சிறுகதை

காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்

(மியா கோடோவின் சிறுகதையை போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் டேவிட் ப்ரூக்’ஷா)

டோனா பெர்டா தோட்டத்தில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. அது ஒன்றுதான் மிச்சம். பிற அனைத்தையும் உடைத்து, விறகாகப் பயன்படுத்திக் கொள்ள ஒற்றை பலகைகளாக்கி கட்டி வைத்திருந்தார்கள். மிச்சமிருந்த இந்த பெஞ்சில் ஒரு கிழவன் வசிக்கிறான். ஒவ்வொரு இரவும், ஆசனமும் மனிதனும், மரமும் சதையும், அணைத்துப் படுத்துக் கொள்வார்கள். கிழவனின் தோல் வரியோடிப் போயிருக்கிறது என்று சொல்வார்கள். அவனது புறக்கூட்டில் பலகைகளின் வடிவம் தன் தடத்தைப பதித்திருக்கிறது. பெரியவரை விளாடிமிரோ என்று பெயர் வைத்து அழைத்தார்கள். அவனது தனிமையை உரசிக் கொண்டு அந்த வழியாகச் செல்லும் தெருவின் பெயர் அது- விளாடிமிர் லெனின் அவென்யூ.

அந்த பெஞ்சை அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்று இன்று சொன்னார்கள். அந்த இடத்தில் ஒரு வங்கியின் புதுக்கிளை அமைக்கப்போகிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போனேன்: என் நண்பனுக்கு இருந்த ஒரே உலகம் இந்தச் சிறு தோட்டம்தான், அவனது இறுதி புகலிடம் இது. விளாடிமிரோவைப் போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் பயணம் என் இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று.

– வருத்தமா? நான் வருத்தமாக இருப்பதாக யார் சொன்னது?

என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் செய்தி அவனுக்கு மிகப்பெரிய ஆனந்தமாய் இருக்கிறது. ஒரு வங்கிக் கிளை, நிதிநிறுவனங்களில் ஒன்று, காத்திரமான, கான்கிரீட் கட்டிடம்- ஒரு மரத்தின் கிளையைவிட அதன் மதிப்பு அதிகம். அது எவ்வளவு பெரிதாக இருக்கப் போகிறது என்பதை அவனிடம் சொல்லி விட்டார்கள், அவனும் அவனது வளர்ப்புப் பிராணியும் தங்குவதற்கு நிறைய இடம் இருக்கும். யாருக்குத் தெரியும்,அவனுக்கு அங்கே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். சுற்றிலும் இருக்கும் மலர்ப் பதியன்களைப் பார்த்துக்கொள்ளும் வேலையாகத்தான் இருக்கட்டும், அதனால் ஒன்றுமில்லை. எனவே, கிளைகள் நிறைந்த தோட்டத்திலிருந்து, தோட்டங்கள் நிறைந்த கிளைக்குச் செல்லப் போகிறான். .

– கிளைவிட்டுக் கிளைக்குப் போகிறேன்

அவனது சிரிப்பு சோகமாக இருந்தது, உலர்ந்த சிரிப்பு.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். இரவானதும், விளாடிமிரோ சாராயத்தில் மூழ்குவான், பாட்டில்களில் மிஞ்சியிருயிருக்கும் வண்டல்களையும் விட மாட்டான். போதை தலைக்கேறியதும், அவன் இரவைக் கடந்து செல்வான், ஒரு நண்டு போல், குறுக்காக. சாலையின் மறுபுறத்தில் வேசிகள் நிற்கின்றனர். ஆம், வேசிகள் என்று அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அவர்கள் அனைவரையும் அவன் பெயர் சொல்லி அழைக்கிறான். வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அவர்கள் தோட்டத்துக்குள் வந்து, அவனருகில் பெஞ்சில் அமர்கின்றனர். விளாடிமிரோ தனது சாகசக் கதைகளை அவர்களிடம் சொல்கிறான், அவர்கள் அவனது அபத்தங்களைத் தாலாட்டாய் எடுத்துக் கொள்கிறார்கள். சில சமயம், இந்தப் பெண்கள் இரவில் சத்தம் போட்டு அலறுவதை கேட்டுக் கொண்டிருக்கிறான் யாரோ அவர்களை அடிக்கிறார்கள். கையாலாகதவனாய், முகத்தைத் தன் கரங்களில் புதைத்துக் கொள்கிறான், உதவிக்கு அழைக்கும் அவர்களின் குரல்களுக்கு அவனால் செவி சாய்க்க முடியாமல், கடவுளைக் குற்றம் சாட்டுகிறான்.

– ஆண்டவன் அளவற்ற கருணை கொண்டவன், யாரையும் இப்போதெல்லாம் அவன் தண்டிப்பதில்லை.

