கவியின்கண் 7 – “கடுவிசை உருமின்”

– எஸ். சுரேஷ்-

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ.
– குறுந்தொகை, 158

எளிய ஆங்கிலத்தில்,

In the high mountains
accompanied by loud sounds
of thunder
and the swirling water bearing winds
you arrive
O rain
you who can shake the Himalayas
Can’t you take pity
on us lonely girls?

என்று சொல்லலாம்.

தலைவன் திரும்பக் காத்திருக்கும் பெண் தனிமையில் இப்பாடலைப் பாடுவதாக நூல்கள் கூறுகின்றன. அவள் காத்திருக்கும்பொழுது, இடியும் மின்னலுமாக மழை வருகிறது. இந்த மழையில் காதலன் வருவானா மாட்டானா என்று கவலை கொண்ட அவள், தனிமையில் இருக்கும் பெண்களிடம் இரக்கம் காட்டச்சொல்லி மழையிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது.

நாம் எல்லாரும் காத்திருந்திருக்கிறோம். குழந்தை தன் பெற்றோருக்குக் காத்திருக்கிறது, காதலன் தன் காதலிக்குக் காத்திருக்கிறான், மனைவி கணவனுக்காகக் காத்திருக்கிறாள், தாய் தன் குழந்தைக்காகக் காத்திருக்கிறாள். என் மாமா அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்காக என் பாடி, அம்மா, அத்தை என்று அனைவரும் எங்கள் வீட்டு சுற்றுச் சுவர் அருகே காத்திருந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கதவுக்கருகில் வரிசையாக இந்தப் பெண்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து என் மாமாவுக்கு எரிச்சலாக இருக்கும். “அஞ்சு நிமிஷம் லேட்டா வரக்கூடாதே, குடும்பமே கதவுக்கு வந்திடும். நான் என்ன குழந்தையா?” என்று கேட்பார். ஆனால் காத்திருப்பு ஒவ்வொரு நாளும் தொடரும்.

பல வீடுகளிலும் வேலைக்குப் போன ஆள் திரும்பி வரக் காத்திருக்கிறார்கள் என்றால், தன் காதலனுக்காகக் காத்திருக்கும் காதலியின் ஆதங்கத்தைச் சொல்லவே வேண்டியதில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் கவலையை அதிகரிக்கிறது, மனம் வெவ்வேறு கற்பனைகளால் அவதிப்படுகிறது – அவற்றில் பலவும் உற்சாகமான எண்ணங்கள் அல்ல. நெருப்பில் நிற்பது போல என்றும் முள் படுக்கையில் இருப்பது போல என்றும் சொல்வது புரிந்து கொள்ள முடியாததல்ல.

இப்படிப்பட்ட பல கற்பனைகளுக்கு தாமதம் ஒரு காரணமாகவே இருக்க வேண்டியதில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இப்பாடலை வாசித்தால் இங்கு விவரிக்கப்படும் மழை அப்படியொன்றும் பிரமாதமாக இருந்திருக்காது என்று தோன்றுகிறது. ஆனாலும் இப்பெண்ணின் கற்பனை இடிச் சத்தத்தை பாம்புகளைக் கொல்லக் கூடியதாகவும், அடைமழை இமயத்தைத் தகர்க்கக் கூடியதாவும், மேகங்களை கன்னங்கரியதாகவும் மாற்றிவிடுகிறது. அவனது வருகையைத் தடுக்கும் ஒவ்வொரு தடையும் தாண்ட முடியாத பரிமாணங்கள் கொள்கின்றன. காதலி நெஞ்சத்தின் பதிப்பு இத்தகையது.

இப்போது எல்லாம் சுலபமாகி விட்டது. எந்த வீட்டிலும் பெண்கள் சுற்றுசுவர்களில் சாய்ந்து நிற்பதில்லை. எல்லாருமே கைபேசி வைத்திருக்கின்றனர், ஒருத்தர் எங்கிருக்கிறார் என்பதை கணத்துக்கு கணம் தெரிந்து கொல்ல முடிகிறது. இதனால் கவலைப்படாமல் பெண்களால் தொலைகாட்சி தொடர் பார்க்க முடிகிறது. காதலர்களின் நிலையம் இப்படிதான். சொன்ன இடத்துக்கு வந்து சேரும்வரை தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கலாம்.

