சிறுகதை

ஆழமான பரவல் – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

சாதத்தை தட்டில் கொட்டிக் கொண்டான் கதிர். சாம்பாரில் கிடந்த முருங்கைக்காயை கடமைக்கு உறிஞ்சி விட்டு சோற்றை அள்ளி திணித்தான். ஞாபகம் வந்தவன் போல அவ்வப்போது கேரட் பொறியலையும், வெண்டைக்காய் வதக்கலையும் தொட்டுக் கொண்டான். வாழைக்காய் வறுவலை சட்டை செய்யாமல் இடது கையால் குழம்பை சோற்றில் ஊற்றிக் கொண்டே குப்புறக்கிடந்த கத்திரிக்காயோடு சோற்றை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான்.

கதிர் அப்போது சிறுவனாக இருந்தான். கிட்டத்தட்ட குண்டானில் இருந்த முழுச்சாப்பாட்டையும் முடித்தபோதும் வயிறு வலித்தது அவனுக்கு.. ஆனால் பரவலாக வலிக்கவில்லை. வயிற்றின் ஆழத்தில் வலி. அதுதான் தொடக்கம். அதை அப்படியே விட்டுவிட்டால் பரவலாகி விடும். நழுவும் டவுசரால் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டாலும் வலி நிற்காது. வலி வரும்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று புரிய முடிந்தாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் போதவில்லை. தங்கை எதற்கோ அடம் பிடித்து அழ, அவள் தட்டிலிருந்த சோற்றை சாப்பிடும் எண்ணத்தோடு அருகே சென்று.. பிறகு அம்மாவின் எரிச்சல் பார்வைக்கு பயந்து விலகி ஓடினான். எங்கு ஓடினாலும் வயிறும் கூடவே வந்து விடுகிறது. பள்ளியில் இருக்கும் போது.. விளையாடும்போது.. ஏன் துாங்கும்போதுகூட வயிறு அவனை விலக்குவதில்லை.

அதை தவிர்த்து வெளியுலகில் அவனுக்கு குறைவில்லை. வயிற்று தொல்லை அவனை படுத்தி எடுத்தாலும் வேலைவெட்டியில் அவனை யாருமே குறை சொன்னதில்லை. அரசாங்க அலுவலகத்தில் தினக்கூலி பணியாளன். டீ..காபி வாங்கி வருவது.. கப் அண்ட் சாசர்களை கழுவுவது.. பியூன் வாஞ்சி கட்டளையிடும் வேலைகளை சிரமேற்கொண்டு செய்வது என எதிலும் குறையில்லை.

கதிரின்  விறுவிறுப்பான நடையில் கழுத்தில் மாட்டித் தொங்க விடப்பட்ட செல்போன் குலுங்கி ஆடியது. அதிகம்போனால் அதில் பத்து பேருடைய எண்கள் சேமிப்பிலிருக்கும். வாஞ்சியிடமிருந்துதான் அடிக்கடி அழைப்பு வரும். டீக்கடையிலிருக்கும் போது.. சாப்பாடு வாங்க செல்லும்போது.. பேப்பர் வாங்கி வரும்போதெல்லாம்.. “கதிரு.. சீக்ரம்..“ “கதிரு சீக்ரம்..“ என்று அவசரப்படுத்துவான். ஞாயிற்றுக்கிழமைகளில் செல்போனுக்கு அதிகம் வேலையிருக்காது. எப்போதாவது குணா அழைப்பான். குணா ஆபிசர் வீட்டில் சமையல் வேலை செய்பவன். இன்று பகல் கடுக்கத் தொடங்கிய நேரத்தில் குணா அழைத்தான்.

”கதிரு.. எங்கருக்க..” குணா அழைத்தபோது திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கதிர். பொதுவாக விடுமுறை நாட்களில் அருகிலிருக்கும் பஞ்சவர்ணசாமி கோயிலிலேயே விழுந்துக் கிடப்பான். கூட்டத்துக்கும் உபயத்துக்கும் குறைவில்லாத கோவில். தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால் அம்மா அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட, அப்பாவுக்கு துணையாக இருக்க வேண்டிய நிர்பந்தம் கதிருக்கு.

”வீட்லதான் சார்..” குணாவை சார் என்றுதான் அழைப்பான். குணாவுக்கு முப்பத்துநாலோ.. ஐந்தோ வயதிருக்கும். எப்படியிருந்தாலும் கதிரை விட இரண்டொரு வயது இளையவனாகதான் இருப்பான்.

”ஒடனே கௌம்பி வர்றியா..”

உற்சாகமாக தலையசைத்தான். இதேபோல் இரண்டு முறை அழைத்திருக்கிறான். ஆபிசர் வீட்டுக்கு வருபவர்கள் வாங்கி வரும் பழங்கள்.. இனிப்புகள் எல்லாமே விலையுயர்ந்தவை. குணாவுக்கும் பெரிய மனசுதான்.

”கௌம்பி வர்றியா கதிரு..”

”வர்றன் சார்.. வர்றன் சார்..” என்றான் வார்த்தையாக.

அலுவலகத்தில் வைத்துதான் குணா பழக்கம். தலைமை அலுவலகம் என்பதால் கூட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. கேம்ப் இல்லாத நாட்களில் ஆபிசரை பார்க்க யாராவது வந்துக் கொண்டேயிருப்பார்கள்.  சில நேரங்களில் மதிய உணவுக்கு கூட வீட்டுக்கு செல்ல முடியாத நேர நெருக்கடி வந்து விடும் அவருக்கு. அப்போதெல்லாம் வாஞ்சி குணாவுக்கு போன் செய்து “சாருக்கு சாப்பாடு கொண்டாந்துடு..” என்பான். ஆபிஸ் கார் லஞ்ச் எடுப்பதற்காக வீட்டுக்கு போகும். ஆபிசர் குடியிருப்பும் அலுவலகமும் அருகருகில்தான் இருந்தன. சொல்லப்போனால் கதிரின் வீடும் அந்த பகுதியில்தான் இருந்தது. காரில் தோரணையாக அமர்ந்து வரும் குணாவை கதிருக்கு பிடிக்கும்.

ஆபிசரின் டிபன்கேரியருக்கு ஆபிசருக்குண்டான மரியாதை உண்டு. குணாவிடமிருந்து பவ்யமாக வாங்கிக் கொள்வான் கதிர். முதல் தளத்திலிருக்கும் சாப்பாட்டு அறையில் கொண்டு போய் சேர்ப்பிக்கும் வரை அதே பவ்யம் இருக்கும். பெரிய சைஸ் ஐந்து அடுக்கு கேரியர். கேரியரை பார்த்த முதல் தருணத்தில் ஆச்சர்யமாக இருந்தது கதிருக்கு.

“கேரியருதான் பெருசு கதிரு.. அய்யா கொஞ்சந்தான் சாப்புடுவாரு..”

குணா சொல்வது உண்மைதான். டிபன்கேரியரில் பாதி சாப்பாடு மிச்சப்பட்டிருக்கும். அது கதிருக்கானது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருப்பான் குணா. சின்ன சின்ன கப் அன்ட் சாஸர்களை கழுவியே பழகிப் போயிருந்த கதிருக்கு அத்தனை பெரிய டிபன்கேரியரை கழுவுவது பெருமையாக இருந்தது. வட்ட வட்டமான அடுக்குகள்.. ஒன்றோடொன்று பொருந்துவதற்கேற்ப மடித்து விடப்பட்ட விளிம்பு.. கீழடுக்கில் உட்கார தோதாக பள்ளமாக்கப்பட்ட மேலடுக்கு.. கேரியரை தாங்கிக் கொள்ளும் நீளக்கம்பி.. பார்வைக்கே கவர்ந்திழுக்கும் பளபளப்பான சில்வர் வேறு. அதனை சுத்தம் செய்வதற்காகவே பிறப்பெடுத்தது போல எண்ணிக் கொள்வான்.

”சார் ஏன் இவ்ளோ கொஞ்சமா சாப்புடுறாரு..” என்பான் டிபன் கேரியரை பூட்டியக் கொண்டே.

”அவருக்குதான் சக்கர.. ரெத்தக்கொதிப்பெல்லாம் இருக்கில்ல.. அப்றம் சோத்தை தின்னு..? இப்பதான் என் வைத்தியத்தில கொஞ்சம் கன்ட்ரோல் ஆயிருக்கு.. திருப்பி. சோத்தை தின்னா ஏறிக்காதா..?” என்பான்.

”நீங்க டாக்டரா..?”

”ஆமா..”

ஒரு மருத்துவர் சமையல்வேலை பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது கதிருக்கு. உடம்பு சரியில்லாத நேரத்தில் தனக்கும் வைத்தியம் பார்க்க சொன்னான். குணாவின் வைத்தியம் புதுமையாக இருந்தது. கதிரின் கைகளை இறுக்கி மூடச் சொன்னான். பிறகு மூடிய விரல்களில் கலர் ஸ்கெட்ச்சில் மாறி மாறி புள்ளிகள் வைத்தான். கலர்தெரபியாம். உடம்பு சரியாகி விடும் என்றான். சென்றமுறை சளிப்பிடித்துக் கொண்டபோது கட்டை விரலில் ஆறேழு மிளகை வரிசையாக வைத்து டேப் போட்டு ஒட்டி விட்டான். சளியெல்லாம் சரியாப் போவும்.. என்றான். ஆனால் அதையும் மீறி காய்ச்சல் வந்து விட, உச்சந்தலை உட்பட அங்கங்கே ஊசியை சொருகினான். வலிக்கவுமில்லை.. ஆமாம் வலிக்கவுமில்லை. ஆபிசருக்கும் இதுபோலதான் செய்வதால்தான் சுகரும் பிரஷரும் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னான், கதிருக்கு புரியவில்லை. அதேநேரம் கேள்வியாக எதுவும் கேட்க தோன்றவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தை வீடுகள் கொண்டாடிக் கொண்டிருந்ததால் தெருவில் நடமாட்டம் அதிகமில்லை. கதிருக்கு உள்ளபடியே நீளமான கால்கள். அதில் விறுவிறுப்பும் ஏறிக் கொள்ள பதினைந்து நிமிட நடையில் ஆபிசர் வீட்டை எட்டி விட்டான். காம்பவுண்டுக்குள் நுழையப்போகும் தருணத்தில் ஆபிசரின் கார் கதிரைக் கடந்து எதிர் திசையில் சென்றது.

”சார் இப்பதான் கௌம்புனாரு..“ கதிரைக் கண்டதும் குணா உற்சாகமானான்.

”தெரியும் சார்.. பாத்தேன்..”

”சாப்டீயா..”

வயிறு பரவலாக வலித்துக் கொண்டிருந்தது.

”சோறாக்கிட்டேன்.. சாப்டறதுக்குள்ள ஏதோ அவுசர வேலன்னு சார் கௌம்பீட்டாரு..”

”லீவு நாளுன்னா கூட வேலை இருக்குமா..“

”ஆபிசருக்குல்லாம் எல்லா நாளும் வேலயும் உண்டு.. அதுக்கேத்த காசும் உண்டுல்ல..” கண்ணடித்து கலகலவென்று சிரித்தான் குணா.

கதிருக்கு அதெல்லாம் புரிவதில்லை. வாஞ்சி எப்போதாவது கொடுக்கும் காசை அம்மாவிடம் கொடுத்து விடுவான். கூட்டம் நடக்கும் நாட்களில் வாஞ்சியின் தயவால் தீனி… காபி.. டீ கிடைத்து விடும். ஒருமுறை ஆபிசர் இவனை பார்த்து விளையாட்டாக சொன்னது ”புள்ளையாண்டன்..” என்று காதில் விழுந்தது கதிருக்கு.

வாஞ்சி விழுந்து விழுந்து சிரித்து விட்டு “சார் ஒன்னை புள்ளையாருங்கிறாரு.. ஒன் வயித்த பாரு..”என்றான்.

உப்பலாக தனித்து நீண்டிருந்த வயிற்றை தொட்டுக் கொண்டு இவனும் சிரித்தான். ”இந்த வயிறு மட்டும் இல்லேன்னா சூப்பரா இருக்கும் சார்.. வயத்திலதான் சார் எல்லா பிரச்சனயும்.. ஆனா வயிறுதான் சார் பெருமை.. அதான ஒடம்புல முக்கியம்..”

”போடா லுாசு..” என்று கிண்டலத்தான் வாஞ்சி.

”சரி.. கதிரு கொஞ்சம் வெளி வேல கெடக்கு..  நா கௌம்புட்டுமா..  ஆக்கி வச்சதெல்லாம் அப்டியே கெடக்கு.. சாப்டு செத்த நேரம் படுத்தீன்னா பறந்து வந்துடுறன்..” என்றான் குணா.

”நீங்க சாப்டீங்களா சார்..”

”நா வெளிய பாத்துக்கிறேன்.. பாத்து.. பத்ரம். கதவ தாப்பா போட்டுக்க.. நா வரவுட்டு கௌம்பிக்கலாம்.. வருட்டுமா..”

ஆபிசரின் குடும்பம் வெளியூரில் இருக்கிறது. சமையலுக்கு தோதாக குணா கூடவே தங்கிக் கொண்டான். சமையலறையும், முன்கூடமும் புழங்கிக் கொள்ள அவனுக்கு அனுமதியுண்டு. மீதி அறையின் சாவிகள் ஆபிசரிடம் இருக்கும்.

உண்டு முடித்து பிறகு தரையை சுத்தப்படுத்தினான் கதிர். முன்கதவை மூடி தாழிட்டான். வெளியில் வாட்ச்மேன் உண்டு. ஆபிசர் உபயோகிக்கிறாரோ இல்லையோ கொல்லைப்பகுதியில் செடிக் கொடிகளோடு  ஊஞ்சல்.. சறுக்கு.. சிமிண்ட் பெஞ்ச் என ஏக கோலாகலம். பூவரச மர நிழலிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் கைகளை கோர்த்து தலைக்கு அடியில் முட்டு கொடுத்து மல்லாந்து படுத்துக் கொண்டான். எறும்புக் கூட்டம் ஒன்று தொந்தரவான கோபத்தோடு அங்குமிங்கும் அலைந்து இவனையும் கடித்து வைக்க.. அதை கையால் தள்ளி நகர்த்தினான். மல்லாந்திருந்த உடலில் வயிறு மேடாக ஏறி இறங்கியது. தொங்கிக் கொண்டிருந்த செல்போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்ட நேரத்தில் அலைபேசி அடித்தது.

”சம்பளத்தில கழிச்சுக்க சொல்லி ஆபிசர்ட்ட பணம் கேட்டுப் பாரேன் கதிரு..” என்றாள் அம்மா.

”அவரு ஊர்ல இல்லம்மா..”

”பெரிய காச்சலாருக்கும்னு சொல்றாங்கப்பா..”

”அதுக்கு நா என்ன செய்யிட்டும்..”

அலைபேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். கண்களை மூடி வலது கையை நெற்றியின் மீது படுக்கையாக்கிக் கொண்டான்.