அழைத்துப் பேசிக் கொண்டிருக்கும் அளவு கடவுளுக்கு நெருக்கமானவன் விளாடிமிரோ. ஆண்டவனுடன் அவன் இப்படி வம்படித்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. விளாடிமிரோ ஒரு காலத்தில் ஆண்டவனின் மிகத் தீவிரமான பக்தனாக இருந்தான். ஆனால், இதற்கும் அந்தக் கிழவன் பதில் வைத்திருக்கிறான்: வயதாக வயதாக புனிதமான விஷயங்களில் நாம் சுதந்திரம் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் அச்சத்தை வெற்றி கொண்டு விடுவதால்தான் இப்படி. நமக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு அச்சம் குறையும் என்பதுதான் விஷயமா? தெரியும் என்றோ நம்புகிறேன் என்றோ எதுவும் அவனால் சொல்ல முடியாது. சில சமயம் அவனுக்கே சந்தேகமாய்தான் இருக்கிறது.

– கடவுள் நாத்திகராகி விட்டாரா?

கிழவன் இனி வாழ்வில் பயப்பட வேண்டியதில்லை, என்று விலக்கு பெற்று விட்டானா? இப்படி தனியாக இருக்கிறான், தனக்கென்று சொல்லிக் கொள்ள வீடில்லை, ஒழுங்கான ஒரு வீடில்லை. இதைச் சொன்னால் அவன் எதிர்க்கேள்வி கேட்கிறான்:

– ஒழுங்கான ஒரு வீடா? என்னைவிட ஒழுங்கான வீடு வேறு யாருக்காவது இருக்கிறதா?

சில சமயம், காய்ச்சலில், மரணம் தனக்கு மிக அருகில் இருப்பதை அவன் உணர்கிறான், அது அவனைச் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விளாடிமிரோ சில சாமர்த்தியமான காரியங்களைச் செய்யக்கூடியவன், தன்னை அழைத்துப் போக வந்தவனுக்குப் போக்கு காட்டிவிடுகிறான். பல்லெல்லாம் கிட்டிக்கொண்டிருக்கும்போதும், கண்கள் காய்ச்சலில் அனலாய் ஜொலிக்கும்போதும், அவன் பாடுகிறான். தான் ஒரு பெண் என்று பாவித்துக் கொண்டு நடுங்கும் குரலில் பாடுகிறான். பெண்கள், சாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள், என்று சொல்கிறான்.

– சாவுக்கு பாட்டு கேட்க பிடிக்கும். என்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு ஆடுகிறான்.

இவ்வாறாகத்தான் வாழ்க்கை போகிறது, ஒளிந்து விளையாடுவது போல. ஆனால் ஒரு நாள், சாவு அவனை முந்திக் கொண்டு முதலில் பாடத் துவங்கி விடுகிறது. ஆனால், அவனை அசைப்பதானால் சாவு தன் பாடலை நிறுத்தக்கூடாது. விளாடிமிரோ தன் பெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சாகும் வயசு தனக்கு வரவில்லை என்று வலியுறுத்துகிறான். முதியவர்கள் தாங்கள் கடந்து வந்த ஆண்டுகளைச் சென்று காண்பதில்லை.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், விளாடிமிரோ கொஞ்சம் உறங்குகிறான், பூனைத்தூக்கம். அலாரம் அடிக்கும் அவனது கடிகாரம் ஒரு தவளை. தன் காலில் ஒரு தவளையைக் கட்டிக் கொண்டு தூங்குகிறான். மிகத் தீவிரமான தொனியில் அவன் இதற்கு விளக்கம் சொல்கிறான்: அது ஓடிப் போய்விடாதபடிக்குதான் அதை கட்டி வைத்திருக்கிறான்.

– தன் இதயத்தில் தண்ணீர் புக அனுமதித்துவிட்ட காரணத்தால் தவளை பறக்க வேண்டுமென்பதில்லை.

இப்போது எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது,. தோட்டத்தை இடிக்கப் போகிறார்கள். ஊர் இன்னும் நகரமயமாகப் போகிறது, அதன் மனிதம் இன்னும் குறையப்போகிறது. அதனால்தான் நான் கிழவனிப் பார்க்கப் போகிறேன். நான் ஏன் அவனைப் பார்க்கச் செல்கிறேனோ, அதே காரணத்துக்காகதான் திரும்பி வருகிறேன்.

– இந்த வங்கி விவகாரம் பற்றிச் சொல். நீ உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறாயா?

விளாடிமிரோ பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்கிறான். தான் கண்டடையக்கூடிய ஆகச்சிறந்த உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைகிறது.

– நீ சொல்வது உண்மைதான். நான் கலகலப்பாய் இருப்பது ஒரு நாடகம்.

– நீ ஏன் அப்படி நடிக்க வேண்டும்?

– இறந்து போன என் மனைவி பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேனா?

