவன் நிலத்துல இருக்க கூடாது ” என்றார், முருகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான், நாட்டாமை ” மாடசாமி உனக்கும் சேர்த்திதான் சொல்றேன், புரிஞ்சுதா ” என்றார், மாடசாமி ” சரிங்க ” என்றார். அன்று சற்று நிம்மதியாக தூங்கினான் தருமன். காலையில் போய் பார்த்தபோது முருகன் போகாமல் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தான், தருமன் நேராக நாட்டாமையை போய் பார்த்தான் ” தம்பி, இப்பல்லாம் எவனுமே பஞ்சாயத்தை மதிக்கறதில்லை, நீ போலீஸ் ஸ்டேசன் போ, அப்பத்தான் இதுக்கு முடிவு கிடைக்கும் “என்றார், தருமன் நடுங்கினான், போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் அவன் போனதே இல்லை, “அய்யா உங்களை எல்லாம் நம்பித்தானே கொடுத்தேன் ” என்றான். நாட்டாமை ஏதும் சொல்லாமல் வருத்தம் வெளிப்படுத்தும் முகம் கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போதே பெரியப்பாவையும் இன்னொரு ஊர் பெரியவரையும் அழைத்து கொண்டு ஸ்டேஷன் போனான், சப் இன்ஸ்பெக்டர் இருந்தார், தன் பிரச்சனைகளை சொன்னான், கேட்டு கொண்டவர் முருகனின் அலைபேசி எண் வாங்கி அழைத்து அவனை வர வைத்தார். அவன் மட்டும் வந்தான், தருமனை பார்த்து முறைத்தான்.

சப் இன்ஸ்பெக்டர் முருகனை ” நிலம் யார் பேருலடா இருக்கு ” என்கிறார், அவன் ” அவன் பேருலதாங்க இருக்கு, ஆனா எனக்கு விக்கறேன் னு சொல்லித்தான் கொடுத்தாங்க, பணம் நிறைய கொடுத்திருக்கேன், இப்ப எழுதி கொடுக்க சொன்னா காலி பண்ணுனு சொல்றாங்க ” என்றான், தருமன் அதை கேட்டு திடுக்கிட்டு தடுமாறினான், சப் இன்ஸ்பெக்டரை நோக்கி ” பொய் சொல்றாருங்க, எங்க ஊர்ல எல்லோருக்குமே தெரியும் என் நிலம் அதுனு, நான் குத்தகைக்குத்தான் கொடுத்திருக்கேன்னு, பஞ்சாயத்துல கூட இவரை வெளிய போக சொன்னாங்க, போக மாட்டேங்கிறாரு ” என்றான், சொல்ல சொல்ல அவனுக்கு அழுகை வந்தது. பிறகு பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் ஓடி கடைசியில் சப் இன்ஸ்பெக்டர் முருகனை நோக்கி ” தோப்புல நீ இனி போக கூடாது, வீட்டை ஒரு வாரத்தில் காலி பண்ணி கொடுத்தடனும் ” என்றார். பேச்சுவார்த்தை முடிந்து ஸ்டேஷன் விட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள், பிரச்னை தீர்ந்தது என்று தருமன் நினைத்தான்.

முருகன் ஒரு மாதமாகியும் காலி செய்ய வில்லை, தோப்பையும் பராமரிப்பதை விட்டிருந்தான், நிலத்திற்கு போனால் சண்டை நிகழும் என்று நினைத்து தருமனும் போகாமல் இருந்தான். ஸ்டேஷன் மட்டும் போய் ” இன்னும் காலி செய்யவில்லை ” என்பதை புகார் சொல்லி கொண்டிருந்தான், ஆரம்பத்தில் சப் இன்ஸ்பெக்டர் இவனுக்கு கொடுத்த மரியாதை நாளாக நாளாக குறைந்திருந்தது, தருமனை காரணம் இல்லாமல் திட்டவெல்லாம் ஆரம்பித்திருந்தார், பெரியப்பா ” முருகன் காசு ஏதாவது கொடுத்து சரி கட்டியிருப்பாண்டா ” என்று தருமனிடம் சொன்னபோது தருமன் நொறுங்கி போனான்.