தங்கச்சி பாவம்தான்.. ஆனா அதுக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. வயித்துவலியதான் காச்ச.. காச்சன்னு சொல்லுது.. நெறைய சோறாக்க சொல்லி சாப்பட வச்சா சரியாப் போயிடும்.. சின்ன வயதில் பாப்பாவும் இவனுமாக சோறு சமைத்து விளையாடியதை நினைத்துக் கொண்டான். இருவரும் சின்னதான மூன்று கற்களைக் கூட்டி அதில் நுழையுமளவுக்கான சின்ன சின்ன சுள்ளிகளை  விறகுகளாக்கிக் கொள்வார்கள். கொட்டாங்குச்சியில் இருக்கும் மண்தான் சோறு. பாதி விளையாட்டில் சோற்றை அள்ளி திங்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விடும். அம்மாவிடம் ஓடுவான். பல சமயங்களில் அம்மா வருத்தப்படும். சில சமயங்களில் “அதான் காலைல சாப்டுட்டீல்ல.. அப்றம் என்ன..?“ என்று கத்தும். ”ஆட்டுப்புளுக்க சம்பளத்தில ஒக்காந்து சாப்ட அம்பது பேராம்..” ஊரிலிருக்கும் மாமியார் குடும்பத்தை இழுத்து திட்டும்.

வயிற்றின் ஆழத்திலிருந்து வலி கிளம்புவது போலிருந்தது. இன்னும்  கொஞ்சநேரத்தில் அது வயிறு முழுக்க பரவும். குழம்பும் பதார்த்தங்களும் இருந்தளவுக்கு சோறு அதிகமாக இல்லை. பதார்த்தங்களை அவன் அதிகம் விரும்புவதுமில்லை. மளமளவென்று அங்கிருந்த குழாயில் கைகளை ஏந்தி தண்ணீரை குடித்தான். இருந்தும் வயிற்றில் இடம் பாக்கியிருந்தது. அப்படிதான் தோன்றியது. “ஆனை வந்தாலும் அடங்காதுடா..“ என்பாள் அம்மா. ஆனாலும் சாப்பிடும்போது மற்றவர்களை போல “போதும் எழுந்திரி..“ என்று சொன்னதில்லை.

அம்மாவை தவிர யார் அவனை உட்கார வைத்து சோறிட்டிருக்கிறார்கள்..?  சித்தப்பா வீட்டுக்கு போன ஒரு சமயத்தில் சித்தி “போதும் எழுந்திரி..“ என்று சொல்லியிருக்கிறாள். “வவுறா.. வண்ணாஞ்சாலா..?“ என்று அத்தை திட்டியிருக்கிறாள். கல்யாண வீட்டில் இரண்டொரு முறை அப்பாவுடன் சென்றபோது யாரும் எழுந்திரிக்கச் சொல்லவில்லை. அதேபோல அந்த கோவிலில் அவனை உட்கார வைத்து சோறிட்டதை கதிரால் மறக்கவே முடியாது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா வேறு “இருமுடி காசுல சோத்துக்கும் சேத்துதான் வாங்கிக்குவாங்க.. நல்லா தின்னு.. தின்னு..“ என்று உசுப்பேற்றினார். அப்போது வேலையிலிருந்தார். அரசாங்க வேலைதான். ஆனால் கீழ்நிலை பதவி. அவரை பொறுத்தவரை கீழ்நிலை பதவியில் பியூன் பதவிகள் ஆசிர்வதிக்கப்பட்டவை. அதிகாரியிடம் ஏச்சு..பேச்சுகள் கிடைத்தாலும் அதற்கேற்ப வருமானமும் இருக்கும். வெளியே ஜபர்தஸ்தும் காட்டிக் கொள்ளலாம்.. அதுவும் காசாக்கிக் கொள்ளக் கூடிய ஜபர்தஸ்து. ஆனால் இவர் வகிக்கும் பதவி எதற்கும் லாயக்கில்லை. சம்பளத்துக்கும் சேர்த்துதான். பியூன்களிடம் அன்பாகவும் பணிவாகவும் இருக்க பழகிக் கொண்டார். டீ காசாவாது மிஞ்சும்.. அந்த சகவாசத்தில்தான் இந்த கோயில் பழக்கமானது. இந்த கோயிலில் சிலையை விட  மனித உருவில் நடமாடும் சாமிக்குதான் பக்தர்கள் அதிகம். எப்போதும் கூட்டம் அலைமோதிக் கிடக்கும்.

எப்போது துாங்கினான் என தெரியவில்லை. தலைக்கு மேல் காகம் இடைவிடாமல் கத்த, விழிப்புத் தட்டியது. வாயில் வழிந்த எச்சிலை இடது கையால் துடைத்துக் கொண்டான். துாக்கம் முழுமையாக விடுபடவில்லை. அனிச்சையாக காகத்தை துரத்தும் சைகையில் கையை உயர்த்தினான். எழுந்து உட்கார்ந்துக் கொண்டான். சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து நேரத்தை பார்த்தான். மணி மூன்றாகியிருந்தது. குணாவின் அழைப்பு தவறியிருந்தது. அப்படியே அழுத்தி மறு அழைப்பு செய்து துண்டித்தான். குணாதான் “நீ மிஸ்ட் கால் குடுத்தா போதும்..” என்று சொல்லியிருந்தான்.

”துாங்கீட்டீயா கதிரு..”

”ஆமா சார்..”

”கௌம்பிடாத.. வந்துடுறேன்..” என்றான். மெல்லியப் பேச்சுக்குரல் கேட்டது. பெண் குரலாக இருக்கலாம்.

”சரிங்க சார்..”

ஒருமுறை ஆபிசர் வெளியே போயிருந்த நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு குணா எங்கோ கிளம்பி போக, அந்த நேரம் ஆபிசர் வீட்டுக்கு திரும்பி விட வேலை பறிபோகுமளவுக்கு, பிரச்சனையாகிப் போனது. குணாவுக்கு சமையல் வேலை கைக்கொடுத்ததோ இல்லையோ கலர்தெரபி கைகொடுக்க வேலை நீடித்துப் போனது.

”சார்.. நான் அஞ்சாப்பு படிக்கறப்ப செந்தில் தெனைக்கும் மதியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவான்.. ஒருநா என்னையும் கூட்டீட்டு போனான்.. பருப்பு போட்டு நெய் ஊத்தி அவுங்கம்மா சோறு போட்டாங்க.. நீங்க சமைக்கற மாதிரியே இருந்துச்சு அவங்க சமையலும்..” கதிரின் இம்மாதிரியான பேச்சுகள் அபத்தமாக தோன்றினாலும் அவனின் ஆபத்தில்லாத பேச்சுத்துணை குணாவுக்கு பிடித்திருந்தது.

”அப்டீன்னா என் சமயல் நல்லால்லேங்கிறியா..?”

”இல்ல சார்.. இல்ல சார்.. சூப்பரா சமக்கிறீங்க..”

பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து இரண்டு மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை அப்படியே கதிரிடம் நீட்டினான்.

”எத்னாவது படிச்சிருக்க..”

”ஆறாவதோட நின்னாச்சு.. வீட்ல சண்டப் போட்டுட்டு எங்கப்பா காசு குடுக்க மாட்டேன்னு போயிட்டாரு.. அம்மா பிரைவேட் ஸ்கூல்ல ஆயா வேலைக்கு போச்சு.. அப்போல்லாம் இங்க பாருங்க.. இங்க பாருங்க சார்.. இப்டிதான் குனிஞ்சுக்கிட்டே நடப்பேன்..”

”ஏன்..?”

”வயித்துவலிதான்..”

வயிற்றுவலி பிரச்சனையோடு ஒண்ணுக்கு போக வேண்டும் என்ற உணர்வு வேறு. ஆனால் அது கொஞ்சம் வேறுமாதிரியான அவதி. அப்போது அவனுக்கு இருபத்தைந்திருக்கும். கனவு முழுக்க பெண்கள். அதுவும் துணியில்லாத உடல்களோடு. கனவில் கூட பயந்து வியர்த்து போய் கண்களை மூடிக் கொள்ளத் தோன்றும்.. ஆனாலும் திருட்டுத்தனமாக பார்ப்பான். உடனே “ஒண்ணுக்கு“ வருவது போலிருக்க, விழிப்பு வந்து விடும். சில சமயங்களில் பகலில் கூட அப்படியொரு உணர்வு வரும். ஆனால் அது வயிற்று வலியை விட தேவலாம். தீவிரமாக சாமி கும்பிட்டதி்ல்தான் படிபடியாக குறைந்து வருவதாக நம்பினான். இந்த சேதியை வெளியே சொல்லக் கூடாது என்ற சத்தியத்தோடு குணாவிடம் ஒருநாள் பகிர்ந்துக் கொண்டான்.

அந்த கோயிலில் செக்யூரிட்டியாக இருந்தபோது நிஜமாகவே ஒண்ணுக்கு வந்தாலும் அடக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.. கூட்டம்.. கூட்டம்.. எங்கும் பக்தர்கள் கூட்டம்.. ஒதுங்குவதற்கு சற்று துாரம் நடக்க வேண்டும். பணி நேரத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை. தங்குவதற்காக கோவில் நிர்வாகம் ஒதுக்கியிருந்த இடத்திலும் அதே நிலைதான். அது முன்னாள் மாட்டுக் கொட்டகை.. நான்கு புறமும் தகரத்தால் தடுத்திருந்தனர். செங்கல் பதித்தத் தரை. பாய்.. தலையணை.. இரண்டு செட் துணிமணிகள்.. ஒரு கடப்பா கல் பதித்த அலமாரி. இவனைப் போல ஏழெட்டு பேர் அங்கிருந்தனர்.. சம்பளம் என்று ஏதுமில்லை. இவனுக்கு செலவுமில்லை. வருடத்திற்கு இரண்டு செட் துணிமணி கிடைத்து விடும். எப்போதும் அவனுக்கு வயிறுதான் பிரச்சனை. நான்கு மணிக்கே குளித்து தயாராகி விடுவான். அதுவரை முணுக்முணுக்கென்றிருந்த வயிறு காலை ஏழு மணிக்கெல்லாம் பெரியதாக ஓலமிடத் தொடங்கும். அந்நேரத்திலேயே பக்தர்கள் கூட்டம் நெருக்கியடிக்கத் தொடங்கியிருக்கும். அதட்டலாக பேசி வரிசையை சரிப்படுத்த அவனால் முடியாது. இருந்தாலும் கெஞ்சலாக சொல்வான்.. நெரிசலில் நழவ விடும் பொருள்களை எடுத்துத் தருவான். சில சமயம் அழும் குழந்தைக்கு பலுான் வாங்க தாய்மார்கள் இவனை பணிப்பதும் உண்டு. என்னயிருந்தாலும் வயிற்று தொந்தரவுக்கு முன் “ஒண்ணுக்கு“ போகும் தவிப்பு ஒன்றும் பெரிதில்லைதான். எட்டு மணிக்கு சூடாக டிபன் கிடைக்கும்.. இட்லி.. பொங்கல்.. சப்பாத்தி.. சில சமயங்களில் பூரி.. தின்ன தின்ன திகட்டுவதில்லை. அப்போது அப்பாவின் ஞாபகம் வந்துப் போகும். அவரால்தான் இந்த  வாய்ப்பு.

”தம்பி மாதிரி பக்தியான பசங்க கோயிலுக்கு தொண்டு செய்ய வந்தா நல்லாருக்கும்..” என்றனர் இருமுடி கட்டி வந்த தருணத்தில். அணுகுவது முன்பின் தெரியாத கோயில் நிர்வாகத்தினர் என்றாலும் இம்மாதிரியான நல்ல சகுனங்கள் காட்டுவது குடும்பத்துக்கு நல்லது என்பதால் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

”சாப்பாடு.. தங்கறதெல்லாம் ஃப்ரிதான்.. சம்பளம் மட்டும் கொஞ்ச நாளுக்கு குடுக்க முடியாத நெலம..” என்றனர்.

”அய்யோ.. சாமி தொண்டுக்கு சம்பளம் எதுக்குங்க.. நாங்க குடுத்து வச்சிருக்கணும்..”

“நான் இங்கயே இருக்கம்ப்பா..” என்றான் கதிர் யாரும் கேட்காமலே.

”இல்லல்ல.. இருமுடி செலுத்துனா வீட்டுக்கு போயி மாலைய எறக்கி வக்கணும்.. அதான் முறை.. எறக்கி வச்சிட்டு அடுத்த பஸ்ச புடிச்சு ஒடியாந்துடு..” நுாறு ரூபாய் தாளை மடித்து கையில் வைக்க, அப்பாவும் இவனும் நெகிழ்ந்துப் போனார்கள். இவனுக்கு மதியம் உண்ட பாயாசம்.. வடை.. சாம்பார்.. கூட்டு.. எல்லாவற்றையும் மீண்டும் சாப்பிட வேண்டும் போலிருந்தது.

”இப்பதானே சாப்டே..” என்றார் அப்பா. ஆனாலும் பொரி வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய்க்கே கை நிறைந்த பாக்கெட். அங்கிருந்த இரண்டு வருடங்களும் வயிறு அதிக வேதனை கொடுத்ததில்லை. மதிய வேளையில் ஒரு மணிக்கு சாப்பாடு.. இருமுடி சாப்பாடு போல தடபுடலாக இல்லாவிட்டாலும், ஒரு பொறியலும், அப்பளமும் கட்டாயம் இருக்கும். சாப்பாட்டில் அளவு கிடையாது. இருந்தாலும் திரும்ப திரும்ப இவன் கேட்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை. மதியத்துக்கும் இரவுக்குமான நீண்ட இடைவெளியை கடப்பது பெரிய சவாலாகவே இருந்தது. எட்டு மணிக்கு ஆவலாக இட்லியில் கை வைக்கும்போது “முன்னபின்ன தின்னதே இல்லியாடா நீ..” கிண்டலாக எரிச்சலை காட்டுவார்கள்.

அப்பாவுக்கு திடீரென கையும் காலும் இயக்கமற்று போக, இவனை அம்மா அழைத்துக் கொண்டாள். “அவருக்கு கை வர்லீன்னா நா என்னா பண்ணுட்டும்.. நா வர்ல போ..” என்றான் அம்மாவிடம் கோபமாக. ஆனால் அம்மா விடவில்லை. திரும்பி வந்தபோது தங்கச்சி பாப்பா அநியாயத்துக்கு மெலிந்திருந்தாள். எல்லோரும்தான். “ஒனக்கென்ன.. வயித்துக்கு சோறுக் கெடச்சா சொர்க்கம்தான்.. எங்க பாடு ஒனக்கெங்க புரியப்போவுது..” என்றாள் அம்மா எரிச்சலுடன். அப்பாவுக்கு சம்பாத்தியம் இல்லை. ஆஸ்பத்திரி செலவு வேறு.