இல்லை, என்று தலையசைக்கிறேன். துயரம் நிறைந்த, வெகு காலம் நோய்மையுற்றிந்த தனது மனைவியின் கதையைச் சொல்கிறான். தீவிரமற்ற, சீழ்பிடித்த சாவு. அவள் முன் நாளெல்லாம் கோமாளித்தனமான சேட்டைகள் செய்வான், சன்னமாய் திறந்து கொண்ட இருண்மையை மிரட்டி விரட்ட நகைச்சுவை துணுக்குகள் சொல்வான். அந்தப் பெண் சிரிப்பாள், யாருக்குத் தெரியும், அவனது இரக்க குணத்துக்காக அல்லாமல், அவன் மீது பரிதாபப்பட்டு அவள் சிரித்திருக்கலாம். இரவில், அவள் உறங்கிக் கொண்டிருக்கும்போதுதான், அவன் அழுவான், வேதனையில் பித்தாகி.

– இப்போதும் அப்படிதான்: இந்தத் தோட்டம் உறங்கும்போதுதான் நான் அழுகிறேன்.

என் கரம் அவன் தோளை வளைத்து உரையாடுகிறது. விடைபிரியும் காலம் வந்துவிட்டது. கையறு நிலை குறித்து இன்னும் ஆழமான புரிதலுடன் எனக்கு நினைவு திரும்புகிறது. எனக்குப் பின்னால், நான் விளாடிமிரோவை விட்டுச் செல்கிறேன், அவனோடு இந்தச் சாலையையும், ஒற்றை பெஞ்ச் கொண்ட தோட்டத்தையும். அந்தத் தோட்டத்தின் கடைசி பெஞ்ச் அது.

நன்றி – Words Without Borders

தொலைந்த துணை

சிகந்தர்வாசி 

இரவு ஒரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது, கனவில் யாரோ என்னை கூப்பிடுவது போல்.

மணி அடிக்கிறது என்று உணர சற்று நேரமாகியது. இளைஞனாக இருந்திருந்தால் திடுக்கிட்டு எழுந்திருப்பேனோ என்னவோ. சற்று குழப்பத்துடன் ரிசிவரை கையில் எடுத்தேன்.

“ஹல்லோ. நான் உன் நம்பர கண்டுபிடிக்கமாட்டேன்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் உன்ன விட மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு சிரித்தது ஒரு குரல். இளம் பெண்ணின் குரல்.

“ஹலோ யார் நீங்க?”

“ஹஹ.. குரலை மாத்தி பேசறயாடா ராஸ்கல். என்ன ஏமாத்தமுடியாது. அதுக்கு வேற ஆள பாரு”

“ஹலோ. உங்களுக்கு யார் வேணும்?”

“நீதான் வேணும் அப்படின்னு நான் சொல்லணுமா? ஹ ஹ ஹ. அந்த மாதிரி சினிமா டைலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்ன்னு” (more…)

ஏபிஎன் பெட்டிக்கடை சம்பவம்

 ஸ்ரீதர் நாராயணன்

எப்போதும் வழக்கமாக சாப்பிடும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அந்த பெட்டிக்கடைக்கு வந்து அரை பாக்கெட் சிகரெட் வாங்கி, ஒன்றை பற்ற வைந்து புகைத்தவாறே, கயிற்றுக் கொடியில் தொங்கவிட்டிருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் வார இதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அந்த வாரத்திய இதழ் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதில் தஞ்சையை முன்வைத்து அருமையானதொரு தொடர்கதை வந்து கொண்டிருந்தது. ஆர்வத்துடன் அதைக் கையில் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தபோதுதான், கடைக்குள்ளிருந்து அந்த சத்தம் கேட்டது. (more…)

சுழல்

ஹரன் பிரசன்னா

தாமிரபரணியில் குளிக்க துண்டு சோப்பு எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த சைக்கிளின் ஸ்டாண்டை எடுத்துவிட்டு ஒரு அழுத்து அழுத்தினான் பொன்னரசு. சைக்கிளைவிட தகடாக இருந்த அவனை வீட்டுக்குள்ளிருந்து சசி சத்தமாக அழைப்பது கேட்டது. சைக்கிளை நிறுத்தி அதன் மேலிருந்தவாறே அவளை நோக்கித் தலைதிருப்பி என்ன என்று கேட்டான். வரும்போது வாகையடி முக்கு செல்வம் ஸ்டோரில் ஒரு கிலோ இட்லி அரிசி வாங்கி வரச் சொன்னாள். இட்லி சாப்பிட்டே இட்லி போல அவளும் உப்பி இருப்பதாக ஒருமுறை பொன்னரசு சொன்னபோது சசியின் தம்பி சின்னா சண்டைக்கு வந்துவிட்டான். தூரத்தில் இருந்து பார்க்கும்போது இப்போதுகூட அவள் உப்பித்தான் தெரிந்தாள். இன்னும் பக்கத்தில் மிகப் பக்கத்தில் மிக நெருக்கத்தில் மிக அந்தரமாகப் பார்த்தால்தான் தெரியும் என்று சின்னாவிடம் அவன் சொல்லவில்லை. சசிக்கு பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

