அறையின் நடுவிலிருக்கும் யானை (ராண்டோ)

Elephant in the room

என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, கண்களைச் சிமிட்டி
வாலைச் சுழட்டிக் குதிக்கிறது, கொம்புகளை உயர்த்தி
கொடி பிடித்து நடக்கிறது, துதிக்கையை நீட்டி
மலர் சூட்டிக் கொள்கிறது, செவிகளை விசிறி
தரை அதிர நடக்கிறது, கெலித்த நகைப்பில்
வயர்கள் ஸ்பார்க் அடிக்கிறது – சானல்கள் அலற,
ஊரெல்லாம் கொதிக்க, அனைவரும் அறிய,
அறையின் நடுவிலிருக்கும் யானை
மறைந்திருக்கிறது, ஒவ்வொருத்தர் வீட்டிலும்

– அபிநந்தன்

அறையின் நடுவிலிருக்கும் யானை முதுகை தட்டி
“பக்கத்தில் போ’ என்றேன்
யானை நகர்ந்து மூலையில் உட்கார்ந்துக்கொண்டது
நான் மின்விசிரியின் கீழ் ஈசிசேரில் உட்கார்ந்துக்கொண்டு
காத்து வாங்கினேன்

மூலையில் உட்கார்ந்திருந்த யானைக்கு வேர்த்தது
தும்பிக்கை நுனியிலிருந்து சொட்டு சொட்டாய்
வேர்வை துளிகள் கீழே விழுந்தன
“வெயில் கொளுத்தறது” என்றேன் யானையிடம்
ஆமாம் என்று அது தலையாட்டியது

வீட்டு நடுவில் காத்து வாங்கிக்கொண்டு நான் இருக்க
ஒரு மூலையில் வேர்தபடி யானை உட்கார்ந்துக்கொண்டிருந்தது
மற்றபடி விசேஷம் எதுவும் இல்லை

எஸ். சுரேஷ்

தொலைகாட்சியில் ஓடிகொண்டிருந்த கால்பந்தாட்டத்தை பார்த்து
காலுதைத்து கொண்டிருந்தான் அவன்
நாளிதழில் துர்மரனங்களுக்கு உச்சு கொட்டி கொண்டிருந்தார் அவர்
வினாவிற்கு விடைவேண்டி அழுதது ஒரு குழந்தை
குழந்தையின் வினா விளங்காமல் வழக்கம் போல்
பால் புகட்டி வாயடைக்க முயன்றாள் அதன் அன்னை
சலவை இயந்திரமும் அரைப்பானும் உரக்க ஒருவருக்கொருவர் பேசி கொண்டார்கள்
குளிர்சாதனபெட்டி இடைக்கிடை கட்டைகுரலில் அவ்வுரையாடலை மத்தியஸ்தம் செய்தது

விலா எலும்புகள் துருத்தித் தெரிய
முதிர்ந்து வெளுப்பேறி
நிலைகுத்திய விழிகளுடன் மூச்சுவாங்கியபடி
கயிற்று கட்டிலில் கிடந்தது
அறையின் நடுவில் ஒரு யானை
காலத்தை உண்டபடி
தனித்து காத்திருந்தது..

– நரோபா

அறையின் நடுவிலிருக்கும் யானை
தன் பெருமூச்சுகளின் எதிரொலிகளுடன்

காத்திருந்தது.
கால்களை மாற்றி மாற்றி
வைத்தது.
சுவர்களிலெல்லாம்
எண்ணங்கள் தெறித்து
வழிந்தன.
மூடிய கதவைப்
பார்த்துக்கொண்டே நின்றது.
கதவின் இடுக்குவழியே
எறும்பொன்று
குதித்து வந்தது,
அறையின் திறந்தவெளிக்குள்.

– அனுகிரஹா

இந்த டம்போவை ஏன் டம்போன்னு
டம்போக்கள்லாம் சொல்றாங்க
அதென்ன டம்போவா இருக்கு
எவ்வளவு ஸ்வீட்டா இருக்கு

என்று சொல்லியவாறே
கார்ட்டூன் யானைக்கு
பர்ப்பிள் வண்ணம் பூசி
பிங்க் பைஜாமா போட்டுவிட்டு
ஜன்னலை திறந்து வைத்தாள் சிறுமி

பெரிய காதுகளை விரித்து
மகிழ்ச்சியோடு
வெளியே பறந்து சென்றது
டம்போ.

அறையின் நடுவிலிருக்கும் யானையும்.

– ஸ்ரீதர் நாராயணன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.