இருட்டத் தொடங்கியிருந்தது. தோட்டத்தில் கொசுக்கள் அப்பிக் கொள்ள, எழுந்து வீட்டுக்குள் வந்தான். மளிகைக்கடையில் சரக்கு துாக்கும் வேலையில் இருந்த போது இத்தனை பிரச்சனை இல்லை. இவனின் சம்பளத்துக்கு பதிலாக அம்மா பலசரக்காக வாங்கிக் கொள்வாள். அப்போதுதான் பாப்பாவுக்கு திருமணமானது. பலசரக்குக் கடைக்காரர் கொஞ்சம் கடன் கொடுத்திருந்தார்.. ஆனால் திருமணக்கடன் அடைவதற்கு முன்பே தங்கை வீட்டிற்கு திரும்பி விட, எதிர்த்து நின்ற அம்மாவை “பேக்குங்களையா பெத்துப் போட்டுட்டு தெனாவட்டாவா பேசுற..?” மாப்பிள்ளை ஒருமையில் பேசும்போது இவனும் நின்றுக் கொண்டிருந்தான். அப்போது கூட வயிற்றில் வலி இருந்தது. வலி என்றால் முதலில் ஆழத்தில் இருக்கும். பிறகு மெல்லெழும்பி முன்னகரும். பிறகு வயிறெங்கும் பரவும். கவனம் முழுக்க வயிற்றிலேயே வைத்திருக்க வேண்டியிருக்கும்.

பிறகுதான் யாரோ சொல்லி இந்த அரசாங்க அலுவலகத்தில் எடுபுடி வேலை. “சீக்ரம் ரிடையர் ஆயி கோயில்ல ஒக்காந்துக்குணும்..” என்பான் வாஞ்சியிடம்.

”ஒனக்கென்ன ரிடையர்மெண்ட்..? எப்ப வேணும்னாலும் போயிட்டே இருக்க வேண்டியதுதான்..”

”கோவிலுன்னா சோத்துக்கு பிரச்சனை இல்ல.. அதான்..” என்றான் வாஞ்சி சொல்வதை காதில் வாங்காததுபோல.

”வீட்ல மத்தவங்கள்ளாம் இருக்காங்கள்ள..?”

”அம்மாப்பா செத்துருவாங்க.. தங்கச்சிக்கும் வயித்துவலி.. அதும் செத்துரும்.. எனக்கு யாரு சமைச்சுப் போடுவா..?”

”ஏயப்பா.. காரியக்கார லுாசு நீ.. சாவுறவரைக்கும் ப்ளான் பண்ணீட்டியே..”

மணி எட்டாகியிருந்தது. ”இன்னுமா வீட்டுக்கு போவுல.. தங்கச்சிய பெட்ல வச்சிட்டாங்கடா தம்பீ.. ஒங்கப்பாவ பொரட்டிப் போட கூட ஆளில்ல..”

”வர்றம்மா.. சார் வந்துருட்டும்..” என்றான் குணாவை நினைத்துக் கொண்டு.

”சார் வந்தார்ன்னா நெலமய சொல்லி பணம் கேளுப்பா..” என்றாள் அம்மா ஆபிசரை நினைத்துக் கொண்டு.

கதிருக்கும் கிளம்ப வேண்டும் என்றுதான் தோன்றியது. குணாவுக்கு போன் செய்தான்.

”சார்..” என்பதற்குள் குணா மறித்துப் பேசினான்.

”முக்குக்கடையில பரோட்டா வாங்கீட்டு வர்றன்.. நீ கௌம்பிடாத..”

வயிறு வலித்தது பரவலாக.

அம்மா மீண்டும் அழைத்தாள். அலைபேசியின் சத்தத்தை குறைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

***

ஆவரகம் – எச். முஜீப் ரஹ்மான்

எச். முஜீப் ரஹ்மான்

 

1

அரண்மனையின் ராஜதர்பாரில் ராஜபிரதானிகள் புடைசூழ்ந்திருக்க மன்னரும் பரிவாரங்களும் இருக்கையில் அமர்ந்திருக்க அமைச்சர் வியர்வை வழிய மினுமினுக்கிற முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

”நம் நாட்டுக்கு பெருமை தேடித் தந்திருக்கிற தளபதியாரின் அருமை புதல்வன் யவனத்துக்கு சென்று அங்கு நடைபெற்ற வீரதீரசாகச விளையாட்டு போட்டிகளில் வென்றிருப்பது நமது நாட்டின் புகழை உயர்த்தியிருக்கிறது. மரத்தானில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்ஸ் குறித்து இந்திய துணைக்கண்டத்தில் இருக்கிற எத்தனை நாடுகளுக்கு தெரியும். ஆனால் திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் சார்பாக கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுள்ள நமது சிங்கத்தை பாராட்டுவதை இந்த அவையில் நமது மன்னர் முன்னிலையில் செய்வது தான் சரியாகும். இந்த நாட்டின் சார்பாகவும் நமது மன்னர் சார்பாகவும் சகலகலாவல்லவன் பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருமே கரகோஷத்தை ஒலிக்க அமைச்சர் மீண்டும் தொடர்ந்தார்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். நமது அஞ்சாசிங்கம் பிரதாபனுக்கு அவரது மனைவி வியஜதரணி இருப்பதை இங்கு சொல்லியாகவேண்டும். எனவே இந்த தங்க விருதை விஜயதரணி அவர்களே தமது புருஷனுக்கு வழங்குவது சால பொருத்தமாக இருக்கும்.

கரஒலி அதிர்ந்தது. அமைச்சரின் குரல் ஒலித்தது. மனுதர்மினி விஜயதரணி அவர்களை மன்னர் முன்பாக வரும்படி அன்புடம் அழைக்கிறோம். முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜயதரணி புன்முறுவலுடன் எழுந்தார். காண்போர் அனைவரையும் வியக்கவைக்கும் அழகுள்ள விஜயதரணி எழுந்து அவையோரை வணங்கி மன்னருக்கு முன்பாக வந்து மன்னரை வணங்கினார். பின்னர் மெல்லிய குரலில் அவையோரை பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘’பெரியோர்களின் ஆசியில் எங்களுக்கு விவாகம் நடந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்தான் அற்புதமான இந்த புருஷனை பெற்றது. அவர் எதை செய்தாலும் என்னிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வார். ஒலிம்பிக்ஸில் பங்கெடுப்பது குறித்து அவர் சிறிது தயக்கம் உடையவராகதான் இருந்தார். நான் அவருக்கு ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் அளிக்க அவர் அதற்கு தயாரானார். பயிற்சியின்போது குதிரையில் இருந்து விழுந்ததால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. நான் மிகவும் அச்சமுற்றேன். ஆனால் தளராத அவரது நம்பிக்கையால் காயம் உடனே மாறிவிட்டது. உங்களை போன்ற பெரியோர்களின் ஆசி இருக்கும்வரை அவர் இன்னும் பல சாதனைகளை சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்களின் வாழ்த்துகளுடன் சகலகலாவல்லவன் என்ற இந்த பட்டத்தை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.”

கரகோசம் பெரிதாக எழ அந்த தங்கப் பதக்கத்தை பிரதாபனின் கழுத்தில் மாலையாக சூட்டினார். எல்லோரும் எழும்பி நின்று பிரதாபன் வாழ்க வாழ்க என்று ஆர்ப்பரித்தனர். மன்னர் பிரதாபனை ஆரத்தழுவி கணையாழி ஒன்றை பரிசாக அளித்தார். கரகோசத்தின் நடுவே பிரதாபன் பேசத்துவங்கினான்.

அவையோருக்கு சிரம் பணிந்த வணக்கம். இங்கே பேசியவர்கள் எல்லோருமே நான் போட்டிகளில் சாதனை புரிந்துவிட்டதாக பேசினார்கள். என்னை பொறுத்தவரைக்கும் நான் என்னை ஒரு சிறுவனாகதான் உணருகிறேன். நான் சாதிக்கவேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. எனக்கு இந்த பட்டத்தை அளித்த என் சகதர்மினிக்கு நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இந்த சபைக்கும், நமது நாட்டுக்கும், மாமன்னருக்கும் நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். என்னை பாராட்டி பேசிய அனைவருக்கும் நன்றி சொல்லி இன்னும் வரும் காலங்களில் இந்த நாட்டுக்கு சேவை செய்யவும் என்னை அர்ப்பணம் செய்வதாக இந்நேரத்தில் உங்கள் முன்பாக உறுதி கூறுகிறேன். மேலும்…””

கரகோசம் எழுந்து அடங்கிக் கொண்டிருந்த சமயம் விஜயதரணியின் முதுகுப் பக்கமாக அந்த குரல் கேட்டது..“அம்மா…”

திரும்பினார்.

அவருடைய தோழி அம்சவர்தினி குனிந்தவாக்கில் பவ்யமாய் நின்றிருந்தார்.

‘’என்ன…?”

தாங்களுக்கு ஒரு செய்தி..”

விஜயதரணி தோழியை கோபமாகப் பார்த்தார்.

“விழா நடந்து முடிகிறவரைக்கும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொன்னேனா இல்லையா?..”

“அம்மா.. மிகவும் முக்கியமான செய்தி மாளிகை காவலன் செய்தி கொண்டு வந்திருக்கிறான்.”

விஜயதரணி திடுக்கிட்டார். என்ன செய்தி?

“யாரோ ஒரு வியாபாரி மாளிகைக்கு சென்று தாங்களை பார்க்கவேண்டும் என்று காவலனிடம் கேட்டிருக்கிறான். காவலன் எவ்வளவு முயன்றும் தாங்களிடம்தான் சொல்வதாக பிடிவாதம் பிடிக்க மாளிகையில் இருந்து வந்த வேலைக்காரி வியாபாரியிடம் பேசிப்பார்க்க அவளது காதில் ஒரு ரகசியம் சொல்லிவிட்டு போய்விட்டான். வேலைக்காரி என்னிடம் அந்த ரகசியத்தை சொன்னாள். இப்போது நான் அதை சொல்லவா?”

“சொல்லு..”

”நாளை குமாரகோவிலுக்கு தாங்கள் தனியாக செல்லவேண்டுமாம். அங்கே சந்திரிகா என்று ஒரு பெண்மணி உங்கள் பர்த்தாவை குறித்து ஒரு செய்தியை சொல்வதாக சொல்லி வியாபாரி போய்விட்டான்.”

“என்ன பர்த்தாவை குறித்தா?”

விஜயதரணி மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

பிரதாபனின் குரல் ஒலித்த்து.

ஆகவே.., இந்நாட்டின் மீது ஆணையாக எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அனைவரும் கரஒலி எழுப்ப நினைவு திரும்பிய விஜயதரணியும் கரஒலி எழுப்பினார்.

வீரபிரதாபன் வாழ்க வாழ்க

2

அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த விஜயதரணி குளித்து முடித்து கூந்தலை கற்பூர புகையிட்டு நறுமண தைலம் தடவி ஒப்பனை எல்லாம் முடிந்து சயன அறையில் நுழைந்தபோது படுக்கையில் கிடந்த பிரதாபன் போர்வையை விலக்கி, விஜயா, என்றழைத்தான்.

என்னங்க

என்ன எங்க கிளம்பிட்ட?

ஓ, அதுவா, குமாரகோவிலுக்கு முருகனை தரிசிக்கத்தான்..

விஜயா இன்று காலையில் எனது தாய்மாமன் வையாபுரி மதுரையில் இருந்து வருவது தெரியுமல்லவா?

என்னங்க அதை நான் மறப்பேனா.. நான் போய்விட்டு நாளிகைக்குள் வந்துவிடுவேன். நேற்றே சப்பரத்தை தயார் செய்யுமாறு சொல்லிவிட்டேன்.

விஜயா, என்று அழைத்தவாறு போர்வையை விலக்கிவிட்டு சயனத்தில் எழும்பி உட்கார்ந்தான் பிரதாபன்.

நேற்று தர்பாரில் வைத்தே உன்னை கவனித்துக் கொண்டிருந்தேன். என்ன ஆச்சு உனக்கு. ஏதோ பரபரப்புடன் இருப்பதை போன்று தோன்றுகிறதே.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பிரபு..

என்கூட சரியா பேசல. தூக்கம் வருதுன்னு சொல்லிக்கிட்டு போய் படுத்த. என்ன விசயம் விஜயா?

என் தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். அவ்வளவுதான்.

சரி இதற்காகதான் கவலைப்பட்டாயா? எல்லாம் சரியாக போகும்

சரி நான் கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு விஜயதரணி சப்பரத்துக்கு வந்து ஏறிக்கொண்டாள். சப்பரந்தூக்கிகள் நான்கு பேர் சப்பரத்தை தூக்க மெதுவாக அதிகாலையில் குமாரகோவிலை நோக்கி சப்பரம் அசைந்தவாறு சென்றது. வயல் வெளி ஏலாக்கள் தாண்டி வண்டித்தடம் சாலையை அடைந்து மேலாங்கோடு கோவில் கடந்து குமாரகோவில் வந்தபோது விடியலின் கீற்றுக்கள் மெல்ல தெறித்திருந்தன. கோவிலின் முகபிரகாரத்தில் தூக்கு விளக்குகள் ஒளியை சிந்தின. குமாரகோவில் குளத்தில் ஒளிக்கோடுகள் மெல்ல தண்ணீரில் அசைந்து ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. குளத்தருகே சப்பரத்தை நிறுத்தி அதில் இருந்த படுதாவை விலக்கி வெளியே பார்த்தாள் விஜயதரணி. ஐந்தாறு பேர் குளக்கரையிலிருந்து கோவிலை நோக்கி நடந்து சென்றார்கள். அவர்கள் குளித்து முடித்திருந்தார்கள். அதிகமாக ஜனநடமாட்டம் வேறொன்றும் இல்லை. விஜயதரணி வெளியே இறங்கினாள். எதிர்பாராத வேளையில் ஒரு பெண்மணி அவளருகில் வந்தாள்.

நீங்கள் வீரப்பிரதாபனின் மனைவிதானே?

விஜயதரணிக்கு தூக்கிவாரிப் போட்டது.

நீங்கள் யார்..

நேற்று நடந்த வைபவத்தில் நானும் கலந்திருந்தேன். அதுதான் உங்களை கண்டதும் அறிமுகம் செய்யலாம் என்று வந்தேன்

விஜயதரணி நிம்மதியானாள். அப்படியானால் வியாபாரி சொல்லிச்சென்ற பெண் இவள் இல்லையா, அவள் யாராக இருக்கும் என்று கணநேரத்தில் யோசிக்கவும்..

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டு அந்த பெண் புறப்பட்டுப் போனாள்.

யாரந்த சந்திரிகா?அவளுக்கும் என் பர்த்தாவுக்கும் என்ன தொடர்பு? ஏன் அவரைப் பற்றி அவள் என்னிடம் சொல்ல வேண்டும் என்று பல்வேறு சிந்தனைகளை அலையவிட்டபோது விடிந்து விட்டது. கோவிலை சுற்றி ஜனக்கூட்டமும் வந்துவிட்டது.

கோவில் பக்கத்தில் இருந்த ஒரு வியாபாரியின் அருகே நின்றிருந்த நான்கைந்து பிராமணர்கள், சந்திரிகா, என்று சொல்வதை கேட்டு அவர்கள் அருகில் விஜயதரணி சென்றாள்.

நேக்குகூட சந்தேகமாத்தான் இருந்து? என்றார் ஒரு ஐயர்

ஆமா, சாயங்காலம் வரை நன்னா இருந்தவா இப்படி சட்டுன்னு போனா சந்தேகம் வராதா பின்னே

ஓய் சந்திரிகாவை யாரோ கொலைதான் செஞ்சிருக்கா

அது எப்படி ஓய் உமக்கு தெரியும்

எல்லா ஜெனமும் அப்படி சொல்லச்சே…, என்று இழுத்தார்.

