சிறுகதை

மடத்து வீடு

ராம் செந்தில்

ஆற்றின் கரையில் இருந்தது அந்த வீடு. ஆற்றங்கரையில் நிறைய வீடுகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதென்னவோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன.  ஒரு காலத்தில் இந்த வீடு நான்கு கட்டுகளுடன், பிரமாண்டமான மதில்களுடன் இருந்திருக்கவேண்டும். இப்போது ஏறக்குறைய வீட்டின் பின்பக்கம் முழுவதும் இடிந்து கைவிடப்பட்டிருந்தது. முன்பக்கமும் பல இடங்களில் விரிசல் கண்டு அதில் அத்திச்செடி முளைத்திருந்தது. எப்போதோ பூசிய மஞ்சள் சுண்ணாம்பு முழுவதும் உதிர்ந்திருந்தது. விரிசல்களில் திட்டுதிட்டாக பாசி படர்ந்து, அந்த பாசி தந்த கருமை நிறம் மட்டுமே மிச்சமிருந்தது. வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.

நாயக்க மன்னர்களிடம் பணிபுரிந்த செட்டியார்களுக்கு இந்த ஊர் முழுவதும் நிலபுலன்கள் இருந்தன. அவர்களில் ஒருவருக்கு தமக்குப் பிறகும் தர்மங்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என்று கவலை இருந்தது. தனக்கிருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கொண்டு அறக்கட்டளை நிறுவி, தொடர்ந்து வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்து, இன்ன பிற தர்மங்களையும் பரிபாலித்திட உயிலெழுதி மறைந்தார். அவருக்கு பிறகு வந்த வாரிசுகள் சில தலைமுறை வரை அதை சரியாக செய்தனர். பிறகு வந்தவர்கள் தமது தொழில்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர, எல்லாம் நின்றது. ஊரில் இருந்தவர்கள் குத்தகை என்ற பெயரில் ஆக்கிரமித்த நிலங்கள் போக மிச்சமானது இந்த வீடு ஒன்றுதான். இந்த வீடும் ஏதோ ஒரு தர்மத்துக்காக எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதால் அதை நிர்வகிப்பதில் எந்த நாட்டமும் இன்றி இடியவிட்டிருந்தனர். பிறகு தங்களிடம் காரியதரிசியாக இருந்து குத்தகை வசூலித்து தந்த சீனிவாசராவை அவரது குடும்ப சூழல் கருதி வாடகையில்லாமல் அந்த வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தனர்.

ஆஸ்துமாவால் அவதிப்பட்டுவந்த சீனிவாசராவின் மனைவி ஒரு மார்கழிமாதக் குளிரில் இறந்துவிட்டதாகவும், சீனிவாசராவும் அவரது மூன்று பெண்களும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்றும் அருண் சொல்லியிருந்தான். அந்தப் பெண்களையும் ஓரிருமுறை நான் பார்த்திருக்கிறேன். அருண் அவ்வபோது ரேஷன் பொருட்கள் வாங்கிதருவது, மின்சாரகட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை அவர்களுக்குச் செய்து தருவான். அருணுக்கு ஊரின் எல்லா தெருக்களிலும் இப்படியான சிநேகம் இருந்தது.

கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.

ஆற்று பாலத்தை கடந்து மடத்து வீட்டை நெருங்கினோம். மாலைநேர காற்று சிலுசிலுவென்று வீசியது. வீட்டு வாசலில் உயரமான திண்ணை இருந்தது. அதிலிருந்து பார்த்தால் எதிரே ஆறு தெரிந்தது.. வீட்டின் கதவு கொஞ்சமாக மூடப்பட்டு இடைவெளி தெரிந்தது. நாங்கள் வீட்டின் கதவை நெருங்கியவுடனே ஒரு பெண் வெளியே தலையை நீட்டி, அருணை பார்த்து சிநேகமாக சிரித்து வா அருண் என்றாள். உள்ளே நுழைந்தோம். உள்ளே அழைத்த பெண் வெளிர்நீல கலரில் தாவணியும்,கறுப்பு பூக்கள் போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள்.

உட்காருங்க, எங்களை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி ஸ்டூலை காட்டினாள். தையல் மெஷின் எதிரிலிருந்த மற்றொரு ஸ்டூலையும் இழுத்து போட்டாள். தையல் மெஷினில் பாதியில் விட்டிருந்த ரவிக்கையை வாரி அறைக்கு கொண்டு சென்றாள். அருண் ஜன்னல் கட்டையிலேயே உட்கார்ந்தான். மற்றொரு ஜன்னல் கட்டையிலிருந்த, ரேடியோ எஃப்.எம்மில் “வசீகரா என் நெஞ்சினிக்க“ மெலிதாக ஒலித்துகொண்டிருந்தது.

வெளியே தெரிந்த வீட்டின் அளவுக்கும் உள்ளே இருந்த சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உள்ளே நுழைந்தவுடன் கூடம்,. கூடத்திலிருந்த அனைத்து உத்திரங்களையுமே கரையான் அரித்திருந்தது. அவை இரும்பு பைப்புகளாலும், மூங்கில் மரங்களாலும் முட்டுகொடுக்கப்பட்டு கூரையை தாங்கியிருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் அந்த அறை இருந்தது. அறை வாசலில் பூக்கள் எம்பிராயடர் செய்யப்பட்ட ஒரு பழைய திரைச்சீலை தொங்கியது. சமையல் கூடம், இரண்டாம் கட்டில் இருந்திருக்கவேண்டும். இரண்டாம் கட்டே முழுமையாக இடிந்துவிட்டிருந்ததால், கூடத்தில் இருந்து பிரிந்த நடையிலேயே சமையலுக்காக ஒரு பழைய பலகை போடப்பட்டு பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

இவன் என்னோட பிரெண்ட் ராஜேஷ். தஞ்சாவூரிலே படிக்கிறான். இது பிரசாத் நம்ம தெரு என்றான் அருண், என்னை பார்த்து. அவள் மையமாக பார்த்து புன்னகைத்தாள்.

எப்படி இருக்கே ராஜி, எங்கே ஜெயா இன்னும் வரலையா?

அவ, எங்கே இப்போ வருவா? டாக்டர் அவ்வளோ சீக்கிரம் விடுவாரா? எப்படியும் எட்டரை ஆகிடும் என்றாள்.

பெரிய மேடம் ஜெயா, டாக்டருக்கிட்டே வேலைபாக்குறாங்க..எதுனா ராங்க் காமிச்சா, ஊசி போட்டுடுவாங்க என்றான் அருண்.

ஏன் மாப்ளே, நானும்தான் ஊசி போடுவேன். அதுவும் வலிக்காம..  என்றபடி அருணை பார்த்து கண்ணடித்தான் ராஜேஷ்.

எனக்கு திகீரென்றது. ராஜியை பார்த்தேன். அவள் அந்த பேச்சை கவனிக்காததுபோல், புன்னகைத்தாள்..

உங்க வீடு போஸ்ட் ஆபிஸ் பக்கத்துலேதானே இருக்கு? என்றாள் என்னை பார்த்து.

நான் அவசரமாக இல்லையென்று தலையாட்டினேன். பிறகு கேட்டது உரைத்து ஆமாம் என்றேன். மெலிதாக சிரித்தாள் ராஜி. மாநிறம். முடியை அழகாக பின்னி, முன்பக்கம் சில முடிகளை எடுத்துவிட்டிருந்தாள்.. கைகளில் கண்ணாடி வளையல்கள். உதட்டோர மச்சம் கவர்ச்சியாக இருந்தது. எப்படியும் இருபத்தி ஐந்து வயதை தாண்டியிருப்பாள் என்று தோன்றியது. சிரித்தபோது அழகாகவே இருந்தாள். பாதி படித்த லட்சுமியின் நாவல் ஒன்று தரையில், பக்கம் மறந்துவிடாமல் இருக்க குப்புறகவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.

கொல்லைபக்கம் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டது. நான் அந்தப்பக்கம் பார்ப்பதை ராஜி, கவனித்தாள். என் சிஸ்டர் வித்யா துணி துவைக்கிறா.

சாந்தி தியேட்டர்லே இதுநம்மஆளு படம் வந்துருக்கு. நயன்தாராவை இன்னைக்கு பார்த்தே ஆகணும்ன்னு அடம்பிடிச்சான் ராஜேஷ். நாந்தான், இங்கே வந்து என்னோட பிரண்ட்ஸை பாருன்னு கூப்பிட்டுவந்துட்டேன் என்றான் அருண்.

ஓ, நயன்ன்னா ரொம்ப பிடிக்குமோ?

முன்னாடியெல்லாம் இல்லைங்க.. பில்லா படம் பார்த்தப்பதான் எனக்கு நயனோட அந்த முழு தெற..மையும் நல்லா தெரிஞ்சுது.. தெறமை என்ற வார்த்தைக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்தான் ராஜேஷ்.

நீ அந்த நீச்சல் தெறமையைதானே சொல்றே மாப்ளே என்றான் அருண்.

