எஸ். சுரேஷ்

அலையெழுப்புதல்

எஸ். சுரேஷ்

 

படித்துறையின் கடைசி படியில் நின்றுகொண்டு
தும்பிக்கையை தண்ணீரில் விட்டு
“புடு புடு புடு புடு” என்று சப்தம் எழுப்பி
தண்ணீரை கொதிக்கவிட்டுக் கொண்டிருந்தது
குட்டி யானை

திடீரென்று தண்ணீரை பிளந்துகொண்டு
மீனொன்று மேலெழும்பி
“யார்ரா அது இங்க விளையாடறது?”

திடுக்கிட்ட குட்டி யானை “சாரி ப்ரதர்” என்றது,
“நீங்க இருக்கீங்கன்னு தெரியாது”

இன்னொரு மீன் எழும்பி, “விளையாட
வேற இடம் கிடைக்கலையா?” என்று கேட்டது.

குட்டி யானை தலை குனிந்து மௌனமாகியது.
சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தது.

தண்ணீர் சமநிலைக்கு வந்த பிறகு மறுபடியும்
தும்பிக்கையை தண்ணீரில் விட்டு
“புட் புட் புட்” என்று செய்துவிட்டு
மீன்கள் வெளியே வருவதற்குமுன்
படியேறி ஓடிவிட்டது

விரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்

– எஸ். சுரேஷ்

e a gardner

அத்தை பையனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நான் என் முதல் எனிட் ப்ளைட்டனைப் படித்து முடித்தேன். அவனோடு விளையாடுவதற்காக அத்தை வீட்டுக்கு ஒரு சனிக்கிழமையன்று கொஞ்சம் சீக்கிரம் போய் விட்டேன், ஆனால் அவன் பள்ளியில் அன்றைக்கு அரை நாள் வகுப்புகள் இருந்தன. அவன் வரும்வரை அவனுக்காக அங்கேயே காத்திருபப்து என்று முடிவு செய்தேன். அப்போது அங்கே எனிட் ப்ளைட்டன் எழுதிய சீக்ரட் செவன் புத்தகம் ஒன்று இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவன், அது மிகவும் விறுவிறுப்பாக இருக்கவே அத்தை பையன் ஸ்கூல் விட்டு வருவதற்கு முன்னரே படித்து முடித்தும் விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் புத்தக நினைவு இதுதான் என்று நினைக்கிறேன். அப்போது நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.

செகந்திராபாத்தில் எனக்கு வாய்த்த உலகைவிட முற்றிலும் மாறுபட்ட உலகம் எனிட் ப்ளைட்டனின் பிரிட்டிஷ் உலகம். அதனால் அது அதிசயமாகவும் வசீகரமாகவும் இருந்தது. சின்னஞ் சிறுவர்கள் துப்பறியும் நிபுணர்களாக இருக்க முடியும் என்பதும் அவர்களால் குற்றங்களைத் துப்பு துலக்க முடியும் என்பதும் என் கற்பனையைக் கிளர்த்தின. வெகு விரைவிலேயே எனிட் ப்ளைட்டன் விவகாரத்தின் தவிர்க்க முடியாத அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டேன்: பேமஸ் பைவ், பைவ் பைண்ட்அவுட்டர்ஸ், யங் அட்வென்சரர்ஸ் இத்யாதி வகையறாக்களின் செயல்பாடுகளை தேடித்தேடி வாசித்தேன். பெண்கள் வாசிக்கும் மலோரி டவர்ஸ் போன்ற புத்தகங்களைத் தொடவில்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. (more…)

கால்பந்தை கால்மணி நேரம் – இரு கவிதைகள்

கவிதைப்படுதல்

– ஸ்ரீதர் நாராயணன்

அகண்ட எழுபது இஞ்ச் டிவி திரையில்
கால்பந்தை கால்மணி நேரம் பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான் அந்தக் கவிதை
உள்ளே நுழைந்தது

அணில்பிள்ளை சாடி விளையாடுவது போல
புஜத்திற்கு புஜம் பந்தை
சறுக்கவிட்டு வேடிக்கை காட்டியது

சிசர்ஸ் கிக் அடிக்கும் வேலுநாயகம் அண்ணன்
பின்னாடியே ராமசந்திரனும், சத்தியமூர்த்தியும்
செத்துப் போன முத்துகுமாருக்கு சப்ஸ்டிடியூட்டாக
சாயபு டீக்கடைப் பையன் பிஜி
நெல்லைப் பெண்ணை ஆள்வைத்து
தூக்கிய கிளமெண்ட்
குலமங்கலத்திலிருந்து கருக்கலில் கிளம்பி
ஓடியே தமுக்கத்திற்கு வரும் பாலமுருகன்
என்று பட்டியல் போட்டது

முட்டைக் கண்ணன் பேரு பாரதியோ சாரதியோ
காலைச் சுற்றிச்சுற்றி வரும் குழந்தையை
தாக்காட்டுவது போல
தளுக்காக பந்தை உருட்டிப் போவான்.

