கரைதட்டிச் சிதறுகின்றன, அலைகள்
திரும்பி வந்துத் தாக்குகின்றன, எனினும்
தண்ணீர் பழைய தண்ணீர்தான், பெருங்கடல்
என்றெதுவும் பின்பரப்பில் இல்லை- அலைகள்
அலைகள், அலைகள் மட்டும்தான்.
அக்கரை சேர்ந்துவிட்டான், அங்கே
புதிர்களின் விடியலைக் காண்கிறான்
காட்சிகள் வெறும் காட்சிகள்
மொழி ஒரு தூய ஒலி
பொருட்கள் வெறும் உருவங்கள், வண்ணங்கள்.
மனிதர்கள், மனிதர்கள் மட்டும்தான்k.
அவனைச் சுற்றியுள்ள உலகம்
உட்பொருளை மெல்ல இழக்கிறது, அவன்
ஒரு குழந்தையாகிறான், ஆனால்
அவன் கண்களில் வியப்பில்லை
எதற்காகக் காத்திருக்கிறான்?
தன் மரணத்தைச் சந்திக்கவா?
வாழ்வும் சாவும் அவனுக்கு
வெறும் வார்த்தைகள்
மரணம் அவனை நெருங்கும்போது
அதன் காலடியோசைகள் கேட்காது
எதுவும் விளங்காத இந்தத் தீவில்
அவன் தொடர்ந்து நடந்து செல்கிறான்
இதன் காற்று வெப்பத்தை இழப்பதில்லை
இதன் பருவங்கள் மாற்றம் அடைவதில்லை
அவ்வப்போது அலையொன்று
அவன் பாதங்களை அறைகிறது
ஒளிர்கின்றன அவன் கண்கள்,
கணப்போதில் ஒளியிழக்கின்றன
உதிர்ந்த நட்சத்திரம் போல்
அலைகள் மெல்ல ஓய்ந்து கொண்டிருக்கின்றன.