கன்னங்கள் சிவப்பேறி லேசாக வெட்கத்துடன் சிரித்தாள் ராஜி. எல்லா பேச்சையும், தான் நினைக்கும் முனைக்கே இழுத்து செல்கிறான் ராஜேஷ். முன்பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் இப்படி கொஞ்சமும் லஜ்ஜையின்றி பேசுவது நிச்சயம் இவனுக்கு முதல்முறையாக இருக்காது. அருணின் தோழி என்றவுடன் இப்படிதான் இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டானா? சட்டென்று அவள் கோபமானால், அசிங்கமாகிவிடுமே. இவனுடன் வந்திருக்ககூடாதோ. ஆனால் இங்கு வரும்போதே நானும் இதை உள்ளுர எதிர்பார்த்திருந்தேனோ..

கொல்லைகதவை திறந்தபடி வித்யா வந்தாள். மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட சுடிதாரின் டாப்ஸ் மட்டும் அணிந்து உள்ளே வந்தவள், எங்களை பார்த்தவுடன் அறைக்குள் சென்று பேண்ட் அணிந்து வந்தாள். அழகான பெரிய கண்களே முதலில் ஈர்த்தது.  யாரும் கேட்காமலே, ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கூடத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த ராஜேஷிடம் முதலில் நீட்டினாள்.

ராஜேஷ் வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கண்ணை சிமிட்டியபடி, என்ன, தண்ணி சுடுது? என்றான்.

ம்ம்ம்.. தண்ணி சுடலை. நீங்கதான் சூடா இருப்பீங்க.. புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்துகொண்டு இவனிடம் வாய் கொடுக்கிறாளே அசடு..

அது என்னவோ உண்மைதான்.. கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.

நான் பேச்சை மாற்றும் பொருட்டு, நீங்க படிக்கிறீங்களா என்றேன்.

சின்னமேடம் கரஸ்லேயே பிகாம் படிக்கிறாங்க.. டியூசன் எடுக்குறாங்க.. நீயும் வேணா ஜாயின் பண்ணிக்கோ

நான் புன்னகைத்தேன். அப்போது திடீரென்று கூடத்து அறையில் இருந்து மெலிதாக இருமல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. எல்லோரும் அறையை பார்ப்பதை பார்த்த ராஜி, அப்பாதான், இரண்டு நாளா இருமல் ஓயலை. என்றாள்

இவ்வளவு நேரம் அவர் உள்ளேதான் இருந்தாரா? அவரை வைத்துகொண்டுதான் இப்படியெல்லாம் பேசினோமா, என்னவோ போல் இருந்தது. ராஜேஷின் முகமும் மாறியது போல் தெரிந்தது.

இருமலுக்கிடையே அவர் அழைத்தார். ராஜி உள்ளே போனாள். கதவுவிலகி, அவர் ஈசிசேரில் படுத்திருப்பது தெரிந்தது. வாய் குழறலாக ஏதோ பேசினார். அருணும் உள்ளே போனான்..இடது கையை நெஞ்சருகே வைத்திருந்த விதத்தில் வாதம் என்று தெரிந்தது. வலது கையை குடிப்பது போல் காண்பித்து லோலா.. லோ..லா என்றார்.

இது என்ன புதுப்பழக்கம்? சாயங்காலமானா சோடா வேணுங்குறது? உடம்புக்கு நல்லதா இது? பேசாம இருங்க.

சோடாதானே ராஜி, நான் வாங்கிட்டுவரட்டா?

இல்லை, வேணாம் அருண்

டெய்லி அஞ்சு ரூபா சோடா குடிக்க வேணும்னா எங்கே போறது ? வெந்நீர் போட்டுருக்கேன். பேசாம இருக்க சொல்லு ராஜி, என்றாள் வித்யா..

நீ பேசாம இரு வித்யா. நான் வாங்கிட்டுவாரேன்..பதிலை எதிர்பாராமல் அருண் வெளியே போனான்.

சோடாவை டம்ளரில் ஊற்றி கொஞ்சமாக கொடுத்தாள் ராஜி. குடித்தார். பிறகு மெதுவாக நாற்காலியை காட்டி “வாச போ “ என்றார். இல்லை..இங்கேயே இருங்கப்பா. அப்புறம் போய்க்கலாம்.

இப்போது குரலில் கடுமை தெரிந்தது. கையை நீட்டி நீட்டி “வாச போ” என்றார். கண்களை பெரிதாக்கி முறைத்தார். அருண், “வாசலுக்குதானே போகணுங்கறாரு?.. நாற்காலியை தூக்கி அங்கே போட்டுட்டு, அப்புறம் மெதுவா அழைச்சுட்டு போய் உட்காரவைச்சுடலாம்“ என்றான்.

இல்லை வேணாம் அருண்..நீ உட்காரு

“வாச போ” கத்தியபடி ஒரு கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்தார். அதில் மிச்சமிருந்த சோடா அறைக்கு வெளியே தெறித்தது. டம்ளர் சுவற்றில் ணங்கென்று மோதி சுழன்று விழுந்தது.

இப்போ எதுக்கு வாசலுக்கு போவணும்ன்னு துடிக்கிறாரு? செஞ்சதெல்லாம் பத்தாதா? ஆவேசமாக கேட்டாள் வித்யா..

வித்யா நீ தயவு செஞ்சு பேசாம இரு.. அதட்டினாள் ராஜி..

எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.

மெதுவாக வெளியே வந்து நடந்தோம்.. கொஞ்ச தூரம் யாரும் பேசவில்லை. சற்றுதூரம் போனவுடன் பெட்டிகடையில் சிகரெட் வாங்கினான் அருண். பற்றவைத்தவுடன், சரி விடு மாப்ளே.. படத்துக்கே போயிருக்கலாம்.. நைட் என்ன பிளான்? என்றான் அருண். எதுவும் பேசாமல், புகையை ஊதியபடி, தூரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அந்த வீட்டின் பொம்மைகளை வெறித்தான் ராஜேஷ்.

பாலை

காலத்துகள்

இரவுணவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, என்ன நேரம் என்று கவனித்தவளுக்கு வழக்கமான சஞ்சலம் உண்டாக, சமையலைத் தொடர முடியாமல் சமையலறை மேடை மீது கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள். “என்னமா ஆச்சு?” என்று தண்ணீர் எடுக்க வந்த ரோஹித் கேட்க, அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்தாலும் அவன் வீட்டின் சூழலை கவனித்து வருகிறான் என்ற சந்தேகம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அலைபேசியில் ஆனந்தியின் அழைப்பு வரவும், விடுபட்ட உணர்வோடு அவளுடன் பேசுவதற்காக படுக்கையறைக்குச் சென்றாள்.

தன் தெருவிற்குள் நுழைந்தவனின் கண்பார்வையில் அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தென்பட்டதும் நடையின் வேகம் அனிச்சையாக குறைய, எந்த அவசரமும் இன்றி அபார்ட்மெண்ட்டை அடைந்தான். தரைதளத்தில் நின்றிருந்த ராகவன், “ஸார், இந்த வீக்எண்டு வாட்டர் டாங்க் க்ளீன் பண்ணப் போறோம், ஆளுக்கு ஐநூறு ரூபாய் ஆகும், உங்க மிசஸ் கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார். “பண்ணிட்லாம் சார்,” என்றவன், சுத்தம் செய்யப்போகிறவர்கள் பற்றி, அங்கு நடப்பட்டிருந்த செடிகள் பற்றி, தெருவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க குப்பைத் தொட்டியைப் பற்றி ராகவனிடம்- அவர் சொல்லும் பதில்களில் அதிக கவனம் செலுத்தாமல்- விசாரித்தபடி கொஞ்சம் நேரம் செலவிட்டான். பின்னர் லிப்டைத் தவிர்த்து, மெதுவாக நடந்தே மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து படுக்கையறைக்குள் நுழைந்தவன் அங்கே அவள் ஜன்னலருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வெளியே செல்லலாமா என ஒரு கணம் யோசித்து, தன் அலைபேசியில் ஏதோ நோண்டுவது போல் படுக்கையில் அமர்ந்தான். ஓரிரு நிமிடங்களுக்குப்பின் அவன் இருப்பை உணர்ந்தவள் அறையை விட்டு வெளியேறவும், உடைகளைக் களைந்து குளித்து முடித்தவன் ஜன்னலருகே அமர்ந்திருக்கும்போது அவள் மீண்டும் உள்ளே வந்தாள்.

‘கிச்சன்ல குழா லீக்….’

‘ப்ளம்பர் நம்பர் இருக்…’

‘அவன்ட்ட பேசி, வந்து பாத்துட்டான். நாளைக்கு மாத்தரானாம், ஆயிரம் ருபாய் ஆகும்’

”ம்ம்ஹம்…’

‘வாட்டர் டாங்க்..’

‘வரும்போது ராகவன் சார் சொன்னார்’

அவள் அறையை விட்டு வெளியேறத் திரும்பியவுடன், ‘நாளைக்கு லேட்டா வருவேன்’

‘… நைட் சாப்பாடு?’

‘கலீக் ரிஷப்ஷன், நேத்து சொன்னேனே’

‘… ‘

எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

‘சாப்ட வாப்பா’ என ரோஹித் கூப்பிடும்போதுதான் வெளியே வந்தான். பாத்திரங்கள் அவ்வப்போது நகர்த்தப்படுவதைத் தவிர வேறெந்த ஓசையும் இல்லாத இரவுணவின் அமைதியை தாள முடியாமல் தலையை தூக்க, அவள் தன்னை பார்த்தபடியே சாப்பிடுகிறாள் என முதலில் நினைத்தவன், அவள் தன்னை கவனிக்காமல் எதையோ யோசித்தபடி உண்கிறாள் என்பதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“ஸ்கூல்ல பி.டி.ஏ மீட்டிங் இந்த வாரம் இருக்கு”

பதில் சொல்லாமல் இருந்தவன், அவள் எதுவும் பேசாமல் இருக்கவே அவளை கவனித்தான். மீண்டும் தலையை குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ரோஹித் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நானும் வரணுமா?”