பொன்னரசுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. முப்பத்து ஐந்து வயதில்தான் திருமணம் ஆனது. ஜாதகம், சம்பளம் என்று ஆயிரம் சிக்கல். மகள் செல்வி அவளது மழலைச் சிரிப்பால் இப்போது வீட்டை நிறைக்கிறாள். அடிக்கடி சின்னா வருவான். எப்போதாவது மாமனாரும் மாமியாரும் வந்து அவனைப் பற்றிய குறைகளையெல்லாம் சசியிடம் கேட்டுவிட்டுப் போவார்கள். இன்றுவரை அவனிடம் யாரும் எதையும் நேரடியாகக் கேட்டதில்லை. சின்னாதான் படக்கென்று எதாவது சொல்வான். கை நிறைய சம்பளம் வாங்கும் அவனை, எப்போதும் கம்ப்யூட்டரும் செங்கல் அளவுக்கு மொபைலும் கையுமாகத் திரியும் அந்த ராஸ்கலை, வீட்டுக்கு வரும்போதெல்லாம் செல்விக்கு அழகழகான பொம்மைகள் வாங்கித் தரும் அந்த தீவெட்டித்தடியனை, போத்தீஸில் வேலை பார்த்து அதனால் வரும் கொஞ்சம் சம்பளத்தில் காலத்தைத் தள்ளும் தன்னால் எதுவும் கேட்கமுடியாதென்று பொன்னரசுக்குப் புரிந்துபோன கணத்தில் அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டான். சசிக்கும் அவனது அமைதி பிடித்துப்போனது.

சைக்கிளில் செல்லும்போதுதான் தனக்கு எவ்விதக் கவலைகளும் இருப்பதில்லை என்று பொன்னரசு நினைத்துக்கொள்வான். அருணகிரி தியேட்டர் தாண்டிவிட்டால் போதும், வழியெங்கும் பறக்கும் பறவைகளுக்கும் அவனுக்கும் எப்போதும் போட்டிதான். எல்லாப் பறவைகளும் அவனிடம் தோற்றே ஆகவேண்டும். தாமிரபரணிகூட அவன் வேகத்தில் தோற்கத்தான் வேண்டும். செல்லும் வழியில் ஒன்றிரண்டு இடங்களில் வீடு வாடகைக்கு இருப்பதைப் பார்த்தான். இப்போதிருக்கும் வீடு காணவில்லை. சில சமயம் சின்னா வீட்டுக்கு வந்துவிட்டால் இரவில் அவனும் சசியும் தனி அறையில் படுத்துக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அன்றெல்லாம் இரவுச்சாப்பாட்டில் சுவையே இருக்காது. இருக்கும் அந்த ஓர் அறையில் சின்னா படுத்துக்கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்துவிடுவான். இரண்டு அறைகள் இருக்கும் வீடாகப் பார்த்துவிட்டால் இந்தத் தொல்லை இருக்காது என்று நினைத்துக்கொண்டான். வாடகையை நினைக்கவும் இரவுச்சாப்பாடே இல்லாவிட்டால்தான் என்ன என்ற எண்ணம் வந்தது.

சைக்கிள் கொஞ்சம் போகவும் ரயில்வே கிராஸிங்குக்கு முன்னே கீரைக்கிழவி கீரை விற்றுக்கொண்டிருந்தாள். ‘நேத்து வாங்கின கீரை நல்லாருந்துச்சாடே’ என்றாள். ‘நேத்து வாங்கி நேத்தேவா சமைக்கா. இன்னைக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே சைக்கிளில் அவளைத் தாண்டி விரைந்தான். அது என்னவோ கீரை மசியல் என்றால் அவனுக்கு இருப்பு கொள்ளாது. அதை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இப்போதும். கீரையை மையாகக் கடைந்து கருஞ்சிவப்பு நிறத்தில் செண்டாக்கி அதில் வரமிளகாய் உளுத்தம்பருப்பு தாளித்து பெருங்காய வாசனையுடன் பரிமாறினால் அதை சோற்றில் பிசைந்து பரபரக்க அள்ளி உண்பான். கொஞ்சம் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் இருந்துவிட்டால் அன்றைக்குக் கொண்டாட்டம்தான்.

சீக்கிரம் குளித்துவிட்டு நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால் மேனேஜர் வாயில் விழவேண்டியிருக்கும். அன்று நதியைக் கொஞ்ச அவனுக்கு நேரமில்லை. இதே விடுமுறை நாளென்றால் அவன் எப்போது வீட்டுக்கு வருவான் என்றே அவனுக்கே தெரியாது. தாமிரபரணிக்கு எல்லா நாளும் விடுமுறை நாள்தான். அன்றும் அவள் குதித்து தெளித்து சிரித்து கும்மாளமிட்டு பொங்கிப் பிரவகித்து ஓடிக்கொண்டிருந்தாள். பாப்பா சைக்கிளில் உட்காரப் பழகிவிட்டால் அவளையும் நதிக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடலாம். கும்மாளத்தில் இவளா அவளா என்று ஒரு கை பார்த்துவிடலாம். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகவேண்டும். அந்த நினைவோடு தாமிரபரணிக்குள் முங்கினான். வெளிச்சலனங்கள் எல்லாம் மறைய நதி அவனை அப்படியே அள்ளிக்கொண்டது.