இரவு தூக்கம் என்பதே இல்லாமல் ஆகி விட்டிருந்தது, திருப்பூர் வேலைக்கு போய் இரு மாதங்களாகி இருந்தது, கற்பகத்திடம் இதையெல்லாம் அவன் முழுதும் சொல்லவில்லை, காலி செய்ய அவகாசம் கேட்கிறார்கள் ” என்று மட்டும் சொன்னான், பெரியப்பாவிடமும் சொல்லி பெரியம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான் , ஆனால் சில நாட்களிலேயே கற்பகத்திற்கு அருகிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து விட்டது, “நான் போய் கேட்கிறேன்” என்று அழுது தருமனிடம் சண்டை செய்தாள்,தருமன் “நான் பார்த்து கொள்கிறேன், நீ உள்ள வராதே ” என்று தீர்மானமாக சொல்லி விட்டான். பிறகு தினமும் அவன் வீட்டிற்கு வரும் போது அவள் விசாரித்து புலம்புவதும் அவன் சாக்குபோக்கு சொல்லி கடந்துவதுமாக நொந்து கொண்டிருந்தான்

ஒருநாள் நிலத்தை கடந்து செல்லும்போது நீர் பாய்ச்சல் இன்றி தென்னைகள் காய்ந்து கிடப்பதை பார்த்து சென்றான், அன்றிரவு உண்ணவே அவனால் முடியவில்லை. துளி கூட தூக்கம் வரவில்லை, வெளியே திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான், விடிவதை பார்த்து கொண்டிருந்தான், ஆட்கள் நடமாடும் வரை பார்த்து கொண்டிருந்தான், பிறகு நிலம் நோக்கி நடந்தான், முன்பிருந்த வீடு கடந்து மோட்டரை இயக்கி நீர் பாய்ச்சினான், மருத்துவமனையில் கிடந்தான்.
……

சப் இன்ஸ்பெக்டர் புல்லட்டில் வந்து ஸ்டேசனின் வாசலில் இருந்த தகர கூரையின் கீழ் வண்டியை நிறுத்தினார். அனிச்சையாக திரும்புவதை போல திரும்பி தருமனை பார்த்தார். பிறகு படியேறி உள்ளே தன் இருக்கை நோக்கி சென்றார். சொல்லிவைத்தாற் போல சற்று நேரத்திலேயே ஒரு வாடகை டாட்டா இண்டிகா கார் வந்து ஸ்டேஷன் வாசலில் நின்றது, முருகன் இறங்கினான், அவனோடு 7-8 பேர் இறங்கினர், எல்லோரும் கட்டுமஸ்தாக கட்சி கரைவேஸ்டி கட்டி கடாமாடுகள் போல இருந்தார்கள், எல்லோரும் திரும்பி தருமனை விறைப்பாக பார்த்து பின் திரும்பி கொண்டார்கள், பிறகு உள்ளே சென்றார்கள். சற்று நேரம் கழித்து தருமன் உள்ளே போனான், எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து இருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரிடம் வேடிக்கை சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரும் சிரித்து கொண்டிருந்தார், நான் உள்ளே சென்றதும் அந்த சிரிப்புகள் நின்றன. தருமன் அமர அங்கு இருக்கை ஏதும் இருக்க வில்லை. சப் இன்ஸ்பெக்டர் முன்பு வந்து நின்றான். அவர் நிதானமாக ” தம்பி, நீ நிலத்தை இவருக்கு எழுதி கொடுத்துட்டு, பணம் வாங்கிக்க, நான் கொடுக்க சொல்லி இருக்கேன், இப்படித்தான் இந்த பிரச்னை தீரும், இல்லாம கோர்ட்டுக்கேசு னு போனா கூட ஒன்னும் தீராது ” என்றார். தருமன் மனதிற்குள் என்ன ஆனாலும் அழ கூடாது, கெஞ்ச கூடாது என்று எண்ணி கொண்டான், பிறகு ” அது என் நிலம்ங்க, அத நான் யாருக்கும் தர முடியாது ” என்றான் தெளிவாக. இருக்கையில் இருந்த சிலர் தருமனை அடிக்க பாய்வதை போல எழுந்தார்கள், சப் இன்ஸ்பெக்டர் அவர்களை ” உட்காருங்க ” என்று சொல்லி அமர வைத்தார். தருமன் நிதானமும் தெளிவும் கொண்டு மேலும் பேசினான் ” என் நிலத்துக்கு போனா என்னை அடிக்கறாங்க, நீங்க ஒரு தீர்வு சொல்லலைனா நான் கலெக்டர் ஆபிஸ் போவேன், எனக்கு என் வேணும், அத யாருக்கும் விற்க மாட்டேன் ” என்றான். சொல்லி முடிப்பதற்குள்ளாக சப் இன்ஸ்பெக்டர் தருமனை அறைந்தார். தருமன் தன் சொல்லில் பின் வாங்க மாட்டேன் என்பது போல அடியை பொருட்படுத்தாமல் சப் இன்ஸ்பெக்டரை பார்த்தான். சப் இன்ஸ்பெக்டர் ” இது ஆவறதில்ல, நீ கிளம்பு ” என்றார், தருமன் ஏதும் சொல்லாமல் வெளியேறினான்.