“எப்பவும் ஒருத்தரே வரக்கூடாதுன்னு ஸ்கூல்ல சொன்னாங்கன்னு சொன்னேனேப்பா”

“ம்ம், என்னிக்கு மீட்டிங்”

“சனிக்கிழமை, உங்களுக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பி இருந்தாங்களே”

“வரேன்”

ரோஹித் ஏதோ பேசியபடி இருக்க, இருவரும் எதையோ யோசித்தபடி அவனுக்கு பதிலளித்தபடியும், கண்கள் சந்திக்கும் அசந்தர்ப்பமான கணங்களில் உடனே பார்வையை விலக்கியபடியும் சாப்பிட்டு முடித்தனர். இரவுணவு ஏற்படுத்திய கட்டாய அண்மையின் முடிவு இருவருக்குமே ஆசுவாசமாக இருந்தது.

படுக்கையறைக்குச் சென்று விளக்கை அணைத்தவன், மின்னொளியின் வெப்பம் இல்லாமலாகும் முதற்கணம் தரும் மெல்லிய குளிர்ச்சியை உணர்ந்தான். அறையின் இருளில் அலைபேசியில் நீல நிற ஒளிப்புள்ளி சுடர் போல் மினுங்கியது. திருவிழாக் காலம் ஆரம்பித்து விட்டதால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய ஆடைகளுக்கான விற்பாணைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன, அதற்கேற்றார் போல் சரக்கு அனுப்புவதில் குழப்பங்களும் தவிர்க்க முடியாத தாமதங்களும். அது குறித்ததாக இருக்கலாம் என்று எண்ணியவன் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, வந்திருந்தது அழைப்பா அல்லது குறுஞ்செய்தியா என்று எதுவும் பார்க்காமல் அணைத்தான். சில கணங்களின் முழு இருட்டிற்குப் பின் தெரு விளக்குக்களின் ஒளியினால் அறை சற்றே துலங்கத் தொடங்கியது.

தொலை தூரத்தில் கலங்கரை விளக்கம் வழக்கம் போல் அதே சீரான இடைவெளியில் சுற்றி அவன் வீடிருக்கும் திசை பக்கம் திரும்பும்போது அறையின் சுவர்களில் அலை போல் வெளிச்சம் நெளிந்து மறைந்தது. இன்னொரு புறமுள்ள ஜன்னலில் வழியே தெருவில் செல்லும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள் அவ்வப்போது ஊடுருவின. அறையில் இருந்த மங்கலான ஒளியில் கைகளினால் சுவற்றில் நரி, மான், பாம்பு என வழக்கமான நிழலுரு வடிவங்களை- அவை ஒரே போல் தோற்றமளிக்கின்றன என்ற சந்தேகத்தோடு- உருவாக்கிக் கொண்டிருந்தான்.

மாடிக்குச் சென்று ஒரு சுற்று சுற்றி வந்தாள். அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்ககத்தின் காப்பாளர் பண்பலை கேட்டுக் கொண்டிருப்பது சன்னமாக ஒலித்தது. பிரதான சாலையில் இருந்த ஆடை, வீட்டுப் பொருள் விற்பனை கடைகள் ஒளிர்ந்து கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. மேற்கு திசையில் தான் வழக்கமாக அமரும் மேடையில் அமர்ந்து தெருவை கவனிக்க ஆரம்பித்தாள். சதுர, செவ்வக வடிவிலான ஜன்னல்களின் வழியே தெரிந்த அறைகளுக்குள் ததும்பி இருந்த வெளிச்சத்தில் உருவங்கள் மிதப்பது போல் தோன்றின. இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் சிறிய போர்ஷனொன்றில் குடியிருப்பவர் வராண்டாவில் அமர்ந்தபடி அன்றைய தினசரியை எப்பவும் போல் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் மனைவியும் வந்தமர, இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அவர்களின் கல்லூரி செல்லும் மகள் சில காலமாக அவள் கண்ணில் படவில்லை என்பது நினைவுக்கு வர, வேலையில் சேர்ந்திருப்பாள் என்று நினைத்தவளுக்கு தானும் மீண்டும் வேலைக்குச் சென்றால் என்ன என்று சமீப காலமாக தோன்றும் எண்ணம் மீண்டும் ஏற்பட்டது. அது குறித்து யோசித்தவாறே, பள்ளியில் இருந்து மகளை- பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புக்கள் முடிந்து நேரங்கழித்து வருகிறாள் போல என இவள் யூகித்திருந்தாள்- அழைத்து வரும் பெண் எப்பவும் போல் தெருவைக் கடந்து செல்வதை கவனித்தாள்.

தெரு வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருப்பது ஆசுவாசமாக இருந்தது. குளிர் அதிகமாகவே, கீழே இறங்கியவள் ரோஹித்தை படுக்கப் போகச் சொன்னாள். அறைக்கு வெளியே பேச்சுச் சத்தத்தைக் கேட்டவன், ஜன்னல்களை மூடிவிட்டு சுவற்றை பார்த்தபடி பெட்டில் படுத்தான். வீடு பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு படுக்கையறை அருகே வந்தபின் ஒரு கணம் தயங்கியவள், உள்ளே விளக்கு எரியாததை உணர்ந்து கதவைத் திறந்து நுழைந்தாள்.

சீருடை

மு வெங்கடேஷ்

கொசுவத்தை நீவிவிட்டு வயிற்றை எக்கி செருகிக் கொண்ட பிறகு, மடிப்புக் கலையாமலிருக்க, அம்மா பற்களில் இடுக்கிக் கொண்டிருந்த ஊக்கை வைத்து மொத்த கொசுவத்தையும் சேர்த்து பிணைத்துக் கொண்டாள். உடலை அப்படி இப்படி திருப்பி புடவை சுற்றின் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், மாரி மெதுவாக “அம்மா, பாவாடை தைக்கனும்மா. கிழிசல்ல ஊக்கை மாட்டிக்கிட்டு பள்ளியோடவத்துக்கு போ முடிலம்மா” என்றாள்.

“எல்லாம் பாத்துக்கலாம்டி. தம்பி இப்ப வந்திருவான். ஏதாச்சும் இட்லி கிட்லி வச்சுக் கொடு. வெளயாடிட்டு உள்ள வரும்போதே பசி பசின்னு பறப்பான். நான் மேலத் தெருவரை போயிட்டு வந்திடறன். சரசு பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்காளாம்”

அம்மாவின் பதில் மாரியை பெரிதாக பாதிக்கவில்லை. முத்து பிறந்தபோது அவளுக்கு ஒன்பது வயது. இரண்டாவதாவது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென ஐயம்மாள் பட்ட பாடுகள் மாரிக்கு அத்துப்படி. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. கடைசியாக குலதெய்வம் முத்துமாரிக்கு பால்குடம் எடுப்பதாக மாரி வேண்டிப் பிறந்தவன்தான் முத்து. அம்மா, அப்பா பிரார்த்தித்ததை விட தம்பி வேண்டுமென்று மாரி பிரார்த்தித்தது அதிகம். பக்கத்துக்கு வீட்டு ஆயிஷா அக்கா மகள் நஸ்ரினுக்கு ஒரு தம்பி இருக்கிறான், அதனால் தனக்கும் ஒரு தம்பி வேண்டும் என்ற ஏக்கம். அதனால்தானோ என்னவோ மாரிக்கு தம்பி மேல் அவ்வளவு வாஞ்சை.

மாரி, ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பதென்பதோ எட்டாம் வகுப்பு, பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதே இல்லை. தம்பியைப் பார்த்துக் கொண்டு அவனுடன் விளையாடுவதிலேயே நேரத்தைச் செலவழித்தாள். அம்மா தம்பியை வளர்த்ததை விட இவள் வளர்த்ததுதான் அதிகம். சோறூட்டுவது முதல் தாலாட்டித் தூங்கவைப்பது வரை. அவளைப் பொறுத்தவரை இவ்வுலகத்தில் சிறந்த இடம் தன் வீடு, சிறந்த மொழி தம்பி பேசும் மழலை மொழி, சிறந்த விளையாட்டு தம்பியுடன் விளையாடுவது. மொத்தத்தில் அவள் உலகமே தம்பிதான். அவன் கைக்குழந்தையாக இருந்த போதிலிருந்தே, பால் கரைத்து கொடுப்பதாகட்டும், கஞ்சி வச்சுக் கொடுப்பதாகட்டும், எல்லாமே மாரிதான். “ரோ ரோ ரோ ரோ ரோ….. இந்தா அக்கா வந்துட்டேன் பாரு, அழக்கூடாது. எங்க ராசால்லா, எங்க ஐயால்லா. என்னைக்கு எங்க ஐயா ரெண்டு இட்லி திண்ணு ஒரு கிளாசு காபி குடிக்காரோ அன்னைக்குத் தான் எனக்கு நிம்மதி” என்று கொஞ்சியபடி பார்த்து பார்த்து செய்வாள்.