சந்திரிகா கொலை செய்யப்பட்டாளா? இவர்கள் யாரை குறித்து பேசுகிறார்கள்? விஜயதரணி குழம்பினாள். எனினும் அவர்களிடம் இதைப்பற்றி கேட்க மனம் வரவில்லை. ஆனால் இதுவரை அவள் வரவில்லையே ஏன்? என்று யோசித்தவாறு சப்பரத்தில் ஏறி அமர்ந்தாள். சூரிய வெளிச்சம் காலையில் இதமாக பனியை விலக்கிக் கொண்டிருந்தது. நாழிகை கடந்துவிட்டது. இந்த பிராமணர்கள் சொன்னது சரதான். சந்திரிகா கொல்லப்பட்டிருக்கிறாள். இல்லை என்றால் இந்நேரம் அவள் என்னை சந்தித்திருப்பாள்தானே. சந்திரிகா யார்? அவள் என் கணவனைப் பற்றி என்ன ரகசியத்தை சொல்லப் போகிறாள் என்ற குழப்பத்துடனே சந்திரிகாவை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் வரவில்லை. பின்னர் அங்கிருந்து மாளிகைக்குச் சென்றாள். ஆனால் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன.

3

மேலைப்புலங்களில் இலக்கிய மானிடவியல் பெரிதும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. செவ்விலக்கியக் கருவூலத்தைக் கொண்ட தமிழ் மரபில் இலக்கிய மானிடவியல் வளர வேண்டிய ஒரு முக்கியமான கற்கைத் துறையாகும். இத்தகைய தன்மை கொண்ட எச்.முஜீப் ரஹ்மானின் ‘ஆவரகம்’ என்ற வரலாற்று நூல் ஒருவகையில் இனவரைவியல் எனலாம். இலக்கிய மானிடவியல்துறையில் தொல்குடிச் சமூகங்களையும் பண்பாடுகளையும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில் சங்க இலக்கியங்களிலிருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய  சமூகவியலும் பண்பாட்டுவியலும் நமக்குத் தேவையாகின்றன. இயற்கையோடு இயைந்த சமூகமாகச் சங்ககாலச் சமூகம் காணப்பட்டது. அதனைத் திணைச் சமூகம் என்றே கூறலாம். தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடிய தொன்மையையும் தொடர்ச்சியையும் சான்றுரைக்கும் வகையில் 5000 வருடங்களுக்கு முன்பே உருவானவை சங்க இலக்கியங்கள். தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளுக்கு அப்பால் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களால் எமதாக்கப்பட்ட பண்பாட்டுத்தரவு மூலங்களாகவே சங்க இலக்கியங்கள் உள்ளன என்பது மானிடவியல் நோக்கிலான கருத்தாகும்; சங்ககாலப் பன்மியச் சமூகக் கட்டமைப்பினையும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர அறிந்து கொள்ள இவ்விலக்கியப்பரப்பு பெரிதும் துணை புரிகின்றது.  நாயர்கள் தொடர்பான குறிப்புகளும் அவர்களுடைய வாழ்வியல் பதிவுகளும் இனவரைவியல் விவரிப்புக்கு உட்பட்டுள்ளன. இலக்கிய மானிடவியல் புலம் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதற்குச் சான்றாக இந்நூல் விளங்குகின்றது. அறிஞர் கைலாசபதியின் தமிழ் வீரநிலைக் கவிதைத் தமிழ் மரபினை கிரேக்கம் வேல்ஸ், ஐரிஷ் உள்ளிட்ட மேலை மரபுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக நூலாசிரியர் பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழ் மரபைத் தமிழகத்துக்கு அருகாமையில் உள்ள தென்னிந்திய நாடோடி மரபோடும், அதற்கடுத்து வட இந்திய நாடோடி மரபோடும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.ஆய்வாளர் டி.தர்மராஜ் சொல்வது போல தனது சமூகத்தையே எழுதுவது என்ற பழக்கம் கொள்கையாகவே பேசப்பட்டது,  வட்டார இலக்கியங்களின் வருகைக்குப் பின்னரே. வட்டார இலக்கியங்களின் வருகையும், பிற்படுத்தப்பட்ட சாதிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவாவதும் ஒரே தருணத்தில் நடைபெறுகிறது. பட்டியலின சாதிகளைப் போல தாமதமாகவே இலக்கியவுலகினுள் அடியெடுத்து வைக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் நவீன எழுத்தில் இல்லையென்று கண்டதும்,பட்டியலின மக்களைப் போல் அதனைப் போராட்டமாக அல்லது கோஷமாக மாற்றியிருக்கவில்லை. ஆனால், தங்களைப் பற்றிய பதிவுகளையும் இலக்கியத்தினுள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த வகை எழுத்துகளை‘வட்டார இலக்கியம்’ என்றும் பெயரிட்டுக் கொண்டனர். ஏறக்குறைய இதே காலகட்டத்தில், தமிழ்த் திரைப்படவுலகினுள்ளும் படையெடுக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் கிராமங்களை நோக்கி தமிழ்த்திரைப்படக் கதையாடலை நகர்த்தியதையும் யோசித்துப் பாருங்கள். 1960கள் என்று சொல்லப்படும் காலகட்டம் பிற்படுத்தப்பட்ட  சாதிகளின் காலமாகவே தமிழகத்தில் கணிக்கப்பட வேண்டும். அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுதல், வெகுஜன ஊடகங்களில் ஊடுறுவுதல், நவீன இலக்கியப் பிரதிகளை ஆக்கிரமித்தல் என்று சகல தளங்களிலும் அவர்களின் இருப்பை உணர முடியும். தத்தம் சமூகத்தை எழுதிக்கொள்ளும் போக்கு வட்டார இலக்கியத்தின் அறிமுகத்தோடே நடைபெறுகிறது என்றால், அதற்கு முன்பு செய்யப்பட்ட இலக்கியங்கள் இந்த குணத்தைக் கொண்டிருக்கவில்லையா, அவையும் அவரவர் அவரவர் சாதியை எழுதிக் கொண்ட பிரதிகள்தானே என்ற கேள்வி எழலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் நவீனத் தமிழ் இலக்கியம் அப்படித்தான் என்றைக்குமே இருந்தது. அவரவர், அவரவர் சாதியை எழுதிக் கொள்வது என்பதுதான் வழக்கமாக இருந்தது. அவற்றை மீறி ஏதாவது செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் பிரச்சாரகுணம் கொண்டவை, இலக்கியத் தரமற்றவை என்றுசொல்லப்பட்டிருந்தன. இன்று தமிழகத்தில் காணப்படும் குடிப்பிள்ளைகள்  என்னும் மரபு பண்டையமரபின் நேர் தொடர்ச்சியாக அமைவதையும் காட்டுகிறார்.  இன்றைய நிலை பற்றி சமூகப்படி மலர்ச்சியை  மானிடவியல் நோக்கில் மிகத் தெளிவாகப் பொருத்தமாக விளக்குகிறார். நீண்டதொரு சமூகப் படிமலர்ச்சிச் சூழலில் எத்தகைய மாற்றங்களோடு உருமாறிப் புதிய திரிபு வடிவங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதனைச் சமூகப் பண்பாட்டுப் படிமலர்ச்சி, இனவரைவியல், இனவரலாற்று அணுகுமுறைகளின் அடிப்படையில் இந்த வரலாறு பல்துறை இணைநோக்கின் அணுகுமுறைகளின் தேவை தமிழிலக்கியச் சூழலில் உணரப்பட்டு வருகின்ற சமகாலத்தில் தமிழுக்கு இந்நூல் ஒரு புதிய வரவு. இந் நூலின் பயன் என்பது தனியே நாயர்களின் வாழ்வியலை விளங்கிக் கொள்வது மட்டுமல்ல, ஆதிக்க சமூகங்கள் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியான இன்றைய சாதிய, பழங்குடிச்  சமூகங்கள் பற்றியும்  மானிடவியல் நோக்கில் புரிந்துகொள்வதற்கான புதிய அணுகுமுறையையும் தந்துள்ளது. த லித்துகளின் வாழ்க்கையை அப்படியப்படியே எழுத்தில் வடிக்கிறேன் என்ற பெயரில் பயன்பாட்டிலிருக்கும்  அத்தனை வசைச்  சொற்களையும்  சர்வ சாதாரணமாய்  பயன்படுத்தி தலித்  இலக்கியங்கள் செய்யப்பட்டன. வசைகளை அச்செழுத்தில் பார்க்கிற அதிர்ச்சியை இதனால் தமிழ்கூறு நல்லுலகம் பெற்றது  என்றாலும், இதற்கான காப்புரிமையும்கூட சிற்றிதழ் வட்டார கலகக்கார எழுத்தாளர்களிடம் இருப்பது நாட்சென்றே தெரியவந்தது. இப்படியாக, தமிழ்  இலக்கியம்  தனக்கான கதை சொல்முறையையும், எழுத்து முறையையும் தேடித் திரிந்த பயணம் ஏராளமான முட்டுச்சந்துகளை உடையது. இனவரைவியல் எழுத்து முறையும், பேச்சு வழக்கில் கதை சொல்லும் முறையும் ஏதோ தனித்தனியான இரண்டு கதையாடல் வகைகள்  போலத் தோன்றினாலும், உண்மையில் இரண்டும் ஒரே விதமான நோக்கங்களை உடையவை. இந்நூலில் பாடுபொருள் வரவேற்புக்குரியதாகும். அதனை இன்றைய இதனைப் பயன்படுத்தி மேலும் பல ஆய்வு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளும்போது இந்நூலின் பயன் தவிர்க்க இயலாது சமூக அறிவியல்களில் துறைதோறும் புதுப்புது கற்கை நெறிகளுடன் ஆராய வேண்டியுள்ளது. வரை இணைத்து ஒரு முழுதளாவிய  பார்வையுடன் நோக்கியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். மானிடவியல் அறிவும், தமிழர் பண்பாடு தொடர்பான ஆழ்ந்த புலமையும், அதிகமான தமிழ் இலக்கிய வாசிப்புகளும், நுண்நிலையான புரிதலும், தேடலும்  இந்நூலின் பின்புலமாக  அமைகின்றன.

 

 

 

  அற்றைத் திங்கள் – பானுமதி. ந

               பானுமதி. ந

அது சிறு மலையைக் குடைந்து கட்டப்பட்ட பழைய கோயில். தன்னைப் போலவே பழசு என்ற எண்ணம் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. மிகப் பெரிய முரசுகள் பெரிய திண்ணைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தன. முழங்காத முரசுகள் சஹானாவைப் போல; இல்லை, முழக்காத முரசுகள் தன்னைப் போல. நீண்ட நடைபாதைகளை ஒட்டி அலங்கார நடன மண்டபம் வெறிச்சென்று காட்சி அளித்தது. எத்தனை மேளங்கள், எத்தனை தாளங்கள் இங்கே ஒலித்திருக்கும். இந்த அச்சுறுத்தும் அமைதியில் மேற்கூரையும், பக்கச் சுவர்களும், ஒலிக்கு ஏங்கி, வண்ணங்களை உதிர்த்து நிற்கின்றன. அம்மன் சன்னதியில் தூங்கா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிற்பி படைத்த கணத்தில் உறைந்த அன்னையின் சிற்பம் அவன் மனத்தில் உறையும் அந்த கனவைப் போன்றதா அல்லது… வேறு எதைப் போன்றது?

சிவன் சன்னதியில் இருளை விழுங்க முடியாமல் ஒளி தத்தளித்துக் கொண்டிருந்தது. விசித்திரமான அழகு என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவன் பாறைப் படிகளின் மேலேறி திறந்திருந்த வாயில் வழியாக சுனைப் படுகைக்கு வந்தான்.

அவன் உள்ளேயிருப்பதை உணராமல் காவல்காரன் பூட்டிக் கொண்டு போய்விட்டான். கத்திக் கூப்பிடலாமா என ஒரு கணம் நினைத்தான். எங்கிருந்தால் என்ன என்றும் சிந்தை ஓடியது.
அன்று இதைப் போல் பூரண நிலவில்லை. அவன் தன் வீட்டு முற்றத்தில் கிணற்றை ஒட்டிய மேடையில் கையில் பேருக்கு ஒரு புத்தகத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒழுங்கான வடிவுகளிலில்லாத புண்ணாக்குகள் போல் நிறம் கொண்டு சிறு குன்றுகளெனக் காணப்பட்ட மேகங்கள் எங்கே? கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி ஒன்று மற்றொன்றை அழைக்க வானில் மிளிரும் பூக்கள். அவனது கவிதை வேளையை கலைக்கவென்றே காலிங் பெல் அடித்தது.

‘பாலா, யார்னு பாரு, கைவேலையா இருக்கேன்’

முணுமுணுத்துக்கொண்டே சென்றவன் நடுவயதில் ஒருத்தர் கதவருகே நிற்பதைப் பார்த்தான்.

“நாங்க கும்மோணம். நேக்கு டிரான்ஸ்ஃபர் இந்தூருக்கு ஆயிருக்கு. உங்காத்துல இடம் இருக்குன்னா, சரி பாக்கலாமேன்னு வந்தோம். பெரியவா யாருமில்லயா?” நேரங்கெட்ட நேரத்தில வீடு பார்க்க யாரும் வருவதில்லையே என்று வியந்தான் அவன். ஒத்தர் நின்னுன்டு பன்மைல பேசறாரே, என நினைத்தவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான். பாதி ஒளியோடு கலந்த இருளில் மருதாணி மரத்தடியில் நின்று கொண்டிருந்தாள்.

‘உள்ள வாங்க சார், அம்மா இருக்கா, அப்பா வெளில போயிருக்கா, உங்க பேரு’ என்றான் இவன்.

“கோதண்டராமன், இவ எம் பொண்ணு, சஹானா, நாங்க ஆர்த்தின்னு கூப்ட்றோம். உன் பேரு பாலாதானே? அம்மா கூப்ட்றச்சே கேட்டுது”

மாநிறத்தில் இருந்தாள் அவள். இரட்டைப் பின்னல் மடித்துக் கட்டியும் பின்முதுகு வரை ஊஞ்சல் ஆடியது. மருள மருள விழிக்கும் கறுப்பு திராட்சைகள். சிறிய வாய். அந்த சங்குக் கழுத்து அவனை அசைத்துவிட்டது. அம்மா ஏதோ சொன்னதற்கு மூக்கைச் சுருக்கி சிறிது அண்ணாந்து பல் வரிசை தெரிய சிரித்தாள். வாடகை கூட இல்லாமல் அவர்களைக் குடியேற்ற அவன் ரெடி. ஆனால், அப்பா என்ன நினைக்கிறாரோ? ’சீதாபதி பிள்ளையாரே, நிஜம்மா உனக்கு சிதர்க்காய் விட்றேன், பதினெட்டு தோப்புக்கரணம் போட்றேன்.’