குளித்து உடைமாற்றி அப்படியே குறுக்குத்துறை கோவிலுக்குப் போய் முருகனைக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவன் விட்டுச்சென்றிருந்த செருப்பைக் காணவில்லை. கொஞ்சம் தள்ளி கோவில் வெளிமண்டபத்தில் ஒரு பண்டாரம் அவன் செருப்பை போட்டுக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தது. அவன் மெல்ல அந்த பண்டாரத்தின் பக்கத்தில் போய் அந்த செருப்பைக் கேட்டான். அந்தப் பண்டாரம் சத்தமாகச் சிரித்தது. இடைக்கு மேலே ஒரு கசங்கிய காவித்துண்டு போர்த்தி, இடைக்குக் கீழே ஒரு கிழிந்த காவி வேட்டி உடுத்தி, தலையெங்கும் சடை தொங்க கண்கள் சிவக்க அந்தப் பண்டாரம் சிரித்ததைப் பார்த்தபோது இன்னொருதடவை அந்த செருப்பைக் கேட்க அவனுக்கு பயமாக இருந்தது. நல்லவேளை பாப்பாவைக் கூட்டிக்கொண்டு வரவில்லை என்று நினைத்துக்கொண்டான். பக்கத்தில் கடை போட்டிருந்தவர் அவனிடம், ‘அந்தாக்ல அடிச்சிருவான், பக்கம் போகண்டாம், கோட்டிக்காரப்பய’ என்றார். பொன்னரசு கொஞ்சம் பின்னகர்ந்து, செருப்பை கேட்கும் எண்ணைத்தைக் கைவிட்டு, மீண்டும் முருகனை கும்பிட்டுவிட்டு சைக்கிளை நோக்கி நடந்தான். பண்டாரம் அவன் பின்னாலேயே அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது. அவன் சைக்கிளில் ஏறி வேகமாகப் போனான். வீட்டுக்குச் செல்லும் வரை கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.

வீட்டுக்கு வெளியிலேயே சின்னாவின் செருப்பைப் பார்த்துவிட்டான். இவன் எங்கே வேலை செய்கிறான், எப்படி எல்லா நாளும் இப்படி வேலைக்குப் போகாமல் ஒவ்வொரு வீடாகச் சுற்றமுடிகிறது என்று விசாரிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். வீட்டுக்குள் நுழையவும் சின்னா அவனைப் பார்த்து கண்ணை மட்டும் லேசாக மேலே உயர்த்தி ஹலோ என்பதுபோல் சைகை செய்தான். பொன்னரசு ஒன்றும் பதில் பேசாமல் சமையலறைக்குள் போனான். சசியைப் பார்த்ததும்தான் இட்லி நினைவும் இட்லி அரிசி வாங்காததன் நினைவும் வந்தது. ‘மறந்திருக்குமே… வேலைக்கு நேரம் ஆயிருக்குமே… மேனேஜர் திட்டுவானே’ என்றாள் சசி. ‘இப்ப சின்னாவுக்கு நாளைக்கு என்னான்னு பொங்கி போட. நாக்கு செத்து வாரான்.’

பதில் சொல்லாமல் தன் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அவள் பழைய சோற்றைப் பிழிந்து வைத்து அதில் மோரை ஊற்றினாள். மதியத்துக்கு செய்திருந்த உருளைக்கிழங்கில் கொஞ்சம் வைத்தாள். ‘கீர வெக்கலியா’ என்று கேட்டதற்கு சின்னா உள்ளிருந்து ‘எனக்கு கீர வேண்டாக்கா, கொமட்டும்’ என்றான். பதிலுக்கு ‘வெப்பனா அக்கா’ என்றாள் அவள். அவன் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு தட்டை எடுத்துக் கழுவி சமையலறைக்குள் வைத்துவிட்டு பேண்ட் சட்டை மாற்றிக்கொண்டு நெற்றிக்குத் திருநீறு இட்டுக்கொண்டு வேலைக்குப் போனான். சசி வெளியில் வந்து ‘வீட்டுக்குள்ள ஒருத்தன் ஒக்காந்திருக்காம்லா, அவனை வான்னு கூப்பிட்டா என்ன கொறையுது’ என்றாள். வீட்டுக்குள் சின்னா பாப்பாவைத் தூக்கி வைத்துக்கொண்டு என்னவோ விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான். ‘என்னைக்காவது எம்மகளை இப்படி நீங்க கொஞ்சிருக்கேளா? எப்பவும் ஆறு சாப்பாடு ரேடியோ. தெனமும் ஆத்துல குளிக்கலைன்னு எவ அழுதா’ என்றாள்.

எப்போதிருந்து இவள் இப்படி பேச ஆரம்பித்தாள் என்று எத்தனை நினைத்துப் பார்த்தும் பொன்னரசுக்கு பிடி கிடைக்கவில்லை. முதல்முறை பேசும்போதே அவளை செவிட்டோடு சேர்த்து அறைந்திருக்கவேண்டும் என்று நினைத்தவுடன், இப்படி எத்தனை தடவை நினைத்தாகிவிட்டது என்ற எண்ணம் வரவும் சைக்கிளை இன்னும் வேகமாக மிதிக்க ஆரம்பித்தான்.