மாரியுடன் பக்கத்து வீட்டு நஸ்ரினுக்கு எப்போதுமே போட்டிதான். அனைத்து விளையாட்டிலும் நஸ்ரினைத் தோற்கடித்துவிடும் மாரி, தம்பி விளையாட்டில் மட்டும் தோற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் தம்பி பிறந்தபின் அதிலும் போட்டி போடுவாள். தனக்கும் ஒரு தம்பி இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். வருடா வருடம் பொங்கல் பண்டிகையன்று ஊரில் நடக்கும் “உப்பு மூட்டை” போட்டியில் தம்பியைத் தூக்கிக் கொண்டு ஓடும் மாரி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றாள். தம்பியைத் தூக்கிச் சுமப்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது.

சரசு வீட்டிலிருந்து வந்த அம்மாவிடம், “எம்மா, தம்பிய ஸ்கூல்ல போடனும்னிட்டிருந்தியே, இங்கிலீசு மீடியத்திலதானேம்மா” என்று ஆரம்பித்தாள். கொஞ்ச நாட்களாக இந்த இங்கிலீஷ் மீடியம் பேச்சு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது.

“ஏட்டி கூறு கெட்ட கழுத நமக்கெதுக்குடி அதெல்லாம்?” என்று அம்மா மீண்டும் மறுக்க ஆரம்பித்தாள்.

“எம்மா நீ செத்தப் பேசாம இரேன், இப்போ அதான் பேசன். பக்கத்து வீட்டு ஆயிஷா அக்காகூட அவுக ரெண்டு புள்ளைகளையும் அங்கதான் சேத்து விட்ருக்காம். தெரியுமா ஒனக்கு?”

“அது சரி, பேசனாம்லா பேசனு, வாரியக் கட்ட பிஞ்சிரும் பாத்துக்கோ. ஏழு கழுத வயசாவுது, பொட்டப் புள்ளைக்கு கொஞ்சமாது வீட்டு வனவருத்தம் தெரிய வேணாம்? பக்கத்து வீட்டு ஆயிசா புள்ளைங்கள சேத்துருக்கான்னா அவா புருசன் துபாய்ல இருந்து கத்த கத்தயா அனுப்புறாரு. அதுக இங்கிலீசு பள்ளிக் கூடத்துக்குப் போயி படிக்குங்க. உங்க அப்பா என்ன துபாய்லயா இருக்காரு? இல்ல பணம்தான் நம்ம வீட்டு மரத்துல காய்க்கா? இந்த பேச்ச இதோட விட்ரனும் பாத்துக்கோ. நானாது பரவாயில்ல ஏச்சோட விட்டேன், உங்க அப்பாக்கு தெரிஞ்சுச்சுன்னா கொன்னே போட்ருவரு பாத்துக்கோ” என்று ஏசினாள்.

“எம்மா நா என்ன என்னியவா சேத்து விடச் சொல்றேன். தம்பியத்தான சேக்கச் சொல்றேன்,” என்று மாரியும் விடுவதாக இல்லை. “அதெல்லாம் சரிதான் ஆனா உங்க அப்பாட்ட யாரு சொல்றது?” என்று அம்மா இழுக்க, “நீதான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மாரி. “சரி, பாப்போம், மனுசன் என்ன சொல்றார்னு,” என்று சொல்லிவிட்டு அம்மா தூங்கப்போக, மாரி மனதிற்குள் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

மாரிக்குத் தன் தம்பியை எப்படியாவது இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து விட வேண்டுமென்ற ஆசை. அதற்காக அப்பாவிடமும் சென்று பேசினாள். “எப்பா எப்படியாது தம்பிய இங்கிலீசு மீடியத்துல சேப்பும்பா, எனக்கு இந்த வருசம் புதுத் துணிகூட வேணாம்பா. தம்பிக்கு மட்டும் கரார் கடைக்குப் போயி நல்ல துணி வாங்குவோம். எனக்கு அடுத்த வருசம் பாத்துக்கலாம்பா,” என்றாள்.

“ஏம்லா, பாவாட கிழிஞ்ச்சிருக்குன்னியே. புதுசு வேணாமா?” என்றார் அப்பா.

“அடுத்த வருசம் பாத்துக்கிடுவம்ப்பா.” அவளுடைய ஆர்வத்தைப் பார்க்க அப்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.

முதல் நாள் மாரி தம்பியைப் பள்ளிக்குக் கிளப்பிக் கொண்டிருந்தாள். தலைசீவி, பொட்டு வைத்து.

“அடியே மாரி என்னட்டி இது கோட்டிக்காரத்தனம்? ஆம்பள புள்ளைக்குப் போயி பொட்டு வச்சிக்குட்டு?” பக்கத்துக்கு வீட்டு வேணி அத்தை வந்தாள்.

“நீ ச்சும்மா கெடத்த, எந்தம்பிக்கு நா பொட்டு வப்பேன், பூ வப்பேன் ஒனக்கு ஏன் இப்படி பொத்துக்குட்டு வருது?”

“எம்மாடி நீ ஒந்தம்பிக்கு என்னத்தையும் வைம்மா. எனக்கு என்ன வந்துச்சு?” என்று அவள் கோபித்துக் கொள்ள, “அப்படிச் சொல்லீட்டுப் போவியா பேசாம? வந்துட்டா அங்கேருந்து வாய இம்புட்டு நீளம் வச்சிக்கிட்டு” என்றாள் மாரி.

“ஒன் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான, பாக்கத்தான போறோம். அரசங்காட்டுலேந்து ஒம்மாமன் பரிசம் போட வந்திட்டே இருக்கானாம்டி. சொடலமாடனுக்கு சோடி போட்டது போல வருவான் பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வேணி அத்தை.

மாரிக்கும் தெரிந்த விஷயம்தான். அடுத்த வருச முத்துமாரி கொடை முடிஞ்சதும் பேசி முடிச்சுப்புட வேண்டுமென ஐயம்மாள் துடித்துக் கொண்டிருந்தாள். “பொட்டப்புள்ளய பொழுதோட கட்டி வச்சிப்புடனும். மாசத்துக்கொண்ணுன்னு ஒர்த்தி குத்த வச்சிடறாளுக. அப்புறம் மாப்பிள்ள தேடி நம்மாள ஆகாது. முருகைய்யனுக்கு என்னா கொற. மொத்த ஜில்லாவும் அவனக் கண்டா மெரண்டு நிக்கும். இவள ராணி போல பாத்துக்கிடுவான்” மாரியைப் பற்றிய முடிவுகளில் மாரியை யாரும் கலந்து கொள்வதில்லை.

வேணி அத்தை இந்தப் பக்கம் போனதும் பக்கத்து வீட்டு சங்கரன் தாத்தா வந்தார்.

“இது என்னட்டி கூத்தா இருக்கு, வெள்ளக்காரத் தொரகணக்கா? சூவு, சாக்சு, கழுத்துல என்னது தொங்கீட்டு? மூக்கு வடிஞ்சா தொடைக்குறதுக்கா?”

“ஏ தாத்தா அது டையி, இதெல்லாம் ஒனக்கு எங்க தெரியப் போவுது? முன்னப்பின்ன பள்ளிக்கூடம் பக்கம் போயிருந்தாத்தான? பாரேன் இவன் பெரிய டாக்டர் ஆயி, நீ காச்சல்னு வந்து நிக்கும்போது பிட்டியில பெரிய ஊசியா போடச் சொல்றேன்”

“அடியாத்தி இவ ஏன் இந்த வரத்து வாரா. இன்னும் தொர பள்ளிக்கூடத்துக்கே போவல அதுக்குள்ளயும் டாக்டர்ங்கிறா இன்ஜினீயர்ங்கிறா,” என்று சொல்லிக் கொண்டே தாத்தா தான் வைத்திருக்கும் மூக்குப் பொடியை எடுத்து சற்று உறிஞ்சிக்கொண்டுச் சென்றார்.

ஒவ்வொருவரையும் பேசி சமாளிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை மாரிக்கு. ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்லத் தயாரானார்கள். ”அடியே மாரி ஒனக்கும் தம்பிக்கும் ரெண்டு சம்படத்துல பழைய சோறும் ஊறுகாயும் வச்சிருக்கேன் பாரு. மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று வீட்டினுள் இருந்து அம்மா ஞாபகப்படுத்தினாள். எரிச்சலடைந்த மாரியோ “எம்மா அவனுக்குப் போயி பழைய சோத்த குடுத்துட்டு? அந்த பிளாஸ்க்ல கொஞ்சம் பால காச்சி ஊத்து, நா போற வழில சூப்பர் கடைல ரெண்டு கூட கேக்கு வாங்கிக் குடுத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு ஒரு சம்படத்தை மட்டும் எடுத்து தன் பையில் திணித்துக் கொண்டாள்.

ஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆங்கில வழி பள்ளிக்கூடம். அரசு பள்ளிகளையேப் பார்த்துப் பழகிய ஊருக்கு இது புது அனுபவம். குழந்தைகள் சூ, சாக்ஸ், டை அணிந்து வருவதை ஊரே கூடி நின்று வியப்பாகவும் வித்தியாசமாகவும் வேடிக்கை பார்த்தது. மாரியும் தன் தம்பியை அழைத்து வந்தாள், ஒருவித பெருமிதத்துடன். எதிரே தன் பிள்ளைகளுடன் வந்த ஆயிஷா அக்கா, “என்ன மாரி தம்பிய விட வந்தியா?” என்று கேட்க “ஆமாக்கா” என்று சொல்லி விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள். சுற்றியும் சிறுவர் சிறுமியர் புது சீருடையில் நின்று கொண்டிருந்தனர். வகுப்பறை வரை சென்று தம்பியை விட்டுவிட்டு மதியம் வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னாள். உள்ளே நுழையும்முன், “எக்கா இந்த டை கழண்டு கழண்டு விளுது” என்றான் முத்து.

“அதெல்லாம் ஒன்னும் ஆவாது,” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பாவாடை கிழிசலை கோர்த்து மாட்டியிருந்த ஊக்கை கழட்டி டையை சட்டையோடு சேர்த்து போட்டுவிட்டாள். “இனி சாயந்திரம் வீட்டுக்குப் போறவர கழளவே கழளாது” என்று சொல்லி, டாட்டா காண்பித்தவாறே வாசலை நோக்கி நடந்தாள்- “இனி பெரிய படிப்பெல்லாம் படித்து, டாக்டராவோ இன்ஜினியராவோ தம்பி வந்துவிட மாட்டானா என்ன,” என்று நினைத்தபடி.

வெற்றி- நம்மைச் சுற்றியே!

லதா ரகுநாதன்

இவ்வுரைக்குரிய தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டாம்.  ஏனென்றால் முதலிலேயே சொல்லி விடுவது நலம் என்றே நினைக்கிறேன், இது கதை அல்ல, வாழ்க்கை.  இல்லை, இப்படிச் சொல்வது பொருத்தமாக வராது. வாழ்க்கைக் கல்வி, இது சரியாக இருக்கலாம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மானேஜ்மெண்ட் புக்கின் ஆரம்பப் பாடம். இந்த காரணத்தினால், இந்த உரையில், தவறு, பாடத்தில் கோமு மட்டுமே பிரதானம். மற்றவர்கள் அவளைச் சுற்றி,  பெயர் இல்லாமல் அவளின் உறவுகளாக. இவ்விதம் உரையாற்றுவது எனக்கு மிகவும் நிறைவைக் கொடுக்கிறது. காரணம், யாருக்கு என்ன பெயர் என மெனக்கெடவும் வேண்டாம்.. அந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம். இந்தச் சட்டகத்தை ஆரம்ப பாடமாக கொள்ளலாம்.

கோமுவின் வாழ்க்கைக் கதையை ஒரு கண்ணோட்டம் கண்டால் இந்த உரையில் உங்களுக்கான தின பலன்கள் மிகச் சற்றே விளங்கும் சாத்தியக்கூறுகளும் உண்டு.

கோமுவுக்குத் திருணம் ஆனபோது அவளுக்குச் சிறிய வயதென்று கூற முடியாது. அதற்காக வயதானவள் என்றும் கூறலாகாது. பொருந்தச் சொல்வதானால், அந்தக்கால கல்யாண வயதினும் சற்றே அதிகம்இதற்குக் காரணம் ஒன்றும் இருந்தது. கோமு ஒரே பெண். பல வருடம் தவம் இருந்து, பின் பிறந்தவள். அதனால் தாய் தகப்பனின் செல்லப்பிள்ளை. இப்படியாக, குதிர் போல் ஆனாலும் குழந்தையாக பாவிக்கப்பட்டதால், கல்யாணம் பற்றிய நினைப்பு பெற்றோர் மனதில் உதிக்கவில்லை. கோமு செல்லமாக வளர்க்கப்பட்ட காரணத்தினால், சமையல் அறையின் பக்கம் அம்மா செய்து வைத்த முறுக்கு, தட்டை இதர நொறுக்குத்தீனி எடுத்துச் சாப்பிட மட்டுமே சென்றவள்.

இப்படிப்பட்ட ஒரு சின்ன தீனிக்கு தான் சமையல் அறை என்ற நம்பிக்கை காரணத்தினால்கோமு கல்யாணம் முடிந்து கணவன் வீடு வந்ததும், ‘பத்த வை’ என்று சொன்னபோது கடவுள் முன் இருந்த விளக்கு கண்களில் படாமல் உதறலுடன் சமையல் அறை அடுப்பை பற்ற வைக்க…..

கோமு மாமியார் பல வருடங்கள் முன்னரே சிவனடியை அடைந்து அங்கிருந்து அருள் பாலித்திருக்கிறாள் போல. ”ஆஹா.  பெண் என்றால் இவளல்லவா பெண். காரியமே கண்ணாய் சமையல் செய்ய வந்த இவளுக்கு சமையலறை கோமூ என்ற பெயர் வழங்கலாம்,” என்று சொந்த பந்தங்களால் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

recipe

கோமுவிற்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது உண்மை. ஆனால் காதுக்கு இந்தப் பட்டப்பெயர் குளிர்ச்சியையும், மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பையும் தந்ததென்னவோ நிஜம். அப்போது மனதிற்குள் முடிவெடுத்தாள்…..இனி எக்காரணம் கொண்டும் நான் பின் நோக்கி நடக்க மாட்டேன். இந்தப் பாதையிலேயே முன்னேறுவேன் என்று. இதை நான் அவள் வாழ்வின் முக்கியமான திருப்புமுனையாக கருதுவேன். ஒருமனதாக ஒரு செயலில் இறங்கிவிட்டால் எப்படி இந்த அண்ட சராசரமே நமக்குத் துணையாக வரும் என்பதைப் பார்ப்போம்.

கல்யாணம் முடிந்த ஒரு வாரம் கோமு தப்பித்து விட்டாள். பெண்ணைக் கொண்டு வந்து விட்ட சாக்கில், பெண்ணுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் நோக்கில், கோமுவின் தாய் அவளுடனே இருந்து சமையல் முடிந்த பின் கோமுவின் மாமனார் அந்தப்பக்கம் வரும் போது, கருவேப்பிலை, கொத்தமல்லி அல்லது அது போன்ற ஏதோ ஒரு தழையை அவர் கண் பார்வையில் படும் ஒரு தருணம் தான் சமைத்து வைத்ததில் கோமுவைப் போட செய்து, ஒரு வாரத்தில் ஐந்து கிலோ ஏற்றிய அற்புத சமையல் நிபுணர் என்ற பெயரை பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்த உத்தம தாயானாள். ஆனால் சிரமம் என்றும் பாராமல் தலைகுப்புற நின்றபோதிலும் கோமு சமையலுக்கு “ச” சொல்லி “மையல்” இன்றி இருந்தாள். ஒரு வாரம் போன பின்னும் பெண்ணுடனேயே இருப்பது நன்றாக இராது என்ற காரணத்தினால் கோமுவின் அம்மா தன் வீடு கிளம்பிச்சென்றாள்.

முதல் நாள் கோமுவின் சமையல். கோமுவின் வீட்டில் அவள் சமையல் பற்றிய சந்தேகம் யாருக்கும் தோன்ற காரணமில்லாமல் போயிற்று. இந்த ஒரு வாரத்தில் வந்தவர் போனவர் என்று அனைவரிடமும் அவள் சமையல் பற்றி மிக சிலாகித்துப் பேசி கோமு என்ற நளனி என்ற பெயர் கொடுத்தாகிவிட்டது. அன்று சமையலறைக்கு எதேச்சையாக, கோமு மூக்கைச் செல்லமாக திருக வந்த கோமுவின் கணவன், தன் மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றான், திகைத்து. இங்கே ஒரு முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்ல வேண்டும். கோமு கணவன் மூக்கு நீளம், அகலம் என்று உடலிலேயே உருப்படியான உறுப்பு என்பது மட்டுமல்லாது தன் வேலையை செவ்வனே செய்யும் ஒன்றாகவும் இருந்ததால் சமையல் வாசமே அதன் தரத்தைக் காட்டிக்கொடுத்து விட்டது. திகைத்து ருசித்துப் பார்க்க நினைத்தவன், இன்னும் பரிசேஷணம் செய்யாத காரணத்தினால் கையை விருட்டென இழுத்து ஒன்றோடொன்று பிசைய ஆரம்பிக்க, தன் பெயரைக் காப்பாற்ற வேண்டி கோமு சட்டென கட்டிப்பிடிக்க, அப்போது சமய சந்தர்ப்பம் பாராது- இல்லை, பார்த்து என்றும் வைத்துக்கொள்ளலாம்- அங்கு வந்த கோமுவின் மாமனார், “ராமா, கிருஷ்ணா” என்று இன்னும் தெரிந்த சில கடவுள் நாமங்களை உச்சரித்து, தன் மகள் வீடு கிளம்பிச்சென்றவர்தான். ஆக, மாதக்கணக்காக கோமு தன் படு சுமார் சமையலில் சமாளிக்க பிரபஞ்சக் கணக்குகள் அவளுக்கு உதவியாக இருந்தன. சென்ற இடத்தில் கோமு சமையல் பற்றி மாமனாரும் பிரமாதப்படுத்திட ‘சமையல் திலகம் கோமு’ என்ற குடும்பப் பெயரும் இடப்பட்டது.

