சிகந்தர்வாசி

அந்திப் பொழுது

 

கீழ்வானம் சிவக்க,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் விளக்குகள் எரிய
வாகனங்களின் சப்தமும் கீச்சு கீச்சு என்ற பறவை ஒலியும்
சேர்ந்து கொள்ளும் சந்தி வேளையில்
நாங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம்
எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் அவர்
அடுத்துச் சொல்லப்போவது எனக்கு தெரியும்-

“நாகராஜன் ஹார்ட் அட்டாக்ல நேத்து போயிட்டார்”

மெளனமாய் நடக்கிறோம்

“அடுத்தது நான்தானோ?
என் வயசுக்காரா ஒவ்வொருத்தரா போயிண்டு இருக்கா,
அடுத்தது என் முறை.
பேஸ்மேக்கர் எவ்வளவு நாள்தான் என்னைக் காப்பாத்தும்?”

பெட்டிக் கடைக்காரன் எங்களை பார்த்து புன்னகைக்கிறான்
இரண்டு வருடங்களாக இதே சந்திப் பொழுதில்
இதே தெருவில் தினமும் நடக்கிறோம்.

“பட் ஐ ஹாவ் நோ ரிக்ரெட்ஸ்
எனக்கு எந்த வருத்தமும் இல்லை
வாழ்கையை நல்லா அனுபவிச்சாச்சு. வேற என்ன வேணும்?”

சூரியன் சோர்வடைய, சிவப்பு கரைய
மேற்கு திசையை இருள் கவ்வ
வீதி விளக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன
வீடு திரும்பும் வாகனங்களின் ஹார்ன் காதைத் துளைக்க
பறவைகளின் கூக்குரல்கள் அடங்க
இன்னொரு நாளும் கழிந்தது.

ஒளிப்பட உதவி – Finnsticks blog

மானுடம் குடியமர்ந்த கோள் – புறப்பாடு

சிகந்தர்வாசி

அந்தச் சீனர் உறங்கிக் கொண்டிருப்பதை லிண்டா லூவும் நானும் பார்த்தபடி நின்றிருந்தோம். அவர் விழித்துக் கொள்வார் என்று காத்திருந்தோம், ஆனால் அவர் குறட்டை விட ஆரம்பித்தார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முழுக்கதையும் தெரிந்து கொள்ளும் ஆரவம் எங்களுக்கு இருந்தது, ஆனால் அவர் எப்போது விழித்துக் கொள்வார் என்று தெரியவில்லை. அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அவர் தூக்கத்தைக் கலைத்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, எனவே காத்திருந்தோம்.

கால் மணி நேரத்துக்குப் பின்னர், சி லிங்கின் மகன் வீட்டிலிருந்த எங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டோம். அவன் இளம் பருவத்து சி லிங்க் போலிருந்தான். அவனை எல்லாரும் ‘சீனக்குட்டி’ என்று செல்லமாக அழைத்தனர். அவன் வேறொரு வீட்டில் இருந்தான், தினமும் தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்து வருவான். இப்போது இங்கே நாங்கள் இருப்போம் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறோம் என்று கேட்டான். எங்களுக்கு வரலாற்றில் உள்ள ஆர்வத்தைக் கூறிவிட்டு, பாதி கதையில் பெரியவர் உறங்கி விட்டார் என்று சொன்னோம். அவன் சிரித்துக்கொண்டே, “இந்தக் கதையை அவர் பலமுறை எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அவரே அதில் பாதியை உங்களிடம் சொல்லிவிட்டதால், மீதியை நான் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, சீனக்குட்டி கதையைத் தொடர்ந்தான். (more…)

இரானி டீக்கடை- ஒரு கப் சாயுடன்

சிகந்தர்வாசி

உனக்குள் நுழைகிறேன்
தனிமையில், ஒரு கப் சாயுடன்
கோடியில் உட்கார்ந்துகொள்ள

சிகரெட் புகையுடன் கனவும்
கலந்து மிதக்கிறது இங்கே
எல்லோரையும் ருபாபாக பார்க்கும் வெயிட்டர்கள்
முன்பின் பார்த்தறியாதவரிடம்
தன் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்பவர்கள்
ஒரு கப் சாயுடன்

இரானி டீக்கடைக்கே உரிய
ஒஸ்மானியா பிஸ்கட், டை பிஸ்கட், பைன் பிஸ்கட்,
க்ரீம், சோட்டா சமோசா ஷெல்பில் இருக்கின்றன
ஒரு கப் சாயுடன் சாப்பிட

கடையினுள் குரல்களின் ஓசை
வெளியிலிருந்து வரும் வாகனங்களின் அலறலைத் தடுக்கிறது

எப்போதும் அந்த மேஜையில்
அதே ஆறு பேர், எங்கும் செல்லாத கனவுகளை
தினமும் காண்கிறார்கள்
ஒரு கப் சாய் அருந்திக்கொண்டே

அதோ, அங்கு டீ அருந்துபவன்
சாஸரிலிருந்து உற்சாகத்தை உறிகிறான்

சிலருக்கு இரானி டீக்கடை
ஆராமாக இருக்க ஒரு இடம்
சிலருக்கு இரானி டீக்கடை
ஒரு புகல், அன்றாட கஸ்ரத்திலிருந்து
தப்ப ஒரு இடம்.