போத்தீஸ் கடைக்குள் நுழையவும் மேனேஜர் ‘தெனம் ஆத்துல ஜலக்கிரீடை பண்ணலேன்னா ராசாவுக்கு ஒறக்கம் வராது, என்னடே?’ என்றார். ஆந்தைக்கு கண்ணாடி போட்டது போல இருக்கும் அவரைப் பார்த்ததும் இவனுக்குள் இருந்த அத்தனை எண்ணங்களும் விலகி உதட்டில் ஒரு சிரிப்பு வந்து உட்கார்ந்துகொண்டது. அதை மறைத்துக்கொண்டு அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டு பையை அலமாரியில் வைத்துவிட்டு அவன் இடத்துக்குச் சென்று நின்றுகொண்டான். ‘தெனமும் லேட்டா வா, அப்புறம் வேலை போச்சுன்னா என்னை கேக்காத.’ அவன் அதைக் காதில் வாங்காதது போல அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்தான். ஏன் இப்படி இவர்கள் இத்தனை காலையில் துணி வாங்கிக் குவிக்கிறார்கள் என்று அலுப்பாக இருந்தது.

மதியம் சாப்பிடும் முன்பு மேனேஜரிடம் சென்று, ‘அட்வான்ஸ் கேட்டேம்லா, பொண்ணுக்கு கொலுசு எடுக்கணும்’ என்றான். ‘நீ வாங்கின மொதல் அட்வான்ஸே அடையலையேடே, ராசா மொதல்ல அத அடைப்பாராம், அப்புறம் அடுத்த அட்வான்ஸ் வாங்கி கொலுசு எடுப்பாராம், இப்ப வேலைய பாப்பாராம்’ அவன் பதிலுக்குக் காத்திராமல், ‘சாப்டுட்டு மூணாவது மாடிக்கு போ, அங்கன கொஞ்சம் சோலி இருக்கு’ என்றார்.

அனைவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ‘எல, அட்வான்ஸ் தந்தானாலா பேதிக்குபோவான்?’ என்றான் கூடவேலை பார்ப்பவன். இவன் இல்லை என்று தலையசைக்கவும், ‘போத்தீஸுக்கு இவம்தா ஓனருன்னு நெனப்பு மயிரு’ என்றான் அவன். பொன்னரசு சிரித்தான். ‘என்னைக்காவது சிக்குவாம்ல’ என்றான். டிஃபன்பாக்ஸில் உருளைக்கிழங்கு பொரியலைப் பார்த்துவிட்டு, ‘என்னல நேத்து அந்த கதை அளந்த கீரை மசியல்னு’ என்று அவன் கேட்கவும், ‘சீக்கிரம் சாப்பிடணும், மேல சோலி கெடக்காம், பேதிலபோறவன் சொல்லிருக்கான்’ என்று சொல்லிவிட்டு பொன்னரசு சாப்பிடத் தொடங்கினான்.

வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வர பத்தரை மணி ஆகிவிட்டது. சின்னா அப்போதும் பாப்பாவை கையில் வைத்திருந்தான். இவன் இத்தனை நேரமும் செல்வியை கையில் வைத்திருந்திருப்பானோ என்ற சந்தேகம் பொன்னரசுவுக்கு வந்தது. இவன் வேலைக்கு வரவில்லையென்றால் இவன் அலுவலகத்தில் யாரும் எதுவும் கேட்கமாட்டார்களா என்ற யோசனையுடன் பின்னடிக்குச் சென்று கை கால் கழுவிவிட்டு உடைமாற்றிக்கொண்டு தட்டை எடுத்து வந்து சாப்பிட உட்கார்ந்தான். சசி சோற்றையும் கொழம்பையும் கொண்டுவந்து அவன் முன் வைத்தவாறே ‘இப்பவும் இட்லி அரிசி வாங்கிருக்கமாட்டீங்களே’ என்றாள். சின்னா அங்கிருந்தவாறே ‘நாந்தா வாங்கிட்டு வந்துட்டேம்லா, விடு’ என்றான் அவளைப் பார்த்து. ‘எல்லாம் நீதான் இங்க செஞ்சாவுது, மத்தவங்களுக்கும் தெரியணும்லா’ என்று சொல்லிக்கொண்டே சோற்றைப் போட்டாள்.