ஒரு காரியம் செய்ய நாம் முழு மனதோடு நினைத்தால். நம் சூழல் யாவும் ஒத்துழைக்கும்.

கோமுவுக்கு இதுவே நடந்தது

இதுவரையில் சென்னை தாண்டி கடலூர்கூட நினைத்துப் பார்க்காத கோமுவின் கணவனது ஆபீஸ் எங்கோ வடக்கே ஊர் பேர் தெரியாத ஒரு இடத்தில் கிளை ஒன்று ஆரம்பிக்க, அதன் பொறுப்பை கோமுவின் கணவன் கைகளில் ஒப்படைக்க, அவளும் கிளம்பிச்சென்றாள்.

தீபாவளி, கார்த்திகை, பொங்கல், இப்படி எல்லா பண்டிகைகளிலும்சொந்த பந்தம் தவறாது சொன்ன வார்த்தை, “கோமு கை மணமே தனி, அவள் செய்திருக்கவேண்டும் இவைகளை“. இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். இவர்களில் ஒருவர்கூட கோமு சமைத்துச் சாப்பிட்டது கிடையாது.

ஆக வடக்கே சென்ற கோமு, சமையலில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பேச்சில் தேர்ச்சி நிறையத்தான் பெற்றுவிட்டாள். வார்த்தைக்கு வார்த்தை நடுவே அச்சா, மத்லப், ஹான், தேகோ, பத்மாஷ் போன்ற அற்புத வார்தைகள் அவள் ஊருக்குப் போகும் அந்தச் சில நாட்களில் அவளை எல்லோரிடமும் இருந்து தள்ளித்தான் வைக்கும்.

“அத்தை….இந்த குழம்பு இப்படி வெச்சா சரியா….”

“சித்தி…..அதிரசத்திற்கு மாவு பதம் என்ன….”

இப்படிப்பட்ட கஷ்டமான, தர்மசங்கட கேள்விக்கெல்லாம் அச்சா வார்த்தை போட்டுப் பேசும்போது, கேட்ட கேள்வி மறந்து, பதில் சொல்லாததும் மறந்து முழிக்கும்போது, கோமு தன் அஸ்திரத்தை ஏவி விடுவாள்.

“என்ன நான் சொன்னதுபோல்தானே செஞ்ச….?”

ஆக அடுத்த விடுமுறைக்கு கோமு வரும் வரையில் அவள் சொன்னதாகச் சொல்லப்பட்டு, பின்வரும் காலங்களில் அவள் செய்ததாகச் சொல்லப்பட்ட பண்டங்கள் அங்கே விலாவாரியாகப் பேசப்படும்.

ஆனால், இந்த உலக மகா அண்டப்புளுகு தாங்காமல் இறைவன் கோமுவை மிக சீக்கிரம் அழைத்துக்கொள்ள,அவள் இழப்பு பற்றி பேசும் யாவரும், “என்ன ஒரு அற்புதமான சமையல் கை,” என்று சொல்லப்போக, கோமு சமையல் பற்றி நன்கு அறிந்த அவள் கணவனும் அதை நம்ப ஆரம்பிக்க, அவரை பார்க்க. நினைக்காமல், ஆனாலும் அசந்தர்ப்பவசத்தால் பார்க்க நேரும் அனைவரிடமும் அவர் சொல்வது, “உனக்குத்தான் தெரியுமே கோமு என்ன அற்புதமா சமைப்பாள் என்று. அவள் சொன்ன ரெஸிபிக்களை ஒரு புஸ்தகமா வெளியிட்டுருக்கேன். ‘கிச்சன் க்வீன்- தி கோமு’ இருநூறு ரூபாய்தான், வாங்கி நீயும் நன்றாக சமைக்கக் கற்றுக்கொள்”

ஆக, The power of perception, The power of repetitive utterance and Techniques of presentation என்பதையெல்லாம் கோமுவில் வாழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம், இவை மானேஜ்மென்ட் உத்திகள் மட்டுமல்ல, இவற்றையே நாம் வாழ்க்கை கல்வியாகவும் கொள்வோமாக.

 

கிளி ஜோசியம்

காலத்துகள்

kamadeva1

இன்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு எந்த இலக்குமில்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். 11.30 மணி அளவு கடைக்குச் செல்ல வேண்டி வர, அந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது, கூரை வீட்டொன்றின் திண்ணையில் அமர்ந்தபடி கிளி ஜோசியன் ஒருவன், 50-60 வயதிருக்கக்கூடிய பெண்ணிற்கு ஆரூடம் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கதையொன்றிற்கு விஷயம் தேறுமே என்று அவர்கள் பேசுவதை கவனிக்க ஆசைப்பட்டாலும், நாகரீகம் கருதி – அவர்களை பேசுவதை முடிந்தளவு உள்வாங்க காதுகளை கூர்மையாக்கி -, அவர்களைக் கடந்து வந்தேன். உண்மையில் நாகரீகம் கருதி அல்ல, ஆள் நடமாட்டமில்லாத நிச்சலமான தெருவில், நான் அங்கு நின்றிருந்தால் கண்டிப்பாக வசவு கிடைக்கும் என்பதால்தான் அங்கு நிற்காமல் வந்திருந்தேன். யாரும் கவனிக்காதபடி ஒட்டுக்கேட்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அதைக் கண்டிப்பாகச் செய்திருப்பேன். சரி, நான் கண்ட காட்சியை வைத்து கற்பனையில் கதை எழுத வேண்டியதுதான், இன்றைய பொழுதும் போகும் என்று யோசித்தபடி எழுத அமர்ந்தேன்.

நான் கடைசியாக கிளி ஜோசியனொருவனைப் பார்த்தது 6-7 வருடங்களுக்கு முன் கிழக்கு தாம்பரத்தில் வசித்தபோதுதான். ரயில் நிலையத்திற்குள் நுழையும் சாலையில், ஜோசியர்கள் சிலர் இருப்பார்கள், அவர்களில் கிளி ஜோசியர்களும் உண்டு. நான் பார்த்த வரை பெரும்பாலும், அவர்கள் யாருக்கேனும் ஆருடம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைக் கேட்பவர் முகத்தில் தெரியும் ஆயாசத்தையும், துயரையும் எளிதில் மறக்க முடியாது. நான் புதுச்சேரி வந்த பிறகு -இன்று பார்ப்பது வரை-, கிளி ஜோசியர் எவரும் கண்ணில் தென்பட்டதில்லை.

எங்கிருந்து கதையை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்குக்கும்போது நான் செங்கல்பட்டில் வசித்தபோது கிளி ஜோசியம் பார்த்த நிகழ்வொன்று நினைவுக்கு வர, அதையே கொஞ்சம் இட்டுக் கட்டி கதையாக எழுதி விடலாமே என்று முடிவு செய்தேன். இது கதையே இல்லை, வெறும் அனுபவக் குறிப்பாக இருக்கிறதே என்று -நியாயமான – விமர்சனம் வரும்தான் என்றாலும், உண்மையின் வீச்சிற்கு என்று ஒரு மதிப்பு இருக்கும் இல்லையா, என்று என்னை சமாதானம் செய்து கொண்டு இதை எழுத உட்கார்ந்தேன்.