இவற்றில் எது என்னைப் வசீகரித்து,
தினமும் இங்கு அமரச் செய்கிறது?
ஒரு கப் சாயுடன்​

கோடுறு தீக்கூற்றம்

 

சிகந்தர்வாசி

நீண்டு என் முகம் தொடும் கை
விரல்களின் சுருக்கங்கள் கன்னத்தின்
மழிக்கப்படாத சருமத்தில் சொரசொரக்கின்றன.
கண்டுகொண்டது போன்ற மென்சிரிப்பு
தோன்றியதும் மறைகின்றது, மின்னலெனக்
கண்களில் உயிர்க்கும் ஒளிக்கீற்றும்.
எப்போதும் நிலைகொண்ட தொலைதூரப் பார்வை,
திரும்பவும் தன் இடம் வந்தமர்கிறது.

மெல்ல நடக்கும் அவர் பாதையில்
இடம் வலம் உந்திச் செல்கிறேன்,
வலிக்காமல்- அவர் கைபற்றிச் செல்கையில்,
நடை நிறுத்தி போக்குவரத்தைப் பார்க்கிறார்,
தான் இருப்பதை விளங்கிக் கொள்ள.
உன்னி வெறிக்கும் அவர் பார்வை
எதிர்படும் ஒருவரை மிரளச் செய்கிறது.
முன்னறிவிப்பின்றி, காரணமின்றி,
எங்கிருந்தோ வருகிறது அந்தப் புன்னகை,
சிரிப்பு, அது வெறும் சிரிப்பு, தூய சிரிப்பு,
அவர் முகத்தை தனதாக்கிக் கொள்ளும்
அதன்பின் நினைவேதும் இல்லை,
அல்லது உண்டா? தெரியவில்லை.

நடக்கத் துவங்குகிறோம்.
எண்ணங்களில் என்னை இழக்கின்றேன்.
அவர்? தெரியவில்லை.
வீடு சேர்ந்ததும் புதிராய்ப் பார்க்கிறார்,
தன்னை உள்ளழைத்துச் செல்லும்
என் அம்மாவை.
இணை வரலாற்றின் சமச்சீர் குலைவில்,
ஆதாரம் இழந்துவிட்டன
அம்மாவின் நினைவுகள்.
அவற்றை மெய்ப்படுத்த வேண்டியவர்
அமைதியாய் இருக்கிறார்.
கோடுறு தீக்கூற்றுவன்
கொன்று கொண்டிருக்கிறான்
என் அம்மாவை.

image credit : ‘Two People. The Lonely Ones’, Edward Munch, MomA

மானுடம் குடியமர்ந்த கோள் – விடை பெறுதல்

சிகந்தர்வாசி

லிண்டா லூவும் நானும் சி லிங்கின் குடிலை நோக்கி நடக்கத் துவங்கினோம். அவருக்கு நூறு வயது கடந்து விட்டிருந்தது. “நூறு வயதுக்கும் மேல் என்பது சரி, ஆனால் ஒவ்வொரு ஆண்டையும் எவ்வாறு கணக்கு செய்கிறாய்?” என்று கேட்டாள் லிண்டா.

“ஏன், நமக்குக் கற்றுக் கொடுத்தபடி கணக்கு பண்ணப் போகிறோம்,” என்றேன் நான், “689 நாட்கள் ஆனால் ஓராண்டு, இல்லையா?”

“அது செவ்வாய் ஆண்டு. சீனத்து ஆண்டுதான் பூமியின் ஆண்டு, 365 நாட்கள்”

“அப்படியானால் பூமி கனகுப்படிதான் அவருக்கு நூறாண்டுகள் ஆகின்றன என்று சொல்கிறாயா?”

“ஆமாம், அதுதான் சந்தேகமாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஆச்சரியமான மனிதர்தான்”

உண்மையில் அவர் ஆச்சரியமான மனிதர்தான். அவரது தொல் சுருக்கங்கள் நிறைந்திருந்தது, கண்கள் குழியுள் ஆழ உட்சென்றிருந்தன, அவருக்கு கண்களே இல்லை என்பது போல் அவரது தோற்றம் இருந்தது. சி லிங் உயரம் குறைந்த மனிதர், கூன் போட்டிருந்ததால் இன்னும் குள்ளமாகத் தெரிந்தார். லிண்டா லூ உயரமான பெண், அவர் முன் அவள் மிக உயரமாகத் தெரிந்தாள். லிண்டா லூ அவரது பிரியத்துக்குரிய பெண், எனவே அவளைப் பார்த்ததும் அவர் சிரித்தார். வாயில் ஒரு பல் இல்லை. இந்த வயதிலும் அவரது பார்வை பழுதற்றிருந்தது, துல்லியமாகக் காது கேட்டது, சிரிக்கும் வாய்ப்பு எதையும் அவர் தவற விடவில்லை – குறிப்பாக, பெண்களிடம் நிறைய சிரித்துப் பேசினார். (more…)