சாப்பிட்டுவிட்டு உள்ளே வரவும் எங்கே படுப்பது என்று அவனுக்கு ஒரு கணம் குழம்பியது. மனதுக்குள் என்னவோ ஒரு கிளி பறக்கவும் எதுவும் பேசாமல் தான் எப்போதும் படுக்கும் தனியறைக்குள் சென்று படுத்துக்கொண்டான். சின்னா ஹாலில் இருந்து அவனைப் பார்ப்பது அவன் முதுகில் அவனுக்குத் தெரிந்தது. ஆனாலும் பொன்னரசு கண்டுகொள்ளவில்லை.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சசி வரவும் சின்னா பாப்பாவை அவள் கைகளில் கொடுத்துவிட்டு ‘நா கிளம்புதென், இன்னொரு நாள் வாரேன்’ என்று சொல்லிவிட்டு பொன்னரசுவிடம் எதுவும் சொல்லாமல் போனான். பொன்னரசுவுக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. சசியிடம் இருந்து கீழே இறங்கிய செல்வி அப்பா என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்து படுத்திருந்த அவன்மேல் பொத்தென்று விழுந்தாள். அப்படியே அவளை வாரியணைத்து முத்தமிடவும் பொன்னரசுக்கு கொஞ்சம் வெளிச்சம் வந்தது போல் இருந்தது. ‘ஒனக்கு அப்பா அடுத்த வாரம் கொலுசு வாங்கித்தரேம்ட்டி’ என்று அவன் சொல்லவும், உள்ளே இருந்தே சசி ‘அதெல்லாம் வேணாம்னு சொல்லுட்டி. மாமா நல்ல கொலுசா இன்னைக்கே வாங்கிக் கொடுத்துட்டாங்கன்னு சொல்லுட்டி’ என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் புது கொலுசுடன் வந்தாள். ‘நாளைக்குத்தான் நல்ல நாளு, அம்மா நாளைக்கு போட்டுவிடுவேனாம்’ என்று செல்வியிடம் சொல்லிக்கொண்டே அந்தக் கொலுசை அவன் தலைமாட்டில் வைத்தாள்.

பொன்னரசு அதைக் காணாததுபோல் அறையின் ஓரத்தில் இருந்த ரேடியோவை இயக்கி பண்பலை கேட்கத் தொடங்கினான். சசி எதுவும் பேசாமல் பாயை விரித்து தன் பக்கத்தில் பாப்பாவைப் படுக்க வைத்து கதை சொல்லத் தொடங்கினாள். கதையில் குற்றாலம் வந்தது. குரங்கு வந்தது. செண்பகாடவி அருவி வந்தது. மந்திரவாதி வந்தான். யாரோ கையில் கொலுசுடன் சிரித்துக்கொண்டே பொன்னரசுவுக்கு முன் வந்தபோதுதான் அவன் விழித்து எழுந்தான். ரேடியோ கேட்டுக்கொண்டே அவன் உறங்கிப் போனது புரிந்தது. கத்திக்கொண்டிருந்த ரேடியோவை அணைத்துவிட்டு தலைமாட்டில் இருந்த செம்பிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தான். திரும்பி சசியைப் பார்த்தான்.

பாப்பாவைக் கட்டிக்கொண்டு புடைவை விலகி வெளித்தெரியும் பாவாடையுடன் அவள் படுத்துக் கிடந்தாள். மெல்ல அவளுருகே நகன்று, பாப்பாவை கொஞ்சம் தள்ளி படுக்க வைத்துவிட்டு, அவள் மார்பில் கைபோட்டு மெல்ல நெருங்கிப் படுத்து அவள் இடைக்கு மேல் காலைத்தூக்கிப் போடவும் அவள் பதறி விலகி அவனைத் தள்ளிவிட்டாள். ‘என்ன நேரங்கெட்ட நேரத்துல’ என்று சீறி விழுந்தாள். ‘இன்னைக்கு ஆகாது’ என்றாள். அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் ‘காலேல விளக்கேத்தினியே’ என்றான். இது மத்தியானம் என்று சொல்லவும் அவன் அவளையே பார்த்தான். ‘இதுக்கெல்லாம் நா வேணும், ஆனா என் தம்பி வந்தா மூஞ்ச காட்டுங்க. எங்க அப்பாம்மா வந்தா வீட்டுக்கே வராதீங்க’ என்றாள். மிகவும் பலகீனமான குரலில் ‘அதுக்கும் இதுக்கும் என்ன’ என்றான். ‘அது அப்படித்தான். நான் வீட்டுக்கு ஆகலைன்னாலும் இன்னைக்கு இப்படித்தான்’ என்று சொல்லி போர்வையை எடுத்து இழுத்துப் போர்த்திக்கொண்டு பாப்பாவைக் கட்டிக்கொண்டு படுத்தாள். பொன்னரசு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான். போர்வைக்குள்ளிருந்தே ‘கொலுச பாத்திருக்கமாட்டமே, ரோசம்லா’ என்றாள். அவன் பதில் பேசவில்லை.

மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக ஆற்றுக்குக் கிளம்பினான். பின்னாலிருந்து சசி ‘நேத்து இட்லிக்கு அரைக்கல, வரும்போது ரகுவிலாஸ்ல செல்விக்கு ரெண்டு இட்லி வாங்கிட்டு வாங்க, சட்னியை தனியா கட்டச் சொல்லுங்க’ என்று கத்தினாள். செருப்பில்லாமல் சைக்கிளை மிதிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கீரைக்கிழவியைப் பார்க்காதமாதிரி வேகமாக அவளைக் கடந்து சென்றான். குறுக்குத்துறையில் முதல்நாள் பேசிய கடைக்காரர் வாசலில் சைக்கிளை விட்டுவிட்டு, ‘எங்கன அந்தப் பண்டாரத்தை காண்கலியே’ என்று கேட்டான். ‘எங்கனாச்சும் சுத்த போயிருக்கும் பக்கி’ என்றார் அவர். பண்டாரம் முதல்நாள் உட்கார்ந்திருந்த இடத்தில் அவன் செருப்பு நன்றாகக் கழுவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டுவிடலாமா என்று ஒரு நிமிடம் எண்ணம் ஓடியது. சீ, தன்னைப் பற்றி இந்தக் கடைக்காரர் என்ன நினைப்பார் என்று எண்ணியபோதே அந்தக் கடைக்காரர், ‘அவன் வாரதுக்குள்ள அந்த செருப்பை எடுத்துக்கிடுங்க’ என்றார். ‘சே சே, அதெதுக்கு இனிமே’ என்று சொல்லிவிட்டு, அதே வேகத்தில் ஓடிப்போய் சட்டை லுங்கியுடன் நீர் வெளியே தெறிக்க ஆற்றுக்குள் குதித்தான்.

எல்லா அழுக்கையும் எல்லா புழுக்கத்தையும் எல்லா சோகத்தையும் அவள் கழுவிக்கொண்டு ஓடினாள். அவன் மனைவியும் தொட்டிருக்காத இடங்களையெல்லாம் ஆசையுடன் வெறியுடன் வேகத்துடன் மோதி மோதி அவனை புது மனிதனாக மாற்றிக்கொண்டிருந்தாள் அவள். மனமெங்கும் உற்சாகம் பீறிட உடலெங்கும் புத்துணர்ச்சி திளைக்க மனமே இல்லாமல் அவளைவிட்டுப் படியேறினான். எத்தனை ஜென்மத்திலும் இந்தக் குறுக்குத்துறையை அவனால் கடக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டான். கரையில் நின்று தீர்த்தம்போல ஒரு கை நீரள்ளி வானைப் பார்த்துக்கொண்டே மூன்றுமுறை குடிக்கவும் ஒட்டுமொத்த நதியும் அவனுக்குள் அடங்கிப்போனது போல் இருந்தது.

கோவிலில் பண்டாரம் உட்கார்ந்திருந்த இடத்தில் இப்போதும் அவன் செருப்பு அங்கேயே இருந்தது. தூரத்தில் பார்த்தான். கடைக்காரர் இல்லை. என்னவோ தோன்ற வேகமாகச் சென்று அந்த செருப்பை மாட்டிக்கொண்டு நின்றான். அவனுக்கு சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பை அவன் எங்கேயோ பார்த்திருக்கிறான். செல்விக்கு பசிக்கும், இட்லி வாங்கிக்கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் வரவும் செருப்பை அங்கேயே போட்டுவிட்டு சைக்கிளை நோக்கி ஓடினான்.

ஒளிப்பட உதவி- Freepik

காலண்டர்

சத்யராஜ்குமார்

பாக்கெட்டிலிருந்து டொடய்ங்கென்று சத்தம் வந்தது.

மூச்சிறைக்க நடந்து கொண்டிருந்த அனந்துவின் நடை வேகம் கொஞ்சம் குறைய – கேசவன் திரும்பிப் பார்த்தார்.

இரவு பர்தாவை விலக்கிக் கொண்டிருந்த அந்த விடியற்காலை நேரத்தில் நடேசன் பார்க் உயிர் பெற்றிருந்தது. எல்லா வயதிலுமாக ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக பார்க்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். 40+கள் நடை பயில, பதின்மங்களும், இருபதுகளும் வியர்வையில் உடை நனைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.

புல் வெளியில் வட்டம் கட்டி யோகா. ஹா ஹா ஹா வென்று ஒருவர் சிரிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நடந்து முடித்த ஒரு கும்பல் குட்டிச் சுவருக்கு அந்தப்பக்கம் கை நீட்டி அருகம்புல் ஜூஸ் வாங்கிக் குடித்துக் கொண்டே தினத்தந்தியை ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

அனந்து பாக்கெட்டுக்குள் கையை விட்டு நீள்செவ்வக செல்பேசியை வெளியே எடுத்தார். அப்படியே அந்த நடைபாதையில் சிலை மாதிரி நின்று – ஆள்காட்டி விரலால் ஃபோன் பட்டனை அழுத்தி உயிர்ப்பித்து திரையில் உள்ள செய்தியைப் படிக்க ஆரம்பித்தார்.

கேசவன் எரிச்சல் பொங்கிக் கொண்டு வர அனந்துவைப் பார்த்துக் கேட்டார். “உனக்கும் அந்த வியாதி வந்துருச்சா? என் பசங்க புள்ளைங்களை தினமும் நான் திட்டித் தீர்க்கிறேன். எந்நேரம் பார்த்தாலும் இந்த எழவை எடுத்துக் கையில் வெச்சிக்கிட்டு தொட்டுத் தடவி அதைப் பார்த்தே சிரிச்சிகிட்டு…” (more…)