செங்கல்பட்டில் பெரிய மணியக்காரத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்மத்திய பொழுதொன்றில் கிளி ஜோசியன் வந்த அன்று பள்ளி விடுமுறை நாளாக இருந்திருக்க வேண்டும். மாடியில் வீட்டின் சொந்தக்காரரும், கீழே மூன்று போர்ஷன்களில் குடியிருப்பவர்களுமாக இருந்த 4 வீடுகளிலும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்தார்கள். குடித்தனக்காரர்கள் அனைவரும் ஜோசியம் கேட்க கூடினோம். ஆனால் நான் இன்று பார்த்த பெண் போல் இல்லாமல், கொஞ்சம் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், அத்துடன் வித்தையொன்றை பார்க்கப்போகும் ஆர்வத்துடன் தான் அனைவரும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ஜோசியம் பார்த்தது சுந்தரி அக்கா. கிளி அவருக்கு எடுத்த சீட்டை பார்த்து விட்டு, “கவலைப் படாதம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும்” ,”புருஷனுக்கு வேலை சரியாகிடும்” என்றெல்லாம் ஜோசியன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மகா ஆச்சரியம். பின்னே, சுந்தரி அக்கா பற்றி புட்டு புட்டு வைக்கிறானே. புதிதாக திருமணமாகி செங்கல்பட்டிற்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்து வந்திருந்தவர் சுந்தரி அக்கா. அவர் கணவர் சென்னையில் எதோ தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். நீண்ட பணி நேரம், விரைவுப் பேருந்துகள் அதிகம் இல்லாத காலத்தில் நீண்ட நேர ரயில் பயணம், இரவு நேர ஷிப்ட் என கடும் சுமை அவருக்கு. நேரங்கெட்ட நேரத்தில் பணி முடிந்து வருவதாலேயே இருவருக்கும் அவ்வப்போது சண்டை வர அக்கா கடுமையாக கத்திக் கொண்டிருப்பார். அருகில் இரு குடும்பங்கள் இருக்கின்றனவே, நான் வேறு பேச்சுத் துணைக்கு இருக்கிறேன், அக்காவிற்கு என்ன தனிமை இருக்கப்போகிறது, எதற்காக தேவையில்லாமல் சண்டையிடுகிறார் என்று அப்போது நினைத்துக் கொள்வேன். அதே நேரம், அந்த வார இறுதியிலே சிரித்தபடி பரவசமாக கிராமத்திற்கோ, சினிமாவிற்கோ இருவரும் கிளம்பி விடுவார்கள் என்பதையும் கவனிப்பேன். வத்தக் குழம்பின் உபாசகனாக மட்டுமே இருந்த எனக்கு, உருளைக் கிழங்கும், பூண்டும் கொண்டு செய்யப்பட்ட காரக்குழம்பை அறிமுகப்படுத்தியவர் அக்காதான். பின் என் வீட்டில் சொல்லி அதை செய்வித்த போதும் , பிற இடங்களில் அதை உண்டபோதும் அந்த முதல் நாள் ருசியின் பரவசம் மட்டும் கிட்டவேயில்லை. இதெல்லாம் எனக்கும் தெரிந்த விஷயங்கள் ஆச்சே, ஜோசியனும் சரியாக அக்காவின் கணவரின் வேலை குறித்தெல்லாம் சொல்கிறானே என்று பரவசமாக அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதிலிருந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டன எனக்கு. உண்மையில் நான் மேலே கூறியவற்றுள் பல விஷயங்களை ஜோசியன் சொல்லவில்லை (கணவன்-மனைவி சண்டை, வார இறுதி இணக்கம் இத்தியாதி). அவன் சொல்லியது வேலை, எதிர்கால வாழ்க்கை பற்றிய பொதுப்படையான விஷயங்களை மட்டுமே. அவற்றையும்கூட, அக்காதான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதும் பிறகு புரிந்தது. ஜோசியனின் பாணி எளிமையானது. கிளி எடுக்கும் சீட்டைப் படிக்க வேண்டியது, தொண்டையைச் செறுமி, “இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான், அப்பறம் சரியாகி விடும்” என்பது போல் எடுத்துக் கொடுக்க வேண்டியது. அதுவே ஜோசியம் பார்க்க வந்தவர்களுக்கு தூண்டுதலாக அமைய, அவர்கள் தங்கள் கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள், அதன் பின் அதைப் பற்றிக் கொண்டு சில நல்வார்த்தைகளை ஜோசியன் சொல்ல வேண்டியது. அவ்வளவு தான் விஷயம். அன்றும் அதுதான் நடந்தது. கிளியையே அதிகம் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த நுட்பம் அன்று புரியவில்லை, ஜோசியனே அனைத்தையும் சொல்லி விட்டதாக – எனக்குத் தெரிந்த, அவன் சொல்லாததை, பிற விஷயங்களைக் கூட அவன் சொல்லியதாக நானே மிகைப்படுத்தி – எண்ணிக்கொண்டேன். அக்காவும் அப்படி உணர்ந்தாரா என்று தெரியாது. அக்காவின் மனதை இலகுவாக்கும் சிலவற்றை ஜோசியன் சொல்லி முடிக்க, வீட்டின் முன்பகுதியில் குடியிருக்கும் அக்கா அடுத்து ஜோசியம் பார்த்தார்.

அவருக்கு ஜோசியம் பார்ப்பது எளிதாக இருந்திருக்க வேண்டும். அக்காவின் முதல் குழந்தைக்கு – அப்போது அவனுக்கு 3 வயதிருக்கும் – உதட்டில் பிளவு (cleft lip) இருக்கும். பள்ளியில் சேர்த்தபின், அவனால் படிக்க முடியுமா என்ற கவலை அவர்களுக்கு. அவர்களாக எதுவும் சொல்லாமலேயே ஜோசியன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல விஷயங்களை சொன்னான். நல்ல படிப்பு, சம்பாத்தியம், நல்ல இடத்தில் திருமணம் (3 வயது மற்றும் 1 வயதான குழந்தைகளின் திருமணம் பற்றி அவன் குறி சொல்வதின் அபத்தம் அப்போது எனக்கு புரியவில்லை).

அக்காவின் கணவர் பற்றி வழக்கமான பொத்தம் பொதுவான கருத்தாக “எல்லாம் சரியாயிடுவாரம்மா” என்று சொன்ன போது மட்டும் பிலி பிலி என அவரை அக்காவும், அவர் மாமியாரும் பிடித்துக் கொண்டது எனக்கு வியப்பளித்தது. ஏனென்றால், அக்காவின் குடும்பத்தை விட பொருளியல் ரீதியாக பின்தங்கிய குடும்பம் என்றாலும், அரசு வேலை, பணி உயர்வுக்கான வாய்ப்புக்கள் இதையெல்லாம் பார்த்து திருமணம் முடிக்கப்பட்டது என்று பேசிக்கொள்ளப்பட்டது (அதாவது மற்றவர்கள் பேசிக்கொள்வதை நான் தன்னிச்சையாக ஒட்டுக் கேட்டேன்). மாமியாரும் இவருடன் அவ்வப்போது வந்து தங்கியிருந்தார். கிராமத்தில் கணவரின் தம்பி ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இவர் அதிகம் உதவுவதாக வீட்டில் சண்டை வரும், அக்காவின் குடும்பத்தினரும் வந்து சண்டையிடுவதை பார்த்திருக்கிறேன். மாமியார், மருமகள் இருவருக்குமே மகன்/கணவன் மற்ற தரப்பிற்குதான் சாதகமாக இருக்கிறான் என்ற எண்ணம் உண்டு என்பதால் சில சமயங்களில் இருவரும் ஒரே நேரத்தில் அவரை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதே சூழல் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்து நாவலொன்றைப் படித்தபோது, அதன் சம்பவங்களிற்கும் நான் அக்காவின் குடும்பத்தில் பார்த்ததற்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அன்று ஜோசியம் பார்த்த பெண்கள் , குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் வேலை இவற்றை பற்றியே கேட்டார்களே தவிர தங்களை பற்றிய தனிப்பட்ட கணிப்புக்கள் எதுவும் கேட்கவில்லை. அனைவரும் முதன்மையாக எதிர்பார்த்தது தங்கள் குடும்பம் குறித்த சில நற்சொற்களை மட்டுமே.

அடுத்து நான் ஜோசியம் பார்த்து முடித்தபின், ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்களுக்கு அடுத்த வீடு அவருடையது. வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த அவர் கணவர், வக்கீலின் சில பல ரகசியங்கள் அறிந்தவர் என்றும் அதனால்தான், இத்தனை பெரிய வீட்டை அவரால் கட்ட முடிந்தது என்றும் பேச்சு  இருந்தது. ராட்சசி குமாஸ்தாவின் மனைவியே அல்ல (குறைந்தபட்சம் முதல் மனைவி அல்ல), முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது தொடுப்பு ஏற்பட்டதாகவும், அவர் நோயில் விழ – நோயுற்றவரை கருணையில்லாமல் வீட்டின் பின்புறத்தில், தோட்டத்தில் இறக்கும் வரை கவனிப்பற்று படுக்க வைத்திருந்ததாக, ராட்சசிதான் செய்வினை வைத்ததாக – இவர் வீட்டினுள் நுழைந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். இதனாலெல்லாம் சிறுவர்களான நாங்கள் அவரை ராட்சசி என்றழைக்கவில்லை. இன்று இதை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் சராசரிக்கும் சற்று அதிகமான உயரம், பருமனான உடல்வாகு, அடர் கருப்பு நிறம், சுருட்டை முடி என அவரின் தோற்றம்தான் அப்படி அழைக்கச் செய்திருக்க வேண்டும்.

இத்தனைக்கும் எப்போதும் அடர்த்தியாக குங்குமமும் விபூதியும் பூசிக்கொண்டிருக்கும், கழுத்தில் சிறு ருத்திராட்சை மணி அணிந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால், பக்தி மிகுந்தவர் என்றே சொல்லலாம். எனக்கோ அவைகூட பீதி அளிக்கக்கூடியதாக – மந்திரம்,சூனியம் என என் கற்பனை தறிகெட்டு ஓடும் – இருந்தது. தலையில்லாதப் பெண் ஒருவர் இரவு நேரத்தில் பிச்சை கேட்க வருகிறார், இல்லையென்று சொன்னாலும் சரி, ஏதேனும் கொடுக்க கதவைத் திறந்தாலும் சரி பயங்கரமாக எதோ செய்து விடுகிறார் என்றும் ஒரு முறை புரளி பரவியது. (கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தலையில்லாத பெண்ணும் வேறெங்கோ பிச்சை எடுக்கக் சென்று விட, எல்லாப் புரளிகளைப் போல இதுவும் முழுமையாக இல்லாததால் அவர் பயங்கரமாக என்ன செய்தார் என்பது இறுதி வரை தெரியாமலேயே போய் விட்டது ). இதைக் கேட்டதும் நான் முதலில் சந்தேகப்பட்டது ராட்சசியைத்தான். நாங்கள் குடியிருந்த வீட்டின் கடைசி போர்ஷன் எங்களுடையது என்பதால் நீண்ட சந்தொன்றில் நுழைந்து தான் செல்ல வேண்டும். வீட்டின் முன்புறத்தில் உள்ள – காலமாகி விட்ட – வீட்டைக் கட்டியவரின் மார்பளவு சிலை கிலியை ஏற்படுத்தினால், இருண்ட சந்திற்குள் நுழைந்தவுடன் சுவற்றின் மறுபுறமுள்ள வீட்டில் ராட்சசி என்ன மந்திர தந்திர செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரோ என்று தறிகெட்டு ஓடும் என் கற்பனை பீதியை இன்னும் அதிகமாக்கும்.