இந்தக் கரடுமுரடான பாறையில் அந்த எண்ணம் அவனுக்கு இளநகை ஊட்டியது. அவர்கள் குடித்தனம் வந்தார்கள். ”அப்பாவப் பாத்தாச்சு, பொண்ணு அவராட்டம் இல்ல, சோ, அம்மாவப் பாத்துடணும்னு தோணி வாடகை ஏத்தாம ஒப்டுண்டேள் போலிருக்கு” என்று அம்மா அப்பாவை கேலி செய்ததும் நினைவில் வந்தது.

அந்த ஊரில் ஒரே ஒரே ஸ்கூல்தான் ஹையர் செகண்டரிக்கு. அதுவும் கோ-எட். பாலா நிஜமாகவே வானில் பறந்தான். அவன் ப்ளஸ் டூ அவள் ப்ளஸ் ஒன் அவ்வளவுதான். ராது, வேணு, சீமா, பாண்டு எல்லோரும் அவனுடன் ‘க்ரூப் ஸ்டெடி’ செய்ய விழைந்தார்கள். அவன் வீட்டிலே, அதுவும் சஹானா இருக்கும் போர்ஷனில் இவர்கள் வீட்டு முற்றத்தின் ஒரு பக்கம் திறக்கும் என்பதால் அந்தக் கூடத்திலேயே வாசம் செய்ய விரும்பினார்கள். அம்மாகூடச் சொன்னாள்- “மாடில போய் படிங்களேன்டா” என்று. சீமா ரொம்ப கெட்டிக்காரன். ”மாமி, அங்க நாங்க பேச ஆரம்பிச்சுடுவோம் இல்லன்னா பராக்கு பாப்போம்; இங்கன்ன நீங்க பாத்துண்டிருக்கேள்னு பயமிருக்கு, படிப்போம்”. அம்மா சிரித்துக் கொண்டே, ‘கலைமகளை’ப் படிப்பாள்.

சஹானா பாலாவின் அக்கா உஷாவுடன் நெருங்கிய தோழியாகிவிட்டாள். ’க்ளுக் க்ளுக்’கென்று எதற்கோ சிரிப்பார்கள். அவன் நெருங்கி வந்து நின்றால் உதடுகள் மடிந்து ஒலியற்ற சிரிப்பாக முகமும் கண்ணும் சிரிக்கும் அவளுக்கு. ”ஏண்டா, எங்களையே சுத்தற. வேற வேலையில்லியா?” என்று உஷா கடுகடுப்பாள்.

சஹானா கணக்கு ட்யுஷனுக்கு போய் வரும் வழியில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அவள் ‘பயமாக இருக்கிறது நீ கூட வாயேன்’ என்று ஒருமுறை கூடக் கேட்டதில்லை. அவன் சைக்கிளுடன் முனையில் காத்து நின்று பாதுகாவலனாக வருவதற்கு நன்றியும் சொன்னதில்லை.

இன்று அவனுக்குத் தோன்றுகிறது- அவள் அனாஹதத்வனி- ஒலி கேட்காத மந்திரம். ஆனால், அவள் நன்றாகப் பாடுவாள். அதுவும் மார்கழியில் முப்பது நாட்களும் திருப்பாவை அவளுடைய அப்பா பாட இவள் வாங்கிப் பாடுவாள். ’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா’ என்று. இன்று அந்தப் பாடல் அவனுள் கேட்பானேன்?

‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ அவர்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அவனுக்கு அதனுடன் வரும் வடை மேல் தான் மிகுந்த ஆசை. அவள்தான் பிரசாதத்தை எடுத்து வருவாள்; ’இன்னும் ரெண்டு வட கிடைச்சா நன்னாருக்கும்’. கன்னங்களில் கொப்பளிக்கும் அந்தச் சிரிப்பு அவன் வெக்கங்கெட்டு கேட்டதை ஈடு செய்வதாக அவனுக்கு அன்று தோன்றியது. அவன் இல்லாதபோது தூய்மையான வெண்காகிதத்தில் இரு வடைகள் அவனுக்கென வைக்கப்பட்டிருக்கும். அவன் ரூமிற்கு அவள் வந்து போன வாசத்தை நெஞ்சு நிறைய இழுத்துக் கொள்வான், வடையின் ருசியோடு சேர்த்து.

அவர்கள் மூன்று வருடங்கள் அவன் வீட்டில் இருந்தார்கள்; அவருக்கு பதவி உயர்வுடன் மாற்றலும் வந்துவிட்டது. சிறிது காலம் கடிதப் போக்குவரத்து இரு குடும்பங்களுக்கும் நடந்தது. அவள் படிக்கும் சென்னை கல்லூரியில் ஒருமுறை அவளைச் சென்று பார்த்தான். அவள் வீட்டிற்கு அழைத்தும் அவன் போகவில்லை. இப்பொழுதும் அழகாகத்தான் இருந்தாள். ஆனால், மஞ்சள் பாவாடையுடன், மருளும் விழிகளுடன், அண்ணாந்த சிரிப்புடன், அவனுள் உறைந்த சஹானா இல்லாமல் அவள் ஆர்த்தியாகத்தான் தெரிந்தாள். அவள் அவர்கள் வீட்டில் குடியிருந்த மூன்று வருடங்களில் ஒருமுறை கூட இந்தத் தோற்றம் தனக்கு எழவில்லை என அவன் வியந்து கொண்டான்.

மேலே வானம் வெள்ளிச் சலங்கைகள் கட்டிக் கேட்காத ஒலியில் ஆடிக் கொண்டிருந்தது. மலைப் பாறைகளின் வழவழப்பு கருமையில், நிலவின் ஒளி, தம்பூராவின் ஒரு பகுதியில் படும் அகல்விளக்கென மினுக்கியது. ரகசிய முனகலென காதோரம் சஹானா பாடினாள்.

 

 

நாகாஸ்திரம் – காலத்துகள்

காலத்துகள்

அழைத்த எண்ணை இப்போது தொடர்பு கொள்ள முடியாது என்று பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “சாப்ட வாடா, மணி ஏழே முக்காலாச்சு,” கதவைத் தட்டியபடி அம்மா சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியை படுக்கையின்மீது போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவன், “ம்மா தாத்தா மொபைல் இன்னும் நம்ம கிட்டதான இருக்கு, சிம்லாம் ரிடர்ன் பண்ணிட்டோம்மா என்ன,” என்று கேட்க, “வீட்லதாண்டா இருக்கு, என் ரூம் பீரோலதான் வெச்சிருக்கு, எதுக்கு” என்று பதில் சொன்னாள் அம்மா.

“ஒண்ணுலமா, அத நா எடுத்துக்கறேன், சில போட்டோஸ் இருக்கு,” என்றபடி அம்மாவின் அறையினுள் சென்று பீரோவைத் திறந்தான். தாத்தாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹாலுக்கு வந்தவனிடம், “இந்த சண்டே அபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்குடா” என்றாள் அம்மா.

“என்ன பிரச்சனை இப்போ”

“அதான் யாரோ ரெண்டு மூணு வாரமா ராத்திரி ராத்திரி காலிங் பெல்ல அடிச்சுட்டு போய்டுறாங்கல்ல அதப் பத்திதான், காத்தால பத்து மணிக்கு. எங்கயும் வெளில போலல”

“வீட்லதான் இருப்பேன், பசங்களாத்தான் இருக்கும், வேற யாரு பண்ணப் போறாங்க. க்ருஷ்ணா, ப்பப்பூ இதெல்லாம் பண்ணக்கூடியவங்கதான்,” என்றபடி சாப்பிட அமர்ந்தவன் முன் தட்டை வைத்தபடி, “சின்னப் பசங்க எப்படிடா அந்த நேரத்துல வீட்ட தொறந்துட்டு வருவாங்க, இது வெளியாள் யாரோதான் பண்றாங்க.” என்றாள் அம்மா.

சோற்றை தட்டில் போட்டு குழம்பை ஊற்றிப் பிசைந்து தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான். உருளைக் கிழங்கை தட்டில் வைத்துக் கொண்டே, “அவருக்கும் உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும், ஒங்கப்பாக்கும்தான். அந்த ஜீன் அப்படியே ஒனக்கு வந்திருக்கு.”

“…”

“ஏண்டா ஷேவ் பண்றதில்லையா” என்று கேட்டாள்.

“ரெண்டு மூணு நாளாச்சு, அவ்ளோதான்”

“நல்ல வாழ்ந்தா, வியாதில படுத்து எல்லாருக்கும் தொல்லை கொடுக்காம தூக்கத்திலேயே போய் சேந்துட்டா, கல்யாண சாவுதான்”

“….”

“ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போறது, நீ பொண்டாட்டி செத்தவன் மாதிரி ஷேவ் பண்ணாம இருக்க ஆரம்பிச்சிட்ட”

“படுத்தாதம்மா, ரெண்டு நாள் ஷேவ் பண்ணாதது பெரிய விஷயமா. ஆபிஸ்ல வேல அதிகம், அதுவும் இந்த டேக்ஸ் சேஞ்ஜுக்கப்பறம்” வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டே சொன்னவன் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்து அதை இயக்கினான்.

தொடுதிரையில் அவனுடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம், உற்சாகச் சிரிப்புடன் தாத்தா. இவன் சிறுவனாக இருக்கும்போது, தாத்தா வசித்து வந்த ஊருக்கு விடுமுறைகளில் செல்லும்போது, அதன் மிகப் புகழ்பெற்ற கோவிலுக்கு -”நினைத்தாலே மோட்சம்” என்ற சொலவடை அவ்வூரைப் பற்றியும், அதன் பிரதான தெய்வம் பற்றியும் உண்டு – அழைத்துச் செல்பவர், இவன் பிடிவாதம் காரணமாக கோவில் யானைக்கு அரைசீப்பு வாழைப்பழத்தை ஒரு நாள் வாங்கித் தர, அதன் பின் இவன் ஐந்தாவது ஆறாவது வரும், -யானைக்கு உணவளிப்பதை கூச்சமளிக்கும் ஒன்றாக உணரும்- வரைக்கும் அந்த வழக்கம் தொடர்ந்தது. கோவிலிலிருந்து திரும்பும்போது இனிப்புக் கடைக்கு அழைத்துச் செல்வார்.கடையின் முன்புறம் சதுரக் கண்ணாடிப் பெட்டிக்குள் குமித்து வைக்கப்பட்டிருக்கும், லட்டின் ஒற்றை வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் சிறிது பசுபிசுப்புடன் இருக்கும் இனிப்பு பூந்திகள். வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் பூந்திப் பொட்டலத்தை காலி செய்திருப்பான். இந்தக் கடற்கரை நகரத்திற்கு குடிவந்த ஆறேழு ஆண்டுகளில் தாத்தாவுடன் ஒவ்வொரு வார இறுதியிலும், குறைந்த பட்சம் மாதம் இருமுறையேனும் கடற்கரைக்குச் சென்று வருவது வழக்கம்.

தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான், தாத்தாவின் அலைபேசியில் அவருக்குப் பிடித்தமான பக்திப் பாடலொன்றின் வரிகள் ஒலித்தன. அழைப்பு தானாக அறுபடும்வரைக் காதருகில் தன் அலைபேசியை வைத்திருந்து விட்டு, மூன்று வாரங்களாகப் படித்து முடிக்க முயன்று கொண்டிருக்கும் நாவலை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். அம்புலிமாமா, “அமர் சித்ர கதா” எல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்பே கதைக சொல்ல ஆரம்பித்தவர் தாத்தா. ஆறேழு வயது வரை இரவில் எழுந்து “விடு சக்ராயுதத்தை”, “பிரம்மாஸ்திரம் வருது” என்று கத்திக் கொண்டே அறைகளை சுற்றிக் கொண்டு வந்தவனுக்கு இனி கதையெல்லாம் சொல்ல வேண்டாம், அவன் எதுவும் படிக்கத் தேவையில்லை என்று வீட்டினர் தடுத்தும், “எல்லாம் தானா சரியாயிடும் கோந்தேக்கு, அதுக்காக கத கேக்காம படிக்காம இருக்கறதா,” என்று சொன்னார். இவன் வாசிப்பின் திசை மாறிய பின்னும் அவ்வப்போது படிக்கச் செய்யும் “விக்ரமாதித்தன் கதைகள்” போன்ற சில புத்தங்கள் பற்றி காலமாகும் வரை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். நாவலை வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் இருந்த பெரிய அட்டைப் பெட்டியை இழுத்து அதிலிருந்த டைரிகளில் இரண்டை எடுத்துக் கொண்டு படுத்தான்.

எண்பத்தெட்டில் பணி ஓய்வு பெற்ற ஓரிரு வருடங்கள் கழித்து டைரி குறிப்புக்களை எழுத ஆரம்பித்திருந்த தாத்தாவிடம் சிறு வயதில் அவர் எழுதுவதைப் பற்றி கேட்க எதுவும் சொல்லாமல் புன்சிரிப்புடன் அதை கடந்திருக்கிறார். வளர ஆரம்பித்தபின் அதைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் காலமான பின்பு, சேர்ந்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட டைரிகளை பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிடலாம் என்று வீட்டில் பேச்சு எழுந்தபோது இவன் அவற்றை தன் அறைக்கு கொண்டுச் சென்றான். தினசரி நிகழ்வுகள் மட்டுமில்லாமல் நினைவுச் சிதறல்களாகவும் -நாலைந்து நாட்களுக்கான பக்கங்களுக்கு நீளும் – உள்ளக் குறிப்புக்கள். சில நேரம் தொடர்ச்சியாக பல வெற்றுத் தாள்கள். தொண்ணூற்றியிரண்டு மற்றும் தொண்ணூற்றியைந்தாம் வருடங்களில் மட்டும் இரு டைரிகள் தேவைப்படும் அளவிற்கு எழுதி இருக்கிறார்.பதினேழு பதினெட்டு வயதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு அலைந்த நாட்களில் சுடுகாட்டில் இரவொன்றை கழித்ததைப் பற்றிய குறிப்பு தொண்ணூறாம் வருட மார்ச் பதினைந்தாம் தேதி அன்று. பின் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் இறுதி வருடம் மெசபடேமியாவில் கழித்த சில மாதங்கள் பற்றி அந்த வருட மே எட்டாம் தேதியில். அகர்கர் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த அன்று அதை சிலாகித்து எழுதி இருக்கிறார்.ரஞ்சி அரை இறுதியில் சச்சினின் இரட்டைச் சதத்தை பற்றிய மகிழ்ச்சியும், அதனால் தமிழ் நாடு தோற்றதைப் பற்றிய வருத்தமும் கலந்த குறிப்பு இரண்டாயிராமாம் ஆண்டில். நூறு பேரகூட இல்லாத ஸ்டேடியத்தில் நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை புரட்டியவற்றில் இவனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

முழிப்பு கொடுக்கும்போது, வழக்கம் போல் கூர்க்காவின் குரல் கேட்டது. ஒன்றரை மணியாகி இருக்கும். டைரியை அருகில் வைத்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கினான். லத்தியைத் தட்டியபடி, இவன் அடுக்ககத்தைத் தாண்டிச் செல்லும் கூர்க்கா தெரு விளக்கின் கீழ் வந்தான், சிவந்த நிறம். படுத்திருந்த இரு நாய்கள் எழாமல் வாலாட்டின. தன் தெருவைத் தாண்டி எட்டாவது க்ராசினுள் அவன் நுழையும்வரை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, படுக்கைக்கு வந்து மல்லாக்காகப் படுத்து, திரையின் விலகல்கள் ஏற்படுத்தும் இடைவெளியில் உள் நுழையும் நிலவின் கீற்றுக்களில், மூன்று மடங்காக மாறிச் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் இறகுகளைப் பார்த்தபடி இருந்தான்.

