சிறுகதை
அடுத்த வாரிசு
– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன் –
தியாகராஜனிடமிருந்து ஃபோன் வந்ததுமே சரவணனுக்கு வயிற்றில் முடிச்சுகள் தோன்ற ஆரம்பித்தன. நெற்றியோரமாக வியர்க்க தொடங்கியது. ஆங்க்ஸிட்டி அட்டாக் வருவதற்கான எல்லா அறிகுறிகளையும் உணர ஆரம்பித்தான். அபாயம் நேரப்போகிறது என்பதிற்கான உடலின் இயல்பான எதிர்வினையாக படபடப்பு கூடி மூச்சு சீரில்லாமல் வெளி வரத் தொடங்கியது. அதற்காக ஃபோனை எடுக்காமலும் இருக்க முடியாது. கண்ணிவெடிகளிடையே காலை வைப்பது போல ஜாக்கிரதையாக ஃபோனை எடுத்தான்.
‘சனிக்கிழமையும் அதுவுமா, ஒரு பேச்சிலர் எம்புட்டு நேரம்யா தூங்குவ’ என்று ஃபோனில் ஆரம்பித்தார் தியாகராஜன்.
நானெங்கே தூங்கினேன், சொல்லப்போனால் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து பேக்-டு-பேக்காக இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாக விச்ராந்தியாக பொழுது போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்ல நினைத்து சொல்லாமல் மென்று விழுங்கியபடி ‘ம்ம்… சொல்லுங்க சார்’ என்று மட்டும் சொன்னான். சரவணன் எந்த பதில் சொன்னாலும் அதை நுனிபிடித்துக் கொண்டு பேச்சை திருகிக் கொண்டு போய் விடும் சாமர்த்தியம் தியாகராஜனுக்கு உண்டு. அவர் கண்களில் எப்போதும் ஒரு தராசுக் கட்டி தொங்கவிட்டிருப்பார். இல்லை அப்படியொரு தராசு இருப்பது போல சரவணனுக்குப் படும்.
‘என்னத்த நொள்றது? டெம்பிளுக்கு புறப்பட்டு வாய்யா. ஆர்கனைசிங் கமிட்டின்னு பேரெல்லாம் போட்டு மெயில் அனுப்பினோம்ல. எம்புட்டு வேலை இருக்கு’ சரவணன் பதில் சொல்லுமுன்னர் ஃபோன் வைக்கப்பட்டு விட்டது.
தியாகராஜன் எப்போதும் இப்படித்தான். அவர் நட்புடன் பேசுகிறார் என்று அவன் நம்ப யத்தனிப்பதற்குள், அவருடைய காரியவாதி முகம் முன்னால் வந்து மறைத்துவிடும்.
‘எள்ளுதான் எண்ணெய் புண்ணாக்குக்கு காயனும், எலிப்புழுக்கை என்னாத்துக்கு சார் கூட காயனும்’ என்று தோன்றியது அவனுக்கு. அதை அவர் ஃபோன்காலை துண்டிப்பதற்கு முன்னர் கேட்டிருக்கவேண்டும். Anxiety அதிகமானாலே இப்படித்தான். (more…)
இங்கர்சால்
இங்கர்சால் எனும் பெயர் பிராமண குடும்பங்களில் ரொம்பவே அபூர்வம். பெயர் பொருத்தமில்லை என்றாலும் இவனும் கொஞ்சம் அபூர்வமானவன் தான். காலையில் அவன் மரண செய்தியை அறிந்ததிலிருந்து வழக்கத்திற்கு மாறாக மூன்று நான்கு தடவை வயிறு கலக்கி வெளியே போனது. அவனுக்கும் என் வயதிருக்கலாம், இல்லை இரண்டோ மூன்றோ அதிகமாகக்கூட இருக்கலாம். சவுண்டு மாமா எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றியதாலோ இல்லை உச்ச ஸ்தாயியில் பேசுவாதாலோ அவருக்கு அந்த பெயரில்லை. சௌந்தரராஜன் எனும் இயற்பெயரின் சுருக்கம் தான், ஆனாலும் பொருத்தமான பெயர் சுருக்கம்.
மாமா தூரத்து உறவு, தீவிர நாத்திகர் ஆனால் கட்சிகளிலோ அமைப்புகளிலோ இருந்ததில்லை. தன்னை நாத்திகர் என பறைசாற்றிகொண்டதோ அதன் மகத்துவத்தை ஏற்க சொல்லி பிரசாரம் செய்ததோ கூட இல்லை. அவருடைய வடபழனி வீட்டில் பூஜை அறை கிடையாது. அவர் அமாவாசை தர்ப்பனமோ வருடாந்திர தெவசமோ செய்வதில்லை என்பதில் பொதுவாகவே குடும்பத்தில் எல்லோருக்கும் வருத்தம். பித்ரு சாபம், புத் நரகம் என்றெல்லாம் பலரும் அவரிடம் சொல்லும்போது அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு புன்முறுவலுடன் சென்றிடுவார். மாமா நல்ல வாசகரும் கூட. கோபராஜூ ரமாச்சந்திரராவ் எனும் கோராவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான். an atheist with gandhi எனும் நூலை உளவியலில் பட்டபடிப்பு முடித்ததற்காக எனக்கு பரிசளித்தார். இளமையில் மாமாவின் தந்தை இறந்தபோது அவருடைய அம்மாவிற்கு சில அமங்கல சடங்குகள் செய்யவேண்டும் என பெரியவர்கள் சொன்னதை கேட்டு கொதித்து நாத்திகர் ஆகி பூணூலை அறுத்து எறிந்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு மெட்ராசுக்கு வந்தார் என ஒருமுறை அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள். நானும் அதையே செய்திருக்க வேண்டும் ஆனால் அன்று எனக்கு போதிய வயசு இல்லை. (more…)
வர்ணம்
வந்தனா பஸ்ஸில் ஏறிய போது பாதி பஸ்தான் நிரம்பி இருந்தது.