பயம் உருவாக்கிய விலகலுடன்தான் தெருவில் உள்ளவர்கள் அவரிடம் பழகினார்கள். அன்றெல்லாம் சாதாரண கருப்பு/ வெள்ளை தொலைக்காட்சி என்பதே தெருவில் ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்த சூழலில், ராட்சசி வீட்டில் வண்ணத் தொலைக்காட்சியே இருந்தது. இருந்தும் தொலைக்காட்சி இருக்கும் மற்ற வீடுகளுக்கு வார இறுதி படம், பாடல் நிகழ்ச்சியை பார்க்க முண்டி அடித்து செல்வார்களே தவிர ராட்சசியின் வீட்டிற்கு யாரும் சென்றதில்லை. வார நாட்களில் மாலை நேரத்தில் பெண்கள் சிறு சிறு குழுக்களாக வீட்டு வாசல்களில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பது தினசரி காட்சி. ஆனால் ராட்சசி மட்டும் தனியாக தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பார். தெருவில் செல்பவர்களிடம், அடுத்த வீட்டுக்காரர்களிடம் சில சமயம் பேச்சு கொடுத்தாலும் அதை சில நிமிடங்களுக்கு மேல் அவர்கள் நீடித்ததில்லை.

எனவே ராட்சசி எங்களுடன் சேர்ந்து கொண்டது எங்களுக்கு உவப்பாக இல்லாததோடு, சிறிது அசூயையும் உருவாக்கியது. அவர் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள அல்ல, வேடிக்கை பார்க்க மட்டுமே வந்திருந்தார். ஜோசியன் அவரிடம் சீட்டெடுக்கச் சொன்ன போது ‘எல்லாம் அவனுக்குத் தான் தெரியும்’ என்பதாக ஏதோ முதலில் சொன்னவர், சின்ன வற்புறுத்தலுக்குப் பின் ஒப்புக்கொண்டார். ஆனால் இரண்டு மூன்று முறை கிளி அவருக்கான சீட்டை எடுக்கவில்லை. அவர் குறித்து விபரீத கற்பனைகளையே கொண்டிருந்த எனக்கு இதுவும் பயத்தையே உண்டாக்கியது, கிளிக்கு இவர் ரகசியங்கள் குறித்து தெரியும், ஆனால் அவற்றை சொல்ல பயம் அதனால்தான் சீட்டை எடுக்கவில்லை என்று நினைத்தேன். ஜோசியனோ அதற்கு சிறிது பருப்பும் தண்ணீரும் கொடுத்து சீட்டை எடுக்க வைத்து விட்டான். வழக்கம் போல், நேர்மறை விஷயங்களை சொல்ல ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, கொஞ்சம் யோசித்தபின், ராட்சசி அடுத்த இரு வருடங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பொருள்படும் படி பூடகமாக ஏதோ கூறினான். இப்படி சொல்வதால் ராட்சசி கோபமடைவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை, மீண்டும் ‘எல்லாம் அவன் பாத்துப்பான்’ என்பதாக ஏதோ சொன்னார். இருந்தாலும் அவர் வந்ததிலிருந்தே குறைந்து கொண்டிருந்த சூழலின் இனிமை இப்போது முற்றிலும் மறைந்து விட்டது. மாலை நேர வேலைகளை ஆரம்பிக்கும் முன், சிறிது நேரம் பொழுதைக் கழிக்கும் வழியாக ஜோசியம் பார்ப்பதை அணுகியவர்களுக்கு இப்போது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஜோசியனும் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவன் போல மூட்டை கட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான். ராட்சசியிடம் பணம் வாங்கினானா என்பதைக்கூட இப்போது என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இது என்னுடைய வழக்கமான அதீத கற்பனையாகக் கூட இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அடுத்த ஒரு வருடத்தில், சுந்தரி அக்காவின் கணவருக்கு பணி நிரந்தரமாகி அவர்கள் சென்னைக்கே சென்று விட்டார்கள். அக்காவிற்கு குழந்தை பிறந்தது என்பது தான் அவர்கள் குறித்து நான் கடைசியாக கேள்விப்பட்டது. (“ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு இல்ல அக்கா ” என்று அவர்கள் கிளம்புவதற்கு சில நாட்கள் முன் நான் கேட்ட போது “எந்த ஜோசியண்டா” என்று அவர் ஏன் கேட்டார் என புரிந்து கொள்ள சில ஆண்டுகள் தேவைப்பட்டது). இன்னொரு அக்காவின் கணவருக்கு பதவி உயர்வு கிடைத்து அவர்களும் காலி செய்து, செங்கல்பட்டிலேயே வேறு வீட்டிற்கு சென்று விட்டார்கள். அந்தப் பையனின் உதட்டுப் பிளவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இப்போது இரு குழந்தைகளும் பெரியவர்களாகி, நல்ல வேலை கிடைத்து (இரண்டாவது குழந்தை டாக்டர்) அவர்களுக்கும் திருமணம் முடிந்து பெற்றோர்களாகி விட்டார்கள் . இதல்லாம் இயல்பாக நடந்தவை, எளிதில் யூகிக்கக் கூடியவை என்று நினைத்தாலும் ராட்சசி குறித்து யோசிக்கும் போது அப்படி உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்குள், அதிக பட்சம் 60 வயது வயதாகியிருக்கக்கூடிய குமாஸ்தா, எந்த நோயினாலும் பீடிக்கப்பட்டிருக்காத நிலையில், திடீரென்று காலமாகி விட்டார். அதன் பின் சில நாட்களில் ராட்சசி வீட்டை விட்டு சென்று விட்டார், அவரை அதன் பின் குமாஸ்தாவின் -முதல் மனைவியின்- பெண் தன் சொந்தக்காரர்களுடன் வந்து சண்டையிட்டதில் ராட்சசி வெளியேற நேரிட்டது என்ற பேச்சு இருந்தது. சூனியம், பேய் குறித்த அதீத பயங்கள் அப்போது கொஞ்சம் குறைந்து விட்டதால், அவர் குறித்து நான் அதிகம் கவனம் கொள்ளவில்லை, ஆனால் மந்திரம், தந்திரம் தெரிந்தவர் என்று சொல்லப்பட்டவர் ஏன் பெரிதாக எதிர்க்காமல் சென்று விட்டார் என்று மட்டும் பின்னர் யோசித்திருக்கிறேன். அனைவரும் நல்ல விஷயங்களையே சொன்ன ஜோசியன், ஏன் ராட்சசிக்கு மட்டும் எதிர்மறையாகச் சொன்னான் என்பதும் குறித்தும் ஒரு வேளை நாலைந்து பேருக்கு ஜோசியம் பார்க்கும்போது ஒருவருக்கேனும் அவ்வாறு சொல்லவேண்டும் என்பது அவன் தொழில் முறையோ என்றும், கிளி ஏன் இரண்டு மூன்று முறை கழித்தே சீட்டை எடுத்தது என்றால், அதற்கும் அயர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என அதற்கும் நானே காரணங்களை உருவாக்கி இருக்கிறேன்.

அவன் ஜோசியம் மெய்யோ, பொய்யோ இருந்தாலும் சரி, என்னளவில் அவனை நம்ப மாட்டேன். பின்னே, கிளி எடுத்த எனக்கான சீட்டை பார்த்து ‘அய்யனாருக்கே அல்வா கொடுப்பாரு’ என்று என்னைப் போய் மகா சாமர்த்தியசாலியாக குறிப்பிட்டவனை நான் எப்படி நம்ப முடியும்? ஆனால் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான வீடுகளைப் போல, என் பெற்றோரும் என் ஜாதகத்தை சில, பல தொழில்முறை ஜோசியர்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சொல்லி வைத்தார் போல் அனைவரும் ‘மிகச் சிறந்த ஜாதகம், ஆஹா, ஓஹோ’ என்றும் ‘பணம் கொட்டும் , வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும் ‘ என்றெல்லாமும் சொன்னதாக திரும்பி வந்து என்னிடம் கூறும் போது உண்டாகாத மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அன்று கிளி ஜோசியன் சொன்னதைக் கேட்டு எனக்கு உண்டானது. அதன் பிறகு சில நாட்களுக்கு, எதிலும் வெற்றி பெறுவதற்கென்றே ஆசிர்வதிக்கப்பட்டவனாக, பலே சாகசக்காரனாக என்னை நினைத்துக் கொண்டிருந்ததும், பிறகு இயல்பாகவே அந்த மயக்கங்கள் கலைந்து விட்டன -என் அசமஞ்சத்தனம் குறித்து வெகு விரைவில் உணர்ந்து கொண்டதால் – என்பதும் உண்மையே (மற்ற தொழில்முறை ஜோசியர்கள் சொன்னதும் கூட பெரிதாக பலிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்). ஆனாலும் அவன் சொன்னதைக் கேட்டபோது உண்டான சந்தோஷத்தின் எச்சத்தை , இதோ இப்போது அதை பற்றி எழுதும்போதும் உதட்டில் தோன்றும் புன்முறுவலில் உணர்கிறேன்.