செங்கல்பட்டு வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுவின் பேச்சு. “ஏன் இவன் கொழந்தையா இருக்கும் போது கலர் கொடுப்பான்,கலர் கொடுப்பான்னு சொல்லி சொல்லியே கொஞ்சமா க்ரீம் தடவினாரு, கைவிரல் தேஞ்சது தான் மிச்சம்” என்று தாத்தி சொல்ல சிரிப்பு. “கோந்தே நல்ல கலர்தான்” இவனை அணைத்தபடி தாத்தா கூறியதற்கு “சும்மா ஒன் பேரன்னு சொல்லாத்தப்பா, அவன் மாநிறம் தான்,அதெல்லாம் எப்படி கலர் கொடுக்கும்,அதுவும் அஞ்சாறு வயசுக்கப்பறம்” என்று அப்பா சொல்ல, “ஏன், இன்னும் வயசிருக்கு அவனுக்கு கலர் குடுக்க, நீ வேணா பாரு” என்று பதிலுரைக்கும் தாத்தா.

படுக்கையிலிருந்து எழுந்து, டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தான். அம்மாவின் அறையில் எந்த சலனமும் இல்லை. மெதுவாக வெளிப்புறக் கதவை திறந்து, இரண்டாம் தளத்திற்கு சென்றான். பேங்க்காரர் வீட்டின் அழைப்பு மணியை மூன்று நான்கு முறை முறை அழுத்தமாக அழுத்தி விட்டு, இரண்டிரண்டு அடிகளாக படிகளில் ஏறி தன் தளத்திற்கு வந்தான். தன் அறைக்குள் நுழைந்து மீண்டும் தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்தான்.

“சொல்லு கோந்தே” என்று எதிர்முனையில் குரல். அறையை நோட்டம் விட்டு அலைபேசியின் திரையை பார்த்தான், அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.அதைத் துண்டித்து விட்டு அலைபேசியை படுக்கையில் போட்டான். தலையை உலுக்கி விட்டு அங்குமிங்கும் நடந்தவன் மீண்டும் அழைப்பு விடுக்க, மீண்டும், “சொல்லு கோந்தே, ரொம்ப நாளா கூப்டிட்டிருகே” மறுமுனையில் அதே குரல். பின்னங் கழுத்து வேர்த்திருக்க, இடது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்திருந்தது. தாத்தாவின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், அணைக்கப்பட்டிருந்தது. இரு அலைபேசிகளையும் அருகே மேஜையின் மீது வைத்துவிட்டு கண்ணை மூடினான். இவன் அன்றே பார்த்தாக வேண்டும் என்று சொன்னதால் கூட்டத்தில் சிக்கி மிதிபட்டு இவனுக்குப் பிடித்த நடிகரின் படத்திற்கான டிக்கெட்களை வாங்கி வந்த தாத்தா. உடலை அரைவட்டமாகக் குறுக்கிக் கொண்டு, போர்வையை முகத்தின் மீது மூடிக் கொண்டான். பசித்தது.

தாத்தா ஊருக்கு விடுமுறைக்குச் செல்லும்போது, கோவிலுக்கு அழைத்துச் செல்லாத நாட்களில் காலையுணவு கணபதி அய்யர் மெஸ்ஸில்தான். போண்டாவைவிட, பிரமாதமான ருசியுடன் இருக்கும், அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் சாம்பாரும், தேங்காய் சட்னியும். சர்வர் மேஜையின் மீது வைத்துச் செல்லும் இரட்டை சட்டியில் இருந்து அவை இரண்டையும் எடுத்து ஒன்றாகக் கலக்கும்போது வரும் மணம். போண்டாவின் விலை என்ன இருந்தது? இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கடை முதலாளியுடன் கொண்டிருக்கும், உண்டு முடித்த பின்பு விரலில் ஒட்டி இருக்கும் எச்சத்தை இவன் உறுஞ்சுவதைப் பார்த்து “இன்னொன்னு சாப்டு கோந்தே” என்று சொல்லும் தாத்தா.பணம் கொடுத்துவிட்டு கிளம்பும்போது “தாத்திட்ட சொல்லக் கூடாதென்ன,” என்று தாத்தா கோரினாலும், மெஸ்சை அடுத்திருக்கும் “பங்க்” கடையில் பன்னீர் சோடா குடித்து விட்டு, மூக்கை எரிச்சலுற வைக்கும் ஏப்பங்களை வீட்டிற்கு வந்த பின்பும் இவன் விட்டுக்கொண்டிருப்பதை வைத்து தாத்தி கண்டு பிடித்து விடுவார்.

எழுந்து உட்கார்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தவன், அது ஏற்கப்பட்டதும் “யாரிது, ஒங்களுக்கு எப்படி இந்த கால் வருது” என்றான்.

“நீ யார கால் பண்ணற கோந்தே”

“இது என் தாத்தா நம்பர் நீங்க யாரு “

“இது ஒன் தாத்தா நம்பர்னா நா ஒன் தாத்தா தான் கோந்தே” குரலை வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அணைக்கப்பட்டிருந்த தாத்தாவின் அலைபேசியை பார்த்தபடி இருந்தான்.

“காலிங் பெல் அடிச்சிட்டு ஓடி வரியே கோந்தே, திண்ணாமலைல பாத்த அந்தப் படம் இன்னும் ஞாபகம் இருக்கா”

அங்கு பார்த்த திரைப்படத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டியை சில சிறுவர்கள், அவர் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கடி அழுத்தி விட்டு ஓடி கேலி செய்யவார்கள். அப்படத்தின் முடிவில் அழ ஆரம்பித்த தாத்தி, வீடு வந்து சேர்ந்த பின்னரும் அதை நிறுத்தாமல் தொடர, “சாரதே, கரையாதே, சாரதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் தாத்தா.

“.. ஹவ் டூ யூ.. .. என்ன”

“ஒப்ளிக்ஸ் இன்னும் குண்டா இருக்கானே கோந்தே” சிறுவயதில் ஓபிலிக்ஸ் குறித்து “என்னமா குண்டா இருக்கான்” என்று கேட்டு , “ஹி இஸ் நாட் ஃபேட், ஜஸ்ட் வெல் ஃபெட்” என்று அதற்கு அந்தக் கதைகளில் ஓபிலிக்ஸ் சொல்லும் வாதத்தையே இவன் பதிலாக சொல்வதற்கு “அதெல்லாம் இல்ல கேட்டியா, சரியான திண்டி அவன். கடோத்கஜன், பகாசுரன்லாம் அவன்ட்ட பிச்ச வாங்கணும்” என்று தொடர்ந்து சீண்டுவார்.

“தனியா கஷ்டப்படறியே கோந்தே, தாத்தா எப்பவுமே ஒன் கூடத் தான் இருக்கேன்” வருடும் குரல்.

ஜன்னல் கம்பிகளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு “எங்க தாத்தா என் கிட்டக்க இருக்க, நீ இல்லாம வீட்ல இருக்கவே முடியல. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு, பீச்சுக்கு போலாம்னா அதுவும் முடியல”

“ஒன் கிட்டதான் இருக்கேன் கோந்தே”

“மெடிடேஷன், இல்ல யோகா எதாவது பண்ணலாம்னு இருக்கேன்”

“நா இருக்கறப்ப அதெல்லாம் எதுக்கு ஒனக்கு, தாத்தா ஒண்ணு சொல்லட்டா எல்லாம் சரியாப் போயிடும்”

“என்ன தாத்தா “

“என் கிட்ட வந்துடறியா கோந்தே”

“…”

“என்ன கோந்தே, கணபதி ஐயர் கூட இங்க ஒன்ன கேட்டுட்டிருக்கார்”

“…”

“மாடிக்கு வா கோந்தே”

“எங்க…”

“மாடி கிட்டக்கதான் கோந்தே, வா”

அழைப்பை துண்டித்தவன் அலைபேசியை அணைத்து மேஜையில் மீது வைத்து விட்டு உடலைக் குறுக்கிக் கொண்டு போர்வையை முழுதும் போர்த்தியபடி படுத்தான். வெளியே செல்ல முடியாத மூச்சுக் காற்றின் சூடு. முகப்பகுதியில் மட்டும் போர்வையை சற்று விலக்கும்போது நான்காம் வகுப்பில் படிக்கும்போது கற்றுக் கொண்ட, இவனுக்கு மிகவும் பிடித்தமான நடிகரின், அபிமான மகானைப் பற்றிய – அந்த மகானாக அப்போதுதான் திரைப்படமொன்றில் அவர் நடித்திருந்தார் -, இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக உச்சரித்திராத ஸ்லோகத்தின் நான்கு வரிகளை அட்சரம் பிசகாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

கூர்க்காவின் குரல் மீண்டும் அருகில் ஒலிக்க, எழுந்து முணுமுணுத்துக் கொண்டே ஜன்னலருகில் சென்று கூர்க்கா அடுக்ககத்தை தாண்டிச் செல்வதை பார்த்தபடி நின்றிருந்தவன், “கோந்தே என் கிட்ட வந்துடு, ரொம்ப ஈஸி மாடிக்கு மட்டும் நீ வந்தா போதும்” என்ற குரலை கேட்டதும், ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டான். மிக அருகில் கேட்கும் குரல், கழுத்துப் பின் பக்கம் தடவிச் செல்வது பேசுபவரின் மூச்சுக் காற்று.

“வா கோந்தே, பயப்படாதே”.

ஸ்லோக வரிகளை உச்சரிக்காமல் இப்போது உதடுகள் வெறுமனே அசைந்து கொண்டிருந்தன. மீண்டும் அவற்றை மீட்டெடுக்க முடியாமல் ஜன்னல் கம்பிகளின் மேல் கண்களை இறுக்க மூடியபடி முகத்தை சாய்த்துக் கொண்டு கம்பிகளில் வழிந்து உதடுகளில் பட்ட விழிநீரை நாவால் வருடியவன், உள்ளங்கைக்களுள் கம்பிகள் நெகிழ ஆரம்பிக்க தலையை பின்னிழுத்துக் கொண்டான். நெளியும் இரு கம்பிகளின் இரு முனைகளிலும் சிவப்புக் கண்களும், பிளவுபட்ட பச்சை நாக்கும் கொண்ட கரு நாகங்கள் இவனை அவர்களுடன் சேர அழைத்தன.

கம்பிகளை விட்டு விட்டு பின்னகர்ந்தவன் அருகே இருந்த நாற்காலியை பற்றிக் கொண்டான். ஜன்னலின் அனைத்து கம்பிகளும் இவனை நோக்கி இரு முனைகளிலிருந்தும் நாவை நீட்டியபடி நெளிந்துகொண்டிருந்தன. இருபது கம்பிகள், நாற்பது கருநாகத் தலைகள், உள்ளத்தைத் தீண்டும் நாற்பது நாக்குகள். நாக்கின் இரண்டு கவையும் தனித்தனியாக, அதே நேரம் ஒத்திசைவாக “மாடிக்கு நாப்பது அடி வெச்சா போதும் கோந்தே” என்று ஒலித்தன. எண்பது குரல்கள்.

நாற்காலி பிடியிலிருந்து நழுவத் தடுமாறியபடி இன்னும் பின்னகர்ந்தவன் அருகிலிருந்த மேஜையை பற்றி அதனருகில் தரையில் அமர்ந்தான். நாகங்களின் அழைகுரலின் உறுதியும், சத்தமும் அதிகமாகிக் கொண்டிருக்க, செவிகளை கைகளால் மூடிக்கொண்டு முட்டியை முகத்துடன் ஒட்டிக்கொண்டவன் கண்களை மூடும் முன் அவன் பார்வை மேஜை மீதிருந்த தாத்தாவின் அலைபேசியின்மீது விழுந்தது. மூடிய இமைகளுக்குள் ரோஸ், சிவப்பு நிற ஒளிச் சிதறல்கள் சர்ப்பங்களாக மாறி அவனுள் பரவின.நாகங்கள் உள் நுழைந்து கொண்டே இருக்க, உடலெங்கும் உச்சாடனம் போல் சர்ப்பங்களின் அழைப்பு ஒலி. மிகுந்த பிரயாசைப்பட்டு கண்களைத் திறந்தவனின் உடலும் மனமும் உள்ளிருக்கும் குரல்களின் தாள கதிக்குப் பழக ஆரம்பிக்க, மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மேஜையின் மீது தலையை கவிழ்த்துக் கொண்டான்.

“வா கோந்தே, ஏந்திரு மாடிக்குப் போலாம் “, “தாத்தா ஒன் கூடவே தான் வரேன் ஏந்திரு” நரம்புகளாக மாறி விட்ட குரல்கள்.

எழுந்து அறைக் கதவை நெருங்கியவன், கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் இவன் வீடிருக்கும் திசைச் நோக்கி சுழலவும் அறையில் ஓரிரு கணங்கள் பரவிய வெளிச்சத்தில் சுவற்றில் நெளியும் சர்ப்ப நிழல்களைப் பார்த்தான். மீண்டும் தன்னுடலை உந்தித் தள்ளி மேஜையருகே வந்து ஒரு கையினால் அதை இறுக்கப் பற்றிக் மறு கையில் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் அதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுழற்சியில் மீண்டும் அறை தற்காலிகமாக ஒளி பெற்றது. தரையில் அமர்ந்து அலைபேசியின் பின்பகுதியை, “கோந்தே, என்ன கோந்தே பண்ற” என்று வந்த குரல்களினூடே கழற்ற முயன்றான். பாதி பிரித்திருந்த நிலையில் ஆங்காரமான சீறல் ஒலி கேட்க உடல் விதிர்த்தவனின் கையிலிருந்து அலைபேசி நழுவி விழுந்த வேகத்தில் தரையில் உரசியபடி ஜன்னலருகே சென்றது. விழும் அலைபேசியை பிடிப்பதற்காக குனிந்து முழங்காலிட்டு அதனருகே சென்றவன் தலையை உயர்த்தி ஜன்னலை நோக்கினான். கருநாகங்களின் கண்கள் இன்னும் சிவந்திருக்க, நீள ஆரம்பித்திருந்த நாக்குகள் ஜன்னல் சுவற்றில் இறங்கியபடி அலைபேசியை நோக்கி நீண்டு கொண்டிருந்தன. கேவல் ஒலி எழுப்பியவாறே, அலைபேசியை எடுத்துக் கொண்டு தவழ்த்தபடியே அறையின் மூலைக்குச் சென்றவன், பின்பகுதியை முற்றிலும் பிரித்தெடுக்க நடுங்கும் விரல்களால் இரண்டு மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பிரித்தபின் அதைத் தூக்கி எறிந்தவன், சீறல் ஒலி இல்லாதிருக்க, ஜன்னலை பார்த்து கூச்சலிட்டான்.

