இரவின் பின்னேரம் கனவு கண்டு கொண்டிருக்கிறது –

ஆயின் நாம் ஒருவரா,
இருவரென்ற கனவில்?
ஆனால் என் கனவில் வண்ணங்கள் மாறுகின்றன,
உன் கனவின் வண்ணங்கள்,
அவை அசையக்கூடாதவை.

இருளிலிருந்து பின் என் அறை
ஒளியில் பளிச்சிடுகையில், ஸ்கார்ப்கள்,

தலையணைகள், மேளங்கள், க்ரோட்டன்ஸ்,
நடுங்குகின்றன, முன்னும் பின்னும் அதிர்கின்றன,
உன்னிலிருந்து பின் என்முன், ஜொலிக்கின்றன
சிலகாலம், அவை நம்
தொடைகளை, உன் கழுத்தை, 
என் செவ்வந்திக்கல்லை, பின் குரலை
மெல்லத் தடவிக் கொஞ்சி,
சுவர்களில் உயரே தம்மிடத்துக்கு,
தம்மை உயர்த்திக் கொள்கின்றன,
தரையில், மீண்டும் உன் தொலைகால வாழ்வை,
மெல்லத் தட்டிக் கொடுக்கின்றன
பின் திரும்பவும் ஜொலிக்கின்றன
உன்னிடத்து உள்ளதை தம்மில் கொண்டு
அவற்றின் உள்ளடக்கமாய் நீயாகி
வடிவிலும் வண்ணங்களிலும்
உன்னில் தோய்ந்து வளரும்வரை
இருந்துபின் என்னுள் பாய்கின்றன
என் கழுத்தைச் சுற்றிக் கொள்கின்றன,
என் கரங்களில் மத்தளமிடுகின்றன,
என்னில் தலையணைகள் சரிகின்றன,
க்ரோட்டன்ஸ் என்னை வண்ணத்தில் குழைக்கின்றன,
என்னில் பேசும் வண்ணங்களாய்
நான் கேட்டாக வேண்டிய பதில்களாய்
நான் என்னை வண்ணங்களாய் உணரும்வரை,
வண்ணங்கள் நகர்ந்தாக வேண்டும் 
உன்னைக் கொண்டு பேச. அவை 
உன் இதயத்தைத் துளைத்துப் பாய்கின்றன,
உன் வாழ்வைச் சுற்றி வருகின்றன,
நீ விரும்பியும் ஆனால் அறியாத
யாருக்காகவோ, உன்னில் சாய்கின்றன,
கீழிருந்து உன்னுள் இறங்குகின்றன.
தடவிக் கொஞ்சும்போது உன் தொடைகள்
ஜொலிப்பதில்லை. என் கரம் இப்போது
காகிதத்தில் இருக்கிறது, என் விரல்கள்
பேனாவில் சிக்கிக் கொண்டிருக்கின்றன, 
உன்னைத் தொடுகின்றன
அவை உன்னைத் தொடும்
நீயில்லாதபோதும், 
எனவேதான் உன் விரல்கள் நடுங்குகின்றன
என் சொற்களைத் தண்ணீரில்
எழுதிக் கொண்டிருக்கும்போதே,
நான் வாசிக்க முடியாத சொற்கள்,
நான் பருக முடியாதவை,
ஆனால் நீ அருந்தும்போது அவற்றை
உணர்கிறேன், உன் நாவில்
என் மணிக்கட்டில், என் முதுகில் கீழிறங்கி
வளைந்து என் கால்களில் புடைக்கிறது.
கனமற்ற மெல்லிய நீரில் என் மேல், 
நீ அருந்துகையிலும் தாகத்தில்.
இப்போது நீ விழிக்க விரும்புகிறாய்,
நான் அந்தச் சொற்களைப் பேசிக் கேட்கவும்.
நான் உன் சொற்களை அறிந்திருப்பதால்
அத்துடன் உன் தாகம் தணிகிறது
பேசும் உன் ஆசையும் அடங்குகிறது
நாம் வண்ணங்களில் பேசுவோம்
நம் கனவுகளும் ஒன்றாய் சுவாசிக்கும்.
நாம் நம் உடல்களுக்கெதிராய் சுவாசிப்போம்
சருமத்துக்கு வெம்மையளித்து
குளிர்விக்கும் சுவாசத்தைக் கொண்டு
எழுதிய வாக்கியங்களை, ஒலியின்றி.
நாம் நம் உடல்களைச் செவிப்போம்,
காது கொடுத்து. அதன் பின்
நாவால் சுவைத்து நம் செவியுண்போம்.
சொற்களை நம்மை மயக்குகின்றன, 
நாம் கண்ணோடு கண் வைத்துப் பார்க்கிறோம்,
கண்விழிகளுள் ஊடுருவிச் சென்று
பார்வையைக் காட்டிலும் நெருங்கிய ஒன்றை
அடைகிறோம். உன் கண்களை முத்தமிடுகிறேன்,
பார்வையின் தொலைவை உண்டு தீர்க்கிறேன்.
சுவர்களில் ஜொலிக்கும் தொலைவை,
நீயிருக்கும் இடத்தில், நானிருக்கும் இடத்தில்.
நன்றி – Fictionaut
ஒளிப்பட உதவி- About.me

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.