வீடு வந்தான், கற்பகம் அவனை கண்டு என்ன நடந்திருக்கும் என்று யூகித்து ” நான் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்ங்க “என்றாள், ” நாம திருப்பூர் போகலாம், நிலம் நம்ம பேர்லதான இருக்கு , யாரும் ஒன்னும் பண்ணிட முடியாது, போயிடுவோம், பிறகு பொறுத்து பார்த்து வந்து இங்க வருவோம் ” என்றாள், தருமனுக்கும் அது சரியாக பட்டது, இந்த பிரச்சனைகளால் மனம் நொந்து படுத்த படுக்கையான பெரியப்பாவை அவர் அறையில் போய் பார்த்தான், ” நான் திருப்பூர் போறேன், நிலம் எங்கயும் போகாது, பிறகு பார்த்துக்கலாம் ” என்றான், பெரிப்பா அருகில் வர சொல்லி அவன் தலை மீது கைவைத்து கண்ணீருடன் ” என்னை மன்னிச்சுருடா ” என்றான், ” விடுப்பா, நீ என்ன பண்ணுவ, என் தலைவிதி இப்படி இருக்கணும்னு ” என்றான், l, பிறகு அழுகை வரவும் எழுந்து வெளியே வந்து விட்டான்.

கிளம்பும் போது வாசலில் வந்து பெரியம்மா வழியனுப்பினாள் ” புள்ளைய பார்த்து கூட்டிப்போ, உண்டான பிறகு ரொம்ப கவனமா இருக்கனும் “என்றாள், அவன் கற்பகத்தை திரும்பி பார்த்தான், அவள் நாணி தலை கவிழ்ந்தாள், “ஏன் சொல்லல” என்றான், ” போம்போது சொல்லலாம்னு நினைச்சேன் ” என்றாள்.

இரண்டு மாதங்கள் போயிருக்கும், பெரியம்மா தருமனுக்கு அழைத்து அவசர குரலில் படபடப்புடன் ” முருகன் செத்துட்டாண்டா, யாரோ அவனை குத்திட்டாங்களாமா ” என்றாள். அன்று தருமன்  எப்போதும் அருந்துவதை விட இருமடங்கு குடித்தான். எப்போது வீட்டிற்கு வந்தான், தூங்கினான் என்பதே ஞாபகம் இல்லை, விடியற்காலை எழுந்த போதுதான் ஓரளவு போதை தெளிந்து அமர்ந்தான், மனம் நிம்மதி கொண்டிருப்பதை, சாந்தமாக இருப்பதை புன்னகை கொண்டிருப்பதை உணர்ந்தான், சட்டெனெ ஒரு எண்ணம் அவனுக்கு வந்தது, ஊருக்கு சென்று அவன் உடலை பார்க்க வேண்டும் என்று, கற்பகத்திடம் கூட சொல்லாமல் பைக்கிலேயே ஊருக்கு சென்றான். பெரியம்மா அவனை ஆச்சிர்யத்துடன் பார்த்தாள், அவன் பெரியம்மாவிடன் எதுவும் பேசாமல் நேராக துக்க வீடு சென்றான். போஸ்ட் மார்ட்டம் என்பதால் வீட்டிற்கு கொண்டுவராமல் நேராக எரிக்க கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னதை கேட்டு அங்கு சென்றான், எல்லாம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் . ஒவ்வொருவராக இவனை கடந்து சென்று கொண்டிருந்தனர், யாரும் இவனுடன் பேச வில்லை. முருகனின் அப்பா வந்து கொண்டிருந்தார், இவனை சற்று தொலைவிலேயே பார்த்து விட்டார். நேராக அவனை நோக்கி தளர்ந்த நடையுடன் வந்தார், ” தம்பி உன் நிலத்தை நீயே எடுத்துக்க, ” என்றார், தருமன் ஒன்றும் சொல்லாமல்நின்று கொண்டிருந்தான், மாடசாமி மீண்டும் ” நான் முன்னாடியே அவன்கிட்ட சொன்னேன், அவ என் பேச்சை கேட்கல, அது உன் நிலம், அத எடுத்துக்க ” என்றார்.