ஒவ்வொரு கருநாகத்தின் வால் பகுதியிலும் இருந்த இருந்த தலை மற்றொன்றின் வால் பகுதி தலையுடன் இணைய, இருபது தலைகள் கொண்ட ஒரு பெரு கரு நாகம், அனைத்து பத்திகளும் விரித்து இவனை நோக்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று பாம்பு மாத்திரைகளை அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி பற்ற வைத்து ஒரு உருவத்தை உருவாக்குவதைப் போல். அதன் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தவன் கணுக்காலில் ஏதோ சுற்ற ஆரம்பித்ததை உணர்ந்த அதே கணம் அறைக்கதவின் மீது எறியப்பட்டான். பின்னந்தலையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவன் நீண்ட கயிறு போல் ஒன்று அலைபேசியை தன்னுள் சுற்றிக் கொண்டு பின்வாங்குவதைப் கண்டான். நாக்குகளும் இணைந்து விட்டனவா. உள்ளங்கைகளையும் கால் முட்டிகளையும் தரையில் தேய்த்துக் கொண்டே அதனருகில் சென்றபோது கிலுகிலுப்பை ஒலி கேட்டது. “ராட்டில் சிநேக்” ஆஸ்திரேலியாவில்தான் இருக்கும், கருநாகங்களுக்கும் இத்தகைய வால் உண்டா. மீண்டும் உடலை உந்தி அதைப் பற்றினான்.

சிறு வயதில் வீட்டில் வளர்த்த முயல்களையும் நாயையும் தூக்கும்போது அவற்றின் உடலில் உருவாகும் நெளிவுக்கு மாறாக, சொரசொரப்பான, வெதுவெதுப்பான சருமம், வளைந்ததில் உட்சதையை ஊடுருவி பிய்த்து மறுபுறம் வெளியேறி விடும் வேகம். உள்ளங்கையை துளைத்து வெளி வந்திருக்கும் வால் முன்னே செல்ல அதன் பின்னால் எழுத்துச் செல்லப்படுகிறான். கையை உதறி உள்ளங்கையை முகத்தினருகில் கொண்டு சென்றபோது குமட்டியது, எந்தப் பிளவும் இல்லை. ஜன்னலருகே சென்று விட்ட வால்பி ன்வாங்குகிறதா அல்லது சுருங்குகிறதா. மீண்டும் அருகே சென்று அதைப் பற்றி வளைத்து அலைபேசியை பிரித்தெடுக்க முனைய, நாகத்தின் இருபது தலைகளும் சீறியபடி முகத்தினருகே வந்து நாவை நீட்டின. தேங்கிய மழைநீரில் மிதக்கும் மட்கிய இலைகளின் மணம். வளர்த்தால் பணம் வருமென்று இவன் பள்ளிப் பருவத்தில் நாலைந்து ஆண்டுகள் இவர்களின் போர்ஷன் கதவையொட்டி பதியம் செய்யப்பட்டு, கதவின் உயரத்திற்கு வளர்ந்து வாசலை போர்த்தியபடி பரவியிருந்த மிகப் பெரிய -வெற்றிலை போன்ற- “மணி பிளாண்ட்” இலைகள். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடியவனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்த “மணி பிளாண்ட்டின்” ஒற்றை விழியுடைய பச்சை இலைகள் நாக பத்திகளாக மாறி உடலை முழுதும் போர்த்தின. குழைய ஆரம்பித்த உடலின் இடுப்புக்குக் கீழ் இணைந்து ஒன்றாகிவிட்ட இரு கால்கள். இடது கை, வலது மணிக்கட்டை பற்றி தன்னுள் கோர்த்துக் கொள்ள முயன்றதை மிகுந்த பிரயாசையுடன் விலக்கி மீண்டும் கையை நீட்டி துழாவியவனுக்கு, அலைபேசி மீது பிடி கிடைக்க, வேகமாக இழுத்து பின்புறம் வீசி எறிந்து அது சுவற்றில் மோதி தரையில் விழும் ஒலியை கேட்டபடி கீழே சாய்ந்தான்.

மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தபோது உடலைச் சுற்றி எதுவும் இல்லை, கால்களை அசைத்துப் பார்த்தான். கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுற்றுக்காக காத்திருந்தான், சுவற்றில் நெளியாத நிழல் கம்பிகள். மெதுவாக எழுந்து சென்று அறையின் மறுமுனை சுவற்றின் கீழ் கிடந்த அலைபேசியை எடுத்தான், அதனருகே கழன்று வந்திருந்த பேட்டரி. சுவற்றில் சாய்ந்தபடி “சிம்” கார்ட்டில் ஆட்காட்டி, கட்டை விரல்களை வைத்து எடுக்க முயன்ற போது சாம்பார், சட்னி வாசம். எச்சிலில் இனிப்பு பூந்தியின் சுவை. “தாத்தாவ மறந்துடாத கோந்தே” என்று யானையின் பிளிறல். சிம்மை நீக்கியபின் மேஜையருகே சென்று அதன் மேலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தரையில் அமர்ந்தான்.

காலை எழுந்திருக்கும்போது உடலெங்கும் வலி, மணி ஒன்பதரை ஆகியிருந்தது. படுக்கையின் ஓரத்திற்கு படுத்தபடியே நகர்ந்து, கால்களை மெதுவாக தரையில் வைத்து, குனிந்தபடி அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து ஜன்னலருகே சென்று அதன் கம்பிகளை கைமுட்டிகளால் தட்டினான். கம்பிகளை பற்களால் மெல்ல கவ்வும்போது நெகிழ்வு, விலகிப் பார்க்க, அசையா கம்பிகள். அறையிலோ, உள்ளங்கைகளில் எந்த மணமும் இல்லை. கவிழ்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தியபின், இரு ஜன்னல்களையும் மூடி படுக்கையில் அமர்ந்து கூர்ந்து கேட்டவனுக்கு தெருவில் செல்லும் வண்டிகளின் மெல்லிய ஒளியைத் தவிர வேறெந்த குரலும் ஒலிக்கவில்லை. ஜன்னல்களைத்’ திறந்து அறையெங்கும் பார்வையை செலுத்தினான். மேஜையின் மேல் உடைந்த சிம், அறையின் மூலையில் அலைபேசி, அதன் பேட்டரி. அனைத்தையும் பொறுக்கி எடுத்து படுக்கையின் மீது போட்டு விட்டு மீண்டும் ஜன்னலருகே சிறிது நேரம் நின்றிருந்தபின் முகம் கழுவ குளியலறைக்குச் சென்றான். தண்ணீரை முகத்திலறைந்த பின் கண்களைத் திறக்க, வாஷ்பேசினின் துளைகள் பாம்பின் கண்களாக மாறின. விலகி குளியலறை கதவைப் பற்றியபடி நின்றான். திறந்திருக்கும் குழாயிலிருந்து வெளிவரும் நீர், துளைகள் வழியே உள்ளே சென்று கொண்டிருக்க, பேசினின் அடிப் பகுதியில் இருந்த ரப்பர் குழாயை குதிகாலிட்டபடி அமர்ந்து அசைத்துப் பார்த்து வெளியே வந்து முகம் துடைத்து விட்டு படுக்கையில் அமர்ந்தான்.

வாக்கு கொடுத்திருந்தாலும், கர்ணன் நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை செலுத்தி இருக்க வேண்டுமென்று தாத்தாவிடம் சிறுவயதில் ஆதங்கத்துடன் புலம்புபவனுடைய தனிப்பட்ட பாரதத்தில் இரண்டாம் முறை அஸ்திரத்தை செலுத்தும் கர்ணனே வெற்றி பெறுவான். “இந்த வாட்டி நெஞ்சுக்கு தான் குறிவைப்பான் தாத்தா”. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்கொண்ட மிகப் பெரும் அவமானத்தை ஆற்றுப்படுத்த, “எதோ இந்த மட்டோட விட்டுச்சே, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்கோ,” என்று அடுத்த சில மாதங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

துணிகள் வைக்கும் மர அலமாரியில் இருந்து பிளாஸ்டிக் பையொன்றை எடுத்து படுக்கையில் தாத்தாவின் அலைபேசியின் பகுதிகளை அதில் போட்டான். பின் அணைக்கப்பட்டிருந்த தன் அலைபேசியை எடுத்து அதை இயக்கி புகைப்பட தொகுப்பில் இருந்த தாத்தாவின் புகைப்படங்களையும், அவருடைய அலைபேசி எண்ணையும் அழித்து அதில் இருந்த மற்ற புகைப்படங்களையும், தொடர்பு எண்களையும் மடிக்கணினிக்கு மாற்றிய பின் அணைத்து அதன் சிம்மை வெளியே எடுத்தவன், தன் அலைபேசியையும் பையினுள் போட்டான். மேஜைக்கு கீழிருந்த அட்டைப்பெட்டியை எடுத்து படுக்கையின் மீதிருந்த இரண்டு டைரிகளை அதனுள் வைத்துவிட்டு, உடையணிந்த பின், பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு, அட்டைப்பெட்டியை காலால் உந்தித் தள்ளியபடி அறையை விட்டு வெளியே வந்தவன் “ம்மா, நா வெளில போறேன் புது மொபைல் வாங்கணும்” என்று சொல்ல “என்னடா நாலஞ்சு மாசம் முன்னாடி தானே தாத்தா பென்ஷன் அரியர்ல வாங்கி தந்தாரு,” என்றாள் அம்மா.

“மொபைல்ல ப்ரச்சன “

“பிளாஸ்டிக் பைல என்ன, தாத்தா டைரிலாம் எங்க எடுத்துட்டுப் போற”

“எடத்த அடச்சிட்டிருக்கு மா, கொசு வேற மேயுது கடிச்சு கிடிச்சு வியாதி வந்துதுன்னா”

“கடைல போடப்போறேன்னா அவனே வந்து எடுத்துட்டுப் போவான், போம்போது சொல்லிட்டுப் போ எதுக்கு நீ தூக்கிட்டு”

துணிக்கடைகளில் தரும் காடா பையில் டைரிகளை போட்டடைத்து சமயலறைக்குள் சென்று வத்திப்பெட்டியை எடுத்துக் கொண்டு “கடேல போட்டுட்டா மட்டும்..” என்று சொல்லியபடி கிளம்பியவனிடம் “என்னடா காதுல விழல, சத்தமா சொல்லு” என்று அம்மா கேட்டாள்.

‘ஒண்ணுலமா, பதினொண்ணு மணிக்குள்ள வந்துடுவேன்’ என்று பதில் சொல்லிவிட்டு இவன் கிளம்ப, முன்னறையில் இருந்த லேண்ட்லைனிற்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசிய அம்மா,’ஹலோ, ஹலோ, யாரு வேணும்’ என்று கேட்டு கீழே வைத்து விட்டு ‘யாருன்னு தெரியலையே, எதுவும் பேச மாட்டேங்கறாங்க,
தானா கட் ஆகிடுச்சு’ என்றாள்.

 

சிந்தாமணி – கன்யா சிறுகதை

கன்யா

தன்னைச் சுற்றிலுமசையும் ஒலிக்கோவைகளை அனுஷா பார்த்தாள். தான் ஒலியை எவ்வாறு பார்க்கிறோம் என்ற வியப்பை மீறி அது ஒளியென எழுவது அமானுஷ்யமாக இருந்தது. அதைத் தழுவி, நல்ல வார்த்தைகள் சொல்லி அகற்றிக் கொண்டே வண்ணங்கள் கொண்ட ஒளியாக அது பரிணமித்தது. இமைகளினூடாக பயணிக்கும் உருவமற்ற உயிரிகள். சப்தமில்லா ஒலி-ஒளிக் கோவைகள். தன் உடல் கனத்து, தான் எழும்ப முடியாமல் தவித்தாள். உளறலாகக் குழறி வார்த்தைகள் வந்தன. காலம் அறியாமல் அந்த பயங்கரத்தில் பயணிப்பதாக உணர்ந்தாள். உடல் முழுதும் வேர்வை பொங்கிக் கொண்டிருந்தது. இதில் பயப்பட ஏதுமில்லை என்று தனக்குத்தானே  சொல்லிக் கொண்டு, ‘ரவி,ரவி’ என அழைத்தாள்.

மிகச் சிரமப்பட்டு கண்களைத் திறக்கையில் ரவி அங்கே நின்றிருப்பது அவளைச் சமனப்படுத்தியது. ஆனால், அவன் சலனமற்று, ஒரு வார்த்தைகூட கேட்காமல் ஏன் என் படுக்கையில் ஏறுகிறான்? ஏன் என் கைகளைப் பற்றுகிறான்? ஏன் ஒரு மாதிரி சிரிக்கிறான்?

அனுஷா சக்தி அனைத்தையும் திரட்டி எழுந்து கொண்டாள். ரவியைப் பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது. தான் அவனை பயமுறுத்தி விட்டோம் என நினைத்தாள்.

‘ஒண்ணுமில்ல, ரவி, பயந்துட்டியா? ஏதோ கெட்ட கனவு. கொஞ்சம் வாட்டர் கொடேன்”

ரவி நகரவுமில்லை, கைகளை விடவுமில்லை.

‘சரி, நானே எடுத்துக்கிறேன். நீ போய்த் தூங்கு’

‘எனக்கு ஒண்ணுமில்லைடா. என்ன விடு, தண்ணி குடிக்கணும்டா’

‘அனுஷா, உனக்குப் புரியலையா? இல்லாட்டி நடிக்கிறயா?’

‘எனக்கு என்ன புரியணும்? நீ ஏன் என்னவோ மாரி பாக்கறே?’

‘சாயந்தரம் சொன்னது நினைவில்லையா?’

“என்னடா, சொன்ன?”

‘முதல்ல இந்த “டா”வை நிறுத்து. நான் இன்னொரு தரம் சொல்லி கேக்கணுமாக்கம் உனக்கு’

“ரவி, நானே ஏதோ சொப்னம் கண்டு பயந்துண்டு உக்காந்திருக்கேன். ரா வேளை, உனக்கு தூக்கம் வல்லைன்னா, போய் ஏதாவது படி. தண்ணீ கொடுக்காம என்ன ஒரு வாதம் பண்ணிண்டிருக்கே?”

‘அனுஷா, நீ எதுக்கும் கவலைப்படாதே. இந்த வயசுக்கு நம்மை எதுவும் கட்டுப்படுத்தாது.’

“டேய், படுபாவி, இவ்வளவு மோசமா நீ?”

‘என்ன மோசம் இதிலே? ஒரு முப்பது வருஷ சுழற்சிக்கு அப்புறம் பிறவியின் ஐடென்டிடி மாறிடும் தெரியுமா?’

“அதனாலே?”

‘நீ ஜாதகமெல்லாம் பாக்கறே. முப்பது வயசு வரைக்கும் லக்னத்திற்கு இம்பார்டென்ட். அப்புறம் ராசிதான்னு சொல்லுவ இல்லையா நீ?’

“என்ன சொல்ல வரடா? சாரி. என்ன வேணும் உனக்கு?”