நாலைந்து அமெரிக்கர்கள். ஏழெட்டு இந்தியர்கள். சொற்பமாய் சீனத்து முகங்கள். அன்றாடம் பஸ்ஸில் ஏறும்போதெல்லாம் அவளுக்குப் பெருமை நெஞ்சில் பொங்கி வழிவதைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லோரையும் போல நானும் தினமும் வாஷிங்டன் டி.சிக்கு வேலைக்குச் செல்பவளாகி விட்டேன்.
ஆனால் கண்ணனுக்கு மட்டும் இன்னும் மனக்குறை தீரவில்லை.
கண்ணன் டி.சியில்தான் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் மென்பொருளாளனாக இருக்கிறான். வர்ஜீனியா, மேரீலாண்ட் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் அவனைப் போலவே ஏதாவதோர் அரசு அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராகவோ, நிரந்தர ஊழியராகவோ இருப்பார்கள்.
இந்த இடத்துக்கு முதன் முதலில் அவன் கூட்டி வந்தது நினைவிருக்கிறது. அப்போது அவளுக்கு அமெரிக்கா புதிது. வாஷிங்டன் டி.சி புதிது. ஒயிட் ஹவுஸ் பார்க்க ஆசைப்பட்டாள்.
“என் ஆபிஸ் பக்கத்தில்தான் ஒயிட் ஹவுஸ் இருக்கு. நான் ஆபிஸ் போறப்போ என் கூடவே பஸ்ஸில் வா! டி.சி நகரத்தை சுத்திப் பார்த்துட்டு சாயந்தரம் ஒரே பஸ்ஸில் ரெண்டு பேரும் திரும்பி வந்துரலாம்.”
வீட்டிலிருந்து எட்டு நிமிஷ கார் பயணத்தில் அந்த இடத்துக்கு வந்தார்கள். குட்டி பஸ் ஷெல்ட்டருக்குப் பின்னால் பெரிய பார்க்கிங் லாட் இருந்தது. அதில் இரண்டு கார்களுக்கு நடுவே சொருகி நிறுத்தினான் கண்ணன்.
“கார்லயே டி.சி போக முடியாதா?”
கண்ணன் புன்னகைத்தான். “டி.சி மாதிரி பெரு நகரங்களில் டிராபிக்கை கட்டுப்படுத்த ஹெச் ஓ வி-ன்னு ஒரு சிஸ்டம் இருக்கு வந்தனா.”
“ஹெச் ஓ வியா?” (more…)
பாரதி என்னும் பற்றுக்கோடு
– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன் –
‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ்….”
கரகரகொரகொரவென அவ்வப்போது அலையடித்து கலைத்துக் கொண்டிருந்த தொலைபேசிக் குரலில் பத்மநாபன் சொல்லிக் கொண்டே இருந்தான்.
‘என்னடா’ என்று நான் சற்று உரக்கவே கேட்டு மூன்று நொடிகள் தாமதத்தில் அவன் காதுக்கு போய் சேர்ந்ததிருக்க வேண்டும்.
மீண்டும் ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ் அண்ட் எஸ்ஸேஸ் அண்ட் அதர் ப்ரோஸ் ஃப்ராக்மெண்ட்ஸ்… இந்த பொத்தவம்தாம்டே. பாரதி பிரசுராலயம் வெளியீடு. மொத பதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து நுப்பத்திரெண்டுல வந்திருக்கு. அங்கன ஏதாச்சும் லைப்ரரில இருக்கான்னு பாருடே. நம்ம பாரதிப் புலவர் அய்யாவோட காப்பிய எவனொ கோண்டுட்டு போயிட்டான்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாவ. அங்கதான் அல்லா பளய பொத்தவத்தையும் மைக்ரோ பிலிமில் போட்டு வச்சிருக்கானுவளாமே. அய்யாவுக்கு ஒண்ணு வாங்கிட்டு வாடே’
மேலே சொன்னது முழுவதுமாக எனக்கு போனில் கேட்க முடியாமல் பத்மநாபனின் குரல் துண்டு துண்டாக வெட்டித்தான் கேட்டது. தொலைபேசி இணைப்பக பிரச்னையால் காணாமல் போனவற்றை நானாக இட்டு நிரப்பி புரிந்துகொள்வதற்குள் என் காலிங் கார்டின் இருப்பு தீர்ந்து போய்விட்டதாக அறிவிப்பு வந்து அழைப்பு நின்று போனது.
ஏற்கெனவே திகைப்பும் வியப்புமாக ஒரு பிரமிப்பு நிலையில் இருந்த எனக்கு இப்போது சற்று எரிச்சலும் சேர்ந்து கொண்டது. (more…)