இந்தப் பாடலில் ஒரு குறிப்பிட்ட வகை வாசிப்புதான் இது. இதுவே நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் வேறு வகை வாசிப்பும் சாத்தியமே. மழை குறித்து பாடலில் உள்ள தகவல்களோடு, ,மழை தாபத்தின் படிமமாக இருப்பதைத் தொடர்புபடுத்தினால். புதிய உலகங்கள் திறந்து கொள்கின்றன. கரிய மேகங்கள்,உக்கிரமான காற்று, அடைமழை, பாம்புகளைக் கொல்லும் இடியோசை – இவையனைத்தும் தாபத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. இது பெண்ணின் தாபம். இதுதான் இமயத்தைத் தகர்க்கக்கூடியது. தன் தாபத்தை நோக்கி இந்த இளம் பெண் இப்பாடலைப் பாடுகிறாள் என்று வாசிக்கும்போது நமக்கு முழுமையான பொருள் கிட்டுகிறது. இந்த இளம் பெண்ணிடம் இரக்கம் காட்டு. இதயத்த்தில் உணர்ச்சி வெள்ளம் கட்டற்றுப் பாய்கிறது, நான் தனியாக இருக்கிறேன். தனிமையும் உணர்ச்சிகளும் இணைவது எத்தனை கடுமையான சூழலாக இருக்கும்!

பைரப்பாவின் பாரதக் கதையான ‘பர்வா’ சர்ப்ப யாகத்தில் துவங்குவதில்லை. அஸ்தினாபுரத்துக்கு வெகு தொலைவிலுள்ள ஒரு சிற்றரசில் துவங்குகிறது. அதன் இளவரசி வயதுக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அரசனின் அப்பா (மகனை ஆட்சியில் அமர்த்த மணிமுடி துறந்திருக்கிறார்), நாட்கள் போய்க் கொண்டேயிருக்கின்றன, இன்னும் தன் பேத்தி கன்னி கழியவில்லையே என்று வருந்துகிறார். அந்த தேசத்தில், பெண்கள் ஆண்களைச் சந்தித்துக் கொள்வதும் மணமாவதற்கு முன்னரே மகப்பேறு அடைவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கம். பருவ வயது பெண்களின் உணர்வுகளை அறிந்த சமுதாயம் அது. இப்போது அரசனாக இருப்பவன் இதை ஏற்றுக் கொள்வதில்லை. அஸ்தினாபுரத்தில் அற விழுமியங்கள் மாற்றி எழுதப்பட்டு வருகின்றன, அவற்றை இவனும் பின்பற்ற விரும்புகிறான். தானும் நாகரிகமாக நடத்து கொள்ள வேண்டும், தன் மகள் மணம் புரிந்த பின்னரே ஆணின் தொடுகையை அறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.

திருமணத்துக்கு முற்பட்ட கலவியை சமூக அமைப்புகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பது குறித்து இதில் ஒரு பார்வை நமக்குக் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் வளர்ச்சியற்றதாகக் கருதப்படும் சமூக அமைப்புகளும் மிக அதிக அளவில் முன்னேறிய சமூக அமைப்புகளும் இணைபார்வை கொண்டிருப்பதகா நினைக்கிறேன். ஆனால், வளரும் நாடுகளில் இது எதிர்க்கப்படுகிறது. பாலியல் விடுதலை குறித்த விவாதம் எழும்போது பல உளவியலாளர்களும் இந்த விஷயத்தில் சுதந்திரமாக இருக்கும்போது இளைஞர்களுடன் உரையாடல் சாத்தியமாகிறது, அதன் சாதக பாதகங்களை விளக்க முடிகிறது என்கின்றனர். போதுமான தகவல்கள் இல்லாத இடத்தில் இளைஞர்கள் தவறான முடிவுகள் எடுத்து அதன் விளைவாகத் துன்பப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒரு உடன்நிகழ்வாக, இப்போது நான் எம் டி வாசுதேவன் நாயரின் வாரணாசி படித்துக் கொண்டிருக்கிறேன். இளமையின் உணர்வுகளும், அவற்றின் விளைவுகளும் இதில் பேசப்படுவதைப் பார்க்கிறேன். முன்னேறிய தேசங்களில்கூட இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அண்மையில் ஒரு செய்தித்தாளில் அமெரிக்க இளைஞ, இளைஞிகள் ‘உண்மையான காதல் காத்திருக்கும்’ என்று பிரமாணம் எடுத்துக் கொண்டார்களாம். திருமணமாகும்வரை கன்னிமை காப்பார்களாம். சமூகத்தில் அனைவரையும் பாதிக்கும் விஷயம் இது.

மாபெரும் இலக்கியங்கள் காலத்தோடு மாறாத உணர்வுகளைப் பேசுவது வியப்பான ஒரு விஷயம்தான். இதனால்தான் சங்கப்பாடல்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அறுபடாதிருக்கிறது. இன்றும் நமக்கு முக்கியமான விஷயங்கள் இவை. தலைமுறைகளைக் கடந்த உணர்வுகளைப் ஔவை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.

தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.