‘நீதான் வேணும்’

“செருப்பு பிஞ்சிடும், ராஸ்கல். போடா உன் ரூமுக்கு. நாயே”

‘கத்தாதடி’

அனுஷாவின் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. நாலு நாட்களாகவே ரவி சரியாகத்தான் இல்லை. ஆனால், விபரீத கற்பனைகளை வளர்த்துக் கொண்டு அவளையே இப்படியெல்லாம் கேட்பான் என்றால் யார் நம்பப் போகிறார்கள்?

படபடப்பு  தண்ணீர் குடித்தும் அடங்கவில்லை. இலக்கில்லாமல் விளக்கை  அணைத்தாள்; மீண்டும் பொருத்தினாள். படுக்கையிலிருந்து எழுந்து பாதி செய்து வைத்திருந்த மணல் ஓவியத்தைப் பார்த்தாள். அவள் செய்ததுதான்.

முதல் ஓவியம் ஒரு பாம்பும் தவளையும். பாம்பை பச்சை நிறத்திலும், தவளையை  வெளிர் பச்சை கலந்த கிரே நிறத்திலும் அமைத்திருந்தாள்.

இரண்டாவதில் பாம்பு அடர் நீலத்திலும், தவளை அடர்ந்த பச்சையிலும். ஆனால் தவளையின் பக்கவாட்டில் சிறகுகளும், அதன் கால்களில் காணப்பெற்ற கூரிய நகங்களும்… அவள் வரைந்ததுதான். ஆனால் எது இப்படி வரையத் தூண்டியது?

பாதி வரைந்திருந்த மூன்றாவதைப் பார்த்தாள். ஆவேசத்துடன் அதில் பாம்பை சிறுகச் செய்தாள், தவளையை கருட மூக்குடன் பெரிதாகவும் சிறகுகளோடும், நகங்களோடும் இப்பொழுது அமைத்தாள்.

‘தான் எந்த விதத்திலாவது ரவியைத் தூண்டினோமோ? தனக்குக்கூட இப்படியெல்லாம் தோன்றுமா என்ன? யாரிடம் கேட்பது? யாரிடம் சொல்வது?’

இரு நாட்களாக வீட்டில் அரவமில்லை. பயங்காட்டும் அமைதிதான்.

‘ரவி ஏன்  அப்படிக் கேட்டான்? இத்தனை வருடத் தனிமை அலுத்துவிட்டதா, திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் எதனால் இப்படித் தூண்டப் பெற்றான்? தன் தயவு அவனுக்கு எப்போதுமே தேவை என்ற சுயநலத்தால் உந்தப்பட்ட சூழ்ச்சியா, படிப்பிலும், சிந்தனையிலும் தன் இத்தனை வருடங்களைச் செலவிட்டுவிட்டு இன்று அவனின் சுய தேவைகளுக்குக்கூட என்னிடம் கேட்க நேரிடுகிறதே என்ற தன்னிரக்கமா, எனக்கும் கல்யாணம் ஆகாத நிலையில் மரபுகளை மீறி வெல்வதில் கிடைக்கும் நிறைவா,  கிட்டத்தட்ட அறுபது வயதான நிலையில் உடலை, உணர்வை புரிந்து கொள்ளும் முயற்சியா, மனப் பிறழ்வா?அனுஷா புரியாமல் தவித்தாள்.முற்போக்கான தன்னையே இது இப்படிப் பிரட்டிப் போடுமா? ஒருக்கால் நான் அதிகமாக வேஷம் போடுகிறேனோ? நியாயங்கள் எப்பொழுது மீறப்படுகின்றன? இதை நியாயம் என்ற வரைமுறையில் கொண்டு வர முடியாது. நியதிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.’ எண்ணங்களின் பளுவில் அனுஷா தவித்தாள்.

“பிறரை பாதிக்காத வகையில் நியதிகள் மீறப்படக்கூடாதா என்ன?” இப்படி ஓடியது ரவியின் சிந்தனை.

‘மனிதர்கள்தான் எத்தனை விதம்? யாரையுமே யாருமே தெளிவாகவோ, முழுதாகவோ புரிந்து கொள்வது இயலாத ஒன்றுதானோ? சந்தர்ப்பத்தைப் பொறுத்து நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் நடந்து கொள்கிறார்களோ? ஆனால், நல்லதும், கெட்டதும் எப்படித்தான் வரையறுக்கப்படுகிறது? பெரும்பாலோர் செய்வதால் ஒரு செயல் ஏற்றுக் கொள்ளப்படலாம்; அதனாலேயே அதை நல்லது என்று ஏன் நினைக்க வேண்டும்? அதே கோணத்திலேயே அதைக் கெட்டது என்று சொல்வதும் எவ்வாறு பொருந்தும்? ஒழுக்கம் மிகவும் அவசியம். கரைகளுக்குள் நடந்தால் ஆறு; கட்டுடைக்கும் ஆறுகள் இல்லையா என்ன?அதை அழிவு என்றே அறிகிறோம்; இயற்கையின் மறுபரிசீலனை என எண்ணம் சென்றாலே விளைவுகள் எப்படி இருக்கும்? விளைவையும், அழிவையும் நாணயத்தின் இரு பக்கங்களென வைத்தவர் யார்? அதை ஏன் சீண்டிப் பார்க்கக்கூடாது?’ இருதலைக்கொள்ளி எறும்பாக அனுஷா எண்ணங்களில் தவித்தாள்.

“ நான் என்ன சொல்லிவிட்டேன், இவள் இப்படி நடந்து கொள்கிறாள்? ரூமில் அடைந்து கொண்டு, குளிக்காமல், சமைக்காமல், சூன்யமான வீடாக இதை ஒரு இரு நாட்களில் செய்து விட்டாள். எனக்கே நான் வியப்பாக இருக்கையில் என் பக்க விஷயங்களை ஏன் பார்க்க மறுக்கிறாள்? இத்தனை மர்மமான பெண் என  நான் நினைக்கவில்லையே. நான் அறிந்தவள், விசாலமான மனது உள்ளவள். பரந்த பார்வையும், புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவள். அது அத்தனையும் போலி. எங்கிருந்தோ சீறிக் கொண்டுவரும் இந்த விலக்கம் என்னை அவள் முன் காமுகனாக நிறுத்திவிட்டது போலும். ஆனாலும், நான் என்ன  சரியாகத்தான் கேட்டேனா? அப்படியெல்லாம் பேச எனக்கு உரிமை உள்ளதா? முழு நினைவுடனும், என் உள் மனச் சம்மதத்துடனும்தான் நான் அவ்வாறு கேட்டேனா? மனிதனின் ஆதி இச்சை இந்த வயதில் வெளிப்பட்டு என்னை இம்சிக்கிறதா? அதற்கு அனுஷாதான் பதிலா? வயதும் அதிகம், வருமானமும் குறைவு என்ற நிலையில் வெளியே வடிகாலைத் தேட முடியாதென நான் போட்ட நாடகமா? இதன் மூலம் வெல்லும் ஆணை நிலை நிறுத்தும் பேரவாவா? என் இளமையில் நான் கட்டிக்காத்த தேஜஸ் இன்று என்னவாயிற்று? அதை அன்று கொண்டாடிய உலகம் இன்று என்னைப் பாராட்டாத ஏக்கமா? எத்தனை மனதைக் கீறிக் கொண்டாலும், அதை உரித்து உரித்துப் பார்த்தாலும் மெலிந்த, ஆனால் இடையறாத இந்த ஆசையை என்ன செய்ய?”

‘குமாரில பட்டரின் மனைவி ஏன் ஆதி சங்கரரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்? இரண்டு ஒன்றாகி அதுவும் பூஜ்யம் என்றாவதுதான் சுழற்சியின் நியதியோ? ரவி இன்றுவரை இப்படியா நடந்து கொண்டான்? எவ்வளவு கண்ணியம் கொண்டவன்? தன்னிடம் என்றில்லை, வேறு யாரிடமும் அவன் உண்மையான துறவு மனப்பான்மையில்தான் நடந்து கொண்டான். எனக்காவது ‘ஜோல்னா சுந்தரின்’ நட்பு இருந்தது. அது கசந்து தனிமையே இனிமை என நான் வாழ்கிறேன். அதுவும் இல்லாத ரவி, இப்பொழுது ஒரு பெண்ணை  இப்படியெல்லாம் கேட்கிறானோ? அதுவும் அவன் அறிந்த, நெருங்கும் நிலையில் உள்ள பெண் நான் என்பதாலா? என்னால் இதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஏற்க வேண்டாம், ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? புரிந்த பிறகு புரிய வைக்கும் முயற்சி அயர்ச்சியைத்தான் தரும். இது விபரீத விளையாட்டு. ஆம், விரோதமானது’

“நானும் அமைதியாக இல்லை,அவளும் அமைதியாக இல்லை. பரபரப்பற்ற, மெத்தனமான, என்ன ஒரு வாழ்க்கை இது? ஏதோ ஒரு ஆர்வத்தைத் தூண்டும் செயல், ஒரு சேலன்ஞ், ஒரு விபரீதம், ஒரு நிகழ்வு இதை எதிர்பார்க்கிறோம்ன்னு தோண்றது. அதை நான் ஒத்துக்கறேன். அவ மறைக்கிறா” ரவி தன் நினைப்பை தானே அருவெறுத்தான். “அவளும் அப்படியே நினைக்கிறாள், தன்னிடம் நடிக்கிறாள் என்று எப்படியெல்லாம் இந்த மனம் தன் பக்க நியாயத்தைப் பேசுகிறது. இப்படிக்கூட கீழே நழுவுமா தன் எண்ணம்?”ரவி செய்வதறியாமல் திகைத்தான்.

கண்ணை மூடி தியானித்தாலும் அமைதியில்லை. பிடித்த, படித்த நூல்கள்  இரசிக்கவில்லை. ஓவியப் பள்ளியில் அவன் படித்ததில்லை. ஆனால், பெண் ஓவியங்கள் வரைகையில் அவனுக்கு மாடல்கள் என்று சிலர் வருவார்கள் அப்பொழுதெல்லாம் அவன் சிறிதாவது சலனப்பட்டிருப்பானா? உடலை மீறிய உணர்வு ஆர்ப்பரித்து எழுகிறது இப்பொழுது. நிறைவடையாத ஏக்கத்திற்கு  இப்படியா அவன் பலியாகப் போகிறான்?

‘ஒரு ரிதமில் செல்லும் வாழ்வு பாதுகாப்பானது, ரவி. மனிதன் மட்டுமல்ல, பல பாலூட்டிகள் இந்த நியதியில் வாழ்கின்றன,’ என்று தானே ஆரம்பித்தாள் அனுஷா.

“என்றாலும், சில சிம்பென்சிகளுக்கு’எடிபஸ்’ இருக்கிறது.”

‘ஆனால்’இன்செஸ்ட்’ சகிக்க முடியாதது, ரவி’

“ரோமானிய வரலாற்றை, கிரேக்க ஆக்கங்களை படிக்காதவளா நீ? கிளாடியஸ் மணந்த அஃப்ரீனா அவன் அண்ணனின் மகள்.”

‘ முட்டாள், அந்தக் காலகட்டத்தில நாம் வாழல்ல இப்போ.’

“சில மனித வாசனைகள் மாறாது, அனு”

‘நீ படித்த ரிக் வேதம் இன்செஸ்டை பாவம்ன்னு சொல்லலையா?’

“பாவம், புண்ணியம் இவைகளின் இடைவெளி மிகவும் சன்னமானது. இப்போ பாரு, பூஜ்யத்தோட பூஜ்யம் கூட்டிப் பாரு, பூஜ்யம்தான் வரும்.”

‘கசன் தேவயானியை மணக்க சம்மதிக்கவில்லையே, ரவி?’

“ஆனால், அவள் நேசம் பொய்யில்லையே?”

“ஃபோஸ்போலின் தசரத ஜாதகா படிச்சவ தானேநீ”

‘எனக்கு நினைவில்லை’

“அது புத்தர்கள் எழுதிய இராமாயணத்தின் ஆங்கில மொழியாக்கம்”

‘அதை எதுக்கு இழுக்கற இப்ப?’

“நான் சொல்லப் போறதில்ல. இப்ப உனக்குப் புரியும்”

‘எனக்குப் புரிய எதுவுமில்ல’

“உனக்கு இஷ்டமில்லேனா அது வேற. சும்மா மாரல் அது இதுன்னு”

‘இந்த விவாதங்கள் முடிவடையுமா என்ன?’

“உனக்கு ஒரு கதை சொல்லவா?   நம்முடைய நாட்டுப் புறங்கள்ல சொல்லுவா” என்றான் ரவி.

‘உன் கட்சிக்கு  சார்பா சொல்லப் போற; சொல்லு, கேப்போம்’

“ஆதியில கடவுள் அல்லது இயற்கை அல்லது உனக்குப் பிடிச்ச ஒண்ணுன்னு வைச்சுக்கோ; ஆணும், பெண்ணுமா ஒன்னாத்தான் வந்தா இந்த உலகுக்கு; உன் கணக்குப்படி உறவுக் குளறுபடி ஆயிடும். சிவன் என்ன பண்ணாராம் தெரியுமா, பெரிய புயலைக் கொண்டு வந்தார். அவா அவா மரம், மலை, ஆறு போல பன்னிரண்டரை பொருட்கள் பின்னாடி பயந்துண்டு ஒளிஞ்சுண்டா. புயல் அடங்கித்து. பன்னன்டு குழு அப்படி உருவாயித்தாம். அந்த அரைக் குழு மூணாம் பாலினமாக நின்னுடுத்தாம். வேடிக்கையான பிரிவினை- நம்ப வைச்ச நாடகம்” என்றான் ரவி.

‘நடிப்பாவே இருக்கட்டுமே. நடிச்சு நடிச்சு நாம அதாஆயிட்றோம். பூவைப் பார். மகரந்தம், சூலகம் பக்கம் பக்கம் தான். ஆனா, வேறொரு பூவிலிருந்துதான் மகரந்தம் வந்து சேரும், ரவி’

பல நாட்களுக்குப் பிறகு ரவி ஒரு ஓவியம் வரைந்தான். மூன்று கண்கள்  மட்டும் இருந்த அதில் அடர் புருவத்தின் கீழே அமைந்திருக்கும் கண்கள் மூடியிருக்க அவைகளின் நடுவில் இருந்ததிலிருந்து அனலும், புனலும் பெருகியது.

தொடந்து வரையும் அனுஷா இரு ஓவியங்கள் வரைந்தாள்; சப்பாத்திக் கள்ளியில் முழு ரோஜா.

மற்றொரு ஓவியத்தில் மரச் சருகுகள் நிறைந்த வீதியில் நடுநடுவே காலியான மனைகள் இருக்க பூட்டிய வீடுகள் இரண்டு- ஒன்றின் முன் ஒரு முதிய வறியவன் நிறையாத பாத்திரத்தோடு கனவுகள் சுமந்து ஒரு வீட்டின் கதவைப் பார்த்திருக்கிறான்; மற்றொரு வீட்டின் முன் அவன் நிழல் விழுந்திருக்கிறது. அந்த நிழல் அவ்வளவு தொலைவு எட்ட வழியேயில்லை.