பாழாய்ப் போன கவிதை ஆளை சொன்னால்
பெயரை மறக்கிறது. பெயரைச் எடுத்துக் கொடுத்தால்
ஊரை மறந்து தொலைக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்
தலைமை தாங்கிய ஃபைனல்ஸில்தான்
செக்கானூரனி அமீது கவட்டைக்குள்
காலைக் கொடுத்து புரட்டிவிட
காலொடிந்து போய்
அத்தோடு கவிதையும் காணாமல் போனது

அகன்ற திரையில்
காலி மைதானம் மட்டும் எஞ்சியிருந்தது

oOo

கொண்டதும் கொடுத்ததும்

எஸ். சுரேஷ்

கால்பந்தை​க்​ கால் மணி நேரம் பார்த்துக்கொண்டு
மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த குரங்கு
அந்த சிறுவன் வருகை பார்த்து உஷாரானது

சிறுவன் கால்பந்தை நெருங்கும்பொழுது
மரத்தைவிட்டு நிலத்துக்குத் தாவி
கால்பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு
மரத்தில் ஏறி உச்சிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டது

கீழிருந்து வந்த அழுகைக் குரல் கேட்டு
“இந்த நாள் நன்றாக விடிந்தது,”
என்று சொல்லிக் கொண்டு உரக்கச் சிரித்தது குரங்கு.

கவியின்கண் 16 – குறைகளற்ற மலர்

எஸ். சுரேஷ்

ஒற்றை மலரை எனக்கு அளித்தான், நாங்கள் சந்தித்தபின்.
மென்மையான ஒரு தூதுவனை அவன் தேர்ந்தெடுத்தான்;
ஆழ் இதயம், தூய்மை, ஈரம் காயாத பனித்துளியின் நறுமணம்-
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

மலர்களின் மொழியை நான் அறிவேன்;
“மெல்லிய என் இதழ்களில் போதிந்திருக்கும், அவன் இதயம்”
எப்போதோ காதல் தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்ட சின்னம்
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

இதுவரை ஏன் ஒருவரும் எனக்கு
குறைகளற்ற ஒரு லிமோ அனுப்பியதில்லை|
இல்லை, என் அதிர்ஷ்டம் எப்போதும் எனக்குக் கிடைப்பது,
குறைகளற்ற ஒற்றை ரோஜா

– டார்தி பார்க்கர் (more…)

காணவில்லை

எஸ். சுரேஷ்

blank-poetry

 

“ஹ்ம்ம். இந்தக் கவிதையில் மேக்கப் இல்லை
அனாவசியமான வார்த்தைகள் இல்லை
தேவையற்ற அணிகலன்கள் இல்லை
சொல்லாமல் விடப்பட்ட விஷயங்கள் பல இருக்கு
நம் சிந்தனை விரிய இடம் கொடுக்குது
கவிதைக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய
மௌனம் இதுக்குள்ள இருக்கு,” என்று கூறிவிட்டு
ஒரு நொடி மெளனமாக இருந்தபின்
“கனத்த மௌனம் இருக்கு
மொழியின் எல்லையைத் தாண்டுது
கவிதை இலக்கணத்தை மீறுது
பின்நவீனத்வ கோட்பாடுகளைக் கேள்வி கேக்குது
மொழியோட இசையை நிராகரிச்சி
வார்த்தைகளோட ஒலியை நிராகரிச்சி
வார்த்தைகளுக்கு இடையே இருக்கும்
மௌனம் வழியா நேரடியாப் பேசுது”-

“கவிதை” என்று தலைப்பு மட்டும் எழுதி
நான் கொடுத்த வெற்றுக் காகிதத்தை
இன்னொரு முறை உற்று நோக்கிவிட்டு
பத்திரிகையாசிரியர் என்னிடம் சொன்னார்,
“நம் எல்லா கோட்பாடுகளுக்கும் உட்பட்டிருக்கும்
இந்த கவிதைய அடுத்த வாரம் போட்டுடலாமா?”